பாற்கடல்/அத்தியாயம்-8




8

ந்த வரலாற்றின் எழுத்து வாகில் ஒரு பாத்திரம் நுழைந்தது. அதைப்பற்றிச் சொல்கையில் வெளிப்படும் விசேஷ நற்குணங்களில் எனக்குத் தனிச் சந்தோஷமே உண்டு. ஆனால் தோற்றத்தை விவரிக்கையில், ’இடுப்பு குழம்புக் கற்சட்டிபோல்’ என்கிற உவமை தோன்றியதும் -

உவமையின் பொருத்தம் பற்றி எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால், மனம் ஏனோ இச்சமயம் தயக்கமுற்றது. அந்த ஆசாமி இதைப் படிக்க நேர்ந்து, தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்போதும் - கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது - அந்த மனம் என்ன புண்படும்! அதுதான் என் நோக்கமா? கலையின் லட்சியங்கள்தாம் என்ன ? இந்தப் பாத்திரம் இந்த இடத்தில் அவசியந்தானா? எப்படியேனும் சாதக விசேஷத்தால், பாத்திரத்தை இங்கு இணைத்துவிடலாம். ஆனால் எம்மட்டில் அது கலையாகும்? ஓர் உண்மையான கலா சிருஷ்டியில், அதை உற்பவிப்பவனுக்கே எந்தமட்டில் சொந்தம் உண்டு? கலையென்பதுதான் என்ன?

இக்கேள்விகளை (கேள்விகள் இதோடு முடிந்துவிடவில்லை. ஒரு கோடிதான் காட்டியிருக்கிறேன்) ஒட்டித் தொடர்ந்த சிந்தனைகளை இங்கு பரிமாற விரும்புகிறேன்.

"ஆச்சு, கதையை விட்டுவிட்டு வகுப்பு நடத்த ஆரம்பிச்சாச்சா?” என்கிற அலுப்பு முறை அல்ல.

எந்தக் கலைக்கும் கச்சா சரக்கு, வாழ்க்கையும் மக்களுந்தான் - காசுக்குத் தலையும் பூவும் போல, எழுத்தின் (கதை, கட்டுரை, வரலாறு, கவிதை, கடிதம், வெள்ளைக் காகிதத்தைக் கறுப்புக் காகிதமாக்கும் இத்யாதிகள் அனைத்தையும் அணைத்ததைத்தான் எழுத்து எனக் குறிப்பிடுகிறேன். நான் பயிலும் கலை சம்பந்தமாக, இந்த விளக்கம் இனிமேலும் பொருந்தும் என வேண்டிக்கொள்கிறேன். எழுத்தின் இன்றியமையாத, இரு பக்கங்கள் எழுத்தாளனும், வாசகனும்.

"நீ இல்லாமல் நானில்லை.
நானில்லாமல் நீயில்லை.
டடடா டடடா
டட்டா டட்டா—

கூடத்தில் திடீரென ரேடியோவின் ஒலி பயங்கரத்துக்குப் பெருகுகிறது.

“எனக்காகவே எழுதிக்கொள்கிறேன்!" வாஸ்தவம், எழுதுகிறவரை இது சரி எழுதியதைப் பிறருக்குக் காட்டாமல், நானே படித்துக் கொண்டாலும், அந்த சமயத்துக்கு நான் வாசகன்தானே! இந்தத் தர்க்க நுணுக்கங்கள் எதற்கு? வாசகன் என்கையில், படிப்பவன் - படிக்கத் தெரிந்தவன் மட்டும் குறிப்பாக இல்லை. படிக்கக் கேட்டுத் தெரிந்து கொண்டாலும் யாரோ எழுதியதை, யாரோ படித்து, அதை அவரிடமிருந்து, யாரோ சொல்லிக் கேட்டுத் தெரிந்துகொண்டாலும் நேரும் பலன்கள் வேறுபடினும் எழுத்தின்மூலம் பரவிய விஷயஞானம் கொள்கையில் ஒன்றுதான். வெளிப்படுத்துவோனிடமிருந்து வாங்கிக் கொள்பவன் எனும் இந்த உடந்தை நிலை மாறவே முடியாது. சமைப்பது, சாப்பிடுவதற்குத்தான். எழுத்தும் முக்கியமான ஊட்ட வகைகளைச் சேர்ந்ததுதான்.

ஆகவே புரிந்தாலும் புரியாவிட்டாலும், பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் படித்ததனாலாய பாதிப்பு கண்டபின், வாசகனின் பொறுப்பு, எழுதினவனுக்குக் குறைந்ததல்ல என்பது என் கருத்து.

இந்த அடிப்படையில் நான் சொல்ல வருவது இதோ:

தினப்படியே உவமைகளும் குறியீடான உணர்த்தல்களும் என்னமாக வாழ்க்கையை ஆள்கின்றன ! வசையுடனேயே ஆரம்பிக்கிறேன்.

“டேய் பொறுக்கி!” “என்னத்தை” என்று கேட்கிறோமா?

"டேய் குரங்கே " (நாம் குரங்கிலிருந்து வழி வந்திருக்கலாம். ஆனால் இப்போது குரங்காக இல்லை. குரங்கைப் போல என்றுதான் அர்த்தம்)

"நான் பொறுக்கி, இவர் மேருவாக்கும்!” (ஸ்வாகதம். ஆனால் உவமையை கவனிக்க)

"என் கண்ணே! கற்பகமே! ராஜாத்தி!” இது ஒரு குடிசையில், தன் பிள்ளைக் குழந்தையைக் கொஞ்சும் ஒரு தாய். 'அத்தனையும் பொய்' என்று எதிர்க்குரல் எழுப்ப யாருக்கேனும் தைரியம் இருக்கிறதா ? அத்தனையும் அன்பு சுரந்த கவிதை.

”அவரை போட்டால் துவரை முளைக்குமா ?”

”டிபன் நேரத்துக்குத் தவறாமல் எப்படியோ வந்து விடுகிறான். எப்படித்தான் மூக்கில் வேர்க்கிறதோ?” "தாய் பத்தடி பாஞ்சால், குட்டி பதினாறடி துப்பாக்கி வயிற்றில் பீரங்கி!”

”எமனும் எங்கானும் பிறந்துதானே ஆகணும்?” கேள்வி என்னவோ சிறிசு ஆகத் தோன்றுகிறது. ஆனால் அதன் இடையே என்னென்னவோ ‘‘வே’’று கேள்விகள் கண்ணாமூச்சி விளையாடுகின்றன.

"நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தாற்போல."

"அந்த அம்மாள் அவங்க கையாலே மண்ணைக் கிள்ளிக் கொடுத்தாலும் போதும், மருந்தாக மாறிடும். மருந்தில்லாட்டி பொன். குங்குமத்தை இழந்துட்டாலும் அழிஞ்ச களையே இல்லை, குளிச்சிட்டு வந்த களைதான்.”

”குரலில் எப்படி கிளி கொஞ்சுது பாத்தியா?”

இன்னும் சொல்லிக்கொண்டே போவேன். ஆனால் ஒரே சமயத்தில், அந்த அந்தச் சந்தர்ப்பங்களிலிருந்து பிரித்துத் தனிப்படச் சுவைக்கையில் திகட்டினால்?.

ஆனால் அறிந்தும், அறியாமலும், மானாவாரியாக பவழமல்லி, வேப்பம்பூ, பூவரசு உதிர்ந்து தரைக்கு ஜமக்காளமிடுவது போன்று, சொற்கள், பதங்கள், ஓசைகள் ('வே') தெள்ளுமணிகள் தம் வாயிலாகவும் வாக்காகவும், தம் மாண்பில் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. மலர்களின் நளினங்கூட அறியாமல், அவற்றை மிதித்து, அவற்றின் விரிப்பின் மேலேயே நடந்து செல்கிறோம்.

இவற்றில், வட்டாரத் தனிக் கமழ்ச்சி வேறே.

இவை, உடனேயோ, பின்னரோ மறதியில் புதைந்தோ அல்லது வெவ்வேறு சந்தர்ப்பங்களில், நாக்குக்கு நாக்கு வழிவழியாகச் சுழன்று, வெவ்வேறு மணங்களும் நிழல்களும் கூடி, மிச்ச நேரத்துக்கு, Ether இல் நீந்திக்கொண்டேயிருக்கின்றன. வெளிப்பட்டவைக்கு அழிவேயில்லை. காத்துக்கொண்டிருக்கின்றன.

எதற்கு?

பின்னர் ஒருநாள்—

கடலோரம் கிளிஞ்சல்
நதியோரம் கூழாங்கல்
வயலோரம் நத்தை முத்து
பாதை வழியில் குந்துமணி

குழந்தைகள், புதுக்கண் விழிப்பில் கண்டெடுப்பது போல்.

கவியென்றும், கதகன் என்றும், காயகன் என்றும், நாடோடியென்றும்,

கண்ணப்பன் முன் சுவைத்து என்னப்பனுக்கு முன் ஊட்டிய நிவேதனமென,

இப்பதங்களை, சொற்களை, ஓசைகளைத் தன்தன் ஈடுபாட்டுக்கேற்பத் தேர்ந்தெடுத்து ஆரம் தொடுத்து நம் முன் வைக்கையில்,

அதை நாம் அடையாளம் கண்டுகொள்கையில், ”ஆ! ஈதென்ன? இப்படித்தான் என் நெஞ்சில் இருந்ததை நான் சொல்லவல்லாமல், இவன் எப்படி என் நெஞ்சில் இருந்ததை என் நெஞ்சிலிருந்து பிடுங்கச் சொல்லி விட்டான்?” என்று வியக்கையில், கூச்சமுணர்கையில், அச்சுறுகையில், தேறுதல் கொள்கையில், உள்ளுணர்வு ஆசி கூறுகையில் அந்த எழுத்து, (எழுத்து என்பது வெளியீட்டின் ஒரு வகைதானே?) எழுதியோன், வாசகன் மூவரும் அந்தச் சமயத்தின் ஆசியைப் பெறுகின்றனர்.

ஆசியேதான் தரிசனம், ஆசியில்லாமல் தரிசனமில்லை. தரிசனம் என்பது என்ன?

என் நரம்பின் விதிர்விதிப்பில் ஏற்கெனவே அதனுள் புதைந்து கிடந்து, அவ்வப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வாழ்வின் இசை, இதன் விளைவாய் என் மகிழ்ச்சியின் மறு பெயர் அஞ்சலி. அவள் பாதகமலங்களில் போய்ச் சேரும் நேரம், நேமம் முன் அறிய எனக்குச் சக்தி ஏது? இந்த அவள் யார்? நட்ட கல்லெல்லாம் சிவமாய நம்நாட்டுப் பண்பில் அவரவர் தன் உபாஸனையில் சிறுதுளி பெருவெள்ளமாய், சக்தி என்றும், விஞ்ஞான பாஷையில் ether என்றும், எனக்குக் குலதெய்வம் பெருந்திரு என்றும், அவரவரின் நடமாடும் தெய்வம் தாய் என்றும், பொதுவாக உயிரின் கவிதா தேவி என்கட்டுமா?

ஆனால் இந்த உள்பூரிப்புகள் ஒன்று குழைந்து தொடர்ந்த ஒரே நிலையாகிவிடில், இந்த உடல், அதன் பல குறைகளில், தாங்க முடியாது; ககனத்தில் பறந்துகொண்டேயிருக்க முடியாது. அவ்வப்போது இறங்கி பாதத்தடியில் அதன் தைரியத்தை உணரத்தான் இந்த பூமி. மாற்றியே சொல்கிறேன். இந்த பூமி இருப்பதால்தான் கவிதையென்றும், தரிசனமென்றும், பாஷையென்றும் அவ்வப்போது சிறகு விரிக்க முடிகின்றது.

ராஜாளியின் தனிமையில்
புறாவின் கூட்டத்தில்
ஹனுமானின் தாண்டலில்

இந்தச் சிறகுப் பரவசம், அவரவர் அடைந்திருக்கும் பக்குவத்துக்கேற்ப நேர்கின்றது.

உடலுக்கும், ஆத்மாவிற்கும் இடைப்பாலம், சமாதானம், உறவின் நேர்த்திதான், பாஷையும் அதன் பல நயங்களும். இந்த உவமைகள், சொல் 'சுறீல்'கள், துள்ளு மீன்போல் மனம் தாவித் தாவிக் கண்டுவிட்ட வேறு தடத்து ருசி.

அவ்வப்போது புத்துயிர் கொண்டும் வேறு பிரதேச பாஷைகளின் கலப்பினாலும், சொந்த பாஷை செறிவும் உரமும் பெறுகின்றது. சொந்த பாஷையின் சுயத்தனமும் சேர்ந்து பெருங்கிளையில், புதுத்தண்டு முளைத்தாற் போல் செடியில் புது மொட்டுக் கட்டினாற்போல், சுய பாஷை ஒன்று உருவாகின்றது.

அத்தனையும் ஒரே செடியில் பூத்த மலர்கள். ஆனால் மலருக்கு மலர் அதனதன் விதி தனித்தனி.

கொண்டையில் ஏறுபவை சில, பூமியில் உதிர்பவை பல.

அவள் பாதகமலங்களுக்கு அர்ச்சனையில் தூவப் பெறுபவை எத்தனை?

இலை மறைவில் இதழ்கள் சிவந்து, காண்பார் அனுபவிப்பாரற்று,

தனக்கும் பயனற்று, தான் கழலும் மலர்ச்சிகள் எத்தனை எத்தனை?

பாஷையின் உச்சகட்டங்களில் உருவாகி, நாட்டின் பண்பை வெளிப்படுத்துபவை அதன் பழமொழிகள். ஏடு, எழுத்தின் வரம்பைக்கூடத் தாண்டி, வாய்மொழியாகவே வழிவழியாக இறங்கும் தலைமுறையின் ஊட்டம்.

கடலினும் பெரிய உண்மைகளும், மதிப்பீடுகளும், போதனைகளும் பழமொழிகளில் தெளிந்த தைரியங்களிலும் உவமைகளில் இழுத்துப் பிடித்த சொற்கட்டுகளிலும்தான் அடைத்து வைத்திருக்கின்றன.

'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல்' - இந்த உவமையை வரப்ரஸாதம் உள்ளவன்தான் வழங்க முடியும்.

"தீயினாற் சுட்டபுண் உள் ஆறும்
ஆறாதே நாவினாற் சுட்டவடு”

இதன் அனாயாஸத்தையும்

'ஆறாதே'இன் கடை எழுத்தின் ஏகாரத்தில் ஏற்றியிருக்கும் பயங்கரத்தையும்

வடுவின் உள்சிறலையும், மன்னிப்பற்ற கோபத்தையும் ஓயாத புழுக்கத்தையும், நினைத்துப் பார்க்க உள்ளவர்க்கு இப்பவும் காலடியில் பூமி கிடுகிடுக்கும்.

சொன்னவன் சொல்லிவிட்டு, அவன் மேல் மண்ணும் எண்ணற்ற முறை புரண்டு போயாச்சு. ஆனால் அவனுடைய சொற்கோபம், சொல் சாந்தம். அவன் காட்டிய உவமைகளில், அல்லது உவமைகளால், இன்னும் எள்ளளவும் குன்றாமல், புழக்கத்திலும் மிச்ச நேரத்துக்கு அண்டகோசத்திலும் நீந்திக்கொண்டிருக்கின்றன.

உவமைகளில்தான் பாஷையின் ராஸ லீலை.

பண்பு என்கிற சொல் அடிக்கடி இங்கு நேர்ந்து கொண்டிருக்கிறது. பண்பு என்றால் என்ன?

எண்ணம், வாக்கு, செயல் மூன்றிலும் பரம்பரையாக சாதகபூர்வமாக ஏறும் மெருகுதான் திரும்பத் திரும்ப எண்ணினதையே விதம்விதமாக எண்ணி, சொன்னதையே விதம்விதமாகச் சொல்லி, செய்ததையே விதம்விதமாகச் செய்து, மூன்றிலும் விதம் விதமாகக் கூட்டிக் கடைந்து - "அம்மா, என்னடி பண்ணறாள்? மணம் கூடத்தைத் தூக்கறதே!”

”கூடமா ? எனக்குத் தெருத்திருப்பத்திலேயே வந்தாச்சு. அதான் ஓடிவருகிறேன்! என்னடி செய்யறா?”

கவிதாதேவி அவளுடைய மர்மப்புன்னகை புரிகின்றாள். அந்த மணம்தான் பண்பு. அதன் அடிப்படை உச்சரணை திரும்பத் திரும்ப.

இந்தச் சமயத்தில் ஒன்றைத் தெளிவாக்க விரும்புகிறேன். எதுவும் புதிதாக நாமும் சிருஷ்டித்துவிடவில்லை. எல்லாம் ஏற்கெனவே இருந்ததுதான்.

Let there be light; and there was light.

இருளின் கர்ப்பத்திலிருந்து புறப்பட்டதுதான் ஒளி. ஏற்கெனவே இருந்ததுதான். வேளையின் ரஸாயனத்தில் நம் உள்ளொளி, தன்னை வெளிப்படுத்திக் கொள்கையில் அதையேதான் தரிசனம் என்கிறோம்.

நினைவின் மறுகூட்டலில்தான் நெஞ்சின் மீட்டல் விளைகின்றது. மறுகூட்டலைச் சுண்டிவிடத்தான் கலைஞனிடம் கலையின் ஒப்படைப்பு எதுவுமே யாருக்கும் சொந்தமல்ல. எல்லாம் வாழ்க்கையின் நதியோட்டத்தில் கடலில் கலக்க வேண்டியவைதாம்.

ஆகையால், ராமன், கிருஷ்ணன், இயேசுவிடமிருந்து ஜே. கிருஷ்ணமூர்த்தியையும் இப்போதைக்கு) தாண்டி, நானும் நீயும் வரை, தற்செயல்கள் அல்ல. அத்தனையும், அனைவரும், பாற்கடலின் கடையலில் கிடைத்துக் கொண்டே இருப்பவை. பின்னால் திரண்டுவரும் அமுதத்தின் தாரைகள், திவலைகள் நாம். ஏற்கெனவே நாம் அமரபானம் செய்தவர்கள்தாம். இந்த பாக்கியத்தை, இந்த ஆனந்த கீதத்தைத்தான் எழுத்தாளன் பாடுகிறான். ஜீவ பரம்பரையின் மாண்பைப் பாடுகிறான். பாற்கடல் பாடுகிறது. கடைபவர் பாடுகிறார்கள்; கயிறாய்த் திகழும் பாம்பும் விஷத்தைக் கக்கிப் பாடுகிறது.

”ஏலே வாலி! ஐலஸா !”

லின் யூ டாங், Wisdom of India and China என்கிற புத்தகத்தில் நம் வேதங்களைப் பற்றி எழுதும்போது சொல்கிறார்: And God Created himself –

இந்த வாக்கு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆரம்பம் முடிவு எல்லாமே இதில் அடங்கிவிட்டதாகத் தோன்றுகிறது. பிறவிக்கு ஒரு நோக்கம், நிமித்தம் உண்டு என்பதை இதைவிட எப்படிச் சொல்ல முடியும்?

இந்த ஏற்பாட்டில், எழுத்து என்பது என் பிறவியின் நிமித்தமாக இருக்குமெனில் எனக்கு மேற்கூறியபடி தோன்றிய பாற்கடலின் கடையலில் நினைவுக்கும் முந்திய காலத்திலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் அமரகீதத்தில், நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து என் கடைசி மூச்சுவரை என் நிமித்தமாக என்னின்று வெளிப்பட்ட அத்தனை எழுத்துக்களில் ஒரு அக்ஷரம் சேர்ந்துவிடின் மற்றவை அத்தனையும் நீர்த்துப் போகட்டும். என் வாழ்க்கை பயனடைந்துவிட்டது என்கிற உவகையில் என் மரிப்பு எனக்குக் கிட்டுமா? பிராணனின் மூச்சோடு சேர்ந்துவிடும் அநாமதேயப் பதவிதான் மகத்தான பதவி. லா.ச.ரா. எனும் மூன்றெழுத்துமல்ல; என் முழுப் பெயருமல்ல. அடையாளத்துக்குப் பெயரில் ஆரம்பித்துப் பெயரோடு நானும் பாற்கடலில் கரைந்துவிடல் வேண்டும்.

இதை எழுதிக்கொண்டே இருக்கையில், கடலோடு நதிக்குக் கோபமேன்? என்று ரேடியோவிலிருந்து பாடல் புறப்படுகிறது. ஆம்; அத்தனையும் கடலில் கலக்க வேண்டுமென்றிருக்கையில், கோபத்தால் பயன் என்ன? ஆகவே நம் வீர சைவம் உணவு மட்டில் இருக்கட்டும்; பிறமொழிகள் மேல் காட்ட வேண்டாம். பாஷையும் பண்பும் அவ்வப்போது தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்வதற்கு மற்ற இலக்கியங்களின் உரம் காரணமாகும், தேவை. எல்லா பாஷைகளையும் படிக்க நமக்கு வழியில்லை. அத்தனையையும் மொழிபெயர்ப்பில் ஆங்கிலம் நம் வாசற்படியில் கொணர்ந்து தருகிறது.

ஆங்கிலம் ஜீவ பாஷையாக இருப்பதற்குக் காரணம் - அது இந்தியாவின் அந்நிய நாட்டுக் கடன்களைக் காட்டிலும், ராக்ஷஸ அளவுக்குத் தொன்றுதொட்டு அந்நிய மொழிகளிலிருந்து கடன் வாங்கியிருக்கிறது. இந்த இடத்தில் அதன் சிறப்பு, அது திருப்பிக் கொடுப்பதில்லை. அத்தனையையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டுவிட்டது. சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை நிறையப் படியுங்கள். இருநூறு வருட ஆங்கில அரசாட்சியில், வயிற்றுப் பிழைப்பு காரணமாகவே வலுக்கட்டாயப் படிப்பாக, எங்கள் தலைமுறை வரை எங்கள் ரத்தத்திலேயே ஊறிவிட்டது. அதுபற்றி எனக்கு வருத்தமில்லை. மகிழ்ச்சியே. உலகத்தின் பலகணிகள் திறந்துகொண்டால் நோகுமா?

Let there be light!

தென்றல் வீசுகிறது. கதவுகளை மூடாதீர்கள்.

ஸம்ஸ்கிருதத்தில் ஸிம்ஹம், ஆப்பிரிக்காவில் ஸிம்பா.

ஸிம்ஹத்திலிருந்து ஸிம்பாவா?

ஸிம்பாவிலிருந்து ஸிம்ஹமா?

ஆராய்ச்சி, யாருக்கு முதல் தாம்பூலம் என்று பிரச்சினையை வளர்ப்பதற்கல்ல.

பூமத்திய ரேகைபோல், பாஷை மக்களை எப்படி வளைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் வியப்புறத்தான்.

சரி, கதையென்றும், கவிதையென்றும், ஞானமென்றும், விஞ்ஞானமென்றும், பண்பென்றும் மொழியின் பெருமையை அறைகூவிக் கொண்டிருக்கிறோம். இன்னும் அலுக்கவில்லை. அலுக்கப் போவதில்லை.

ஆனால் வாய்மொழி தாண்டி, பேசாத மொழியென்று ஒரு கட்டம் இருக்கிறது. மொழி நோக்கம் வெளியீடு எனில், அந்த வெளியீடு குறிப்பாலேயே நடப்பது.

வெளியீட்டுக்கு ஆங்கில வார்த்தை Communication (com+uni) சேர்ந்து+ஒன்று) அதாவது பல, ஒன்றாதல். ஆகவே புரிவதுதான் பாஷையின் குறிக்கோளே தவிர பேச்சு அல்ல.

குறிப்பால் உணர்த்தலை கிராமத்தில் பட்டினத்தைக் காட்டிலும் அதிகம் பார்க்கலாம். இயற்கையின் விசாலத்தில், பரந்த மைதானங்களிலும் ஆகாய வெளியிலும் அகன்ற வயற்புறங்களிலும் மனிதன் இழைந்துவிடுவதால் பேச்சு தானே அடங்கிவிடுகிறது.

பிள்ளைப் பருவத்திலே, கிராமத்தில் என் தகப்பனார் வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எங்கள் வீட்டுக்கெதிர் வீட்டில் ஒரு முதலியார் வசித்து வந்தார். நாங்கள் குடியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் கைக்கோள முதலியார். நெசவுத் தொழில்.

ஐயாவும் அம்மாவும் பிரம்மோற்சவத்தின் போது ஸ்வாமிக்கு முன் செல்லும் பூதப் பொம்மைகள் போன்று இருப்பார்கள்.

முதலியார் விடிகாலையில், கழனிக் காட்டைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டு - பத்து பத்தரைக்குத்தான் திரும்பி வருவார். நுழையும்போதே உறுமலுக்கும் மூக்கு உறிஞ்சலுக்குமிடையாக ஒரு தனிச் சத்தம் அவரிடமிருந்து வெளிப்படும். அவர் மனைவி அது கேட்டுப் பதறிக் கிணற்றடிக்கு ஓடி, தவலையில் தண்ணிர் கை கால் கழுவக் கொண்டுவந்து வைப்பாள்.

உடலைச் சுத்தம் செய்துகொண்டு, இது ஸ்னானம் அல்ல, திருநீறு தரித்து, முதலியார் தறியில் இறங்குவார். சற்று நேரம் பொறுத்து அதே உறுமல். எங்கிருந்தாலும் அந்த அம்மாவுக்கு எப்படித்தான் காது கேட்குமோ? ஆவி பறக்க ஒரு கையில் கஞ்சியும், ஒரு கையில் தம்ளருமாய் ஓடி வருவாள்.

அல்லது, பாவில் அறுந்துபோன இழையை நிமிண்டுவாள். பேச்சுக்கோ, தர்க்கத்துக்கோ நேரம் கிடையாது, நெசவுத் தொழிலில், அதுவும் தறியில் இழை அறுந்தால் கரணம் தப்பினால் மரணம் மாதிரி, குறுக்கே பாயும் நாடாவில் இழையறுதல் நேரலாம். நெடும் பாவில் நேரலாம். லுங்கியின் கட்டான்களின் சமன்களுக்குக் கண்ணின் கணிப்புத்தான் அளவு கவனம் சற்றுப் பிசகினால் ஏமாற்றக் காத்திருக்கும் செப்பன் வேலைகள் எத்தனையோ இடையிடையே இருக்கின்றன. இதனால், உம்மணாமூஞ்சியாகவோ, ஊமையாகவோ இருப்பார்கள் என்று நான் சொல்ல வர வில்லை. ஆனால் உஷாராய் மோனத்தின் சுருதி, தறியின் இயக்கத்தில் சார்ந்தவரைக் கவ்விக்கொண்டிருத்தல் வெளியாருக்கே தெரியும்.

மாலை வேளையில் தறியை விட்டு இறங்கி வாசலில் நிற்பார்.

உறுமல்,

அந்த அம்மா, ஒரு குட்டி மண் குடுவையில் எண்ணெயுடன் ஓடி வருவாள். வாய்க்காலைத் தாண்டி உள்ள பச்சையம்மன் கோயிலில் விளக்கிட,

நிலா வெளிச்சத்தில் நடுமுற்றத்தில் முதலியார் சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார். மறுபடியும் உறுமல்.

அவர் மனைவி நடுநடுங்குவாள். மெய்யாகவே உடல் வெடவெடக்கும்.

”என்ன ஆச்சு?” அவளிடம் கிசுகிசுப்பேன்.

”எள்ளுத் துவையலில் புளி கூடிப்போச்சாம்.”

முதலியார் எங்களிடம் கலகலப்பாய் இருப்பார். அவர் பேசினால் இன்று பூராக் கேட்டுக் கொண்டிருக்கலாம். வாய்விட்டுச் சிரிக்கமாட்டார். உடல் மடிமடியாகக் குலுங்கும். அது பாட்டுக்கு, தாயுமானவர் பாடல், அறப்பளிசுவர சதகம், குமரேச சதகம், பட்டினத்தார் பாடல், குறள், ‘கச்சி யேகம்பனே', அருட்பா, திருப்புகழ், எப்படித்தான் தங்கு தடையின்றி வருமோ, வந்து கொண்டேயிருக்குமோ, அத்தனையும் நுண்ணிய அர்த்தச் சுவைகளுடன். என் எழுத்தை பாதித்த முக்கியப் பாத்திரங்களில் முதலியாரும் ஒருவர்.

ஆனால் என்னுடைய வியப்பு யாதெனில், இந்த ஒரேவிதமான உறுமலில் இத்தனை அர்த்தங்கள் விசிறுகின்றன?

“சிவபாக்கியம், நீ எப்படிப் புரிஞ்சுக்கறே?” என்று கேட்டால், அவள் சிரிப்பாள். "என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்? நீதான் இங்கிலீஸ் படிச்சவன். நீதான் சொல்லணும். எனக்குத் தமிழ் எளுத்துக்கூடத் தெரியாது.”

மௌனம் என்பது வெறுமனே பேசாமல் இருத்தல் அல்ல. மௌனம் பேச்சின் ஒரு ஸ்தாயி. அதில் ஏதோ யோகம், தாந்த்ரீகம் கலக்கிறது. அல்லது ஆரம்பிக்கிறது என்று நினைக்கவே கவர்ச்சியாக இருக்கிறது. அங்கு இன்னொரு தடத்தின் கதவு திறக்கிறது. அல்ல, திறக்கக் காத்திருக்கிறது. இதைவிட உன்னத இலக்கு, இலக்கியத்தில் உண்டா?

தட்டுங்கள் திறக்கப்படும்.

சொல்லிவிடலாம், சுலபமாக,

குறிப்பாக உணர்தல்கூடப் பெரிதல்ல, உணர்வது அதைவிடப் பெரிதல்லவா? புத்திசாலித்தனத்துக்கும் முன்னால் புரிந்துகொள்ள இஷ்டம், ஓரளவு பயம். ஈடுபாடு, பக்தி, விசுவாசம் வேண்டும். பழகப் பழகப் பக்குவநிலை எய்தும். பேச்சின் வியர்த்தம் அறிந்தபின், பேச்சு கீச் கீச்சுதான்.

கொட்டாங்கச்சியில் தண்ணீரும், பக்கத்தில் ஊசியும் கதையில் மூன்று விஷயங்கள் புலனாகின்றன.

ஒரு பருக்கைகூடச் சிந்தாமல் ஒருவன் வாழ்நாளின் கடைசிவரை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு பருக்கைகூடச் சிந்தாமல் ஒருத்தி, அவள் வாழ்நாளின் கடைசிவரை பரிமாறினாள்.

ஒரு பருக்கைகூடச் சிந்தாமல் சாப்பிடுவது சௌந்தர்ய உபாசனை.

இதுபற்றி ஒருவருக்கொருவர் எப்படித்தான் இருக்க வேண்டும் என்று, முன்கூட்டிச் சொல்லிக் கொள்ளவுமில்லை. அதனால் கொட்டாங்கச்சியில் தண்ணீரும், பக்கத்தில் ஊசியும், நிகழ்ந்து கொண்டேயிருந்த சௌந்தரியத்துக்குச் சாக்ஷியாக நின்றுவிட்டன.

எழுத்தாளன், வாசகன், இடையில் எழுத்து - இந்த உறவும் இப்படித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-8&oldid=1532617" இலிருந்து மீள்விக்கப்பட்டது