பாரதி அறுபத்தாறு/தாய் மாண்பு

தாய் மாண்பு

பெண்டாட்டி தனை யடிமைப் படுத்தவேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?

கண்டார்க்கு நகைப் பென்னு மூலக வாழ்க்கை
காதலெனுங் கதையினுடைக் குழப்பமன்றோ?
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவ ளென்றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஒளவை:— “அன்னையும் பிதாவும்”
பாரிடை “முன்னறி தெய்வ” மென்றா ளன்றோ? (46)

தாய்க்குமே லிங்கேயோர் தெய்வ முண்டோ?
தாய் பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை
வாய்க்கும் பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவி யொருத்தியை யடிமைப் படுத்தவேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?
தாயைப் போலே பிள்ளை யென்று முன்னோர்
வாக்குள தன்றோ? பெண்மை யடிமை யுற்றால்
மக்களெலா மடிமை யுறல் வியப்பொன்றாமோ? (47)

வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிற ரா மென்பான்;
நாட்டினிலே
நாடோறு முயன்றிடுவா னலிந்து சாவான்;
காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோமப்பா ;
காதலிங்கே யுண்டாயிற் கவலையில்லை ;
பாட்டினிலே காதலை நான் பாடவேண்டிப்
பரம சிவன் பாதமலர் பணிகின்றேன். (48)