பாற்கடல்/அத்தியாயம்-20




20

“இந்தத் தடவை அவனுக்கு உடம்பு சரியில்லேன்னு லால்குடியிலிருந்து ஆள் வந்ததும் - என்னவோ தெரியல்லே, நானும் பிறந்தாம் போய் நாளாச்சு, ரெண்டுநாள் தங்கலாம்னு உத்தேசத்திலேயே வந்துட்டேன். உள்ளே நுழைஞ்சால் கூடத்தில் படுத்துக் கிடக்கான். காலையிலிருந்து சாப்பிட்டானா, யாரையேனும் கஞ்சி வெச்சுக் கொடுக்கச் சொன்னானா? தெரியல்லே. கேட்டிருக்கமாட்டான். அந்த சவுடாலுக்குத்தான் அம்முவாத்தில் கேக்க வேண்டாமே! கண் ஒரே அடியா உள்ளே போயிருந்தது.

“என்னடா ராமண்ணா, உடம்பு என்ன பண்றதுன்னு மணிக்கட்டைச் சாதாரணமாப் பிடிச்சால், ’பகீர்’ன்னுது. நாடி விழுந்துபோச்சு. அதோடேயே ரெண்டு நாளா நடமாடிண்டிருக்கான். அவனையுமறியாமல் ஜுரம் கீழே தள்ளியிருக்கு. இதுக்கு முன்னாலே ஒரு தடவை இப்படி ஆயிருக்கு.

ராமாமிருதம் பிறக்கல்லே, உண்டாயிருந்தாள்ன்னு நினைக்கிறேன். நாடி விழுந்து மூணுநாள் நடமாடிண்டிருந்து தேறிட்டான். அப்பக்கிப்போ ஆறு ஏழு வருஷம் வித்தியாசம் இல்லியா ? அப்படியே இப்பவும் நடக்கும்னு சொல்ல முடியுமா ? மனுஷன்னு பிறந்துட்டா சிரஞ்சீவியா? அப்புறம் தலைச்சுழிக்கு மதிப்பென்ன? பெருந்திருவுக்கும் பெருமையேது?

ஓசைப்படாமல் கீழண்டை ஆத்துக்குப் போய் சேதுராமையரிடம் சொல்லி, பட்டணத்துக்குத் தந்தி கொடுக்கச் சொல்லிட்டேன். அடுத்த கண்டத்துக்கு வேண்டியவாளைப் பக்கத்தில் கொண்டு வந்து, சேர்த்துட்டாளே? பெருந்திருவால் முடிந்தது அவ்வளவு தான். இங்கே வேண்டியவா யார் இருக்கா?

எல்லோரும் வெளியூரில். முதலித் தெருவில் இருக்கான் போலீஸ்காரன். என் கடமை ஆள்விட்டு அனுப்பிச்சப்போ ஊரில் இல்லேன்னு சேதி வந்தது. இப்போ இருக்கான். இன்னும் வரல்லே. வராட்டாப் போறான். வந்திருந்தால் அவன் போலீஸ் அமுல் போப்போற உசிரைப் பிடிச்சு நிறுத்த முடியுமா?

முதலித் தெருவில், சிதம்பரம் ஐயர், போலீஸ் இலாகாவில், மேலதிகாரிக்குக் காம்ப் கிளார்க், எட்டுக் கண் விட்டெறியும்னு முன் பக்கங்களில் சொல்லியிருக்கிறேன். அத்தை பேச்சிலிருந்து அவர் இந்த வீட்டுடன் ’டு’ விட்டுண்டு இருந்தார் என்று தெரிகிறது. என் ஆயுசில் கடைசிவரை, சிதம்பரம் தாத்தாவைப் பார்த்ததாகவே எனக்கு ஞாபகமில்லை.

அம்முவாத்துச் சம்பிரதாயங்களில் ஒன்று குடும்பத்தில் ஏதேனும் ஒரு விரோதமாவது கொண்டாடியபடி இருக்கும். அண்ணனுக்கும் தம்பிக்கும், அண்ணனுக்கும் தங்கைக்கும்,அக்காவுக்கும் தம்பிக்கும்பெரிய தலை சாக்கில் அந்தந்தக் குடும்பங்களும் கொண்டாடும் என்றால் அசல் - விரோதம் குரோதமாகி, வெள்ளி விழா, ப்ளாட்டினம் இந்த ரீதியில் பகை நீடிக்கும். ஒருத்தன் சளைத்தால் மற்றவன் வீட்டில் பாயசம் என்று பேச்சு நடமாடும். நிஜமோ பொய்யோ அறியேன். தமிழ்ப்பண்டிதர் ராமசாமி ஐயருக்கு அந்த அளவு வீட்டில் வக்கு இல்லை. நெஞ்சம் அந்த வேகம் இல்லை. அவர் சண்டை, சமாதானம், ஸாஹஸம் எல்லாம் பெருந்திருவுடன் அவருடைய பாட்டு நோட்டில் பாசிமணி கோத்தாற் போன்ற எழுத்து மூலத்துடன் சரி. ஆசைநாயகி லச்சுமிகூட, அவர் கவி அரங்கேற்றத்துக்குத்தான்.

அதேபோல் கூடிக்கொண்டாலும் ஒரே வெறிதான். அண்ணன் தம்பி ஆற்று வெள்ளம் இதென்ன சாதாரண ரத்தமா? ராஜ வம்ச ரத்தம். அது தப்பாப் பேசுமா என்ன? ஏதோ கொஞ்ச காலம் போறாத வேளை! என்ன சொல்றே அண்ணா ?”

அண்ணாவுக்கும் சிதம்பரத் தாத்தாவுக்கும் ஆகாது.

ஆனால் அம்மாப் பெண்மேல் சிதம்பரத் தாத்தாவுக்கும் பரஸ்பரம் கொள்ளைப் பாசம்.

சுந்தரத் தாத்தாவுக்கு வீடு தமிழ்ப் பண்டிதர் இல்லத்துக்கு மேலண்டை. கொல்லைப் புறத்தில் கிணறு. இருவருக்கும் பொது எப்பவோ ஏதோ மனஸ்தாபத்தில் சுந்தரம் ஐயர் கிணறுக்குக் குறுக்கே சுவர் போட்டு விட்டார். கிணற்றில் பெரும் பாதி அவர் பக்கம். இங்கே ஒரு சொம்புக்கு மேல் மொள்ள வழியில்லை. சுவர் தடுத்தது. சண்டை போய்ச் சமாதானம் வந்தது. ஆனால் சுவர் நின்றுவிட்டது.

சிதம்பரம் ஐயருக்கு எல்லாரோடும் சண்டை.

தலை, கண் தெரியாத கோபம் சுபாவத்திலேயே. கேள்விப்பட்டவரை சுவாரஸ்யம் அவருடைய Personality மற்ற உடன்பிறந்தாரை ஓங்கி நின்றதாகத் தெரிகிறது. வாட்ட சாட்டம், செம்மேனி, அவரை எப்பவும் இன்றைய பாஷையில்) சூழ்ந்திருந்த ஜாலராக் கூட்டம், உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் நெருங்கிய பழக்கம். “மிஸ்டர் சிதம்பரம், Alright if I Sign here?) அதிகாரப் பிரயோகத்தில் (நேரிடையாக வழியில்லா விடினும்) ருசி, அவரை ஏதோ முறையில் தனியாக ஒதுக்கிவிட்டது. எல்லா Camp clerkகளுக்கும் அந்த மவுசு உண்டாகிறதா? அதில்தான் அவருடைய தனித்துவம்.

அவருடைய நற்குண சமயங்களில் அவருடைய தாராளங்கள், பரோபகாரங்கள் ஆச்சரியத்துக்குரிய அபரிமிதமானவை என்று தெரிந்தவர் சொல்கின்றனர். லஞ்ச ஊழல் வழக்குகள், தண்டனைகளிலிருந்து எத்தனை சிப்பந்திகளை (பங்கா பதவிக்காரர்கள் உட்பட), இலாகா ரூல் சட்டங்களில் அவருடைய நிபுணத்துவத்தாலும் வாக்குச் சாதுரியத்தினாலும், எல்லாவற்றிற்கும் மேல், ஆங்கிலத்தில் தன் எழுத்து வன்மையினாலும் தப்புவித்திருக்கிறார்! என்ன செய்து என்ன? கடைசியில் கழநீர்ப் பானையில் கைவிட்டு விடுவார். இந்த மனுஷனிடம் ஏண்டாப்பா உபகாரம் பெற்றோம் என்று சலித்துக்கொள்ளும்படிப் பண்ணிவிடுவார். நாக்கில் பாம்பு விஷத்தை அப்படித் தெறிப்பாராம். ‘உங்களைப் போல் உண்டா?’ என்கிற கற்பூர தீபாராதனைப் புகைதான் அவர் மூச்சு, இல்லையேல் –

சிதம்பரத் தாத்தாவும் அவர் தாயாரும்—

அவளை ஏதோ தகாத வார்த்தை பேசிவிட்டார். அப்போதுதான், இலையில் சாதத்துடன் உட்கார்ந்திருக்கிறாள். சாதம் பிசைந்தாயிற்று. கவளம் இன்னும் வாயுள் போகவில்லை.

“அடே !”

கொள்ளிக் கட்டையிலிருந்து ஜ்வாலை குபீரிட்டது. நுனியில் பொறிகள் பறந்து சரிந்தன.

”அடே !”

அதே வேளையில், இன்னொரு வீட்டில், கிண்டி மூக்கிலிருந்து குழல் ஜலம், பூமியில் தத்தம் சிந்திற்று. அப்போதே, தொலைக்கப்பால், ஜலம் விழுந்த அதே கோட்டில், பூமி வெடித்தது.

எங்கோ, மைதானத்தில் நட்ட நடுவில் நின்ற அரசில் இலைகள் சலசல.

அடே! உன்னைப் பெற்ற வயிறு பற்றி எரிஞ்சு சொல்றேன், உன்னை ஏன் பெற்றேன்னு இருக்குடா !”

எங்கோ, எவனோ, துர்க்கனாவில் குழறல் பயத்தின் சிரிப்பாக வெடித்துச் சில்கள் 'சில்'லென உதிர்ந்தன.

அந்தரம் அதிர்ந்தது.

”அடே! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது!”

”ஓஹ்ஹோ! பத்தினி சாபமாக்கும்! பிறந்தாலோ ?”

”பிறந்தாலும் தக்காது. பாம்பு தன் முட்டையை நக்கிவிடற மாதிரி நக்கிவிடுவாய்!”

மேற்காண்பது, வாசிக்காதவர்களுக்குப் 'புத்ர' நாவல் முதல் பக்கத்திலிருந்து.

இலக்கியம் பண்ணுகிறேன் என்கிற சாக்கில், குடும்ப அழுக்குகளை அம்பலத்தில் கழுவியாகிறது என்கிற ஏளனத்துக்கு இடம் ஏற்படின், அது பார்க்கும் பார்வை யைப் பொறுத்தது எனும் சகஜமான வாதத்தில் நான் அடைக்கலம் தேடுகிறேன்.

குற்றமாய்ப் பார்ப்பவர்களின் குற்றச்சாட்டில் ஓரளவு நியாயம் உண்டு. ஆனால் இந்நிலை இன்றியமையாதது.

நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, அல்ல, நினைவின் ஊறலில், சொல்லின் பிசிர் விட்டு, பாஷை மெருகேறி, விஷயம் துல்லியமாகி, பிறகு நம் ரத்தத்தில் தோய்ந்து, நம் மனத்தையும் மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியம் இலக்கியத்தின் ரசாயனம் இதுதான்.

இதற்கடுத்த கட்டத்துக்குத் துணிச்சலுடன், என் பேராசையில் போகிறேன். இலக்கியத்துக்கு அர்த்தம் என்று ஒன்று இருந்தால் அது இதுதான். நிகழ்ச்சியின் கிளர்ச்சி அடங்கி ஓய்ந்தபிறகு பின்னோக்கியேனும் வாழ்க்கையைக் காவியமாகப் பார்க்க நமக்குக் கண் ணில்லாமல் போனால், நாம் வாழவே லாயக்கற்றவர்கள். மன்னிப்பவனே மன்னிக்கப்படுவான். சிருஷ்டி, உயிரென்று பிடித்துப் போட்டபின் இருக்கும் வரை வாழ்வதைத் தவிர வேறு வழி என்ன?

இன்னொன்று, நேரே தொப்புளிலிருந்து வர்ணக் கடிதாசை வரவழைத்தேன் என்று கழைக்கூத்தாடி காட்டும் கண்கட்டு வித்தை அல்ல. கற்பனையைப் பற்றி என் எண்ணத்தை முன் பக்கங்களில் சொல்லி இருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். சூரிய சாக்ஷியில் கற்பனையென்று தனியாக வால் முளைத்தது எதுவுமே கிடையாது. திரைகள் விழுகின்றன. பின்னாலிருந்து உருவம் வெளிப்படுகிறது. இருளில் மறைந்திருந்தவை வெளிச்சமாகின்றன. தேடல் தத்துவம் இதுதான். அதனால் சும்மாவே இருக்க முடியாது. இருப்பின் அதுவே சாவு.

எங்கேயோ போய்விட்டேன்; நிற்க இதோ, அத்தை பேசுகிறாள்:

“ஆகவே சப்தரிஷியும் மன்னியும் உள்ளே நுழைஞ்சதுமே ராமண்ணாவுக்கு அதிர்ச்சி ஆகியிருக்கும். எனக்கும் உங்களை முன்கூட்டி உஷார்ப்படுத்த முடியவில்லை. நான் என்ன செய்வேன்? மன்னிதான், பாவம் வாங்கிக் கட்டிக் கொண்டாள். என்ன ஆனால் என்ன? சமயத்துக்கு வந்துட்டேன். அவனும் அப்புறம் சரி ஆயிட்டான். சப்தரிஷியின் முதுகைத் தடவிக் கொடுத்தான். இவ்வளவு கனிவாக அப்பாவையும் பிள்ளையையும் இதுவரை நான் பார்த்ததில்லை. எனக்கு ஒன்று தோன்றியது. உண்மை அதன் உண்மையில் வெளிப்பட அதற்கு ஒரு சமயந்தான் உண்டு. அதோடு அதன் முத்து நீர்த்துப் போச்சு. மிச்சமெல்லாம் நீர்த்துப் போன ஜலத்தில் நம் முகத்தைப் பார்த்துக்கற சமாச்சாரந்தான்.“

புரியாத பாஷை பரம்பரை ரத்தம். வாளாடி அத்தையும் லேசுப்பட்டவள் அல்ல; அவளும் பாட்டுப் புனைவாள். சில மாதங்களுக்கு முன் லால்குடி சென்றபோது அவளுடைய பேரன் பாடிக் கேட்டேன்.

எல்லாம் சகஜமாத்தான் இருந்தது. சப்தரிஷி என்னைக் கண்ணில் கேள்விக்குறியுடன் பார்த்தது எனக்குத் தெரியாதா? அணையற சுடரப்பா!

இருந்தாப் போலிருந்து நடுப்பேச்சில் - ”இதோ பார் லசுஷ்மி! என் உயிர் போறது.” உடனே தலை தொங்கிப் போச்சு.

”இந்தா எடுத்துக்கோ.” தாம்பாளத்தில் தாம்பூலம் போல் அவளிடம் கொடுத்து விட்டான்.

”காலில் சுருக்குன்னுது. ரெண்டு மிளகு கொண்டு வாடி என்ன, தித்திக்கிற மாதிரி இருக்கே!” என்று அலட்டிக்கொண்ட மனிதரா இவர்?

உடல் உரத்திலும் தாத்தா ஒண்ணும் சோப்ளாங்கி இல்லை. ஒரு சமயம், அவரைத் துரத்திக்கொண்டு ஓடி வநத காளை மாட்டை அப்படியே அதன் கொம்புகளைப் பிடித்து நிறுத்திவிட்டார். மனிதனுக்கும் மிருகத்துக்கும் அந்தச் சிலகண நேரம் பலப் பரீட்க்ஷையில் கொம்புகளைக் கையோடு பிடுங்கிவிட்டாராம். இவர் கைகளில் கொம்புகளுடன் நிற்க, அது முகத்தில் குருத்தின் குருதி வழிந்து இன்னும் மிரண்டுபோய் ஓடி விட்டதாம். இவரைக் கோழையென்று கூற முடியுமா?

வீட்டில் கூட்டம் கூடியது. குமைந்தது. கலைந்தது. நாங்களும் சென்னை திரும்பினோம். அந்த வயதில் எனக்கு நினைவுபூர்வமாகப் பதிந்தது: செத்தவர் திரும்பி வரமாட்டார்கள். தாத்தா இனிமேல் கிடையாது. தெருவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உண்மை, வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது.

1981 ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை சுமார் நாலரை மணி.

வருடக் கணக்கில் ஒழுங்கான ராத்தூக்கம் இழந்து, கோழி கூவும் வேளையில் யாரையும் அயர்த்தும் அந்தக் கண் சொக்கலில், ”பால்!”

ஆனால் இன்று இப்போது இன்னும் பால்காரன் வரவில்லை.

‘ஈ ஜகமுலோ திக்கெவரம்மா!’ என்கிற அடியைப் பாடிக்கொண்டே அழுதபடி எனக்கு விழிப்பு வந்தது - வந்துகொண்டே இருந்தது தெரிந்தது. என் கன்னங்கள் நனைந்திருந்தன.

ஒரு நிமிஷம், இதற்கு முந்தியோ பிந்தியோ என் கனவில் வருவதற்குக் காரணமாகச் சொல்லிக்கொள்ள அந்தப் பாட்டை நான் நினைத்ததில்லை. அதுபற்றி வீட்டில் பேச்சும் இல்லை. முதலில் இதுபோன்ற கீர்த்தனைகள் பற்றிப் பேசக்கூடியவர்கள், பேசியவர்கள் மூலம் போய்ச் சேர்ந்தாச்சு. ரேடியோவிலும் அந்தப் பாட்டு சமீபத்தில் கேட்கவில்லை.

ஆனால் எனக்கு ரீதிகௌளை ரொம்பவும் பிடித்த ராகம். அதிலும் ‘ஜனனி நினுவினா’ கேட்டுக்கொண்டே இருக்கையில் பட்டென்று உயிர் போய்விடாதா என்று நான் வெகுவாக விரும்புவது உண்டு. எந்தவிதமான உன்னத அனுபவத்திற்கும் சாவைப் பற்றிய எண்ணம் சொர்க்கவாசலாக எனக்குத் தோன்றுகிறது.

”ஜனனி நினுவினா”—

வேண பேர் பாடுகிறார்கள். ஆனால் ஆலத்தூர் சகோதரர்களிடம் கேட்கையில் அதில் சக்கைப்பிரதமனின் வழவழா கொழகொழா இல்லாது, விளம்ப காலம் என்கிற சாக்கில் ஆமை மெதுவும் இலாது அதற்குரிய நடையில் சாஹித்யத் துல்லியமும் ராகத்தின் முழு ஸ்வரூபமும் பரிணமிப்பதாக பரிமளிப்பதாக எனனுடைய எணணம்.

ஆனால் ‘ஈ ஜகமுலோ திக்கெவரம்மா' அதன் கண்ணீருடன் இன்று விடிகாலை என்னின்று வெளிப்படுவதற்கு ஆலத்தூர் சகோதரர்களின் விற்பன்னம் அடிப்படையில்லை. இந்த சாஹித்யத்தின் சுந்தர வடிவுக்கு ஏற்கெனவே அடிமையாகிவிட்டவன் என்பதைத் தவிர அவர்களுடைய சங்கீதத்தில் விவகாரம் அதிகம் என்று அவர்கள் ஏற்கெனவே அடைந்திருக்கும் பிரசித்தி தவிர, அவர்களுடைய மற்ற கலை நுட்பங்களை ஆராய நான் அருகன் அல்லன். நான் சொல்லிக்கொள்வது எல்லாம் என் சொந்தப் பரவசம். இந்த உள்மேனித் தந்திமீட்டல், நெஞ்சின் நெக்குருகல், சர்க்கரை பொம்மை உள்விண்டு, நானே எனக்கு இலாது போவதுபோல் என்னுடைய உள்கரையல், இந்த இன்ப வேதனை, இந்த பயங்கரத்தை ஆயிரம் வர்ணித்தாலும் எப்படிப் பிறருடன் பங்கிட்டுக் கொள்ள முடியும்? ‘திக்கெவரம்மா!‘ தொண்டையில் பால் பொங்குகிறது. இதோ வழிந்து வழிந்து மேலே வந்துவிடும்போல் தவிக்கிறேன். துக்கம் அடைக்கிறது. உண்மையில் துக்கமா அது?

“இல்லை! இல்லை! இல்லை!”

”ஆமாம்! ஆமாம்! ஆமாம்!”

பாக்குவெட்டி என்னைக் கத்தரிக்கிறது. இரண்டு எதிர்மறுப்புக்கள் ஒன்று இழைந்து ஒரு உண்மை.

மோனக் கடலின் முழு அமைதி மேல் வானம் கவிந்த கவியில் பீறிட்ட முதல் வீறலினின்று சொரிந்து கொண்டே இருக்கும் பல கோடி, கோடானு கோடி உயிர்ச்சுக்கல்கள் நாம்.

In the beginning there was God, the holy Ghost and the word.

ஆதிபகவனின் ஆனந்தக் கூத்தில் டமருகத்தினின்று ‘டம டம டமரு’ வெளிப்பட்டது முதல் ஒலி.

கால் கட்டைவிரல் நுனியை அழுத்தி அவன் ஆடும் பேய்க்கூத்து கடையும் புயலில் கடல் பொங்கிக் காற்று அலைந்து புயல் பொங்கி, சராசரங்கள் குலைந்து நகர்ந்த அசைவுகளின் ஓசையின் அணுத்திரள் ஒலி. மோகனக் கடல் பொங்குகிறது. ரீம். ரீம் - க்ரீம் க்ரீம் - க்ரோம் க்ராம் - ஓம், ஓம், ம் ம் ம் ம அம்மா. பிரணவம் முதலா? பிராணன் முதலா?

ஓம் முதலா? அம்மா முதலா? பிரணவத்தின் அக்ஷரங்கள் ’அம்மா’ எனும் ஆதி வீறலுள் அடங்கி இருக்கின்றன. கிரஹங்களை அதன் அதன் இடம் தடுமாறாமல் இழுத்துப் பிடிக்கும் விசையின் இசை the music of the spheres - கம்பீர நாட்டை, புவன காணமே ’அம்மா!’

ஞானம், அஞ்ஞானம், பிரஞ்ஞானம், விஞ்ஞானம், அலசல், உளைசல், கடைசல், நான் யார்! யார் நீ? நான் போ. நீ வா. யாம் அறிந்த மொழிகளில் ’அம்மா’ தான் முன்மொழி, என் மொழி, எவர் மொழியும். மற்றவையெல்லாம் ’அம்மா’வின் எதிரொலி. அவள் அகண்ட வயிறுள் அடங்கிப்போன அஞ்ஞானங்கள் தான். ஆம், பிறந்த நாள் முதலாய் என்னென்னவோ கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் என்னத்தைக் கண்டுவிட்டோம்? ’அட அசடே!’ அவள் உதட்டோரப் புன்னகைக் குமிழ் அடையக்கூட நாம் கண்டவையெல்லாம் காணாது.

ஆம், இதற்கெல்லாம் இங்கே என்ன இடம்? பின்னால் என்னையே கேட்டுக் கொள்கிறேன். ஆனால் என்னை இப்படியெல்லாம் சொல்லச் சொல்கிறதே. சம்பந்தம், தொடர்பு, எங்களுடையது எங்களுக்குத் தெரியும் என்று ஒரு குரல் அதட்டுகிறதே.

”எங்களைச் சொல், எங்களுக்குச் சொல்.”

ஒலியின் உருவே எழுத்தாகும்.

“எங்களை எழுது. எங்களுக்கு உருவம் கொடு. உயிரின் ஸ்வயாகாரம் தன் பிரக்ஞையில் முதலாக உணர்ந்த தனிமைக்கு, ‘குவா’வுக்கு உருவம் தா!”

எல்லா உருவத்துக்கும் பின்னால் பொதுவான ஒரு அரூபம் அது. நாதமோ உயிரோ எப்படியும் சதைக்குத் தவித்துக் கொண்டேயிருக்கிறது. அந்தத் தவிப்பே அதன் இயக்கம். அதன் அர்த்தமே அதன் தேடல்.

”இதையெல்லாம் எழுது எழுது”

கட்டளைகள் இவ்வளவு ஸ்பஷ்டம் இல்லை. ஆனால் ஏதோ ஒரு கட்டாயம் என் நெஞ்சில் சரசரவென வேர்விட்டு இலைவிட்டுத் துளிர் விட்டு வளர்வதை உணர்ந்தேன். இன்னும் சற்று நேரமோ காலமோ சென்றால் விருக்ஷம் என்னைப் பிளந்துவிடும்.

சரசரவென எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு என் காப்பியை நானே போட்டுக் குடித்து விட்டு - வருடக்கணக்கில் பழக்கம் - வழக்கமான என் இடத்தில் Pad, பேனா ஸ்கிதம் அமர்ந்துவிட்டேன். ஆம், என்னத்தை எழுத? அன்று சேக்கிழார்க்கு ஆண்டவனே அடியெடுத்துக் கொடுத்தான். எனக்கு யார் கொடுப் பார்? அந்த நினைப்பே துக்கம் அடைத்தது. ஆனால் உடனே ஞாபகம் வந்துவிட்டது. ஏன் அடியெடுத்துக் கொடுக்கவில்லை?” ‘திக்கெவரம்மா!’ அதுவே எடுத்துக் கொடுத்த அடிதானே.

அந்த அடியிலேயே, கச்சேரி Setting-இல் கதை ஆரம்பமாயிற்று. வேகமாய்த் தன்னை எழுதிக்கொண்டு போயிற்று, எழுத எழுத, என்னை உந்திக்கொண்டு போகும் சக்தியின் உறிஞ்சலில் என் உடல் பலம் வடிவதை உணர்ந்தேன். ஆம், நிஸ்திராணியாகத் தலையணை மேல் சாய்ந்துவிட்டேன். என்றுமே இடுப்பொடிந்த மாடு. சாய்வு நாற்காலியோ சுருட்டி வைத்த படுக்கையோ இல்லாமல் பத்து நிமிடங்களுக்கு மேல் என்னால் உட்கார்ந்திருக்க முடியாது.

என் உடல் பிழிந்தெடுத்த மாதிரி ஆகிவிட்டது. கைவிரல்கள் தம் பிடி வன்மையை இழந்து துவண்டன. Stroke? பயம் வந்துவிட்டது. என் சோர்வை யார் அறிவார்? அதே சமயத்தில் உள்ளூர ஏதோ உவகை.

“சமையல் ஆயிடுத்து, குளிச்சிட்டு சாப்பிட வரவாள் வரலாம். எனக்கு ஆயிரம் ஜோலி கிடக்கு!” சமையலறையிலிருந்து அறைகூவல் வந்துவிட்டது. இன்று குளியலுக்கு முழுக்குப் போட்டுவிடுவோமா? ஆனால் மனம் வரவில்லை. அதுவும் இன்றைக்கா? ஒருவாறு சுதாரித்துக்கொண்டு எழுந்து கிணற்றடிக்குச் சென்றேன். சேகர் குளித்துக் கொண்டிருந்தான். மொண்டு விட்டுக் கொள்ள வேண்டும். நினைத்துப் பார்த்தாலே களை போடுகிறது.

”சேகர்!”—

சேகர் என்னை நிமிர்ந்து பார்த்தான்.

”என்னப்பா என்னவோ மாதிரியிருக்கேள்?”

”என்ன மாதிரி?”

”முகம் சிவந்து - இல்லை, சொல்லத் தெரியவில்லை. முகம் மாறி – Expression-”

”சேகர் ! என்னைக் குளிப்பாட்டி விடறியா?” அவமானம் விழியோரம் உறுத்திற்று. ஆனால் என் செய்வது?

சேகர் பதிலே பேசவில்லை. இழுத்து இழுத்துத் தலையில் கொட்டினான்.

ஒருவாறு சாப்பாடு முடிந்து கூடத்தில் சாய்ந்தேன். மிகுந்த ஆயாசம் நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டேன். பந்தய மைதானத்தில் குதிரை மிரண்டு Gallop-இல் போய்க்கொண்டிருந்தது. ஜாக்கியைக் கீழே தள்ளிவிடப் போகிறதா ? எனக்கு வேளை வந்து விட்டதா? பயம்? இல்லை சந்தோஷம்? தெரியவில்லை. மூச்சுத் திணறல் மார் வலி? இல்லை. ஆனால் மொத்தத்தில் உள்ளே தாங்க முடியாத பரபரப்பு. சேகர் புறப்பட்டுக் கொண்டிருக்கிறான். TVஇல் ஏதோ தெலுங்குப் படம்.

“சேகர்! ஒருநிமிஷம் தங்கிவிட்டுப் போ. எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் உன்னை ஆயிரம் கேள்வி கேட்பார்கள்.”

சேகர் புன்னகையில் ஏளனம் சிந்திற்று. ”அப்பா எங்களைச் சொல்கிறார். இப்போது அவர் நடத்துவது சினிமாவா? ட்ராமாவா?” என்கிற மாதிரி.

“சேகர் உள்ளே இரண்டு பக்கம் எழுதி வைத்திருக்கிறேன். எதிரில் உட்கார்ந்தபடி, எனக்கே தெரியணும்.”

ஆனால் சேகர் வாய்விட்டுப் படிக்கவில்லை. தனக்கே படித்துக்கொண்டிருந்தான். அந்த இரண்டு பக்கங்களைப் படிக்க அவனுக்கு ஏறக்குறைய ஒரு மணி நேரம் பிடித்தது. அவன் தலை நிமிர்ந்தபொழுது அவன் முகமும் மாறி இருந்தது.

“உங்கள் பாஷைதான். உங்கள் பாணிதான். ஆனால் கூடவே ஏதோ ஒண்ணு. இடங்கள் புரியவில்லை. ஆனால் புரியாமலும் இல்லை. அதையும் மீறி ஏதோ ஒண்ணு. ரொம்ப Deep ஒரு பவர் - yes, Deep Power, This is Power.”

அப்படி அன்று ஆரம்பித்த கதை முன் ஏற எற, எனக்கும் பலமும் உற்சாகமும் ஊற ஊற, பாராசாரிக் குதிரையும் படியப் படிய, அனுபவம் ஒரு தனிக் குஷியாகத்தான் இருந்தது. விஷயமும் நானும் ஒரு சமயம் ஒருவருக்கொருவர் தோகை விரித்து ஆடினோம்.

The hunter and the hunted. Who is the hunter? Who is the the huneted is not the point.

The hunt is all that matters. Oh! this stalking so thrilling so beautiful!

Fair Copy செய்து - எப்பவும் என் எழுத்துச் சம்பந்தப்பட்டவரை எல்லாமே இதுவரை என் கையினால்தான் - இனி உடல் ஒடுக்கம் என்ன ஆகுமோ? Dictation தட்டெழுத்து என்று எழுத்தாளர்கள் இப்பொழுது கையாளுகிறார்கள். தென்காசியில் ஓரிரு கதைகளை நான் சொல்லக் கண்ணன் எழுதினான். ஆனால் சரிப்பட்டு வரவில்லை. எனக்கு வெட்கமாயிருந்தது - நான் நிர்வாணமாக்கப் பட்டாற் போல்.

Fair Copy செய்து 5-8-1981 அன்று, Register தபாலில் பிரபலமான பெரிய சர்க்குலேஷன் பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பினேன். இங்கு கதையின் லௌகீகப் பகுதி ஆரம்பமாகிறது. காற்றாடி காற்றிழந்து தரை தட்டினாற்போல எனக்குப் பொதுவாகவே பிடிக்காத பகுதி. ஆனால் சொல்லாமல் முடியவில்லை.

அந்தப் பத்திரிகையின் ஆதரவும் பிரசுரமும் ஏற்கெனவே பன்முறை பெற்றிருக்கிறேன். அது வழங்கும் கூடுதலான சன்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும். இம்முறை இக்கதை அந்தப் பத்திரிகையின் மூலம் அதிகப்படியான வாசகர்களிடம் சேராதா என்கிற சபலம்தான். ஸ்தாபனம் பெரிசு. ஓரிரு சமயம் நான் அங்கு போக நேர்ந்தபோது, ரொம்பவும் அனுசரணையாகப் பேசுவார்கள். அந்த மரியாதை, வியாபார ரீதியானாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஆச்சு, ஒரு மாதம், இரண்டு மாதம், டெலிபோனில் நினைவுபடுத்தினேன். ’தலைவரிடம் போயிருக்கிறது’ என்ற பதில். அதுவும் சரிதான். அப்படியானால் கதை ஒரு கட்டம் தாண்டி இன்னொரு கட்டத்துள் புகுந்திருக்கிறது என்று அர்த்தம்.

மறுபடியும் இரண்டு மாதங்கள் கடந்தன. எனக்கு அலுப்பும் ரோசமும் வந்துவிட்டன. 22-12-81 அன்று ஸ்தாபனத்தின் தலைவருக்கு முழு விவரங்களைத் தெரிவித்துக் கதையைத் திருப்பி அனுப்பிவிடும்படி எழுதினேன். அடுத்து அவசர காரியமாக மதுரைக்குப் போய்விட்டேன்.

1982 மார்ச் மாத முதல் வார வாக்கில் கதை திருப்பி வந்ததாக வீட்டிலிருந்து தகவலும், கதையும் தபாலில் எனக்கு வந்து சேர்ந்தன. நானும் மூச்சு விட்டேன். சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பத்திரிகைகளாகட்டும், பதிப்பாளர்களாகட்டும் அவர்களை அதட்டியோ மிரட்டியோ அவர்களுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடிகிறது. அதுவே ஒரு உத்தி, மிரட்ட மிரட்ட அவர்கள் Box Office உயர்கிறது. நான் அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? எழுத்தாளர்கள் என்றும் பத்திரிகைகளை, அதுவும் ஸ்தாபனங்களைப் பகைத்துக்கொள்ள முடியாது கூடாது. இந்தக் கதையின் விதியை 'அமுதசுரபி'யுடன் முடித்திருக்கிறது என்று நான் எப்படி அப்போது கண்டேன்?

கதையைக் கையெழுத்துப் பிரதியில் கண்ணன் இப்போதுதான் படிக்க நேர்ந்தது.

கண்ணன் என்னுடைய அம்பிகாபதி. மதுரை Seminar-இல் மேடைக்கு அவனை வரவழைத்துச் சபையோருக்கு அப்படித்தான் பரிச்சயம் செய்வித்தேன். முடியைப் பின்னுக்கு வாரி விபூதிப்பட்டைகள் மூன்றும் தனித்தனியாக, சக்தியிடம் வேல் வாங்கின குமரன் போல் இருந்தான்.

இந்தக் கதையைப் பற்றிக் கண்ணன் சொன்னதைக் கேளுங்கள்:

"ஏற்கெனவே உங்களிடம் காணும் குணம் குறைகளுக்கு இந்தக் கதை விலக்கு அல்ல. ஆனால் - இந்த ஆனாலில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது. படித்துக்கொண்டு வருகையிலேயே உடனுக்குடன் வார்த்தைகள் அவைகள் காட்டும் செயலாக மாறி விடுகின்றன. மழையை வர்ணிக்கிறீர்கள். தலை மேலேயே கொட்டுவதைப் போலப் பிரமை தட்டுகிறது. ‘கௌரி விளக்கேற்றுகிறாள்’ என்றால் குத்துவிளக்கின் மேல் அவள் குனிகையில் புடவையின் சலசலப்பு உட் செவிக்குக் கேட்கிறது. கச்சேரியில் இருவர் குரலும் இதோ ஓங்கி ஜோடி சேர்ந்து, பக்ஷி வட்டமிடுகிறது. மின்சாரம் தோற்ற இருளில் குத்துவிளக்குகளின் வெளிச்சத்துக்கு நடுவே படத்தினின்று அதோ ராஜராஜேஸ்வரி புன்னகை ஜவலிக்கிறது.

நீங்கள் பல வருடங்களுக்கு முன் சொல்லைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ”நெருப்பு என்றால் வாய் வெந்து விட வேண்டும்!” இந்தக் கதையில் அதுபோலச் சொல்லுக்கும் செயலுக்கும் இடைக்கோடு அவிழ்ந்திருக்கிறது.

ஆச்சு, கதையம்சத்தைக் காட்டிக் கொடுக்காமல் இந்தக் கதையின் கதையைச் சொல்லிவிட்டேன். கொஞ்சம் அதிகமாகவே சொல்லிவிட்டேன். இனி வாசகன் பாடு.

கடைசியாக ஒரு வேண்டுகோள். என்னுடைய வேளை வரும்பொழுது இந்தப் பாட்டு என் செவியில் ஒலித்துக்கொண்டே அனாயஸ் மரணத்தில் என் உயிர் பிரிய வேண்டும் என்று என் சார்பில் அவளை வேண்டிக்கொள்ளுங்கள். உண்மையாகத்தான். நான் கேட்கும் வரமும் சாமானியமா? ஆனானப்பட்ட மகான்களே கிடந்துதான் சடலம் கழற்றும்படி இருந் திருக்கையில் என் ஆசையை அவள் அகந்தையாகவே கருதக்கூடும். ஆனால் அதைக் கொடுத்தவளும் அவளே. ஈ ஜகமுலோ நினுவினா திக்கெவரம்மா!

அண்ணாவுக்கு உடல் சரியாகவே தேறவில்லை. என்னதான் வைத்தியம் செய்துகொண்டாலும், பட்டணத்துப் புழுதியினின்று அவர் தப்பினாலே ஒழிய அவருக்கு விமோசனம் இல்லை. டாக்டர் தீர்ப்பு அளித்துவிட்டார். ஆகவே குடும்பம் ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டியதாயிற்று.

என்ன என்று எங்களுக்கு (அதாவது குழந்தைகளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. காஞ்சிபுரத்துக்கருகே ஐந்து மைல் தூரத்தில் ஐயன்பேட்டை என்ற கிராமத்தில் (தஞ்சாவூர் அய்யன்பேட்டையுடன் குழம்பிக் கொள்ள வேண்டாம்) அண்ணாவுக்கு ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் வாத்தியார் வேலை கிடைத்தது.

எங்கள் குடும்பம் - அண்ணா, அம்மா, சிவப்பிரகாசம், பானு, விரலான் - எங்கள் குடும்பம் மட்டில் கிராமத்துக்குப் பெயர்ந்தது.

இத்துடன் என் வாழ்க்கையின் முதல் ஸர்க்கம் முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-20&oldid=1534647" இலிருந்து மீள்விக்கப்பட்டது