பாஞ்சாலி சபதம்/58. துரியோதனன் சொல்வது

58. துரியோதனன் சொல்வது

வேறு

உள்ளந் துடித்துச் சுயோதனன் -- சினம்
ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான்: -- ‘அட ,
பிள்ளைக் கதைகள் விரிக்கிறாய். -- என்றன்
பெற்றி யறிந்திலை போலும், நீ! -- அந்தக்
கள்ளக் கரிய விழியினாள் -- அவள்
கல்லிகள் கொண்டிங்கு வந்தனை! -- அவள்
கிள்ளை மொழியின் நலத்தையே! -- இங்கு
கேட்க விரும்புமென் னுள்ளமே. 49

‘வேண்டிய கேள்விகள் கேட்கலாம், -- சொல்ல
வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம், -- மன்னர்
நீண்ட பெருஞ்சபை தன்னிலே -- அவள்
நேரிடவே வந்த பின்புதான். -- சிறு
கூண்டிற் பறவையு மல்லளே? -- ஐவர்
கூட்டு மனைவிக்கு நாணமேன்? -- சினம்
மூண்டு கடுஞ்செயல் செய்யுமுன் -- அந்த
மொய்குழ லாளைஇங் கிட்டுவா. 50

‘மன்னன் அழைத்தனன் என்றுநீ -- சொல்ல
மாறியவ ளொன்று சொல்வதோ? -- உன்னைச்
சின்னமுறச் செய்கு வேனடா! -- கணஞ்
சென்றவளைக் கொணர்வாய்’என்றான். -- அவன்
சொன்ன மொழியினைப் பாகன்போய் -- அந்தத்
தோகைமுன் கூறி வணங்கினான். -- அவள்
இன்னல் விளைந்திவை கூறுவாள் -- ‘தம்பி,
என்றனை வீணில் அழைப்பதேன்? 51