பாதுகாப்புக் கல்வி/வாழ்வும் வழியும்

1. வாழ்வும் வழியும்

உயிரின் பெருமை

வாழப் பிறந்திருக்கிறோம் நாம்!

ஆம் நீர்க் கடலின் அலைக் கூட்டங்களின் ஓட்டம் போல, நமது வாழ்க்கை நிகழ்ச்சிகள் அன்றாடம் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலே பேரானந்தமாக விளங்கும் காலம்தான், நமது வாழ்க்கை. அந்த காலத்திற்குள்ளே எத்தனையோ சிறப்புக்கள், சிக்கல்கள் சேர்ந்திருக்கின்றன, தேர்ந்திருக்கின்றன.

கலை எழில் மிகுந்த நமது உடலில், களிநடனம் புரிந்துகொண்டிருக்கும் உயிர், நமது விழிகளால் காண முடியாததுதான். என்றாலும், விலை மதிக்க முடியாத ஒன்றாகும்.

மண்ணைப் பிளந்தவர்கள், விண்ணை அளந்தவர்கள்,எண்ணிலும் எழுத்திலும் எத்தனையோ ஏற்றம் புரிந்தவர்கள் இன்றைய அறிஞர்கள் என்றாலும், உயிரினைப் பற்றிக் கூற வரும் பொழுது, சற்று ஒதுங்கித்தான் போகின்றார்கள்.

விஞ்ஞானிகளும், மெய்ஞானிகளும், மற்றும் அஞ்ஞானிகள் என்பாரும் வியந்து பாராட்டுகின்ற ஒன்றாகத்தான் உயிர் இருக்கிறதே தவிர, முயன்று பார்ப்போருக்கு முடிவில்லா குன்றாகத்தான் தோன்றி மறைகின்றது.

நமது நம்பிக்கை

விளையாடும் உயிரோடு எழிலாடும் நமது உடல், எத்தனை நாள்வாழும் என்று யாருக்குத் தெரியும்? நேரக் கணக்குக்கும், நிமிடக் கணக்குக்கும் கூட பிடி கொடுக்காத உயிரைப் போற்றித்தான் நாம் வாழ்கிறோம். நம்மால் வாழ முடிகிறது. வேறு என்ன நம்மால் செய்யமுடியும்!

இன்னும் இருப்போம் என்ற நம்பிக்கை நமக்குள் அமுத ஊற்றாக ஊறிக்கொண்டிருக்கிறது. 'இயற்கையாகத்தான் நமது வாழ்வு முடியும்' என்ற ஒர் இனிய நினைவும் மனதிலே பீறிட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இயற்கையாகவே மனிதர்கள் இறந்து போகின்றார்கள் என்று நம்மால் எவ்வாறு சொல்லமுடியும்?

முதுகில் ஏறி சவாரி செய்யும் முதுமையின் கொடுமையைவிட, பதமாக வந்து நம்மை பாழ்படுத்தும் நோய்கள் கூட்டம் வேறு இருக்கின்றனவே! நோயின் வாய்பட்டு இறப்பதைக் காட்டிலும், வேறு வகையில் இறப்பாரின் கணக்கே, இன்று மிகுதியாகிக் கொண்டு வருகிறது.

வேறு வகை என்றது - விபத்துக்களைத்தான்.

வாழ்க்கையிலே விஞ்ஞானத்தால் வசதிகள் பெருகிவரவர, அவைகளின் கூடவே அபாயமும் பேராபத்தும் இலைமறை காயாக, நீறு பூத்த நெருப்பாகத் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன!

விளையாடும் விபத்துக்கள்

இயற்கையால் எழுகின்ற நில நடுக்கம், பூகம்பம், காட்டுத்தீ, கடல் கொந்தளிப்பு, பெருமழை, பொங்கும் வெள்ளம், கொள்ளைநோய் போன்றவைகள் எங்கோ ஒரிடத்தில், எப்பொழுதோ ஒரு சமயத்தில்தான் நிகழ்கின்றன. அவற்றில் மனித இனம் மடிவதுண்டு.

ஆனால், அன்றாடம் பத்திரிகையிலே வருகின்ற செய்திகளைப் பார்த்தால், போர்க்களங்களிலே மடிகின்ற மனிதர்களைவிட, விபத்துக்களிலே இறப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று அரசாங்க அறிக்கைகள் கூறுகின்றன.

நாடு பூராவும் நிறைந்தே கிடக்கும் இந்த விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன? மூன்று வினாடிகளுக்கு 1 முறை சாலைகளிலும், 8 வினாடிகளுக்கு ஒரு முறை வீடுகளிலும் விபத்துக்கள் நேர்கின்றன என்று நாம் அறியும்போது இந்த விபத்துக்கள் எப்படித்தான் ஏற்படுகின்றன என்று அறியும் ஆவலைத் துண்டுகின்றன அல்லவா!