பாலஸ்தீனம்/பிரிவினைப் பிரச்னை

VII
பிரிவினைப் பிரச்னை

ற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, 1936ம் வருஷம் நவம்பர் மாதம் லார்ட் பீல் தலைமையில் நியமனம் பெற்றிருந்த ராயல் கமிஷன், பாலஸ்தீனத்தில் வந்திறங்கியது. ஆரம்பத்தில் அராபியர்கள், இதற்கு முன்னர் சாட்சியங் கொடுக்க மறுத்தார்கள். சிறிது காலம் கமிஷனுடைய விசாரணைக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. பின்னர், சுற்றுப்புறமுள்ள நாடுகளின் தலைவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த சமாதானச் சூழலின் மத்தியில், ஒரு விதமாக விசாரணை தொடங்கப் பெற்றது சுமார் ஏழு மாத காலம் வரை, கமிஷனார், பாலஸ்தீனத்தின் பல பாகங்களுக்கும் சென்று, விசாரணை நடத்தினார்கள் விசாரணை தொடங்கிய காலத்திலிருந்து, கமிஷனின் அறிக்கை வெளியாகிற காலம் வரை, குழப்பங்கள் ஒன்றும் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். சில்லரைச் சச்சரவுகள் ஆங்காங்கு நடை பெற்றதேயாயினும், இவை, ஒழுங்கு பட்ட புரட்சியைச் சார்ந்தவையென்று சொல்ல முடியாது.

1937ம் வருஷம் ஜூலை மாதம் பீல் கமிஷன் அறிக்கை வெளியாயிற்று. இந்த அறிக்கையைப் பற்றி விரிவாக வியாக்கியானஞ் செய்து கொண்டு போவது இந்த நூலின் நோக்கமன்று. இது செய்த சிபார்சுகளை மட்டும் சுருக்கமாக இங்குக் கூறுவோம்.

1. பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட தொந்திரவுகளுக்கெல்லாம் மூல காரணம், ஒன்றுக்கொன்று சமரஸமாகப் போக முடியாத இரண்டு விதமான தேசீய சக்திகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும், தேசத்தை ஆள வேண்டுமென்று முனைந்து நிற்கின்றன. ஒவ்வொரு சக்தியும், தன்னுடைய கட்சியே சரியென்று சாதிக்க விரும்புகிறது.

2. இந்த இரண்டு சக்திகளையும் ஒன்று படுத்தி வைக்க, ‘மாண்டேடரி’ அரசாங்கம் சென்ற இருபது வருஷ காலமாகப் பிரயத்தனம் செய்து வந்தும், பயன் உண்டாகவில்லை.

3. ‘மாண்டேடரி’ நிருவாகம் கோரிய பலனைக் கொடுக்கவில்லை.

4. ஆகவே, பாலஸ்தீனத்தை மூன்று கூறுகளாகப் பிரித்து விட வேண்டும்.

5. மத்திய தரைக் கடலோரத்திலுள்ள சமதரைப் பிரதேசம் யூதர்களின் நாடாக்கப்பட வேண்டும்; குன்றுகள், வனாந்திரங்கள் நிறைந்ததும், ட்ரான்ஸ் ஜார்டோனியாவை கிழக்கெல்லையாகவும், காஜா துறைமுகத்தோடு கூடிய ஒரு சிறு பிரதேசத்தை மேற்குப் பக்கத்திலும் கொண்ட இடை வெளிப் பிரதேசம்
அராபியர்களின் நாடாக்கப்பட வேண்டும். இந்த நாடு, டிரான்ஸ் ஜார்டோனியா நாட்டுடனேயே சேர்க்கப்பட்டு விடும். ஜெருசலேம், பெத்ல்ஹெம் போன்ற புண்ணிய ஸ்தலங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பிரிட்டனிடமே இருக்க வேண்டியிருப்பதால், ஜெருசலேத்திலிருந்து ஜாபா துறைமுகம் வரையில் செல்லக் கூடியஒரு பிரதேசம், பிரிட்டனுடைய நிரந்தர நிருவாகத்தின் கீழிருக்கும்.[1] இந்தப் பிரதேசம் தவிர, ஹைபா, டிபேரியாஸ், ஸபாத், ஏக்ரே, அக்காபா ஆகிய துறைமுகப் பட்டினங்களும், நகரங்களும் பிரிட்டன் வசத்திலேயே இருக்கும். யூதருக்கென்று வகுக்கப் பட்டுள்ள பிரதேசத்தில் வசிக்கும் 2,25,000 அராபியர்களும், அராபியர்களுக்கென்று ஒதுக்கப் பட்டுள்ள நாட்டிற்கு பலவந்தமாக மரற்றப் பட்டு விட வேண்டும்.[2]

இந்தப் பிரிவினையில் சம்பந்தப்பட்டவர் மூன்று கட்சியினரல்லவா? அதாவது பிரிட்டிஷ் அரசாங்கத்தார், யூதர், அராபியர். இந்த மூன்று கட்சியினரும், மேற்படி பீல் கமிஷன் செய்த சிபார்சுகளைப் பற்றி என்ன அபிப்பிராயங் கொண்டனர் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்குக் காரணங்கள் என்னவென்பதைப் பற்றிக் கமிஷனார் கூறியிருப்பதையும், இதற்கு அவர்கள் சிபார்சு செய்துள்ள பரிகாரங்களையும், பொதுவாகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அங்கீகரித்துக் கொண்டனர். தவிர, பிரிவினை செய்யப்பட்ட பிரதேசங்களின் எல்லைகளை நிர்ணயிக்கிற விவரங்கள் சம்பந்தமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படுமென்றும், அது வரையில், யூதர்களுக்கு நிலங்கள் விற்பனை செய்வது கட்டுப் படுத்தப் பெறுமென்றும், மற்றும், வருஷத்தில் சராசரி 8,000 யூதர்கள்தான் பாலஸ்தீனத்தில் குடி புகலாம் என்ற வரையறை ஏற்படுத்தப் பெறுமென்றும் அறிக்கை வெளியிட்டனர்.

யூதர்களுக்கு, இந்தப் பீல் அறிக்கை ஒரு வெடிகுண்டு மாதிரி வந்து விழுந்தது. ‘மாண்டேடரி’ நிருவாகம், கோரிய பலனைக் கொடுக்கவில்லையென்று பீல் அறிக்கை கூறி விட்டது இவர்களுக்கு வருத்தமாயிருந்தது. தவிர, தங்களுக்கென்று வகுக்கப்பட்ட பிரதேசமோ ஒரு ஜில்லா விஸ்தீரண முடையதாயிருந்தது இவர்களுக்கு அதிருப்திதான்.[3]யூதர்களில் பெரும்பாலோர் இந்த மாதிரியான அபிப்பிராயத்தையே கொண்டார்கள்.

தொழிற் கட்சியினர்[4], பாலஸ்தீனம் முழுவதும் யூகர்களுக்குச் சொந்தமான நாடாக வேண்டுமென்றும், யூகர்களின் குடிபுகும் விகிதத்தை வரையறுக்கக் கூடாதென்றும் கூறினார்கள். ஆனால் இந்தக் கட்சியினருக்கு, நாட்டிலே அதிகமான செல்வாக்கில்லை.

ஜையோனிய ஸ்தாபனத்தின் நிருவாகக் கௌன்சில் தலைவனாகிய உஸ்ஸிஷ்கின் என்பவனுடைய தலைமையில் ஒரு கட்சியினர், பிரிவினைச் சிபார்சை எதிர்த்து நின்றனர். பழையபடியே, ‘மாண்டேடரி’ நிருவாகம் நடைபெற வேண்டுமென்றும், பிரிவினை செய்வது அநுபவ சாத்தியமற்றதென்றும் இவர்கள் கூறினார்கள். இந்த அபிப்பிராயங் கொண்டவர்கள் பெரும்பாலும், யூத மத்திய வகுப்பினரே.

யூகர்களிலேயே இன்னொரு கட்சியினர், இந்தப் பிரிவினையை வேறொரு திருஷ்டியில் எதிர்த்தனர். இவர்கள், தொழிற் கட்சியினரிலே தீவிரவாதிகள். இவர்கள், இந்தப் பிரிவினையினால், பாலஸ்தீனத்தில் அராபியர்களும், யூகர்களும் ஒரே நாட்டில் ஒன்று சேர்ந்து வாழ்வதற்குப் பதிலாக, பிரிந்து வாழ நேரிடுமென்று கூறினர். இவர்கள் இப்படிச் சொன்ன போதிலும், யூதர்கள் குடி புகும் விகிதத்தைக் குறைக்கவோ, அராபியர்களின் தேசீய சுதந்திர உரிமையை அங்கீகரிக்கவோ விரும்பவில்லை. எனவே, இவர்கள் கொண்ட அபிப்பிராயத்திற்கு யாரும் மதிப்புக் கொடுக்கவில்லை.

டாக்டர் வீஸ்மானைத் தலைமையாகக் கொண்ட ஒரு சாரார், அராபிய பாலஸ்தீனத்தில் சிறுபான்மையினராக யூதர்கள் இருப்பதை விட, தனிப்பட்ட ஒரு நாட்டினராகப் பிரிந்து விடுதலே நல்லதென்றும், அப்பொழுதே, யூதர்களின் சுய முயற்சி அதிகரிக்குமென்றும், இதன் மூலமாகப் பிற்கால அராபியர்களின் எதிர்ப்பைக் கூட சமாளிக்கலாமென்றும், தவிர, தங்களுக்குப் பிரிட்டிஷ் ராணுவ பலத்தின் ஆதரவு எப்பொழுதும் இருக்குமென்றும் கூறி, பிரிவினையை ஆதரித்தனர்.

லார்ட் சாமியலைத் தலைமையாகக் கொண்ட வேறொரு பிரிவினர், சுதந்திர அராபிய பாலஸ்தீனத்தில், யூதர்கள் சிறு பான்மையோருக்குரிய எல்லா உரிமைகளையும் பெற்று, அமைதியாக வாழ்தலே நல்லதென்றும், அவர்களுடைய ஜன விகிதத்தைப் பொறுத்து, அந்த நாட்டு அரசாங்க நிருவாகத்தில் பங்கு பெறுவதோடு திருப்தியடைய வேண்டுமென்றும் அறிக்கை வெளியிட்டனர். இந்தக் குழுவினருடைய அபிப்பிராயத்திற்கு, சாய்வு நாற்காலியில் உல்லாசமாக அமர்ந்து கொண்டு, அரசியலைப் பற்றி வாசாமகோசரமாகப் பேசும் யூத அரசியல் வாதிகளிடத்தில்தான் மதிப்பு இருந்தது. இங்ஙனம், குடி புகுந்த யூதர்களுக்குள், இந்தப் பிரிவினையைப் பற்றிப் பல விதமான அபிப்பிராய வேற்றுமைகள் உலவின.

1937ம் வருஷம் ஆகஸ்ட் மாதம் ஸ்விட்ஜர்லாந்திலுள்ள ஜூரிச் நகரத்தில், இருபதாவது அகில உலக ஜையோனிய காங்கிரஸ் கூடியது. அப்பொழுது, பாலஸ்தீனப் பிரிவினை சம்பந்தமாக யூதர்களுக்குள் ஏற்பட்டுள்ள அபிப்பிராய வேற்றுமைகளைச் சமரஸப்படுத்தத் தீவிர முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் காங்கிரஸில் கலந்து கொண்ட எந்தக் கட்சியினருமே, பிரிவினையை அப்படியே நிராகரிக்க விரும்பவில்லை. யூதர்களுக்கென்று பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரதேசத்தை, இன்னுஞ் சிறிது விசாலப்படுத்திக் கொடுக்க வேண்டுமென்னும் விஷயமாகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தாருடன் சமரஸம் பேசுமாறு காங்கிரஸின் நிருவாக சபைக்கு அதிகாரங் கொடுப்பதாகக் கடைசியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இனி அராபியர்களுடைய அபிப்பிராயங்கள் எங்ஙனம் உருக் கொண்டு எழுந்தனவென்பதைப் பற்றிச் சிறிது கவனிப்போம். இவர்கள் எவ்வித கட்சி பேதமுமில்லாமல், இந்தப் பிரிவினைத் திட்டத்தை எதிர்த்தார்கள். ‘நமது தாய் நாடாகிய பாலஸ்தீனத்தைப் பிரிக்க முடியாது. அதன் ஓர் அங்குலப் பிரதேசத்தையும் எந்த முஸ்லீமும் விட்டுக் கொடுக்க மாட்டான்’ என்று ‘மப்டி’யின் பத்திரிகையாகிய ‘அல் லீவா’ எழுதியது. 1937ம் வருஷம் ஜூலை மாதம் 23ந் தேதி ‘அராபிய பெரிய கமிட்டி’யார், சர்வதேச சங்கத்தைச் சேர்ந்த ‘நிரந்தர மாண்டேட்ஸ் கமிஷனு’க்கும், பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு மந்திரிக்கும், பிரிவினை சம்பந்தமாகத் தங்கள் கருத்துக்களைத் தொகுத்து ஒரு யாதாஸ்து சமர்ப்பித்தனர். இதில் ‘மாண்டேடரி’ நிருவாகம் திருப்திகரமாக வேலை செய்யவில்லையென்பதை பீல் கமிஷன் அங்கீகரித்து விட்டதைத் தாங்கள் பாராட்டுவதாகத் தெரிவித்து விட்டு, அராபியர்கள் ஏன் பிரிவினைக்கு விரோதமாயிருக்கின்றனர் என்பதற்கு வரிசைக் கிரமமாகச் சில காரணங்களைக் குறிப்பிட்டனர்.

1.பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று தனி நாடு ஒன்று ஒதுக்கிக் கொடுக்கப்படுமானால், அந்த நாட்டிலுள்ள அராபியர்களுக்குக் கடல் தொடர்பும், சிரியாவிலுள்ள தங்கள் அராபிய சகோதரர்களுடைய தொடர்பும் இல்லாமற் போய் விடும். தவிர, இப்பொழுது, யூதர்களுக்கென்று பிரிக்கப்பட்டுள்ள பிரதேசம், பாலஸ்தீனத்திலுள்ள மற்றப் பிரதேசங்களைக் காட்டிலும் மிகச் செழுமையானது. இதனால் யூதர்கள், நாளா வட்டத்தில் தங்கள் எல்லையை விஸ்தரித்துக் கொள்வார்கள்.

2. யூதர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில், அராபியர்களுக்குச் சொந்தமான பல ஆரஞ்சுப் பழத் தோட்டங்கள் முதலியன இருக்கின்றன. இவைகளை யெல்லாம் அராபியர்கள் இழந்து விட வேண்டியிருக்கும்.

3. பாலஸ்தீனத்திலுள்ள புனித ஸ்தலங்களைப் பாதுகாப்பதாகிற முகாந்திரத்தை வைத்துக் கொண்டு, சில பிரதேசங்கள், பிரிட்டிஷாருடைய நிரந்தர நிருவாகத்திற்குட்படுத்தப்பட வேண்டுமென்ற யோசனையை நாங்கள் பலமாக எதிர்க்கிறோம்.

இந்த மூன்றாவது ஆட்சேபத்தைப் பற்றி ஒரு பிரபல அராபியப் பத்திரிகை பின் வருமாறு எழுதியது:-

பிரிட்டிஷாருடைய நிரந்தர நிருவாகத்திற்குட் படுத்தப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் அமைக்கப் பெறும் இந்தப் பிரதேசத்தையும், ஹைபா, அக்காபா என்ற துறைமுகங்களைப் பற்றிக் கூறப் பெற்றுள்ள சிபார்சுகளையும், பட்ச பாதமற்ற ஒருவன் கூர்ந்து கவனிப்பானாகில், மத சம்பந்தமான பிரச்னைகளுக்குப் பதில், ஏகாதிபத்திய, ராணுவ பிரச்னைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப் பெற்றிருக்கின்றது என்பது நன்கு புலப்படும். லிட்டா, ராம்லே என்ற நகரங்களிலுள்ள ஆகாய விமான நிலையங்களும், எகிப்து, ஹைபா, ஜெருசலேம், ஜாபா ஆகிய பல இடங்களிலிருந்து வரும் ரெயில்வேக்கள் சந்திக்கிற லிட்டா ரெயில்வே ‘ஜங்க்ஷனு’ம், யதேச்சையாக பிரிட்டிஷாருடைய நிருவாகப் பிரதேசத்தில் அமைந்து கிடக்கின்றன வென்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சூயஸ் வாய்க்காலையும், செங்கடலையும் காத்து நிற்கிற அக்காபா துறைமுகத்தின் முக்கியத்துவம் எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. இந்த அக்காபா துறைமுகத்திற்கும், புனித ஸ்தலங்களுக்கும் இப்பொழுது என்ன சம்பந்தம் இருக்றது, இனி எத்தகைய சம்பந்தம் இருக்கும் என்ற விவரங்கள் சொல்லப் படவில்லை.

பொதுவாக அராபியர்களுக்கு அதிகமான ராஜதந்திர அநுபவம் போதாதென்று, வார்சேல் உடன்படிக்கைக்கு உடந்தையாயிருந்த ஒரு சிலர் கூறிய போதிலும், பீல் கமிஷன் செய்த சிபார்சுகளைக் கண்டித்து அராபியத் தலைவர்கள் விடுத்த அறிக்கைகளையும், அராபியப் பத்திரிகைகள் எழுதிய தலையங்கங்களையும் கூர்ந்து கவனித்துப் பார்ப்பவர்களுக்கு, ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையான தத்துவம் என்ன, அதற்காகத் தங்கள் நாடு எவ்வாறு உபயோகிக்கப் படுகிறது என்பன போன்ற விவரங்களை, இவர்கள் எவ்வளவு அருமையாக உணர்ந்திருக்கிறார்கள் என்பது நன்கு புலப்படும். ஆக, பாலஸ்தீனப் பிரிவினையை அராபியர்கள் ஒரு முகமாக நிராகரித்து விட்டார்கள். பாலஸ்தீனத்திலுள்ள அராபியர்கள் அனைவரும், இந்தப் பிரிவினை விஷயத்தில் ஒற்றுமைப்பட்ட அபிப்பிராய முடையவர்களாயிருக்கிறார்கள் என்பதைக் காட்ட வேண்டுமானால், மீண்டும் கலகம் கிளம்பும் என்று அராபியத் தலைவர்கள் பலர் பகிரங்கமாகக் கூறினார்கள். இவர்கள் சொன்னபடியே, 1937ம் வருஷம் கடைசி பாகத்தில் முன் போல், கலகம் ஆரம்பித்து விட்டது.

வெடிகுண்டுகள் எறியப்பட்டன. தந்திக் கம்பிகள், ரெயில் தண்டவாளங்கள் முதலியன அறுக்கப்பட்டும், பெயர்க்கப்பட்டும் போயின. அராபியர்கள் கூட்டங் கூட்டமாக ஆங்காங்கு ஒளிந்திருந்து, பிரிட்டிஷாரையும், யூதரையும் கொன்றனர். காலிலீ என்ற பிரதேசத்திலுள்ள அராபியர்கள் மிகவும் நிதானஸ்தர்கள் என்று பீல் கமிஷன் அறிக்கை புகழ்ந்து எழுதியிருந்தது. ஆனால், அந்தப் பிரதேசத்தில்தான் கலகத்தின் உத்வேகம் அதிகமாகக் காணப்பட்டது. 1937ம் வருஷம் ஆகஸ்ட் மாதம், அராபியக் குடியானவர்கள் ஆங்காங்குத் தனித் தனி ஸ்தாபனங்கள் ஏற்படுத்திக் கொண்டு, கட்டுப்பாடாக யூதர்களின் பொருள்களையும், பிரிட்டிஷ் பொருள்களையும் பகிஷ்காரஞ் செய்தனர். காலிலீ என்ற பிரதேசத்தில், கலக உணர்ச்சி அதிகமா யிருந்தபடியால், அங்குச் சென்று சமனப்படுத்த எல்.ஒய். ஆண்ட்ரூஸ் என்ற உத்தியோகஸ்தன், விசேஷக் கமிஷனராக நியமிக்கப் பெற்று, அனுப்பப்பட்டான். இவன், அராபியர்களோடு பழகுவதில் மிகவும் நிபுணன் என்று பெயர் பெற்றவன். ஆனால், இவன் 1937ம் வருஷம் அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டான். பீல் கமிஷன் செய்த பிரிவினைச் சிபார்சுக்கு இவனே காரணனாயிருந்தான் என்று அராபியர்கள் கொண்ட சந்தேகமே இவன் கொலைக்குக் காரணம் என்று பின்னர் கூறப்பட்டது. 1937ம் வருஷம் செப்டம்பர் மாதம் சிரியாவிலுள்ள ப்ளவ்டான் என்ற ஊரில், அராபியர்களின் காங்கிரஸ் ஒன்று கூடியது. பாலஸ்தீனத்துப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த, இங்கு ரகசியமாகப் பல திட்டங்கள் போடப்பட்டனவென்று தெரிகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில், மற்றொரு புதிய அமிசமும் வந்து கலந்து கொண்டது. இத்தாலியர்கள், அராபியர்களிடையே பலத்த பிரசாரஞ் செய்து வந்தார்களென்றும், இஸ்லாமுக்குப் பாதுகாப்பாளனாக முஸோலினி தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட பிறகு, ரோமாபுரி சர்வகலாசாலையில் அராபிய மாணாக்கர் சிலருக்கு, இலவசக் கல்வி போதிக்க ஏற்பாடு செய்ததாகவும் சொல்லப்பட்டன. முஸோலினியின் பிரசாரம், பாலஸ்தீன அராபியர்களிடையே நடைபெற்றதா இல்லையாவென்பதைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு புறமிருக்கட்டும். ஆனால், அராபிய பத்திரிகைகள், இந்தச் சமயத்தில், பாகிஸக் கொள்கைகளை விளக்கியும், அவற்றின் உயர்வைப் பாராட்டியும் கட்டுரைகளை வெளியிட்டன. முஸோலினி, ஹிட்லர் முதலியோருடைய படங்கள், அவர்களைப் பாராட்டும் பான்மையோடு வெளியாயின. இத்தலியிலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும், அராபியர்களுக்கு ஆயுதங்களும், பணமும் கிடைத்துக் கொண்டிருந்தனவென்ற வதந்தி பலமாக இருந்தது.

இனியும், பிரிட்டிஷ் அரசாங்கம் சும்மாயிருக்குமா? இருக்கத்தான் முடியுமா? ‘அராபிய பெரிய கமிட்டி’ கலைக்கப்பட்டது. அதன் அங்கத்தினர்கள் கைது செய்யப் பட்டு, இந்திய மகா சமுத்திரத்திலுள்ள ஸெய்செல்லெஸ் தீவுகளுக்கு (Seychelles Islands) அனுப்பப்பட்டு விட்டார்கள். ஜெருசலேம் ‘கிராண்ட் மப்டி’ வகித்திருந்த ‘சூப்ரீம் முஸ்லீம் கவுன்சில்’ தலைமைப் பதவியிலிருந்து அவர் விலக்கப்பட்டார். அதனோடு, மத ஸ்தாபனங்கள் சம்பந்தமான பண நிருவாகமும் ‘மப்டி’யிடமிருந்து பறிக்கப்பட்டது. செல்வாக்கு நிறைந்த ‘மப்டி’யோ பாலஸ்தீனத்தில் இராமல், லெபனோன் நாட்டின் தலை நகரமாகிய பெய்ரத்துக்குத் தப்பித்துச் சென்று விட்டது, அல்லது தப்பித்துச் செல்லுமாறு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது, அந்த ‘மப்டி’யின் செல்வாக்கையே புலப்படுத்துகிறது. நாளது வரையில், லெபனோன் பிரதேசத்திலிருந்து கொண்டு, பாலஸ்தீன விலகாரங்களை ‘மப்டி’ நடத்திக் கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.

இதற்குப் பிறகு, அதிகாரிகள் பல விதமான அடக்கு முறைகளை ஒன்றன் பின்னொன்றாகக் கையாண்டனர். கல்கத்தாவில், போலீஸ் கமிஷனராயிருந்து, வங்காளத்தில் நிலவியிருந்த பலாத்கார இயக்கத்தை அடக்கி விட்டதாகப் பெயர் பெற்ற ஸர் சார்லஸ் டெகார்ட்[5], விசேஷ உத்தியோகஸ்தனாக நியமிக்கப் பெற்றான். இவன், வடக்கிலுள்ள சிரியாவிலிருந்து பாலஸ்தீன அராபியர்களுக்கு ஆள் பலமும், ஆயுத உதவியும் கிடைக்கிறதென்று கருதி, இதனைத் தடுப்பதற்காக, பாலஸ்தீனத்தின் வடக்கெல்லை பூராவும் முட் கம்பிகளினாலாய வேலி போட்டான். இதற்கு ‘டெகார்ட் சுவர்’[6] என்று பெயர். இந்த ‘டெகார்ட் சுவர்’ அமைக்கப்பட்ட விஷயத்தில் ஒரு விசேஷம். அதாவது, இதனை அமைப்பதற்குரிய ‘கண்டிராக்ட்’ யூத தொழிலாளர் ஸ்தாபனத்திற்கு அளிக்கப் பட்டது! ‘ஹிஸ்தாத்ரூத்’ என்ற இந்த யூதத் தொழிலாளர் ஸ்தாபனத்தார், வருவாயை உத்தேசித்து, இந்த மாதிரியான பல ‘கண்டிராக்டு’களையும் எடுத்து வேலை செய்து வந்தனர். அரசாங்கத்தாருடைய வேலைகள் பல, இந்த ஸ்தாபனத்திற்கே ‘கண்டிராக்டாக’க் கொடுக்கப்பட்டு வந்தன. ஏற்கனவே, அராபியர்களுக்கு இஃது ஆத்திரமாயிருந்தது. இப்பொழுது, இந்த ‘டெகார்ட் சுவரை’க் கட்டும் வேலையையும் யூதர்களிடம் ஒப்புவித்தது, அராபியர்களுக்கு அதிகமான ஆத்திரத்தை மூட்டி விட்டதென்பதை விஸ்தரித்துச் சொல்ல வேண்டியதில்லையல்லவா?

1938ம் வருஷத் தொடக்கத்தில், பாலஸ்தீனத்தின் புதிய ஹை கமிஷனராக ஸர் ஹாரோல்ட் மக் மைக்கேல்[7] நியமிக்கப்பட்டிருப்பதாகவும், பிரிவினை விஷயத்தில் அநுபவ சாத்தியமான பிரச்னைகள் என்னென்ன தோன்றும், அவற்றைச் சமாளிப்பதெப்படி என்பவைகளைப் பற்றி விசாரிக்க, ஸர் ஜான் வுட்ஹெட்[8]டின் தலைமையில் ஒரு கமிஷன் நியமிக்கப்படுமென்றும், இந்தக் கமிஷனுடைய அறிக்கை வெளியாகும் வரையில், பாலஸ்தீன சம்பந்தமாக இது காறும் அநுஷ்டிக்கப் பட்டு வந்த கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இராதென்றும், பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தெரிவித்தனர்.

இதன்படியே, வுட்ஹெட் கமிஷனார், 1988ம் வருஷம் ஏப்ரல் மாதம் 27ந் தேதி பாலஸ்தீனத்திற்கு வந்து விசாரணை தொடங்கி, நவம்பர் மாதம் 9ந் தேதி தங்கள் அறிக்கையை வெளியிட்டனர். பீல் கமிஷன் அறிக்கையானது, அது நியமிக்கப் பெற்ற பன்னிரண்டாவது மாதத்தில்தான் வெளியாயிற்று. வுட்ஹெட் கமிஷன் அறிக்கையோ, எட்டு மாதங்கள் கழித்தே வெளி வந்தது. இந்தத் தாமதத்திற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. 1937ம் வருஷத் தொடக்கத்திலிருந்தே, பாலஸ்தீனப் பிரச்னையை விட இன்னும் முக்கியமான பிரச்னைகள் பல—பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கே பங்கம் ஏற்படக் கூடிய மாதிரி எழுந்த பிரச்னைகள் பல—பிரிட்டிஷ் ராஜதந்திரிகளின் கவனத்தை இழுத்து வந்தனவென்பது உண்மைதான். ஆனால், பாலஸ்தீன விஷயத்தில் இவர்கள் வேண்டுமென்றே தாமதங் காட்டினர் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், சிறிது காலம் சென்ற பிறகு ‘மப்டி’யைத் தலைமையாகக் கொண்ட அராபியத் தீவிரக் கட்சியினரின் செல்வாக்கு ஒடுங்கி விடுமென்றும், ட்ரான்ஸ் ஜார்டோனியா சிங்காதனத்தில் கொலு வீற்றிருக்கும் எமிர் அப்துல்லாவைத் தலைமையாகக் கொண்ட அராபிய மிதவாத கட்சியினர், அரசாங்கத்காரின் கொள்கைகளை ஆதரிக்கக் கூடுமென்றும், எதற்கும் சிறிது காலம் ஆக வேண்டுமென்றும் பிரிட்டிஷ் ராஜதந்திரிகள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை, பிரிட்டிஷ் ராஜதந்திரிகளுக்கு மட்டுமல்ல, யூகர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. அராபிய தேசீய இயக்கத்திற்குத் தலைமை வகித்த ‘கிராண்ட் மப்டி’ பாலஸ்தீனத்திலிருந்து அப்புறப்படுத்தப் பட்டு விட்டபடியால், அராபிய தேசீய இயக்கமே நாளா வட்டத்தில் சீர் குலைந்து உருத் தெரியாமல் போய் விடும் என்று, மேற்படி இரு சாராரும் எதிர் பார்த்தனர். ஆனால், இவர்கள் எதிர்பார்த்தபடி, பாலஸ்தீன தேசீய இயக்கம் அடங்கி ஒடுங்கி விடவில்லை; மிதவாத அராபியர்களும், அரசாங்கத்தைத் தழுவி நிற்கவில்லை.

பாலஸ்தீனத்தில் செல்வாக்குள்ள குடும்பங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று ஹுஸேனி குடும்பம்; மற்றொன்று நாஷா ஷீபி குடும்பம். தற்போது ஹுஸேனி குடும்பத்தின் தலைவர், ஜெருசலேம் ‘கிராண்ட் மப்டி’யாகிய ஹாஜ் அமீன்—எல்—ஹுஸேனி; நாஷா ஷீபி குடும்பத்தின் தலைவர் ராகேப் பே நாஷா ஷீபி. இந்த இரு குடும்பத்தினருடைய செல்வாக்குக்குட்பட்ட அரசியல் வாதிகளும், மற்றப் பொது ஜனங்களும் சேர்ந்து, தனித் தனிக் கட்சியினராகப் பிரிந்திருக்கின்றனர். மேற்படி இரு குடும்பத்தினருக்கும் எப்பொழுதும் பகையுண்டு. சாதாரணமாக, ஹுஸேனி குடும்பத்தினரைத் தீவிரவாதிகளென்றும், நாஷா ஷீபி குடும்பத்தினரை மிதவாதிக ளென்றும் அழைப்பதுண்டு. தீவிரவாதிகளுக்கு, நாட்டிலே அதிகமான செல்வாக்கு இருப்பதைக் கண்டு, நாஷா ஷீபி குடும்பத்தினர், தங்கள் மிதவாத அபிப்பிராயங்களை வெளியில் சொல்லாமலும், அது சம்பந்தமான பிரசாரஞ் செய்யாமலும் சும்மாயிருந்தனர். ஹுஸேனி குடும்பத்தைச் சேர்ந்த ஜெருசலேம் ‘கிராண்ட் மப்டி’யாகிய ஹாஜ் அமீன்—ஹுஸேனி நாடு விட்டுச் சென்று விட்டமையாலும், ‘மப்டி’ கட்சியினரின் செல்வாக்கு ஒடுங்கி விட்டமையாலும், நாஷா ஷீபி குடும்பத்தினர், பகிரங்கமாகவே, இனித் தம்மை ஆதரிக்கக் கூடுமென்று அரசாங்கத்தார் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக, ‘அராபிய பெரிய கமிட்டி’ கலைக்கப்பட்டவுடனேயே, மேற்படி நாஷா ஷீபி குடும்பத்தினர், பிரிவினையை எதிர்த்து ஓர் அறிக்கை வெளியிட்டனர். பொதுவாகவே இந்தக் காலத்தில், பிரிட்டனுடன் ஒத்துழைக்க வேண்டுமென்ற அபிப்பிராயங் கொண்டவர்கள் கூட, தங்கள் அபிப்பிராயத்கைப் பகிரங்கமாகச் சொல்ல அஞ்சினர். இதற்கு ஒரு சிறிய உதாரணம். 1936ம் வருஷக் கலகத்தின் போது, அராபியத் தலைவர்கள் பலர் காப்பில் வைக்கப்பட்டனரல்லவா? அவருள் ஒருவரான ஹாஸன் சித்தி தாஜானி, டக்ளஸ் டப் என்ற ஒரு போலீஸ் உத்தியோகஸ்தரிடம் பின் வருமாறு கூறியதாகத் தெரிகிறது:-

இந்தக் கலகத்தில் தலைவர்களாகிய எங்களுக்கு, பாலஸ்தீன அரசாங்கத்தோடு சமரஸம் பேசக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்காது. இதற்கு முன்னர் நாங்கள் சமரஸம் செய்து வைத்தோம் என்பது உண்மைதான். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. இளைஞர்கள், பிரிட்டனைத் தங்கள் பரம சத்துருவாகக் கருதுகிறார்கள். தலைவர்களாகிய நாங்கள், எங்கள் பிராணனுக்குப் பயந்து, அரசாங்கத்துடன் எவ்வித சமரஸமும் செய்து கொள்ள மறுக்கிறோம். இளைஞர்களுக்குப் பிரதிநிதிகளாயிருந்து, நாங்கள் எந்த யாதாஸ்தில்
கையெழுத்திட்டாலும் அதை அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.

இங்ஙனம் பயந்து கூறிய ஹாஸன் சித்தி தாஜானி, 1938ம் வருஷம் அக்டோபர் மாதம் 13ந்தேதி கொலை செய்யப்பட்டு விட்டானென்றால், அராபியப் பொது ஜனங்களின் ஆத்திரம் எவ்வளவு உச்ச நிலையிலிருந்ததென்பதை நாம் விவரித்துக் கூற வேண்டிய தில்லையல்லவர?

இது காறும் கூறியவாற்றான், பிரிவினைக்குச் சாதகமாக, அராபியரிலே ஒரு சாரார் கூட இல்லையென்பது தெரிந்து விட்டது. தலைவர்களை அடக்கி விட்டால், இயக்கமும் அடங்கி விடுமென்று அரசாங்கத்தார் கருதியதும் தவறு என்று இப்பொழுது நிச்சயிக்கலாமல்லலா? இதற்குப் பதிலாக, 1938ம் வருஷ இடைக் காலத்திலிருந்து, பாலஸ்தீனக் கலகமானது, அதி தீவிரமாகவும், முன்னை விட அதிக கட்டுப் பாட்டுடனும் நடைபெற்று வரத் தொடங்கியது.

1938ம் வருஷம் ஜூலை மாதம், வெடி குண்டெறிதல், போக்கு வரவு சாதனங்களைத் தடை செய்தல் முதலிய பலாத்காரச் செயல்கள் நடைபெறத் தொடங்கின. ஹைபா என்ற நகரத்தில், இரண்டு முறை வெடிகுண்டுகள் வெடித்துச் சுமார் நூறு பேருக்குச் சேதம் உண்டாயிற்று. 1938ம் வருஷம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 250 பேர் கொல்லப்பட்டனர்; 300 பேர் காயமடைந்தனர்; 40 கொள்ளைகள் நடை பெற்றன; 20 இடங்களில் ரெயில்வே தண்டவாளங்களுக்குச் சேதம் உண்டாக்கப் பட்டது; 11 இடங்களில் மரங்கள் பெயர்க்கப்பட்டன; 7 தடவைகளில், பெட்ரோல் எண்ணெய்க் குழாய்களுக்குச் சேதம் உண்டு பண்ணப்பட்டது. ஜெருசலேம் நகரத்திற்குத் தண்ணீர் ‘சப்ளை’ நடவாதபடியும் முயற்சிகள் செய்யப்பட்டன. மேற்படி ஆகஸ்ட் மாதம் 24ந் தேதி, வட ஜில்லாவின் கமிஷனர், ஜெனின் என்ற ஊரில், ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு மேலே முகாம் செய்திருந்த போது சுட்டுக் கொல்லப் பட்டான்.

1938ம் வருஷம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், பாலஸ்தீனக் கலகமானது, ஒரு சிலர் சேர்ந்து கொண்டு, அங்குமிங்குமாகச் சில சேதங்களை உண்டு பண்ணுவதென்ற நிலைமையிலிருந்து மாறி, நாடு முழுவதிலும் அரசாங்க அதிகாரத்திற்கு மதிப்பு இல்லாதபடி செய்து விட்ட ஒரு நிலைமைக்குப் பிரவேசித்தது. அரசாங்க ஆதிக்கம் இங்ஙனம் மதிப்பிழந்து நின்றதைத் தாங்கள் இதுவரை பாலஸ்தீனத்திலோ, மற்றக் கீழைப் பிரதேசங்களிலோ பார்த்ததில்லையென்று, பிரிட்டிஷ் பத்திரிகைகளின் நிருபர்கள், தங்கள், தங்கள் பத்திரிகைகளுக்குச் செய்திகள் அனுப்பிக் கொண்டு வந்தார்கள். பிரிட்டிஷ் துருப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடங்களாகிய ஜெருசலேம், டெல் அவீவ், ஹைபா முதலிய நகரங்களைத் தவிர, மற்ற எல்லா இடங்களும், வாரங்கள் கணக்காகக் கலகக்காரர்களின் வசமே இருந்தன. நல்ல பட்டப்பகலில்தான் பெத்ல்ஹெம் நகரம் கலகக்காரர்கள் வசம் சிக்கியது. ஜெருசலேத்தின் புதிய துருப்புகள் இருந்து கொண்டிருக்கையில்தான், பழைய நகரம் கலகக்காரர்களின் சுவாதீனமாகியது. ரெயில்வே போக்குவரத்துக்களைக் கூட அரசாங்கத்தார் உபயோகிக்க முடியவில்லை. அரசாங்க நீதி ஸ்தலங்கள் சரியானபடி வேலை செய்யவில்லை. ஆனால், அராபிய கலகக்காரர்களோ, ஜில்லாக்கள் தோறும் நீதி ஸ்தலங்கள் ஏற்படுத்தி, அரசாங்கக் கோர்ட்டுகளிலிருந்து வரும் அப்பீல் வழக்குகளை யெல்லாம் விசாரணை செய்து தீர்ப்புக் கூறி வந்தனர். அராபியர்கள் இதுகாறும், சாதாரணமாகக் குல்லாய் (தார்புஷ்) அணிந்து வந்தனர். அதற்குப் பதில் அராபியர்களின் தேசீய தலையணியாகிய சிறு துண்டும், அதன் மீது கயிறும் தரித்துக் கொள்ள வேண்டுமென்று கட்டளை பிறந்தது. இதன்படியே, எல்லா ஜனங்களும் தங்கள் தலையணியை மாற்றிக் கொண்டு விட்டார்கள். கிராமாதிகாரிகள், கலகக்காரர்களுடைய உத்திரவுகளுக்குத்தான் கீழ்ப் படிந்தார்களே தவிர, அரசாங்கத்தாருக்குக் கீழ்ப் படிய மறுத்து விட்டார்கள். விஸ்தரித்துக் கொண்டு போவானேன்? கலகக்காரர்கள் போட்டி அரசாங்கம் ஏற்படுத்தி, உத்திரவுகள் பிறப்பித்து வந்தனர்; வரிகள் வசூல் செய்தனர்; அவசரக் கோர்ட்டுகள் ஏற்படுத்தி, தேசத் துரோகிகளுக்கு மரண தண்டனை விதித்து வந்தனர். இந்த அரசாங்க நிருவாக காரியங்களையெல்லாம் சூத்திரதாரியாயிருந்து நடத்தி வைப்பது, பெய்ரத் நகரத்தில் அஞ்ஞாதவாசம் செய்யும் ‘மப்டி’யே என்று சொல்லப்பட்டது.

தவிர, பாலஸ்தீனத்தில் நடைபெறும் இந்தச் சம்பவங்கள், சுற்றுப்புறமுள்ள நாடுகளின் கவனத்தை இழுத்தன. சிரியா, ஈராக், எகிப்து முதலிய நாடுகளிலுள்ள அராபியர்கள், பாலஸ்தீனத்தில் நடைபெறும் அடக்கு முறைகளைக் கண்டித்துக் கிளர்ச்சி செய்தனர். எகிப்திலுள்ள தேசியக் கட்சியினராகிய ‘வாய்த்’ (Waid) கட்சியினர், பாலஸ்தீனப் போராட்டத்தில் துன்புற்று அவதிப்படுவோருக்கு, ‘கஷ்ட நிவாரண நிதி’யொன்று ஏற்படுத்தி, ஏராளமான நன்கொடைகளை வசூலித்து அனுப்பித் தங்கள் ஆதரவைக் காட்டினர். தவிர, இவர்கள், கெய்ரோ நகரத்தில், 1938ம் வருஷம் அக்டோபர் மாதம் 10ந் தேதி சர்வ அராபிய மகாநாடு ஒன்று கூட்டுவித்து, பாலஸ்தீனம் சுதந்திர அராபிய நாடாக்கப்பட வேண்டுமென்றும், அந்நாட்டில் யூதர்கள் குடி புகுவதை உடனே நிறுத்த வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றி வைத்தனர்.

பாலஸ்தீன அராபியர்கள், இங்ஙனம் சுற்றுப்புறமுள்ள இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு பெற்றதோடு, சர்வதேசப் பிரச்னைகளில், பாலஸ்தீனத்தையும் கொண்டு புகுத்தும் நிலையை உண்டு பண்ணினர். ஹிட்லரும், நாஜி கட்சியினரும், பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷார் அநுஷ்டிக்கிற கொள்கைகளைப் பரிகசித்துப் பேசி வந்தனர். மற்றும், ஐரோப்பாவின் தென்கிழக்குப் பக்கம், தனது ஏகாதிபத்தியத்தை விரிக்க வேண்டுமென்ற கொள்கையை முன்னிட்டு, நாஜி ஜெர்மனியானது, அராபியர்களுக்கு ஆதரவு காட்ட வேண்டியது அவசியமாயிருந்தது. 1938ம் வருஷம் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நியுரென்பெர்க்கில் நடைபெற்ற நாஜி காங்கிரஸுக்கு, பாலஸ்தீனத்திலிருந்து, நூறு அராபியர்கள் வரவழைக்கப்பட்டு கௌரவமாக உபசரிக்கப் பட்டார்கள். தவிர, பாலஸ்தீனத்தில் கலகம் நடைபெறத் தொடங்கிய காலத்திலிருந்து, சிரியா, லெபனோன் முதலிய நாடுகளில், இத்தலியின் பிரதிநிதிகளும், ஜெர்மனியின் பிரதிநிதிகளும் அதிக சுறுசுறுப்பாயிருந்தார்கள் என்றும், இதன் பயனாகவே, பாலஸ்தீனத்தின் சில பாகங்களில், யூதர்களின் மீதிருந்த துவேஷம் வளர்ந்து ஸ்திரீகளும், குழந்தைகளுங் கூடக் கொல்லப்பட்டார்களென்றும் சொல்லப்படுகின்றன.

பிரிட்டன், இனி என்ன செய்வதென்று யோசித்தது. கீழைப் பிரதேசங்களில் அது செலுத்தி வந்த அதிகாரத்திற்கும், அநுபவித்து வந்த கௌரவத்திற்குமல்லவோ குழி தோண்டப் படுகிறது. ஆகவே, இன்னும், கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லையென்று தீர்மானித்தது. 1938ம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் குடியேற்ற நாட்டு மந்திரியாகிய ஸ்ரீ மால்கோம் மாக்டோனால்ட் பாலஸ்தீனத்திற்கும், இதற்குப் பிரதி மரியாதை செலுத்துவது போல், பாலஸ்தீன ஹை கமிஷனரான ஸர் ஹாரோல்ட் மக் மைக்கேல் லண்டனுக்கும் விஜயஞ் செய்தார்கள். புதிய ராணுவப் படைகள் பல பாலஸ்தீனத்திற்கு வந்து சேர்ந்தன. அடக்கு முறைகள், முன்னிலும் வேகமாகப் பிரயோகிக்கப்பட்டன. ஹை கமிஷனருக்கு விசேஷ அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு, அவை மூலம் அவசர உத்திரவுகள் பிறந்தன; ராணுவ கோர்ட்டுகள் ஸ்தாபிக்கப்பட்டன; ஆயுதமெடுத்துச் செல்வோருக்கு மரண தண்டனையென்று சொல்லப்பட்டது; பத்திரிகைகள் பலத்த கண்காணிப்பில் வைக்கப்பட்டன; சில பிரதேசங்களில் 24 மணி நேரமும், ஜனங்கள் அவரவர் வீடுகளை விட்டு, வெளியே வரக் கூடாதென்று உத்திரவிடப்பட்டது. விசேஷ உத்திரவுகள் பெற்றாலன்றி, எங்கும் பிரயாணஞ் செய்ய முடியாது. கலகஞ் செய்தவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேகிக்கப்பட்ட நபர்களிருக்கும் கிராமங்களுக்குப் பொதுவாக அபராதம் விதிக்கப்பட்டது. எந்த வீட்டிலேனும் கலகக்காரர்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டால், அந்த வீடு உடனே தகர்க்கப்பட்டது. 1938ம் வருஷம் கடைசி பாகத்தில், சில இடங்களில் ஆகாய விமானங்கள் கூட, கலகத்தை அடக்கும் பொருட்டு, உபயோகிக்கப்பட்டன. பிரிட்டிஷ் துருப்புகளுக்கும், யூதர்களுக்கும் அடிக்கடி உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட வண்ணமாகத்தானிருக்கின்றன. ‘பாலஸ்தீன் போஸ்ட்’ என்ற ஒரு பத்திரிகை கணித்த கணக்குப்படி 1938ம் வருஷம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு வருஷத்தில், பாலஸ்தீன முழுவதிலும் 2,000 பேர் கொல்லப்பட்டனர்; 1700 பேருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 486 பேர் அராபியப் பொது ஜனங்கள்; 1,138 பேர் அராபிய கலகக்காரர்கள்; 292 பேர் யூதர்கள்.


  1. இந்தப் பிரதேசத்தில்தான், பாலஸ்தீனத்தின் முக்கியமான ரெயில் பாதையும், ‘ட்ரங்க் ரோட்டும்’ செல்கின்றன.
  2. அராபியர்களுக்கென்று ஒதுக்கப் பட்ட பிரதேசத்தில் உள்ள யூதர்கள் மிகச் சொற்பமே.
  3. அதிக நீளம் சுமார் 110 மைலும், அதிக அகலம் சுமார் 30 மைலும் உள்ள பிரதேசமே யூதருக்கென்று பிரிக்கப்பட்டது
  4. பாலஸ்தீனத்திலுள்ள யூதர்களில் கூட தொழிற் கட்சியினர் என்றும், பாசிஸ்ட்டுகள் என்றும், மிதவாதிகளென்றும், தீவிரவாதிகளென்றும் பல பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், அனைவரும், சமூக நலன் என்ற விஷயத்தில் ஒன்றுபட்டவர்களே.
  5. Sir Charles Tegart.
  6. Tegart's Wall. சுமார் அறுபது மைல் நீளம் இந்த ‘முட் கம்பிச் சுவர்’ போடப் பட்டிருக்கிறது. இதற்கு ஒரு லட்சம் பவுன் செலவழிந்தது.
  7. Sir Harold Mac Michael.
  8. Sir John Woodhead.