பாபு இராஜேந்திர பிரசாத்/காந்தியடிகள் கைது



7. காந்தியடிகள் கைது

பீஹார் மாகாணத்தில் சம்பரான் என்றொரு மாவட்டம் உள்ளது. அங்கே சண்பக மரங்கள் காடுகளைப் போல பெருகி அடர்ந்து பரந்து விரிந்து வளர்ந்திருந்ததால், அப்பகுதிக்கு சண்பகாரண்யம் என்ற பெயர் வந்தது. இந்த சண்பகாரண்யம் என்ற சொல் நாளடைவில் பேச்சு வழக்கில் மருவி சம்பரான் என்றாயிற்று. அது சரித்திரப் புகழ் பெற்ற ஒரு பழமையான மாகாணம்.

அண்ணல் காந்தியடிகள் இதுபற்றி தனது சுயசரிதையான “சத்திய சோதனை” என்ற புத்தகத்தில் எழுதியுள்ள விவரம் வருமாறு:

“ஜனகமகாராஜன் ஆண்ட நாடு சம்பாரன். அங்கே மாந்தோப்புகள் ஏராளமாக இருப்பதைப் போலவே, 1917 ஆம் ஆண்டு வரையில், அவுரித் தோட்டங்களும் நிறைய இருந்து வந்தன. சம்பாரன் குடியானவர் ஒவ்வொருவரும், தாம் சாகுபடி செய்யும் நிலத்தின் இருபதில் மூன்று பாகத்தில் தமது நிலச்சுவான்தாரருக்காக அவுரியைக் கட்டாயம் பயிர் செய்தாக வேண்டும் என்று சட்டம் இருந்தது. இதற்கு கதியாக்கள் கதியா முறை என்று பெயர். அதில் மூன்று ‘கதியா’வில் அவுரிச் சாகுபடி செய்ய வேண்டும் என்று சட்டம் இருந்ததால் அம்முறைக்குத் ‘தீன் கதியா’ என்று பெயர். இந்த சம்பரானில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெருந்துன்பங்களை அனுபவித்து அவுரியைப் பயிரிடுகிறார்கள். ஆயிரக்கணக்கான அந்த விவசாயிகள் அனுபவித்து வரும் அநீதியை எப்படியும் போக்க வேண்டும் என்பதே சம்பரான் அவுரிப் போர்!”
-காந்தியடிகள் சுயசரிதை

அங்கு வாழும் விவசாயிகள் தங்களது நிலத்தின் ஆறில் ஒரு பகுதியில் கட்டாயமாக அவுரியைப் பயிரிட வேண்டும். இல்லையேல் நிலம் உழவனுக்குக் கிடைக்காது. அவுரி சாயத்திற்கு இங்கிலாந்து நாட்டில் நல்ல விலை உயர்வு இருந்ததால், பிரிட்டிஷார் இவ்வாறான கெடுபிடிகளை சம்பரான் பகுதி விவசாயிகளுக்குச் செய்து வந்தார்கள். இந்தக் கட்டாயப் பயிர் முறையால் உழவர்கள் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வந்தார்கள்.

லக்னோ நகரில் அப்போது 1916 ஆம் ஆண்டில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் தேசிய மகாசபையில், அவுரி பயிரிடுவோரின் அல்லல்களை அகற்றிட சம்பரானில் ஓர் அறப்போர் துவங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இராஜ்குமார் சுக்லா என்ற விவசாயி ஒருவர் லக்னோ வந்த காந்தியடிகளிடம் விவசாயிகளின் துயர்களை விரிவாக எடுத்துரைத்து அவரைச் சம்பரான் மாவட்டப் பகுதிகளுக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.

பாட்னா நகர் சென்ற காந்தியார், ராஜன் பாபு வீட்டில் தங்குவதற்காக சென்றார். அப்போது அவர் வீட்டில் இல்லை. வெளியூர் போயிருந்தார். ராஜேந்திரர் இல்லத்து வேலைக்காரர்கள் முன்பின் காந்தியடிகளாரைக் கண்டிராததால், அவரை அவர்கள் மதிக்கவே இல்லை. கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் அனுமதி தரவில்லை. தீண்டத்தகாமை அவ்வளவு மோசமாக அப்போது அங்கே இருந்தது. அன்னியர்களைக் கிணற்றில் தண்ணீர் சேந்தவும் விடுவதில்லை.

மகாத்மா சம்பரான் சென்றார். விவசாயிகளில் பலரைக் கண்டு விவரம் தெரிந்தார். வேதனைகளாலும், அச்சங்களாலும் அவதிப்பட்ட விவசாயிகள் அவரிடம் தங்களது எல்லாக் குறைகளையும் முறையிட்டுச் சொன்னார்கள். அவர்களுக்கு அவர் ஊட்டிய தைரியத்தாலும், ஊக்கத்தாலும் அவர்கள் துணிவடைந்தார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிடவும் முன்வந்தார்கள்.

வெள்ளைக் குத்தகைதாரர்கள் காந்தியடிகளது போராட்டச் செயல் ஏற்பாடுகளை அறிந்து கோபமடைந்தார்கள். அரசாங்கம் வெள்ளையர்களுடையது அல்லவா? அதனால் திருடனுக்குத் தேள் கொட்டிய நிலைக்கு ஆளானார்கள்.

மற்ற வெள்ளையதிகாரிகளுக்கு குத்தகைதாரர்கள் தந்தியடித்து காந்தியாரின் போராட்ட அபாயங்களைத் தெரிவித்தார்கள். உடனே எதிர்பாராமல் கெடுபிடிகள் சூழ காந்தியடிகளைக் கைது செய்து விட்டார்கள். அதைக் கண்ட சம்பரான் ஊர் பொதுமக்கள், பெரிய மனிதர்கள் திரளாகத் திரண்டு விட்டார்கள். இதை அறிந்ததும் ஊர் திரும்பிய இராஜேந்திர பிரசாத் அவ்வூர் மக்களோடு கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்தார். ‘காந்தியை விடுதலை செய்’ என்ற கோஷங்கள் எங்கும் எதிரொலித்தன. ராஜேந்திர பிரசாத் காந்தியாரைக் கண்டு பேசி, ‘எதற்கும் நாங்கள் தயார்’ என்ற உறுதியை அவரிடம் தெரிவித்தார்.

பொதுமக்கள், பெரிய மனிதர்கள், செல்வாக்குடையோர் நிர்ப்பந்தம் நேரம் ஆக ஆகக் கடுமையானது. இதையறிந்த பீகார் அரசு அவரைக் கைது செய்த இடத்திலேயே விடுதலை செய்து விட்டது. அதே இடத்தில் அவுரி விவசாயிகள் குறைகளை அகற்றிட அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, அக்குழுவுக்குக் காந்தியடிகளையுமம் ஓர் உறுப்பினராக நியமித்தது.

அவுரி சாகுபடி செய்வோரது விசாரணைக் குழு காலம் கடத்தாமல் விவசாயிகளின் குறைகளை விரைவாகவே விசாரித்தது. அக்குழு முடிவின் பேரில், அவுரி சாகுபடியாளர்களது குறைகளை நீக்கிட ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக விவசாயிகள் பட்ட வேதனைகள் ஒழிந்து அவர்கள் ஓரளவு ஆறுதலும் பெற்றார்கள்.

சம்பரான் போராட்டத்தில் காந்தியடிகளுக்குத் தளபதி போல நின்று, ஊர் மக்களை ஒன்று கூட்டி கடைசி வரை ஒத்துழைத்தவர் ராஜன் பாபுவே ஆவார். இதனால், பாபுக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கும் பேரும் புகழும் மேலும் கூடியது.

மகாத்மாக காந்தியை இந்தப்போராட்டத்தின் போது ராஜன் பாபு சந்தித்ததால் அவரது வாழ்க்கையில் ஓர் அரிய பெரிய மாற்றமே ஏற்பட்டு விட்டது. இதற்கு முன்பே, மாணவர் பருவத்திலிருந்தே, வழக்குரைஞராக இருந்த போதே எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பாபு, மேலும் எளிய வாழ்க்கையோடு, ஒரு கிராமத்துக் குடியாவை உழவனைப் போலவே தனது வாழ்க்கையை நடத்தலானார். ஏழை மக்களுக்கும், எளிய உழவர்களுக்கும், உழைப்பதே தனது மக்கட் சேவை என்பதை உணர்ந்த அவர் - சாகும் வரை, குடியரசுத் தலைவராக ஆனபிறகும் கூட ஏழைபங்காளராக வாழ்ந்து காட்டினார்.

காந்தி பெருமான் தனது சுயசரிதையில் ராஜன் பாபுவைப் பற்றி எழுதும்போது “விரஜ கிருஷ்ண பாபு, ராஜேந்திர பாபு ஆகிய இருவரும் இணையில்லா நண்பர்கள். அவர்களுடைய உதவிகளின்றி நான் ஒரு வேலையும் செய்திருக்க முடியாது. ஓரடியும் நடந்திருக்க முடியாது. அவர்களுடைய தொண்டர்களும், நண்பர்களும், பொது மக்களும் எந்நேரமும் எங்களோடு இருப்பார்கள். குறிப்பாக, ராஜன் பாபுவின் சீடர்களான, சம்பு, பாபு, அனுக்கிரக பாபு, தரணி பாபு, ராம நவமி பாபு போன்றவர்கள் எப்போதும் எங்களுடன் இருந்து வந்தார்கள். விந்தியா பாபுவும், ஜனக்தாரி பாபுவும் அப்போதைக்கப்போது வந்து எங்களுக்கு உதவி செய்தார்கள். இவர்கள் எல்லாரும் பீகாரிகள். இவர்களது முக்கியமான வேலை விவசாயிகளிடமிருந்து வாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொள்வதுதான்.”

காந்தியடிகளிடம் ராஜன்பாபுவுக்கு எத்தகைய அபிமானம் இருந்தது என்பதையே அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். பாபு தனது சுயசரிதையில் பின்வருமாறு எழுதுகிறார் :

“சம்பரான் அதிகாரிகள் மகாத்மாவைக் கைது செய்ததைக் கேட்டு ஆண்ட்ரூஸ் வந்தார். காந்தி மீது வழக்கு நடக்கப் போவதில்லை என்று தெரிந்ததும், அவர் திரும்பிப் போக விழைந்தார். பிஜித் தீவில் உள்ள இந்தியர்களின் குறைகளைப் போக்க அவர் அங்கு செல்ல விரும்பினார். சம்பரானிலோ, ஐரோப்பியத் தோட்டக்காரர்களின் தொல்லைகள் தீரவில்லை. ஆகையால் அவர் சம்பரானிலே இருந்தால் நலமென்று நாங்கள் எண்ணினோம்.”

மகாத்மாக காந்தி கூறுவது போல் செய்வதாக ஆண்ட்ரூஸ் கூறினார். மாலையில் மகாத்மாவிடம் செய்தியைத் தெரிவித்தோம். அப்போது காந்தியடிகள் கூறிய பதில் எங்களது மனப்போக்கையே மாற்றி விட்டது. அவர் மேலும் கூறும் போது,

“ஐரோப்பியத் தோட்டக்காரர்களுடன் போராட்டம் நடப்பதால், ஐரோப்பியரான ஆண்ட்ரூஸ் நம்மோடு இருப்பது நல்லதென்று எண்ணுகிறீர்கள்.”

இவ்வாறு நாம் வலிமை தேடித் தருவதோ, தேடிக் கொள்வதோ முறை ஆகாது. அவ்வாறு நாம் வலிமை சேர்க்க முனைவதே நமது பலவீனத்துக்கு அறிகுறியாகும். ஆகையால், அவர் உடனே இங்கேயிருந்து போய்விட வேண்டும் என்பதே எனது முடிவு. அதுதான் அவசியம். அப்போதுதான் உங்களது பலவீனம் நீங்கும் என்றார் காந்தியடிகள்.

“பிஜித் தீவுக்கு அவர் போவதை விட சம்பரானில் இருப்பதே நல்லதென்று ஆண்ட்ரூசோ அல்லது நாங்களோ கருதினால், அவர் இங்கேயே இருக்கலாம். முடிவு செய்ய வேண்டியவர் ஆண்ட்ரூஸ்தான்” என்றார் காந்தியண்ணல்.

இறுதியில், “ஆண்ட்ரூஸ் பிஜித் தீவுக்கு போவது நல்லது” என்று காந்தியடிகளும் மற்றவர்களும் தீர்மானம் செய்தார்கள்.

காந்தியடிகளுடன் சுயராச்சியம் பற்றி அடிக்கடி பேசினோம். ‘உங்களுக்கு சுயராச்சியம் என்றால் என்ன என்று தெரியவில்லையா? நான் அதற்கான பணிகளைத் தானே செய்கிறேன்’ என்றார். நாங்கள் அவருடைய சொற்களில் இருந்த பொருட்செறிவைப் புரிந்து கொள்ளவில்லை.

அவுரி விவசாயிகள் விசாரணைக் குழுவின் விசாரணை நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வந்ததைக் கண்ட லெப்டினெட் கவர்னர் சர் எட்வர்டு கெயிட் தம்மை வந்து பார்க்குமாறு காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதினார்.

காந்தியடிகள் நேரில் சென்று அந்தக் கவர்னரைப் பார்த்தபோது, “விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானவை, அவர்களிடமிருந்து வெள்ளைக்காரக் குத்தகைதாரர்கள் பணம் பறித்து வந்தது சட்ட விரோதமானது என்றார். அவர்கள் வசூலித்த பணத்தின் ஒரு பகுதியைத் தோட்ட முதலாளிகள் விவசாயிகளுக்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று விசாரணைக்குழு அறிக்கை தந்துள்ளது உறுப்பினராக உள்ள உங்களுக்கும் தெரிந்த ஒன்றுதானே! எனவே, சட்டத்தின் மூலம் விவசாயிகளின் ‘தீன்கதியா’ முறையை ரத்துச் செய்து உத்திரவிட்டிருக்கிறேன்” என்றார்.

எந்தக் குறிக்கோளுக்காக காந்தியடிகளும் ராஜேந்திர பிரசாத்தும் அரும்பாடுபட்டு உழைத்தார்களோ, அந்த லட்சியம் விவசாயிகளது தீன்கதியா ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. தோட்ட முதலாளிகளின் பலம் அளவற்றது. விசாரணைக் குழு அறிக்கையையும் பொருட்படுத்தாமல் மசோதாவை வைராக்கியமாக எதிர்த்து வந்த போதும் கூட, லெட்டினன்ட் கவர்னர் சர்எட்வர்டு கெயிட் தனது சாமர்த்தியம் முழுவதையும் பயன்படுத்தி, காந்தியடிகளது போராட்டத்திற்கும், ராஜன்பாபு உழைப்புக்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அது மட்டுமல்ல, ராஜன் பாபு விவசாயிகளது கஷ்டங்கள் அனைத்தையும் அறிந்தவர். ஆதலால், அவர்களது தேவைகள் என்னென்ன? நீக்கல்கள் என்னென்ன என்பதை ஒரு பட்டியலைப் போட்டுக் காந்தியடிகள் மூலமாகக் கவர்னரிடம் கொடுத்து பரிந்துரைகளை எல்லாம் கவர்னர் நிறைவேற்றிக் கொடுத்ததால், ராஜன் பாபுவுக்கு சம்பரான் பகுதி விவசாயிகள் மத்தியில் செல்வாக்கும் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்து விட்டது.

ஒரு நூறாண்டுக் காலம் விவசாயிகளிடம் இருந்து வந்த ஆறில் ஒரு பங்கு நிலத்தில் அவுரி விவசாயம் பயிரிடும் கட்டாய ‘தீன்கதியா’ முறை ஒழிக்கப்பட்டு விட்டது. அத்துடன், தோட்ட முதலாளிகளின் கெடுபிடிக் கொடுமையும் ஆதிக்க ஆணவமுறையும் அழிக்கப்பட்டது. நசுக்கப்பட்டு நலிந்து கிடந்த விவசாயிகள், ராஜன் பாபுவின் அறிவுப் பிரச்சாரத்தால் அடிமைத்தனத்திலே இருந்து விடுபட்டு சுதந்தர மக்களானார்கள். அதற்குக் காரணம் காந்தி பெருமானின் அறப்போர்தான், சம்பரான் மக்களது சுதந்தரப் போர் உணர்வை தட்டி எழுப்பியது. இதைத்தான் பாபுவிடமும், மற்ற பீகாரிகளிடமும், “உங்களுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியவில்லையா? அதற்கான பணிகளைத்தான் மக்களிடம் செய்து வருகிறேன்” என்று காந்தியடிகள் முன்பு ஒருமுறை குறிப்பிட்டதின் சொற்சுவையும் - பொருட்சுவையுமாகும் என்பதை அவர்கள் இந்த சம்பவத்திற்குப் பிறகு உணர்ந்து கொண்டார்கள். அதே நேரத்தில், அவுரிக் கறையை யாராலும் அழித்து விடவே முடியாது என்று மக்களிடம் ஆழப்பதிந்திருந்த மூடநம்பிக்கையும் பொய்யாகி விட்டதல்லவா?

இராஜன் பாபுவுக்கு சம்பரான் வெற்றிக்குப் பிறகு, பீகார் மாகாணம் மறுமலர்ச்சி பெற வேண்டும் என்ற அக்கறை மேலும் வலுத்தது. விவசாயிகளிடம் உள்ள அறியாமைகளைப் போக்கி அவர்களை அறிவு ஜீவிகளாக்க அரும்பாடுபட்டார்.

விவசாயிகள் தங்களது குழந்தைகளை, அவர்களது விருப்பம்போல கண்டபடி அலைய விட்டு வந்ததையும், காலையிலே இருந்து இரவு வரையில் நாளொன்றுக்கு இரண்டு செப்புக் காசுக்காக அவுரித் தோட்டங்களில்மாடு போல உழைத்து வந்த போக்கையும் தடுத்து நிறுத்திட விவசாயப் பெற்றோர் சங்கத்தை உருவாக்கி அவர்களைத் திருத்தி வந்தார்.

அந்த நாட்களில் மூத்த ஓர் ஆண் விவசாயிக்கு இரண்டனாவுக்கு மேல் கூலி இல்லை. எந்த ஒரு விவசாயி அல்லது தொழிலாளி, நான்கணா சம்பாத்யத்தை செய்து விடுவானேயானால், அவன்தான் அதிர்ஷ்டக்காரன்.

காந்தியடிகள் திட்டமிட்டிருந்தபடி அவரை அழைத்து வந்து ஆறு கிராமங்களில் ஆரம்பப் பள்ளிகளை ராஜன்பாபு துவக்கி வைத்தார். அப்போது அதற்கான ஆரம்ப ஆசிரியர்கள் அங்கே கிடைப்பது அருமையாக இருந்தது. ஊர்ப் பெரிய மனிதர்களை ராஜன் பாபு சந்தித்து, பள்ளி ஆசான்கள் தங்க இடமும், உணவுத் தானியங்களும் தந்தால்போதுமானது என்று ஒப்புதல் பெற்றார்.

காந்தியடிகளது கருத்துப்படி, பள்ளி ஆசான்கள் பாடங்களைப் போதிப்பதை விட, ஒழுக்கத்தில் உறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கேற்றவாறு அவர்களது இலக்கிய ஞானத்தை விட குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஒழுக்கம் ஓம்பும் ஞானத்துக்கான ஆசிரியர்களை ராஜன் பாபு தேடியும் கிடைக்கவில்லை. அதனால், காந்தியடிகளது சம்மதத்தின் பேரில் பத்திரிகையில் பொதுக் கோரிக்கை என்ற பெயரில் ஓர் அறிக்கை விடுத்தார்.

அந்த அறிக்கையைக் கண்டவர்களில் சிலர், “அன்னயாவினும் புண்ணியம் கோடி; ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற பாரதி வாக்குக்கேற்றவாறு, பாபா சாகிப் சோமன், புண்டலீகர் என்ற இருவரை கங்காராவ் தேஷ் பாண்டே என்ற காந்தியடிகளது நண்பர் அழைத்துக் கொண்டு ராஜன்பாபுவிடம் வந்தார். பம்பாயிலே இருந்து அவந்திகாபாய் கோகலே என்ற அம்மையார் ஒருவரும் புனாவிலே இருந்து ஆனந்திபாய் வைஷம்பாயன், சோட்டலால், தேவதாஸ், சுரேந்திரநாத் ஆகியோரும் வந்தனர். இவர்களை வைத்துப் பாபு ஆரம்பப் பள்ளிகளை மிகவும் மொழிச் சிக்கல் கஷ்டங்களுடன் நடத்தி வந்தார். இந்தப் பெண் ஆசிரியைகளால் பெண்கள் சுதந்திரம் என்றால் என்ன என்பதை விவசாயப் பெண்கள் தெரிந்து புரிந்து கொள்ளச் செய்யுமாறு போதிக்க வேண்டும் என்றார் பாபு.

ராஜன்பாபு பீகார் மக்களுக்கு கல்வியைப் போதிப்பதோடு நிற்கவில்லை. ஒவ்வொரு கிராமமாகச் சென்று அவரவர்களுக்குத் தேவையான கிராம சுகாதார முறைகளையும் உணர வழிகாட்டினார். எங்கெங்கே ஏழை மக்களிடம் சுகாதாரச் சீர்கேடுகள் நிறைந்திருந்தனவோ, அசிங்க சந்து முனைகளாக இருந்தாலும் சரி, அங்கங்கே எல்லாம் சென்று, பொது மக்களது உதவியாலும், அரசு அதிகாரிகள் உதவியாலும் சுகாதாரம் வழங்கப் பாடுபட்டார்.

குறிப்பாக, கிணறுகளைச் சுற்றிக் குழம்பிக் கிடக்கும் சேறு, நாற்றங்களை நீக்குவதிலும் கொசு மருந்துகளை அடிக்கச் செய்வதிலும், பல வகையான தோல் நோய்களால் அவதிப்பட்ட வயோதிகர்களைக் குணப்படுத்துவதிலும் சுருங்கச்சொல்வதானால், மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் புகுந்து வேலை செய்வதற்கான பழக்க வழக்கங்களையும் மக்களுக்குப் போதித்து, அதிகாரிகள் வரமுடியாத இடங்களில் மக்களைக் கொண்டே பணியாற்றிடும் பழக்கத்தை உருவாக்கியவர் ராஜேந்திர பிரசாத்!

இந்த வேலைகளுக்குரிய மருத்துவர்கள், செவிலியர் தேவையை, இந்தியர் ஊழியர் சங்கம் என்ற அமைப்பின் மூலம் பெற்றார். பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர், பொது நண்பர்கள் எனப்படுவோர் நாள்தோறும் கூடி அந்தந்த இடங்களின் தேவைகளை உணர்ந்து ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று சுகாதார நல்வழிகளைச் செய்து வரும் நிலையை உருவாக்கினார் பாபு.

கிராம மக்களது கஷ்டங்களை நீக்கி, அவர்களது வாழ்க்கையை உயர்த்த வேண்டுமானால், தொண்டர்களிடம் சத்தியம் வேண்டும். அவர்களிடம் அச்சம் அறவே இருக்கக் கூடாது. வறுமை ஒழிப்பு நோன்பை ஒவ்வொரு மாகாணத் தலைவர்களும் உணர்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த உயர்ந்த லட்சியத்தைத்தான் காந்தியடிகளது ஏழ்மை ஒழிப்பு, சம்பரான் சேவை நமக்கு உணர்த்தியது என்று ராஜன்பாபு மக்கள் இடையே பேசும் போதெல்லாம் சுட்டிக் காட்டி, அதற்காக அயராது உழைத்தார்.

“நானும், எனது நண்பர்களும் பாட்னாவிலே இருந்து சம்பரான் என்ற நகருக்குச் சென்ற போது, எங்களில் பலருக்கு பல வேலைக்காரர்கள் இருந்தார்கள். எங்களுக்குரிய உணவுகளைத் தயாரிக்க சில சமையற்காரர்களும் உடனிருந்தார்கள். சில மாதங்கள் சென்ற பின்பு, நாங்கள் வேலைக்காரர்களைக் குறைத்துக் கொண்டோம். பிறகு, ஒரே ஒரு பணியாளனை வைத்துக் கொண்டே எல்லா வேலைகளையும் நாமே செய்து வந்தோம்.”

“எங்களில் பலர் அன்று வரை கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீரையும் எடுத்ததில்லை. எங்களது உடைகளைத் துவைத்துக் கொண்டதும் இல்லை. சுருக்கமாகக் கூறினால் ஒரு சிறு வேலையையும் நாங்கள் செய்தது கிடையாது. அவரவர்களுக்கு அவரவர் கைகளே உதவி என்ற காந்தீயப்படி நாங்கள் நடந்து வந்தோம்” என்று ராஜன் பாபு உழவர்கள் இடையே பேசும் போது குறிப்பிடுவார்.

இதற்கெல்லாம் காரணம், சம்பரானுக்கு மகாத்மா அறப்போர் செய்ய வந்து தங்கிய போது பழகியவைதான். எல்லா வேலைக்காரர்களையும் நாங்கள் வேலையிலே இருந்து அறவே நிறுத்திவிட்டோம். அதன் எதிரொலி என்ன தெரியுமா?

நாங்களே கிணற்றிலே இருந்து குடங்குடமாகத் தண்ணீரைச் சேந்திச் சேகரித்தோம். அவரவர் துணிகளை அவரவர்களே துவைத்துக் கொண்டார்கள். என்னென்ன வேலைகள் எங்களுக்கு உண்டோ அவற்றை நாங்களே பிறரது குறுக்கீடுகள் இல்லாமலேயே செய்து கொண்டோம்!

நாங்கள் தங்கியிருந்த அறைகளை நாங்களே பெருக்கிச் சுத்தம் செய்தோம். உணவு தயாரித்து உண்பதற்கு முன்பும் பின்பும் சமையல் பாத்திரங்களைத் துலக்கி சுத்தம் செய்து கொண்டோம். உணவு தயாரிப்பதற்குரிய பொருட்களைக் கடைக்குச் சென்று வாங்கி வந்தோம். ரயிலுக்குப் போனால், எங்களது மூட்டைகளை நாங்களே சுமந்து கொண்டு போனோம், எதற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்த பழக்கம் எங்களை விட்டே அகன்று, எங்களுக்கு நாங்களே தக்க உதவிகளைச் செய்து கொண்டோம். இதனால், எங்களது உடல் சுறுசுறுப்பும் ஒருவிதத் துறுதுறுப்பும் பெற்றது.

சமையல்காரர்களை அவரவர் வேலையை விட்டு விட்டுப் போக சொன்னதும், காந்திஜீயின் மனைவியான கஸ்தூரி அம்மையார் எங்களைச் சேர்ந்த எல்லோருக்காகவும் உணவு தயாரித்துத் தாயன்புடன் எங்களுக்கு உணவு பரிமாறினார். மகாத்மா காந்தியை நாங்கள் சந்திப்பதற்கு முன்பு, ரயிலில் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வதைக் கேவலமாகவும், இழிவாகவும் நினைத்தோம். அவரைச் சந்தித்ததற்குப் பிறகு இந்த மனப்போக்கு அடியோடு மாறிவிட்டது.

காந்தியடிகள் அணிகின்ற எளிய ஆடையும், அவர் மக்களுக்காக எவ்விதத் தன்னலமும் இல்லாமல் செய்து வருகின்ற தியாக மனப்பான்மையினையும், பார்த்து நாங்கள் போதிய உணர்வுகளைப் பெற்றோம். அவரது அக்கவர்ச்சி, பழகுந்தன்மை, பொதுநலநோக்கு எங்களது மனதைக் கவர்ந்தன. அந்தக் கவர்ச்சி எங்களது அறிவுக்கான மறுமலர்ச்சியை ஊட்டியது. அதனால், அவரைப் பின்பற்றத் தொடங்கினோம்.