பாஞ்சாலி சபதம்/11. துரியோதனன் தீமொழி

11. துரியோதனன் தீ மொழி

வேறு
பாம்பைக் கொடியென் றுயர்த்தவன்-அந்தப்
பாம்பெனச் சீறி மொழிகுவான்?-'அட!
தாம்பெற்ற மைந்தர்க்குத் தீதுசெய்-திடும்
தந்தையர் பார்மிசை உண்டுகொல்!-கெட்ட
வேம்பு நிகரிவ னுக்குநான்;-சுவை
மிக்க சருக்கரை பாண்டவர், அவர்
தீம்புசெய்தாலும் புகழ்கின்றான்,-திருத்
தேடினும் என்னை இதழ் கின்றான். 86

மன்னர்க்கு நீதி யருவகை;-பிற
மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை-என்று
சொன்ன வியாழ முனிவனை-இவன்
சுத்த மடையனென் றெண்ணியே,-மற்றும்
என்னென்ன வோகதை சொல்கிறான்;-உற
வென்றும் நட்பென்றும் கதைக்கிறான்,-அவர்
சின்ன முறச்செய வேதிறங் கெட்ட
செத்தையென் றென்னை நினைக்கிறான்; 87

'இந்திர போகங்கள் என்கிறான்,-உண
வின்பமும் மாதரின் இன்பமும் இவன்
மந்திர மும்படை மாட்சியும்-கொண்டு
வாழ்வதை விட்டிங்கு வீணிலே-பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே-உளம்
தேம்புதல் பேதைமை என்கிறான்;மன்னர்
தந்திரந் தேர்ந்தவர் தம்மிலே-எங்கள்
தந்தையை ஒப்பவர் இல்லைகாண்! 88

'மாதர்தம் இன்பம் எனக்கென்றான்;-புவி

மண்டலத் தாட்சி அவர்க்கென்றான்,-நல்ல
சாதமும் நெய்யும் எனக்கென்றான்,-எங்கும்
சாற்றிடுங் கீர்த்தி அவர்க்கென்றான்;-அட
ஆதர விங்ஙனம் பிள்ளைமேல் வைக்கும்
அப்பன் உலகினில் வேறுண்டோ?-உயிர்ச்
சோதரர் பாண்டவர் தந்தைநீ-குறை
சொல்ல இனியிட மேதையா! 89

'சொல்லின் நயங்கள் அறிந்திலேன்,-உனைச்
சொல்லினில் வெல்ல விரும்பிலேன்;-கருங்
கல்லிடை நாருரிப் பாருண்டோ?-நினைக்
காரணங் காட்டுத லாகுமோ?-என்னைக்
கொல்லினும் வேறெது செய்யினும்,-நெஞ்சில்
கொண்ட கருத்தை விடுகிலேன்;-அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக்-கண்டு
போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்; 90

'வாது நின்னோடு தொடுக்கிலேன்;-ஒரு
வார்த்தை மட்டுஞ்சொலக் கேட்பையால்:-ஒரு
தீது நமக்கு வாராமலே-வெற்றி
சேர்வதற் கோர்வழி யுண்டு,காண்!-களிச்
சூதுக் கவரை யழைத்தெலாம்-அதில்
தோற்றிடு மாறு புரியலாம்;-இதற்
கேதுந் தடைகள் சொல் லாமலே-என
தெண்ணத்தை நீகொளல் வேண்டுமால்.' 91