பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/பள்ளிக்குப் போ


பள்ளிக்குப் போ!


பள்ளிக் கூடம் திறந்தது!
பையைத் தூக்கிக் கொள்ளுவாய்
வெள்ளைச் சட்டை போடுவாய்!
விரைந்து சென்று கூடுவாய்!

கன்று போல ஆடிப்போ!
காக்கைப் பாட்டுப் பாடி வா!
ஒன்று இரண்டு கற்று வா!
உரல் ஊஞ்சல் எழுதி வா!

ஒழுக்கம் அன்பு கற்று வா!
உடற் பயிற்சி பெற்று வா!
அழுக்கு நெஞ்சைத் தூய்மை செய்!
அடக்கம், அமைதி, வாய்மை வை!

பாட்டும் கதையும் படித்து வா!
பண்பைக் கடைப் பிடித்து வா!
நாட்டுப் பற்றை வளர்த்து வா
நமது மொழியைக் கற்று வா!