பாரதிதாசன் தாலாட்டுகள்/பிள்ளைத் தமிழில் தாலாட்டு

பிள்ளைத் தமிழில் தாலாட்டு

பிள்ளைத் தமிழ் என்ற பிரபந்தங்கள் தமிழிலே எத்தனையோ உண்டாகி இருக்கின்றன. கடவுளையே இளம் பிள்ளையாக்கி, அந்தப் பிள்ளையப் பலவாறு போற்றிக் கொண்டாடுவதில் மிகுந்த மன உல்லாசம் இருக்கிறது.

பிள்ளைத்தமிழ் பத்துப் பகுதிகளாக இருக்கும். இதில் மூன்றாம் பகுதி, தாலப் பருவம் எனப் பெயர்பெறும்; அதாவது குழந்தையைத் தாலாட்டிக் கூறும் பருவம். குழந்தைக்கு வயது ஏழு மாதம் ஆனபோது இப் பருவம் பாடவேண்டும் என்பது மரபு. தாலப் பருவத்திலே தெய்விகக் குழந்தைகளைத் 'தாலோ தாலேலோ' என்று, தாலாட்டிக் கூறுகின்ற தமிழ் நூல்களுக்குக் கணக்கே இல்லை.

பிள்ளைத்தமிழில் ஆறாவது பருவம் வருகைப் பருவம் என்பது; குழந்தையை 'வருக வருக' என்று அழைப்பதைக் கூறுகின்ற பகுதி. பழனியில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான்மீது கவிஞரொருவர் ‘பழனிப் பிள்ளைத் தமிழ்' பாடினார். பொதுவாகப் பிள்ளைத்தமிழில் நூறு பாடல்கள் இருக்கும். ஆனால் இவர் பாடிய பிள்ளைத்தமிழில் முப்பது பாட்டுக்களேயுள்ளன. இதன் பத்துப் பருவங்கள்களுள் ஒன்றாகிய வருகைப்பருவத்தில் மூன்றே பாடல்கள் இருக்கும்.

தாலாட்டுப் பாடல்களை இவர் மிகுதியும் அனுபவித்திருக்கிறார். அது காரணமாக, பழனிக் குமாரக் கடவுளை 'வருக' என்று அழைக்கும் போதுகூட, இவர் தாலாட்டை மறக்க முடியவில்லை. வருகைக்குரிய மூன்று பாடல்களில் ஒன்றைக் தாலாட்டாகவே பாடியிருக்கிறார்.

சாதாரணமாக ஓர் அதிகாரி என்றாலே, உலகத்தார் எவ்வளவோ வந்தனையும் வழிபாடும் செய்கிறார்கள். அப்படியானால் அரசனுக்கு எவ்வளவு வழிபாடு செய்ய வேண்டும்? இவ்வுலகம் மட்டுமல்லாமல், வானுலகமென்ன, மற்ற அண்டங்களென்ன - யாவற்றுக்கும் முதல்வனாயுள்ள பரம்பொருளுக்கு உலகத்தவர் என்ன வந்தனை வழிபாடுசெய்யவேண்டும்? எங்குமே அவன் சன்னிதி. ஆகவே, அவன் சன்னிதியில் நில்லாமலோ, அவனைக் கண்டு வணங்காமலோ, எவர்தாம் இருக்கமுடியும்?

சீரார் நலஞ்சேர் பூவுலகில்
தேவாசுரரில் மற்றையரில்
தினமும் உனது கொலுக்காணச்
செல்லாதார் ஆர்?

காணிக்கை செலுத்தாதவர்கள்தாம் யார்? வந்த வணங்குவதற்குச் சமயம் எப்போது வாய்க்கும் என்று காத்திருந்து வாராதவர்கள் யார்? ஒருவருமே இல்லை.

திறை வளங்கள்
தாராதார் ஆர்? உனது பதம்
தனையே வணங்கித் தொழவேண்டித்
தழுவாதார் ஆர்? எவ்வேளை
சமயம் கிடைக்கும் என நினைந்து

வாராதார் ஆர்? பணிவிடைகள்
வரிசைப்படியே நடந்தாதார் ஆர்?

என்று கவிஞர் பழனிக் குழந்தைக் குமாரக் கடவுளை நோக்கிக் கேட்கிறார்; ஆர் ஆர் என்று கேட்பதானது, ஆரார் என இணைந்து, தாய்மார் தாலாட்டும்போது ஒலிக்கும் ஒலியாகிய ‘ஆராரோ ஆராரோ' என்ற ஒலியைத் தந்து, தாலாட்டு என்ற எண்ணத்தையும் உண்டுபண்ணுகிறது. இங்ஙனம் பாடும்போது, தாலாட்டு என்ற நினைவும் ஒரு பக்கம் கவிஞரைக் கவருகிறது. இந்த நினைவோடு பார்த்தால் பாட்டு முழுவதுமே ஓர் அழகிய தாலாட்டாயிருப்பதை நாமும் கண்டு அனுபவிக்கலாம்.

சீரார் நலஞ்சேர் பூவுலகில்
தேவாசுரரில் மற்றையரில்
தினமும் உனது கொலுக்காணச்
சொல்லாதாரார்? திறை வளங்கள்

தாரா தாரார்? உனழ பதம்
தனையே வணங்கித் தொழவேண்டித்
தழுவாதாரார்? எவ்வேளை
சமயங் கிடைக்கும் என நினைந்து

வாரா தாரார்? உனதருளை
வாழ்த்திப் புகழந்து துதிக்க மனம்
வசியா தாரார்? பணிவிடைகள்
வரிசைப் படியே நடத்தாதார்

ஆரார் எனத்தாலாட்டு கின்ற
அரசே வருக வருகவே
அருள்சேர் பழனிச் சிவகிரிவாழ்
ஐயா வருக வருகவே!