பாஞ்சாலி சபதம்/36. தருமன் இணங்குதல்

36. தருமன் இணங்குதல்

வேறு

வெய்யதான விதியை நினைந்தான்
விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்;
பொய்ய தாகுஞ் சிறுவழக் கொன்றைப்
புலனி லாதவர் தம்முடம் பாட்டை
ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்.
ஐயகோ! அந்த நாள்முத லாகத்
துய்ய சிந்தைய ரெத்தனை மக்கள்
துன்பம் இவ்வகை எய்தினர் அம்மா! 178

முன்பி ருந்ததொர் காரணத் தாலே,
மூடரே, பொய்யை மெய்என லாமோ?
முன்பெனச் சொலுங் கால மதற்கு
மூடரே, ஓர் வரையறை உண்டோ?
முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்;
மூன்று கோடி வருடமும் முன்பே;
முன்பிருந்தெண்ணி லாது புவிமேல்
மொய்த்த மக்க ளெலாம் முனி வோரோ? 179

நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்த தில்லை எனநினைந் தீரோ?
பார்பி றந்தது தொட்டின்று மட்டும்,
பலபலப்பல பற்பல கோடி
கார்பி றக்கும் மழைத்துளி போலே
கண்ட மக்க ளனைவருள் ளேயும்,
நீர்பி றப்பதன் முன்பு, மடமை,
நீசத் தன்மை இருந்தன வன்றோ? 180

பொய்யொ ழுக்கை அறமென்று கொண்டும்,
பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும்,
ஐயகோ, நங்கள் பாரத நாட்டில்
அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர்
நொய்ய ராகி அழிந்தவர் கோடி.
நூல்வகைபல தேர்ந்து தெளிந்தோன்,
மெய்யறிந்தவர் தம்மு ளுயர்ந்தோன் --
விதியினாலத் தருமனும் வீழ்ந்தான். 181

மதியி னும்விதி தான்பெரி தன்றோ?
வைய மீதுள வாகு மவற்றுள்
விதியி னும்பெரி தோர்பொரு ளுண்டோ?
மேலை நாம்செயுங் கர்ம மல்லாதே,
நதியி லுள்ள சிறுகுழி தன்னில்
நான்கு திக்கி லிருந்தும் பன்மாசு
பதியு மாறு, பிறர்செயுங் கர்மப்
பயனும் நம்மை அடைவதுண் டன்றோ? 182