பாரதி அறுபத்தாறு/கடவுள் எங்கே இருக்கிறார்?
கடவுள் எங்கே இருக்கிறீர்?
“சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே?
சொல்” லென்று ஹிரணியன் தா னுறுமிக் கேட்க,
நல்ல தொரு மகன் சொல்வான்:— “தூணிலுள்ளான்,
நாராயணன் துரும்பி லுள்ளான்” என்றான்.
வல்ல பெருங் கடவுளிலா வணுவொன்றில்லை,
மஹா சக்தி யில்லாத வஸ்து வில்லை,
அல்ல வில்லை, அல்ல வில்லை, அல்ல வில்லை ;
அனைத்துமே தெய்வ மென்றா லல்ல லுண்டோ ?
(15)
கேளப்பா சீடனே, கழுதை யொன்றைக்
”கீழான” பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கர, சங்கர வென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டந் தெய்வம்.
மீளத்தா னிதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டுங் கடவுளன்று மண்ணு மஃதே.
(16)
சுத்த அறிவே சிவமென் றுரைத்தார் மேலோர் ;
சுத்த மண்ணும் சிவமென்றே யுரைக்கும் வேதம்;
வித்தகனாங் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்;
வித்தை யிலாப்புலையனு மஃதென்னும் வேதம்,
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானாற் பெண்டிரென்றும்
நித்தநும் தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ, நிகழ்த்து வீரே.
(17)
உயிர்களெலாந் தெய்வ மன்றிப் பிற வொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவு நேரே தெய்வம்;
பயிலு முயிர் வகை மட்டு மன்றி யிங்கு
பார்க்கின்ற பொருளெல்லாந் தெய்வங் கண்டீர்;
வெயிலளிக்கு மிரவி, மதி, விண்மீன், மேகம்,
மேலுமிங்கு பல பலவாந் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப் பொருள்களனைத்துந் தெய்வம்;
எழுதுகோல் தெய்வ மிந்த எழுத்துந் தெய்வம்.
(18)