பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/தமிழ் படித்தால் வாழ்வு புதுமை பெறும்
புதுமைபெறும்!
அறம் பெருகும் தமிழ் படித்தால்;
அகத்தில் ஒளி பெருகும்!
திறம் பெருகும்; உரம் பெருகும்;
தீமைக் கெதிர் நிற்கும்
மறம் பெருகும்; ஆண்மை வரும்!
மருள் விலகிப் போகும்!
புறம் பெயரும் பொய்மை யெலாம்!
புதுமை பெறும் வாழ்வே!
தென்மொழியாம் தமிழ் நிலமாம் தமிழின் சிட்டாம்
திசையெங்கும் இசைபாடும் இதழ்க ளாலே
தொன்மொழியாம் தனித்தமிழால் இனவு ணர்வால்
துணிச்சலுடன் எழுச்சி தரும் மெய்ம்மைப் பித்தன் !
புன் மொழிக்கும் எதிர்ப்புகட்கும் துவண்டி டாமல்
பொதுத் தொண்டில் நடைபோடும் துரை மாணிக்கம்!
தென்மொழியே குறிக்கோளாய்க் கொண்ட செம்மல்
தேன்றமிழின் சித்திரனார் இவர்தாம் பாரீர்!
புலவர் திருக்குறள் நாவை சிவம்