பாற்கடல்/அத்தியாயம்-11




11

"அம்மாப் பெண்ணை நீ உன் பிள்ளைக்குத்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் !" என்று ஸ்ரீமதி தன் அண்ணனிடம் கை பிடித்துக் கொடுத்துவிட்டுத் தான் போகுமிடம் போய்ச் சேர்ந்துவிட்டாலும், மன்னிப் பாட்டிக்குச் சபலம் விடவில்லை. அம்மாப் பெண்ணைப் பெண் பார்க்க ஓரிருவர் வந்தார்களாம். அவர்களில் ஓரிடம் மெய்யாகவே வசதி உள்ளதுதானாம். இரண்டாந் தாரம். அப்படித்தானே வாய்க்கும் ! கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் முடியுமா? ஆனால் அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லையாம். ஆள் திடகாத்திரம்தானாம்.

அண்ணாகூட - அதான் என் தந்தை - சொன்னாராம்: "அம்மாப் பெண்ணே, எனக்காக நீ பார்க்காதே! உன் வாழ்க்கை உருப்பட வரும் சமயத்தை நழுவ விடாதே! இந்த வீட்டில் வாழ்க்கைப்பட்டால் - நான் சொல்லத் தேவையில்லை; இந்த வீட்டு நிலைமைதான் உனக்குத் தெரியும்."

தாத்தா: "அம்மாப் பெண்ணே, உன்னிஷ்டம் எப்படியிருந்தாலும் நான் குறுக்கே நிற்கமாட்டேன்."

ஆனால், அம்மாப் பெண், "நான் சப்தரிஷியைத் தான் பண்ணிக்கொள்வேன்!” என ஒரே பிடியாகப் பிடித்து, மன்னியின் கட்டாயத்துக்குக் கண்ணீரானதும், அப்பாவுக்கு - அதான் தாத்தா - பொறுக்கவில்லை. "குழந்தையை அழவிடாதேடி பாவி, இனி அவளை யாரும் பெண் பார்க்க வரக்கூடாது" என்று கட்டளையிட்டு, மன்னி மேலும் வரன் தேடும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஆனால் மன்னிப் பாட்டி அவ்வளவு சுலபமாக விஷயத்தை விடுபவள் இல்லை. "சின்னவாளோடு பெரியவாளும் சேர்ந்துண்டு எப்போ என் பிள்ளை அம்மாப் பெண்ணுக்குன்னு தீர்மானமாயிடுத்தோ அகிலாண்டத்தை ஹாலாஸ்யம் பண்ணிக்கணும்' என்று கண்டிஷனைக் கொண்டு வந்தாளே பார்க்கணும்!

மாமா திக்குமுக்காடிப் போனார்? மல்யுத்த பாஷையில், இது கத்திரிப் பிடியா? நண்டுப் பிடியா? கராட்டேவில் இது என்ன வெட்டு?

மாமா அப்போதுதான் உத்தியோகத்தில் (கோயமுத்தூர்) காலெடுத்து வைத்திருக்கிறார். இனிமேல் இரு தம்பிகள் தலையெடுத்தாகணும். அம்மாவைப் பிரிந்த கண்ணீர் இன்னும் குழந்தைகள் கன்னத்தில் காயவில்லை. வாளிப்பாகத் தங்கை கல்யாணத்துக்குக் காத்திருக்கிறாள். தாயுமில்லை. தகப்பனுமில்லை. வளர்ந்த இடத்தை விரோதித்துக்கொண்டு, தன் இஷ்டப்படி விடிவு கண்டு கொள்வதென்பது இப்போதைக்கு நடக்கிற காரியமா?

"மன்னி கேட்பதில் என்ன தவறு? நன்றி என்று ஒன்று கிடையாதா?” மன்னி கேட்டாலும் கேட்கா விட்டாலும் கிராமத்தில் வக்காலத்து வாங்குபவர்களுக்குக் குறைச்சலா? வாசல் திண்ணை கட்டியிருப்பது வழிப்போக்கர்கள் தங்குவதற்கு என்று பேச்சு. ஆனாலும், பயன்படுவது பஞ்சாயத்துக்குத்தானே! அதுவும் கேட்காத பஞ்சாயத்துக்கு.

நீதிகளை (நம் நாட்டைப் பொறுத்தவரை) மனு வகுத்திருக்கலாம்; ஆனால் நியாயம் வந்த வழி அல்லது காரணம்: முதலில் பேச்சுக்கு ஒரு சந்தர்ப்பம், பிறகு சந்தர்ப்பத்துக்கு ஒரு சந்தர்ப்பம்! எல்லா நியாயங்களுமே சந்தர்ப்ப நியாயந்தான் என்பது என் துணிவு. இந்தச் சந்தர்ப்பத்துக்கு என்ன பொருந்தும்?’ என்பது தான் அடிப்படைச் சட்டம்.

இஷ்ட நியாயத்துக்கும் சந்தர்ப்பத்தை மொழி பெயர்க்கச் சட்டப் புத்தகங்கள் இருக்கின்றன. சட்டத்தை முறுக்கிப் பேசவேதான் அதற்கென்றே படிப்பு. அப்படியும் முடியாவிட்டால் சட்டத்தையே மாற்றி அமைத்தால் போகிறது. அந்த அளவுக்கு நீதி இடம் கொடுக்கிறதோ இல்லையோ, சட்டத்திலேயே இடம் வைத்துக்கொண்டுதான் சட்டம் எழுதியாகிறது. சொல்லி ஆகிறது. ஆகவே சட்டத்தின் அடிப்படை, வழக்கமாக மனத்தில் எழும் நடு நியாயமுமல்ல. நீதியுமல்ல. எல்லாமே கட்சி நியாயந்தான்.

உலகில் எத்தனை மனிதப் பிறவிகளோ, அத்தனை தனித்தனி மரங்கள், தத்துவங்கள், நியாயங்கள், கட்சிகள், நாஸ்திகம், ஆஸ்திகம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், இன்னும் பெயர் காணாத தத்துவங்கள், ஜாபாலி, சந்தர்ப்பம், பொது (அப்படி என்று ஒரு பெயர்!) அப்புறம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்கிற நியாயத்தில் (அல்லது தத்துவமா?) மன்னி பெற்ற இரு பெண்களில் மூத்தவளின் கல்யாணப் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டு விட்டாள். மன்னி ஒன்றும் தெரியாதவள் என்று யார் சொன்னது?

மாமா, சிவப்பாக எடுப்பான மூக்கு முழியாக இருப்பார்.

அத்தை வெள்ளை நிறம், மற்றப்படி மன்னி ஜாடை.

கல்யாணங்கள் சொர்க்கத்தில் முடிக்கப்படுகின்றன. இரண்டு திருமணங்களும், அவற்றுக்குச் சமயம் வாய்த்தபோது, ஒரே பந்தலில்தான் நடந்தன.

மாமாவையும் அத்தையையும் புதுக்குடித்தனம் வைக்கப் பெரியவர்கள் யாரும் கோயமுத்தூர் போனதாகத் தெரியவில்லை. ரயில் சார்ஜுக்கு எங்கே போவது? அம்முவாத்து காலக்கடுப்பு எவ்வளவு மோசம் என்று எவ்வளவு ருசுப்படுத்த முயன்றாலும் போதாது. 'பெருந்திருவே கருப்பண்ணாய என்று அம்மன் பலகைக்கு விழுந்து நமஸ்கரித்து, பெரியவர்களை நமஸ்கரித்து எழுகையில் அவர்கள் இட்ட விபூதியோடு தோய்ந்த ஆசிதான் கடைசிவரை துணை. ஆனால் அதற்குத்தான் என்ன குறைச்சல்!

ஆனால் வழியனுப்புகையில், பெண்ணுக்குத் தாயாரின் புத்திமதியைப் பற்றி மாத்திரம் அண்ணாவின் கேலி இன்னும் நினைவில் நிற்கிறது.

”சோனா!-(அத்தை 'ஞே'வென்று தேய்ந்து மாய்ந்து சோனியாக இருப்பாள். ஆகையால் அவளை அழைக்கும் பெயர் சோனியிலிருந்து வயதாக ஆகச் சோனாவாக மருவி இட்ட பெயரினும் கெட்டியாக நிலைத்து விட்டது) "சோனா, மறக்காமல் வாரத்துக்கு இருமுறை எண்ணெய் தேச்சுக்கோ! நெய் வாங்கி வெச்சுக்கோ.”

'இங்கே அம்மாப் பெண்ணுக்கு இவள் சிபாரிசு செய்யும் வாரக் குளியல்களும் சௌக்யங்களும் கிட்டுமா? நெய் வாங்கி வெச்சுக்கோவாம். அம்மாப் பெண்ணை விடு. ஏன், உன் ஆம்படையான் உடம்பை கவனித்துக் கொள்' என்றுகூட ஒரு வார்த்தை சொல்றது தானே! அதைச் சொல்லக்கூடத் தோன்றவில்லையே!'

அண்ணாவுக்குப் புழுங்கும் சுபாவம், இளமையில் வறுமை, வயது முறுக்கில் திடீரென ஆஸ்துமா நேர்ந்து அதனாலேயே உத்தியோகத்தில் சறுக்கல், வியாதியின் கொடுமை - இதிலேயே உடலும் மனமும் உளுத்துப் போய்விட்டார். அவருடைய பல உத்தமங்கள் எனக்குப் படியாவிட்டாலும் புழுக்கத்தை மட்டும் ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கே தெரிகிறது. எழுத்தாளனுக்கு இன்றியாமையாத குற்றங்கள், குணக்கேடுகளில் புழுங்கலும் சுயநலமும் சேர்ந்தவை போலும்!

நினைவில் ஊறப் போட்ட பின்னர்தானே விஷயம் எழுத்துக்குப் பக்குவத்தை அடைகிறது!

அண்ணாவிடமிருந்த பொருமல் ஏன் அம்மாவிடம் இல்லை? எனக்கு இன்னும் வியப்புதான். அவருடைய சூழ்நிலையில்தானே அவளும் இருந்தாள்! கேட்கப் போனால், அவள் நிலைமை இன்னும் மோசம். சின்ன வயதிலேயே, பெற்றோர்கள் இருவரையும் இழந்தது மட்டுமல்ல, தம்பிமார் இருவர் வேறு-பிறர் தருமத்தில் வளர்ந்து - இதுபோன்ற அகதிகளுக்கு ஆண்டவன் கூடவே ஒரு விரக்தியையும் கொடுத்துவிடுவானோ? அல்லது அம்மாவுக்கு அந்த வயதில் இயற்கையாகவே அமைந்திருந்த ஆரோக்கியம் இந்தக் கவலைகளையெல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டதோ ? அல்லது இந்தக் கவலைகளையெல்லாம் படுவதற்கே அவளுக்குத் தோன்றவில்லையோ? இழைக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல், ஆனால் தாய் தகப்பனில்லாத அந்த ஒரே காரணத்தாலேயே நேரும் சிறுசிறு அலக்ஷியங்கள், கொடுமைகள், எறும்புக் கடிகள், அங்குமிங்கும் ஏவல்கள், ஏலமிட்ட வாழ்க்கை, அவர்கள் நியதியில் சேர்ந்தனவையாக, அவற்றிடையில் அநாத பந்து அவர்களைப் பதப்படுத்துகிறான். ஒன்று தெரிகிறது. யாருக்கும் அவன், அவரவர்க்குரிய வாழ்க்கைப் பங்கை ஏமாற்றுவதில்லை. அவன் இருக்கிறான் என்பதற்கு இதைவிட அத்தாட்சி வேண்டாம். ஆனால் அவன் அதை வழங்கும் வழிகள்தாம் புரிவதில்லை. அப்படியும்தான் அவன் ருசுவாகிறான்.

இன்னும் புதிர்! அது அவனோ? அவளோ ? அதுவோ ?

எதுவோ? (ஹும்)

“எது எப்படி இருந்தால் என்ன? இழைச்சவாளும் செஞ்சவாளும் இந்த உலகத்தை விட்டே போயாச்சு. உங்கப்பாதான் பலனில்லாமல் பசலியான நினைப்புகளுக்கு, இன்னமும் இடம் கொடுத்துண்டு தன் மனசையும் கெடுத்துண்டு அவதிப்படறார். முதல் கோணல் எங்களுக்கு அப்பன் வயணமில்லை.”

இப்படியெல்லாம் சிந்திக்கறதாலே திரும்பி வருவாரா? திருந்தியிருப்பாரா? நாங்களோ தஞ்சம் அடைஞ்சுவிட்டோம். ராமசாமி மாமா எவ்வளவுக்குத் தான் ஈடு கொடுப்பார்? மன்னியுந்தான் என்ன செய்வார்? பெண்ணுக்கு விடிவு கண்ட இடத்தில் உடம்பைப் பார்த்துக்கொள்ளச் சொல்வதில் என்ன தவறு? பெத்தவா சுபாவம் அது. மன்னி சொல்லாததனாலே அண்ணா சௌக்யம் சேர்த்துக்காமல் இருக்கப் போறானா? தான் எண்ணெய் தேச்சுக்காமல் இருக்கப் போறானா? மூல வியாதிக்காரன், முக்கியமா அவனுக்கு நெய் சேரணும். இல்லை, சோனாதான் சமைச்சுப் போடாமல் இருக்கப்போறாளா? குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. தாய் தகப்பன் இல்லாதவர்கள். அவசியமா எங்களுக்குச் சுற்றம் வேண்டும். சுற்றமில்லாமல் எங்களுக்குச் சரிப்படாது. எது எப்படி இருந்தால் என்ன?” அம்மா புன்னகை புரிந்தாள். “தருமத்துக்குப் போட்டாளோ? பிரியத்தில் போட்டாளோ? நாலுபேர் வீட்டு நாலுவிதச் சாப்பாடு சாப்பிட்டு, அந்த ஊட்டம் என்னை இன்னும் தாங்கிண்டுதாணிருக்கு. சோனா ஆயிரம் சௌக்யம் சேர்த்துண்டு என்ன, இன்னும் சோனாதான். அவளும் இரண்டு பெத்தப்புறம்கூட, மன்னி இன்னமும்தான் கேட்டுக்கொண்டிருக்கிறாள்; 'மறக்காமல் வாரத்தில் ரெண்டுமுறை எண்ணெய் தேய்க்கறாயா? இங்கு வந்தாலும், 'அம்மாப் பெண்ணே! வாரம் ரெண்டு முறை எண்ணெய் தேச்சுக்கோன்னு சொல்றா. சொல்லிட்டால் நாங்கள் தேச்சுக்க முடிகிறதா ? கை ஒழியணும்; தூக்குச்சொம்பில் வெள்ளிக்கிழமையன்னிக்கு எண்ணெய் இருக்கணும்.

முதல் நாள் வதக்கல் கறி பண்ணினால், அதோடு அந்த வெள்ளிக்கிழமை எண்ணெய்க்குளியல் போச்சு. இல்லாத அன்னிலிருந்து இன்னிவரை இதுதான் குடும்பம்! தட்டுமுட்டு முன்னே பின்னே! ஆனால் என்னிக்குமே உண்டு. எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இல்லைப் பாட்டுப் பாடினால் பாடிண்டேயிரு. இருக்கு இருக்குன்னு சொல்லிண்டிருந்தால், இன்னிக்கில்லாவிட்டால் நாளைக்கேனும் - சுண்ணாம்பாலே சூட்சுமம், ரஹஸ்யம் வெளிச்சம் எல்லாமே இதுதான்!”

தன் இளமைப் பருவத்தின் சோதனைகள் பற்றி அண்ணா மாதிரி, அம்மா அதிகம் பாட்டமாகப் பாடினமாதிரி எனக்கு ஞாபகமில்லை. நான் தனியாகச் சொல்ல என்ன இருக்கு? உங்கள் அண்ணாதான் தினமும் ஜபமாலை உருட்டறாரே' என்று கேலி பண்ணுவாள். நாங்கள் எல்லாரும் ஒரே இடத்தில் தானே வளர்ந்தோம். ஆனால் ஒன்றிரண்டு நினைவுகள். நீண்ட இடைவேளைகளில் ஏதேனும் சந்தர்ப்ப விளைவாக அவளிடமிருந்து வெளிப்படும்போது நெஞ்சைத் தீய்க்கும்.

ஜகதீச மாமா - (வக்கீலுக்குப் படித்துவிட்டுத் தொழில் நடத்தாத வக்கீல்!)

ஜகதீச ஐயர் மனைவி வியாதிக்காரி, அடிக்கடி பிறந்தகம் போய்விடுவாள். வளத்தில் பிறந்து வளர்ந்தவள். இங்கு வந்து மாட்டிக்கொண்டது அவள் தலையெழுத்து. இடையில் பிள்ளைப்பேறு நேர்ந்து கொண்டால், கேட்கவே வேணாம். தான் போகும் போது குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு போய்விடுவாள்.

மாமா, சதா வயிற்று வலிக்காரர். ஏதேனும் ஒரு நித்தியக் கோளாறு. பொரித்த ரஸம், பொரித்த குழம்பு, காரம் புளி தள்ளி, தினம் பத்தியச் சமையல், அவருடைய சுபாவத்துக்கும் முகக் கடுப்புக்கும் யாரும் அவரிடம் ஒட்டித் தங்கமாட்டார்கள். அப்புறம் யார்? ஸ்ரீமதி இந்தமாதிரி சமயத்துக்குத்தானே அவள் தாயார் பெற்றுவிட்டுப் போயிருக்கிறாள்! “அம்மாப் பெண்ணை வரவழை, சும்மாவா செய்யப்போகிறாள்? அவளோடு போச்சா? கூடவே அந்தக் கொசுறுகளும்தான் வரப் போகிறது.“

சில மாதங்கள் அவர் வீட்டில் பிழைப்பு நடக்கும். ராமசாமி மாமாவுக்கும் எங்கள் சுமையைக் கொஞ்ச நாள் தாங்கத் தேவையில்லாமல் இருப்பதே, நாங்கள் அவருக்குச் செய்யும் எங்களால் முடிந்த உபகாரம். வேறென்ன உதவி எங்களால் சாத்தியம்? அண்ணா கோயமுத்தூரில் சிதம்பர மாமா வீட்டில் படிக்கிறான்.“

மேல் காண்பவை, வாய்விட்டுச் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஆனால் அவரவர் பார்வைகள்.

அந்த மஹானுபாவன், சாப்பாடு முடிந்து பற்றுப் பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்க்கும்வரை காத்திருந்து கூடத்தை மட்டும் விட்டு மற்ற அறைகளை (சமையல் அறை உள்பட)ப் பூட்டிக்கொண்டு போய்விடுவாராம். கட்சிக்காரனும் இல்லாமல் எந்தக் கச்சேரிக்கு அப்படிப் பிரதி தினமும் போவாரோ?

மஹா சந்தேகப் பேர்வழி. டப்பாவைத் திறந்து குழந்தைகள் முந்திரிப் பருப்பு வீசைக்கணக்கில் வாங்கி வைத்திருப்பதைத் தின்றுவிடுமோ என்கிற பயமோ? அல்லது சர்க்கரையை அள்ளிப் போட்டுக்கொண்டு விடுவார்களோ ? இல்லை, பிற்பகலில் அவசர அவசரமாக அம்மாப்பெண் ரவா உப்புமா கிளறிக் குழந்தை ளுக்கும் போட்டுத் தானும் தின்றுவிட்டால்..?

குழந்தைகள் கூடத்தில் சற்று நேரம் விளையாடிக் கொண்டிருக்கும். பிறகு பக்கத்துக் குடித்தனத்துக்கு விளையாடப் போவார்கள். அந்த வீட்டுக் குழந்தைகள் மதிய உணவு வேளையாக இருந்தால், அந்த வீட்டு மாமிக்கு அந்தச் சமயம் மனம் இரங்கியிருந்தால் - இவர்களுக்கும் கிடைக்கும். குழந்தைகள் வயிற்றுள் ஓநாய் பிடுங்கும். ஆனால் வாய் திறந்து கேட்கமாட்டார்கள். அம்முவாத்துப் பாடம் அதுதான்.

இந்த அதிர்ஷ்டம் தினப்படி வாய்த்துக் கொண்டிருக்குமா ? இல்லாத நாளில் விளக்கு வைக்கும் நேரத்துக்கு மாமா திரும்பும் வேளைவரை கண்ணில் உசிர்தான்.

சமைக்கும் அரிசியை அளந்து கொடுப்பாராம். எப்படி?

இரண்டு சிறுவர்களையும் இரு கைகளிலும் பிடித்த வண்ணம், இந்தச் சிறுமி அவர்களுக்கு, “இதோ மாமா வந்த உடனே நிமிஷமாகச் சமைச்சுப் போடறேன்!” என்று தாய்க்கு மறு தாயாக ஆறுதல் சொல்லிக் கொண்டு, நல்லதங்காள் மாதிரி நிற்கும் காட்சியை மனத்தில் உருவாக்கிப் பார்த்துக்கொள்கிறேன். வயிறு கொதிக்கிறது.

மனுஷனா இவன்?

நம் குழந்தைகள் இந்தக் கஷ்டப்படுமா? இந்தக் கொடுமை தாங்குமா? கஷ்டமே பட வேண்டாம். இப்படியும் இருந்ததா என்று நினைக்கும் கருணையேனும் அதுகளுக்கு இருக்கிறதோ?

—“உங்கள் பெரியவாள் பட்டாள்னா நாங்களும் படனும்னு எங்கள் தலையெழுத்தா? இல்லை, அது தான் உங்கள் இஷ்டமா ? ஏன், எங்களை விடச் சுகப்பட்டுண்டு இருக்காளே, நினைச்சால் Wrist Watch, நினைச்சால் Organdy, தோளில் அழகாகத் தொங்கற Camera, அவாளைப் பத்தி நினைச்சுப் பாருங்களேன். இந்தப் பெரியவாள் எல்லாம் எங்களைத் தங்களோடு இறுக்கிப் பிடிச்சு வெச்சுக்கப் பண்ணற பயமுறுத்தல் தானே! அவாள் சொல்றதாலே நாங்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி ஏதேனும் சாக்ஷி இருக்கா? சரி, அப்படியே இருக்கு, எங்களை அதற்காக என்ன பண்ணச் சொல்கிறீர்கள் ?”

காதைப் பொத்திக் கொள்கிறேன்.

“மனுஷாள்னா பலவிதந்தான்!”

பிரம்புச் சாய்வு நாற்காலியில் வீற்றிருந்தபடி உள்ளங்கையில் தானே பறந்துவந்து உட்கார்ந்துகொண்ட அம்மா சிட்டுக்குருவியை மறுபடியும் அதன் சிறகு விரிப்புக்கு வீசி எறிவதுபோல், அம்மா கையை ஒருமாதிரியாக உதறுவாள். அதுவே ஒரு அழகு - No; graceக்கு நேர்த்தமிழ் யாரேனும் சொல்லுங்களேன்! ஸாஹசம்? சொகுஸு ? ஹு ம், இல்லை, இதையெல்லாம் தாண்டி, எதோ ஒரு நேர்த்தி. எப்பவுமே அம்மாவின் சைகைகளில் இரைச்சல் இருக்காது. அவளுக்குச் சைகைகளே குறைச்சல்.

“ஆனால் சிதம்பர மாமாவாத்துக்குப் போனால் எங்கள் பாடு ஒரே குஷிதான்." அந்த நினைப்பில், இப்பவும் அவள் விழிகள் குழந்தைபோல் விரியும். தனி ஒளி வீசும். அவரும் அழைத்துக்கொண்டு போய் வைத்துக்கொள்வார். “ஸ்ரீமதி குழந்தைகைைள யாருடி கூப்பிடறா, காரியவாதிகளைத் தவிர ? - அங்கே வேலையே கிடையாது; வேளா வேளைக்குச் சாப்பாடு, மேல் தீனி. அங்கே போய்விட்டுத் திரும்பினாலே நாங்கள் மொழு மொழுன்னுதான் வருவோம். கோயமுத்தூர் வெயில் மிதத்துக்குக் கேக்கணுமா? செவந்து போய், சேவல் கொண்டை போல. சிதம்பர மாமா கர்வி. எல்லாரையும் தூக்கியெறிஞ்சு பேசுபவராக இருக்கலாம். ஆனால் அம்மாப் பெண் மேல் அவருக்குப் பிரியம்தான். “குட்டி, குட்டி!” என்று அழைப்பார்.

“நாங்கள் நாய்க்குட்டி போல, சிறு சிறு நன்றிகளையும் எங்களால் மறக்க முடியாது.”

எனக்கு விழி துளும்பும்.

“ஆனால், நாங்கள் எங்கே போனால் என்ன? எங்கே வாடினாலும், எங்கு செழிச்சாலும், எங்கள் தேர், லால் குடி, கீழ்த்தெருவு வடக்கே பார்த்த கோடி வீட்டில்தான் வந்து நிற்கும். பாந்தம் எங்களுக்கு இங்கேதான்; இங்கே தாரதம்மியம் கிடையாது. எல்லாரும் அடிச்சுப் பிடிச்சு, சண்டை போட்டுக்கொண்டு, அடுத்த நிமிஷமே கூடிக் கொண்டு, அந்த இரட்டைக் கடுகு விழுந்த பழையதை மன்னி பிசைஞ்சு கையில் போட, கடைசியில், “ஆச்சு, அடிக்குழம்பு யானை போல“ - யானையும் இருக்காது, பூனையுமிருக்காது, அடிக் குழம்புமிருக்காது. காலிக் கல்சட்டியைத் திருஷ்டி கழிப்பது போல் குழந்தைகள் தலைமேல் சுற்றுவாள். நாங்கள் சிரித்துக்கொண்டு ஓடுவோம். “ராமாமிருதம், அந்த நாட்கள் தனி நாட்கள் தாண்டா. கஷ்டங்கள்தான். பட்டினிகள்தான். ஆனால் அந்த ‘ஸல்லோ புல்லோ’வில் எங்களுக்குத் தனியாத் தெரியாது. சுகம், துக்கம் சேர்ந்து அநுபவிப்பதிலேயே ஒரு ஆனந்தம் இருக்குன்னுகூட நான் சொல்வேன்.“

விஷயத்தை முடிக்க மறுபடியும் பல்லவியில் கொண்டுவந்து நிறுத்துவது போலும், “அம்மாப்பெண் என்றால் பொதுவாக எல்லாருக்கும் பிரியந்தான்.“

அதை நானே கண்கூடாகத் தெரிந்துகொண்டேன், என் மூத்த பிள்ளைக்கு உபநயனம் நடந்தபோது.

அந்த உபநயனம் சம்பிரமமாகவே நடந்தது. இருபது வருடங்களுக்கு முன்னர் விலைவாசிகள் இவ்வளவு கொடுமையாக இல்லையே!

லால்குடியிலிருந்து ஒரு கூட்டமே திரண்டு வந்தது பாருங்களேன்! நான் என்னவோ மெப்புக்குத்தான் அந்தப் பக்கம் பத்திரிகைகள் விட்டிருந்தேன். அங்கு எனக்கு உறவினரோ, தெரிந்தவர்களோ இவ்வளவு நாட்களுக்குப் பிறகு மிகவும் குறைவு. நெருக்கமான பழக்கங்கூட இல்லை. ஆண்களும் பெண்களுமாக, தெரிந்தவர்கள் அழைப்பில் அழைக்காதவர்களும் ஒட்டிக்கொண்டு, மூட்டையும் முடிச்சுமாய் மூன்று ஜட்காக்களிலிருந்து இறங்கினவர்களை நானே எதிர் பார்க்கவில்லை. இறங்கினதும் இறங்காததுமாக அத்தனைபேரும் அம்மாப்பெண்ணை மொய்த்துக் கொண்டனர். அவர்கள் நடுவில் அம்மா முகத்திலிருந்து ஐம்பது வருடங்களேனும் உதிர்ந்து எல்லோருக்கும் காலத்தின் முன்பின் திரும்பி அவர்கள் பிள்ளைப் பிராயத்தில் நுழைந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது எங்களை மறந்து - அதுவே ஒரு தனிக்காட்சி! அட, அந்த வயதில் அம்மா இவ்வளவு அழகா? பிரமித்துப் போனேன். என் தம்பிமார்களே, எழுத ஆசையிருந்தால் மட்டும் போதாது. எழுத்து ஒரு சின்னம்மை, அரிப்பு மாதிரி. அது வராதவர்களே கிடையாது. ஆனால் எத்தனை பேர் குடலிலேயே போட்டுக்கறது, ஜ்வாலையாக வளர்ந்து அவர்களிலும் எத்தனைபேரை எரிக்கிறது, அதிலும் எத்தனைபேரை எரித்துக் கொண்டேயிருக்கிறது என்பதுதான் கேள்வி.

என் தாயார் என்பதற்காகச் சொல்லவில்லை. அந்த நரைக்கூந்தலையும் கண்ணில சதை வளர்ந்துகொண்டிருக்கும் நிலைக்கு அப்பால் பார்க்க உள்கண் பழக வேண்டும். அந்தப் பார்வைக்குக் கண் தனியாகத் திறக்கும் பாக்யம் கிட்ட வேண்டும். இதில் அதிர்ஷ்டம் கால் - அப்பியாசம் முக்கால். இந்த எழுத்தின் வியாபகத்தில் ஸ்தூலப் பொருள்கூட முக்கியம் அல்ல. அதன்பின்னால் அடுக்கடுக்காக இயங்கும் அதன் சூட்சும சாரங்கள்தான் முக்கியம்.

கடையலில் தற்செயலாக அமுதத் திவலை நாக்கில் தெறித்து ருசி கண்டவன் அமுதத்துக்குக் குறைந்து, எதையும் தேடமாட்டான். தேடலினின்று அவனுக்கு மீட்சியும் கிடையாது. தேடிக்கொண்டேயிருப்பான், கலைஞனுக்கு மீறிய சுயநலம் படைத்தவன் கிடையாது. வாழ்க்கையில் சுகத்திலும் சோகத்திலும் கூட அமுத கலசத்தின் தரிசனம் காண அவன் உட்கண்ணுக்குச் சக்தி உண்டு. தரிசனம் தவிர வேறு குறியும் அவனுக்கில்லை.

கடலில், கொட்டு மழையில், தன் மழைத்துளிக்கு வாய்திறந்து அதல ஆழத்தினின்று மேல் வந்து காத்திருக்கும் சிப்பி-

விடிவேளையில் மலர்களின்மேல் தங்கிய பனித்துளி மட்டுமே தன் ஆகாரமெனக் கொண்ட ஸாதகப் பக்ஷி - (என்று ஒன்று இருக்கிறதாமே!) – அதுபோல

'உத்தமம் தவிர வேறு அறியேன்' என்ற தத்துவம் வாழ்க்கையின் தினப்படி நடைமுறையிலும் உண்டு.

உத்தமம் என்பது என்ன?

சரி சரி, கேள்விகள் நீள்கின்றன. எனக்குக் கிடைத்த காட்சியில் எனக்குக் கண்ட வெறியில் என்னை மீறி வந்த ஏதோ ஏதோவைக் கொட்டிவிட்டேன்.

மேலே –

பூணூல் கல்யாணம் விமரிசையாக நடந்தது பெரிதல்ல. கையிலிருப்பதையும் கடன் வாங்கியும் காசை இறைக்கத் துணிந்துவிட்டால், பண்டங்களை வாங்கி விடுகிறோம். ஆனால் இதில் தனியாக ஒரு களை கட்டிற்று. அல்லது களை கட்டிக்கொண்டது. களை என்பது, விரல் வைத்து விவரிக்க முடியாத அம்சம்.

அழைப்பிதழ் விடுகையிலேயே , உள்ளூரிலேயே, இவர்கள் எங்கே வரப்போகிறார்கள்? என்று நான் நினைத்தவர்கள், இவர்கள் வரவேண்டாம் என்று நான் நினைத்தவர்கள், எல்லாரும் வந்து இருந்து சிறப்பித்தார்கள்.

கூட்டம் நெரிய நெரிய எனக்கு மண்டையில் ஏதோ கிறு கிறு ஏறியது. இதைத் தனிப்பட்ட முறையில் எப்படி விவரிப்பேன்? இருபது வருடங்களுக்கு முன் இப்ப விட வளர்ச்சி குறைந்தவன்தானே ! இப்ப மாத்திரம் என்ன?) ஏதோ ஒரு அசட்டு மதமதப்பு. வழக்கமா சாத்துக்குடிக்குப் பதிலாக எல்லாருக்கும் முகூர்த்தத் தாம்பூலத்தில் தேங்காய் வழங்கும் திமிர். ஆபீஸ் மற்றத் துறைகளிலிருந்து வந்திருக்கும் பெரிய புள்ளிகளின் தலைகள் இது என்னுடைய ராஜசூய யாகம் என்பது போல உணர்வு; இல்லை, இந்தக் காலத்துக்கேற்ப அதேபோல ஏதோ ஒன்று.

அன்றிரவு, கூடத்தில் லால்குடிக் கூட்டம் அம்மாவைப் புடைசூழ, எல்லாரும் என்னென்னவோ ஒருவரையொருவர் இடைமறித்தபடி சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது என்னிடமிருந்து அந்தக் கேள்வி புறப்பட்டது. நான்தான் என் வசத்தில் இல்லையே. மீனாட்சி கல்யாணத்தில் மீனாட்சியம்மனின் போதை!

“ஏன் அம்மா, இத்தனைபேரும் எனக்காகத்தானே வந்திருக்கிறார்கள்?“ - ஏன் கேட்டேன், தெரியாது. கேள்வி ஏன் அப்படி அமைந்தது, தெரியாது. அடிப்படை லா.ச.ரா.வின் கீர்த்தி பற்றி அவ்வளவு தீர்மானமான எண்ணமோ?

ஆனால் இத்தனை வயது எழுதியும், லா.ச.ரா. எத்துணை சின்னஞ்சிறிய சுண்டெலி என்று சமீபத்தில் கூட நிரூபணமாயிற்று.

மதுரையில் (இப்பத்தான் திரும்பி வந்தேன்) என் நண்பர் ஒரு புது ஆளுக்கு என்னை அறிமுகப் படுத்தினார்.

“இவர் யார் தெரியுமோன்னோ ? லா.ச.ரா. எழுத்துலகில் ஜாம்பவான்.“

“ஆமாங்க, இந்த மாதங்கூடக் 'கலைமகளில் இவர் கதை படிச்சேன், இவருடைய புதுக்கவிதை ஒண்ணு போனவாரம் 'கல்கி'யில் வந்திருந்ததல்ல ?”

எனக்குப் 'பக்'கென்று சிரிப்பு வந்துவிட்டது. நண்பர் முகம் சுண்டிற்று. புது ஆள் குறிப்பிட்ட இரண்டு பத்திரிகைகளிலுமே என் எழுத்து வெளியாகி இருபது வருடங்களுக்கு ஏறக்குறைய இருக்கும்.

இதுபோன்ற வெடிகளை எழுத்தாளனைப் பற்றிய விகடத் துணுக்குகளில் சேர்த்துக்கொள்ளலாம். விகடத் துணுக்குகளுக்கென்றே எழுத்தாளர்கள் இப்போது தனிக்கிளை பிரிந்து அவர்கள் தொழிலும் மும்முரமாக நடக்கிறதே?

வந்திருந்தவர்களில் ஒரு மாமி - ஒரு பாட்டி என்று சொல்லட்டுமா - அம்மாவுக்கு அருகே உட்கார்ந்திருந்தவள் அம்மாவின் மடியில் செல்லமாகக் கையை வைத்துக் கொண்டாள். அவளைத் தொட்டுக் கொள்ளணுமாம்.

“எங்களுக்கு உன்னைப்பத்தி என்னடாப்பா தெரியும் ? அம்மாப்பெண் பேரனுக்குப் பூணூல் போடறாள்னு சேதி வந்ததும் கைக்காரியங்களைப் போட்டது போட்டபடி போட்டுவிட்டு அப்படியே ரயிலேறிவிட்டோம். மறுபடியும் ஒருவரையொருவர் பார்க்கக் கொடுப்பினை இருக்கோ இல்லையோ? யார் கண்டது? பெண் வயத்துப் பேரனுக்கா, பிள்ளை வயத்துப் பேரனுக்கான்னுகூடத் தெரியாது. எங்களுக்கு அம்மாப் பெண்ணைத்தான் தெரியும்.“

அம்மாவுக்கு ஒரு mannerism. அவள் தனியாக இருக்கையிலோ, சிந்தனையில் ஆழ்ந்திருந்தாலோ பிறர் பேச்சுக்கு கவனம் கொடுக்கையிலோ, அவள் உதடுகளை இரு விரல்கள், சுட்டு விரலும் நடு விரலும் பொத்தியிருக்கும். அம்மாவின் கண்கள் என்மேல் ஆழ்ந்தன. விரலடியினின்று உதடுகள் அசைந்தன. ஆனால் எனக்கு மட்டும் கேட்டது. சேதி எனக்கு மட்டும்தான்.

“அட அசடே!”

அவ்வளவுதான். ஆனால் எவ்வளவோ அர்த்தங்கள். அவற்றில் ஒன்று, “மெனக்கெட்டு கேட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளணுமா?”

இதற்குள் இன்னொரு பாட்டி பழுத்த சுமங்கலி - "இந்த நாள் எல்லாம் என்ன கல்யாணச் சமையல் பண்ணறான்கள்? என்னவோ மந்தை மாதிரி பத்து, பன்னிரண்டு பேர் வரான்கள். இரண்டு பேர் அரைக்கிறான். இரண்டு பேர் நறுக்கறான். எதையோ வெந்ததும் வேகாததுமா, கால் உப்பு, அரை உப்பில், ஏற்றி இறக்கிவிட்டு அவசர அவசரமாப் பரிமாறி அவசர அவசரமாச் சாப்பிட்ட எச்சில்மேல் தெளித்த ஜலம் காயறத்துக்கு முன்னாலேயே, மறு பந்திக்கு இலைக்கட்டைத் தூக்கிண்டு நிக்கறான். இதிலே இனிப்பாம், காரமாம். எதுவுமே வாயில் நுழையாத பேர். ஆனால் பிட்டுப் பார்த்தால் இன்னும் வேகாத மைதா மாவு! நாங்கள் அந்த நாளில் கையால் தொடக்கூட மாட்டோம். யாராவது விசேஷம் என்னுது உன்னுதுன்னு இழுத்துப் போட்டுண்டு செய்யறாளா ? அம்மாப்பெண்ணே, நீ அந்தச் சீமந்தக் கல்யாணத்துக்குச் சமைச்சயே, அதைவிட ஒசத்தியாடீ ?”

அத்தனை தொண்டைகளிலிருந்தும் ஏகோபித்து ஒரு ‘ஹாஹாகாரம்.'

பிறகு தனித்தனியாகவும் சேர்ந்தும் விசாரித்துத் தெரிந்துகொண்டேன்.

சிதம்பர மாமா மூத்த பெண்ணுக்குச் சீமந்தம். ஏற்பாடு செய்திருந்த சமையல்கார செட், செட்டா டோக்கர் கொடுத்துவிட்டான்கள். வேறு எங்கே இரண்டு காசு கூடக் கிடைத்ததோ, இல்லை “ஹெட் சொல்லி வைத்திருந்த ‘ஸெட்' சேரவில்லையோ? இல்லை, யாருக்கு உடம்பு சரியில்லையோ? மணி ஏழாயிடுத்து 'ஜாடா'க் காணோம்.

இட்டிலிக்கு முதல்நாள் அரைச்சு வைத்திருக்கும் மாவு பொங்கி வழிகின்றது. தேடின இடத்தில் ஆள் இல்லை. சிதம்பரமையர் போலீஸ் இலாகாதான். அதிலும் அவர் ஆட்டம் தனிப் பெரிசுதான். ஆனால் இசைகேடாக மாட்டிக்கொண்டு விட்டார். பின்னால் சிக்ஷை சமையல்காரனுக்கு, நடக்கிறபடி நடந்ததோ, என்னவோ? ஆனால், இன்று, இப்போ, ஆகவேண்டியது என்ன? கல்யாண சீசன், மாற்றாள் கிடைக்கவில்லை. அந்த அவசரத்துக்கு எவன் அகப்படுவான்? கூட வைத்துக்கொண்டு சமாளிக்க முதல்நாள் இட்டிலிக்கு அரைத்த பாட்டிமார்கள் கூடக் கிடைக்கவில்லை. அவர்களும் எங்கோ தேங்காய் துருவப் போய்விட்டார்களோ?

வந்திருக்கும் பெண்டிரில் யாருக்கும் காரியத்தில் இறங்கத் துணிச்சல் இல்லை. சமையல் முந்நூறுபேருக்கு. ஏதேனும் கொஞ்சம் பிசகினாலும் சிதம்பரமையர் வாயில் யார் புகுந்து புறப்படுவது?

அந்தச் சமயத்துக்கு மன்னிப் பாட்டியும் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை கார்த்திகேயனை (கடைக்குட்டி)ப் பிரசவித்திருந்தாளோ என்னவோ? இதெல்லாம் ஹேஷ்ய விஷயம். சீமந்தத்துக்குச் சாமான்கள், காய்கறிகள், பால் தயிர் வாங்கிப் போட்டதும், காணிக்கையாக வந்தவையும், உக்ராண உள்ளிலும், கூடத்திலும் வதியழிகின்றன. கோட்டை அடுப்பு தூங்கறது. சிதம்பரமையரோ கையைப் பிசையும் நிலைமைக்கு வந்துவிட்டார். ஹே லக்ஷமணா!

அப்போ அம்மாப்பெண் - இன்னும் மணமாகவில்லை - வயது பதிமூணோ பதினாலோ - விளையாட்டாகச் சொன்னாளோ, வினையாகச் சொன்னாளோ?

“ஏன் மாமா, நான் சமைக்கட்டுமா ?”

ஐயர்வாள் மருமாளை ஒருமுறை அடையாளம் தெரியாத கண்களுடன் பார்த்தார். அடுத்த அடையாளத்தில், அவர் விழிகள் அகல விரிந்தன. “குட்டி என்னடி சொல்றாள்?”

சிதம்பரமையர் சம்சாரம் சோனியா? கெட்டிக்காரியா? அல்லது இரண்டுமா? தெரியாது.

ஆனால் idea உடனேயே பற்றிக்கொண்டு கிறுகிறுவெனப் பரவியும் விட்டது.

“சோற்றுத் தவலையை என்னால் இறக்கி வைக்க முடியாது. அதுமட்டும் புருஷாள் கவனிச்சுக்கட்டும். சாதம் பதம்வரை நான் பார்த்துக்கிறேன். சுற்றுக் காரியம் வந்திருக்கறவா செஞ்சு கொடுத்தால் நான் ஏத்தி இறக்கிடறேன்.“

அவ்வளவுதான் சமையல்கட்டு ஒரே குதூகலக் கூடமாக மாறிவிட்டது. பட்டுப்புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கும் மாமிகள் போட்டி போட்டுக் கொண்டு தேங்காய் துருவுகிறார்கள். காய்கறி நறுக்குகிறார்கள். வடைக்கு அரைத்தாகிறது. அதற்கு உப்பு, மிளகாய்த்திட்டம் அம்மாப் பெண்ணுடையதுதான். கூடத்தில் அதுபாட்டுக்கு இட்டிலிக் கடை நடக்கிறது. சாதம் பதமாகி, சோற்றுத் தவலைக்குக் கோணி கட்டி இரண்டு ஆண் பிள்ளைகள் பிடித்து நகர்த்திக் கஞ்சி வடியத் தொட்டி முற்றத்துக்கு உருட்டி விட்டாச்சு. ஹெஸர் இன்னொரு தவலையில் காய்கிறது. பாவாடை தாவணியில் ஒரு சிறுமி, அவள் மாரளவுக்கு வீடு அண்டாக்களில் கோட்டையடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பு, ரசத்தைக் கிளறிக்கொண்டிருக்கிறாள். இதற்குள் இட்டிலிப் பானையின் மேல்மூடியை ஒரு ஆண்பிள்ளை தூக்க, இட்டிலியைப் பதம் பார்க்கிறாள். ஆச்சு, ஆச்சு, இன்னும் பாயசமும், வடையும்தான் பாக்கி. சொன்னபடி பதினோரு மணிக்கு இல்லாட்டாலும் பன்னிரண்டு மணிக்கு இலை போட்டுவிடலாம்.

அந்தச் சந்துஷ்டியான முகத்தைச் சுற்றி மற்ற அத்தனை இளசுகளும் வட்டம்.

“இப்போ நினைச்சால்கூட எங்களுக்கு ஆச்சரியமாயிருக்குடி. நான் சமைக்கிறேன், காரியத்தை ஒப்பேத்திக் கொடுக்கறேன். கழுதை வயசானவளுக்கெல்லாம் ஏத்துக்கத் தெம்பு வல்லே. நீ பச்சைக் குழந்தை, உனக்கெப்படி அந்தத் தைரியம் வந்தது?“

“அம்மு வாத்து ரத்தம் அவள் உடம்பிலும் ஒடல்லியா? தைரியத்துக்கென்ன குறைச்சல்?”

“அந்தச் சமையலும் என்ன, சின்னப்பொண்ணு பண்ற மாதிரியா இருந்தது? அதெப்படி ஆவேசம் வந்தமாதிரி அப்படி அப்பழுக்கில்லாமல் அமைஞ்சுது? அம்மாப்பெண்ணே, மறுபடியும் அதுமாதிரி நேர்ந்தால் அதேமாதிரி உன்னால் முடியுமா ?”

அம்மா புன்னகை புரிந்தாள். “நான் மறுபடியும் குமரியாவதற்கு வழி சொல், மிச்சத்துக்கு பதில் அப்புறம் சொல்றேன்!”

“பேச்சில் எப்படி மடக்கறாள் பார்த்தியா?”

“அவள் சொல்றது வாஸ்தவம்தானே!“

“அந்த நாள் எல்லாம் திரும்பி வராது.“

“வந்தாலும் அதுமாதிரி, நமக்குத் தெரியாது. இப்பவும் அதைப்பத்திப் பேச, அந்தச் சமயம் ஒரே தரமா நேர்ந்து, அப்புறமும் சமயம் சமயமா நிக்கறது.“

“பெருந்திரு, எத்தனை காலமாக, மூலஸ்தானத்தில் நின்றவிடத்திலேயே நின்னுண்டிருக்கா, அது மாதிரி“

அம்மாடி! ராமாமிருதம் சுண்டெலிகூட இல்லை. சுண்டைக்காய், சுண்டைக்காய் கூட இல்லை. சுண்டைக்காய் ஔஷதம். அதன் தகுதி எனக்கில்லை. நான் சுண்டெலியாகவே இருந்துவிடுகிறேன்.

அம்மாவைப் பார்க்கிறேன். இதுவரை அம்மா இதுபற்றி என்னிடம் ஏன் சொன்னதில்லை? சொல்ல வேண்டாம் என்கிற எண்ணமா? சொல்லி என்ன ஆக வேண்டும் என்கிற அலக்ஷியப் பாங்காயிருக்கலாம். இல்லை, அந்த விஷயத்தின் பேரிலேயே அலக்ஷியமாயிருக்கலாம். அதில் என்ன இருக்கிறது? நடந்தது நடந்தாச்சு என்கிற போக்கு. விஷயத்தின் எடை தெரிந்தே அதைத் தூக்கி எறிதல், துறவிச்செருக்கு.

அன்று எல்லோரும் படுத்து ஓசை அடங்கின பின்னர் - ஓசைப்படாமல் எழுந்து அம்மா எங்கு இருக்கிறாள்? பார்க்கிறேன். ரேடியோ எதிரில் Night buib இன் நீல ஒளியில் பிரம்புச் சாய்வு நாற்காலியில், சிந்தனையில் ஆழ்ந்து வீற்றிருக்கும் உருவம் தெரிந்தும் தெரியாததுமாகத் தெரிகிறது. உதட்டின்மேல் இரு விரல்கள். அவளுடைய வழக்கமான போஸ். அவளுக்கும் என்போல் தூக்கமில்லை. ஒரு பாறை போல் தோன்றுகிறாள்.

Legend.

நீல நக்ஷத்ரங்களில் தனித் தனியாகப் பொறிந்து கொண்டு என் மனக்கண்ணில் சொல் எழுகிறது. ஒப்புக்கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான சொல். இதன்மேல் எனக்கு எப்பவுமே பாரபகஷம் உண்டு.

இப்போ மதுரையிலிருந்து திரும்புகையில் தரிசனத்துக்கு லால்குடி போயிருந்தேன்.

தேனோ, பன்னீரோ, இளநீரோ ஏதோ ஒரு அபிஷேகத்துக்குப் பின்னர் குருக்கள் உபசார தீபாராதனை காட்டுகிறார். சிவராஜ குருக்களுக்குப் பின் இப்போ அவர் பிள்ளை கணேசன்.

“அம்பாளை நன்னா பார்த்துக்கோங்கோ.”

அவள் எங்கே அப்படி நன்றாகத் தெரிந்துவிடுவாளா? ஏற்கெனவே எனக்குக் கண்ணில் கோளாறு. குன்றிக்கொண்டே வரும் கற்பூர ஒளியில், கர்ப்பக்ருஹத்தின் மையிருளிலிருந்து, உருவம் மங்கலாக அங்குமிங்குமாக (முழுமை காட்டாமல்) பிதுங்குகிறது. கற்பூரம் குளிர்ந்ததும், உருவம் மறுபடியும் இருளோடு கரைந்து விடுகிறது.

தேடின கண்ணுக்குத் தோற்றம்.

மிச்ச நேரத்துக்கு இருளோடு இருள்.

அம்பா, நீ இருக்கிறாயா, இல்லையா?

நீ எது சொல்கிறாயோ, அது. இருக்கிறேன் இல்லை இல்லை, இருக்கிறேன்.

என் நெஞ்சில் அதுசமயம் ஏதேனும் புன்னகை மலர்ந்தமாதிரி எண்ணப் படலம் படர்ந்திடில் அது என் பாக்கியம் அதுவே என் பதிலும்கூட.

Legendஇன் சாயைகளில், கேள்விக்கு பதிலெனப் பிடிபடாத இந்தத் தன்மை ஒன்று, உயிரோடு இருக்கையிலேயே சிலரிடம் இந்த அம்சம் வந்து அடைகின்றது. அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-11&oldid=1532708" இலிருந்து மீள்விக்கப்பட்டது