பாலைப்புறா/அத்தியாயம் 22
கலைவாணி கண் விழித்தாள் என்பதை விட, கண் திறந்தாள் என்று சொல்லலாம். மயக்கம் படிப்படியாய் தெளிந்தது போல், இமைகள் மெள்ள மெள்ள மேலேறின. கனவில்லாத தூக்கம். கல்லறைக்குள் முடங்கியது போன்ற மோனம். இடம், பொருள், எய்ட்ஸ் பரிணாமங்களைக் கடந்து, கால வெள்ளத்தில், கண்ணுக்குத் தெரியாத துளியாகவும், பிரபஞ்ச ஒளிச் சங்கமத் தூளியில் தூங்கிப் போன அனுபவம். மரணத்தின் வெள்ளோட் டமோ, மறு பிறப்பின் பின்னணியோ…
கலைவாணி சுற்று முற்றும் பார்த்தாள். தனித்ததோர் சிறிய அறை… பச்சைக் கட்டிலில் போட்ட வெள்ளைப் படுக்கை… பக்கத்திலேயே ஒரு நாற்காலி, எதிர் திசையில் கட்டிலில் இரும்பு விளிம்பில், தொங்கப் போட்ட ஒரு அட்டை… நான் என்பதைத் துறந்து, மனம் செத்து, ஆன்மா உயிர்த்தெழுந்தது போன்ற பூரணத்துவம், பொடிப் பொடியாகி, யதார்த்தத்தில் வெந்து, மனதுக்குள், எரிகொள்ளி நினைவுகள் மீண்டும் படையெடுத்தன. ஆனாலும், அந்த கொள்ளிகளிலும் ஒரு ஒளி, பேரொளி… அவளுக்கு, எய்ட்ஸ் கிருமிகள் உள் சாவகாசம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை… அவள் சராசரியானவள்.
கலைவாணி, நினைத்துப் பார்த்தாள்.
சுத்திகரிக்கப்பட்ட ஒரு பெரிய அறைக்குள், ஆப்பரேஷன் மேஜைக்குள் தான் படுக்க வைக்கப்பட்டிருந்ததும், பக்கத்தில் உள்ள ஒரு தூக்கலான இடத்தில், பல்வேறு வடிவுடைய குத்துக் கம்பிகளைப் பார்த்து, பயந்து போனதும் நினைவுக்கு வந்தது. கைகளில் உறைகளோடும், முகங்களில் மூடிகளோடும் வந்த மூவரில் ஒருத்தர், தன் மூக்கில் எதையோ ஒன்றை வைக்க, அவள் கண்களுக்கு எல்லாமே மாலை நேர மஞ்சள் வெளியிலாகி, கண்ணுக்குத் தெரிந்த கருக்கலாகி, பிறகு காரிருளாய் மறைந்து போனது நினைவுக்கு வந்தது… என்ன நடந்தது என்பதைப் பார்க்க முடியவில்லை… ஆனால், யூகிக்க முடிந்தது. அதை நினைக்க நினைக்க, இடுப்புக்குக் கீழே வலி எடுத்தது. பெற வேண்டிய வயிறு துடித்தது. கருத்தரித்ததும், வயிற்றைத் தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டதும், அந்த துரோகியை அப்படி தொட விட்டதும் நினைவுக்கு வந்தன. அந்த சின்ன உயிருக்காக, அவள் மருவினாள். தாய்மையின் சின்னம், சின்னா பின்னமானதில் துடித்துப் போனாள். ஆயிரம் இருந்தாலும், அது அவள் பிள்ளை. ஆனால், அது கர்ணனைப் போல் கவச குண்டலங்களோடு தற்காப்பாய் பிறக்காமல், எய்ட்சின் தாக்குதலோடு பிறந்திருக்கக் கூடிய பிள்ளை… உலகில் சித்திரவதைக்கும், நரக வேதனைக்கும் உட்பட வேண்டிய ஜீவன்களில் ஒன்று குறைந்து விட்டது. தாயாக வருத்தப்பட்டாலும், சமூகத்திற்காக சந்தோஷப்பட வேண்டும்… ஆனாலும், இவளுக்கு அது இல்லையானால், அதுக்கு - அந்தக் குழந்தைக்கு எப்படி இருக்கும்? அவசரப்பட்டுட்டாளோ! அசோகன் டாக்டரிடம் அப்படி பிடிவாதம் பிடித்திருக்கப்படாதோ… எப்படி முடியும்… எய்ட்ஸ் அல்லவென்று முழுமையாய் தெரிய இன்னும் இரண்டு மாசம்… அப்போது இவளுக்கு ஆறு மாதமாகும். ஒரு வேளை எய்ட்ஸ் இருந்தால்… ஆறு மாத பிள்ளையைக் கொல்வது அரைக் கொலையாயிற்றே…
அரை மணி நேர உளைச்சலில், கலைவாணி குழந்தையை மறந்தாள்… படிப்படியாய் மறந்து, அசோகன் சொன்னதை ஆழமாக நினைத்தாள். அவளுக்கு அந்தக் கிருமிகள் இருக்கணுமுன்னு அவசியமில்லை… அசோகன் சொன்ன அந்த ஐம்பதுக்கு ஐம்பது, நூறாகியது… பாதிப் பாதி என்று சொன்னது, அவளுக்கு உடனடியாய் மனதில் தோன்றி, ஐம்பதையும் ஐம்பதையும் பெருக்கிக் காட்டியது… எய்ட்ஸ் மட்டும் இல்லை என்றால்… எதற்கு ஆனால்… இருக்காது. அந்த மனோகரும் முற்றிப் போன நோயாளி இல்லையே… எவ்வளவு வலுவானவன்… அந்த துரோகிக்கு… அது ஆரம்பக் கட்டம்… அவன் ரத்தத்திலேயே சரியாய் காலூன்றாத கிருமிகள், இவளிடம் எப்படி வர முடியும்… இப்போ தெரியா விட்டாலும், பிறகு… இரண்டு மாதம் கழித்து தெரியலாம் என்றாரே… கடைசி உறவு கூட ஹெச்.ஐ.வி. கிருமிகளாய் கருத்தரிக்கலாம் என்றாரே… அந்தக் கடைசி உறவு, சரியாய் இருந்தது போல் தெரியலியே…பிரிவுத் துயரில் ‘லவ் பிளே’ கூட சோக விளையாட்டாய்தானே இருந்தது.
“கன்கிராஜுலேசன்ஸ்… கலைம்மா… சமாய்ச்சுட்டே…”
எண்ணங்களில் மிதந்து, உடலறக் கிடந்த கலைவாணி, அசோகனையும், சந்திராவையும் ஏறிட்டுப் பார்த்து, ஈரப் புன்னகையை வீசினாள். அவர்களை எதிர்பார்ப்போடு பார்த்தாள். ஆனாலும், கேட்கப் பயம். அவர்கள் நெகட்டிவ்வாய் பேசி, பாசிட்டிவ்வாய் ஆக்கி விடப்படாதே என்ற பயம்… ஆனாலும் திடீரென்று மனம் துள்ளியது. அது இருந்தால், டாக்டரய்யா தன்னை பாராட்டி இருக்க மாட்டாரே…சமாய்ச்சுட்டேன்னு சொல்ல மாட்டாரே…
அசோகன், டாக்டராய் பேசினான்.
“ஒனக்கு அபார்ஷன்… வெற்றிகரமாய் முடிஞ்சுட்டு… எந்த சதையோ, துண்டு துக்கடாவோ.. உள்ளே மாட்டிக்கல… நல்லாவே செக்கப் செய்திட்டோம்.”
டாக்டர் சந்திரா பெருமிதமாய்ப் பேசினாள்…
“எதையும் பிடிப்போடும், துல்லியமாகவும், துட்டு மேல் கண் வைக்காமலும் செய்யுறதுதான், இவரோட டிரேட் மார்க்… நாம் இருவரும்… இவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கோம்.”
“அய்யய்யோ… கொக்குத் தலையில கட்டவுட்டா… வாணாம்மா உலகத்திலேயே பெரிய பளு… இந்த நன்றிப் பளுன்னு ஆஸ்கார் ஒய்ட் சொல்லி இருக்கார்…”
கலைவாணிக்கு, அசோகன் சொல்வது எதுவுமே காதில் விழவில்லை. இன்னும் ஏன் அவர் சேதி சொல்லவில்லை? ஒரு வேளை, இன்னும் டெஸ்ட் முடிவு தெரியலியா… தெரிந்து… அந்த இன்ப அதிர்ச்சியை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று நினைக்காரா…அல்லது ஒரு வேளை…
கட்டில் விளிம்பில் தொங்கிய அட்டைக் காகிதத்தை தூக்கிப் பிடித்துப் பார்த்து விட்டு திரும்பிய அசோகனிடம், கலைவாணி தற்செயலாய் கேட்க வேண்டும் என்று நினைத்து, அவசர அவசரமாகக் கேட்டாள்.
“அப்புறம்… டாக்டர்… அந்த அய்ம்பதுக்கு அய்ம்பது…”
கலைவாணி கேட்ட வாயை மூடிக் கொள்ளாமலே, அசோகனை அண்ணாந்து பார்த்தாள். இதய வேகமும், மூச்சு வேகமும் அதிகரித்தன. உச்சி சுட்டது. பாதம் குளிர்ந்தது.
அசோகன், அவள் கேட்டதை கேட்காதது போல் பேசினான்.
“நல்லவங்களுக்குத்தான்… கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வருது… இந்த டாக்டரம்மாவை என்ன பாடுபடுத்துறாங்க என்கிறே… ஒனக்காக அங்கே சண்டை போட்டதற்காக இந்த சந்திராவுக்கு மெமோ கொடுத்திருக்காங்க… இதை விட, மோசமான தண்ணி இல்லாக் காட்டுக்கு மாற்றுவாங்களாம்… நான் சொன்னேன் பாரு சிலுவை - அந்த ஆண்டவன் கட்டளை இல்லாட்டால், ஒனக்கோ… இவங்களுக்கோ… எதுக்கு தண்டனை வரணும்…??”
கலைவாணியின் அவசரம்… அடங்கிப் போனது… நிதானத்திற்கு வழி விட்டது. பாதி புரிந்து விட்டது ஒரு காரணம். இந்தச் சூழலில் தன்னை முன்னிலைப் படுத்திக் கேட்பது அநாகரீகம். இல்லையென்றால், சொல்லி இருப்பார்கள். கலைவாணி, டாக்டர் சந்திராவையே பார்த்தாள். அந்த சலனமற்ற முகத்தில், ஊடகமாக பல சங்கடங்கள் ஒளிந்திருப்பதைக் கண்டாள். ஆறுதலாகப் பேசினாள்.
“எனக்கு ரொம்ப வருத்தமாய் இருக்குது டாக்டரய்யா… இந்த கவர்மெண்ட்ல, டிஸ்மிஸ் ஆக வேண்டியவங்களே… மெமோ கொடுக்காங்க… இந்த ஊர விட்டு இவங்கள மாற்றுவாங்க என்கிறதை, நெனைத்துக் கூட பார்க்க முடியல. நானும் அனாதையா போயிடுவேன்”
“கவலைப்படாதே கலை… இந்தம்மாவ மாற்றினாலும்… ஆர்டரை அமல் செய்ய முடியாது. ஏன்னா… இவங்களுக்கு பதிலாய் போடுற எந்த டாக்டரும் இங்கே வந்து, இவங்களை ரீலீவ் செய்ய மாட்டாங்க. அப்பேர்ப்பட்ட ஊரு அசல் சாக்கடை”
“அப்போ டாக்டர் முஸ்தபா…”
“பன்றி எங்கே இருக்கனுமோ… அங்கே இருக்குது”
“அப்போ நான்…”
“நீங்க சாக்கடையில் முளைத்த செந்தாமரை”
அசோகனும், சந்திராவும் சிரித்து விட்டார்கள். அப்பாடா! இனி மேல், அந்த ஐம்பதுக்கு ஐம்பதைக் கேட்டிடலாம்;
“அப்புறம்… என்னோட பிளட் டெஸ்ட் முடிவு எப்படி? எதுக்கும் என்னை தயார் படுத்திக்கிட்டேன். சும்மாச் சொல்லுங்க”
டாக்டர் சந்திரா, தலை குனிந்தபடியே நின்றாள். பிறகு, வேகவேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். வாசலுக்கு வெளியே சிறிது நேரம் நின்று, கலைவாணியை குறுக்கும், நெடுக்குமாய் பார்த்து விட்டு, பதறியடித்து வெளியே போனாள்.
டாக்டர் அசோகன், கரங்களை முதுகிற்குப் பின்னால் வளைத்து வைத்துக் கொண்டு, அங்குமிங்குமாய் சுற்றினான். பிறகு, அறையை விட்டு அவனும் வெளியேறப் போனான். கலைவாணிதான், அவனைப் பேச்சால் இழுத்துப் பிடித்து நிறுத்தினாள்.
“சும்மா சொல்லுங்க டாக்டர்… நான் எல்லாவற்றையும் பாசிட்டிவா எடுத்துக்குவேன்.”
“என் வாயால… சொல்லணுமாம்மா… ஒனக்கு இல்லன்னா… நீ மயக்கத்தில கிடந்தாலும், தட்டி எழுப்பி சொல்லி இருக்க மாட்டேனா…”
கலைவாணி, மெள்ளத் தலையாட்டினாள்… அருகே நின்ற அசோகனின் கையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டாள். கம்பராமாயணத்தில், ‘ராமனைத் தருவாய்’ என்று விசுவாமித்திரர் கேட்ட போது, தசரதன் துடித்தானாமே ‘கண்ணிழந்தான், பெற்றிழந்தான்’ என்பது போல். அந்தப் பாடல்தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அசோகன், அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
“மரணம் எல்லாருக்கும் பொதுவானது. சிலர் முன்னால போறாங்க… பலர் பின்னால போறாங்க… அவ்வளவுதான் வித்தியாசம்…”
“சரிதான் டாக்டர்… எதிர்காலம் புதிராய் இருக்கிறதாலதானே நிகழ்காலம் பிடிப்பாய் தோணுது… புரியாத எதிர்காலத்தை நம்பித்தானே நம்பிக்கை கொடுக்காத நிகழ் காலத்தை, கடந்த காலமாக்கப் பார்க்கோம். இந்த மருத்துவமனை, ஒரு காலத்தில் மாவட்ட மருத்துவமனையை விட, பெரிசா வரலாம் என்று நம்பித்தானே, அந்த நம்பிக்கை ஒங்களை இயக்க வைக்குது. இது இடிந்து போயிடுமுன்னு… ஐயாம் ஸாரி… ஒரு நோயாளிக்கு உதாரணம் கூட கிருமித்தனமா வருது பாருங்க…”
“கத்தரிக்காய் என்று சொல்றதாலயே, பத்தியம் முறிஞ்சிடாதம்மா… சொல்றது சராசரி மனுஷனுக்கு சரி. ஆனால், முக்காலத்தையும் உணர்ந்த முனிவர்கள், எப்படிப் பக்குவப்பட்டு இருந்ததாய் நம் புராணங்கள் சொல்லுது. அப்படி ஒன்னாலும் ஆக முடியும்… என்னாலயும் ஆக முடியும்…”
“ஆனால்… பாழும் மனசு… கேட்க மாட்டக்கே, டாக்டர்”
“இதனாலதான்… சொல்றேன். மனம் வேறு… நாம் வேறுன்னு எண்ணனும். அந்த எண்ணத்தையே பலப்படுத்து… உடல் வேறு, நாம் வேறன்னு நினைத்துப் பாரு. நமக்கு… நல்லதோ, கெட்டதோ நடக்கும் போது அது வேறு யாருக்கோ… நடக்குறதாய் நினை. நம் கஷ்டங்களையும்… நஷ்டங்களையும் நாமே வேடிக்கை பார்க்கணும். எய்ட்சால் பாதிக்கப்படுகிறவர்களில் நீ லட்சங்களில் ஒருத்தி… நீயாவது பரவாயில்ல… ஒனக்கு நானிருக்கேன். சந்திரா இருக்காங்க… ஆனால், எத்தனை ஆயிரமாயிரம் ஏழைகள், எய்ட்சுன்னு தெரியாமலே… துள்ளத் துடிக்க இறக்கிறாங்க தெரியுமா…? ஆப்பிரிக்காவுலே தாத்தா-பாட்டி, பேரன்-பேத்தி இந்த இரண்டு வகைதான் இப்போ இருக்குது… இந்த இரண்டுக்கும் பாலமான அப்பா- அம்மாக்களை எய்ட்ஸ் விழுங்கிட்டு… அதனால… எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்கிறது முக்கியமில்லை… உலகம் முழுசும் சீரழிஞ்சு வரும் இந்த சமுதாயத்தில், எத்தனை பேருக்கு பயன்பட்டோம் என்கிறதுதான் முக்கியம்”
இதற்குள், அசோகனுக்கு டெலிபோன் வந்திருப்பதாய், பச்சை சேலை கட்டிய ஒரு மூதாட்டி, உள்ளே வந்து சொல்லி விட்டுப் போய் விட்டாள். அப்படியும் அசோகன், அவளுக்கு ஒரு நிமிடம் கண் கலங்க, ஆறுதல் சொல்லி விட்டுப் போனான்.
அசோகன் அங்கே நின்றது வரைக்கும் பாதுகாப்பு உணர்வோடு நிமிர்ந்த கலைவாணியின் மனம், இப்போது அவள் உடலைப் போலவே படுத்தது. தனிமைத் துயர்… தனித்துப் போன துயர்… எதிர் பாராமல், பெற்றோர், உற்றாரிடம் இருந்து அற்றுப் போன துயர். அம்மாவிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தை பயம். குழந்தையாவது காலப் போக்கில், அம்மாவை மறந்து போகும். ஆனால், குழந்தைப் பருவத்தில் இருந்து, குழந்தை சுமக்கும் பருவம் வந்தவர்களால் மறக்க முடியுமா…? சுமக்கிறவளால், சுமந்தவளை நினைக்காமல் இருக்க முடியுமா?
என்றாலும், கலைவாணி அசோகன் சொன்னதை அசை போட்டுப் பார்த்தாள். கவலை மூடியைக் கிழித்துப் போட்டு, மனப் பாண்டத்தை குயவர் போல், வளைத்துப் பிடித்தாள். பார்த்தவைகளையும், படித்தவைகளையும் தனக்கு உறுதுணையாக்கிக் கொண்டாள்.
குற்றாலத்தில் உள்ள ஆதிபராசக்தி கல்லூரியில் இறுதியாண்டு படித்த போது, கல்லூரி முதல்வரின் வற்புறுத்தலில், அவள் கல்லூரித் தோழிகளோடு தென்காசிக்கு அருகே உள்ள ஆயக்குடிக்குப் போனாள். ஆறு பாயும் கிராமம். முப்போக வயல்கள், சோலைகளான தோட்டங்கள். இதற்கு சிறிது தள்ளி, ஒரு காம்பவுண்டுக்கு உள்ளே சின்னச் சின்னக் கட்டிடங்கள்… ஒரு பெரிய கூடத்தில் ஊனமுற்ற குழந்தைகள்… கண் கெட்டவை… காது அற்றவை…கால்கள் கூம்பியவை… கை குவித்துப் பாடுகின்றன. இந்த ஊனக் குழந்தைகளுக்கு முன்னால், ஒரு ஞான சொரூபம். கடமையை வழிபாடாகக் கொண்ட ஒரு உருவம்… சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடக்கிறது. இடுப்புக்குக் கீழே, கால்கள் செத்துத் தொங்கின. கைகளும் அப்படியே… இருபத்திரண்டு வயது தோற்றமிக்க உடம்பில் முப்பது வயது முகம்… முகத்தில் இருந்து வயிறு வரை மட்டுமே இயங்குகிறது. அவ்வப்போது, பணியாட்களோ, தொண்டர்களோ… அவரைத் தூக்கி, லேசாய், மேலும் கீழுமாய் ஆட்டுகிறார்கள். அப்போதுதான் இதயம் இயங்குமாம். அதன் துடிப்பே, இந்த ஆட்டத்தில் அடங்கி இருக்கிறது. இவளும், இவள் தோழிகளும் அழுது விட்டார்கள். ஆனால், அந்த உருவம் சிரிக்கிறது. “இன்று செய்யா விட்டால் எப்போது… உன்னால் முடியா விட்டால் வேறு யாரால்…?” என்று தலைக்கு மேல் சுவரில் எழுதப்பட்ட மஞ்சள் எழுத்து வாசகத்தைப் படிக்கும்படி முகத்தை நிமிர்த்துகிறது… ‘ஏன் அழுகிறாய்? எதைக் கொண்டு வந்தாய்…? எதைக் கொண்டு போகப் போகிறாய்?’ என்று எதிர்ப் பக்கம் எழுதப்பட்ட பகவத் கீதை வாசகத்தை படிக்கச் சொல்கிறது… இந்த உருவத்தின் பெயர் ராமகிருஷ்ணன். கோவையில் விமானப் படைத் தேர்வுக்கு போயிருக்கிறான். ஏதோ ஒரு சோதனைப் பயிற்சியில், மேலே இருந்து கீழே விழுந்து விட்டான். கால்களும், கைகளும் செத்த நிலையோட தொங்க, அவனை இந்த ஊரில் போட்டு விட்டுப் போய் விட்டார்கள். ஆனாலும், அவன் அசரவில்லை… கை, கால்கள் செத்துச் செத்து, அவன் மனதிற்கு உரமூட்டின… நல்லவர்களை ஒன்று திரட்டி, ஒருமுகப்படுத்தி, உடல் ஊனமுற்றோர் விடுதி கட்டினான். ஊர் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் கட்டினான். முதியோர் இல்லம் அமைத்தான். தச்சுப் பட்டறை வைத்தான், ஆனால், எந்த இடத்திலும் தன் புகைப்படத்தை மட்டும் வைக்கவில்லை. இன்று இந்த உருவம் உள்ள இடம், சித்தர் பூமி போல் ஆகி விட்டது. திக்கற்றோருக்கு தெய்வத் திருத்தலமாகி விட்டது. இந்த கிராமத்திற்குப் போகும் பாதை, இன்னும் கல்லும், முள்ளுமாய் ஆனதுதான். ஆனால், அந்த உருவத்தை நினைத்து நடந்தால், அவையே, கனியும், மலருமாகும். முக்தியுமல்ல… மூடப் பக்தியுமல்ல… அசல் மனோபலம்…
‘பிஞ்சில் பழுத்த தெளிவோ’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட கலைவாணியின் கண் முன்னால், கோவை. கிருஷ்ணமூர்த்தி… தென்காசியில் ஒரு இசை மேடை… பக்க வாத்தியங்கள் ஆயத்தத்தைக் காட்டுவது போல், இழுத்து இழுத்து மூச்சு விடுகின்றன. பெருமூச்சாய் அல்ல… இசை மூச்சாய். ஆயிரக் கணக்கான மக்கள்… இரண்டு பேர் தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஒன்றைத் தூக்கி வருகிறார்கள். அந்த உருவத்திற்கு, இடுப்புக்கு கீழே எதுவும் இல்லை. தொடை மாதிரி சின்ன முடிச்சு உள்ளே இருக்கிறதாம். கால் சட்டை வெறுமையாய் தொங்குகிறது… தோள்… என்றோ… கைகள் என்றோ எதுவும் கிடையாது. ஒரு சதைப் பிண்டம். இவளது மூணு மாதக் குழந்தை எப்படி இருந்திருக்குமோ… அப்படி… அந்த உருவத்தை ஒரு மெத்தையில் தூக்கி வைக்கிறார்கள். நந்தனாருக்கு கொடிக் கம்பம் மாதிரி, இவருக்கு மைக் வளைந்து கொடுக்கிறது… அந்த உருவம் வாயைத் திறக்கிறது. தாளலயமாய் தட்டுவதற்கு கரங்களோ… தட்டப்படுவதற்கு தொடையோ இல்லாத, அந்த உருவத்தின் வாயில், ஒரு கோடி ஒளி அதிர்வுகள்… ஊனை உருக்கும் குரல்… உள்ளத்தை நெகிழ வைக்கும் பாடல்கள்… விதவிதமான குரல் வளைவு. வேக வேகமான, மெதுமெதுவான ஏற்ற இறக்கங்கள்… அத்தனையும் ஆத்மார்த்தம்… அத்தனையும் குற்றால அருவி… உள்ளத்தைக் கழுவி விடும் இசை மழை… பயமுறுத்தாமல், மேகத்தைப் பார்க்க வைக்கும் மின்னொளி… கூட்டம் ஒட்டு மொத்த மனித உருவமாகிறது. அதே கூட்டம், ஒரு மனிதர் போல் கைத்தட்டியும், உருகிப் போயும் கிடந்தது.
அவ்வளவு ஏன்… சென்னைத் தொலைக்காட்சியில், செய்தி படிக்கும் இன்னொரு ராமகிருஷ்ணனின் இரண்டு கால்களும் நாணலானது. ஆளுதவி இல்லாமல்; நடக்க முடியாதவராம். ஆனால், ஆங்கில பேச்சுப் போட்டியிலும், தமிழ் பேச்சுப் போட்டியிலும் நம்பர் ஒன்னாம். பேப்பர்ல படத்தோட போட்டிருந்தாங்க. அட்டகாசமான சிரிப்பு… எனக்கு எந்தக் கோளாறும் இல்லை என்பது மாதிரியான தோரணை.
இதே போல், உலகளாவிய அளவில், ஒரு ஹெலன் ஹெல்லர், 1968 வரை நம்மோடு வாழ்ந்த அமெரிக்க மாது… காதிழந்து, கண்ணிழந்து போனாலும், மனமிழக்காத வீராங்கனை விதியை மதியால் வென்றவள். ஊனமுற்றோரின் உறு துணைவி.
கலைவாணி, தனக்குத் தானே வெட்கப்பட்டுக் கொண்டாள். உள்ளத்தில் ஊனமில்லாத, அந்தச் சாதனையாளர்களை நினைக்க, நினைக்க, தானும் ஒரு சாதனை செய்ய வேண்டும் என்று மனதில் ஒரு வைராக்கியம்…
இதற்குள், சந்திராவும், அசோகனும், உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்து, கலைவாணி கையாட்டிச் சிரிப்பதைப் பார்த்து, அவர்கள் அசந்து போனார்கள். ஒரு வேளை, அவளுக்கு ஹிஸ்டிரியா மீண்டும் வந்து விட்டதோ என்று கூடப் பயந்து போனார்கள். அதற்குள் கலைவாணி, தெளிவாகவே கேட்டாள்.
“நம்ம ரத்தத்தில… ஹெச்.ஐ.வி. கிருமிகள் இருக்கிறதை எப்படிக் கண்டு பிடிக்கீங்க? எலிசா என்கிறீங்க… வெஸ்டர்ன் பிளாட் என்கிறீங்க… யாருக்குப் புரியுது… கொஞ்சம் விளக்கமாய் சொல்றீங்களா?”
“புரிஞ்சுதான் என்ன ஆகப் போகுது… ஆனாலும், புரிய வைக்கேன். பொதுவாய் எய்ட்ஸ் கிருமிகளை, ரத்தத்தில் இருந்து தனிப்படுத்திப் பார்க்க முடியாது… ஆனால், அந்த கிருமிகளை எதிர்த்து, நம் உடம்பு உற்பத்தி செய்கிற எதிரணுக்களை கண்டு பிடிக்க… ஒரு கருவி இருக்குது. இதுல நூறு துளைகள் பல்லாங்குழிகள் மாதிரி. இவற்றில், ஹெச்.ஐ.வி.யோடு ஒட்டிக் கொள்கிற ஆன்டிஜென் என்கிற ஒரு வித திரவத்தை தடவுறோம். இந்த ஆன்டிஜென் முஸ்தபா மாதிரின்னு வச்சுக்கோ… ஒருவருடைய ரத்தத்தை பாட்டிலில் வைக்கோமா… அதில் மேலே நிற்கிற சீரத்தை - அதாவது ரத்த நீரில் ஒரு துளியைத் துளையில கொட்டுறோம்… அப்புறம் சம்பந்தப்பட்ட ஒரு திரவ என்ஸைமை ஊத்துறோம். ஹெச்.ஐ.வி. கிருமி உள்ள ரத்தத் திரவம் கலர் மாறும். மஞ்சளாகவோ, ஊதாவாகவோ நிறம் மாறும்… நிறத்தை டை மூலம் நாமே நிச்சயித்துக் கொள்ளலாம்.”
டாக்டர் அசோகன் மூச்சு விட்ட போது, டாக்டர் சந்திரா மூச்சைப் பிடித்துப் பேசப் போனாள்.
“வெஸ்டர்ன் பிளாட் என்பது…”
கலைவாணி, கையெடுத்துக் கும்பிட்டாள்… ‘அய்யோ இதுக்கு மேல அறுக்காதீங்க’ என்றாள் சிரிப்பாகவும் சிணுங்கலாகவும். அசோகன் ‘ஜோக்’ அடித்தான்.
“என்னம்மா… இது…? எனக்கு போரடிக்க சான்ஸ் கொடுத்துட்டு… இவங்களை இப்படி அம்போன்னு விட்டால் எப்படி? ஏற்கெனவே கட்டிக்கப் போற மாமா மகன் கிட்ட எய்ட்ஸ் பற்றி இவங்க சொல்லி, அவனுக்கு பாதிப் பைத்தியம் பிடிச்சிட்டாம்…”
சந்திரா, முதலில் முகத்தை ‘உம்’ என்று வைத்தாள். அசோகனை பொய்க் கோபமாய் முறைத்தாள். இறுதியில், சந்திராவும் அவர்களின் சிரிப்பில், தன் சிரிப்பைக் கலக்க விட்டாள்.
சிரித்த முகங்கள் சீரியஸாயின.
பலராமனும், சீனியம்மாவும் உள்ளே வந்தார்கள். அம்மா, மகளின் கரம் பிடித்து, அதைக் கண்ணீரால் நனைத்தாள். அந்த இரண்டு டாக்டர்களையும் பார்த்து,‘நீங்க நல்லா இருப்பீங்கன்னு’, கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, மகளைப் பார்த்துப் பேசினாள்.
‘அக்கா மகன் மோகன்ராம்… முட்டி மோதுறாம்மா… அப்பா படுத்த படுக்கையாய் கிடக்கார். அதனால்… அதனால், அவரால் அந்த ஏழை மனசால…’
அம்மாவால் பேச முடியவில்லை. அழத்தான் முடிந்தது. இதனால், பலராமன், அம்மா விட்ட இடத்தை பூர்த்தி செய்தான்.
“அப்பாவாலே முடியல. அதனால, பார்த்துட்டுப் போகலாமுன்னு அம்மாவைக் கூட்டிக்கிட்டு வந்தேன்.”
கலைவாணி, பலராமனை ஏறெடுத்துப் பார்த்தாள். அவன் முன்னாள் ‘தம்பி’யாய் போனான்… அது என்ன பார்த்துட்டு போகலாமுன்னு …
கலைவாணி, எந்தக் காக்கைக் குஞ்சுக்காக, கல்லோடு காவல் காத்தாளோ… அந்தக் குஞ்சு போல துடித்தாள். சிறிது நேரத்திற்கு முன்பு, மனம் உற்பத்தி செய்த வைராக்கியம், மயான வைராக்கியமாய் விட்டது. நினைத்துப் பார்த்த சாதனையாளர்கள், நெஞ்சுக்குள்ளே புதையுண்டார்கள்.