பாரதிதாசன் தாலாட்டுகள்/தாலாட்டு ஓர் ஆய்வு

தாலாட்டு ஓர் ஆய்வு

தாய்மை, உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் “தாலாட்டு” என்பது. இது உலகிற்குப் பொதுவான கலை; தமிழகத்திற்குத் தனிச் சிறப்புத் தரும் கலை; இந்த நாட்டில் ஒரு தாய் தான் பெற்ற மகளை வளர்த்து, வாழ்வுக்குகந்த கணவனுடன் மணம் செய்து வைத்து வழியனுப்புங்கால் தரும் சீர்வரிசைகளிலே புற நாகரிகத்தை எடுத்துக்காட்டும் தரும் சீர்வரிசைகளிலே புற நாகரித்தை எடுத்துக்காட்டும் பொருள்கள் பல; பிறப்போடு ஒட்டிய அகப்பண்பாட்டை எடுத்துணர்த்தும் உள்ளத்துச் செல்வங்களும் பல. கலையருவியின் தாயூற்றாக விளங்கும் இத் தாலாட்டு, அவ்வுள்ளத்துச் செல்வங்களிலே உயர்ந்த ஒன்று.

நாட்டுப் பாடல் இலக்கியம்

'தாலாட்டு' என்றவுடன் அதை அலட்சியப்படுத்தி ஏதோ எல்லாத் தெரிந்தது போல் அறியாமை இருள் வயப்படுவோரும் உண்டு. குழந்தையை அழாமல் அடக்கி உறங்க வைக்கும் வாழ்க்கைத் தேவைக்காகவே தான் தாலாட்டுகிறாள்; 'கலை கலைக்காவே' என்று கனவு காண்பவர்கள் வாழ்க்கையிலே பிறந்து, வாழ்க்கையிலே வளர்ந்து அதற்கே பயன்படுகின்ற இத்தகைய கலைகளைக் காணார் போலும்! வாழ்க்கை இலக்கியங்களாகக் கருதத்தக்க நாட்டுப் பாடல்கள், பழமொழிகள் முதலியன 'எழுதாக் கிளவி'களாக விளங்கி இலக்கியத்திற்கும் மொழி ஆராய்ச்சித் துறைக்கும் எவ்வளவு பயன்பட்டுவருகின்றன என்பதைத் திறனாய்வாளர் தெரிந்து கொள்ளுதல் வேண்டும், இந்நோக்கத்துடன் தாலாட்டைப் படிக்கும் போது நமக்கு உறக்கமன்று, விழிப்புணர்ச்சி உண்டாகிறது!

இருவர் கொள்ளும் காதலைவிட, உடன் பிறந்தவர் கொள்ளும் வாஞ்சையைவிட, நாடு இனம் மொழியிற் படியும் பற்றுதலை விட ஏன்-உலகளக்கும் அருளினையும் விட பிள்ளைப் பாசமே ஆழமானது, வலிமை மிக்கது, உணர்ச்சி மயமானது! இத்தகையை தாயும் சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலைதான் தாலாட்டு.

நாடகக் கொட்டகைகளிலோ, பொதுக் கூட்டத்திலோ, அடுத்த வீட்லோ குழந்தை அழக்கேட்டு விட்டால் நாம் சகிப்பதில்லை . 'அடடா' என்றும் 'இச்சிச்சு' என்றும், 'தொல்லை பொறுக்க முடியவில்லையே' என்றும் கூறுவதால் நமது பொறுமையின்மை பொங்கி வெளிப்படுகிறது. அதே நேரத்தில் தன் பிள்ளை எழுந்து அழுதுவிட்டால் கேட்ட அளவில் கன்றை நினைந்து கதறியோடும் கறவைப் பசுப்போல் அலறி ஓடுகிறாள் தாய். அழுகைச் சிணுங்கலால் அவல உணர்ச்சிகளின் எல்லை நரம்புகளையே மீட்டி விடுகிறது குழந்தை. குழந்தையின் ஒவ்வொரு பெருமூச்சும், பொருமலும், தேம்பலும் ஒவ்வொரு சோக இசையாக, கவிதையாக, நாடகமாக மாறிவிடுகின்றன தாய்மை உலகில்! இந்த நிலையிலேதான் மலைமீதிருந்து பாயும் வெள்ளருவி போல, மணல்வெளியில் மதிவார்க்கும் நிலவொளி போல, தேன் சொட்டும் இறால்போல, இனிமைதரும் தென்றல்போல, உள்ளங்கரும் இசை தாயுள்ளத்தின் ஊற்றாகிறது; தாலாட்டும் கவிதையாகிறது. கவிதைப் பண்பற்றவர்களும் கவிஞராகிய மலடியைப்போல் மன்றாடி நிற்கும்போது குற்றமற்ற குழந்தையைப் பெற்ற தாய்க்கே “கவிதையும்” சுகப்பேறாகி விடுகிறது.

ஆற்றங்கரையில் ஓய்வுகொள்ளும் மக்கள் மலர்க்காவில் தவழ்ந்துவரும் தென்றலிலே சொக்கி ஆற்றின் நீரோட்டம் தங்கள் கவனத்தையும் இழுத்துச் செல்லப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்போது, அவர்கள் அந்த ஆற்றுக்கு மூலமான அருவியைப்பற்றியோ, ஊற்றுக்கு உயிர் சுரக்கும் கண்களைப் பற்றியோ சிந்திப்பபதில்லை. அதுபோலவே வளர்ந்து வரும் மொழியொன்றின் இலக்கியச் சிறப்புகளின் எழிலிலே ஈடுபட்டிருக்கும் மக்கள், அவற்றின் தோற்றம் வளர்ச்சி பற்றிய உண்மைகளை அறிய விழைவதில்லை. தாலாட்டு, இலக்கியத்தின் தாயூற்றாகும் என்பது இந்த உண்மைகளிலே ஒன்று. இதைச் செல்வியின் குழந்தைப் பருவத்தையும், மொழியறிவின் இளமைப் பொலிவையும், இலக்கியச் சிறப்பின் தாய்மைக் கனிவையும் தாலாட்டில் காண முடிகிறது. இப் புதிய கண்ணோட்டத்துடன் 'தாலாட்டு' அனைய நாட்டுப் பாடல்களைக் கற்றறிந்த புலமையாளர் உற்றுநோக்கினால், இன்றைய இலக்கியங்கள் பலவற்றுக்கு வேர், மூலம், ஒரு நாட்டு மக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள அவர்களது நாட்டுப் பாடல் இலக்கியங்களே பெரிதும் உதவும். அமெரிக்கப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு நாட்டுப்பாடல் இலக்கியப் பிரிவும் பாடமாக வைக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சொல்லாராய்ச்சி

தாலாட்டு என்ற சொற்றொடர், தால் +ஆட்டு எனப் பிரியும். 'தால்' என்றால் நாக்கு. குழந்தையின் அழுகை ஒலியை அடக்கத், தாய் இதழ்களைக் குவித்து, நாவினை ஆட்டிக் குரவையிடுகிறாளே அதற்குத்தான் தாலாட்டுதல் என்று பெயர். அதைத் தொடர்ந்து இசைக்கும் பாடலையும் இன்று தாலாட்டென அழைக்கிறோம். குழந்தைக்கு முதலிற் புலனாகும் உணர்வுகளில் கூர்மையானதும் ஆழமானதும் குறிப்பானதும் செவியுணர்வே. தாயையும் பிறரையும் முதலில் குரல் கொண்டே குழந்தை வேறுபாடறிகிறது. சில மாதங்கள் கழித்துத் தாயைப் பார்த்துக் குழந்தை சிரித்தாலும், தனக்குத் தெரிந்த ஆளிடம் குழந்தை தாவினாலும் “ஆள் அடையாளம் தெரிந்து விட்டதே” என்று பெற்றவர்கள் அகமகிழ்ச்சி எய்துவார்கள். தாய் தன் குழந்தைக்கு அப்பாவை அறிமுகம் செய்து வைக்கும் கட்டம் இது!

இதனாலேதான் குழந்தையின் கவனத்தைத் திருப்பி ஒருநிலைப் படுத்தி அழுகையை நிறுத்த விரும்புவோர் முதலிற் குரலைப் பயன்படுத்துதலையும் பிறகு, கைகால்களை அசைத்து முகக்குறி காட்டுதலையும் காண்கிறோம். குழந்தையின் அழுகையொலியை அடக்க, அதைவிட ஒரு படி அதிகமான ஒலியை எழுப்புவதே வழக்கமாக இருக்கிறது. இன்றும் தாயைத் தவிர்த்து மற்றவர்கள், அழுங் குழந்தையை அடக்க, அதைவிட ஒரு படி அதிகமான ஒலியை எழுப்புவதே வழக்கமாக விருக்கிறது. இன்றும் தாயைத் தவிர்த்து மற்றவர்கள், அழுங் குழந்தையை அடக்க முயலுங்கால் தம்மையும் மறந்து 'ஆ' 'ஓ' வென இரையக் காண்கிறோம். சில சமயங்களில் இவ் இரைச்சலைக் கேட்குங்கால், குழந்தை அழும் ஒலியையே பொறுத்துக் கொள்ளலாம்போல் தோன்றும் சுற்றி இருப்பவர்க்கு!

தாலாட்டு, உலகத்தில் “ராராட்டு” என மருவி வழங்குகிறது. இன்றும் மலையாளத்தார் 'தாராட்டு' என்றே வழங்குகின்றனர். இடைக்காலத் தமிழ் இலக்கியங்கில் 'தாராட்டு' எனும் வழக்கிருத்தல் கவனிக்கத்தக்கது. “தேரை தாராட்டும் பண்ணை” என்கிறார் கம்பர்.

"போற்றியுனைச் சேராரார் கண்டாசை தீராரார் கொன்னையள்ளித் தாராரார் என்று தாராட்டினாள்” என விறலிவிடு தூதிலும், 'ஊமன் தாராட்ட உறங்கிற்றே' என்று முத்தொள்ளாயிரத்திலும் வருகிறது. 'தன, தான' என்பது போல ‘ஆராரோ, ஆரிரரோ' என்பதும் சந்தமாகும். இதனை ராராரோ, ராரிரரோ என்றும், ஆரிவரோ என்றும் வழங்குவர். பழந்தமிழ்க் குடிகள் 'ரூரீரோ, 'ரூரீரோ' எனவும், நாஞ்சில் தமிழர் 'வாவாஓ' எனவும் இசை யமைத்தலைக் கேட்கிறோம். 'ஆராரோ ஆரிவரோ,' என்ற சந்த அமைப்பு-தாய் தன் குழந்தையைப் பார்த்து முற்பிறப்பில் நீயாரோ, நான் யாரோ, நாமிருவரும் ஆராரோ என்றிருந்தோம்; இப்பிறப்பில் தாயும் சேயும் ஆனோம் என மறைமுகமாக உட்பொருள் வைத்துப் பாடுவதாகச் சிலர் தத்துவ விளக்கம் செய்யுமளவு பெருமை பெற்று விட்டது! மலையாளத்திலும் தெலுங்கிலும் தாய்த் தமிழைப் போலவே முறையே 'ஆராரோ, ஆரிரரோ' என்பனவே இசையமைக்கும் சந்தங்களாக இருக்கின்றன. கன்னடத்தார் மட்டும் 'ஜோ, ஜோ' வென இசையமைப்பர்.

தாலாட்டு மலையாளத்தில் தாராட்டு ஆனதுபோல, தெலுங்கில் "ஊஞ்சேதி" ஆயிற்று. (ஊஞ்சு-ஊஞ்சல்) கன்னடத்தார் இதனை ‘ஜோகுள' என்பர். ஜோ என்பது சந்தம். பழந்தமிழ்க் குடிகள் தாலாட்டைக் “குலு இசைப்பாடல்” என அழைப்பர். 'உய்யாலு' என்பது தெலுங்கிலும், கன்னடத்திலும் முறையே தூளியையும், ஊஞ்சலையும் குறிக்கிறது. “உய்யாலை உறுமாலை” என வரும் தமிழ்த் தூளி பாட்டு நினைவு கூரத்தக்கது. தொட்டிலை மலையாள மக்கள் தொட்டில் என்றே மாற்றாமல் அழைக்கவும் தெலுங்கு மக்கள் மட்டும் “தொட்ல” என அழைக்கின்றனர். கன்னடத்திலும் இச்சொல் வழக்கு உளது.

தாலட்டிற்குரிய பண் ‘நீலாம்பரி' என்பர். சொல்லோட்டத்தோடு அமையும் ஒலிமுறையே தாலாட்டின் உயிராகும். தாய், எங்ஙனம் பாடினாலும், இசையறிவு சிறிதுமின்றிப் பாடினாலும் ஒலியமைதியோடு ஒழுங்காகப் பாடுவதால், அது குழந்தையின் உறக்கத்திற்கு ஏற்ற இசையாகிவிடுகிறது, தாயின் பெண்மை கனிந்த குரலும் இதற்குத் துணையாக வேண்டும். ஒலியமைதி கெட்டாலும், குரலினிமை பிழைத்தாலும் தாலாட்டின் பயன் மாறிவிடும்!

மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வழங்கும் தாலாட்டுக்கள் தமிழ் நடையையும் பண்பையுமே வெளிப்படுத்துகின்றன. தமிழின் குழந்தைகளில் ஒன்றாகிய மலையாளத்தில், தமிழைப் போலவே தாலாட்டுப் பெரு வழக்காக இருக்கிறது. சந்தம் இசையமைப்போடு சொற்கள் பொருட்செறிவெல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன. அகநானூற்றையும் அழகுபடுத்தும் சங்க இலக்கியச் சொற்களையெல்லாம் காணவேண்டுமென்றால் மலையாளத்திற்கும், தெலுங்கு, கன்னடம், குடகு, கொங்கணி எனத் தமிழ்க் குழந்தைகள் வளருமிடத்திற்கும் செல்லவேண்டும் போலும்!

கவிதைப் பொலிவு

தானாக வந்தமையும் மோனை எதுகையும், நினைக்க இனிக்கின்ற இலக்கிய நயங்களும், வாழ்க்கையில் தோய்ந்த அனுபவ முத்திரைகளும், நிலைத்த உண்மையும், பழகு தமிழே வழங்கும் உவமை முதலிய அழகுகளும், நல்ல சொல்லாட்சியும், தடையில்லா நடைப்பெருமையும் நோக்கி இலக்கியங்களை மதிப்பிட வேண்டும். தாய்மை தரும் தாலாட்டு இவ் வகையில் பெருமை பெற்று விளங்குகிறது. இப் பெருமையை உணர வேண்டமானால் நிலைபெற்ற பிற இலக்கியங்களோடு தாலாட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

“கொத்துவிடா நெத்தும் கோதுபடா மாங்கனியும்
பருவப் பலாச்சுளையும் பக்குவத்து மாங்கனியும்
அக்கரையில் சர்க்கரையும் அதிமதுரத் தென்னவட்டும்
காய்ச்சிய பாலுங் கற்ண்டும் செந்தேனும்
ஏலங் கிராம்பும் இளங்கொடிக்கால் வெற்றிலையும்
சாதிக் களிப்பாக்கும் சங்குவெள்ளைச் சுண்ணாம்பும்"

சீர்வரிசைகளாகக் கொண்டு வந்தார்களாம், குழந்தை பிறந்ததைப் பார்க்கவந்த அம்மான் மார்! இப்பாண்டிய நாட்டுத் தாலாட்டைச் சிலப்பதிகாரத்துடன் ஒப்பிட்டுக்காண்போம். பேரியாற்றங்கரையில் சேரன் செங்குட்டுவன் தங்கியிருக்கையில், குன்றக் குறவர்கள் கொண்டு வந்ததாக இளங்ககோவடிகள் குறிப்பிடும் காணிக்கைப் பொருள்கள் பற்றிய, பா நடையும் பண்பும், மேற்கண்ட தாலாட்டு வரிகளை நமக்கு நினைவு படுத்துகின்றன.

“ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்.
கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும்
தெங்கின் பழனும் தேமாங் கனியும்
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமுங் கரும்பும் பூமலி கொடியும்
கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்”

(சிலம்பு-காட்சி-37)

மேலும் பாண்டிய நாட்டுத் தாலாட்டில்

வாழை இலைபரப்பி வந்தாரைக் கையுமர்த்தி
வருந்தி விருந்துவைக்கும் மகராசர் பெயரனோ?
தென்னை இலைபரப்பிச் சென்றாரைக் கையமர்தித்
தேடி விருந்தழைக்கும் திசைக்கருணர் பெயரனோ?

என்ற தாய்மைதரும் தாலாட்டு வரிகள்,

“செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும்” குறட் பண்பாட்டை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. 'சோதிச் சுடரொளியே' என்று தன் குழந்தையைப் பாராட்டுகிறாள் தாய். “சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று இறைவனைப் பாராட்டியழைக்கிறார் மாணிக்கவாசகர். நாஞ்சிற் பகுதித் தாலாட்டில் ‘எலும்புருகப் பெற்றெடுத்த இலஞ்சியமே' எனத் தாய் தன் குழந்தையைப் பாராட்டுவது போல “உமையாள் பயந்த இலஞ்சியமே” என்று தமது திருப்புகழில் முருகனைப் பாராட்டுகிறார் அருணகிரி நாதர்.

"இலையுதிரப் பிஞ்சுவிடும்”
'வண்டாடப் பூமலர்'
'சாலை வழியுறங்க'
'பாதிநிலாத் தான் தூங்க'
“சொல்லாற் புகழடைக்கும்'

என்றெல்லாம் வருகின்ற தொடர்கள், பல இலக்கிய நயத்தின் எல்லையையே எட்டிப் பிடிக்கின்றன.

ஈழநாட்டுத் தாலாட்டில் தம்பி அழுத கண்ணீர் ஆறாகப் பெருகுங் கற்பனையும், பாண்டிய நாட்டுத் தாலாட்டில் குழந்தையை அடித்தவர்கட்குத் தாயாட்சியில் அளிக்கப்படும் தண்டனையும், சோழநாட்டுத் தாலாட்டில் தச்சரின் பொறுமை பற்றிய செய்தியும் போன்ற பல இடங்கள் நகை என்னும் சுவைக்கே எல்லை வகுக்கின்றன. சோழநாட்டுப் பா ஒன்று ஊஞ்சலின் சிறப்பையும், தாய் மாமன் தரும் சீர் வரிசைகளின் பெருமையையும் விளக்குகிறது. “காது குத்து விழா” சோழ நாட்டில் மிகச் சிறப்புடையதோர் சடங்கு என்பதனை அப்பகுதித் தாலாட்டு எடுத்தியம்புகிறது. ஈழநாட்டு மருத்துவச்சி வாழ்த்து. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்று வரிகளை நினைவு படுத்துகிறது. பொதுவாக 'ஏலப்பூ', 'இலஞ்சிப்பூ' என்றெல்லாம் குழந்தையை உவமிப்பது சங்கப் புலவர்களின் இயற்கை அறிவினை நினைவூட்டுகிறது. தொட்டில் வருணனையும், பாலூட்டும் சங்கின் அழகும் கம்பனைக் காட்டுகின்றன. குழந்தையைத் தாய் பாராட்டும்போதெல்லாம் பாரதியாரின் கண்ணன் பாட்டும், தேவார, திருவாசகமும் நினைவிற்கு வருகின்றன. 'சந்தணர், என்ன ரியான்' 'புனக்கிளி, திசைக் கருணர்' அனைய சொல்லாட்சிகள் புதுமையும் பொருட் செறிவும் உடையன.

வாழ்வெல்லாம் விழா

ஒரு காலத்தில் நம் நாடு செல்வத்திற் செழித்திருந்தது. குடும்பத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எவ்வளவு மகிழ்ச்சியோடு பொன்னையும் பொருளையும் அள்ளிவீசி, கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் தமிழ் மக்கள் கொண்டாடினார்கள் என்பதைச் சிந்தித்தால் இவ் உண்மை விளங்கும். குழந்தை பிறப்பதற்கு முன்பே அதற்கு விழா எடுத்தார்கள் இந்த நாட்டில்! மாந்தர் இறந்த பிறகும் கல்லெடுத்துச் சிறப்புச் செய்வதுபோன்ற நிகழ்ச்சிகள் பல நிகழ்த்திய நாடுதான் இது. தாய் கருவுற்ற உடனேயே விழா துவங்குகிறது. பூச்சூட்டல், வளைகாப்பு, சீமந்தம், மருந்து குடித்தல் முதலியன கன்னிப்பெண் ஒருத்தி தாயகம் அருமையைப் பெருமைப்படுத்தும் விழாக்கள் பெண்கள் இதில் அதிக ஈடுபாடு காட்டுவர். குழந்தை பிறந்ததும் மங்கலச் சடங்கு, தொட்டிலிடுதல், பெயரிடுதல், காதுகுத்துல், ஆண்டு நிறைவு (புதுமை), பள்ளியில் வைத்தல் என்று வாழ்நாள் அனைத்தும் விழாவினை நிரப்பிய நாகரிகம் தமிழகத்திற்கு உரியதாகத் தெரிகிறது. இந்த விழாக்களில் எவை எவை எவ்வப் பகுதியில் சிறப்புடையனவோ அவைகளை அவ்வப்பகுதித் தாலாட்டுக்களிற் பரக்கக் காணலாம். தாலாட்டு முழுதும் தாய்க்குரிய இலக்கிய மாகையால் அதில் மாமன்மார் பெருமையும், அவர் தரும் சீர் வரிசைகளின் சிறப்பும் மிக அழகாகச் செயல்படுகின்றன. வள்ளி தாலாட்டு சங்ககாலக் காதல் முறையையும், சொக்கர் மீனாள் - தாலாட்டு உழவுத் தொழிலின் உயர்வினையும், பாண்டி நாட்டுத் தாலாட்டு தமிழகத்தின் செல்வச் செழிப்பையும் நாகரிகத்தையும் விளக்குகின்றன. இவ்வாறு நடையழகில் செயங்கொண்டானையும், இனிமையில் இளங்கோவையும், கற்பனையில் கம்பனையும், சொல்லாட்சியில் மணி வாசகரையும், நாகரிக விளக்கத்தில் சங்ககாலப் புலவர்களையும் ஒப்புமையாகப் பெற்றுப் பெருமையுடன் விளங்குகிறது தாலாட்டு!

தாயும் தாலாட்டும்

இத்துணைக் கற்பனைச் செறிவும், இலக்கிய நயங்களும் அமைத்துப் பாடுவதால் குழந்தைக்கு என்ன பயன்? தாலாட்டின் முதற்பயன் குழந்தையின் உறக்கமல்லவா? அந்தக் குழந்தைக்குப் புரியாத நிலையில் நாம் நம் திறமையைக் காட்டுவதால் என்ன பயன்? -இவ்வாறு பாமரனுக்கும் புரியும் நடையிலே எழுவதாக் கூறிக்கொண்டு, கடைசியில் தங்களுக்கும் பாமரனுக்கும் புரியாத முறையில் கலப்படத் தமிழில் எழுதி எழுதிக் கெடுத்து, நல்ல தமிழ் நடையை நையாண்டி செய்து வருவோர் கேட்பர், குழந்தைக்கும் புரியும் நடையிலே அல்லவா தாலாட்டிருக்க வேண்டும் என்று கூக்குரலிடுவர். குழந்தையின் மழலைமொழியிலே பாடினாலும் குழந்தைக்குப் புரியப்போவதில்லை. வளரும் குழந்தையுள்ளமும் அதனை விரும்பாது. 'குழந்தை மொழியிலே' தாலாட்டுவதென்றால் குழந்தை அழும்போதும் நாமும் கூடவே அழுதுவிடுவதுதான் முடியக் கூடிய காரியம்!

தமிழ் நூல் வகைகளிலே “தூது" என்பதும் ஒன்று. காதலிரிடையே மனக்கருத்தைப் பரிமாறிக்கொள்ள ‘மான், தென்றல், மேகம், நாரை' முதலிய அஃறிணைப் பொருள்களையும் தூது விடுவதாகப் பாடுவர். இப் பொருள்கள் தூது விடுவதாகப் பாடுவர். இப் பொருள்கள் தூது சென்று திரும்புதலும், தூதினை எடுத்துரைத்தலும் இயலாத காரியம் என்பது எல்லோருக்கம் தெரியாததன்று. இருப்பினும் காதலர் தங்கள் மன ஆறுதலை வேண்டி, அஃறிணைப் பொருள்களிடத்தும் தங்கள் வருத்தத்தை எடுத்தியம்புவதாகக் கவிஞர்கள் கருதினர்; கற்பனை ஓவியம் புனைந்தனர். உள்ளத்துத் துன்பம் தாங்கவியலாத நிலையில் அதனை எடுத்துப் புறத்தே சொல்லுவது ஆறுதல் பெறும் வழியாகும் என்ற மனவியலே இதற்கடிப்படையாகும். அதுபோலத் தன் பிறந்தகப் பெருமை, உடன் பிறந்தோர் தரும் சீர்வரிசைகளின் உயர்வு, குழந்தையின் அருமை பெருமைகள், அது பிறந்த குடிப்பெருமை ஆகிய பலவற்றை வாய்விட்டுச் சொல்லி மனமகிழ்ச்சியை மிகுதிப் படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே, தாய் தாலாட்டைப் பயன் படுத்திக்கொள்கிறாள். துன்பம் பிறரிடம் சொன்னால் குறையும்; இன்பம் பிறரிடம் சொன்னால் நிறையும் என்பது இதன் மூலம் விளங்குகிறது.

மனவியல் ஆராய்ச்சி

மேனாட்டு மனவியல் துறைப் பேராசிரியர் ஒருவர், ஒரு சமயம் கீழ்கண்ட உண்மையை விளக்கினார். மனிதன் காண்பன, கேட்பன அனைத்தும் அவன் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும், அவனுடைய மூளையிற் பதிவாகிவிடுகின்றன. சில செய்திகள் ஆழப் பதிவதும், சில அரை குறையாகப் பதிவதும், அவனுடைய இயல்பு, பழக்கம், பண்பாடுகளைப் பொறுத்திருக்கிறதென்றாலும் பதிவாவது மட்டும் தவறுவதில்லை . மனிதன் மூளையில் கல்வி ‘பதிவாவது’ ஒரு தன்மையாக இருந்தாலும், 'வெளிப்படுவது' அவனது சூழலாலும் தன்மையாலும் வேறுபட்டு விடுகிறது. 'பதிவு' மனித உடற் கூற்றின் இயற்கை. 'வெளிப்பாடு' மனிதப்பண்பின் வேறுபாடுகளால் வரும் விளைவு.

'அறிவுஅறியாமையும்' உருவாவது பதிவினால் அன்று, வெளிப்பாட்டினாற்றான்! சிலர் படித்திருந்தும் வெளிப்படுத்தும் ஆற்றலின்மையால் தவிக்கும்போது, குற்றம் படிப்பிலன்று அவர் ஆற்றிலில் என நாம் உணருகிறோம்.

எடுத்துக் காட்டாகத் தெருவில் செல்லும் பொழுது நாம் காண்பனவும் கேட்பனவும் நம் கவனத்திற் படுவதில்லை . காரணம் நம் சிந்தனை வேறு எங்கோ இருப்பதுதான். இவ்வாறு நம் கண்ணிற் பட்டும் நாம் கவனியாதனவும், நம் காதில் விழுந்தும் நாம் வாங்கிக்கொள்ளாதனவுங்கூட நம் மூளையின் அடித்தளத்திற் பதிவாகின்றனவாம். பிற்பாடு நம் இயல்பிற்க ஏற்ப அவற்றில் பல வெளிப்பட்டுப் பயன் தருகின்றன என்றும், பல வெளிப்படாமலே தேங்கி மறைமுகமாகப் பயன் தருகின்றன என்றும் அறிஞர் கருதுகின்றனர். இது தனி மனிதனோடு முடிவடைவதன்று! பரம்பரையையே தொடர்வது! ‘பரம்பரை'யின் உண்மை இதுதான். தாத்தா இசையறிவும் ஆர்வமும் சுவைத் தன்மையும் மிக்கவராக விளங்கலாம். ஆனால் பாடும் பண்பும் குரலும் வாய்க்காது போகலாம். அவருடைய பெயரன் சிறு வயதிலேயே பெரிய இசைப் புலவனாக உலகப்புகழ் பெறும்போது உலகம் அவனைப் பாராட்டும். அப்பாராட்டுக்குரிய புலமைச் சொத்தினைச் சேமித்து வைத்தவர் அவனுடைய தாத்தா-குடும்பம் - பரம்பரை என்பதை உணர்கின்ற உள நூல் அறிஞர்கள் பரம்பரையைப் போற்றுகின்றனர். இத் தத்துவம் நமக்கு விளங்கினால் நம் முன்னோர் நமக்குச் சேமித்து வைத்த சொத்து சுகம், பொன்னும் பொருளுமே என்று எண்ணமாட்டோம்; புலமையும் பண்பாடமே என எண்ணிப் போற்றுவோம்.

குழந்தைப் பருவத்தில் இப்பதிவு பசுமரத்தாணி போற் பதியும். அதுவும் பாதி உறக்கத்தில் இருக்கும் போது கேட்கும் கருத்துகள் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிகிறதாம். 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பதற்கு நாம் கருதுவதைவிட உயர்ந்த பொருள் உண்டு. எனவே, குழந்தைப் பருவத்தில் தாய் பாடும் தாலாட்டில், 'இசை' உறக்கத்திற்குப் பயன்படுவதுபோலவே 'இயல்' உள்ளத்திற்குப் பயன்படுகிறது என்பதை உளநூல் விளக்குகிறது. இதற்கு வேறு உதாரணம் காட்டுவானேன்? உலக இலக்கியங்களில் எளிதில் கொடுமுடி காணவொண்ணாத இமய மலையின் ‘எவரெஸ்டு'களாகத் தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன. இதற்குத் தமிழ்த் தாய் மார் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுகின்ற காலத்திலேயே 'செவிக்குணவாக' ஊட்டிய தாய்மை இலக்கியம் காரணமாய் இருக்குமெனக் கருதலாம் அல்லவா!

இலக்கியத்தில் தாலாட்டு

நாட்டுப் பாடல் இலக்கியமாக வழங்கி வந்த, இத் தாலாட்டை முதன் முதலாக இலக்கியத்தில் ஏற்றியவர்கள் ஆழ்வார்கள். கண்ணனைக் குழந்தையாகக் கருதிப் பாடிய காரணத்தால் தாலாட்ட வேண்டி இன்றியமையாமை இவர்களுக்கு ஏற்பட்டது போலும். எனவே தாலாட்டு இலக்கியத்தில் ஏறிய காலம் கி.பி.ஆறாம் நூற்றாண்டாகும்.

அதன் பிறகு ‘பிள்ளைத் தமிழ்’ என்ற சிறு நூல் வகை, தமிழ் இலக்கியத்தில் பெருகிற்று. பிள்ளைத் தமிழுக்குக் கூறப்படும்பத்துப் பருவங்களில் தாலப்பருவமும் ஒன்று. அதனால் ஒவ்வொரு பிள்ளைத் தமிழிலும் தாலாட்டு இடம் பெறுவதாயிற்று. இக்காலத் தமிழ்க் கவிஞர்கள் பலர், தாய்மை தரும் தாலாட்டின் இசை, நடை, மொழிகளையே அடிப்படையாக வைத்துக் கொண்டு, நாடு, மொழி, இன வளர்ச்சியையும் வரலாற்றையும் கருத்தாகக் கொண்டு தனிக் கவிதைகள் பல புனைந்து வருகின்றனர். இதுவே தாலாட்டின் இலக்கிய வளர்ச்சியாகும்.

-தமிழண்ணல்