பாப்பா முதல் பாட்டி வரை/001-024

பாப்பா முதல் பாட்டி வரை


குழந்தை

வ்வொரு குழந்தையும் பிறக்கும் போது, உடலிலும் உள்ளத்திலும் பழுதில்லாததாகவும் நலமுடையதாகவும் பிறக்க வேண்டும். அப்பொழுதே அது வளர்ந்து நல்ல குடியாக இயலும். குழந்தை நல்ல விதமாகப் பிறக்குமாறு செய்வதற்காக, இக் காலத்தில் கருப்பமுற்ற பெண்களின் நலத்தைப் பாதுகாக்க வேண்டிய முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. பிறந்த பிறகு ஏற்படுவதைக் காட்டிலும், பிறக்கும் முன்னரே குழந்தையின் உடல் வளர்ச்சியில் மாறுதல்கள் மிகுதியாக ஏற்படுகின்றன. அதனால் கர்ப்பிணிகள், அடிக்கடி மருத்துவரிடம் சென்று உடல்நிலையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அவர்களுக்கு வேண்டிய உணவுத் திட்டத்தை விளக்கிக் கூறுவார்கள். ஏதேனும் நோய் காணின், அதை நீக்குவார்கள். எடுத்துக்காட்டாக, கிரந்தி நோய் (syphils) உள்ள பெண்கள் கருப்பமுற்ற தொடக்கத்திலேயே தக்கவாறு சிகிச்சை செய்துகொண்டால் தான் குழந்தை நலமாகப் பிறக்கும். இல்லையெனில் கருச்சிதைவு உண்டாகும். அல்லது இறந்து பிறக்கும். அல்லது குழந்தை பிறந்து சில வாரங்களா வதற்குள் இறந்து விடும். வெட்டை நோய்களுள்ள பெண்கள் சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளா விட்டால், பிறக்கும் குழந்தைக்குத் தொற்று உண்டாகி, அதன் கண்கள் குருடாக ஏதுவுண்டு.

கர்ப்பிணி சத்துள்ள சீருணவு உண்ணவேண்டும். மருத்துவர் தவிர்க்கும்படி குறிப்பிடும் சிலவகை உணவுகளை உண்ணலாகாது. கர்ப்பிணிகள் வைட்டமின்களையும், மீன் எண்ணைய் போன்ற சிறப்பு உணவுகளையும் உண்ணவேண்டும் என்று மருத்துவர் கூறுவர். மேலும் அவர்கள் சுகாதார விதியின்படியே ஒழுகவேண்டும். இவ்வாறு நடந்துகொண்டால் குழந்தை நல்லவிதமாகப் பிறக்கும்.

குழந்தை பிறந்ததும், முதிர்ந்தவர்களினின்றும் பல விஷயங்களில் மாறுபட்டிருக்கும். குழந்தையின் தலை அதன் உடம்பின் உயரத்தில், நாலில் ஒரு பாகமாகவும், முதிர்ந்தவர் தலையில் ஏழில் ஒரு பாகமாகவுமிருக்கும். குழந்தையின் தலையின் சுற்றளவு மார்பின் சுற்றளவிலும் பெரியதாயிருக்கும். கால்கள் கைகளிலும், நீளம் குறைந்து காணும். முதிர்ந்தவர் ஒரு நிமிஷத்தில் 20 தடவை மூச்சிழுப்பர். ஆனால் குழந்தை 55 தடவை மூச்சிழுக்கும். பிறந்த குழந்தை பொதுவாக 18-22 அங்குல நீளமும், 6-8 இராத்தல் எடையுமுள்ளதாயிருக்கும்; பெண் குழந்தை ஆண் குழந்தையின் உயரத்திலும் எடையிலும், சிறிது குறைவாகவேயிருக்கும். குழந்தை பிறந்ததும் உட்கார வைத்தால், அதன் உயரம் 14 அங்குலமிருக்கும். குழந்தையின் மார்புச் சுற்றளவு சு. 13 1/2 அங்குலமும், தலையின் சுற்றளவு சு.14 அங்குலமுமிருக்கும். வயிற்றின் சுற்றளவு தலையினளவாக இருக்கும்.

குழந்தையின் தோல், ஒருவித வெண்பிசின் போன்ற பொருளால் மூடப்பட்டிருக்கும். குழந்தையைக் குளிப்பாட்டிய பின்னும், அப்பொருள் தங்கியிருக்குமாயின், சிறிது நல்லெண்ணெய் தடவித் துணியால் மெதுவாகத் துடைத்து நீக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் பார்த்தால் அதன் இரைப்பை வயிற்றுள் சாய்வாக இருக்கும். அதனால் எளிதில் வாந்தி ஏற்படக்கூடும். குழந்தையின் வாயில் உமிழ் நீர் ஊறுவதில்லை. அதனால், குழந்தையால் ஸ்டார்ச்சைச் செரித்துக்கொள்ள முடியாது. பற்கள் முளைக்கும் போதே உமிழ்நீர் சுரக்கத் தொடங்கும்.

குழந்தையின் நுரையீரல், சிறிது சிறிதாக விரிந்து, 6 வயதிலேயே முழு விரிவு பெறுகின்றது. குழந்தையின் மூளை 6 வயதுவரை விரைவாகப் பருக்கின்றது. உச்சப் பருமன் வளர்ச்சி அடைவது முதல் ஆண்டிலாகும். ஆறாவது ஆண்டுக்குப் பின் மெதுவாகவே பருத்து வரும். குழந்தையின் மூளையில் மடிப்புக்கள் (Convolutions) நாளடைவிலேயே உண்டாகின்றன.

பிறந்தவுடன், அது சீரணம், கழிவு, இரத்த ஓட்டம், மூச்சு ஆகிய தொழில்கள் நடப்பதற்கு ஏற்றவண்ணமிருந்த போதிலும், அதன் ஐம்பொறிகள் உடனேயே தொழிற்படக் கூடியனவாக இருப்பதில்லை. சில காலம் சென்ற பின்னரே, அது பார்கவும், கேட்கவும், முகரவும், சுவைக்கவும் கூடியதாக ஆகும்.

குழந்தைக்கு முதலில் கருமை, வெண்மை தவிர வேறு நிறவேறுபாடு தெரியாது; இரண்டு மூன்று மாதம் கழித்தே தெரியும். அது பிறந்ததும், அழவும், கொட்டாவி விடவும் வல்லது. ஆனால் பசிக்கிறது என்றும், உறக்கம் வருகிறது என்றும் தெரிந்து கொள்ளாது. அதன் பசியும், உறக்கமும், வெறும் மறிவினைகளாலேயே நடைபெறுகின்றன.

குழந்தை பிறந்தவுடன் அதன் வெப்பநிலை முதிர்ந்தவருடைய வெப்ப நிலையாகிய 98.6 பா.. ஆக இராது. ஒருவாரம் சென்றபின்னரே, இந்நிலை அடையும். குழந்தை பிறந்தபோது வெயிற்காலமாயின், குழந்தைக்கு அதிகமான துணிகளைப் போர்த்தி, அதிக வெப்பமடையச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், இசிவு (Convulsion) ஏற்படலாம்.

குழந்தையின் மலம் கருப்பச்சை நீர் போலிருக்கும். உணவு உண்ணத் தொடங்கிய பின்னரே அது பழுப்பு நிறமாகவும் கட்டியாகவும் ஆகும்.

குழந்தை பிறந்ததும் கொப்பூழ்க் கொடியில் ஒரு பகுதி குழந்தையிடமிருக்குமாறு விட்டு விட்டு, அறுத்து மருந்து வைத்துக் கட்டுவர். எஞ்சியுள்ள பகுதி, சாதாரணமாக ஒரு வாரத்தில் சுருங்கிப் பின் விழுந்துவிடும். பிறந்த குழந்தையைப் படுக்க வைத்தால், முதிர்ந்தவர்போல் காலை நீட்டிப் படுக்க அதனால் முடியாது. அது தலையை ஒரு பக்கமாகத் திருப்பியும், கால்களை மடக்கியும், கைகளைக் கழுத்தினிடையே வைத்துக் கொண்டும் படுக்கும். அதாவது தாயின் கருப்பையில் இருந்த நிலையிலேயே இருந்துகொள்கிறது.

குழந்தை பிறந்த பின் சில வாரங்கள் வரை, பெரும்பகுதியான நேரம் உறங்கிக் கொண்டே இருக்கும். விழித்திருக்கும் பொழுதில் இடைவிடாமல் கால்களை ஆட்டிக்கொண்டே இருக்கும்.

குழந்தையின் எலும்புகள் மிருதுவாகவும் வளையக் கூடியனவாகவும் இருக்கும். மண்டையோட்டுப் பகுதிகள் இணைந்த இடத்தில், ஆறிடங்கள் மிருதுவாக இருக்கும். அதனால் அவற்றுக்கு ஊறு ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ளவேண்டும்.

குழந்தையின் உச்சித் தலையில், இரண்டிடங்களில் தொட்டால், அதிக மிருதுவாயிருக்கும். அவற்றில் (Soft spots) ஒன்று பெரிதாயும், ஒன்று சிறியதாயுமிருக்கும். சிறியது ஆறு மாதமாகும்போது நன்றாக மூடிவிடும். பெரியது 12 மாதமாகும் வரை நன்றாக மூடாமலிருக்கும்.

குழந்தை தாய் வயிற்றில் எவ்வளவு விரைவாக வளர்ந்ததோ, அவ்வளவு விரைவாகப் பிறந்த பின்னர் வளர்வதில்லை. குழந்தை பிறந்த ஒரு வார காலத்தில், அதன் எடையில் 1/2 இராத்தல் குறையும். ஏனெனில், தாயிடம் ஊறும் பாலில் தொடக்கத்தில் அதிக ஊட்டமிருக்காது. அதைப் பால் என்ற கூறாமல், சீம்பால் (Colostrum) என்று கூறுவர். அது மலமிளக்கியாகவே (Laxative) பயன்படுகிறது. பிறகு தாய்ப்பால் ஊட்ட முடையதாகும். அதனால் இரண்டு வார இறுதியில் குழந்தையின் எடை பிறந்தபொழுது இருந்த நிலைக்கு வந்து பின் ஏறிவரும். குழந்தையின் எடை, பிறந்தவுடன் இருப்பது போல், அது ஆறுமாதம் சென்றதும், இரண்டு மடங்காகவுமாகும். ஓராண்டுக் குழந்தையின் சராசரி எடை 21 இராத்தல், சராசரி உயரம் 30 அங்குலம். இரண்டு வயதில் எடை 26 இராத்தலும், உயரம் 33 அங்குலமிருக்கும்.

முதல் ஆறுமாதத்தில் உறுப்புக்களின் வளர்ச்சி ஒன்று போல் நடைபெறும்.அதன் பின் 18 மாதத்தில் கால்கள் விரைவாகவும், தலையும், நடுவுடலும் மெதுவாகவும் வளர்கின்றன. இரண்டு வயதுக் குழந்தையின் தலையின் உயரம், முழு உடலின் உயரத்தில் ஐந்தில் ஒன்றாயிருக்கும்.

குழந்தை பிறந்ததும் அதன் இதயம் எவ்வளவு பருமனாயிருக்குமோ அதுபோல் முதல் ஆண்டில் இரண்டு மடங்காக ஆகும். இரண்டாம் ஆண்டில் இதயம் மெதுவாக வளரும். உடல் முழுவதும் பருமனாவதிலும், இரண்டு மடங்குகளாகத் தசைகள் பருமனடைகின்றன.

குழந்தை பிறந்தவுடன் அதைக் தூக்கிப் பிடித்தால், தலை நிமிர்ந்து நிற்காது படுக்கவைத்தால், தலை வைத்த இடத்திலேயே இருக்கும். நான்கு மாதம் ஆகும்போது, குழந்தை கவிழ்ந்து படுக்கவும், தலையைத் தூக்கி நேரில் பார்க்கவும் கூடியதாயிருக்கும். தலையை இரு பக்கங்களிலும் திருப்பவும் முடியும். உட்கார வைத்தால் முன்பக்கமாகச் சாய்ந்துவிடும், நிமிர முடியாது. ஒன்பது மாதம் ஆகும்போதே அது நிமிர்ந்து உட்கார முடியும். ஓர் ஆண்டு ஆகிய பின்னரே, அது படுக்கவும், எழுந்து உட்காரவும் முடியும். இந்த நிலை இருந்தால் தான் நடக்கும் நிலை வரும்.

குழந்தை புன்னகை செய்வது, 4-6 வாரங்கள் கழிந்த பின்னரே. அதன் பின் சில வாரங்கள் சென்றதும், குழந்தை கை கால்களைக் கொண்டு விளையாடவும், நண்பர், அயலார் வேறுபாடு தெரியவும், உணவு கண்டதும், வாயைத் திறக்கவும், படுக்கையில் புரளவும் கூடும். 6-8 மாதமானதும், அது நிமிர்ந்து உட்காரக் கூடியதாக இருக்கும். குழந்தை முதலில் கைகளையும் முழங்கால்களையும் ஊன்றி நின்று, முன்னும் பின்னுமாக அசையும். இப்போது கால்கள் உடலினும் விரைவாக வளரும். இந்த நிலையில் அது கால்களை இழுத்துக் கொண்டு நகரத் தொடங்கும். பின்னரே தவழ முடியும். அப்போது அடிக்கடி உட்கார வைத்துப் பழக்கினால், அது சிறிது சிறிதாகத் தவழத் தொடங்கும். அதன் பின் நிற்கவும், இறுதியில் நடக்கவும் ஆற்றலுறும். ஓராண்டு ஆன பிறகுதான், பிறர் உதவியின்றி நடக்கும். குழந்தைக்குத் தக்க உணவு ஊட்டிவந்தால், அது விரைவில் நடக்கத் தொடங்கினாலும், அதன் கால் எலும்புகள் வளையா.

குழந்தை பிறந்த பொழுதிலிருந்தே அழத் தொடங்கலாம். குழந்தை 4-5 மாதமாகும் வரை அது அழும்போது கண்களில் நீர் காணப்படமாட்டாது. குழந்தை, முதல் ஆண்டிலேயே சிறு விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடும். அதைக் கையில் எடுத்து வீசி எறிய முடியும். கையை நீட்டினால் தொடக் கூடிய தொலைவில் நிறம் தீட்டிய பொருள்களை வைத்து வந்தால், குழந்தை கண்களையும், கைகளையும் தொடர்பு படுத்தும் வழக்கத்தை அறிந்துகொள்ளும். ஆறு மாதம் ஆனபின், அது கைக்கெட்டும் தொலைவிலுள்ள பொருள்களை எடுக்கப் பெரு விரலைப் பயன்படுத்தத் தொடங்கும். எதை எடுத்தாலும், அதை அது தன் வாயில் இடும். அதனால், பொருள்கள் தூயனவாகவும், தொண்டையில் சிக்காத அளவுள்ளனவாகவும் இருத்தல் வேண்டும்.

குழந்தை இரண்டாம் ஆண்டிலும், காலை விரிய வைத்தே நடக்கும். அப்போது அது குதிக்கவும், ஓடவும், ஏறவும் முடியும். சிறிது சிறிதாகப் பேசக் கற்றக்கொள்ளும். இரண்டாண்டு சென்ற குழந்தைக்கு, ஏறக்குறைய 250 சொற்கள் தெரியும்.

குழந்தை, முதல் ஒன்றரை ஆண்டில், அச்சம், சினம், வெறுப்பு ஆகியவற்றைக் காட்டக் கூடும். மகிழ்ச்சியை அறிவிக்கச் சிரிக்கும், கூத்தாடும். முதல் ஆண்டில் குழந்தையிடம் உறங்குதல், உண்ணுதல், கழித்தல் போன்ற செயல்களைச் செய்யும் பழக்கம் உண்டாகும்.

குழந்தை பிறக்கும்போது பற்கள் வெளியே தெரிவதில்லை. அவை ஈறுகளிலுள்ள பற்பைகளில் (Dental sacs) மறைந்துள்ளன.

முதல் ஆண்டின் பிற்பகுதியில் பால் பற்கள் (Milkteeth) வெளியே முளைக்கத் தொடங்கும். சில குழந்தைகளுக்கு, நாட்களித்து முளைக்கலாம். அப்படி முளைப்பதில் தவறு இல்லை. மொத்தம் 20 பால் பற்களும், 30 மாதமாவதற்குள் முளைத்துவிடும். ஆறாவது வயதில் பால் பற்கள் விழுந்து, நிலைப் பற்கள் (Permanent teeth) முளைக்கத் தொடங்கி, ஆண்டுக்கு 4 பற்கள் வீதம் முளைத்து, 28 நிலைப்பற்கள் 12–13 வயதில் காணப்படுகின்றன. மீதிப் பற்கள் (Wisdom teeth ) 17-21 வயதளவில் முளைக்கின்றன. பார்க்க : குழந்தை உளவியல்; குழந்தை வளர்ப்பு; குழந்தை நோய்கள்.