பாஞ்சாலி சபதம்/47. பார்த்தனை இழத்தல்
பார்த்தனை இழத்தல்
தர்மன் சொல்வது
‘எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; -- ஐவர்
எண்ணத்தில், ஆவியில் ஒன்றுகாண். -- இவர்
பங்கமுற் றேபிரி வெய்துவார் -- என்று
பாதகச் சிந்தனை கொள்கிறாய்; -- அட,
சிங்க மறவர் தமக்குள்ளே -- வில்லுத்
தேர்ச்சியி லேநிக ரற்றவன், -- எண்ணில்
இங்குப் புவித்தலம் ஏழையும் -- விலை
யீடெனக் கொள்ளத் தகாதவன், 28
‘கண்ணனுக் காருயிர்த் தோழனாம் -- எங்கள்
கண்ணிலுஞ் சால இனியவன்,
வண்ணமும் திண்மையும் சோதியும் -- பெற்று
வானத் தமரரைப் போன்றவன், -- அவன்
எண்ணரு நற்குணஞ் சான்றவன், -- புக
ழேறும் விஜயன் பணயங்காண்! -- பொய்யில்
பண்ணிய காயை உருட்டுவாய்’ -- என்று
பார்த்திவன் விம்மி உரைத்திட்டான். 29
மாயத்தை யேஉரு வாக்கிய -- அந்த
மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே -- கெட்ட
தாயத்தைக் கையினில் பற்றினான்; -- பின்பு
சாற்றி விருத்தமங் கொன்றையே -- கையில்
தாய முருட்டி விழுத்தினான்; -- அவன்
சாற்றிய தேவந்து வீழ்ந்ததால். -- வெறும்
ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார் -- மன்னர்
இப்புவி மீதுள ராமன்றோ? 30