பாஞ்சாலி சபதம்/37. சூதாடல்

37. சூதாடல்

வேறு

மாயச் சூதி னுக்கே -- ஐயன்
மனமிணங்கி விட்டான்;
தாய முருட்ட லானார்; -- அங்கே
சகுனி ஆர்ப்பரித்தான்;
நேய முற்ற விதுரன் -- போலே
நெறியு ளோர்க ளெல்லாம்
வாயை மூடி விட்டார்; -- தங்கள்
மதிம யங்கி விட்டார். 183

அந்த வேளை யதனில், -- ஐவர்க்
கதிபன் இஃதுரைப்பான்:
‘பந்தயங்கள் சொல்வாய்: -- சகுனி,
பரபரத்திடாதே!
விந்தை யான செல்வம் -- கொண்ட
வேந்த ரோடு நீதான்
வந்தெ திர்த்து விட்டாய்; -- எதிரே
வைக்க நிதிய முண்டோ?’ 184

தருமன் வார்த்தை கேட்டே -- துரியோ
தனனெழுந்து சொல்வான்:
‘அருமை யான செல்வம் -- என்பால்
அளவி லாத துண்டு;
ஒருமடங்கு வைத்தால் -- எதிரே
ஒன்ப தாக வைப்பேன்;
பெருமை சொல்ல வேண்டா, -- ஐயா,
பின்னடக்கு’கென்றான். 185

‘ஒருவனாடப் பணயம் -- வேறே
ஒருவன் வைப்ப துண்டோ?
தரும மாகு மோடா, -- சொல்வாய்,
தம்பி இந்த வார்த்தை?’
‘வரும மில்லை ஐயா; -- இங்கு
மாம னாடப் பணயம்
மருகன் வைக்கொணாதோ? -- இதிலே
வந்த குற்ற மேதோ?’ 186

‘பொழுதுபோக்கு தற்கே -- சூதுப்
போர்தொ டங்கு கின்றோம்;
அழுத லேனி தற்கே?’ என்றே
அங்கர் கோன் நகைத்தான்.
‘பழுதிருப்ப தெல்லாம் -- இங்கே
பார்த்திவர்க் குரைத்தேன்;
முழுது மிங்கிதற்கே -- பின்னர்
முடிவு காண்பீர்’ என்றான். 187

ஒளிசிறந்த மணியின் -- மாலை
ஒன்றை அங்கு வைத்தான்;
களிமிகுந்த பகைவன் -- எதிரே
கனதனங்கள் சொன்னான்;
விழிமைக்கு முன்னே -- மாமன்
வென்று தீர்த்து விட்டான்;
பழிஇலாத தருமன் -- பின்னும்
பந்தயங்கள் சொல்வான்: 188

‘ஆயிரங்குடம் பொன் -- வைத்தே
ஆடுவோ’மிதென்றான்;
மாயம் வல்ல மாமன் -- அதனை
வசம தாக்கி விட்டான்.
‘பாயு மாவொ ரெட்டில் -- செல்லுமே
பார மான பொற்றேர்.’
தாய முருட்ட லானார்; -- அங்கே
சகுனி வென்று விட்டான். 189

‘இளைய ரான மாதர், -- செம்பொன்
எழிலிணைந்த வடிவும்
வளைஅணிந்த தோளும் -- மாலை
மணிகுலுங்கு மார்பும்
விளையு மின்ப நூல்கள் -- தம்மில்
மிக்க தேர்ச்சி யோடு்
களைஇலங்கு முகமும் -- சாயற்
கவினும் நன்கு கொண்டோர், 190

ஆயிரக்கணக்கா -- ஐவர்க்
கடிமை செய்து வாழ்வோர்.’
தாய முருட்டலானார்; -- அந்தச்
சகுனி வென்று விட்டான்.
ஆயிரங்க ளாவார் -- செம்பொன்
அணிகள் பூண்டிருப்பார்-
தூயிழைப்பொனாடை -- சுற்றுந்
தொண்டர் தம்மை வைத்தான்; 191

சோரனங் கவற்றை -- வார்த்தை
சொல்லு முன்னர் வென்றான்.
தீர மிக்க தருமன் -- உள்ளத்
திடனழிந் திடாதே,
‘நீரை யுண்ட மேகம் -- போல
நிற்கு மாயிரங்கள்
வாரணங்கள் கண்டாய், -- போரில்
மறலி யொத்து மோதும்’ 192

என்று வைத்த பணயந் -- தன்னை
இழிஞன் வென்று விட்டான்;
வென்றி மிக்க படைகள் -- பின்னர்
வேந்தன் வைத்திழந்தான்;
நன்றிழைத்த தேர்கள் -- போரின்
நடை யுணர்ந்த பாகர்
என்றிவற்றை யெல்லாம் -- தருமன்
ஈடு வைத்திழந்தான். 193

எண்ணிலாத, கண்டீர் -- புவியில்
இணையி லாத வாகும்
வண்ணமுள்ள பரிகள் -- தம்மை
வைத்தி ழந்து விட்டான்;
நண்ணு பொற் கடாரந் -- தம்மில்
நாலு கோடி வைத்தான்;
கண்ணி ழப்பவன்போல் -- அவையோர்
கணமிழந்து விட்டான். 194

மாடிழந்து விட்டான், -- தருமன்
மந்தை மந்தையாக;
ஆடிழந்து விட்டான், -- தருமன்
ஆளி ழந்து விட்டான்;
பீடி ழந்த சகுனி -- அங்கு
பின்னுஞ் சொல்லு கின்றான்:
‘நாடி ழக்க வில்லை, -- தருமா!
நாட்டை வைத்தி’டென்றான். 195

"https://ta.wikisource.org/w/index.php?title=பாஞ்சாலி_சபதம்/37._சூதாடல்&oldid=499204" இலிருந்து மீள்விக்கப்பட்டது