பாஞ்சாலி சபதம்/59. திரௌபதி சொல்லுதல்
'நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் -- என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை. -- புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின், -- என்னை
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்; -- புவி
தாங்குந் துருபதன் கன்னிநான். -- நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், -- பின்பு
தார முடைமை அவர்க்குண்டோ! 52
'கௌரவ வேந்தர் சபைதன்னில் -- அறங்
கண்டவர் யாவரும் இல்லையோ? -- மன்னர்
சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே -- அங்கு
சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ? -- புகழ்
ஒவ்வுற வாய்ந்த குருக்களும் -- கல்வி
ஓங்கிய மன்னருஞ் சூதிலே -- செல்வம்
வவ்வுறத் தாங்கண் டிருந்தனர்; என்றன்
மான மழிவதும் காண்பரோ? 53
'இன்பமுந் துன்பமும் பூமியின் -- மிசை
யார்க்கும் வருவது கண்டனம்; -- எனில்
மன்பதை காக்கும் அரசர்தாம் -- அற
மாட்சியைக் கொன்று களிப்பரோ? -- அதை
அன்புந் தவமுஞ் சிறந்துளார் -- தலை
யந்தணர் கண்டு களிப்பரோ? -- அவர்
முன்பென் வினாவினை மீட்டும்போய்ச் -- சொல்லி
முற்றுந் தெளிவுறக் கேட்டுவா? 54
என்றந்தப் பாண்டவர் தேவியும் -- சொல்ல,
என்செய்வன் ஏழையப் பாகனே? -- 'என்னைக்
கொன்றுவிட் டாலும் பெரிதில்லை. -- இவள்
கூறும் வினாவிற் கவர்விடை -- தரி
னன்றி இவளை மறுமுறை -- வந்து
அழைத்திட நானங் கிசைந்திடேன்? -- (என)
நன்று மனத்திடைக் கொண்டவன் -- சபை
நண்ணி நிகழ்ந்தது கூறினான். 55
?மாத விடாயி லிருக்கிறாள் -- அந்த
மாதர? கென்பதுங் கூறினான். -- கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகிடான் -- நின்ற
பாண்டவர் தம் முகம் நோக்கினான்; -- அவர்
பு{[குறிப்பு]: 'என்றன்' என்று ஒரு தனிச் சொல் ஊகித்துக் கொள்ளலாம் என்கிறார் கவிமணி. 'ஏன்' என்பது முதற்பதிப்பிலில்லை; ஊகித்துக் கொண்ட பாடம்.}
பேதுற்று நிற்பது கண்டனன். -- மற்றும்
பேரவை தன்னில் ஒருவரும் -- இவன்
தீதுற்ற சிந்தை தடுக்கவே -- உள்ளத்
திண்மை யிலாதங் கிருந்தனர். 56
பாகனை மீட்டுஞ் சினத்துடன் -- அவன்
பார்த்திடி போலுரை செய்கின்றான்: -- 'பின்னும்
ஏகி நமதுளங் கூறடா! -- அவள்
ஏழு கணத்தில் வரச்செய்வாய்! -- உன்னைச்
சாக மிதித்திடு வேனடா!? -- என்று
தார்மன்னன் சொல்லிடப் பாகனும் -- மன்னன்
வேகந் தனைப்பொருள் செய்திடான் -- அங்கு
வீற்றிருந் தோர்தமை நோக்கியே, 57
'சீறும் அரசனுக் கேழையேன் -- பிழை
செய்ததுண்டோ? அங்குத் தேவியார் -- தமை
நூறு தரஞ்சென் றழைப்பினும், -- அவர்
நுங்களைக் கேட்கத் திருப்புவார்; -- அவர்
ஆறுதல் கொள்ள ஒருமொழி -- சொல்லில்,
அக்கண மேசென் றழைக்கிறேன்; -- மன்னன்
கூறும் பணிசெய வல்லன்யான்; -- அந்தக்
கோதை வராவிடில் என்செய்வேன்?' 58