பாரதி அறுபத்தாறு/பொறுமையின் பெருமை

பொறுமையின் பெருமை

திருத் தணிகை மலைமேலே குமாரதேவன்
திருக்கொலு வீற்றிருக்கு மதன் பொருளைக்கேளீர்!
திருத் தணிகை யென்பதிங்கு பொறுமையின் பேர்,
செந்தமிழ் கண்டீர், பகுதி: 'தணி' யெனுஞ்சொல்,
பொருத்த முறுந் தணிகையினாற் புலமை சேரும்,
பொறுத்தவரே பூமியினை ஆள்வா ரென்னும்
அருத்த மிக்க பழமொழியுந் தமிழி லுண்டாம்,
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன். (11)

பொறுமையினை அறக்கடவுள் புதல்வனென்னும்
யுதிட்டிரனு நெடுநாளிப் புவிமேற் காத்தான்,
இறுதியிலே பொறுமை நெறி தவறி விட்டான்,
ஆதலாற் போர்புரிந்தா னிளையா ரோடே
பொறுமையின்றிப் போர்செய்து பரதநாட்டைப்
போர்க் களத்தே அழித்து விட்டுப் புவியின்மீது
வறுமை யையுங் கலியினையும் நிறுத்தி விட்டு
மலைமீது சென்றான் பின் வானஞ் சென்றான். (12)

ஆனாலும் புவியின் மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய மரண மெய்தல் கொடுமை யன்றோ?
தேனான உயிரை விட்டுச் சாக லாமோ?
செத்திடற்குக் காரணந் தான் யாதென்பீரேல்,
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜகதீச சந்த்ர வஸு கூறுகின்றான்:
(ஞானானு பவத்தி லிது முடிவாங் கண்டீர்)
“நாடியிலே அதிர்ச்சியினால் மரண” மென்றான்.{float_right|(13)}}

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;
கொடுங் கோபம் பேரதிர்ச்சி ; சிறிய கோபம்
ஆபத்தா மதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலா மவிந்துபோகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாந் தழலாய்வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத் தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே.{float_right|(14)}}