பழைய கணக்கு/மறுத்துச் சொன்னபோது



மறுத்துச் சொன்னபோது...

தில்லான மோகனம்பாள், இவர்கள் சந்தித்தால், சினிமா விமர்சனம் போன்ற பல புதிய பகுதிகள் வெளிவந்து கொண்டிந்த விகடனின் பொற்காலம் அது.

ஒவ்வொரு வாரமும் தலையங்கம் முதற்கொண்டு எல்லாச் சிறப்பு அம்சங்களையும் பற்றி உதவி ஆசிரியர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வதற்காக திரு வாசன் அவர்கள் விகடன் அலுவலகத்துக்கு நாள்தோறும் வந்து போவார். அப்புறம் உதவி ஆசிரியர்கள் எழுதிக் கொடுப்பவற்றைப் படித்துப் பார்த்து மாற்றி அமைக்க வேண்டியிருந்தால் மாற்றி அமைத்து, திருத்தி, மறுபடியும் திருத்தி மெருகேற்றி அனுப்பி வைப்பார்.

ஒவ்வொரு வாரமும் அந்த வாரத் தலையங்கம் என்ன என்பதை முடிவு செய்வதற்காக ‘எடிட்டோரியல் கூட்டம்’ கூடுவதுண்டு. நாரதர் சீனிவாச ராவ், பி. ஸ்ரீ. சிவம், ஸ்ரீதர், கொத்தமங்கலம் சுப்பு உட்பட கிட்டத்தட்ட பத்துப் பதினேந்து பேர் கலந்து கொள்வார்கள்.

பத்திரிகைக்காரர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு கொடுத்துத் தீர வேண்டும் என்று ‘வேஜ் போர்ட்’ அப்போது நிர்ணயம் செய்திருந்தது. திரு வாசன் அதை அவ்வளவாக வரவேற்கவில்லை.

எழுத்தாளர்கள் ‘கிரியேடிவ் பீப்பிள்’. அவர்களின் திறமை கண்டு அதற்கேற்ப எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது பத்திரிகையின் சொந்தக்காரராகத்தான் இருக்க வேண்டுமே தவிர, எங்கேயோ டில்லியில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள், ‘உன் உதவி ஆசிரியருக்கு இவ்வளவு சம்பளம் கொடு’ என்று சொல்வது என்ன நியாயம்?” என்பது அவர் வாதம்.

எனவே ‘வேஜ் போர்’டின் சிபாரிசுகளே ஆட்சேபித்து அந்த வாரம் தலையங்கம் எழுத வேண்டும் என்று திரு வாசன் கூறினார். அதற்கான காரணங்களையும் எடுத்து விளக்கி விட்டுப் பின்னர் ஒவ்வொருவரின் அபிப்பிராயத்தையும் தனித்தனியே கேட்டுக் கொண்டு வந்தார். என்னைத் தவிர மற்ற அத்தனை பேரும் அநேகமாக வாசனின் யோசனையை ஒட்டியே தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

என் முறை வந்த போது, “நீ என்ன சொல்கிறாய்?” என்பது மாதிரி என்னைப் பார்த்தார்.

“இதற்காக ஒரு தலையங்கம் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்” என்றேன் நான். திரு வாசன் அவர்களுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை நான் சொன்ன போது மற்றவர்கள் ஒருவரையொருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார்கள்.

எனக்கும் கூடக் கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. ஏனெனில் அப்போதுதான் நான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். இப்படிப் பேசலாமோ, கூடாதோ என்று பயம் இருந்தாலும் நம் கருத்தைக் கேட்கும் போது உண்மையாக என்ன நினைக்கிறோமோ அதைச் சொல்வதுதானே முறை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

நான் ‘எழுதக் கூடாது’ என்று சொன்னதும் திரு வாசன் அவர்கள் என்னைச் சற்று வியப்போடு நோக்கினார். அறையில் ஒரு கப்சிப் மெளனம் நிலவியது.

“ஏன் கூடாது என்கிறாய்?”

“வேஜ் போர்டின் சிபாரிசுகள் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் அது உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள சண்டை. விகடன் வாசகருக்கு இதில் அக்கறை இருக்க முடியாது. நீங்கள் உங்கள் உதவி ஆசிரியருக்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்து ஒன்றும் ஆகப் போவதும் இல்லை. பொதுஜன அபிப்பிராயத்தைத் திரட்ட வேண்டிய அவசியமும் இந்தப் பிரச்னையில் இல்லை” என்றேன்.

“யூ ஆர் ரைட்” என்று கூறிய திரு வாசன் சோபாவின் கைப்பிடியில் வைத்திருந்த தமது டவலை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு சட்டென்று எழுந்து நின்றர்.

அப்போது சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச் நடந்து கொண்டிருந்தது, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவிற்கும் போட்டி.

“சீனிவாச ராவ்! இந்த வாரம் தலையங்கம் கிரிக்கெட் பற்றிதான். ஆஸ்திரேலிய கங்காருவும், இந்திய யானையும் என்று ஏதாவது எழுதுவாயே! அப்படி ஒரு தலையங்கம் எழுதி கம்போஸுக்கு அனுப்பி விடு. நான் அப்புறம் வந்து பார்த்துக் கொள்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே புறப்பட்டு விட்டார்.