பாபு இராஜேந்திர பிரசாத்/குடும்ப சேவையும் ஒரு தவமே!


5. குடும்ப சேவையும் ஒரு தவமே!

தம்பியின் கடிதம் கண்டு கண்ணீர் சிந்திக் கதறுகின்ற தமையனையும், அண்ணனின் விருப்பத்தை நிறைவேற்றத் துடிக்கின்ற தம்பியையும் பார்ப்பதே அரிதல்லவா? ராஜேந்திரர் குடும்பம் வைதிகமானது பழமையில் ஊறியது. அந்த வீட்டின் உறவினர்கள் எல்லாம் ஒரே குடும்பத்தில் வசித்தார்கள். கூட்டுக் குடும்பம்தான் இந்திய நாகரீகத்தின் உயர்ந்த உறுப்பு. கடைசி வரையில் அவர் இதை உறுதியாக நம்பினார்.

இராஜேந்திரர் குடியரசுத் தலைவர் ஆனதற்குப் பிறகு, இந்துகோட் மசோதாவுக்கு அவர் முழு ஆதரவு அளிக்காததற்குக் காரணம் இதுவே. அவருடைய குடும்ப அமைப்பு பழைய விதிகளை ஒட்டியே இருந்தது. வீட்டில் மூத்தவர்களுக்குத் தாம் முதல் மரியாதை அவர்களைக் கலந்து கொண்டே எதையும் செய்வார்கள்,

மகேந்திர பிரசாத், ராஜேந்திர பிரசாத்தை விட எட்டு வயது பெரியவர். ஆகையால், அண்ணாவின் சொல்லை அவர் ஒரு நாளும் மீறியதில்லை. அண்ணாவுக்கோ தம்பியிடம் அளவுக்கு மீறிய அன்பு, பொதுப்பணிகளில் கலந்து கொள்ள தம்பி பாபுவுக்கு அவர் முழுச் சதந்திரமும் அளித்தார்.

இராஜேந்திரர் இல்லாத காலத்தில் அவரே குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார். இவ்வாறு அவர் வீட்டுப் பணியை நடத்தி வந்ததால்தான் இராஜேந்திரர் அமைதியாக நாட்டுப் பணியை மேற்கொள்ள முடிந்தது.

காந்தியடிகள் கஸ்தூரி அம்மையாரை சிறுவயதில் திருமணம் செய்து கொண்டதைப் போலவே, ராஜன் பாபுவும் குழந்தைப் பருவத்திலேயே, அதாவது அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, பன்னிரண்டாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். ராஜன் பாபு மாமியார் இல்லம் அவர் பிறந்த ஜீராதேயீ என்ற ஊருக்கு அருகிலேயே இருந்தது. எப்படி பாபுவுக்குத் திருமணம் நடந்தேறியது என்பதைப் பற்றி அவரே எழுதுகிறார் பாருங்கள்.

“ஜீரோ தேபியில் நடக்க வேண்டிய சடங்குகளை முடித்துக் கொண்டு மண ஊர்வலம் புறப்பட்டது. ஓர் அலங்காரமான பல்லக்கில் நான் உட்கார்ந்து கொண்டேன். அண்ணா குதிரை மீது ஏறி வந்தார். ஆனி மாதம், பல்லக்குக்கு மேலே மூடி இல்லை. அதனால் வெயில் கடுமையாகத் தாக்கியது. அனல் தெறித்தது. வெயிலும், ஆவியும் தாக்க நான் பல்லக்கிலே இருந்தவாறே தவித்தேன். ஒரு வழியாக ஊர்வலம் லட்சியத்தை அடைந்தது. ஆனால், அதற்குள் இரவு வெகுநேரம் ஆனது. எனக்கு இரவில் விரைவில் தூங்கிவிடும் பழக்கமுண்டு. ஆகையால், ஊர்வலம் போய்ச் சேரும் முன்பே நான் பல்லக்கில் தூங்கி விட்டேன்.”

“இரண்டு நாள் அலைச்சல் காரணமாக அயர்ந்த தூக்கம். இடத்தை அடைந்ததும் அண்ணா என்னை எழுப்பினார். வரவேற்புச் சடங்குகள், கல்யாணத்தின் மற்றச் சடங்குகள் நடந்தேறின. எனக்கு மணமாகி விட்டது. ஆனால், அப்போது என்ன சடங்குகள் நடந்தன. அவற்றில் நான் கொண்ட பங்கு என்ன என்பதைப் பற்றி எனக்கு நினைவே இல்லை. குழந்தைப் பருவத்தில் என் சகோதரிகள் பொம்மை ஆட்டங்கள் விளையாடுவார்கள். என் கல்யாணமும் என்னைப் பொறுத்த வரை அவ்வாறுதான் நடந்து முடிந்தது.”

தம்பதிகள் இருவரும் குழந்தைகள்தான் என்றாலும், பல ஆண்டுகள் அவர்கள் அமர்ந்து பேசவே சமயம் வாய்க்கவில்லை. ராஜன்பாபுவின் மாணவ வாழ்க்கைக்குப் பிறகே அவருக்கு கணவன் மனைவி தாம்பத்தியம் என்றால் என்ன என்று தெரிந்தது.

அதற்குப் பிறகு தேச சேவை; சுதந்திரப் போரின் பணிகள்; பொதுமக்கள் பிரச்சனைகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் இவ்வளவும் சிறுகச் சிறுகவும் இடைவெளி விட்டும் ஏற்பட்டதால் குடும்ப வாழ்க்கையின் இன்பத்தை அவர்களால் முழுமையாக அனுபவிக்கவே முடியவில்லை.

வழக்குரைஞர் பணியிலே பாபு ஈடுபட்ட போது, அடிக்கடி கல்கத்தா நகர் நீதிமன்றத்துக்குப் போகும் நிலை நேரும், ஆனால், அவரது வீட்டார் எல்லாரும், ஏன் புதுமணப் பெண் உட்பட எல்லாருமே பாட்னாவிலேயே தங்கிவிட எண்ணினார்கள். அதற்கேற்றவாறு பாபுவும் அங்கேயே தங்கிவிட்டார்.

கல்கத்தா நகரிலே ராஜன்பாபு 1920-ஆம் ஆண்டில் துவங்கிய ஒத்துழையாமைப் போர் இயக்கத்திலே கலந்து விட்டார். இந்த நேரத்திலே குடும்பம், இல்வாழ்வு இன்பம் எல்லாவற்றையும் மறந்துதானே ஆக வேண்டும்? பாட்னாவிலே உள்ள ‘சதாகத்’ ஆசிரம வாழ்க்கையே அவருக்கு வீடாக மாறியது. ஆனாலும், இல்லற வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அவரைப் பாதிக்காமல் இருக்குமா? இருப்பினும் இன்ப துன்பங்களும் அவருக்கு இணைந்தே வந்தன.

இந்த இக்கட்டான நேரத்தில், ராஜன் பாபுவின் அண்ணன் மகேந்திர பிரசாத் மறைந்தார். குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் கவனித்துக் கொண்ட பண்பாளர் அல்லவா? தம்பியின் முன்னேற்றமே தனது குடும்ப முன்னேற்றம் என்று நட்ந்து வந்தவர். பொறுப்புகளை எல்லாம் ராஜன் பாபு தோள்களிலே சுமக்க வைத்து விட்டுக் காலமாகி விட்டார்.

அரிசி ஆலை ஒன்றை நட்டத்திலும் நடத்தி வந்தவர் மகேந்திர பிரசாத். எப்படியோ அவர் சாகும்போது அறுபதாயிரம் ரூபாய் கடன்களை வைத்து விட்டு மறைந்தார். அந்தக் கடன் அடைக்க இராஜேந்திரர் தனது நிலத்தை விற்றார். அப்போதும் தீரவில்லை கடன் தொகை. சேட்ஜம்னா லால் பஜாஜ் என்பவர் உதவி செய்தார். தீர்ந்தது கடன்.

இராஜேந்திர பிரசாத்திற்கு இரண்டு ஆண் மக்கள். மூத்தவர் மிருத்யுஞ்சயன். இளையவர் தனஞ்செயன். மகேந்திர பிரசாத் மறைந்த பிறகு அவரது குடும்ப பாரத்தை இராஜேந்திர பிரசாத்தின் இரு புதல்வர்களும் ஏற்று நடத்தி வந்தார்கள்.

மூத்த மகன் மிருத்யுஞ்சயனுக்கு தேச பக்தர் விரஜகிஷோர் பாபுவின் மகளைத் திருமணம் செய்து வைத்தார். சிறிது காலத்துக்குள் அவர் தனது மனைவியை இழந்தார். அதே நேரத்தில் சிறிது நாட்கள் கழித்து அவரது மாமனாரும் மாண்டார். இந்த நிகழ்ச்சிகள் அந்த வீட்டையே மிகவும் சோகமயமாக்கி விட்டன. இதோ அந்த சோகங்களை அவரே எழுதுகிறார் படியுங்கள்.

“பீஹாரில் ஹிந்து முஸ்லீம் கலகம் என்று கேள்விப்பட்டு பாட்னா நகர் சென்று கொண்டிருந்தோம். மிருத்யுஞ்சயன் மனைவி இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. வீட்டுக்குப் போனேன். பெண்களது ஒப்பாரியும், குழந்தைகளது ஓசையும் வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கிருந்து புறப்பட்டு, பாட்னா மாவட்டத்திலே நடந்து கொண்டிருந்த இந்து - முஸ்லீம் கலவரங்களை அடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டேன். ஆயிரக்கணக்கானவர்கள் கொலையுண்டு, ஆயிரக் கணக்கான வீடுகளில் அழுகையும் புலம்பலுமாக இருந்ததைக் கேட்டேன். அங்கு என் வீட்டுத் துக்கம் வெட்கி அடங்கிவிட்டது போலும்.”

குடும்பத்தில் நடந்த மற்றொரு மரண சம்பவத்தைப் பற்றி பாபு எழுதுவதைப் படியுங்கள்.

“ராஞ்சியில் பல நாட்கள் கஷ்டப்பட்ட பின், குழந்தை பிரகாஷ் அகாலத்தில் காலமாயிற்று. அப்போது நான் தில்லியில் இருந்தேன். தொலைபேசி மூலமாக குழந்தையின் அபாயச் செய்தி வந்தது. புறப்பட்டுக் கொண்டிருந்தேன். இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. அவனுடைய அண்ணன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செத்துப் போனான். அந்தக் காயம் இன்னும் ஆறவில்லை. அந்த எண்ணம் மீண்டும் நினைவில் நிழலாடியதாலே கண்களில் நீர் நிறைகின்றது. இப்போது, இந்த இரண்டாவது காயம். இதைத் தவிர்க்க வழியில்லை. தெய்வ சித்தம் இது. குழந்தைகள் இப்படி வந்து போக வேண்டுமானால், அவர்கள் ஏன்தான் வருகிறார்களோ? இதுவும் கடவுளின் திருவிளையாடலே. இதன் ரகசியத்தை அவனே அறிவான். அவனுடைய லீலைகளை நாம் புரிந்து கொள்ள முடியாது.

இராஜேந்திர பிரசாத், முதல் குடியரசுத் தலைவரான பிறகும், அவரது வாழ்க்கை முறையே மாறவில்லை. எப்போதும் போல எளிய வாழ்க்கையே நடத்தினார் குழந்தைகளோடு விளையாடுவது என்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். நாட்டுப் பணிகளோடு வீட்டுப் பணிகளையும் அவர் தவறாமல் கவனித்துக் கொண்டார்.

தனது தமையனார் மறைந்த பின்பு அவருடைய குடும்பத்தின் பொறுப்புகளையும் இராஜேந்திரரே ஏற்றுக் கொண்டார். தேச சேவை எப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வேள்விச் சாலையில் எழும் ஒளியோ, அதனைப் போலவே ஒவ்வொரு குடிமகனின் குடும்பச் சேவையையும் ஒரு தவச்சாலையாக ஆற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தனது இல்லத்துச் சேவைப் பணிகளை தவச் சாலையாக மாற்றிக் கொண்ட புனிதராகவே வாழ்ந்தவர்.