பாதுகாப்புக் கல்வி/நீச்சல் குளத்தில் பாதுகாப்பு
1.நீச்சலும் நீச்சல் குளமும்
"நீறில்லா நெற்றி பாழ், நெய்யில்லா உண்டி பாழ், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்" என்று ஒளவைப் பாட்டியார், அழகுபற்றிக் கூறவந்த போது, பாடிச்சென்றிருக்கிறார்.
ஊருக்கு அழகு ஆறு என்றதுபோல, ஏரி, குளம், ஊருணி மற்றும் இயற்கையான நீர்த்தேக்கப் பகுதிகள் கிராமப் புறங்களில் இருந்தன. மக்கள் அவற்றில் நீந்திக் கவிந்து நிதமும் இன்பம் அடைந்தனர்.
"நீச்சல் பயிற்சியானது உடலுக்கும், மற்றும் உடல் உறுப்புக்கள் அனைத்துக்கும் ஆற்றலும் வலிமையும் தருகின்ற சிறந்த பயிற்சி" என்று எல்லோராலுமே ஏகோபித்துப் பாராட்டப்படும் சிறப்பினைப் பெற்றதாகும்.
மேலே குறித்த இயற்கை நீர்த் தேக்கங்கள் இல்லாதபோது, நகரவாழ் மக்கள், செயற்கையான நீர்த் தேக்க முறையை ஏற்படுத்திக்கொண்டு, இந்த நீச்சல் பயிற்சியின் பயன்களையெல்லாம், தாங்களும் பெற முயன்றார்கள். அந்த ஆன்ற முயற்சியின் விளைவால்தான், . நீச்சல் குளங்கள் (Swimming pools) நாடு நகர மெங்கும் தோன்றின.
நீச்சல் குளங்கள் அமைக்கும் முறையில் நிர்மாணித்தவர்கள் மூன்றுவித அமைப்பினில் உருவாக்கினார்கள்.
அமைந்திருக்கும் நீச்சல் குளத்தில், தண்ணீரை நிரப்பி சில நாட்கள் கழிந்த பிறகு, அவற்றை வடித்து நீக்கிவிட்டு, புதிய தண்ணீரை இட்டு நிரப்புவது, இந்த இடைக் காலத்தில், “பாசகம் (Chlorine) என்னும் மருந்தினை இட்டுத் தூய்மைப்படுத்துவார்கள். இதனை நீர் நிரப்பி நீக்கும் நீச்சல் குளம் என்று கூறலாம்.
அடுத்தது, நீச்சல் குளம் அமைந்திருக்கும் முறையில் ஒருபுறம் இருந்து தண்ணீர் வந்து குளத்தில் இருந்து, அந்த நீரோட்டத்துடனேயே வெளியேறிப் போய் விடுகின்ற அமைப்பு. இதில், நீரோட்டம் இருந்து கொண்டே இருப்பதால், என்றும் தண்ணீர் தூய்மையாகவே இருக்கும்.
மூன்றாவது வகை நீச்சல் குளத்தில், தண்ணீர் அதேதான். தூய்மையாக வந்த தண்ணீர், பயன்படுத்தப்பட்ட பிறகு குழாய் மூலம் வெளியே கொண்டு போகப்பட்டு, அங்கே தூய்மையுறச் செய்து, மீண்டும் அதே நீரை சுத்தமாகக் குளத்தில் விடுதல். இது 'நீர் சுற்றோட்ட முறை' என்பதாகும்.
இவ்வாறு அமைக்கப்படுகின்ற நீச்சல் குளங்கள் வெளிப்புற நீச்சல் குளம், உள்ளக நீச்சல் குளம் (Out door and in door Swimming Pool) என இருவகைப்படும்.
இத்தகைய செயற்கை முறையில் அமைந்த நீச்சல் குளங்களில் ஒழுங்கு முறையுடன் நடந்துகொண்டால் தான் தண்ணீரும் தூய்மையாக விளங்கும். பலருக்கு பல்வேறு விதமான நோய்களும் வராமல் இருக்கும். அத்துடன் விபத்துக்களும் நிகழாமலும் காத்துக் கொள்ள முடியும்.
ஆகவே, நீச்சல் குளங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எந்தெந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இனி காண்போம்.
2. நீந்தும்போது நிகழும் விபத்துக்கள்
1.நீந்தத் தெரியாமலேயே, நீச்சல் குளம் அல்லது ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற பகுதிகளிலும் இறங்கி நீந்த முயலுதல்
2. நீந்தத் தெரிந்தும், ஆழத்திற்குள் போய் சிக்கிக் கொள்ளுதல்.
3. நெடுந்தூரம் தனியே நீந்திப் போய், மீண்டும் கரைக்குத் திரும்பிவர முயலும் போது, இயலாமல் களைத்துப் போய், தண்ணிருள் மூழ்கி விடுதல்.
4. பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்பதற்காக அபாயகரமான நீர்ப் பகுதிகளுக்குத் துணிந்து சென்று, மீளமுடியும் என்று வீரம் பேசி செயல்படுதல்.
5. யாரும் துணையில்லாமல், ஆழ நீர்ப்பகுதியில் நீந்துதல். 6. மேலேயிருந்து தண்ணீருள் குதிக்கும் போது.சுவற்றில் அல்லது உள்ளே பதித்துவைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் மீது மோதி, அல்லது அடித்தரை பாகத்தின் மோதி, மண்டை உடைந்து விடுதல்.
7. அல்லது அதனால் உள்ளுக்குள்ளேயே மூர்ச்சையாகிப் போதல்.
8. அல்லது கை கால் செயலிழந்து விடுதல் அல்லது கழுத்து முறிந்து போதல்.
9. தவறாகக் குதித்து, அடிவயிறு அடிபட்டு, உள்ளுறுப்புக்கள் தடுமாறி, இயங்காமல் போய்விடுதல்
10. பிறர் தண்ணீரில் மூழ்கும் போது, அவரைக் காப்பாற்றத் தனியாகப் போய், மாட்டிக் கொண்டு, மீள முடியாமல், அழுந்தி விடுதல்.
11. தண்ணீரில் ஒருவரை தலைமுழுக மூழ்கியபடி, எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறார் என்று பந்தயம் கட்டி விளையாடும்போது, அதுவே வினையாகிவிடுதல்,
பொதுவாக நீந்தும் போது, மேலே கூறிய நிகழ்ச்சிகளால்தான் விபத்துக்கள் நேர்கின்றன. நீச்சல் குளங்களில் உள்ளது போலவே, இயற்கையான நீர்த் தேக்கங்களிலும், நீர்ச்சுழி, நீரின் வேகம், ஆழம், கீழே பாசிகள் போன்ற புதர்ப்பகுதிகள், சேறுகள் இருக்கும். இவற்றைப் புரிந்துகொண்டு பாதுகாப்புடன் நீந்தி மகிழவேண்டும்.
3. நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்
1.வயிறு நிறைய உண்டுவிட்டு, நீந்தச் செல்லக் கூடாது.
2.உடல் நலிவுற்று அதாவது உடல் நிலை சரியில்லாதபோதும், களைப்பாக இருக்கும்போதும், மனநிலை சரியில்லாத போதும் நீந்தக்கூடாது.
3. தோல்வியாதி உள்ளவர்கள், மற்றும் கண் நோய், சீழ்காது உள்ளவர்கள், சளி பிடித்தவர்கள், சேற்றுப்புண் உள்ளவர்கள், தொற்றுநோய் உள்ளவர்கள் யாரும் நீச்சல் குளத்தில் இறங்கவே கூடாது. (அவர்களை அனுமதிக்கவே கூடாது).
4. வெட்டுப்புண், மற்றும் உடலில் காயம் உடையவர்கள் நீச்சல் குளத்தில் இறங்கக் கூடாது.
5. பெண்கள் தங்களது மாதவிடாய் காலங்களில், நீச்சல் குளத்தில் நீந்தக் கூடாது.
மேலே கூறிய வகையினர் மட்டும் வரவேண்டாம் என்று கூறியவுடன், வருபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் காண்போம்.
1. நீச்சல் குளத்திற்கு வருபவர்கள் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு வரக்கூடாது தண்ணிர் கெட்டுவிடும் என்பதால், சவுக்காரம் அல்லது சீக்காய் பட்டு முதலில் குளித்த பிறகுதான், குளத்துள் இறங்க வேண்டும்.
2. தண்ணீரில் இருக்கின்ற பொழுது, சிறுநீர், கழிக்கும் உணர்வு தோன்றுவது இயற்கைதான். அதனால், பலர் பயன்படுத்துகின்ற நீச்சல் குளம் பாழாகிப் போய்விடும் என்பதால், நீச்சல் குளத்தில் நுழைந்து, குளிக்குமுன், கழிவறைகளுக்குச் சென்று வந்துவி வேண்டும்.
3. குளித்துவிட்டு நீச்சல் குளம் நோக்கி வரும்போது, வருவதற்கென்று அமைக்கப்பட்டிருக்கும் நச்சுத்தடை கரைசல் கலந்த நீரின் வழியேதான் நடந்துவர வேண்டும்.
4. தூய்மை தரும் துப்புரவு விதிகளை நீச்சல் குளத்திற்கு வெளியிலிருந்தே கடைபிடித்துவர வேண்டும். நீச்சல் குளத்துள் மட்டுமே ஒழுங்குவிதி இருக்கவேண்டும் என்பதில்லை. உள்ளும் புறமும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியது ஒழுங்கு முறைகள்தான்.
5. நீந்தும் ஆசையில் தனது உடைகளை, உடைமைப் பொருட்களை, ஆங்காங்கே வீசி எறிந்து விட்டு வரக்கூடாது. அதற்கென்று உரியவரிடம் சென்று, பொருட்களை பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டுத்தான் வரவேண்டும்.
இனி, நீந்தும் போது மேற்கொள்ள வேண்டிய முறைகளைக் கவனிப்போம்.
6. நீந்தும் போது மேற்கொள்ளும் ஒழுங்கு முறைகள்
1. நீச்சல் குளத்தில், குறிப்பிட்டிருக்கும் எல்லைக்குள்ளே தான் நீந்த வேண்டும்
2. தனியே போய் நீந்துவதைத்தவிர்த்து, துணையாகப் போய் தான் நீந்த வேண்டும்.
3. அரைகுறை நீச்சல் பயிற்சி உள்ளவர்கள், ஆழமற்ற நீர்ப்பகுதியில் தான் எப்பொழுதும் நீந்த வேண்டும்.
4. நீந்திக் கொண்டிருக்கும்போது, தண்ணீரில் யாரும் எச்சில் உமிழவோ, மூக்குச் சிந்தவோ, காறி உமிழவோ கூடாது அதற்கென்று குளத்தின் ஓரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் அழுக்கு நீரிச் சாக்கடைகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.
5. வசதியும் வாய்ப்பும் இருந்தால், நீந்துவோர் தம் தலைக்கு நீச்சல் குல்லாய் அணிந்து கொள்வது நல்லது.
6. நீச்சல் பயிற்சியாளர்கள் கூறுகின்ற அறிவுரையின் படி தான் நீந்த வேண்டும்.
7. நீச்சல் குளத்துக்குள்ளே ஒருவருக்கொருவர் முரட்டுத்தனமாக அமுக்கிக் கொண்டோ, சண்டை போட்டுக்கொள்வது போலவோ விளையாடக்கூடாது.
8. மூச்சுத் திணறும் வகையில் தண்ணீரை முகத்தில் அடித்துக்கொள்வது கூடாது.
9. பயிற்சியாளர்களும் பாதுகாப்பாளர்களும் கவன மாக மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வீண் பேச்சு கொடுத்துக்கொண்டு, அவர்கள் கவனத்தைத் திசைதிருப்பக்கூடாது.
10. குறிப்பிட்ட நேரத்திற்குமேல், தண்ணீரில் இருக்கக் கூடாது.
5. நீந்தி முடிந்தவுடன்
1. நீந்தி முடித்து நீச்சல் குளத்தைவிட்டு வெளியேறி வந்தவுடன், முன்னர் குளித்த நீர்த்தாரைகளில் மீண்டும் நீராடி, தன் மேல் படிந்துள்ள பாசகம் போன்ற பொருட்களால், நிகழும் எரிச்சல் போன்ற தன்மையை நீக்கிய பிறகே உரிய ஆடையை அணிய வேண்டும்.
2. ஆடை அணிவதற்கென்று உள்ள அறைகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் என்பதால், உள்ளே வீணே காலம் கழிக்காமல், சீவி சிங்காரம் செய்யாமல், விரைந்து வெளியே வரவேண்டும்.
நீச்சல் ஒரு பயன் மிகுந்த பொழுது போக்காகும். அதில் விபத்து நேருகின்றதென்றால், அது நமது அறியாமையாலும், அவசர புத்தியினாலும், அலட்சியப் போக்கினாலும் மட்டுமே நிகழ்வதாகும்.
6. நீச்சல் விபத்தும் முதலுதவியும்
6. நீரில் மூழ்கியவர்களுக்கு சுவாசம் விடுவது இழுப்பது எல்லாம் மிகவும் கஷ்டமாகவே இருக்கும்.
அந்த நேரத்தில், செயற்கை சுவாசத்தின் மூலம் உதவி செய்வதால், இயற்கையான இயக்கம் பெறும் வரை இதமாக இருக்கும்.
அந்த வகையில், செயற்கை சுவாச முறையினை2 பிரிவாக விளக்கிக் கூறுவார்கள்.
1. வாய்க்கு வாய் முறை (Mouth to Mouth)
2. முதுகுப்புறம் அழுத்திவிடும் முறை (Back Pressure Hip Lift)
1. வாய்க்கு வாய் முறை: எல்லோராலும் தற்காலத்தில் ஏற்றுக்கொண்ட முறையென்று இதனையே கூறுகின்றார்கள்.
வாய் மூலம் வாய் வழியாகக் காற்றை உள்ளே செலுத்தி, உள்ளே நுரையீரல்களை இதமாக இயங்கத் தூண்டும் இந்த முறையை, கீழே விளக்கமாகக் காண்போம்.
நீரில் மூழ்கியவரை முதலில் மல்லாந்து படுக்க வைத்து முகத்தை சற்று உயர்த்தி வைப்பதுபோல், வைக்கவும்.
வாய்க்குள்ளே இருக்கும் தண்னீரைஅல்லது சளியை, அல்லது வாந்தி எடுத்திருந்தால் வெளியே வந்திருக்கும் உணவை, துணியால் துடைத்துவிட வேண்டும்.
பிறகு, அவரது முகவாயை நன்கு உயர்த்தி அவரது நுரையீரல்களுக்குக் காற்றுப் போவதுபோல, ஊதுவதற்கேற்ற வகையில் உயர்த்த வேண்டும்.
அவரது மூக்கினை வருடி, கட்டை விரலால் சற்று அழுத்தியவாறே, ஊதுபவர் நன்றாக மூச்சை இழுத்துத் 'தம்' பிடித்துக்கொண்டு, மூழ்கியவர் நுரையீரலுக்குள்ளே காற்று போவதுபோல, வேகமாக ஊத வேண்டும்.
இவ்வாறு ஊதும்போது அவரது மார்பு உயர்வது போல ஊத வேண்டும். அப்படி உயரும்போது ஊதுபவர் தனது வாயை எடுத்து விட்டு, அவர் மூச்சை வெளியேவிட வாய்ப்புத் தர வேண்டும்.
இவ்வாறு 1 நிமிடம் வரை ஊதிவிட்டு, பிறகு 3 வினாடிகளுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஊதவேண்டும்.
பெரியவர்களாக இருந்தால், ஒவ்வொரு மூன்று வினாடிக்கு 1 முறை வேகமாகவும், குழந்தையாயிருந்தால், ஒவ்வொரு இரண்டு அல்லது 2 வினாடிக்கு 1 முறை மெதுவாகவும், இதமாகவும் ஊதிக்காற்றைத் தந்து, சுவாசப் பயிற்சியைத் தரவேண்டும்.
2. முதுகுப்புறம் அழுத்தி விடும் முறை: மூழ்கிய வரைக் குப்புறப் படுக்க வைத்து, அவரது, தலைக்கருகில் முழுங்காலிட்டு நின்று, அவரது. தோள் பட்டைகளில் முதுகெலும்புக்கு 2 அங்குலத்திற்கு அருகில் இரண்டு புறமும், இரு கை, கட்டை விரல்களையும் வைத்து, முன்புறமாக அழுத்தவும்.
அவ்வாறு அழுத்தும்போது, அழுத்துபவர் உடல்எடை, படுத்திருப்பவர் மீது அழுந்த, அதனால் அவரது நுரையீரலுக்குள்ளே காற்று உள்ளே புகுந்திட வழி ஏற்படுத்தித் தரும்.
அழுத்துபவர் கவனிக்க: உமது முழங்கைகள் நேராக இருக்க, உடல் எடையுடன் அவரது தோள் பட்டைகளை அழுத்தவும். முன்னும் பின்னும் வேகமாக ஆட்டி அலைக்கழிக்காமல், மெதுவாக அழுத்திக் கொண்டு செல்லவும்.
இவ்வாறு அழுத்திக் கொண்டே பின்புறம் கொண்டு சென்று, மற்ற கை விரல்களை அவரது பக்க வாட்டிற்கு முழங்கைகள் வரை கொண்டு சென்று உடலை தூக்குவது போல, அப்படியே அவரது கைகளுடன் உயரே தூக்கி, பின்னர் மெதுவாக இறக்கி விடவும்.
இந்த அசைப்பால் அவரது மார்புப் பகுதி விரிந்து.காற்றை உள்ளே இழுத்து நிரப்புதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். முடிந்தவரை மெதுவாக மேலே உயர்த்திய பிறகு, முன்போல் கைகளைக் கொண்டு வந்து அழுத்தவும்.
இதிலே உள்ள இரண்டாவது முறை: மூழ்கிய வரைக் குப்புறப்படுத்திட வைத்து பாதியளவு அவரது இடுப்புப் பகுதியோரம் முழுங்காலிட்டு, அவரது தோள் பட்டைகள் மேல் கைகளை வைத்து, முதுகெலும்புக்கு 2 அங்குலம் பக்கவாட்டில் இருபுறமும் வைத்து, அழுத்துபவர் உடல் எடை முழுதும் பொருந்தும் படி, முன்புறமாகத் தள்ளவும். பிறகுமேதுவாக அழுத்தாமல் விடவும்.
பிறகு, இடுப்புக்குக் கீழே கைகளை விட்டு, இடுப்பு எலும்புகளை மெதுவாகப் பற்றி, உடலை 4 லிருந்து 6 அல்லது 7 அங்குல உயரம் மேலே உயர்த்தவும். இந்த அசைவானது, அவரது மார்புப் பகுதியை விரிக்கவும், புதுக் காற்று உள்ளே புகவும் உதவும்.
இது போன்ற முதலுதவி முறைகளைச் செய்வது மட்டும் போதும் என்று நிறுத்தி விடாமல், மருத்து வருக்கும் சேதி அனுப்பி விடவும். அவர் வர முடிந்தால் இல்லையேல், மூழ்கியவரைக் கொண்டு செல்ல முடிந்தால் இரண்டில் எது எளிதோ, அதை விரைந்து செய்ய வேண்டும்.
பாதுகாப்பு முறையில் காலத்திற்குள் செய்வதுதான் முக்கியம். நேரம் போக்குவது என்பது பாதுகாப்பிலிருந்து வெகுதூரம் ஒதுக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே அர்த்தமாகும்.
ஆகவே, விரைந்து உதவி செய்வதை கொள்கையாகவே கொள்ள வேண்டும்.