பாலைப்புறா/அத்தியாயம் 21

டாக்டர் அசோகனைப் போலவே, அவன் மருத்துவ மனையும் தனித்தும், தனித் தன்மையோடும் இருந்தது. மாடி இல்லாத ஒற்றைக் கட்டிடம். ஆனாலும், மேலே அவன் தங்குவதற்கான ஒரே ஒரு அறை. கீழே சத்திரம் சாவடி மாதிரி, அறை அறையாய்ச்செல்லும் பரந்து விரிந்த கட்டிடம். அதை இரண்டாகப் பிரிக்கும் அகலப் பாதை… முன் புறத்தில் இருந்து பின் புறத்தைப் பார்க்கலாம். ஆனாலும், அறைகளைப் பார்க்க முடியாது… சீருடை இல்லாத செவிலித் தாய்களான நர்ஸுகள்… காக்கிச் சட்டை போடாத பையன்கள்… ‘டாக்டர்’ என்பதற்குப் பதிலாக ‘அண்ணா… அண்ணா…’ என்று கூப்பிடுகிறவர்கள்…

வரவேற்பு அறைக்கு எதிர்த்தாற் போல் உள்ள முன் பக்க அறையில், ‘எஸ்’ வடிவ நாற்காலியில் உட்கார்ந்திருந்த டாக்டர் அசோகன், ஏங்கி, ஏங்கி அழுத மோகன்ராமைப் பார்த்து எழுந்தே விட்டான். இப்படி, பல இளைஞர்கள் அவனிடம் ‘விஷயம்’ கேள்விப்பட்டு, அழுதிருக்கிறார்கள். ஆரம்பத்தில், அவர்களோடு சேர்ந்து அழுதவன்தான் இவன். ஆனால், மனம் மரத்துப் போனதோ… அல்லது பக்குவப்பட்டதோ, இப்போதெல்லாம் அழுவதில்லை. ஆனால், அடியும் தலையும் ஆணித்தரமாய் உள்ள இந்த மோகன்ராம் அழுவதைப் பார்த்ததும், அவன் கண்கள் நீர் சிந்தவில்லையானாலும், நீருக்குள் நின்றன.

நாற்காலியில் இருந்து எழுந்து போய், முக்காலியில் உட்கார்ந்தவரை அசோகன் தட்டிக் கொடுத்தான். மருந்து கொடுத்தால், ஏழு நாட்களிலும், மருந்தில்லாமல் ஒரு வாரத்திலும் மறையும் அற்ப ஜலதோஷம், இவரை விட்டு ஒரு மாதமாகப் போகவில்லை; எல்லோரையும் மூன்று நாள் ஆட்டுவித்த ‘டிங்கு ஜூரம்’ இவரை மூன்று மாதமாய் விடவில்லை. சிகிச்சையளித்த டாக்டர் சுமதியை, இந்த மோகன்ராம் அதட்டிக் கேட்க, அவள் சந்தேகப்பட்டு, இவரை இங்கே அனுப்பி விட்டாள். ரத்தத்தை டெஸ்ட் செய்தால், ஹெச்.ஐ.வி… சொல்லித்தான் ஆக வேண்டும்… சொல்ல வேண்டிய முறையில் சொல்லியாயிற்று… எவரையும் அழ வைக்கும் மோகன்ராம், முதலில் முரடனாகி, பிறகு சிறுவனாகி, இப்போது குழந்தையாகி விட்டார்.

“டாக்டர்… நீங்க நம்ப மாட்டிங்க… ஆனாலும், சத்தியமாய்ச் சொல்லுறேன். என் பொண்டாட்டியைத் தவிர, எவளையும் தொட்டதில்லை. கெட்டதில்லை… நான் குணத்தில் வீமன்னாலும், குடும்ப வாழ்க்கையில ஸ்ரீராமன். ஆனாலும் நீங்க நம்ப மாட்டிங்க. ஏன்னா, என் பெண்டாட்டியே என்னை நம்புறது இல்ல…”

“நான் நம்புறேன் ஸார்.”

“அப்போ… இது எனக்கு எப்படி வரும்…”

“எப்படி வருமுன்னு கேட்காதீங்க… எப்படி வந்ததுன்னு கேளுங்க… தகாத நடத்தையால மட்டுந்தான் இது வரணுமுன்னு இல்லை; எய்ட்ஸ் நோயாளிக்கு முகச் சவரம் செய்த ரத்தக் கத்தி, ஒங்க மேல பட்டிருக்குதா… பொம்பளைய ஏறெடுத்துப் பார்க்காத, நீங்க ஆம்புளகிட்ட போனது உண்டா…”

“என்ன டாக்டர் இது… இதை விட ஒரு விஷ ஊசி போட்டுக் கொல்லுங்க…”

“தப்பா நினைக்கப்படாது ஸார்… ஒரு டாக்டருக்கு, உடம்பை மட்டும் இல்லாமல், மனசையும் நிர்வாணப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் வருவது சகஜம்… ஒங்கள அசிங்கப்படுத்துறதுக்காக கேட்கல… அந்த அசிங்கமான உறவும், எய்ட்சுக்கு ஒரு காரணம்… அதனாலே கேட்டேன்.”

“மிச்சம் மீதி… கேள்வியை ஏன் வைக்கீங்க… ஒன் பெண்டாட்டி எத்தன பேர் கிட்டே படுத்திருப்பான்னு, அதையும் கேளுங்க டாக்டர்.”

மோகன்ராம், மூடிய கண்களை கைகளாலும் மறைத்து, மறைந்த முகத்தை, மேஜையிலும் கவிழ்த்தினார், முகமற்ற மனிதர் போல் குலுங்கினார். டாக்டர் அசோகனால் சமாளிக்க முடிந்தது…

“அந்தம்மாவுக்கு”…

“அவள் என்னை நம்பல… ஆனால் அவளை நம்புறேன் டாக்டர்… சீதா தேவியோ, சத்தியவான் சாவித்திரியோ, கெட்டுப் போயிருந்தால், அவளும் கெட்டு போனவள்தான்.”

“நான் அந்த அர்த்தத்துல கேட்கலியே… ஒரு வேளை தம்பி மனோகருக்கு வந்தது… அந்தம்மாவுக்கும்…”

“இருக்காது… அக்காவும்… தம்பியும் கீரியும், பாம்பும் மாதிரி… மனோகர் மாப்பிள்ளை அக்காவையும் மீறி, என்னை உயிருக்கு மேலாய் நினைச்சான்.”

“சரி… எங்கேயாவது ஆஸ்பத்திரியில், கடந்த ஏழு வருடத்தில, நீங்க எதுக்காவது சிகிச்சைக்குப் போய்… உடம்பிலே ரத்தம் கொடுத்தாங்களா…”

“ஆமா… அஞ்சு வருஷத்துக்கு முன்னால, ஒரு வரப்புச் சண்டை; எதிராளி, என் வெட்டரிவாளால தலை வேற, முண்டம் வேறயா போனான்… ஆனால் அப்படி விழுறதுக்கு முன்னால, இந்தாப் பாருங்க… தலையில தழும்பு. ஊனிக் கம்பால என் மண்டையப் பிளந்துட்டான். எனக்கு மயக்கமாயிட்டு. பிளஷர் கார்ல தூக்கிட்டுப் போயிருக்காங்க. ரத்தமும் கொடுத்திருக்காங்க. டிஸ்சார்ஜ் ஆன போது, ரத்தம் கொடுத்தவனே, என்கிட்ட நூறு ரூபாய் இனாமாய் கேட்டான். நான் முந்நூறு ரூபாயா கொடுத்தேன். உயிரை எடுக்காமல் விட்ட போலீஸுக்கு பத்தாயிரம் கொடுத்த போது, உயிர் காத்த இவனுக்கு, முந்நூறு ரூபா கொடுக்கிறதா பெரிசு?”

இதற்குள், திறந்திருந்த அந்த வாசல் வழியாக, சந்திராவிடம் மன்றாடிய அதே மனிதர் வந்தார். சாராய வாசனையுடன் பேசினார்.

“டாக்டரய்யா… டாக்டரய்யா… நாம் செத்த பிறகும், நம்மோட உடம்பு பிறத்தியாருக்கு உதவணுமுன்னு கூட்டம் போட்டு பேசுற ஒங்களுக்கு இந்த குணசீலனைப் பற்றி தெரியுமா? செத்த பிறகு என்ன… செத்த பிறகு.. உயிரோட இருக்கும் போதே, உடம்பால உதவுறவன் இந்த குணசீலன்… என் ரத்தம் ஓ குரூப். அதுவும், நெகட்டிவ். எத்தனை பாட்டில் வேணும்…?”

“குணாளா… மரியாதையாய் போங்க. இல்லாட்டால், போலீஸ்ல ஒங்களை ஒப்படைக்க வேண்டியதிருக்கும்?”

அசோகன், டெலிபோனில் ஏழுக்கும் அதிகமான எண்களைச் சுழல விட்டு, ‘இன்ஸ்பெக்டர் இருக்காங்களா’ என்று கேட்காத குரலிடம் கேள்வி கேட்ட போது, குணசீலனுக்கு பாதி போதை போய் விட்டது. அசோகனை, கையெடுத்துக் கும்பிட்டு விட்டு ஓடப் போனார். இட நெருக்கடியில் அது முடியாது என்பதால், வேகமாக தலையைத் திருப்பியவர், மோகன்ராமை உற்றுப் பார்த்தார். சுவையோடு பார்த்தார். இனிமையோடு கேட்டார்.

“அண்ணா… தர்மப் பிரபுவே! நீ கொடுத்தே பாரு… முந்நூறு ரூபாய்… இன்னும் வாயில வாசனையா நிற்குதுண்ணா… அதை ஒரு ரவுண்ட் பண்ணி 500ஆய் ஆக்கப்படாதாண்ணா.”

டாக்டர் அசோகன், இதற்குள் இன்ஸ்பெக்டரிடம் “பேசி”, முடித்து விட்டு ‘ஒகே… சார் ஆசாமியை விடல சார்’ என்று சொல்லி முடித்த உடனேயே, குணாளன் காணாமல் போய் விட்டார். தலையை சொறிந்து கொண்டிருந்த மோகன்ராம், கொதித்துப் போய் பேசினார்…

“இந்த செறுக்கி மவன்தான்… எனக்கு ரத்தம் கொடுத்தவன். இந்த தேவடியா மகன்தான்…”

“இவனா… அப்போ நிச்சயமா இவன் மூலந்தான் வந்திருக்கணும். இவன் ஒரு ரத்த வியாபாரி… இவனுக்கு எல்லா ஆஸ்பத்திரியும், எல்லா டாக்டரும் அத்துபடி… எய்ட்ஸ் உள்ளவன், அப்படி இருக்குன்னும் தெரிஞ்சவன்… எத்தன பேருக்கு எய்ட்ஸ் கொடுத்தானோ.”

“என்ன டாக்டர்… இது அநியாயமாய் இருக்குது…? ஒரு கேள்வி முறை இல்லியா… ரத்த தானம் செய்தாலும்… அந்த ரத்தத்தை டெஸ்ட் செய்யுறதாய் வேற பீத்திக்கிறாங்க…”

“டெஸ்ட்… செய்யணும்… அதுதான் முறை. நாட்டுல முறையில்லாமப் போறதே, ஒரு முறையாயிட்டு… எனக்குக் கொஞ்சம் சந்தோஷம். இந்த பத்து நாளையில எவ்வளவோ மாறிட்டிங்க… எய்ட்ஸ் கிருமிகளோட வாழ்கிற அளவுக்கு பழகிட்டிங்க.”

மோகன்ராம், பதிலுக்கு பேசப் போன வாயை அகலமாக்கி, அப்படியே எழுந்தார். டாக்டர் சந்திராவுடன் உள்ளே வந்த கலைவாணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு விம்மினார்.

“நான் துரோகிம்மா… துரோகி… நீ இந்த நிலைமைக்கு வர்றதுக்கு நானும் காரணம்மா… ஆனால், நான் வேணுமுன்னு செய்யலம்மா… அதுக்கான பலனும் கை மேலயே கிடச்சிட்டும்மா.”

“டாக்டரம்மா… நாம் போகலாமா? அப்புறமா வருவோம்.”

கலைவாணி, பெரியம்மா மகன் பிடித்த கைகளை உதறி விட்டாள். வெளியே போவதற்காக முகம் திருப்பினாள். அவளைப் பிடித்துக் கொண்டே, சந்திரா, மோகன்ராமிடம் எரிந்து விழுந்தாள்.

“இப்போதான்… இவங்களைக் கெஞ்சிக் கூத்தாடி, சரி செய்து கொண்டு வந்து இருக்கேன்… நீங்க அதைக் கெடுத்திடாதீங்க…!”

“டாக்டரம்மா… ஒங்களையும்…”

“இந்த சினிமா வசனமெல்லாம் வேண்டாம். ஒண்ணு நீங்க இங்கே இருங்க இல்லாட்டால்… எங்கள இருக்க விடுங்க… தப்பு எங்க பேர்லேதான்… நாங்க, இவரு போன பிறகு, வாரோம் டாக்டர். வெளியிலே போய் நிற்கோம்.”

மோகன்ராம், தலை கவிழ்ந்தபடியே வெளியேறினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து, முகத்தை துடைத்துக் கொண்டு, அதைக் கைகளில் போட்டுக் கொண்டார். அவர் போன நத்தை வேகத்தில், அறைக் கதவுகள் கூட ஆடவில்லை. டாக்டர் அசோகன் சந்திராவைப் பார்த்து, புன்னகைக்காமலேயே கேட்டான்.

“நீங்க இவ்வளவு கடுமையாய் பேசி இருக்கப்படாது”

“அதுக்கும் காரணம் இருக்கு டாக்டர்… ஒரு சின்ன அதிர்வுல கூட கலைவாணி, தன்னை… அறியாமலே ஏதாவது செய்திடலாம்… அந்த அளவுக்கு இவங்களை முஸ்தபா நோக வச்சிட்டான்.”

டாக்டர் அசோகன், எதிர் நாற்காலியில் விக்கித்துப் போய் கிடந்த கலைவாணியையே உற்றுப் பார்த்தான். மான் குட்டிக்கு, சிங்கக் குட்டியின் கண்களை, டிரான்ஸ்பிளான்ட் செய்தது மாதிரியான உடல் வாகு… பார்வை… வெள்ளையன்பட்டி மருத்துவ முகாமில் அவள் துள்ளித் திரிந்த லாகவம், இன்னும் கண் முன்னாலயே விரிகிறது. எய்ட்ஸ் பற்றிப் பேசி முடித்த தன்னிடம், அவள் கேட்ட விளக்கங்களை, டாக்டர்களே கூட கேட்க மாட்டார்கள். கேட்க… தோணாது என்பதல்ல… கேட்கத் தெரியாது. இதனால்தான், ஐந்தாறு மாதத்திற்கு முன்பு, டாக்டர் சந்திரா ஆதியோடு அந்தமாக இவளைப் பற்றி விவரித்த போது, ஒரு நாள் முழுவதும் சாப்பிட முடியவில்லை. சோற்றுக்கு பஞ்சமில்லை என்றாலும், சொல்லக் கொதித்த நெஞ்சம். பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பு, இந்த கலைவாணி சென்னையில், சந்திராவை கீழே தள்ளிப் போட்டாலும், அவள் மீது இவனுக்கு கோபம் வரவில்லை…

சந்திரா, அசோகனிடம் நடந்ததை விளக்கினாள். பிறகு இப்படிச் சொன்னாள். “கலைவாணியை, நான் பிடிக்கா விட்டால், முஸ்தபா மண்டை உடைந்திருக்கும். அவன் மண்டை உடையுறதப் பற்றிக் கவலை இல்ல டாக்டர். கலைவாணி இந்நேரம் போலீஸ் லாக்கப்ல இருந்திருக்கணுமே.”

“ஆனாலும், நீங்க அவசரக் குடுக்கை டாக்டர்.”

“எதுக்கெடுத்தாலும், என்னையே குறை சொல்லுங்க… இதுக்குத்தான் நான் இங்கே வருவதே இல்ல.”

“இப்போ… கூட நான் ஏன் சொன்னேன்னு நினைத்துப் பார்க்காமல், எப்படிச் சொல்லாமுன்னுதான் நினைக்கிறீங்க? முஸ்தபாவா இருந்தால், வாரதும், வராததும் ஒங்க இஷ்டமுன்னு சொல்லி இருப்பான். நான் சொல்ல மாட்டேன். பிகாஸ் ஒங்களை எனக்குத் தெரியும்… இருபத்து நாலு காரெட்… அப்படியே நகை செய்ய முடியாது.”

“ஐயாம் ஸாரி. டாக்டர்.”

“ஆனாலும்… கடைசியாய் ஒங்களைப் பற்றி… ஒரு ரவுண்ட்அப் செய்ய வேண்டியது என்னோட கடமை… நாம், நம்மை, நம்மோட நோக்கங்களை வைத்து எடை போடுறோம். ஆனால், வெளி உலகம், நம்மை, நம்மோட செயல்கள், அதன் விளைவுகள் இவற்றை வச்சே எடை போடுறாங்க… உதாரணமாய், நீங்க மனோகர் கிட்டே சொன்னது நல்ல நோக்கந்தான். ஆனால், அதோட விளைவு ஒங்களுக்கே தெரியும்… அப்போ சொல்வதைத்தான், இப்போ சொல்றேன். நீங்க மட்டும் மனோகரோட நிலைமையை, கலைவாணியோட காதுலே போட்டிருந்தால், கதையே வேற… அப்புறம் கூட… உங்களுக்கு புத்தி வரல்ல. அந்த ஓட்டவாயன் சங்கரன் கிட்ட நடந்ததைச் சொன்னதால… அவன் நடக்கக் கூடாததை நடத்திக் காட்டிட்டான். இப்போக் கூட பாருங்க… எய்ட்ஸுன்னா. துண்டக் காணோம்… துணியக் காணோமுன்னு டாக்டர்களே ஓடுறாங்க… முஸ்தபாவோ, முழு மூடன்… பேசாமல், கலைவாணியை இங்கே முதல்லயே கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமே… இது ஒங்க மருத்துவமனைதானே.”

கடைசியாய் சொன்ன வார்த்தைகளால், சந்திரா ஓரளவுக்கு சமாதானப்பட்டாள். ஆனாலும், ஒரு எரிச்சல். ஒருத்தர் கீழே விழுந்து கிடக்கும் போது, இப்படி அடிக்கப்படாது…

டாக்டர் அசோகன், இன்னமும் ஏறிட்டுப் பார்க்காத கலைவாணியைப் பார்த்துட்டு, சந்திராவிடம் கேட்டான்.

“டிரான்குலைஸர்… ஏதாவது கொடுத்தீங்களா!”

“இல்ல டாக்டர்.”

“கலைவாணி… ஏன் இப்படி கவிழ்ந்து கிடக்கே… நிமிர்ந்து நில்லும்மா… உலக பாவங்களை சுமக்கிறதுக்காக, ஆண்டவர் வலுவான நல்லவங்களை தேர்ந்தெடுத்து, அவங்க கிட்ட சிலுவை சுமக்கக் கொடுப்பாராம். நான் கிறிஸ்தவன் இல்ல… ஆனாலும், இதை நம்புறேன். நீ வலுவானவள். பாவங்களுக்கு பரிகாரம் தேடுகிறவள்… இதனால். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீ… தைரியாமாவே சிலுவை சுமக்கணும்… கமான். பீ சீயர்புல்…"

கலைவாணி, மெள்ள மெள்ள தலை நிமிர்ந்தாள். டாக்டர் அசோகன் முகத்தில் படர்ந்த புன்னகை, அவளை கால்வாசி பற்றி கொண்டது. அதுவே சோகத்தை பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருந்தது. அசோகன் தொடர்ந்தான்.

“கரெக்ட்… இப்படித்தான் இருக்கணும்… ஆனாலும் ஒண்ணும்மா… இனி மேல், இந்த சந்திராவை விரோதியாய் நினைக்காதே. ஒருத்தனுக்கு அல்லது ஒருத்திக்கு எய்ட்ஸ் இருக்குதா… இல்லியா என்கிறதை சம்பந்தப்பட்டவங்க கிட்டதான் டாக்டர் சொல்லணும் என்கிறது இப்போதைய மெடிக்கல் தர்மம். அவனோ, அவளோ கல்யாணம் செய்வாங்களா, செய்யணுமா… இதல்லாம் இப்போதைக்கு டாக்டரோட டூட்டி இல்ல… இன்னும் சொல்லப் போனால், ஒருத்தருக்கு இருக்கிற எய்ட்ஸை காரணமாய் காட்டி… கோர்ட்ல விவாகரத்து கூட வாங்க முடியாது. காரணம், எந்த டாக்டரும் எய்ட்ஸ் சர்டிபிகேட் கொடுக்க முடியாது. கொடுக்கக் கூடாது… இப்படிப்பட்ட சமூக விரோத சூழலுல கூட, டாக்டர் சந்திரா ஒங்களுக்காக, தன் சக்திக்கு ஏற்ற அளவு போராடி இருக்காங்க. ஒரு வேளை, சினிமா பாணில அவங்க ,ஒங்க கல்யாணத்தை நிறுத்தி இருந்தால்… மோகன்ராம், இந்த அம்மா தலையை மட்டும் தூக்கிட்டு, தைரியமா போலீஸ் நிலையத்திற்கு போயிருப்பார். அப்போக் கூட போலீஸ்ல கேஸ் ரிஜிஸ்டர் செய்திருக்க மாட்டாங்க. போலீஸ், போலீஸா இல்லாத வரை, நியாயம், நியாயமா இல்லாத வரை, டாக்டரும், டாக்டரா இருக்க முடியாது. இதை நீங்க புரிஞ்சிக்கணும். கல்யாணத்திற்கு ஆயத்தமாகிற மணமகனுக்கும், மணமகளுக்கும் மெடிக்கல் டெஸ்ட் கட்டாயமாக்கப்படாத வரை, இந்த மாதிரி கோரங்கள் நடக்கும். அப்போக் கூட நம்மாளு காசு வாங்கிட்டு… கள்ள சர்டிபிகேட் கொடுப்பான். வேற பேஷண்டா இருந்தால், இப்படிப் பேச மாட்டம்மா… ஒன்னையும், இந்த சந்திராவை எப்படி நேசிக்கேனோ, அப்படி நேசிக்கேன்… அதனாலதான் இப்படி பேசுறேன்…”

டாக்டர் சந்திரா, அசோகனைப் பொருள்பட பார்த்தாள். வட்டியும், முதலுமாய் வாஞ்சையோடு பார்த்தாள். அவளுக்கு, அவன் ஏன் தன்னை எடுத்த எடுப்பிலேயே அப்படி விமர்சித்தான் என்பது இப்பொழுதுதான் புரிந்தது. உண்மையைத்தான் சொன்னார். ஆனால், அதை தலைகீழாகச் சொல்லி, கலைவாணியை சரிப் படுத்தப் பார்க்கிறார்.

டாக்டர் அசோகன் பேசி முடித்த போது, கலைவாணி இயல்பு நிலைக்கு வந்து விட்டாள். அசோகனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். சந்திராவின் கையோடு கை கோர்த்தாள். சந்திராதான் கேட்டாள்.

“அப்போ அபார்ஷன் எப்போ வச்சிக்கலாம்?”

“இன்றைக்கே அட்மிட்பண்ணிடுறேன்”

கலைவாணி பேசினாள்… ஒவ்வொரு வார்த்தையிலும், ஒரு சோகச் சுமை. துக்கமான ஒலி வாகனத்தில், அந்த வார்த்தைகள் விட்டு விட்டு வெளிப்பட்டன. கோர்வை அற்று தெறித்தன.

“நான்… அப்பாவி டாக்டர்… யாரையுமே மனசில கூட நினைக்காதவள் டாக்டர். அப்போக் கூட என்னோட மாமியாரு நான்தான், தகாத…”

“அழாதம்மா… முற்றும் நனைந்தாருக்கு ஈரம் இல்லை…”

“என்னோட தகாத உறவாலதான், மனோகருக்கு வந்ததாய் மாமியார் சொல்றாள். ஊரும் உறவும் இதை நம்புது. எய்ட்ஸை கூட என்னால தாங்கிக்க முடியும்… ஆனால்… இதை…”

“விட்டுத் தள்ளும்மா… நாம் எந்த குற்றமும் செய்யாமல், இருக்கும் போது, அந்தக் குற்றம்… நம்ம மேல சுமத்தப்படும் போது, நமக்குள்ளயே ஒரு சிரிப்பு வருமே… லேசாவாவது வருமே… அந்தச் சிரிப்பை பலப்படுத்து… இப்போ என்னையே எடுத்துக்கோ… சந்திராவுக்குத் தெரியும்… எய்ட்ஸ் நோயாளிகளுக்குன்னு உள்ளே தனி வார்டே வச்சிருக்கேன். அவ்வளவு பேசுற டாக்டர் சுமதி கூட, என் கிட்டதான்.அனுப்புவாங்க… இதனால எனக்கு வருகிற சராசரி நோயாளிங்க எண்ணிக்கைக் கூட குறைஞ்சிட்டு; அப்பாதான் திட்டி, திட்டி பணம் அனுப்புறார். அவரும் பெரிய பணக்காரர் இல்ல… ஆனாலும், வெளியிலே என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? நான் அரை கிறுக்கனாம்… எனக்கும் எய்ட்ஸ் இருக்குதாம்… அதனாலதான், எய்ட்ஸ் நோயாளிய அட்மிட் செய்றேனாம்… பாவிப் பயல்க, குறிப்பா… இந்த டாக்டருங்க… ஒன் கிட்ட மட்டும் சொல்றேன்னு எல்லார் கிட்டயும் இப்படிச் சொல்லிச் சொல்லி, இப்போ ஒருத்தன் கூட எனக்கு பெண் கொடுக்க வர மாட்டாக்கான். சத்தியமான வார்த்தையம்மா… என் மேலே உயிரையே வைத்திருக்கிறதாய் சொன்ன எங்க ஊரு வாத்திச்சி… என்னைப் பார்த்தாலே ஓடுறாள்…”

“வெக்கமா இருக்கும் டாக்டர்”

“வெக்கமில்ல. வெக்கப்பட வேண்டிய விஷயம்… என் தாலிக்காகவே, கழுத்தை வளைத்து வச்சிருந்தவள், இப்போ மஞ்சள் சரட்டோட ஓடுறாள்… ஒரு வேளை, இதையும் துக்கத்தில ஓடுறதாய் சொல்வீங்க. காதல் துக்கத்தை பகிர்ந்து கொள்ளத்தான், ஒரு என்சீனியரைக் கட்டிக்கிட்டாளாம்.”

டாக்டர் அசோகன் சிரித்தபடியே, அந்தப் பெண்களை அழ வைக்கப் போனான்; பிறகு சுதாரித்துக் கொண்டான். ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. சொல்லலாமா… வேண்டாமா என்பது போல், வலது கை ஆள்காட்டி விரலால் தலையைத் தட்டினான். பிறகு கலைவாணிக்கு, அவ்வப்போது தலை காட்டும் இஸ்டிரியாவை கருத்தில் கொண்டு தெரிவித்தான்.

“இன்னொரு முக்கியமான விஷயம்மா… உடலுறவால, உடனேயே ஒருத்திக்கோ, ஒருத்தனுக்கோ ஹெச்.ஐ.வி. வரணுமுன்னு அவசியம் இல்ல. பல ஹெச்.ஐ.வி. நோயாளிகளோட மனைவிகளை டெஸ்ட் செய்திருக்காங்க. பலருக்கு இல்லவே இல்ல. இதனால… ஒனக்கு ஹெச்.ஐ.வி. இல்லாமல் இருக்கவும் சான்ஸ் இருக்குது. ஆமாம்மா… நீ முட்டுறதும், மோதுறதும் நிழல் யுத்தமாய் கூட இருக்கலாம். இருட்டு வீட்ல இல்லாத கருப்புப் பூனையை தேடுறதாய் கூட இருக்கலாம்”…

கலைவாணியின் மொட்டு முகம், பூச்சரமாய் விரிந்தது. உடல், ஆகாயமும் பூமியுமாய் விஸ்வரூபம் எடுத்தது. காதுகளை நம்ப முடியாதவள் போல, கைகளால் பிடித்தாள். இந்த டாக்டர் சொல்வது நிசம்தானா என்று சந்திராவை, கண்களால் கேட்டாள். “எனக்கு எய்ட்ஸ் இல்லே! இல்லே அப்பா… இல்லப்பா… அம்மா இல்லம்மா… ஏய் ஆறுமுக நயினாரு… எனக்கு இல்லய்யா…மனோகரா… ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கிறாண்டா…”

கலைவாணி எழுந்தாள், உட்கார்ந்தாள். அந்த அறையை அப்போதுதான் பார்ப்பது போல், ரசனையோடு பார்த்தாள். ஒரு குதி போட்டு, மீண்டும் உட்கார்ந்தாள். பிறகு, தான் கேட்டதை, மீண்டும் உறுதிப்படுத்த நினைத்தாள். மனோகர் மீது கூட சிறிது இரக்கம் ஏற்பட்டது. வாயெல்லாம் பல்லாகக் கேட்டாள்.

“நீங்கள் சொல்றது நிசமாவா டாக்டர்”

“ஆமாம்மா… ஒனக்கு ஹெச்.ஐ.வி. இருக்கணுமுன்னு அவசியமில்ல. உண்டு இல்ல என்கிறது ஐம்பதுக்கு ஐம்பது…”

“அய்யோ… எனக்கு இப்போ எப்படி இருக்குது தெரியுமா… சந்தோசம் தாங்க முடியல”

கலைவாணி, சந்திராவைக் கட்டிப் பிடித்தாள். அவளோ, இந்த விபரம் தனக்கு தட்டுப்படாமல், போய் விட்டதே என்பது போல், தன் தலையில் குட்டி விட்டு, கலைவாணியை கட்டிப் பிடித்தாள். கலைவாணி துடித்துக் கேட்டாள்.

‘இப்பவே… எனக்கு டெஸ்ட் செய்யுங்க டாக்டர்… டாக்டரம்மா, டாக்டர் கிட்ட சொல்லுங்கம்மா.’

டாக்டர் அசோகன்… தடுமாறினான். இவளுக்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு கொடுக்கலாகாது… எச்சரிக்கவும் வேண்டும்.

“நான் இருக்கணுமுன்னு… அவசியமில்லன்னு சொன்னால், இருக்கலான்னும் அர்த்தப்படுத்திக்கணும்… முதல் டெஸ்டில் இல்லாதது மாதிரி தெரியலாம். ஆனால், இரண்டாவது டெஸ்ட்டுலே இருக்கலாம். நீ கடைசியா எப்போ செக்ஸ் வச்சிக்கிட்டே? இதுல… வெக்கப்படுறதுக்கு ஒண்ணும் இல்லம்மா… இரண்டாவது டெஸ்டுக்கு இது முக்கியம்… சும்மா சொல்லும்மா…”

“மனோகர்… நியூயார்க்கு புறப்படுறதுக்கு முந்திய ராத்திரி”

“இன்னையோட எத்தனை நாள் இருக்கும்?”

“இருபது நாள்…”

“ஒரு வேளை… அந்தக் கடைசி உறவுல அந்தக் கிருமிகள் ஒன் கிட்ட தாவியிருக்குமா என்பதை தெரிஞ்சிக்க… இன்னும் ஒரு மாதம் கழித்து ஒரு டெஸ்ட் செய்யணும். அதுலயும் இல்லன்னா… நானே மூன்றடி குதிப்பேன்…”

“என்ன டாக்டர்… என்னை பயமுறுத்துறீங்க… தொட்டிலையும் ஆட்டி விட்டு குழந்தையையும்…”

“கிள்ளலம்மா… தாலாட்டுத்தான் பாடுறேன்… அது சந்தோஷமானதா, துக்கமானதான்னு இப்போ சொல்ல முடியாது. ஹோப் பார் தி பெஸ்ட் அன்ட் பிரிப்பர் பார் தி ஒர்ஸ்ட். நல்லதே நடக்குமுன்னு நம்பு… அதே சமயம் கெட்டதை எதிர் கொள்ளவும் தயாராய் இரு”…

“கலைக்கு மட்டும் அது இல்லன்னா…அய்யோ நினைக்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்குது… இவங்களுக்கு இல்லாட்டி, நான் திருப்பதில அங்கப் பிரதட்சணம் செய்வேன்”

டாக்டர் அசோகன், எதையோ நினைவுபடுத்திக் கேட்டான். அது பேச்சை மாற்றுவது போலவும் இருந்தது.

“ஆமா… இன்றைக்கு நான் உங்க வீட்ல சாப்பிட்டிருக்கணுமே”…

“நோ நோ… நாளைக்குத்தான் டாக்டர்”

“அப்போ இன்னிக்கும் புதன்கிழமை… நாளைக்கும் புதன் கிழமையா நாளை… நாளை என்னாதே… நண்பகல் உணவைப் பறிக்காதே”

கலைவாணி, எழுந்தே கேட்டாள்.

“இதையே நான் சொன்னதா நினையுங்க டாக்டர். இப்பவே என் ரத்தத்தை எடுங்க டாக்டர்”

அசோகனும் சந்திராவும், கலைவாணியை ஒரு சேரப் பார்த்தார்கள். அவளோ எங்கேயோ இருப்பது போல், அங்கே இருந்தாள். வாய், ஒரு பாட்டை முணுமுணுத்தது. வாடாப்பூ, அவளைக் கட்டியணைக்கிறாள். கனகம்மா, பாம்படத்தை ஆட்டிக் காட்டுகிறாள். அம்மா உச்சி மோர்கிறாள்… அப்பா, குனிந்த தலையை நிமிர்த்திக் கொள்கிறார்.

கலைவாணி… ஐம்பதுக்கு ஐம்பது என்று அசோகன் சொன்னதை எய்ட்ஸ் பரிட்சையில் பாஸ் மார்க் வாங்கி விட்டதாகவே நினைத்தாள். முப்பத்தைந்தை விட பதினைந்து மதிப்பெண்கள் அதிகம்…

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_21&oldid=1641707" இலிருந்து மீள்விக்கப்பட்டது