பாரதிதாசன் தாலாட்டுகள்/நீலமயில் வாகனன்
சுமார் ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பரத நாட்டியக் கலை புத்துயிர் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது. குமரி முதல் இமயம் வரை, தமிழ் மக்கள் உள்ள இடமெங்கும் குழந்தைகள் இந்தக் கலையைக் கற்றுப் பரத நாட்டியமும் அபிநயமும் செய்கிறார்கள். தமிழ் மொழி அல்லாத பிறமொழிக்குரிய இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் அயல் நாட்டு மக்களும் கூட, இந்தக் கலையைக் கண்ணால் கண்டு வியந்து போற்றுகிறார்கள்; தாங்களும் கற்று இக்கலையில் வல்லவர்களாக முயல்கிறார்கள். இவ்வளவுக்கும் தோற்றுவாயாக இருந்தது சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் கற்றவர்களிடை புதிதாக அறிமுகமும் அங்கீகாரமும் பெற்று வந்த திருமதி பாலசரசுவதியின் பரத நாட்டியம் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை, டி.கே.சி. அவர்களுடைய இடைவிடாத பாராட்டுதலினாலும், கல்கி அவர்கள் எழுதி வந்த ஆனந்தவிகடன் பத்திரிகையின் பிரசாரத்தாலும், பரத நாட்டியக் கலை தமிழ் நாட்டில் பிரசாரம் அடைந்தது.
குறிப்பிட்ட சில பாடல்களுக்கு திருமதி பாலசரசுவதியின் அபிநயம் மிகவும் பிரசித்தம். இக்காலம் போல் அன்றி, அந்தத் தொடக்கக் பாடல்கள் யாவும், ஒருவகையில், வாழ்க்கையை உயர்த்துவனவாயும் தெய்வ பக்தியை ஊட்டுவனவாயும் இலக்கிய உணர்ச்சியை வளர்ப்பனவாயும் இசையின் நயத்தை எடுத்து விளக்குவன வாயும் அமைந்திருந்தன. யாரும் எதுவும் பாடலாம் என்ற நிலை அப்போது இல்லை; புராதனமான இசை நுட்பமும் இறை உணர்ச்சியும் பொருந்தி பாடல்கள் மட்டுமே பரத நாட்டியத்துக்குப் பயன்பட்டன. அவ்வாறு வழங்கிய சிறந்த பாடல்களுள், முருகப்பெருமான் தாலாட்டாகிய “நீலமயில் வாகனனோ' என்பது முக்கியமான ஒன்று. முருகப் பெருமான் திருவடியில் எல்லையற்ற பக்தி பூண்ட திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் போரூர் முருகனைத் தாலாட்டுகிறார்.
முருகனை வழிபடும் அடியவர்கள் “வேலும் மயிலும் துணை” என்பார்கள். உலகத்தில் நிலவும் அஞ்ஞான இருளைப் போக்கி ஞான ஒளியை வீசுவதாகிய சக்தி வேல் அவன் கையில் உள்ளது. வேல் என்றாலே ஞானத்தின் அடையாளம். அதைத்தூலமான ஓர் ஆயுதமாகக் கொள்ளும் போது, அது நீண்ட இலையுடைய வேலாயுதமாய்க் காட்சியளிக்கிறது. நீலநிறத்தோடு எங்கும் கவிந்திருக்கிற வானமும் நிலமும் சேர்ந்து ஒரு பெரிய மயில் வடிவமாகத் தோற்றுகின்றன. விசுவத்துக்கு நாயகனான முருகனுக்கு, அந்த மயில், வாகனம் என்பது நம் மக்களுடைய இயற்கை வழிபாட்டின் ஒரு தோற்றமே யாகும். மயிலைக் கண்டவுடன், முருகனை அடி பணிந்து அவனுடைய கொடியில் அமர்ந்திருக்கம் பேறு பெற்ற கோழியும் நினைவு வருதல் இயல்பு. இந்தக் குறிப்புகள் தூண்ட, தாலாட்டுப் பாடல் வருகிறது.
நீலமயில் வாகனனோ
நெட்டிலைவேலாயுதனோ
கோலம் நிறை கோழிக்
கொடிபடைத்த சேவகனோ.
முருககன் ஆறுமுகமும் ஆறிரண்டு திண்தோளும் உடையவன், வேதங்கள் அவனுடைய பாதுகைகள் என்பன, அவனுடைய திருமேனியைக் குறித்த ஐதிகங்கள்.
ஆறிரண்டு தோளானோ
ஆறு முகத்தானோ
தேறு மறை கொஞ்சம்
சிறுசதங்கைத் தாளானோ.
குழந்தையைக் கொஞ்சும்போது, குழந்தைக் குமரனை ஏந்திச் சிரம்மோந்து குலவிய பெண்கள் நினைவு வருகிறது. சரவணப் பூம்பொய்கையில் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் அறுவரும் எடுத்து அணைத்துக் குலவினார்கள். அவர்கள் மட்டுமா? தாயான பார்வதி தேவியும், கங்காதேவியுமே எடுத்துக் குலவினார்கள்.
ஆயிமார் அறுவர்களும்
அம்பிகையும் கங்கை மின்னும்
சேயே என் றேந்திச்
சிரமோந்து கொள்குருந்தோ.
பாடுகின்ற போது, ஓசை நயத்தின் பொருட்டு, ஆய்மார் என்றிருக்கத் தக்க சொல், ஆயிமார் என்று வருகிறது. பாவபூர்வமான இப்பாடல் ஆட்டத்துக்கும் பாட்டுக்குமாக எவ்வளவுதான் நெளிந்து கொடுக்கிறது!
முருகனைப் புகழும்போது, இலக்கியத் தொடர்புடைய பழங்கதைகள் எண்ணற்றன நினைவில் எழுகின்றன. நக்சீரர் முருகன் பாதுகாப்பைப் பெறும் பொருட்டுப் பாடியருளிய திருமுருகாற்றைப்படையும் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல்களும் தோன்றிய வரலாறுகள் முருகனுடைய பெருங்கருணைத் திறத்தைப் புலப்படுத்துகின்றன.
அருணகிரி நாதன்
அருந்தமிழ் நற் கீரன்
கருணை பெற ஓதும்
கவிமலைத் தோளானோ.
சைவ சமய சம்பிரதாயத்தில் இறைவன் குருவடிவாக வந்து ருணைபுரிகிறான் என்பது மிகவும் சிறப்பான ஒரு கருத்து. பிரமன் பிரணவத்தின் பொருள் அறியாமல் விழித்தபோது குழந்தை முருகன் அவனைக் குட்டிச் சிறையிருத்திப் பின்னர், சிவபிரான் கேட்க, பொருளை உரைத்தான் என்று கதைகள் குறிப்பிடும். இங்ஙனம் அவன் குருவாக வந்த நிலையைக் கூறி, அபிநயப் பாடல் முடிகிறது.
பிரமன் அறியாப்
பிரணவத்தின் அத்தம்
அரனார் மனங் குளிர
அன்றுரைத்த சற்குருவோ
முப்பது கண்ணிகள் கொண்டபோரூர் முருகன் தாலாட்டில், அபிநயத்துக்காகத் தேரந்தெடுக்கப்பட்ட இவ்வைந்து மட்டும் அன்று, இத் தாலாட்டுப் பாட்டின் சாரமாகவே உள்ளன. இப் பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்த கலைப் புலமை, முத்தமிழ் இலக்கிய வுணர்ச்சிக்கே சிரமாயுள்ளது.