பாரதி அறுபத்தாறு/விடுதலைக் காதல்

விடுதலைக் காதல்

காதலிலே விடுதலை யென் றாங்கோர் கொள்கை
கடுகி வளர்ந்திடு மென்பார் யூரோப்பாவில்;
மாதரெலாந் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலா மென்பார் அன்னோர்;
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம் வந்தாற் கலந்தன்பு பிரிந்து விட்டால்
வேதனை யொன்றில் லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக் கூடவேண்டு மென்பார். (54)

வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்!
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப் போ லாண்மக்கள் புவியின் மீது
சுவை மிக்க பெண்மை நல முண்ணுகின்றார்.

காரணந்தான் யாதெனிலோ ; ஆண்களெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார் ; கற்பே மேலென்
றீரமின்றி யெப்போது முபதேசங்கள்
எடுத் தெடுத்துப் பெண்களிட மியம்புவாரே! (55)

ஆணெல்லாங் கற்பை விட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையுங் கற்பழிந் திடாதோ?
நாணற்ற வார்த்தை யன்றோ ? வீட்டைச் சுட்டால்
நலமான கூரையுந்தா னெரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண் மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்?
காணுகின்ற காட்சியெலா மறைத்து வைத்துக்
கற்புக் கற்பென்றுலகோர் கதைக்கின்றாரே! (56)