பாலைப்புறா/அத்தியாயம் 11

னோகர், கிட்டத்தட்ட ஒரு வட்டச் செயலாளர் மாதிரி, அந்தக் குடியிருப்பில் ஆக்கப்பட்டு விட்டான்.

அந்தப் பூஞ்சோலை அடுக்கு மாடிக் குடியிருப்புகளின், தோரண வாயிலின் முன் பக்கம், ஒரு கண்டசா கார்… கம்பெனி அனுப்பி வைத்திருந்தது. வெள்ளைவெளேர் என்று தங்க நிற விளிம்போடு, அமெரிக்க பாணியில் அசல் சண்டித்தனமாய் நின்றது… உள்ளே யூனிபாரம் போட்ட டிரைவர். முன்னாலும், பின்னாலும் சில கார்கள்.

மனோகர், அந்த குடியிருப்பு வாசிகளில் முக்கால்வாசிப் பேர் புடை சூழ, கழுத்தில் ஒரு ரோஜாப்பூ மாலையோடும், கையில் ஒரு மலர்ச் சென்டோடும், கலைவாணிக்கு இணையாய் நடந்தான். குடியிருப்போர் சங்கம், ஒரு சாமியானா பந்தலுக்குக் கீழே, அவனுக்கு வழியனுப்பு விழா நடத்தி விட்டு, அங்கிருந்தே அவனை நடத்திக் கொண்டு வந்தது. குடியிருப்பு பெண்கள் சங்கம், ஏற்கெனவே ஒரு பாராட்டு விழாவை, ‘கட் அவுட்’ வைக்காத குறையாக, தடபுடலாய் நடத்தி விட்டது. இந்தப் பெருமையில், திருமதிகள் பாலா நாராயணசாமி, நாகராஜன் உள்ளிட்ட அனைத்து திருமதிகளும், முண்டியடித்து எதிரே நகர்ந்து கொண்டே போன வீடியோக்காரர்களை விரட்டியடித்துப் பிடிக்கப் போவது போல அங்குமிங்குமாய் முன்னேறினார்கள்.

காரின் டிக்கியில் ஏற்றப்படும் சூட்கேஸ்களை, கையில் பிரம்புக் கூடையை பிடித்தபடியே, கலைவாணி மேற்பார்வை செய்த போது, மனோகர், எல்லோருக்கும் தனித் தனியாய் கை கொடுத்து, அலுத்துப் போய், 100 பாலைப்புறா

அடுத்தபடியாய் எல்லோரையும் பார்த்து விட்டு ஒட்டு மொத்தமாய்க் கும்பிட்டான். ஒரு ஒரமாய் ஒதுங்கி நின்ற வேலைக்காரச்சிறுமி மீனாட்சியின் அருகில் போய், அவள் கையைப் பிடித்தபடியே ‘மீனாக்குட்டி... ஒனக்கு அமெரிக்காவில் இருந்து, இந்த அண்ணா... என்ன வாங்கிட்டு வரணும்... சொல்லு’ என்றான். மீனாட்சி மேலாடையை கையால் கசக்கி, கண்களை கூச்சப்பட்டதுபோல் இயக்கிய போது, ‘ஒரு நல்ல துடைப்பக் கட்டையா வாங்கிட்டு வரச் சொல்லுவாள்’ என்று நிர்மலா சொன்னபோது ஒரே சிரிப்பு...

இதற்குள், குடியிருப்போர் சங்கத் தலைவர் நாராயணசாமியும், இதே மாதிரியான பெண்பால் பதவிக்கு ஒரு கண் போட்டிருக்கும் திருமதி பாலாநாராயணசாமியும், மனோகரின் கரங்களை ஆளுக்கு ஒருவராக பிடித்து கார் அருகே கொண்டு வந்தனர். பாலம்மா... கார்க்கதவைத் திறக்க, நாராயணசாமிகள் ஏறிக் கொண்டு, மனோகரை உள்ளே கூப்பிட்டார்கள். மோனிகாவால் பொறுக்க முடியவில்லை. கலைவாணியைப் பற்றிக் கவலைப்படாமல்... என்ன இது... வயதுக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறது எவ்வளவு உண்மை...

‘மாமி நீங்களும், மாமாவும் இறங்குங்கோ... கலைவாணி ஏறிக்கட்டும்...’

‘இடமிருக்கே... வா... கலைவாணி’

‘அவங்க சின்னஞ்சிறிசுங்க... மூன்று மாதத்துக்கு... ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமல் இருக்கப் போறவங்க... கடைசி நேரத்தில... கார்லே ஃப்ரியா போகட்டும்... நீங்க இறங்கி, ஒங்க கார்ல போங்கோ மாமி... நானும் வேணுமுன்னால் துணையாய் வாரேன்!”

கலைவாணி, வேறு சந்தர்ப்பமாக இருந்தால், நயத்தகு நாகரீகம் கருதி, மோனிகாவை செல்லமாய் அதட்டி இருப்பாள். ஆனால் இப்போது, அப்படி அவளைத் தட்டி கேட்க மனமில்லை... நாராயணசாமிகளுக்கே இது தெரிந்திருக்க வேண்டும்.

திருமதி பாலாநாராயணசாமியும், அவள் பெயருக்கு பின் பெயர் கொண்டவரும், காரின் அடுத்த கதவைத் திறந்து, மறுபக்கமாகத் துள்ளியபோது, மோனிகா, ஒரு புன்னகையோடு, மனோகரைப் பார்த்தாள். பிறகு, கலைவாணியை காருக்குள் தள்ளி விட்டாள். மனோகர், காருக்குள் நுழையப் போனபோது, திருமதி கல்யாணராமன் தன் பேரனை நியூயார்க்கில் பப்பல்லோ பல்கலைக்கழகத்தில், ‘எம்.எஸ்.' படிக்க வைக்க திட்டமிட்டிருப்பதை நினைத்தபடியே, அந்தப் பேரன் பிரியாராமனை, சு. சமுத்திரம் 101

மனோகர் முன்னால், பூனைமாதிரி நடக்கவிட்டு மாமாவுக்கு, பிளசன்ட் ஜர்னி விஷ் பண்ணுடா என்றாள். அந்தப் பிரியா ராமனோ, அப்போதும் மனோகரின் தலைக்கு அப்புறமாய் கண்களை ஏவிவிட்டு, குதிகாலில் நின்றபடி, ஒருத்தியை சைட் அடித்தான். அதற்குள், சியாமளா, இடுப்புக்குள் வைத்திருந்த ஒரு எலுமிச்சம் பழத்தின்மேல் கற்பூரம் ஏற்றி, மனோகர் முகத்துக்கு முன்னால் மூன்று தடவை சுற்றி, இந்த மூன்று சுற்றுக்களிலும், தனது யூஸ்லஸ் கணவனின் அமெரிக்க எதிர்காலத்தை அடக்கி வைத்திருப்பதுபோல், கரங்களை, ஏரோப்பிளேன் மாதிரி சுற்றவிட்டாள். பிறகு ‘திருஷ்டியை நீக்கிடும்’ என்று கையில் இருந்த ஒற்றை எலுமிச்சைப் பழத்தை தரையில் போட்டு மிதித்தாள். அக்கம் பக்கத்து பெண்களைப் பார்த்தபடியே, அந்தப் பழத்தை பீஸ் பீஸாக்கினாள்; இதனால், ஆண்கள் சந்தோஷப்படவில்லையானாலும், வருத்தப்படவில்லை. ஆனால் பெண்கள், ஆவேசப்பட்டார்கள். இந்த சியாமளா, திருஷ்டி கழித்து, தங்கள் கண்களுக்கு மாசு கற்பிக்கிறாளே என்றல்ல... இவளே, முண்டியடித்து, முக்கியத்துவம் பெற்று மனோகர் உபயத்தில், அமெரிக்கா போவதற்கு முன்னுரிமை பெறுகிறாளே என்ற ஆவேசம்

மனோகரை, அந்தக் கூட்டத்தில் அப்படியே விட்டால், அவனை ஏற்றிச் செல்லப் போகும் விமானம், அவன் இல்லாமலே, இரண்டு தடவை அமெரிக்கா போய்விட்டு வந்துவிடும் என்பதைப் புரிந்து கொண்ட கம்பெனிக்கார் டிரைவர், அந்த கண்டசா காரை கத்தவிட்டார். மனோகர், காரில் ஏறிக் கொள்ள, அந்தக் காரும், உருமி உருமி ஒடப் போனது. பதிலுக்கு பின்னாலும், முன்னாலும் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களும் உருமி காட்டின. ஒரு நாய் குரைத்தால், எல்லா நாய்களும் குரைக்குமே, அப்படி...

காரின் பின்னிருக்கையில், மனோகரின் தோளில், கலைவாணி சாய்ந்து கிடந்தாள். மயில் இறகில் செய்யப்பட்டது போன்ற அந்த இருக்கை சுகத்தைவிட, மனோகர் போட்டிருந்த கோட்டில், கரடுமுரடான தோள்பட்டை முடிச்சு, அவளுக்கு பெரும் சுகத்தைக் கொடுத்தது. அந்தக் கார், கிண்டி போகும் வரை, அவனோடு சிரித்துப் பேசியவள், கிண்டி திருப்பத்தில், தேசிய சாலையில் போனது போது, விசும்பத் துவங்கிவிட்டாள். கண்ணீர் தாரை தாரையாய் வெளிப்பட்டது. மனோகர், அவள் தோளைத் தட்டிக் கொடுத்தான். அவள் முகத்தை நிமிர்த்தி, கண்களை, தனது கைக்குட்டையால் துடைத்துவிட்டான். ஆனால், அவளோ, விசும்பலை அழுகையாக்கப் போனாள். மனோகரின் தோளிலேயே, தலையை லேசாய் முட்டிமுட்டி அழுதாள். இந்த மாதிரி சமாச்சாரங்களை கண்டு கொள்ளாத டிரைவர்கூட திரும்பி பார்த்தார். 102 பாலைப்புறா

மனோகர். டிரைவர் பார்த்ததை, கலைவாணிக்கு, கண்களால் குத்திக் காட்டியதும், அவள், முந்தானையை சரி செய்தபடியே நிமிர்ந்து உட்கார்ந்தாள். ஒரு சின்னச் சிரிப்பை படரவிட்டாள். அந்தச் சிரிப்பு, கண்ணாடியில் பார்த்த டிரைவர் முகத்தில் ஒரு புன்னகையாய்த் தொற்றியது. ஆனாலும், கலைவாணி, மீண்டும் சத்தம் போடாமலேயே கண்ணிர் விட்டாள். மனோகர், மீண்டும் கைக்குட்டையால், அவள் முகம் முழுவதையும் துடைத்து, அதை ஈரத்தில் பளபளக்க வைத்தான். அதன் காரணத்தையும் குறிப்பிட்டான்.

"இந்தக் கைக்குட்டையை, என் முகத்தை துடைக்காமல், கசக்காமல், அப்படியே, அமெரிக்க மேஜையில் வைக்கப் போறேன்... ஏன்னா... இது என் காதல் ராசாத்தியோட பாசமழை. இன்னும் கொஞ்சம் அழேன்...”

‘நீங்களும் எனக்கு நினைவா ஏதாவது கொடுக்கணும்’

‘ஒன் வயிற்றத் தொட்டுப் பாத்துக்கோ!’

‘சீ... வெக்கமாயில்லே...?’

டிரைவருக்கு, வண்டி ‘ஒடிப்பது' சிரமமாய் இருந்தது. சாலையில் புற்றீசல் போல் பறக்கும் வாகனங்களுக்கு இடையே, இப்படியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தால், விவகாரம் விபத்தில் போய்விடும். முன் கண்ணாடியை கைக்குட்டை போட்டு மறைத்தால், பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்க முடியாது. என்ன செய்யலாம்... சூடு சூட்டை தணிக்கும் என்பதுபோல், பேச்சுதான் பேச்சைத் தணிக்கும்.

"அம்மாவையும், கூட்டிக்கிட்டுப் போகலாமே... அழமாட்டாங்கல்ல?”

“ஏங்க... ஒங்களத்தான். ஏன் நாட்டுச்சிரிப்பாய் சிரிக்கறீங்க. டிரைவர். சார்! நான் அமெரிக்கா போகமுடியல்லியேன்னு அழல... மூன்று மாதம் இவரை விட்டுட்டு எப்படி... எப்படி..."

கலைவாணி, வெட்கம் விட்டு அழுதாள். மனோகர், தோழமையோடு அவள் தலையை தன் தோளில் சாய்த்தான். டிரைவருக்கு என்னவோ, ஏதோ போலிருந்தது. இப்படி வெளிநாட்டுக்கு போகும் கணவன்மாரை, வழியனுப்ப வரும் ‘மறுபாதிகள்' செக்கு, பேங்கு போன்ற விவகாரங்களைத்தான் பேசக் கேட்டிருக்கிறார். இப்படி உள்ளன்பாய் பேசுவது, ஒரு விதி விலக்கே, இப்போது அவருக்கே தான் எங்கே சாலை விதிகளை மீறிடுவோமோ என்கிற பயம்; அந்தப் பயம் கார் வேகத்தை நிதானப்படுத்தியது. சு. சமுத்திரம் 103

மனோகர். முகத்தை ஆடாமல் வைத்திருந்த கலைவாணிக்கு, ஆறுதல் சொன்னான்.

"மூன்று மாசமும், மூன்று நாளாய் ஓடிடும். அதோட... நீ ஊருக்குப் போகப் போறே... அங்கே போனதும், நாமா இப்படி அழுதோமுன்னு சிரிக்கப் போறே...”

‘பொய்... நான் ஊருக்குப் போறதாய் இல்ல...’

"ஏன் இங்கேயும் மகளிர் சங்கம் வந்துட்டதாலயா?”

"ஒங்க புத்தி அப்படி... இங்கே இருந்தால், உங்களோட அடிக்கடி போன் பேசலாம்... தினமும் பேச முடியாவிட்டாலும், ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது பேசுங்க”

‘அவ்வளவுதான்... கையிலே இருக்கிற டாலர் கரைஞ்சிடும்...’

"அப்போ நானே பேசுறேன்... நைட்ல கரெக்டா பத்து மணிக்கு ரூம்ல இருக்கணும். டெலிபோன் பேசற அளவுக்கு எங்கிட்ட பணம் இருக்குது. அப்பாம்மா கொடுத்த பணம், டெலிபோன்லே எப்படித்தான் பேசப் போறேனோ. ஒரே அழுகையா வரும். ஏங்க... அதை டெலிபோன் கோளாறுன்னு ‘கட்’ பண்ணிடாதீங்க”

"இதுக்குத்தான் ஊருக்குப் போன்னு சொல்றேன்...!”

‘மாட்டேன்... மாட்டவே மாட்டேன். என் ஸ்ரீராமனுக்கும், எனக்கும் பாலமாய் டெலிபோன் என்கிற அனுமார் கிடைக்கிற இடமே... என்னோட இடம்!’

இதுவரை, அமைதியாக இருந்த மனோகரும், உணர்வுமயமானான். அவளை, இறுகத் தழுவி, முத்தமிட்டான். கண்களை, அவள் நெற்றியில் துடைத்து, குங்குமத்தைக் கலையவிட்டான். சிறிது... நேர மெளனப் பார்வைகளுக்குப் பிறகு, உற்சாகமாக சொன்னான்.

“கலைவாணி... ஒரு குட் நியூஸ் மெடிக்கல் டெஸ்ட்டுலே நான் அவுட் ஸ்டாண்டிங்... ஹெச்.ஐ.வி. இல்லவே இல்லே...”

‘ஏன் இப்படி... அபத்தமா பேசுறீங்க... இது ஏன் ஒங்களுக்கு வரப் போவுது’

மனோகர், மெளனம் சாதித்தான்... அவனைப் பாடாய்படுத்தி, பரிசோதித்த டாக்டர்கள், ஓகே சொல்லிட்டார்கள். அது இருந்திருந்தால், எழுதாமலா இருப்பார்கள்? ஆனாலும் இவளிடம் எங்கப்பன் குதிருக்குள்ள 104 பாலைப்புறா

இல்லை என்கிற மாதிரி பேசி இருக்கப்படாது’.

மனோகர், கலைவாணியின் முகத்தை, அவளுக்குத் தெரியாமலே பார்த்தான். அவளோ, பின்புறமாய் கை திருப்பி, அவன் பிடரியை வருடி விட்டாள். அவனுக்கும் அளப்பரிய மகிழ்ச்சி... அவனைப் பரிசோதித்தவர்கள், கொம்பன் டாக்டர்கள். மூன்று மணி நேரம் சோதனை செய்தார்கள். ஒரு சின்ன இன்பெக்ஷனைக் கூட அவர்களால் சுட்டிக்காட்ட முடியவில்லை... இருந்தால்தானே எடுத்துக்காட்ட? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

மனோகரும், கலைவாணியும், கார்களில் வந்திறங்கிய அடுக்குமாடி வாசிகள் அத்தனை பேரும் மொய்க்க, விமான நிலையத்திற்குள் நுழைகிறார்கள். அங்கேயும், அவன் ஒரு விஐபி ஆனான். கம்பெனியின் உதவிப் பொது மேலாளர் சூரிய நாராயணன் தலைமையில் ஒரு கம்பெனிப் பட்டாளமே காத்து நின்றது... பைஜாமா... சல்வார் கமிஸ் பெண்கள், சபாரிக்காரர்கள்... சூட்டு, கோட்டு ஜென்டில்மேன்கள்... உதடு பிரியாமல் பேசி, தோளை மட்டும் லாவகமாய் குலுக்கும் நவீனக்காரர்கள், காரிகள்...

சூரியநாராயணன், மனோகருக்கு பூச்செண்டு கொடுத்தார். நீட்டிய கையை, மனோகரின் கையோடு இணைக்கப் போனவர், திடீரென்று, அவனை தனது தோள்களில் குப்புறச் சாய்த்து, அவன் முதுகை தட்டிக் கொடுத்தார். அப்போது பலத்த கைத்தட்டல்; சுற்றி நின்றவர்களை சுண்டி இழுக்கும்... ‘ஹாய் ஹாய்’... ஒலிப்புகள். அப்போது பார்த்து ரத கஜ துரக பதாதிகளோடு உள்ளே நுழைந்த ஒரு மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கே, அவன் மீது பொறாமை ஏற்பட்டது. அவனையும், அந்தக் கூட்டத்தையும் உஷ்ணமாகப் பார்த்துவிட்டு, சிறிது தொலைவில் தலைமறைவாய் உள்ள வி.ஐ.பி. லவுஞ்சை நோக்கி மிடுக்காய் நடந்தார்.

பகல் நேரத்திலும், இரவு போல் ஜொலித்த விமான நிலையத்தை, கலைவாணி பராக்குப் பார்த்தாள். வெளியே வெயில் சுட்டெரிக்க, இங்கே அதற்கு எதிர் விகிதாச்சாரத்தில் ஒரு கிளுகிளுப்பு... இந்தியை ஆங்கிலமாகவும், ஆங்கிலத்தை இந்தி மாதிரியும் உச்சரிக்கும் அறிவிப்புகள்; சிவப்பு விளக்கும், பச்சை விளக்குமாய் பாளம் பாளமாய் ஜொலிக்கும் மேல்கூரை. கறுப்பும் வெள்ளையுமாய் கலந்து நின்ற பயணிகள், 'ஆகாய’ மனிதர்களை நின்ற இடத்திலேயே நிற்க வைத்து, அவர்களை, மேலேயும் கீழேயும் போக்குவரத்து செய்யும் எலிவேட்டர்கள்... இரும்புக் கம்பியில் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளில், கால் மேல் கால் போட்டுக் கிடந்த லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்... பிள்ளைகளை குவாய்த்துக்கோ... சவூதி அரேபியாவுக்கோ வழியனுப்ப வந்து பிரிவுத் துயர் தாங்காமல் அழுத 105

க. சமுத்திரம்

ஏழை பாழைகள்... ஒருத்தருக்கு ‘பாப் இசையாகவும், இன்னொருத்தருக்கு ஒப்பாரியாகவும், கேட்கக்கூடிய விமானச்சத்தங்கள்; இத்தனை அமளியிலும், வாளிப்பான மேனிகளில், சீருடை சிக்கெனப் பற்றிக் கொள்ள, துடைப்பங்களை, செங்கோல் போல் நிமிர்த்தி பிடித்து நடந்த துப்புரவுத் தொழிலாளப் பெண்கள்.

சிறிது நேரம், அங்குமிங்குமாய் கண்களைச் சுழலவிட்ட கலைவாணி மனோகரை பெருமிதமாய் பார்த்தாள். கூட்டத்தில் சிக்கியவனை, தன் பக்கமாய் வரும்படி, கண்ணடித்துக் கூப்பிட்டாள். அவனும் தன்னை பிராண்டி எடுத்த அடுக்குமாடி வாசிகளையும், 'ஜோக்'அடித்த சகாக்களையும் விட்டு விலகுவது தெரியாமல் விலகி, அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசும் சமயம் பார்த்து, கழட்டிக் கொண்டான்; கலைவாணியின் மூச்சு படும் நெருக்கத்தில் நின்று கொண்டான்; கலைவாணி... கேட்டாள்.

“அதோ...பூப் போட்ட டை கட்டுன ஆசாமி. கேன்டின் பக்கமாய் நிற்கார் பாருங்க... மாநிறமாய், அவரு யாரு... ஏன் அப்படி கப்பல் மூழ்குவது மாதிரி இருக்காரு!”

‘அப்படி மூழ்கினால் அவன் சந்தோஷப்படுவான். பொல்லாதவன்... என்னோட சகா... பேரு சங்கரன்... எனக்கும் சீனியர்... மொதல்ல அவனைத்தான் கம்பெனி அனுப்புறதாய் இருந்தது. கடைசி நேரத்தில் அவனுக்குப் பதிலாய் என்னை செலக்ட் செய்திட்டாங்க.‘

"எதுக்காம்?”

"நீ சொன்னியே விசுவாசம்... அந்தக் காரணம்தான். ஆசாமி, கம்பெனி செலவில் போய்... போட்டிக் கம்பெனி வச்சுடுவானோன்னு மேனேஜ்மெண்டுக்கு பயம் வந்துட்டாம்”.

‘விசுவாசம் பற்றி நான் சொன்னது எவ்வளவு சரியாயிட்டு பாருங்க. ஆனால் வெறும் யூகத்தை காரணமாய் சொல்ல முடியாதே’

‘கரெக்டா சொன்னே... டைபாய்டுன்னு சொல்லி ஒரு மாதம் லீவ் எடுத்திருந்தான். அந்த நோயையே காரணமாய் காட்டிட்டாங்க. அதுல இருந்து என்னை எதிரியைப் பார்க்கிறது மாதிரி பார்க்கான். நான் என்ன செய்ய முடியும்...? நான் போக முடியாதுன்னு சொன்னாலும், அவனை அனுப்ப மாட்டாங்க. வேறு எவரையாவது அனுப்புவாங்க. இது கூட அவனுக்குப் புரியமாட்டேங்குது’

“எப்படியோ... போகட்டும்... பார்க்க பாவமாய் இருக்குது.. அவர்கிட்ட பாலைப்புறா

106

போய் ரெண்டு வார்த்தை பேசிட்டு வாங்க... ஒரு வயிறு எரிந்து... அதுல நம் வயிறு குளிரவேண்டாம். போங்க”

மனோகர்... வேண்டா வெறுப்பாய் போனான்.... முகத்தைத் திருப்பிக் கொண்ட சங்கரனின் மடக்கி வைத்த கையை வலுக்கட்டாயமாய்ப் பிடித்து குலுக்கினான். அவனிடம் இவன் ஏதோ பேச, அவன் ஏதோ பேச, மூன்று நிமிடத்தில் முடிந்துவிட்டது. மனோகர் மீண்டும், ஆங்காங்கே நின்றவர்களிடம் பேசியபடியே தற்செயலாய் நகர்வது போல் நகர்ந்து கலைவாணியின் பக்கம் வந்தான். ஒன் காட்ல மழை பெய்துடா என்று வெறுப்பாய்ப் பேசிய சங்கரனை, மனைவியிடம் விமர்சிக்கப் போகும்போது, ஒரு அறிவிப்பு ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஒலித்தது. பாம்பே பிளைட்டுக்கு, செக்யூரிட்டி செக்கப் துவங்கிவிட்டதாம்... பயணிகள், உடனடியாய் உள்ளே போக வேண்டுமாம். பம்பாய் போய், அங்கிருந்து ஏர் இந்தியாவை பிடித்து... அப்புறம் அமெரிக்கா...

மனோகர், கடைசி முயற்சியாக, கலைவாணியிடம், அவசர அவசரமாய் பேசிக் கொண்டு இருந்தபோதே, உதவிப் பொது மேலாளர் சூரியநாராயணன், ஜூனியர்களோடு அங்கேயே வந்தார். அடுக்குமாடிக்காரர்களும் கூடிவிட்டார்கள். செக்யூரிட்டி செக்கப் மீண்டும் அறிவிக்கப்பட்டது. சூரிய நாராயணன், அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தார். சகாக்கள் கை கொடுத்தார்கள். சங்கரன், பக்கத்தில் வந்து பட்டும் படாமலும் நினறான். மனோகர், கைகளைக் குலுக்கக் கொடுத்தாலும், அவனை எதிர்பார்த்து தனித்து நின்ற கலைவாணியின் பக்கம் கண்கள் தாவின. இதை புரிந்து கொண்ட சூரியநாராயணன், ‘போர்டிங், கார்ட்தான்... வாங்கியாச்சே... ஒய்ப்புக்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வா...’ என்று அவனிடம் பேசினார்.

மனோகர், கலைவாணி பக்கம் போனான். அவள் கணவனின் கரங்களைப் பற்றிக் கொண்டாள். அவள், கன்னங்கள் உப்பின... பின் உதடு நீண்டது. மூச்சு சத்தமானது... கஷ்டப்பட்டு, அழுகையை அவள் அடக்கிக் கொள்வது, தொலைவில் நின்ற சூரி உள்ளிட்ட அத்தனை பேருக்குமே புரிந்தது. மனோகர், அவசரஅவசரமாய் ஆலோசனை சொன்னான். அடிக்கடி டாக்டர் கிட்டே செக்கப் செய்துக்கோ... வேளாவேளைக்கு சாப்பிடு... நான் ஊட்டி விட்டால்தான்சாப்பிடுவேன்னு அடம் பிடிக்காமல்...

மனோகர், மனதை நிதானப்படுத்த, வேறு பக்கமாய் முகம் திருப்பினான். கலைவாணியும், அவனுக்கு, கடைசிநேர, கட்டளைகளை விடப் போனாள். சிகரெட்டுக்களை தனக்காக விட்டவன், தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லப் போனாள். பேசப் போன வாய்க்குள் நீர்க்குளம்... கண்ணிரோ... உமிழ்நீரோ... அவன் கைகளைப் 107

சு. சமுத்திரம்

பிடித்துக் கொண்டு விம்மினாள். உடனே, மனோகர் பிடிபட்ட தன் கரங்களாலேயே அவள் கரங்களை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

இதற்குள் விமானம் ஆயத்த நிலையில் இருப்பதாக ஒரு அறிவிப்பு... சூரிய நாராயணனே, அங்கே வந்து, மனோகரை கூட்டிக் கொண்டு போய், செக்யூரிட்டி ஜோன் வரைக்கும் சென்றார். கலைவாணி, உள்ளே போன கணவனைக் கண்டுபிடிக்க முடியாமல், அங்கேயும், இங்கேயுமாய் கண்களைச் சுழற்றியபோது, சியாமளாதான், அதோ பார் என்று இவள் மோவாயை மேலே நிமிர்த்தினாள். கலைவாணி, எக்கி எக்கிப் பார்த்தாள். அன்புக்குரியவன், மூன்று மாதம் முகம் காட்டாமல் இருக்கப் போகிறவன், முட்படிகளில் நின்றபடியே, மேலே மேலே போகிறான். பரலோகத்திற்கு போவது போல் போகிறான். அவளுக்கு... அவளுக்கு மட்டுமே கையாட்டி, கையாட்டி, ஒரு அசுரக் கோட்டைக்குள் மறைகிறான்.

கலைவாணியை, மோனிகாவும், சியாமளாவும் தாங்கிக் கொள்கிறார்கள். பாலா மாமியும், திருமதி கல்யாணராமனும் பக்கத்தில் வந்து நிற்கிறார்கள். பிறகு, அவளை ஆளுக்கொரு கையாகப் பிடித்தபடி, அங்கிருந்து நடந்து, விமானநிலையத்திற்கு வெளியே வரும் போது -

டாக்டர் சந்திரா கையில் ஒரு சூட்கேஸோடு உள்ளே நுழைகிறாள். கலைவாணியைப் பார்த்துவிட்டு ஆச்சரியம் தாங்காமல், ‘கலை... கலைவாணி' என்று அவள் கையைப் பற்றுகிறாள். கலைவாணிக்கும், சோகம் பின்னுக்குப் போகிறது. பெருமிதம் முன்னுக்கு வருகிறது.

"என் ஹப்பி. நியூயார்க் போறார் டாக்டர்...!”

‘சுகமா இருக்கியாம்மா...’

‘என்னைப் பார்த்தாலே, தெரியலியா டாக்டர்... எப்படி குண்டாயிட்டேன் பாருங்க... நீங்க எங்கே இப்படி டாக்டர்...’

"டில்லிக்கு.. போறேன்... எய்ட்ஸ் சம்பந்தமா ஒரு கான்பரன்ஸ்’ என்னை செலக்ட் செய்திருக்காங்க...”

‘கன்குராஜுலேஷன்... டாக்டர்’.

‘எனக்கும், கண் கெட்ட பிறகுதான்... சூரியநமஸ்காரத்தை சொல்லிக் கொடுக்காங்க... வாறேம்மா... உடம்பை நல்லா பார்த்துக்கம்மா... சத்துணவா சாப்பிடு...’

‘வீட்டுக்கு வாங்களேன் டாக்டர். இந்தாங்க விசிட்டிங் கார்ட்...' 108 பாலைப்புறா

டாக்டர் சந்திரா, கலைவாணியை மருவி மருவிப் பார்த்தபடியே உள்ளே வந்தாள்... அவளுக்காக, காத்து நின்ற மாமா மகன் சங்கரை, அக்கம் பக்கம் பார்த்து தலையில் குட்டினாள். அவன் வழக்கம் போல் சிரிக்காமல், வாடிப் போய் நின்றான்.

‘என்னத்தான்... ஒரு மாதிரி இருக்கீங்க... ஒங்க பாரின் டிரிப் என்னாச்சு...’

‘கடைசி நேரத்துலகால வாரிட்டாங்க... எனக்குப் பதிலாய்... நீ வாசல் பக்கமாய் பேசிட்டு நின்னியே... கலைவாணியோ... கொலைவாணியோ அவளோட ஹஸ்பன்ட் போறான்... எனக்கு ஜூனியர் பயல்...’

‘அட கடவுளே... என்ன காரணமாம்...’

"காரணமாவது... கத்திரிக்காயாவது... டெப்டி ஜெனரல் மானேஜருக்கும், எனக்கும் பிடிக்காது... அதுதான் உள் காரணம். ஒன்னைப் பார்க்க வாரதுக்காக டைபாய்டுன்னு சும்மா ஒப்புக்கு ஒரு சர்டிபிகேட் வச்சு மெடிக்கல் லீவ் போட்டேன். அந்த இல்லாத டைபாய்டையே அவங்க எனக்கு எதிராய் திருப்பிட்டாங்க.”

‘அப்போ... எய்ட்ஸ் கிருமிகள். இருக்கிறவரை மட்டும் அனுப்பலாமா...?’

"நீ என்ன சொல்றே?”

"ஒன்னும் இல்ல... மாமா... அத்தை எப்படி இருக்காங்க!”

டாக்டர் சந்திரா, நாக்கை கடித்தாள். பேச்சை வேறு பக்கமாய் மாற்றப் போனாள். சங்கருக்கு ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அவள், மனோகர் சம்பந்தப்பட்ட ஒன்றை மறைக்கப் பார்ப்பது புரிந்தது. இல்லையானால், எந்த மாமா - அத்தை வீட்டில் இருந்து இப்போது இங்கே வந்தாளோ, எவரிடம் நேற்று ராத்திரி முழுக்க அரட்டை அடித்தாளோ, அந்த மாமா. அத்தை பற்றி கேட்டிருக்க மாட்டாள். சங்கரன், அவளை, கேன்டீன் பக்கமாய் கூட்டிப் போனான்.

"என்ன பராக்கு பாக்கே...?”

"என்னோட வரவேண்டிய அசோகனை இன்னும் காணலையே...”

சங்கரன் சங்கடப்பட்டான். மனதிற்குள்ளே மனோகரைப் போல் அசோகனைக் கொன்று போட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_11&oldid=1641697" இலிருந்து மீள்விக்கப்பட்டது