பாப்பா முதல் பாட்டி வரை/004-024

குழந்தைப் பள்ளி : சாதாரணமாக 2 முதல் 5 வயது அல்லது 6 வயது வரயுைள்ள குழந்தைகளுக்காக ஏற்பட்டது குழந்தைப் பள்ளியாகும். ஆனால், சில நாடுகளில் 7 வயது வரையுள்ள குழந்தைகளையும் இப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

குழந்தைப் பள்ளியானது, குழந்தைக் காப்பு விடுதிக்கும், ஆரம்பப் பள்ளிக்கும் இடையே, ஒரு முக்கிய நிலையமாக இருந்து வருகிறது.

நோக்கம் : குழந்தைகளுடைய உடல் வளர்ச்சிக்கும், உள வளர்ச்சிக்கும் ஏற்ற சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பதும், அச் சூழ்நிலையில் ஆசிரியர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பயமின்றிச் சுயேச்சையாக வாழச் செய்வதும், பயமில்லாமல் வாழச் செய்வதன் மூலம் உண்மை பேசும் வழக்கத்தை வளர்ப்பதும், நற் பழக்கங்களை உண்டாக்குவதும், உடல் வளர்ச்சிக்கான ஊட்டத்தையும், பயிற்சியையும் அளிப்பதும், குழந்தைப் பள்ளியின் முக்கிய நோக்கங்களாகும்.

வாழ்க்கை அனுபவங்களே கல்வியாகும் என்பது குழந்தைப் பள்ளிகளின் அடிப்படைக் கொள்கை. பாடம் சொல்லிக் கொடுப்பது என்பதற்கு இங்கு இடம் கிடையாது. ஆராய்தல், கவனித்தல், சோதனை செய்தல், பார்த்துச் செய்தல், முதலியவற்றிற்கு அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டால், அவற்றால் உண்டாகும் அனுபவங்களே குழந்கைளுக்குக் கல்வியாகி விடுகின்றன. அதுவே குழந்தைகள் கல்வி பெறுவதற்கான இயற்கை முறையாகும்.

வரலாறு : இங்கிலாந்து நாட்டில் நியூலானர்க் என்னுமிடத்தில் ராபர்ட் ஒயின் என்பவர், 1816-இல் முதன் முதலாகச் சிசுப் பள்ளி (Infant school) என்பதை நிறுவினார்.இத்தகைய பள்ளி அவசியம் என்னும் கருத்துச் சிறிது சிறிதாக வளர்ந்து வந்தது. 1907-இல் அரசாங்கக் கல்வி இலாகா நியமித்த கமிட்டியார், இத்தகைய பள்ளியைக் குழந்தைகள் பள்ளி (Nursery School) என்று அழைக்கலாயினர்.

1944-இல் ஆங்கில அரசாங்கக் கல்விச் சட்டமானது, இத்தகைய பள்ளிகள் நிறுவிக் கல்வியளிப்பது அரசாங்கத்தின் கடமைகளில் ஒன்றாகச் செய்தது. 1946-இல் 2-5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான பள்ளிகள் 97-ம் பிற பள்ளிகளில், இக் குழந்தைகளுக்கான வகுப்புக்கள் 1828-ம் இருந்தன.

ஜெர்மெனியில் புரோபெல் என்பவர், கிண்டர் கார்ட்டன் (Kinder garden) என்ற பெயரில் ஒருவகைக் குழந்தைப் பள்ளியை, 1837-இல் அமைத்தார். இத்தாலியில் மான்டிசோரி அம்மையார் ஒருவகைக் குழந்தைப் பள்ளியை 1907-ல் அமைத்தார். ஆங்கில முறை மான்டிசோரி முறையை (த. க.) விட, கிண்டர் கார்ட்டன் முறையே அதிகமாகத் தழுவியுள்ளது.

இந்தியாவில், சென்ற இருபது ஆண்டுகளாக இந்த மூன்று வகைப் பள்ளிகளுடன் காந்தியடிகள் அமைத்த பூர்வாதாரப் பள்ளிகள் (த. க.) என்ற வகைக் குழந்தைப் பள்ளிகளும் தோன்றிவருகின்றன.

எ.ச.

கிண்டர் கார்ட்டன் முறை : குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கக் கிண்டர் கார்டன் முறையை ஏற்படுத்தியவர் பிரிட்ரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் புரோபெல் (த. க.) என்னும் ஜெர்மானியத் தத்துவ ஞானியும் கல்விச் சீர்த்திருத்தவாயுமாவார். இவர் வகுத்த பாடமுறைகள், குழந்தைகளின் விளையாட்டுக்களையே ஆதாரமாகக் கொண்டிருந்தன. விளையாட்டின் மூலம் கற்பிப்பதையே இவர் மிகச் சிறந்த முறையெனக் கூறினார்.

புரோபெல், 1839-இல் தம்முடைய புதிய கல்வி நிலையங்களுக்குக் கிண்டர் கார்ட்டன் என்னும் பெயரை வழங்கினார். இதற்குக் ‘குழந்தைத் தோட்டம்’ என்பது பொருள். இவர் தம்முடைய பள்ளியை, ஒரு தோட்டமாகவும், பிள்ளைகளைத் தோட்டத்திலுள்ள செடிகளாகவும் கருதினார். தாவரங்கள் வளர்வதற்கு எவ்வாறு சூரிய வெப்பம், நல்ல காற்று முதலியவை அவசியமோ, அவ்வாறே குழந்தைகளின் உடல், உணர்ச்சி, உள்ளம், முதலியவை வளம் பெறப் பரந்த இடம், நல்ல காற்று, சூரிய வெளிச்சம் முதலியன இன்றியமையாதவை என்று அவர் மனிதனுக்குரிய கல்வி (Education of Man) என்னும் தம்முடைய நூலில் எடுத்துரைக்கிறார்.

எல்லாவிதக் கல்வியும், குழந்தையின் சுய முயற்சியால் தான் ஏற்படுகிறது என்ற உண்மையையும், குழந்தை தன் உள்ள நிலையைத் தெரிவிக்கும் பன்மையே கல்வியின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்னும் தத்துவத்தையும், கிண்டர் கார்ட்டன் முறை வற்புறுத்துகிறது. குழந்தையானது கல்வியை ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொள்கிறது என்பதைவிட்டு, அது தானே கல்வியைக் கற்றுகொள்ளக் கூடியது என்று இம் முறை கருதுகிறது. எடுத்துக்காட்டாக, ஆசிரியர் குழந்தைக்கு ஒரு கதையைச் சொன்னால், குழந்தை அக் கதையைத் தன் சொந்த வார்த்தையினால் சொல்லுவதோடு, பாக்கள், சைகைகள், படங்கள் மூலம், கடிதம், களிமண் முதலிய பொருள்களினால் சிறிய சாமான்களைச் செய்து காட்டல் மூலமும், விளக்கும் என்று அவர் கூறினார்.

முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட கிண்டர் கார்ட்டன் பள்ளிகளில் தாம் வகுத்த முறைப்படி கற்பிப்பதற்காக, புரோபெல் பத்துக் கல்விக் கருவிகளைப் பயன்படுத்தினார். அவை, புரோபெல், கல்வி முறைக்கு அளித்த நன்கொடைகள் எனப்படும். ஆனால், பிற்காலத்தில், இவை, புரோபெல் எதிர்பார்த்த முறையில் பயன்படாமல் போனதால், இப்போது கைவிடப்பட்டன.

குழந்தைகளுக்கு ஒரு மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர், அதைத் திருத்தமாகவும், பிழையில்லாமலும் பேச வேண்டுமென்றும், ஆசிரியர் மழலை மொழியில் பேசினால், குழந்தை சரியாகப் பேசக் கற்றுக்கொள்ளாது போகும் என்று புரோபெல் வற்புறுத்திக் கூறினார். கதைகளும், பாட்டுக்களும், குழந்தையின் மொழி வளத்தைப் பெருக்க உதவுமாதலால், கிண்டர் கார்ட்டன் பள்ளியில் இவைகளுக்குத் தனிச்சிறப்பு அளிக்கப்படும்.

பள்ளிக்கு வெளியே தோட்டத்தில் விளையாடுவது, இயற்கையுடன் நெருங்கிய தொடர்பைக் குழந்தைகளுக்கு உண்டாக்கும். குழந்தைகள் சொற்களைக் கற்றுப் புத்தக வாயிலாக அறிவு பெறுமுன்னர், பொருள்களுடன் பழகி அறியும் அறிவைப் பெற வேண்டும் என்பதும், வெறும் அறிவை விட, அறிவு பெறும் முறையே முக்கியமானது என்பதும் இக் கல்வி முறையின் அடிப்படைத் தத்துவமாகும்.

தொடர்ச்சியான முன்னேற்றம், தன்முயற்சி, ஆக்கச்செயல், கைத்தொழில் பயிற்சி, தோட்டம், காடு, வயல் முதலியவற்றிலும், பள்ளிக்கூடத் தொழிற் சாலையிலும், வீட்டைச்சுற்றியுள்ள இடத்திலும், வேலை செய்தல் ஆகியவை கிண்டர் கார்ட்டன் பள்ளியின் சிறப்பியல்களாகும்.

புரோபெலுக்குக் கல்வி பற்றிய இப் புரட்சிக் கருத்துக்கள், பெஸ்ட்லாஜி (த. க. ) என்பவருடைய தொடர்பால் தோன்றின. பெஸ்டலாஜியே இக் காலத்துக் கல்விமுறைக் கருத்துக்களின் பிறப்பிடமாவார். மான்டிசோரி அம்மையார் (த. க. ) போன்ற கல்வித்துறை வல்லுநர்கள், நமக்கு புரோபெலின் கல்விக் கருத்துக்களையும், முறையையும் புதுப்பித்து அளித்திருக்கின்றனர்.