பாலைப்புறா/அத்தியாயம் 12
சங்கரன், பேசாமல் இருப்பதில், டாக்டர் சந்திராவுக்கு எந்த ஆச்சரியமும், ஏற்படவில்லை. கார் ஓட்டும் போது, அந்த பக்கமோ, இந்தப் பக்கமோ பார்க்க மாட்டான். உடம்பில் நமைச்சல் ஏற்பட்டால் கூட, அதை வெளிப்படையாய்க் காட்டிக் கொள்ள மாட்டான். ஏதோ தன்னந்தனியாய், பேடி வேடத்தில் இருந்த அர்ச்சுனன், துரியோதனன் படைகளை எதிர் கொண்டது மாதிரி, எதிரே வரும் கௌரவ வாகனங்களை எதிர்த்து, பயங்கரமான ஒரு பெரும் போரை நடத்துவது போல், காரை ஓட்டுகிறவன். இது பயமா அல்லது, கருமமே கண்ணான ஒன்றிப்பா என்பது அவளுக்குத் தெரியாது. சென்னை விமான நிலையத்திற்கு பத்து மணிக்கு வர வேண்டிய டில்லி விமானம், பன்னிரண்டு மணிக்குத்தான் வந்தது. விமான நிலையத்தில், அவளை எதிர் கொண்டழைத்த சங்கரன் பேசிய முதல் பேச்சே ‘அந்த கிராதகன் அசோகன் வரலையா…’ என்ற கேள்விதான். அதற்குப் பதிலாய், சந்திரா சிரித்தாள். அவன் புருவங்களை, காவடியாய் வளைத்த போது, ‘அவரும் ஒங்களை இப்படித்தான் நினைக்கார்’ என்றாள். உடனே ‘நான் ஆபீஸ்க்கு வேற போகணும்… சீக்கிரம்… குயிக்’ என்று சங்கரன் சொன்னதோடு சரி.
சந்திரா, தாய் மாமா மகனான இந்தச் சங்கரனிடம், டில்லி அனுபவங்களைப் பற்றிப் பேச துடித்துக் கொண்டிருந்தாள். புது டில்லியில், தமிழக அரசின் தமிழ்நாடு இல்லத்தில், தனி அறையில், இவனை நினைத்துக் கொண்டதால், தூக்கம் கெட்டதை, அவன் தலையில் குட்டிக் குட்டிச் சொல்ல வேண்டும். திரும்பி வரும் போது, விமானத்தில், பக்கத்தில் உட்கார்ந்த ஒரு பாடாவதி கிழவிக்குப் பதிலாக, இவன் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்ததைச் சொல்ல வேண்டும்… இப்போது சொன்னால், 110 பாலைப்புறா
கேட்கமாட்டான். வரட்டும்... வரட்டும். வீட்டுக்கு வரட்டும்...
சென்னை நரகத்தின் நகரமான அண்ணா நகரில், ஒரு மூலையில், பெரிதாகவோ, சிறிதாகவே, இல்லாத சராசரி வீட்டின் முன்னால் கார் நின்றதும், சந்திரா துள்ளிக் குதித்து கீழே இறங்கினாள். வாசலுக்கு வந்துவிட்ட அத்தையைப் பற்றிக் கொண்டாள். அந்த முத்தமும் இந்தப் பற்றுதலும், குடும்பத்தை நண்டும் சிண்டுமாய் விட்டுட்டு, மாரடைப்பால் தந்தை மரணமானபோது, குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்த தாய் மாமாவுக்கு நன்றி சொல்வது போல் இருந்தது. மாமாவின் பேருதவியை, முணுமுணுக்காத - இன்னும் சொல்லப் போனால், உறுதுணையாக நின்ற இந்த அத்தைக்கு, தான் மனமுவந்து மருமகளாய் ஆகப் போகிற பழைய உறவின் புதிய பதிப்பை, சமிக்ஞையாக்குவது போல் இருந்தது. மாமா... மெளனச் சுகத்தோடு, தங்கை மகளைப் பார்த்தபோது, அத்தை கேட்டாள். ஜாக்கெட்டுக்கு மேல் உல்லன் ஸ்வட்டரை தொட்டுப் பார்த்துக் கேட்டாள்.
‘இந்த வெயிலுல... எப்படித்தான் இதை போட்டிருக்கியோ’
“இங்கதான் வெயிலு. டில்லியில் ஒரே குளிரு... எல்லாரும் கம்பளிப் போட்டு போட்டு உயரமான எஸ்கிமோக்கள் மாதிரி அலையறாங்க. நான்கூட, உடம்பிலே பேண்டேஜ் போட்டது மாதிரி... கம்பளி ரஜாய் இதுங்கள இரவிலே சுத்திக்கிட்டேன்..."
‘ஒனக்கு வேற உதாரணமே கிடைக்காதே... சரி... சரி... உள்ளே வா. உடனே போகணுமுன்னு காலுல ஊசியை குத்திட்டு நிற்காதே’
சந்திரா, மாமாவை சிரிப்போடு பார்த்துவிட்டு, உள்ளே போனபோது, சங்கரன் சூட்கேசோடு உள்ளே வந்தான். சந்திரா, சமையலறைக்குள் போன அத்தையிடம் எத்தே பிளைட்டுலேயே டிபன் கொடுத்துட்டாங்க. ஒரு கப் காபி மட்டும் போதும் என்றாள்.
மாமா, ஒரு படிப்பாளி... கண்டதைப் படிப்பவன் பண்டிதன் என்பதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறவர். கண்டது என்பது அவரது அகராதிப்படி கவர்ன்மென்ட் சர்வன்ட் காண்டக்ட் ரூல்ஸ், கவர்மென்ட் செர்வென்ட் லீவ் ரூல்ஸ் போன்றவைகளே... இவை சம்பந்தப்பட்ட நீதி மன்றத் தீர்ப்புக்களும் அவருக்கு அத்துபடி. அதனாலயே ஒய்வு பெற்ற இந்த டெப்டி செகரட்டரியிடம ‘ஐடியா வாங்க பல அதிகாரிகளும் ஊழியர்களும் வருவதுண்டு... இப்போதுகூட, மெடிக்கல் லீவில் இருப்பவனை சஸ்பென்ட் செய்ய முடியுமா என்று கேட்க, ஒரு செக்ஷன் ஆபீசர் பயபக்தியோடு நிற்கிறார். ஊழல் விசாரணையிலோ அல்லது வேறு சு. சமுத்திரம் 111
விசாரணையிலோ சஸ்பென்டான தனக்கு, டிபன்ஸ் அசிஸ்டென்டாக வர வேண்டும் என்று காலில் விழுந்து கும்பிட்டுக் கேட்க, ஒரு தாடி மீசைக்காரர் வந்திருக்கிறார். அவர் தாடியைப் பார்த்தால், அவர் சஸ்பென்டாகி மூன்று மாதம் ஆகியிருக்கலாம்.
மாமா... கவர்ன்மென்ட் செர்வன்ட்ஸ் உலகிற்குள்ளும், அத்தை சமையல் லோகத்திற்குள்ளும் ஒன்றிப் போனபோது, சங்கரன், அவசர அவசரமாய் டையை சரி செய்து கொண்டே, நேரமாயிட்டு நான் வாறேன்! என்று வரவேற்பு அறையையே சுற்றிச் சுற்றி வந்தான்... உடனே... சமையலறையில் இருந்து ஒரு அதட்டல்.
‘இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடேண்டா... நீதான் கம்பெனியை தலையில் தூக்கிட்டு ஆடுறது மாதிரி... நீ கோணச்சத்திரம் போகும் போது, சந்திரா ஆஸ்பத்திரிக்குப் போனால், உனக்கு எப்படி இருக்கும்...’
‘அப்படியும் இவருக்கு உறைக்காது... அத்தே... என்னையா பார்க்க வரார். அவரு அத்தையத்தான் பார்க்க வரார். இன்றைக்காவது தாய் சொல்லைத்தட்டாத தடியனாய் இருங்களேன்...’
சந்திரா, உள்ளே நிற்கும் அத்தையிடம் சத்தம் போட்டுப் பேசிவிட்டு, இங்கே நிற்கும் மாமாமகனிடம் ரகசியம் பேசுவது போல் பேசினாள். பிறகு, அவனை, தனது அறைக்குள் வரும்படி கண்ணடித்துவிட்டு, உள்ளே போனாள். அவன் வருவது வரைக்கும் போவதில்லை என்பது போல், அந்த அறையில் வாசலிலேயே நின்றாள். அப்படியும் வராமல் டெலிபோனைக் குடைந்து கொண்டிருந்தவனை ஒடிப் போய் பிடித்து, அறைக்குள் இழுத்துக் கொண்டு போனாள். அவள் கட்டிலிலும், அவன் ஒரு நாற்காலியிலும் உட்கார்ந்து கொண்டார்கள்.
சந்திரா, ஒரு குழந்தைக் குதூகலத்தோடு, டில்லி அனுபவத்திற்கு ஒரு முன்னுரை வழங்கினாள்.
‘விமானத்தில போனது இதுதான் முதல் தடவையா... உயிரை கையில பிடிச்சிக்கிட்டு இருக்கையிலே இருந்தேன். பிளேன் ஒடிட்டு... அப்புறம் தூக்கலாய் போய் பிறகு நேரா ஆகாயத்தில தாவும் போது தல சுற்றிட்டு, காதுகளில் ஒரேவலி, அதோட அடைப்பு... நல்லவேளை டாக்டர் அசோகன், பக்கத்தில இருந்ததால், தப்பிச்சேன்’
‘அந்த கிராக்கனை விடு... ஆனாலும் நீ கொடுத்து வச்சவள். எத்தனையோ பெரிய டாக்டருங்க இருக்கும் போது, ஒன்னை செலக்ட் செய்திருக்காங்க பாரு...' 1 12 பாலைப்புறா
"கண்ணு போட்டுடாதீங்க. நாங்க டாக்டருங்க பாவப்பட்ட பிறவிங்க. இருபது வருஷமா அசிஸ்டென்ட் சர்ஜன், அப்புறந்தான் சிவில் சர்ஜன். அதோட செக்குமாடு மாதிரி சுற்றுன இடத்தையே சுற்றி சுற்றி வரணும். நீங்க என்ஜினியருங்கதான், கொடுத்து வச்சவங்க. எங்களைப் போல எம்.பி.பி.எஸ். செலக்ஷன்லே இடம் கிடைக்காமல், என்ஜியரிங் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பு முடிஞ்சதும், நீங்க பிளைன்லே போறதும், நட்சத்திர ஹோட்டல்ல தூங்கிறதும், மாருதி கார்லே போறதும்... அடேயப்பா... நீங்கதான் கொடுத்துவச்சவங்க...”
"யார் கொடுத்து வைத்தாலும்... நான் கொடுத்து வைக்காதவன்...”
‘என்னை கட்டிக்கப் போlங்களே... அது போதாதா!’
‘அதனாலதான் அப்படிச்சொன்னேன்’.
"இந்தா பாருங்க”.
"தமாஷ்க்கே... இப்படி தடாலடியாய் கோபப்பட்டால் எப்படி? போகட்டும்... கான்பரன்ஸ்... எப்படி நடந்தது?”
‘விஞ்ஞான்பவன்னு ஒரு பெரிய கட்டிடம்... நான்கு பக்கமும் வாசல். கொள்ளை கலையழகு... பத்து மணிக்கு துவங்க வேண்டிய கான்பரன்ஸ்... சுகாதாரத்துறை செக்கரட்டரி லேட்டாய் வந்ததால... பதினோரு மணிக்கு துவக்கம்... பாதி டாக்டர்கள் 'ஷாப்பிங்’ போயிட்டாங்க... அதோடு எய்ட்ஸ் நோயோட தாக்கத்தைப் பற்றியும், அந்த நோயாளிகளை எப்படி அணுகணும் என்றும் ஒரு திட்டவட்டமான கொள்கை இல்லை... கத்துக்குட்டியான எனக்கே தாங்க முடியலே. கேள்வி பதில் நேரத்தின் போது, ஒரு கேள்வி கேட்டேன். ஒருத்தருக்கு...ஹெச்.ஐ.வி.இருப்பதாய் ஒரு டாக்டருக்கு தெரிய வந்து... அந்த நோயாளிக்கு திருமணம் நடக்கிறதும் தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட டாக்டர், அந்த திருமணத்தை தடுக்க முயற்சிப்பது தப்பான்னு கேட்டேன். பாருங்கத்தான்... அநியாயத்தை... கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த ஜாயின்ட் செகரட்டரி என்னைக் கண்டுக்கல... நான் சொல்றதை கேட்டுட்டு, கால் நிமிடம் மெளனமாய் இருந்துட்டு, அப்புறம் நெக்ஸ்ட் கொஸ்டின்னு சொல்லிட்டார். உடனே டாக்டர் அசோகன், எழுந்து அவரை உலுக்கு உலுக்குன்னு உலுக்கிட்டார். அப்படியும் அந்த ஜாயின்டு, அடுத்த கேள்வின்னு அலட்சியமாய் கேட்டார். உடனே அசோகன் வெளிநடப்பு செய்திட்டார்!’
‘அந்த கிராக்கனோட... பழகுறதை விடு... இல்லன்னா... ஒன்னையும் ஒரு வழி பண்ணிடப் போறான்.' சு. சமுத்திரம் 113
‘அவரு ரொம்ப ரொம்ப நல்லவரு... அத்தான்’.
"எப்படியும் இருந்துட்டுப் போறான். அவன் பேச்சை என்கிட்ட எடுக்காதே. அப்புறம் எனக்கு ஒரே குழப்பம்... சந்திரா... ஹெச்.ஐ.வி. என்கிறாங்க. எய்ட்ஸ் என்கிறாங்க... என்ன இதெல்லாம்?”
‘ஹெச்.ஐ.வி. என்கிறது. ஒரு வகை கிருமியோட பெயர்... எய்ட்ஸ் என்கிறது, அது கொடுக்கிற நோயோட பெயர்... ஹெச்.ஐ.வி. என்கிறது ஹ்யூமன் இம்யூனோ டிபிசியன்சி வைரஸ். அதாவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் கிருமின்னு பெயர். இந்த கிருமியா நோய் கொடுக்காது. ஆனால் நம்ம உடம்பிலே இருக்கிற எதிர்ப்பு சக்தியை தகர்த்து, எல்லா கிருமிகளும் உடம்புக்குள்ள வரதுக்கு வாசலை திறந்து விடும்... இந்த கிருமிகள், பல்கி பரவி, நம்மோட எதிர்ப்பு சக்தியை தகர்த்துட்டால் எந்த நோயும் வரும். ஆனால், வந்த நோய் உயிரோடுதான் போகும். இதனால்தான் இந்த கிருமி கிரியா ஊக்கியா இருந்து பல நோய்களுக்கு ஒரு கூடாரமாகுது... அதனால் தான்... இதுக்கு அகொயர்டு இமினோ டிபெஸியன்ஸி சின்ரோம் என்று பெயர்; இதோட சுருக்கம்தான்... எய்ட்ஸ்; அகொயர்டு என்றால் நாமாக தருவித்துக் கொள்கிற கிருமின்னு எடுத்துக்கலாம்...’
‘அய்யோ... எனக்கு கர்ப்பம் தரிக்காமலே மசக்கை வருது...தலை சுற்றுது’.
‘இது கேலிக்குரிய நோயும் இல்ல. கிருமியும் இல்ல...நம்ம உடம்பு ஒரு அற்புதமான கட்டுமானம்...இதனால்தான் பல மகான்கள் இந்த உடம்பைத் தந்த கடவுளை பொறியாளரின் பொறியாளர்’ என்று சொல்வாங்க...’
‘நம்ம உடம்புக்குள்ள இருதயம் ஒரே நாளில் 13 லட்சம் தடவை துடிக்குது... உடல் முழுக்க ரத்தம் தினமும் 14 கோடி மைல் தூரம் வரை பாயுது...நுரையீரல் ஒரு நாளைக்கு 23 லட்சம் தடவை மூச்சுவிடுது. நம்ம ரத்தத்தில் இருக்கிற வெள்ளை அணுக்கள், சமயம் பார்த்து, உடம்புக்குள்வரத் துடிக்கிற லட்சக்கணக்கான எந்தவகை கிருமிகளையும், உள்ளே வந்தா கொத்தி குதறிக்கொன்னுடும்...இதுக்கு நோய் எதிர்ப்புசக்தின்னு பேர்’...
‘பொதுவாக, கிருமிகள் நாலுவகை; மலேரியா, யானைக்கால் நோய்களை கொடுக்கிற பாரசைட் கிருமி, வெள்ளைப் போக்கை தருகிற பங்கஸ், காச நோயும் தொழு நோயும் கொடுக்கிற பாக்டீரியா, அம்மை வார்க்கிற வைரஸ். ஹெச்.ஐ.வி. என்கிறதும் ஒருவித வைரஸ்தான். வெயில் பட்டாலே செத்துப்போகிற அற்ப கிருமி. நம்மோட உடம்பு செல்லுலே ஆயிரக்கணக்கான மடங்கு சின்னது. ஆனால், எல்லா கிருமிகளையும் பாலைப்புறா
114
கொல்லக்கூடிய வெள்ளை அணுக்களை, குறிப்பாய் இந்த அணுக்களோட டி.4 என்கிற தளபதி வெள்ளையணுக்களை கொன்னுடுது. தளபதி தோற்றால் சரணாகதிதானே... போரில் தோற்றுப்போற நாட்டுக்குள்ள நுழையற வெற்றி பெற்ற நாட்டோட படைவீரர்கள், எப்படி பெண்களை கற்பழித்து, வீடுகளை தீக்கரையாக்கி, சொத்துக்களை சூறையாடுகிறார்களோ, அப்படி சந்தர்ப்பம் தேடி நிற்கும் எல்லா கிருமிகளும் எதிர்ப்பு சக்தி இல்லாத இந்த உடம்புக்குள் புகுந்து, என்னென்ன நோயெல்லாம் கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்துடும்...’
சங்கரன் படபடப்பாய் கேட்டான் ‘நீ சொல்றது முன்னுக்குப் பின் முரணாய் இருக்கே சந்திரா. உடம்புக்குள்ளே நுழைகிற கிருமிகளை தாக்கி கொல்கிற வெள்ளை அணுக்கள் இதுங்கள எப்படி விட்டு வைக்குதுங்க...’
‘இங்கேதான் சூட்சுமம் இருக்குது... இந்த போக்கிரிக் கிருமிகள், வெள்ளை அணுக்கள் மாதிரியே வேடம் போட்டு நுழையுதுங்க... அப்பாவி வெள்ளை அணுக்கள்.... இதுகள... நம்மாளுன்னு நம்பி... உள்ளே அனுமதிக்குதுங்க. இப்படி இருக்க இடம் கொடுத்த அணுக்களை... இவை படுக்க வைக்குதுங்க... பகையாளிக் குடியை உறவாடிக் கெடுக்கிற கதைதான்... சரியான சகுனிக் கிருமிகள்... சகுனியைக் கொல்ல, ஒரு சகாதேவன் இருந்தான். ஆனால் இந்தக் கிருமிகளைக் கொல்ல, இதுவரைக்கும் யாரும் இல்லை... எதுவும் இல்லை.’
"பொல்லாத கிருமி தான்...இது புதுசா... பழசா...?” ‘நாட்டு வைத்தியத்தில ஒருவித மேக நோயின்னு சொல்றாங்க. சரியா தெரியல... புதுசோ, பழசோ, 1981-ஆம் ஆண்டு அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில், ஒரினச்சேர்க்கை சமூகத்திடம் இதன் பாதிப்பு தெரிந்தது. ஆனால், 1983-ஆம் ஆண்டு பாரீசில் உள்ள பாஸ்டர் ஆய்வு மையத்தில் லுக்மான்டேஜ்னியர் என்கிற விஞ்ஞானி, இந்தக் கிருமியைக் கண்டுபிடித்தார். தமிழ்நாட்டுலே 1987-ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். இதுதான் இந்தியாவிலேயே முதலாவது கண்டுபிடிப்பு... அதுவும் பிறத்தியாருடைய ரத்தம் பெற்ற, ஒருத்தருக்கு இந்த நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது...’
‘பல அரசியல்வாதிகளுக்கும் இருக்கிறதாய்’ ‘உண்மைதான்... நம் தலைவர்களில் சிலர். இதுலதான் பாசிட்டிவாய் இருக்காங்க. இந்த நோய் பிரபலமானதே...அது பிரபலஸ்தர்களை பிடிச்சதால்தான். பிரபல அமெரிக்க திரைப்பட நடிகர் ராக்ஹட்ஸன், பாப் 115
சு. சமுத்திரம்
மியூசிக் பாடகர் மெர்குரி, முன்னாள் டென்னிஸ் விம்பிள்டன் சேம்பியன் ஆர்தர் ஆஷ். இவங்கல்லாம், எய்ட்ஸ் நோய்க்கு பலியானங்க. இவர்களுக்காக கண்ணிர் வடிக்கும் உலகம், இவர்களோடு பழகி எய்ட்ஸ் நோயை வாங்கி கட்டிக்கொண்ட அப்பாவிப் பெண்களைப்பற்றி ஏன் மூச்சு விடுவதில்லை. என்று டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினோ நவரத்திலோவா மட்டுமே கேட்டார். உண்மைதான். பெண்களாகிய எங்கள் நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரி... ஆண்களின் தகாத உறவுகளில் அகப்பட்டு சாவது தெரியாமலேயே சாவது அப்பாவிப் பெண்கள்தான்.”
"புலம்பாதே..அந்த ஆணுக்கு நோயைக் கொடுத்ததே ஒரு பெண்தானே? இந்த நோய் புதுசுன்னா...எப்படி வந்திருக்கும்?”
‘புராணக்கதை மாதிரி நீளும், இதுலயும் ஒரு அரசியல் சமூக உள்நோக்கம் இருக்குது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒருவித பச்சைக் குரங்குகளுக்கும் இந்த நோய் இருந்ததாயும், இந்த குரங்குகளுக்கு முத்தம் கொடுத்த, ஆப்பிரிக்கா பெண்கள் இதை... தங்கள் மூலமாய், உலகம் முழுவதும் பரவவிட்டதாகவும் ஒரு கதை. ஏற்கனவே நொந்து போன ஆப்பிரிக்க மக்களை கொச்சைப்படுத்த வெள்ளையர் விடுத்த கட்டுக்கதை... இன்னொன்று, அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்க மக்களை, மேம்பட விடாமல் செய்வதுக்காக உருவாக்கப்பட்ட பயலாஜுக்கல் ஆயுதமுன்னு ஒரு கதை. அணுஆயுத பரிசோதனைகளால் ஆகாயத்தில் ஏற்பட்ட காற்று மண்டல மாற்றத்தால் ஏற்பட்டதுன்னு வேறு ஒரு கதை... கதை கதையாகவே இருக்கலாம்...ஆனால் இந்தக் கிருமிகள் மட்டும் நிசம்...’
"கடைசியாய் ஒன்று சந்திரா. இந்த நோய் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்குமாம்”.
‘ஆரம்பக் கட்டத்தில சிலருக்கு விடாமல் காய்ச்சல், வயிற்றுப்போக்கு இருக்கும்.ராத்திரி வேளையில் வியர்வை கொட்டும்; உடம்பில் சிவப்புப் சிவப்பாய் சில தடிப்புகள் வரலாம்.’
சங்கரன், அவளைப் பயந்து பார்த்தான். அவள் குறிப்பிட்ட இந்த அறிகுறிகள், ஒரு வாரகாலமாய் அவனிடமும் உள்ளன. ஆனாலும் யாரிடமும் எந்த உறவையும் வைத்துக் கொள்ளாததை நினைத்து, தன்னைத்தானே தேற்றிக் கொண்டான். கூடவே, முடிவெட்டும் போதோ, முகச்சவரம் செய்யும் போதோ.. வந்திருக்கலாமோ என்ற சந்தேகம், இப்போதும் வியர்வை கொட்டப் போனது. வயிற்றுக்குள் ஏதோ உருண்டது. முதுகில் உள்ள சிவப்பு தடிப்பில் வலியெடுத்தது.
இதை வேறு விதமான அர்த்தப்படுத்திக் கொண்டே, சந்திரா சிரிப்பும் 116 பாலைப்புறா
குறும்புமாய் கேட்டாள்.
‘என்னடா இந்த மக்குப்பெண்ணுக்கு இவ்வளவு விலாவாரியாய் விஷயம் தெரியுதேன்னு நினைச்சிங்களா...? மூன்று நாள் கான்ப்ரன்ஸ் ஆச்சே. அவங்க எய்ட்ஸ் சம்பந்தமாக கொடுத்த எல்லா லிட்டரேச்சரையும் கரைச்சுக் குடிச்சிட்டேன். எதுலயும், விசுவாசம் இருந்தால், ஒரு முட்டாள் கூட அறிவாளி ஆகலாம். அது இல்லாட்டால் அறிவாளி கூட முட்டாளாகலாம், நீங்க எதுலே சேர்த்தி’
சங்கரன், அவளை பார்க்காமல், அந்த டெலிபோனை பார்த்தான். அலுவலகத்திற்கு விடுமுறை என்று சொல்ல வேண்டும். விறைப்பாய் எழுந்து, டெலிபோன் எண்களைச் சுழற்றினான். ‘இன்றைக்கு மட்டும் என்று சொன்னான், பிறகு அப்படியா! ஐஸி! ஓகோ கம்பெனிக்கு நல்ல மூக்கறுப்பு, வேணும்’ என்று சொல்லிவிட்டு, விடுமுறையைப் பற்றிச் சொல்லாமலே, டெலிபோனை வைத்துவிட்டு, சந்திராவிடம் வந்து ஆனந்தப்பள்ளு பாடினான்.
‘கடைசியிலே கெடுவான் கேடு நினைப்பான் என்பது சரியாப் போச்சு. நியூயார்க் விமான நிலையத்திலேயே, மனோகர் பயலை செக்கப் செய்திருக்காங்க.அவனுக்கு ஹெச்.ஐ.வி. - அதுதான் எய்ட்ஸ் இருக்கிறதை கண்டுபிடித்தாங்களாம். உடனடியா பிளைட்ல திருப்பி அனுப்புறாங்களாம்.’
டாக்டர் சந்திரா முகம் கறுத்தது. விமான நிலையத்தில், மஞ்சளும், குங்குமமாய் பார்த்த கலைவாணியின் முகம், தனது முகத்தோடு முகமாய் முட்டியது. இது தெரியாமல், சங்கரன் மேலும் கடுப்படித்தான்.
‘நீ ஏர்போர்ட்ல சொல்லும் போதே எனக்கு சந்தேகம். கடைசில கம்பெனிக்கு சரியான செருப்படி...என்னை ஒரம் கட்ட நினைத்த எங்க கம்பெனிய, எல்லாரும் ஒரம் கட்டுவாங்க. நியாயம், லேட்டானாலும், ஜெயிக்கத்தான் செய்யுது...’
"சட்-அப்... வாயை மூடுங்க... நீங்கல்லாம் ஒரு மனுஷனா?”
சந்திரா, கத்திய கத்தலில், அவள் மாமாவும், அத்தையும் அங்கே வந்துவிட்டார்கள்.