பாலஸ்தீனம்/கலகங்கள்

VI
கலகங்கள்

பாலஸ்தீனத்தின் நிருவாகத்தை பிரிட்டனிடம் ஒப்புவிப்பது என்ற பேச்சு, நேசக் கட்சியினருக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே, அங்கு—பாலஸ்தீனத்தில்—யூத—அராபியக் கலகம் தோன்றி விட்டது. ‘மாண்டேடரி’ அரசாங்கம் ஏற்படுமென்ற சூசகம் தெரிந்த காலத்திலேயே, அராபியர்கள் ஆக்ரோஷத்தோடு கிளம்பினார்கள். எனவே, 1936ம் வருஷம் ஏற்பட்ட கலகந்தான், யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் ஏற்பட்ட முதல் கலகம் என்று யாருமே எண்ண வேண்டுவதில்லை.

1920ம் வருஷம் ஏப்ரல் மாதம் அராபியர்கள், யூதர்களைத் தாக்கினார்கள். இதில் ஐந்து பேர் மரணமடைந்தனர்; 211 பேருக்குக் காயம். இந்தக் கலகத்திற்குக் காரணமென்ன வென்பதைப் பற்றி பீல் கமிஷன் அறிக்கை பின் வருமாறு விளக்குகிறது:-

1. யுத்த காலத்தில், தங்களுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படுமென்று பிரிட்டிஷார் அளித்த உறுதி மொழிகள் நிறைவேற்றப் படாமையினால், அராபியர்கள் கலகத்திற்குக் கிளம்பினார்கள்.
2. பால்பர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முறைகள் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரப் படுமானால், அரசியல் விஷயத்திலும், பொருளாதார விஷயத்திலும் தாங்கள் அடிமைகளாகவே இருக்கும்படி நேரிடும் என்ற அராபியர்களின் நம்பிக்கை.
3. உலகத்திலுள்ள எல்லா முஸ்லீம்களும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும் என்ற இயக்கம் அராபியர்களிடையே பரவி வந்தது.

1921ம் வருஷம் ஜாபா நகரத்தில் ஒரு கலகம் ஏற்பட்டது. அது போழ்து, யூதர்களில் 47 பேர் கொல்லப்பட்டனர்; 146 பேர் காயமடைந்தனர். போலீஸார் இந்தக் கலகத்தை அடக்கியதன் விளைவாக, அராபியர்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். 73 பேருக்குக் காயம் ஏற்பட்டது. இந்தக் கலகத்தின் காரணங்களைப் பற்றி விசாரிக்க நியமனம் செய்யப் பெற்ற கமிஷன், தன் அறிக்கையில், யூதர்களின் குடியேற்றத்தினால் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாறுதல்களினால், அராபியர்களுக்குக் கோபம் ஏற்பட்டு, அது யூதர்கள் மீது கலகமாகக் கிளம்பியது என்று குறிப்பிட்டிருக்கின்றது.

இவைகளைக் கொண்டு நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், மத வெறியினால் இந்தக் கலகங்கள் ஏற்படவில்லையென்பது நன்கு புலனாகும். உண்மையான தேசீய உணர்ச்சிதான், அராபியர்களை இங்ஙனம் கலகம் செய்யும்படி தூண்டியது என்னலாம். சாதாரணமாக, பாலஸ்தீனத்தில் கிறிஸ்தவ அராபியர்களுக்கும், முஸ்லீம் அராபியர்களுக்கும் பரஸ்பர அவநம்பிக்கை உண்டு. ஒருவரை யொருவர் எப்பொழுதும் சந்தேகித்த வண்ணமா யிருப்பார்கள். ஆனால், இந்தக் கலகங்களின் போது, இவர்கள் தங்கள் பரஸ்பரப் பகைமைகளையெல்லாம் மறந்து, பொதுச் சத்துருவுக்கு விரோதமாக ஒன்றுபட்டுக் கலகத்தில் இறங்கினார்கள். இஃது எதைக் காட்டுகிறது? அராபியர்களிடையே உட்பிணக்குகள் எத்தனை யிருந்த போதிலும், அவை, தேசீய சுதந்திரம் என்ற பெரிய லட்சியத்திற்கு முன்னர் அடங்கி ஒடுங்கி விடுகின்றன. இதனை தேசீய உணர்ச்சி என்று கூறாது, யூத துவேஷம் என்று உலகத்திலுள்ள முதலாளி வர்க்கம் பறைசாற்றுகிறது. ஆனால், அராபியர்களுக்கு அதைப் பற்றி என்ன கவலை?

1922ம் வருஷத்தில் ஓர் அராபியப் பிரதிநிதிக் கூட்டம் பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு மந்திரியைப் பேட்டி கண்டு பேசிய போது, ‘மாண்டேடரி’ நிருவாக அரசாங்கத்தை அராபியர்கள் அடியோடு நிராகரிக்கிறார்கள் என்றும், பாலஸ்தீனத்திற்கு உடனே பரிபூரண சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி யிருக்கிறார்கள். இதற்குக் கண் துடைப்பாக ஒரு சட்டசபையை ஏற்படுத்திக் கொடுப்போமென்று பிரிட்டிஷ் அரசாங்கத்தார் கூறினர். ஆனால், அராபியர்கள் இதனை மறுத்து விட்டார்கள். இந்த ஆசைத் தூண்டுதலுக்கு அவர்கள் இணங்காமற் போய் விட்டது, ஒரு சில பிரிட்டிஷ் ராஜதந்திரிகளுக்கு ஆச்சரியமா யிருந்தது.

பாலஸ்தீனத்திற்கு வடக்கிலுள்ள சிரியா நாடு பிரெஞ்சு அரசாங்க நிருவாகத்துக் குட்பட்டிருக்கிறதல்லவா? இந்த அரசாங்க நிருவாகத்துக்கு விரோதமாக, சிரியாவிலுள்ள அராபியர்கள் 1925ம் வருஷம் ஒரு பெரிய கலகம் செய்தார்கள். இவர்களுக்கு அநுதாபம் காட்டும் முறையில், பாலஸ்தீன அராபியர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். இதனால், வெளிப்படையான நன்மைகள் ஒன்றும் உண்டாகவில்லையாயினும், அராபியர்களிடையே இருந்த ஒற்றுமை உணர்ச்சி வலுப்பட்டது.

1925ம் வருஷத்திலிருந்து 1928ம் வருஷம் வரையில் சில பொருளாதார காரணங்களுக்காக, யூதர்கள் பாலஸ்தீனத்தில் அதிகமாகக் குடி புகவில்லை. 1925ம் வருஷம் 33,000 யூகர்கள் குடிபுகுந்திருக்க, 1926-27ம் வருஷங்களில் குடி புகுந்த யூதர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக 2,000 யூகர்கள் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறி யிருக்கிறார்கள்! இந்தக் காலங்களில், அராபியர்களின் கிளர்ச்சி சிறிது அடங்கியிருந்த தென்றே கூற வேண்டும். 1929ம் வருஷத்தில் எகிப்து, ஈராக், சிரியா முதலிய நாடுகளில் சுதந்திர உணர்ச்சி முறுக்கேறி நின்றது. இது பாலஸ்தீன அராபியர்களுக்கு ஒரு வித ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளித்தது. இதே சமயத்தில், யூதர்கள் அதிகமாக வந்து குடி புக ஆரம்பித்தார்கள். இவர்களுடைய செல்வாக்கோ நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வந்தது. இந்த உற்சாகமும், ஆத்திரமும் ஒன்று சேர்ந்து, 1929ம் வருஷம் ஆகஸ்ட் மாதம் ஒரு பெரிய கலகமாகப் பரிணமித்தது. இதில் நூற்றுக் கணக்கான யூதர்கள் கொல்லப் பட்டார்கள். அநேகருக்குக் காயம். அரசாங்கத்தார், எகிப்திலிருந்து பிரிட்டிஷ் துருப்புகளை வரவழைத்து, அமைதி ஏற்படுத்தினார்கள். இந்த அமைதி காணு முறையில் நூற்றுக் கணக்கான அராபியர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் போனார்கள். இந்தக் கலக சம்பந்தமாக விசாரணை செய்த கமிஷன், தன் அறிக்கையில், அராபியர்கள் தங்களின் அரசியல் லட்சியங்கள் சிதற அடிக்கப் பட்டு விட்டதாகக் கருதியதாலும், யூதர்கள் பெரும் பான்மையோராகக் குடி புகுவதனால், தங்கள் எதிர்காலப் பொருளாதார வாழ்வு என்ன ஆகுமோ என்று கொண்ட பயத்தினாலுமே, இந்தக் கலகம் ஏற்பட்டதென்று கூறுகிறது.

இந்த 1929ம் வருஷக் கலகத்திற்குப் பிறகு, அராபியர்களின் தேசீய இயக்கமானது ஒழுங்காகவும், கட்டுப்பாடாகவும் வளரத் தொடங்கியது. இதுகாறும் இவர்கள் இந்தத் தேசீய இயக்கத்தின் பெயரால் நடத்தி வந்த போராட்டமானது, அவ்வளவு அரசியல் அநுபவ மில்லாத முறையில் இருந்தது.இப்பொழுதோ, அராபியத் தலைவர்கள் பலர், உலகத்தின் பல பாகங்களிலும், சிறப்பாக இந்தியா, எகிப்து முதலிய நாடுகளில் நடைபெற்று வந்த தேசீயப் போராட்டத்தின் போக்குகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு வந்தனர். இதன் பயனாக, 1932ம் வருஷம் ‘இஸ்திக்ளாலிஸ்ட்ஸ்’ (Istiqlalists) என்ற ஒரு புதிய கட்சி தோன்றியது. தேசீய இயக்கத்தை இன்னும் ஒழுங்காகவும், உறுதிப்பாடுடனும் நடத்த வேண்டுமென்பதே இந்தக் கட்சியின் கொள்கையா யிருந்தது. அதாவது, பெயரளவில் இதுகாறும் தேசீய இயக்கத்தில் சேர்ந்திருந்தவர்களுக்கு, இனி இடமில்லாமற் செய்யப்பட்டது.

1933ம் வருஷம் மார்ச் மாதம் ஜாபா நகரத்தில் ஒரு பெரிய மகாநாடு கூட்டப் பட்டது. இதற்கு, பாலஸ்தீனத்தின் பல பாகங்களிலுமுள்ள அராபிய நகரங்களின் நகரசபைத் தலைவர்கள் வந்திருந்தார்கள். ஒத்துழையாமைத் தத்துவத்தை அங்கீகரிப்பதாகவும், இதன் முதற்படியாக பிரிட்டிஷ் சாமான்களையும், யூதர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களையும், மேற்படியார்களுடைய வியாபார ஸ்தலங்களையும் பகிஷ்கரிக்க வேண்டுமெண்றும் இந்த மகாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்கக் காலத்திலிருந்தே, பாலஸ்தீனத்தில் அராபியர்களின் தேசீயப் போராட்டமானது, இனி மிக உறுதியுடன் நடைபெறு மென்பதற்குக் தேவையான சூசகங்கள் ஏற்பட்டு விட்டன.

பாலஸ்தீன அரசாங்கத்தார், சர்வதேச சங்கத்திற்கு 1933ம் வருஷம் சமர்ப்பித்த ஓர் அறிக்கையில், அராபிய தேசீய இயக்கமானது, முன் போலில்லாமல் இப்பொழுது ஜனங்களின் மனத்தில் நன்றாகப் பதிந்து கொண்டு விட்டதென்றும், இதற்குக் காரணம், சுற்றுப்புற நாடுகளிலுள்ள அராபியர்களின் தேசீய அபிலாஷைகள் ஒன்று திரண்டதேயாகுமென்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். 1933ம் வருஷத்திலிருந்து, அராபியப் பத்திரிகைகள், பிரிட்டிஷாரைத் தாக்கியும், பாலஸ்தீனத்தின் அரசாங்க நிருவாகத்தைப் பிரிட்டிஷார் ஏற்றுக் கொண்டது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொள்கையை யனுசரித்தே யென்றும் எழுதி வந்தன. இவற்றின் விளைவாகவோ என்னவோ, 1933ம் வருஷக் கடைசியில் பிரிட்டிஷாருக்கு விரோதமாக ஒரு பெரிய கலகம் கிளம்பியது. இது பின்னர், அடக்கப்பட்டு விட்ட தென்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை.

இந்த 1933ம் வருஷத்துக் கலகத்திற்கு இன்னொரு முக்கியமான காரணமுமுண்டு. இந்த வருஷம் மார்ச் மாதம், ஜெர்மனியில் நாஜி கட்சியினர் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டனர். இதன் விளைவாக, பாலஸ்தீனத்திற்கு, ஜெர்மனியிலிருந்து ஆயிரக் கணக்கான யூதர்கள் வந்து குடி புகுந்தார்கள். 1933ம் வருஷத்தில் 30,327 யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடி புகுந்திருக்கிறார்கள். இஃது அராபியர்களுக்குப் பெரிய திகிலை உண்டு பண்ணி விட்டது. தங்களுடைய பொருளாதார வாழ்வுக்குச் சாவு மணி அடிக்கப் பட்டு விட்டதாகவே இவர்கள் கருதினார்கள்.

1935-36ம் வருஷங்களில் அராபிய தேசீய இயக்கத்திற்கு ஒரு புதிய சக்தி பிறந்ததென்று கூற வேண்டும். எப்படியென்றால், 1935ம் வருஷக் கடைசியில், எகிப்தில் ஒரு பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. எகிப்திய தேசீய சுதந்திரம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு எழுந்த இந்தக் கிளர்ச்சி, பல ஆண்டுகளாகப் பிரிந்து கிடந்த அநேக அரசியல் கட்சிகளை ஒன்று படுத்தியது. கிளர்ச்சியின் பயனாகக் கலகங்கள் கிளம்பின. எகிப்தின் தேசீய சுதந்திரத்தை அங்கீகரிப்பதாகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் கூறினர். இதன் பிறகே, இந்தக் கிளர்ச்சி நின்றது. எகிப்தியர்கள் அடைந்த இந்த வெற்றி, பாலஸ்தீன அராபியர்களுக்கு ஒரு புதிய ஊக்கத்தைக் கொடுத்ததென்பதில், ஆச்சரியமில்லையல்லவா? இது தவிர, 1936ம் வருஷம் ஜனவரி மாதம், சிரியாவிலுள்ள அராபியர்கள், பிரெஞ்சு அரசாங்கத்தாருக்கு விரோதமாக ஐம்பது நாள் வேலை நிறுத்தமொன்று நடத்தினர். இஃது அவர்களுக்கு வெற்றி யளித்தது. சிரியாவின் மீது தாங்கள் செலுத்தி வரும் ஆதிக்கத்தினின்று விலகிக் கொள்வதாகவும், சுதந்திரம் பெற்ற நாடு என்ற முறையில், சிரியா,சர்வ தேச சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்ந்து கொள்ள விண்ணப்பம் செய்து கொள்ளுமானால், அதனைத் தான் ஆதரிப்பதாகவும் பிரெஞ்சு அரசாங்கம் தெரிவித்தது.[1] அடுத்தாற் போல், சிரியாவில் தங்கள் சகோதரர்களின் நிலைமைக்கும், தங்களுடைய நிலைமைக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டார்கள் பாலஸ்தீன அராபியர்கள். தாங்களும் வெற்றியடைவதற்கான காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு ஏற்பட்டு விட்டது இயற்கைதானே.

1935ம் வருஷ ஆரம்பத்திலிருந்தே, பாலஸ்தீன தேசீய இயக்கமானது, சில நிர்மாண வேலைகளைச் செய்ய முற்பட்டது. அராபிய பாங்கி ஒன்று திறக்கப் பட்டது. அராபிய இளைஞர் சங்கங்கள் ஆங்காங்குத் தோன்றி, ஜனங்களிடையே பிரசாரஞ் செய்தன. அராபிய அரசியல் வாதிகளிடையே ஆறு விதமான அரசியல் கட்சிகள் இருந்தனவல்லவா? இவற்றில் ஐந்து கட்சிகள், தங்களுடைய கருத்து வேற்றுமைகளை யெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு, தேச நலனுக்காக ஒன்று சேர்ந்தன. இவை தவிர, யூகர்களுக்கு நிலங்களை விற்கக் கூடாதென்று மசூதிகளிலும் பத்திரிகைகளிலும் பலத்த பிரசாரஞ் செய்யப்பட்டது.

இதனோடு அராபிய தேசீய வாதிகள் நிற்கவில்லை. 1935ம் வருஷம் நவம்பர் மாதம், இவர்கள் ஒரு பிரதிநிதிக் கோஷ்டியாகச் சேர்ந்து, அப்பொழுதைய பாலஸ்தீனத்து ஹை கமிஷனராயிருந்த ஸர் ஆர்தர் வாக்கப் (Sir Arthur Wauchope)பைப் பேட்டி கண்டு ஒரு யாதாஸ்தைச் சமர்ப்பித்தனர். இதில் தங்கள் கோரிக்கை இன்னின்னவையென்று விரிவாகக் குறிப்பிட்டிருந்தனர். இவற்றுள் முக்கியமானவை (1) பாலஸ்தீனத்தில் ஜன நாயக முறையில் அரசாங்கம் அமைதல் வேண்டும்; (2) யூகர்களுக்கு நிலங்கள் விற்கப்படுவது தடுக்கப் பட வேண்டும்; (3) யூகர்கள் குடி புகுவது நிறுத்தப் பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கு முகத்தான், ஹை கமிஷனர் விடுத்த அறிக்கையில், பாலஸ்தீனத்திற்கென்று வரம்பிட்ட சில அதிகாரங்களுடைய ஒரு சட்ட சபை ஏற்படுத்தப் பெறுமென்றும், இதில் தெரிந்தெடுக்கப் பட்ட அங்கத்தினர்கள் பன்னிரண்டு பேரும், நியமன அங்கத்தினர்கள் பதினாறு பேரும் இருப்பர் என்றும் காணப்பட்டிருந்தன. இதனை அராபியத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தாங்கள் கோரிய ஜனநாயக அரசாங்கத்திற்கும், இந்தச் சட்டசபை அமைப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்றும், தேசீய சுதந்திரமே தங்களுடைய லட்சியமென்றும் வற்புறுத்திப்பேசி வந்தார்கள்.

ஆனால், யூதத் கலைவர்கள், இந்தச் சட்டசபை அமைப்பைக் கூட எதிர்த்து வந்தார்கள். ‘பாலஸ்தீனம் தற்போது அபிவிருத்தியாகிக் கொண்டு வரும் நிலையில், இந்தச் சட்டசபை அமைப்பானது, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குச் சர்வ தேச சங்கத்தினால் அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கு முரண்பட்டதாகும்’ என்று இவர்கள் கிளர்ச்சி செய்தார்கள். இதனோடு கூட, 1936ம் வருஷம் மார்ச் மாதம், பாலஸ்தீனத்தில் சட்டசபை அமைக்கும் திட்டமானது, பிரிட்டிஷ் பார்லிமெண்டில் கொண்டு வரப் பட்டுத் தோல்வியடைந்தது. அந்தச் சம்பவங்களைக் கொண்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்தார், தாங்களாக மனமுவந்து சுய ஆட்சியின் ஓர் அமிசத்தைக் கூட கொடுக்க மாட்டார்கள் என்று அராபியர்கள் தீர்மானித்து விட்டார்கள்.

1936ம் வருஷம் ஏப்ரல் மாதம் 15ந் தேதியிலிருந்து 19ந் தேதிக்குள், ஜாபா நகரத்திலும், அதற்கருகாமையிலுள்ள டெல்—அவீவ் நகரத்திலும் அராபியர்களுக்கும், யூதர்களுக்கும் சில்லரைச் சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. இதனால், பாலஸ்தீனத்தின் மற்றப் பாகங்களிலுள்ள அராபியர்களுக்கு ஒரு வித ஆத்திரம் உண்டாயிற்று. ‘நாப்ளுஸ்’ என்ற நகரத்தில் கூடிய ஒரு கூட்டம், பொது வேலை நிறுக்கம் நடத்த வேண்டுமென்று தீர்மானித்தது. இதற்காக ஒரு கமிட்டியும் தெரிந்தெடுக்கப்பட்டது. இங்ஙனமே, அராபியர்கள் வசிக்கும் எல்லா நகரங்களிலும் கமிட்டிகள் நியமிக்கப்பட்டன. யூதர்கள் குடி புகுவதைத் தடுக்க வேண்டுமென்றும், அவர்களுக்கு நிலங்கள் விற்கப்படுவதை நிறுத்த வேண்டுமென்றும், தேசீய அரசாங்கத்தை உடனே ஏற்படுத்த வேண்டுமென்றும் இந்தக் கமிட்டிகள் பலவும் தீர்மானங்கள் நிறைவேற்றி, அரசாங்கத்திற்கு அனுப்பி வந்தன. இங்ஙனம், கமிட்டிகள் ஆங்காங்குத் தனித் தனியாக வேலை செய்து வருவது சரியில்லையென்று கருதி, 1936ம் வருஷம் ஏப்ரல் மாதம் 25ந் தேதி ‘அராபிய பெரிய கமிட்டி’ (Arab Higher Committee)யொன்று ஸ்தாபிக்கப்பட்டது. இதனை ‘மத்திய காரியக் கமிட்டி’யென்று சொல்லலாம். இதில் ‘இஸ்கிக்ளாலிஸ்டுகள்’ உள்பட எல்லா அராபியக் கட்சியினரும் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தார்கள். இதன் தலைமைப் பதவி ஜெருசலேம் நகரத்தின் ‘கிராண்ட் மப்டி’ (Grand Mufti)யாகிய ஹாஜ் அமீன் எல் ஹுஸேனிக்கு அளிக்கப்பட்டது. பாலஸ்தீனத்திலுள்ள அராபியர்களுக்கு இந்த 'மப்டி' மதத் தலைவராக மட்டும் இல்லை; அரசியல் தலைவராகவும் இருந்தது இங்குக் குறிப்பிட்டது. தவிர, உலக முஸ்லீம்களிடையே ஜெருசலேம் 'மப்டி'க்கு அதிகமான செல்வாக்கு உண்டு.[2]

முதலில் சிறிய கமிட்டிகள் ஆங்காங்கு ஏற்பட்டு, பிறகு பெரிய கமிட்டி ஏற்பட்டது நமக்கு எதை அறிவுறுத்துகிறது? பாலஸ்தீனத்தில் தோன்றிய தேசீய உணர்ச்சியானது, ஆரம்பத்தில் பாமர ஜனங்களிடத்திலிருந்தே உற்பத்தியாயிற்றென்பதும், இஃது ஒரு வகையாக வளர்ந்து வருகையில்தான், தலைவர்கள் இதனைக் கைப்பற்றிக் கொண்டு நடத்தத் தொடங்கினார்களென்பதும் விளங்கவில்லையா? இதனால், மேலே கூறப்பட்ட சிறிய கமிட்டிகள், சந்தர்ப்பத்திறகுத் தகுந்தாற் போல், தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சுபாவமுடைய தலைவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களை ஒழுங்குபடுத்தி ஒரு நிலையில் நிறுத்தி வைக்கக் கூடிய சக்தி பெற்றிருந்தன. பொதுவாகவே, இந்தச் சிறிய கமிட்டிகளுக்குத்தான் அதிகமான செல்வாக்கு இருந்தது.

பொது ஜனங்களுடைய உற்சாகத்தினாலும், கட்டுப்பாட்டினாலுமே அராபிய தேசீய இயக்கம் முறுக்கேறி நிற்கிறதென்பதற்கு ஒரு சிறிய உதாரணம்: 1936ம் வருஷம் மே மாதம் வரி கொடா இயக்கம் தொடங்கப் பெற்றது. இந்த இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று தலைவர்கள் யோசனை கூறவில்லை. வாடகைக்கு மோட்டார் ஓட்டும் அராபியர்களின் கமிட்டிதான் இந்த யோசனையைக் கூறியது. பிறகே அனைவராலும் இஃது அங்கீகரிக்கப்பட்டது.

சிறிய கமிட்டிகளின் ஏற்பாட்டின்படியும், ஒழுங்கான வேலைத் திட்டப்படியும், பாலஸ்தீனத்தின் பல பாகங்களிலும், சுமார் ஆறுமாத காலம் வரை வேலை நிறுத்தங்கள் நடைபெற்று வந்தன. ஒத்துழையா இயக்கம் தீவிரமாகப் பரவி நின்றது. ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு, பலாத்காரம் தோன்றி விட்டது. நகரங்களில் வெடிகுண்டு எறிவதும், துப்பாக்கிப் பிரயோகமும் தினசரி சம்பவங்களாகி விட்டன. கிராமங்களில், போக்குவரவு சாதனங்களாகிய பாலங்கள் உடைக்கப்பட்டன; தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன; ரெயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. யூதர்கள் வசித்த நகரங்கள் அடிக்கடி தாக்கப்பட்டு, பல சேதங்கள் விளைவிக்கப்பட்டன. கலகக்காரர்களின் செய்கையினால், அநேக இடங்களில் மரங்கள் சாய்ந்து வீழ்ந்தன. மகசூல் செய்யப்பட்டு நிலங்களில் குவிந்திருந்த விளை பொருள்கள், நெருப்பினாலும் வேறு வகையாலும் சேதமாயின. பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டார்கள். 1936ம் வருஷம் ஜூலை மாதத்திலிருந்து, மோசூலிலிருந்து வரும் பெட்ரோல் எண்ணெய்க் குழாய், பல இடங்களில் துளை செய்யப்பட்டும், தீ வைக்கப்பட்டும் சேதங்கள் உண்டு பண்ணப் பட்டன. இறுதியாக, மலைப் பிரதேசங்களில் ஆயுதந் தரித்த சிறு சிறு கூட்டங்கள் ஒன்று சேர்ந்து, கொள்ளையடிக்க ஆரம்பித்தன. கொலைகளும் நடைபெற்றன. அமைதியாகத் தொடங்கிய வேலை நிறுத்தமானது, ஆயுதந் தரித்த புரட்சியாக மாறி விட்டது.

வேலை நிறுத்தம் தொடங்கிய காலத்தில், அரசாங்கத்தார் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளவில்லை. தானாகவே அடங்கி விடும் என்று கருதினர் போலும். பின்னர், தீவிரமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளத் தீர்மானித்தனர். 1936ம் வருஷம் மே மாதம் எகிப்திலிருந்து துருப்புகள் வரவழைக்கப்பட்டன. ஜூன் மாதம் அராபியத் தலைவர்கள் பலர் காப்பில் வைக்கப் பட்டார்கள். அடக்குமுறை தாண்டவம் செய்யத் தொடங்கியது.கலகக்காரர்களை ஒளித்து வைத்திருக்கிற இடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட வீடுகள், தகர்த்தெறியப்பட்டன. ஏதேனும், ஒரு கிராமத்தில் பலாத்காரச் செயல் நடை பெற்றால், அந்தக் கிராமத்திலுள்ள அனைவருக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தச் சமயத்தில் ஜாபா என்ற நகரத்தில் ஒரு சிறிய சம்பவம் நடைபெற்றது. இஃது அராபியர்களுக்கு இன்னும் அதிகமான ஆத்திரத்தை உண்டு பண்ணிவிட்டது. நகரத்தின் நெருக்கமானதோரிடத்திலிருந்த சில வீடுகள் இடித்துச் சமதரையாக்கப் பட வேண்டுமென்று அதிகாரிகள் தீர்மானித்தார்கள். கட்டிடங்கள் இங்ஙனம் சேர்ந்தாற் போலிருப்பதால், நகர சுகாதாரத்திற்குத் தீங்கு ஏற்படுகிறதென்றும், நகர புனர் நிர்மாண திட்டத்தை உத்தேசித்து, இவை இடிக்கப்பட வேண்டுமென்றும் அதிகாரிகள் சமாதானம் கூறினார்கள். இந்த நெருக்கமான இடத்திலுள்ள கட்டிடங்களில்தான் கலகக்காரர்கள் ஒளிந்து கொண்டிருந்து, துப்பாக்கிப் பிரயோகம் செய்து வந்தார்கள் என்ற பேச்சும் அப்பொழுது இருந்தது. கடைசியில் இந்த இடத்திலிருந்த சுமார் ஆறாயிரம் பேர், சில மணி நேர முனனெச்சரிக்கையுடன் காலி செய்யுமாறு கூறப்பட்டார்கள். இவர்கள் தங்கள் உயிரைத்தான் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது; தங்கள் உடமைகளை அப்படியே விட்டு விட்டுப் போய் விட்டார்கள். இது சம்பந்தமாக, பாலஸ்தீன ஹைகோர்ட்டில் நடைபெற்ற ஒரு வழக்கில், பிரதம நீதிபதியான ஸர் மைக்கல் மக்டோனால்ட் தீர்ப்பளிக்கிற போது, ‘நகர நிர்மாண திட்டத்தை உத்தேசித்தும், சுகாதார காரணங்களுக்காகவும் இந்தக் கட்டிடங்களை இடிக்கிறோமென்று அரசாங்கத்தார் சமாதானம் கூறாமல், தற்காப்புக்காக இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியிருந்ததென்று உண்மையாகச் சொல்லியிருந்தால், அது மிகவும் கௌரவமாயிருந்திருக்கும்’ என்று குறிப்பிட்டது பலருடைய கவனத்தையும் இழுத்தது.[3]

1936ம் வருஷம் செப்டம்பர் மாதம் ராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. சுமார் இருபதினாயிரம் துருப்புகளை, பாலஸ்தீனத்தின் பல பாகங்களுக்கும் அனுப்பி, பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராணுவச் சட்டத்தின் கீழ், நாடெங்கணும் கண்டிப்பான உத்திரவுகள் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டன. பார்த்தார்கள் அராபியத் தலைவர்கள். இந்த மகத்தான சேனாபலத்தின் முன்னர், மிகச் சிறிய நாட்டிலேயுள்ள அவர்கள் என்ன செய்ய முடியும்? சுற்றுப்புறமுள்ள சகோதர ஜாதியாரிடமிருந்து இவர்களுக்குப் பல வகை உதவிகள் கிடைத்தனவென்று சொல்லப் பட்டது கூட உண்மையாயிருக்கலாம். ஆனால், அந்த வெளி உதவிகளை வைத்துக் கொண்டு, இவர்கள் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியும்? ஒளிந்து, ஒளிந்து சண்டை போடுவதற்குக் கூட முடியாதபடி, பிரிட்டிஷ் துருப்புகளின் பந்தோபஸ்து ஏற்பாடு இருந்தது. சுமார் ஆறு மாத காலம், இவர்களுடைய வியாபாரமே இல்லாமற் போய் விட்டது. புரட்சிக்காரர்களுக்கு யார் இனி உணவு அளிப்பது? அப்படி யாராவது கொடுக்க முன் வந்தாலும், எவ்வளவு காலம் கொடுக்க முடியும்?

பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும், பாலஸ்தீனத்தை ரத்தக் களரியாக்க விரும்பவில்லை. இதை உத்தேசித்தே, 1936ம் வருஷம் ஜூலை மாதம், பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்பட்ட பிறகு, அங்கு ஏற்பட்ட கலகங்களுக்கு அடிப்படையான காரணங்கள் என்னவென்று விசாரிப்பதற்கும், ‘மாண்டேடரி’ அரசாங்க நிருவாகத்தின் கீழ் அராபியர்கள், யூதர்கள் முதலியோர் அநுபவித்து வரும் கஷ்ட நிஷ்டூரங்களைப் பற்றி விசாரிப்பதற்கும், லார்ட் பீல் என்பவனுடைய தலைமையில் ஒரு ராயல் கமிஷன் நியமனம் பெறுமென்று ஓர் அறிக்கை வெளியிட்டனர்.

இது தவிர, பாலஸ்தீனத்தைச் சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளின் அரசர்களும், இந்தக் கலகம் நீடித்துச் செல்வதை விரும்பவில்லை. அராபியா, ஈராக், ட்ரான்ஸ் ஜார்டோனியா ஆகிய இந்த மூன்று நாட்டு மன்னர்களும், இனியும் ரத்தப் பெருக்கு ஏற்படாமல் சமாதானம் செய்து கொள்வது நல்லதென்ற கருத்துப்பட ‘அராபிய பெரிய கமிட்டிக்’கு (Arab Higher Committee) கடிதங்கள் எழுதினார்கள். இந்த மூவர் எழுதிய கடிதங்களையும், மேற்படி கமிட்டியார் 1936ம் வருஷம் அக்டோபர் மாதம் 12ந் தேதி வெளியிட்டனர். அடுத்த நாள் 13ந் தேதி, வேலை நிறுத்தம் இனித் தேவையில்லையென்றும், இனி அவரவர் அலுவல்களைக் கவனிக்கலாமென்றும், ‘அராபிய பெரிய கமிட்டி’யார் அறிக்கை வெளியிட்டனர். அதற்கு மறுநாள் 14ந் தேதி, மலைப் பிரதேசங்களில், ஆயுதபாணிகளாக இருந்து கொள்ளை, கொலை முதலியன நடத்தி வந்த பல திறக் கூட்டத்தினரையும், அவற்றின் தலைவனான பவுஜீத்தின்—அல்—காலாக்ஜி என்பவன் கலைத்து விட்டான்.

நாட்டில் ஒரு வகையாகச் சமாதானம் ஏற்பட்டது. அராபியர்கள் எழுப்பிய புரட்சி, தோல்வியடைந்து விட்டதென்று பிரிட்டிஷ் அரசாங்கத்தினரும், அவர்களின் நிழலில் வாழ்கின்ற யூதர்களும் கூறிக் கொண்டார்கள். ஆனால், அராபியர்களோ, தற்காலிகமாக இந்தப் புரட்சி தோல்வியடைந்து போனதாகக் காணப்பட்டாலும், பாலஸ்தீன தேசீய இயக்கத்திற்கு, அராபிய உலகம் முழுவதும் ஆதரவளிக்கிறதென்பதை இது நிரூபித்து விட்டதென்றும், இதன் மூலமாக அராபியர்களின் ஒற்றுமை வெளியாயிற்றென்றும் சொல்லிக் கொண்டார்கள்.


  1. 29-3-1937ல் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தப்படி சிரியா, லெபனோன் பிரதேசங்களின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, 1939ம் வருஷத்தோடு பிரெஞ்சு நிருவாகம் சிரியாவில் முடிந்து விட வேண்டும். ஆனால், சிரிய ராஜதந்திரிகளுக்கு இது விஷயத்தில் சந்தேகமும், கவலையும் இருக்கிறதென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
  2. ‘மப்டி’ என்பது அராபியச் சொல். சட்டத்தை விவகரிப்போர் என்று அர்த்தம். துருக்கி சாம்ராஜ்யத்தில் இந்த ‘கிராண்ட் மப்டி’ பதவிக்கு அதிகமான செல்வாக்கு இருந்தது.1924ம் வருஷம் துருக்கியக் குடியரசு அரசாங்கம் இந்தப் பதவியை ரத்து செய்து விட்டது. ஜெருசலேத்தின் ‘கிராண்ட் மப்டி’, பாலஸ்தீனத்திலுள்ள முஸ்லீம்களின் பிரச்னைகள் சம்பந்தமாக அரசாங்கத்தாருக்கு ஆலோசனை கூற, 1921ம் வருஷம் ஹை கமிஷனரால் நியமிக்கப்பட்ட ‘முஸ்லீம் தலைமைச் சங்க’த்திற்கும் (Moslem Supreme Council) தலைமை வகிப்பது கவனிக்கத்தக்கது.
  3. What's up in Palestine—Michael Greenberg p. 52.
"https://ta.wikisource.org/w/index.php?title=பாலஸ்தீனம்/கலகங்கள்&oldid=1672369" இலிருந்து மீள்விக்கப்பட்டது