பாஞ்சாலி சபதம்/10. துரியோதனன் சினங் கொள்ளுதல்

10. துரியோதனன் சினங் கொள்ளுதல்

வேறு
வெற்றி வேற்கைப் பரதர்தங் கோமான்.
மேன்மை கொண்ட விழியகத் துள்ளோன்,
பெற்றி மிக்க விதுர னறிவைப்
பின்னும் மற்றொரு கண்ணெனக் கொண்டோன்,
முற்று ணர்திரித ராட்டிரன் என்போன்
மூடப் பிள்ளைக்கு மாமன்சொல் வார்த்தை
எற்றி நல்ல வழக்குரை செய்தே
ஏன்ற வாறு நயங்கள் புகட்ட, 84

கொல்லலும் நோய்க்கு மருந்துசெய் போழ்தில்
கூடும் வெம்மைய தாய்ப்பிணக் குற்றே
தொல்லு ணார்வின் மருத்துவன் தன்னைச்
சோர்வு றுத்துதல் போல்,ஒரு தந்தை
சொல்லும் வார்த்தையி லேதெரு ளாதான்,
தோமி ழைப்பதிலோர்மதி யுள்ளான்.
கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும்
கட்டு ரைக்குக் கடுஞ்சின முற்றான். 85