பாலஸ்தீனம்/யூதர்கள் சாதித்ததென்ன?

V
யூதர்கள் சாதித்ததென்ன?

பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறியதைப் பற்றியும், அவர்கள் அந்த நாட்டில் என்னென்ன காரியங்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் சிறிது கூறுவோம். பாலஸ்தீனத்தின் நிருவாகத்தைப் பிரிட்டன் ஏற்றுக் கொண்ட பிறகு, இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் உள்ள யூத முதலாளிகள், தங்களுடைய மூலதனத்தை பாலஸ்தீனத்தில் அதிகமாகக் கொண்டு போட்டார்கள். தங்களுடைய பூர்விக நாடான பாலஸ்தீனம், மீண்டும் தங்களுடைய உரிமை நாடாக்கப் பட்டதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து, பாலஸ்தீனத்திலேயே நிரந்தர வாசம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு, உலகத்தின் பல பாகங்களிலிருந்தும், அநேக யூதர்கள் வந்து குடியேறினார்கள். மத்திய ஐரோப்பிய நாடுகளில் யூத துவேஷம் வளர, வளர பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றமும் அதிகமாகிக் கொண்டு வந்தது. சிறப்பாக, ஹிட்லர் 1933ம் வருஷம் மார்ச் மாதம் ஜெர்மனியின் சர்வாதிகாரியான பிறகு, பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடிப் பெருக்கம் அதிகம். உதாரணமாக,
1932
ம் வருஷம்
9,553
யூதர்கள்
1933
"
30,327
"
1934
"
42,359
"
1935
"
61,854
"
பாலஸ்தீனத்தில் குடிபுகுந்திருக்கிறார்கள். இங்ஙனமே, வருஷந்தோறும் சராசரி 50,000 யூதர்கள் விகிதம் குடி புகுவார்களானால், 1950ம் வருஷத்தில் அராபியர்களை விட, யூதர்களே பெரும்பான்மையோரான சமூகத்தினராகி விடுவரென்று ஓர் அறிஞன் கருதுகிறான்.

குடி புகுந்த யூதர்கள், மேனாட்டு சமுதாய அமைப்பை அப்படியே கொண்டு வந்து புகுத்தினார்கள். அதனோடு, தங்கள் உழைப்பினாலும், திறமையினாலும், எந்தத் தொழிலில் பிரவேசித்தாலும், அதனை அபிவிருத்தி செய்தார்கள். ஆயிரம் பவுன் மூலதனமுள்ள எந்த யூதனும், தாராளமாகக் குடியேறலாம் என்ற விதி அநேக சிறிய பணக்காரர்களை, பாலஸ்தீனத்தில் கொண்டு நிரப்பியது. இவர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம், விவசாயம் முதலியன செய்து வந்ததோடு கூட, பொதுவுடமை முறையிலும் விவசாயம், வியாபாரம் முதலியன செய்து வந்தார்கள். சமுதாயத்திற்குப் பொதுவான விவசாய நிலங்கள், தொழில் ஸ்தாபனங்கள் முதலியவற்றைச் சுற்றி அநேக யூத நகரங்கள் நவீன நாகரிக முறையில் தோன்றி யிருக்கின்றன.[1]

ஜாபா நகரத்திற்கு வெளியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் மணற்காடாக இருந்த இடம் இப்பொழுது டெல்—அவீவ் (Tel—Aviv) என்ற சிறந்த யூத நகரமாக விளங்குகிறது. இதில் சுமார் 1½ லட்சம் யூதர்கள் வசிக்கிறார்கள். இவை தவிர, யூத முதலாளிகள் பிரிட்டிஷ், அமெரிக்க முதலாளிகளின் துணை கொண்டு பாலஸ்தீனத்தின் இயற்கைப் பொருள்கள் பலவற்றைச் சுரண்டி வியாபாரப் பொருள்களாக விநியோகிக்கக் கூடிய வண்ணம் அநேக தொழில் ஸ்தாபனங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ‘டெட் ஸீ பொடாஷ் கம்பெனி’[2] ‘பாலஸ்தீன் எலெக்ட்ரிக் கார்ப்பொரேஷன்’[3] ‘நெஷர் சிமெண்ட் கம்பெனி’[4] ஆகிய இந்த மூன்றும் பாலஸ்தீனத்தின் பெரிய தொழில் ஸ்தாபனங்கள். இந்த மூன்றிலும், யூத, பிரிட்டிஷ், அமெரிக்க மூலதனம் சேர்ந்திருக்கிறது.

இந்தப் புதிய நகரங்களையும், தொழில் ஸ்தாபனங்களையும் எடுத்துக் காட்டி ‘எங்களுடைய குடியேற்றத்தினால் பாலஸ்தீனத்தில் என்னென்ன சாதகங்கள் ஏற்பட்டிருக்கின்றன பார்த்தீர்களா’ என்று யூதர்கள் பெருமையாகப் பேசுகிறார்கள். இவர்கள் கூறும் வாதங்களில் சில வருமாறு:-

1 உலகனைத்தும் பொருளாதார மந்தத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், பாலஸ்தீனம் ஒன்றுதான் அதனால் பாதிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் எங்களுடைய வியாபாரத் திறமைதான்.

2 எங்கள் குடிப் பெருக்கத்தினால், தேசத்தின் செல்வ நிலை உயர்ந்திருக்கிறது.

3. நாங்கள் செய்யும் வியாபாரத்தினாலோ, நடத்தும் தொழில்களினாலோ அராபியருக்கு பாதகம் ஏற்படவில்லை. அதற்கு மாறாக, சாதகமே ஏற்பட்டிருக்கிறது. எப்படியென்றால், எங்களின் தொழில் ஸ்தாபனங்கள் பெருகப் பெருக, அராபியர்களுக்கு அதிகமான கூலி வேலை கிடைக்கிறது. அவர்களுடைய விவசாயப் பொருள்களுக்கும் நல்ல விலை கிடைக்கிறது.

4. நாங்கள் நவீன வைத்திய வசதிகளையும், சாஸ்திரீய விவசாய வசதிகளையும் பாலஸ்தீனத்தில் கொண்டு புகுத்தியிருக்கிறோம்.

5. எங்களுடைய குடியேற்றத்தினால், அராபியர்களின் வாழ்க்கை அந்தஸ்து உயர்ந்திருக்கிறது.

இப்படியெல்லாம், இவர்கள் கூறிக் கொண்டு வந்த போதிலும், டெல்—அவீவ் நகரத்திற்கு வெகு சமீபத்தில்தான், ஆயிரக்கணக்கான அராபிய விவசாயிகள் மண் குடிசைகளிலும், மரப் பொந்துகளிலும் வசிக்கிறார்கள். யூதர்கள் வசிக்கிற புதிய ஜெருசலேம் நகரத்தைத் தாண்டி, அராபியர்கள் வசிக்கும் பழைய ஜெருசலேம் நகரத்தைச் சென்று பார்த்தால், யாருக்குமே ஒரு திகைப்பு உண்டாகும். அராபிய விவசாயிகளின் அல்லது தொழிலாளர்களின் வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்தும் விஷயத்தில், யூதர்கள் எவ்வளவு சிரத்தை கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, மேலே கூறப்பட்ட காட்சிகள் மௌனமாகப் பதிலளிக்கின்றன.

பொதுவாகவே, அராபியர்களுடைய தேசீய உணர்ச்சிக்கு, யூதர்கள் அவ்வளவு மதிப்புக் கொடுக்கவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். தங்களுக்கு விரோதமாக, அராபியர்கள் காட்டும் எதிர்ப்பெல்லாம் வெறும் போலி எதிர்ப்பே என்பது இவர்கள் கருத்து. பாலஸ்தீனத்தில் யூதர்கள் கொண்டு புகுத்தியிருக்கும் புதிய நாகரிகம், உயரிய வாழ்க்கை, அந்தஸ்து முதலியவைகளினால், தங்களுடைய செல்வாக்கு எங்குக் குறைந்து விடுமோவென்று அஞ்சும் சில அராபிய நிலச் சுவான்தார்கள், மதத் தலைவர்கள் முதலியோருடைய தூண்டுதலின் பயனாகவே, இந்த அராபியக் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதென்று யூதர்களுக்கு அநுதாபங் காட்டுகிற வேற்று நாட்டார் சிலர் கூட நினைக்கிறார்கள். என்ன விந்தை!

யூதத் தலைவர்கள் பேசும் பேச்சுக்களில் கூட, அராபிய உணர்ச்சிக்கு மதிப்புக் காட்டவில்லை. தாங்கள் அராபியர்களோடு சமரஸம் பேசத் தயாராயிருப்பதாக மட்டும் இவர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஒரே ஒரு நிபந்தனையுடன். யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடி புகும் உரிமையானது, இந்தச் சமரஸப் பேச்சுக்களினால், எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்கிறார்கள். இதுதானே மூலாதாரமான பிரச்னை. இதில், அராபியர்கள் எளிதில் இணங்கிப் போவார்களா? ‘அராபிய அரசியல்வாதிகளோடு சமரஸம் பேசுவதென்பது நடை பெற முடியாத காரியம்’ என்கிறான் யூதத் தொழிலாளர் கட்சித் தலைவர்களில் ஒருவன். 1936 வருஷம், அகில உலக ஜையோனிய ஸ்தாபனத்தின் தலைவனான டாக்டர் வீஸ்மான் பின் வருமாறு கூறினான் :--

எங்கள் பொறுப்பை நன்கு உணர்ந்து கொண்டு, அராபியத் தலைவர்களுக்கு நாங்கள் கூறுவதென்னவென்றால், இன்று நாங்கள் சிறுபான்மையோராக இருக்கலாம்; நாளை நாங்கள் பெரும்பான்மையோராகி விடலாம். இன்று நீங்கள் பெரும்பான்மையோராக இருக்கலாம்; நாளை நீங்களே சிறுபான்மையோராகி விடலாம். பாலஸ்தீனத்திலே என்ன நடைபெற்றாலும் சரிதான்; நாங்கள் பிறரை ஆதிக்கம் செலுத்தவும் விரும்பவில்லை. பிறரால் ஆதிக்கம் செலுத்தப்படவும் விரும்பவில்லை.


  1. இந்தப் பொதுவுடமை விவசாய ஸ்தாபனங்கள் யூதர்களின் ஒழுங்கிற்கும், கட்டுப்பாட்டிற்கும் சிறந்த உதாரணங்களாய் விளங்குகின்றன. இவைகளுக்கு ‘க்வூஸோ’ (Kvutzot) என்று பெயர். இங்ஙனம் சுமார் 230 ‘க்வூஸோ’க்கள் இருக்கின்றன. ஒரு குடும்பத்தினரைப் போலவே, இங்குள்ளவர்கள் வசிக்கிறார்கள். எல்லோருக்கும் பொதுவான சமையல், பொதுவான கடை, பள்ளிக்கூடம், புஸ்தகசாலை முதலியன இருக்கின்றன. எல்லாரும் சேர்ந்துதான் இங்கு வேலை செய்கிறார்கள். கூலிக்கு ஆட்களை அமர்த்துவது கிடையாது. அவரவர் திறமைக்கும், தேவைக்கும் தகுந்தபடி வேலை செய்ய வேண்டும் என்ற நியதி அநுஷ்டானத்தில் இருந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய உழைப்பை சமுதாயத்திற்குக் கொடுத்து, அதற்குப் பதில் தங்களுடைய தேவைகளை அந்தச் சமுதாயத்திலிருந்தே பெறுகிறார்கள். சமுதாய அந்தஸ்து விஷயத்திலோ, பொருளாதார நிலைமை காரணமாகவோ எவ்வித வேற்றுமையும் இங்குக் காண்பிக்கப்படுவதில்லை. ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் சம அந்தஸ்தும், சம சுதந்திரமும் உண்டு. ஒவ்வொரு ‘க்வூஸோ’விலும் சராசரி 100 பேருக்கு மேல் 700 பேர் வரையில் வசிக்கிறார்கள். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்று பணமாக்க, ‘மத்திய கூட்டுறவு ஸ்தாபனம்’ ஒன்றிருக்கிறது. ‘யூத தேசீய நிதி’யிலிருந்து இந்த ‘க்வூஸோ’க்களுக்குப் பணவுதவி கிடைக்கிறதென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
  2. Dead Sea Potash Company.
  3. Palestine Electric Corporation.
  4. Nesher Cement Company.