பாபு இராஜேந்திர பிரசாத்/பாபு இராஜேந்திரர் எழுதிய கண்ணீர்க் கடிதங்கள்


4. பாபு இராஜேந்திரர் எழுதிய
கண்ணீர்க் கடிதங்கள்

என்று இராசேந்திரர் கல்வி பயிலத் துவங்கினாரோ அன்று முதல், அவர் தேர்வு எழுதிய எல்லாப் பரீட்சைகளிலும், அதாவது, பி.ஏ. படிப்பு வரையுள்ள தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவராகவே திகழ்ந்து வந்தார். அதனால், கல்லூரிகள் ராஜேந்திரரைப் பேராசிரியராகப் பணியாற்றிட அழைப்பு விடுத்தன.

முசபர்பூர் கல்லூரியில் சரியான பாடப் பயிற்சி இல்லை என்ற கருத்து அங்குள்ள பொது மக்களிடையே ஒரு குறையாகவே பல ஆண்டுகளாக இருந்தது. எனவே, கல்லூரி நிர்வாகம் இராஜேந்திரரின் தகுதி திறமைகளை அறிந்து அவரை ஆங்கிலப் பேராசிரியராகப் பதவி ஏற்குமாறு அழைத்தது.

அக்கல்லூரி நிர்வாகம் தன்னைத் தேர்வு செய்து விட்டதால், அதனைத் தவிர்க்காமல் பேராசிரியர் பொறுப்பை ஏற்றுப் பத்து மாதங்கள் மட்டுமே அங்கு பணிபுரிந்தார். அதன்பின் கல்கத்தா சட்டக் கல்லூரியில் சேர்ந்து, 1915 ஆம் ஆண்டின் போது, அவர் வழக்குரைஞரானார்.

பாட்னா என்ற பாடலி புத்திர நகரில் உயர்நீதிமன்றம் ஒன்று 1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அதனால் பாபு வேறு மாகாணத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டிய அவசியமில்லை. பாட்னாவிலேயே தனது வக்கீல் பணியை ஆரம்பித்தார்.

வழக்குகள் ஏராளமாக அவரைத் தேடிவந்தன. வந்த வழக்குகளில் பெரும் வெற்றியே பெற்றார். அதனால் இராஜேந்திரருக்கு பீகார் மாகாணத்திலும், கல்கத்தாவிலும் நல்ல புகழும் பெயரும் உருவானது. காந்தியடிகளாருடைய தேச சேவையின் தொடர்பு இராஜேந்திரருக்கு ஏற்படும் வரை வக்கீல் தொழில் செம்மையான வருவாயுடன் நடைபெற்றது. காந்தி பெருமான் அவரை சுதந்திரப் போர்ப் பணிக்கு வருமாறு அழைத்துக் கொண்டார்.

கல்கத்தா ‘டப்’ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ராஜன்பாபுவுக்குத் தேசப் பணியில் ஈடுபட்ட அனுபவம் இருந்தது. 1905 ஆம் ஆண்டில் வங்களா மாகாணத்தை கவர்னராக இருந்த கர்சான் பிரபு இரண்டாகப் பிரித்தார். அதனால், அப்போது வங்க மாகாணம் மட்டுமன்று, ஏறக்குறைய இந்திய பூபாகமே கொதித்தெழுந்து எதிர்த்தது.

அந்த எதிர்ப்பு காரணமாகத்தான் அயல்நாட்டுத் துணி பகிஷ்கரிப்பு நடந்தது. இந்திய மக்களின் சுதேசி இயக்கம் நாடெங்கும் தீவிரமாக உருவாகியது. அந்த சுதேசிப் போராட்டத்தில் ராஜன் பாபுவும் கலந்து கொண்டார்.

சுதேசி இயக்கப் போராட்டம் நடந்த அடுத்த ஆண்டில் கல்கத்தா மாணவர்கள் சம்மேளனம் என்ற ஓர் இயக்கம் உருவானது. இந்த இயக்கத்தில் இளைஞர்களுக்கு சுதேசிப் பற்றும், தேசிய உணர்வுகளும் உருவாக்கப்படுவதே நோக்கமாக இருந்தது.

இந்த மாணவர் இயக்கம் ஏற்பட ராஜன் பாபு அரும்பாடுபட்டார் என்ற செய்தி காந்தியடிகள் போன்ற தலைவர்களுக்கெல்லாம் எட்டியது. காந்தியடிகளின் தொடர்பு ராஜன்பாபுக்கு ஏற்படும் முன்பே, அவருக்கு நாட்டுப் பணியாற்றிய அனுபவம் இருந்தது.

அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகாசபை மாநாடு 1906 ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற போது, லோகமான்ய பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ், தாதாபாய் நெளரோஜி, மோதில்லா நேரு போன்ற இந்தியப் பெருந்தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டு, பிரிட்டிஷ் ஆட்சியை ஒவ்வொருவரும் அவரவர் நோக்கில் எதிர்த்து முழக்கமிட்டார்கள்.

இந்த தேசிய வீர உரைகளை எல்லாம் ராஜன்பாபு கூர்மையுடன், உற்று நோக்கிக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த பேச்சுக்களது கருத்துக்கள் எல்லாம் அவருடைய சிந்தனையில் ஊடுருவி, தேசியக் தொண்டாற்றும் ஈடுபாட்டை மேலும் அதிகமாக்கியது. வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதே தனது நாட்டுக் கடமை என்று அவர் உறுதி செய்து கொண்டார்.

தேசிய மகாசபை காங்கிரஸ் தலைவரான கோபாலகிருஷ்ண கோகலேயிடம் இருந்து ராஜன்பாபுக்கு ஒரு கடிதம் வந்தது. இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்ற வருமாறு அக்கடிதத்தில் அவர் அழைப்பு அனுப்பியிருந்தார்.

கோபால கிருஷ்ண கோகலே சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழிகாட்டி, பண்பாளர்; எப்போதும் தேசத் தொண்டே அவரது மூச்சும்- பேச்சுமாக இருந்தது. அவர் இந்திய ஊழியர் சங்கத்தையும் உருவாக்கி இருந்தார். இந்த சங்க உறுப்பினர்கள் இந்திய மக்களின் வறுமை நிலையினை உணர்ந்து, அதற்காகக் குறைந்த சம்பளத்தையே பெற வேண்டும் என்று விரதம் பூண்டவர்களாவர். தங்கள் காலம் முழுவதையும் தேச சேவையிலேயே கழிக்க வேண்டும் என்பது அந்தச் சங்கத்தின் விதியாகும்.

ராஜன்பாபு ஆற்றியுள்ள செயல்கள் அனைத்தையும் அறிந்த கோபால கிருஷ்ண கோகலே, தனது ஊழியர் சங்கத்தில் சேர்ந்து தேசத் தொண்டாற்ற வருமாறு அழைத்திருந்தார்.

கோகலே அழைப்பை ஏற்ற ராஜன்பாபு பூனாநகர் சென்று அவரைச் சந்தித்து விவரங்களைத் தெரிந்து கொண்ட பிறகு, கோகலேயின் இந்தியர் ஊழியர் சங்கத்தில் சேர விரும்பினார். ஆனால், அண்ணன் மகேந்திர பிரசாத் அனுமதியைப் பெற்றுச் சேர்ந்திட தமையனாருக்கு கடிதம் எழுதினார்.

அன்புள்ள அண்ணா!

எப்போதும், எந்நேரமும் தங்களுடனேயே இருக்கும் நான், தங்களுடன் அஞ்சல் வாயிலாகப் பேசுவதைக் கண்டு தாங்கள் வியப்படைவீர்கள். தங்களிடம் அச்சமும் - நாணமும் உடைய என்னால், தங்கள் முன் நின்று பேச முடியாத வெட்கமான ஒரு கூச்ச நிலையால், கடிதம் மூலமாகப் பேசுகின்றேன்.

அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகா சபையின் தலைவரான கோபால கிருஷ்ண கோகலே அவர்களை நான் முன்பு சந்தித்த விவரங்களை நீங்கள் அறிவீர்கள். அவர் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்றுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அவ்வாறு என்னால் செய்ய இயலுமா? முடியக் கூடிய செயல்தானா? என்று அன்று முதல் சிந்தித்தபடியே இருந்தேன். அந்த ஆழ்ந்த யோசனையின் விளைவாக, தேச சேவையில் ஈடுபடுவது நல்லது என்று எனக்குத் தெரிந்தது.

நம்முடைய குடும்பம், வாழ்வும் - வளமும் பெற்றிட என்னையே நம்பி இருக்கிறது. எனவே, என்னுடைய இந்தக் கருத்துக்களைக் கேட்டதும் தாங்கள் திடுக்கிடுவீர்கள் என்பதையும் உணர்கின்றேன். குடும்பத்தினர், தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வார்கள் என்று நான் விலகிவிட்டால், நம் குடும்பத்துக்குப் பெரும் துன்பங்கள் ஏற்படும் என்பதையும் அறிகிறேன்.

ஆனால், குடும்பத்தின் மீதுள்ள கடமையைவிடப் பெரிய அழைப்பு ஒன்று என் உள்ளத்தில் தோன்றியுள்ளது. துன்பத்திலும், துயரத்திலும் உங்களைத் தவிக்க விட்டு விட்டு நான் பிரிந்து போவது நன்றி கெட்ட செயலாகவே இருக்கும்.

எல்லாவற்றையும் நான் நன்றாக உணர்ந்துள்ளதால், நம் இருவருக்கும் இடையே மனக்கசப்பு உருவாகாது என்றே எண்ணுகிறேன். நாம் இருவரும் அண்ணன், தம்பி மட்டுமன்று. நமது குடும்பத்தை இன்றுவரை தாங்களே நடத்தி வருகிறீர்கள். எங்களுக்கு எல்லாம் எல்லாத் தேவைகளுக்கும் உதவியாக உள்ளீர்கள். அதற்காக, நான் தங்களிடம் அன்பு கொள்ளவில்லை. தம்பியால், வருவாய் வரும் என்பதற்காகத் தாங்களும் என்னிடம் அன்பு வைக்கவில்லை. இவை எல்லாவற்றையும் விட நமது அன்பு மேலானது; உயர்வானது; ஆழமானது. ஒருவர் வழிமாறிச் செல்வதால், அதனால் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும், நமது பேரன்புக்கு ஊறு நேராது. மாறாக, அந்த அன்புக்குமுண்டோ அடைக்குந்தாழ்? என்பதே எனது எண்ணமாகும்.

நமது இந்திய நாட்டில் வாழும் முப்பது கோடி மக்களின் நன்மைகளை எண்ணித் தியாகம் செய்யுமாறு தங்களை வேண்டுகின்றேன். கோகலே சங்கத்தில் சேருவதால் நான் பெரிய தியாகம் எதுவும் செய்து விடவில்லை. எந்த நிலையிலும் அந்த நிலைக்கு ஏற்றவாறு நான் வாழப் பழகிவிட்டேன். நன்மையோ, தீமையோ இந்தப் பழக்கம் எனக்கு ஏற்பட்டு விட்டது. எனவே, அதிக அளவு வசதிகளுக்காக நான் ஏற்பாடு எதுவும் செய்யத் தேவையில்லை. சங்கம் கொடுக்கும் சம்பளப் பணமே எனக்குப் போதுமானது. அதுவே முழுத் திருப்தியையும் ஏற்படுத்தும்.

கோகலே சங்கத்தில் சேர்ந்திட எனக்கு நீங்கள் அனுமதி வழங்கினால் அதுவே எனக்குச் செய்த பெரிய தியாகமாகும். நான் அதிகமாகப் பணம் சேர்ப்பேன் என்று நினைக்கிறீர்கள். அந்த நம்பிக்கை நமது எதிர்காலத்தைச் சீர்குலைத்துவிடும். நமது குடும்பமே அதனால் குழப்பத்திற்குள்ளாகும்.

அண்ணா! நமக்குக் குடும்பச்சொத்து கொஞ்சம் உள்ளது. நானும் பணியாற்றினால், நமது வருமானம் கூடும். குடும்பத்தின் தரம் உயரும். இது உண்மைதான் அண்ணா!

நாம் வாழும் மக்கள் சமூகத்தில் பணம் உள்ளவனே பெரிய மனிதன். எல்லாப் பெருமைகளும் அவனைத் தேடிச் சென்று அடையும். பணக்காரன் சமூகத்தில் பெறும் மதிப்பும் மரியாதையும் பண்புள்ள நல்ல குணாளனுக்குக் கிடைக்காது என்பதையும் நான் அறிவேன்.

ஆனால் இந்த உலகம் நிலையற்றது. நீர்மேல் குமிழி போன்றது. தோன்றுவன மறைவன, செல்வம், பதவி, புகழ் பெருமை மற்றபடி எல்லாமே இப்படிப்பட்டதுதான்! ஆசை உருவாவது பணத்தால் தானே தேவை மிகுவதும் அதனால் அல்லவா? தங்கத்தால் இன்பம் பெறலாம் என்று மக்களும் நினைக்கிறார்கள்.

ஆனால், போதுமென்ற மனமே முழு வாழ்க்கை இன்பத்துக்கு அடிப்படை, மகிழ்ச்சி, துன்பம் என்பன எல்லாமே உள்ளத்தைப் பற்றியன. சாதாரண காசு பணங்களை வைத்திருக்கும் ஏழைகள், எத்தனையோ பணக்காரர்களை விடச் சந்தோஷமாக இருப்பதை நாம் பார்க்கவில்லையா அண்ணா! ஆனால் நான் வறுமையை வெறுப்பதாக எண்ண வேண்டாம். நமது முன்னோர்கள் எல்லாருமே ஏறக்குறைய ஏழைகளாகவே வாழ்ந்தவர்களாவர்.

பொருள் இல்லையே என்பதால், ஆரம்பத்தில் அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கலாம். ஆனால், உலகத்தையும், வாழ்க்கையையும் நன்குணர்ந்த ஞானிகள், என்றைக்குமே மனித ஜாதியின் மதிப்புக்கு உரியவர்கள்தான். அவர்களை இகழ்ந்தவர்களே மண்ணோடு இரண்டறக் கலந்து விட்டார்கள்.

நம்மை யார் இகழ்ந்தாலும் அல்லது புகழ்ந்தாலும் அதையெல்லாம் நாம் எண்ணிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. கேலி, கிண்டல் செய்வோர் நம்மீது நல்லெண்ணம் உடையவர்களா? இல்லையே! அவர்களிடம் அறிவும் வலிமையும் இருக்காது. ஆனால் பெருந்தன்மையான எளியவர்களோ அவர்களைப் பார்த்து இரங்க நேரிடும்.

அன்புள்ள அண்ணா, வாழ்க்கையில் எனக்குள்ள ஒரே ஆசை! நாட்டுக்கு ஏதாவது ஒரு சேவையாவது செய்தாக வேண்டும் என்பதே. சேர்வாரிடம் சேர்ந்து விட்ட பழக்கத்தால் ஏற்பட்டு விட்ட குணத்தால் இந்த ஆசை வந்ததோ என்று சிலர் எண்ணுவர். பரோபகாரம் செய்து உலகுக்கு நல்லவனாக நடமாட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை முதன் முதலில் எனக்குப் போதித்தவரும் அதற்குரிய பாதையைக் காட்டியவரும் எனது அண்ணனாகிய தாங்களே அல்லவா? அதனால்தான் இதை நினைவு படுத்துகிறேன்.

என்னை லண்டனுக்கு அனுப்பி ஐ.சி.எஸ்.பட்டப் படிப்பை படிக்குமாறு நமது குடும்பம் ஊக்குவித்தது. ஆனால், அப்போது தங்களது கருத்து என்னவோ, அது எனக்குத் தெரியாது. காரணம் நமது அப்பா அப்போது எடுத்த முடிவு அது எனக்கு அப்போது அந்தக் கல்வியில் ஆர்வம் இல்லை. ஏனென்றால், அந்தக் கல்வியில் வெற்றிபெற்றுத் திரும்பினால், எனது ஆசைக்கேற்ப பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டு விடும். அப்போதும் கூட எனது கருத்துக்களைத் தங்களிடம் கூறினேன். தங்களது எணத்தை எனக்கும் தெரிவித்தீர்கள்.

மற்றொரு சந்தர்ப்பம் இப்போது வந்துள்ளது. தைரியமாக எனது எண்ணத்துக்கு ஆதரவு காட்டுங்கள். தங்களுக்கு எனது எண்ணங்கள் மீது உடன்பாடில்லை என்றால், அதற்காக நான் வருந்துவேனே அல்லாமல் ஆச்சரியப்படமாட்டேன்.

எதிர்காலத்தில் குடும்பம் என்னால் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காகவே, நீங்கள் என்னிடம் அன்பு காட்டுகிறீர்களா? அப்படியானால், அது சிறுமை என்றுதான் நான் வருந்துவேன். எனவே, எனக்கு ஏமாற்றம் அளிக்காமல் எனது கருத்தை ஆமோதித்து ஒப்புதல் உத்தரவு கொடுங்கள் என்று தங்களைப் பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணா, என்னையே நான் வஞ்சித்துக் கொள்ள விரும்பவில்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்பவன் பிறரிடம் எப்படி உண்மையாக நடக்க முடியும்? தாங்கள் இப்போது என்னைத் தடுத்துவிட்டால், அது என் வாழ்நாளையே சிக்கலாக்கி விடும். வழக்குரைஞர் தொழிலில் நான் பணம் பெருக்க முடியும் என்பதும் சந்தேகமாகி விடும். இது மாதிரியான சங்கட நிலையில் என்னைத் தவிக்க விடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தக் கடிதத்திலே எனது ஆசை, எனது ஆசை என்று அடிக்கடி எழுதினேன். என்ன ஆசை அது? வேறு ஒன்றுமில்லை. நாம் பிறந்த பாரத மண்ணுக்கு சிறுபணியாவது செய்ய வேண்டும் என்பதே அந்த ஆசை.

பாட்னா உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞனாகப் பணியாற்றினால் அந்த எனது ஆசை வெற்றி பெறுமா? வக்கீலாகத் தொழில் செய்தால், பணம் நூற்றுக் கணக்கிலும், ஆயிரக் கணக்கிலும் குவிக்கலாம். ஆயிரம், லட்சம், கோடி என்று பணம் படைத்தோரைப் பார்த்தால் சில நேரங்களில் நமக்கு வேதனையாகவும், பரிதாபமாகவும் இருக்கலாம்.

தேசத் தொண்டுகளில் பணியாற்றினால், பிறருக்குப் பயன்பட முடியும். அதனால் பெருமை பெறலாம். கோகலேயைப் போல செல்வாக்கும் புகழும் பெற்ற வேந்தர் யாராவது இருக்கிறார்களா? ஆனால், கோகலே பெரும் ஏழை ஆயிற்றே! அவரை விட நாம் ஏழைகள் தானே!

இலட்சக்கணக்கான ஏழை மக்கள் இரண்டு அல்லது மூன்று ரூபாய் மாத வருமானத்தில் காலம் தள்ளவில்லையா? நம் குடும்பத்தில் நூற்றுக் கணக்கில் வருவாய் வருகிறது. நாம் வசதியாக வாழ முடியாதா? தேசப் பணி என்றால் மனம் திருப்தியுறும் வகையில் உழைக்கலாமே! அமைதியாக நான் நாட்டுப் பணியில் ஈடுபட நினைக்கிறேன். அதனால் வரும் தியாகமும் புகழும் தங்களுக்கே!

கோகலேயின் தலைமையில் நான் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்தால், எனது சொந்த செலவுகளுக்கு தாங்கள் பணம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. எனது செலவுக்குத் தேவையான ஊதியத்தை அவர்கள் தருவார்கள். குடும்பத்துக்காக சிறிதளவு பணஉதவியைச் செய்வார்கள். சிறு தொகைதான் அது என்றாலும், அதை நான் தங்களுக்கே அனுப்பி வருவேன். முப்பதாயிரத்துக்குப் பதிலாக முப்பது வந்தாலும் மன நிறைவு பெற வேண்டியதுதான்.

கல்விச் செலவுகளுக்காக அந்தச் சங்கம் ஏதோ உதவி செய்கிறது. ஆகவே, பிள்ளைகள் படிப்புச் செலவைப் பற்றித் தாங்கள் வருந்த வேண்டியதில்லை.

அன்புமிக்க அண்ணா, இதுவரை நான் எழுதிய எல்லாவற்றையும் நன்றாகச் சிந்திக்க வேண்டுகிறேன். உடனடியாகத் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். இருபது நாட்களாக நான் ஆழ்ந்து சிந்தித்தேன். கெளரவம், பதவி, அந்தஸ்து என்பவை எல்லாம் மாயை. மனிதனுக்குப் பெருமை விளைவிப்பது செல்வம் அல்ல! மனத் திருப்திதான். தங்களுக்கும் அந்தப் பரந்த மனப்பான்மை உண்டு என்பதை நான் அறிவேன்.

நான் கூறும் கருத்தை வேறொரு வகையில் சிந்தித்துப் பார்க்கலாம். நான் திடீரென்று பிளேக் நோய்க்குப் பலியாகி விடுகிறேன். அப்போது என்ன செய்வீர்கள்? இருப்பதை வைத்துக்

கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றுவீர்கள் அல்லவா? எனவே, ஞானம் என்பது எல்லாருக்கும் பொது, ஞான பூர்வமாகப் பார்த்தால், இருப்பதை வைத்துக் கொண்டு நாம் மன நிறைவு அடைய வேண்டியவர்கள் தாமே!

நான் இல்லாமல் தாங்கள் வாழ வேண்டும் என்பது கடவுள் சித்தமானால் அதை தாங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஆகையால், பொது மக்களுக்கு முன்னால் கொஞ்சக் காலம் தரத்தில் தகுதியில் குறைந்தவர்களாகவே இருப்போம் என்று எண்ணி வறுமையை மேற்கொள்ளுங்கள்.

சுதந்திர சிந்தனையையும், பெருமிதமான புத்தியினையும் தங்கள் வாயிலாக உலகுக்கு உணர்த்துங்கள். உலகத்தில் பெரியோர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பூமி புரிந்து கொள்ளட்டும்.

பணம் அல்ல பொருள்! தொண்டே மெய்ப் பொருள் என்பதை உலகத்துக்கு அறிவுறுத்துங்கள் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு முன்னுதாரணமாக விளங்குங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, என் நன்றிக்கு ஓர் இலக்காக இருங்கள்!

எனது முடிவைப் பற்றி என் மனைவிக்கும் எழுதியிருக்கிறேன். அம்மாவுக்கு எழுதத் துணிவு உண்டாகவில்லை. அம்மாவுக்கு தள்ளாத வயது. திகைத்து விடுவார்.

தங்கள் அன்புள்ள
இராஜேந்திர பிரசாத்

இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தார் மகேந்திர பிரசாத். மலைத்துப் போய்விட்டார். சிறிது காலத்துக்கு முன்புதானே தந்தையை இழந்தோம். அந்த மனத் துன்பம் மாறுவதற்குள் இப்போது உடன்பிறந்த ஒரே ஒரு தம்பியையும் கை நழுவ விடுவதா? என்று எண்ணியபடியே தாரை தாரையாக அவரது கண்களிலே இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.

இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, தம்பி ராஜேந்திரர் அண்ணன் இருக்கும் பக்கம் வந்தார். அப்போது தனது தமையன் கண்களிலே இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டு மனம் தளர்ந்து போனார்.

தம்பியைப் பார்த்த மகேந்திர தேசாய், உணர்ச்சி தாளமுடியாமல், கவலையும் ஆத்திரமும் பொங்கியபடியே ‘தம்பி’ என்று கதறிக் கதறி அழத் தொடங்கினார். அண்ணன் தேம்பித் தேம்பி அழுவதைக் கண்ட ராஜேந்திரரும் உணர்ச்சி வயப்பட்டு, அண்ணனைக் கட்டித் தழுவிக் கொண்டு ‘கோ’வெனத் தன்னையுமறியாமல் அழுதுவிட்டார். இருவரும் மனம் உருகினார்கள். இருவருக்கும் பேச ‘நா’ எழவில்லை. உடனே விர்ரென்று ராஜேந்திரர் அவசரம் அவசரமாக வெளியேறிவிட்டார்.

தம்பி சென்ற வேகத்தைக் கண்டு மகேந்திர தேசாய் மீண்டும் வேதனைப்பட்டார். குடும்பச்சுமையைத் தாளாமல் அவர் துவண்டு கொண்டிருந்தார். அவரது வருவாய்க்கு மீறிய செலவு, பெற்ற தாயாருக்கோ உடல் நலம் சரியில்லை, அதற்கும் பணச் செலவு அதிகமாகின்றது. இவற்றை எல்லாம் எண்ணி தனியே இருந்த அவர் தள்ளாடி விழுந்து விட்டார். அப்போது ராஜேந்திரரின் மனைவி தனது கணவன் வந்தாரா என்று அறிய வந்தார்.

மகேந்திர தேசாய் மயக்கமடைந்து வீழ்ந்து கிடந்ததைப் பார்த்த அவர், அவரைத் துக்கி குடிக்கத் தண்ணீர் தந்து ஆசுவாசப் படுத்தி இளைப்பாற வைத்து, என்ன நடந்தது என்று கேட்டார்.

மீண்டும் மகேந்திர தேசாய் அழுத முகத்தோடு, தம்பி நம்மையெல்லாம் விட்டு விட்டு பூனா சென்று இந்தியர் ஊழியர் சங்கத்தில் 25 ரூபாய் சம்பளத்துக்காகச் சேரப் போகிறானாம். வக்கீல் வேலைக்கு பாபு சென்றால் நமது குடும்பம் உயர்நிலை அடையும் என்று நம்பினேன். தம்பி இராஜேந்திரன் எம்.ஏ.படித்துக் கொண்டிருந்த போது அப்பா காலமானார். அதற்குப் பின் தம்பியைச் சட்டப் படிப்பு படிக்க வைத்தேன். மூன்று தங்கைகளுக்கும் தக்க இடத்தில் திருமணங்களைச் செய்தேன். இவையெல்லாம் செலவினங்கள் என்றாலும் வரவு ஏதம்மா? வழக்கம்போல்தானே இப்போது அம்மாவுக்கும் உடல் சரியில்லை. இந்த நேரத்தில் தம்பி குறைந்த சம்பளத்திற்காக, நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து போகிறேன் என்கிறானே அந்த மனவேதனையை என்னால் தாங்க முடியவில்லை என்று மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார்.

மகேந்திரர் நிலையைக் கண்டு ராஜன் பாபு மனைவியாருக்கும் கண்ணீச் சுரந்துவிட்டது. மன ஆறுதலுடன் மகேந்திரரை அமைதிப்படுத்தி விட்டு வீட்டுக்குச் சென்றார்.

இந்த நிலையில் ஒருவாரத்துக்குள்ளாகவே, மீண்டுமோர் கடிதம் ராஜன் பாபுவிடம் இருந்து வந்தது.

அன்புள்ள அண்ணா!

எதிர்பாராமல், தங்களை எனது கடிதத்திற்குப் பிறகு பார்த்தபோது, நான் மிகவும் திகைத்து விட்டேன். என் மீது எவ்வளவு பெரிய விசுவாசமும், பாசமும், அன்பும் இருந்திருந்தால் என்னைப் பார்த்துத் தேம்பித் தேம்பிக் கட்டி அழுவீர்கள் என்பதைப் பிறகுதான் சிந்தித்தேன்.

தங்களது எண்ணம் என்ன என்பதை எனது மனைவியும் என்னிடம் கண்ணீர் சிந்தியவாறே கூறினாள். தங்களுடைய கருத்தைப் புரிந்து கொண்டேன். ஆனால், என்ன கூறுவது என்றுதான் புரியவில்லை. எவருக்கும், எப்போதும் மனம் நோகத் துன்பம் தரக் கூடாது என்பதே எனது கருத்து. எனவே,தந்தைக்குத் தந்தையாக என்னை ஆதரித்துக் காத்த தங்களுக்கோ, நம் அன்புள்ள வயோதிக அன்னைக்கோ ஒருபோதும் நான் மனக் கவலையை உண்டாக்க மாட்டேன்.

கோகலேயின் சங்கத்தில் நான் சேர எண்ணிய போது, அதுதான் எனது முடிந்த முடிவாகக் கருதியதில்லை. இன்று வரை நான் தந்தை சொல்லையோ, அவருக்குப் பிறகு தங்கள் வார்த்தையையோ என்றும் மீறி நடந்ததில்லை. கடவுள் சித்தத்தால் இனியும் நான் மீற மாட்டேன். ஏனென்றால் தகப்பனற்ற மகன் என்ற நிலையை, துன்பத்தை, என்றுமே நீங்கள் எனக்கு உருவாக்கியவரல்லர்! எனவே தங்களது மனத்தை நான் புண்படுத்தும் பாவியாக மாட்டேன்.

இனிமேல் தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே நடப்பேன் அதிலே இன்பம் பெறுவேன். தங்கள் தம்பி தங்களது உத்தரவு இல்லாமல் எதையும் செய்ய மாட்டான். பிற்கால வாழ்க்கையில் நான் பலவிதத் துன்பங்களை அனுபவிப்பேன் என்று எண்ண வேண்டாம். திடீர் என்று எதன் மீதாவது பற்றுக் கொள்பவன்தானே நான்?

என் வயதுக்கேற்ற புத்தியால் தங்களை வருத்திவிட்டேன்! நீங்கள் என்மீது வைத்திருந்த பற்றை மறந்து விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா! நீங்கள் என்னை மன்னிக்காவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள் மன்னிக்க!

இனிமேல் தங்களுக்கு மனவருத்தம் உண்டாக்கும் கடிதங்களை எழுத மாட்டேன். மன உளைச்சலை உண்டாக்குவதற்காகவும் நான் அக்கடிதத்தை எழுதவில்லை அண்ணா! அக்கடிதத்தை எழுதிய பிறகு நேரில் நான் தங்களைக் கண்ட பிறகு கண்ணீர் வடித்தேன்; அழுதேன். இன்னும் கண்ணீர் விடுவேன் எதிர்காலத்திலும் அழுது கொண்டே இருப்பேன்.

அப்பாவுக்கும் நான் மனத்துயர் நேரக் காரணமானேன். அது அவரது உயிருக்கே அபாயமாகி விட்டது. இப்போது அம்மா உடல் நிலையும் சரியில்லை. மீண்டும் அம்மாவுக்கும் அபாயம் உருவாக்க மாட்டேன். தந்தை இடத்திலே தந்தையாக உள்ள உங்களையும் தானாத் துயருக்குள்ளாக்கிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா.

தங்களன்புள்ள
இராஜேந்திர பிரசாத்

அண்ணன் மகேந்திர தேசாய் தம்பியினுடைய இரண்டாவது கடிதத்தைப் படித்து விட்டு மனம் மகிழ்ந்தார்! ஒருமுறைக்கு இருமுறை அந்தக் கடிதத்தை அவர் திரும்பத் திரும்பப் படித்துக் களிப்படைந்தார்! கடிதத்தைத் தனது கண்களிலே ஒத்திக் கொண்டு பூரித்துப் போனார்.