பாலைப்புறா/அத்தியாயம் 27
எதிரில் உட்கார்ந்திருந்த டாக்டர் சுமதியிடம், அசோகன் மீண்டும் வற்புறுத்தினான்…
“என்னோட எய்ட்ஸ் வார்ட்… எப்படி இருக்குதுன்னுதான்பார்த்துட்டுப் போங்களேன்.”
“இன்னொரு தடவை வாறேன்… அசோக்… நான் ரொம்ப பிஸி… ஜப்பான் போறதுக்கு இன்னும் விஸா கிடைக்கல… இதுக்குள்ள ஆப்பிரிக்க மக்களை எப்படி கரையேற்றுவதுன்னு, பாரீஸ்ல ஒரு மாநாட்டுக்கு அழைப்பு வந்திருக்கு. அப்புறம் ‘லாஸ் ஏஞ்சல்ஸ்ல’ ஒரு ஒர்க்ஷாப். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு எப்படி மறு வாழ்வு கொடுப்பது என்பது சப்ஜெக்ட். இந்நேரம் ஆபீசிற்குப் போனால், இன்னொரு அழைப்பு வந்திருக்கும்… எதை கொள்ளுறது… எதை தள்ளுறதுன்னே புரியல… அப்புறம்… மூணு பசங்களை அனுப்பி வைத்தேனே… ரிசல்ட் வந்துட்டா?…”
“எஸ்… ஒன்று நெகட்டிவ்… இரண்டு பாஸிட்டிவ்”
“யங்கர் ஜெனரஷன்… எப்படிக் கெட்டுப் போகுது பாருங்க…மனசே கேட்க மாட்டக்குது… ரிப்போர்ட் கிடைக்குமா…”
“நாளைக்கு… நீங்க ஆகாயத்தில் பறக்காமல் இருந்தால்”
“நான் ஆகாயத்தில் பறக்கும் போது கூட என் கால்கள் என்னமோ பூமியில்தான் நிற்கும்.”
“கவித்துவமாய் பேசுறிங்க டாக்டர்”
“தேங்க் யூ… டோன்ட் ஒர்ரி அசோக்… இப்போ பாரீஸ் டூர் போகும் போது… ஒங்களுக்கும், நான்கைந்து ஒர்க் ஷாப்புக்கு ஏற்பாடு செய்திட்டு வாறேன். நீங்க எனக்கு செய்கிற உதவியை நான் மறக்கல… அப்புறம் நீங்களும் ஆகாயத்தில் பறப்பீங்க… கால் தரையில பதியாமல் இருப்பீங்க.”
“நீங்க… நினைக்கிற அனுமானங்கள் மூன்றும் தப்பு மேடம்… முதலாவதாய், நீங்களோ அல்லது வேறு யாருமோ… எனக்கு அசைன்மென்ட் வாங்கிக் கொடுத்து, நான் வெளிநாட்டுக்கு போக விரும்பல. இரண்டாவது, நீங்க எனக்கு எதாவது செய்வீங்கன்னு எதிர்பார்த்து, நீங்க அனுப்புற இளைஞர்களுக்கு நான் ஹெச்.ஐ.வி. டெஸ்ட் செய்யல… இவங்களுக்கு சேவை செய்ய, நீங்க ஒரு மீடியம். அவ்வளவுதான். மூன்றாவதாய், நான் தப்பித் தவறி ஆகாயத்துல பறந்தாலும், என் சிந்தனை எல்லாம் என் எய்ட்ஸ் வார்ட் பக்கமே இருக்கும். ஏன்னா, இங்கே இருக்கிற டெர்மினல் ஸ்டேஜ் நோயாளிகள் கிட்டே… நான் தெரிஞ்சிக்கிட்டது ஏராளம்… வெளிநாடு போவதாய் இருந்தாலும்… அங்கே ஒரு ஆசிரியராய்த்தான் போவேனே தவிர… மாணவனாய் இல்ல”
“என்ன அசோக்… இப்படியா…கட் அண்ட் ரைட்டாய் பேசுறது. … ”
“நம்ம நட்பு நீடிக்கிறதுக்காவது… சில விஷயங்களை தெளிவாக்கிடுறது நல்லது பாருங்க… இது வரைக்கும், இறக்கப் போகிற நிலையில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளை நீங்க பார்த்திருக்கீங்களா…”
“ஜி.எச்.சுல… இலை மறைவு, காய் மறைவாய் பார்த்திருக்கேன்.”
“சரி… இப்போ என்னோட வாங்க…”
“வேண்டாம்… அசோக்… எனக்கு அழுகை வந்திடும்”
“அழுகை வந்தால்… அழுதுட்டுப் போறது… அதனால என்ன”
“நேரமாயிட்டேன்னு பார்க்கேன்”
“வேற எதுக்கு செலவிடுற நேரத்தையும் விட… இதுக்கு செலவிடுகிற நேரம் புனிதமானது டாக்டர்… எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கம் நடத்துறீங்க… இது பற்றி ஊர் ஊராய் போறது மாதிரி… நாடு நாடாய் போங்க… ஒரு சாகப் போற நோயாளியையாவது… நேரிடையாய் பார்க்காமலா போகிறது? கமான்… லெட் அஸ் ஸீ”
டாக்டர் சுமதி, அசோகனைப் பார்த்து எரிச்சலோடு சிரித்தாள். ஆனாலும், இவனைப் பகைக்கக் கூடாது… சந்தேகத்திற்குரிய எல்லா எய்ட்ஸ் கேஸ்களையும், இவன்தான் டெஸ்ட் செய்கிறான்… இவள், என்.ஆர்.ஐ. தமிழர்களைக் கூட இங்கே அனுப்பி இருக்கிறாள். அந்தத் தமிழர்கள்தான், இந்த சுமதிக்கு வெளிநாட்டு ஒர்க் ஷாப்புகளையும், பயிற்சி முகாம்களையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இவளுக்கு, ஹெச்.ஐ.வி. ரத்தத்தைப் பார்க்கவே பயம்… இந்த கிராதகனை சகித்துத்தான் ஆகணும்… சொந்தத்தில் லேப் வைத்தால், அதுவே முழு நேர வேலையாகி விடும்… தென்காசிக்கு லேப்புக்கு அனுப்பினால், அப்புறம் அந்த லேப்காரன்தான் வெளிநாடு போவான்…
நாலையும் யோசித்த டாக்டர் சுமதி, ஒரு ரெடிமேட் புன்னகையை வீசியபடியே, ‘நான்… ரெடி’ என்றாள்.
அசோகனும், சுமதியும், அந்த மருத்துவமனைக்கு சற்றுத் தள்ளி உள்ள அவுட் ஹவுஸில் உள்ள எய்ட்ஸ் வார்டுக்குள் நுழைந்தார்கள். அங்கே கட்டில் கட்டிலாய் நெளிந்து கொண்டிருந்தவர்களின் கண்களை, அசோகன் பிரகாசப் படுத்தினான். டாக்டர் சுமதி ஆச்சரியப்படுத்தினாள். அந்த மரணக் கட்டத்திலும், ஒரு சில நோயாளிகள், அவளை அதிர்ந்து பார்த்தார்கள். அசோகனை விட உயரமானவள்… ஐந்தாறு வயது அதிகமானவள்… அவளிடம் சிவப்பும், செஞ்சிவப்பும் பிச்சை எடுக்க வேண்டும்… சுண்டினால் ரத்தம் வருவது போன்ற நிறம்.. ஆனாலும், இழவு வீட்டுக்கு, இப்படி கல்யாண வீட்டுக்கு வருவது போல் வரக் கூடாது… கை நிறைய தங்க வளையல்கள்… கழுத்தில் தங்கச் செயினில் தொங்கிய மூக்குக் கண்ணாடி… கண்ணைப் பறிக்கும் பட்டுச் சேலை… ஒரு முழ அகல ஜரிகை…
அசோகன், அந்தக் கட்டில்களில் கிடந்த நோயாளிகள் ஒவ்வொருவர் பக்கத்திலும் போய், பெயர் சொல்லிப் பேசினான். ஒருத்தி குப்புறக் கிடந்தாள்… தலை மட்டும் இல்லையானால் அவளை விறகாகக் கொள்ளலாம். ஈன முனங்கலாய் இதயத்தைப் பிழிய வைக்கும் பார்வை… முப்பது வயதுக்குள்ளேயே முக்காலத்தையும் முடித்துக் கொள்ள போகிறவள்… இன்னொருவருக்கு உடலை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்; அந்த அளவுக்கு கட்டுக்கள். குணப்படும் தொழுநோய், இப்போது கோபப்பட்ட உடம்பாய் மல்லாக்க கிடந்தவர்கள். மரித்தது போல் உயிர்த்தவர்கள். கழுத்துக்கும், மூக்கிற்கும் இடையே மட்டுமே உயிர் வைத்திருந்தவர்கள்… இடை விடா இருமல் காரர்கள்; மூளை பாதிக்கப்பட்டு, கால் செத்தும், கை செத்தும், உயிர் சாகக் காத்துக் கிடப்பவர்கள்… கழுத்து வீங்கிப் போனவர்கள்… ஒரு கையின் அகலத்துக்குப் போன ஆறடி உடம்புக்காரர்… நெருப்பாய் சிவந்த கால்களில், கறுப்புக் கறுப்பான அக்கிக் கட்டிகளை கொண்டவர்கள்… உடல் முழுக்க கொப்பளங்களைக் கொண்ட ஒரு மூன்று வயதுக் குழந்தை. அசோகனை பார்த்து ‘மா… மா… சாக்லேட் மாமா’ என்றது. ஒரு பழுத்த நோயாளி, வாயை அங்குமிங்குமாய் ஆட்டினார். பேச முடியாமல் சைகை செய்யவும் திராணியற்று, அசோகனைப் பார்த்து உதடுகளை அபிநயமாய் ஆக்கிக் காட்டினார்… என்ன சொல்ல நினைத்தாரோ… ஏது சொல்ல எண்ணினாரோ… ஒரு நாற்பது வயதுக்காரர், மல்லாக்கக் கிடந்தார். அசோகனைப் பார்த்து விட்டு, நாக்கை நீட்டி, கீழ் உதட்டுக்குப் பின்னால் தொங்கப் போட்டுக் காட்டினார். உள்ளே ஒரே காளான் மயம்… உமிழ் நீர் இறங்காத அடைப்பு. அசோகன் பக்கத்தில் நின்று வார்ட் பையனிடம், ‘குளுகோஸ் ஏத்துப்பா! தினமும் ஏத்து… இப்படியா பட்டினி போடுறது’ என்ற போது, அந்த நோயாளி விக்கினார்… ஒலி கிடைக்காமல் திக்கினார்…
அங்கே கிடந்த அத்தனை பேருமே, பெரிய, பெரிய மருத்துவமனைகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள். இரவோடு இரவாக, குப்பைத் தொட்டிகள் பக்கமும், கழிவறைகள் பக்கமும் கழிக்கப்பட்டவர்கள். வீடிருந்தும், முகவரி அற்ற முகங்கள்; உயிருள்ள பிண்டங்கள்.
இதற்குள், அசோகன் விழி பிதுங்கி மல்லாக்கக் கிடந்தவனின் கட்டில் அடிவாரத்தைப் பார்த்தான். மீன் செதிள்கள் மாதிரியான சதைப் பிய்ப்புகள்… ரத்தக் கலவைகள்… உடனே அசோகன் ஒரு வார்ட் பையனின் உதவியோடு அந்த உருவத்தைக் கவிழ்த்துப் போட்டான். முதுகில் ஒரே ரணக்காடு. மாதக் கணக்கில் படுக்கையில் மல்லாந்து படுத்ததால், அந்த படுக்கை கூட அந்த உருவத்தை அரித்து விட்டது. அசோகன், அந்த வார்ட் பையனை கோபமாய்ப் பார்த்தான். வயதான ஆயாவை ஆத்திரமாய் பார்த்தான். ஆனால், திட்டவில்லை. ஓடிப் போவதற்கு சாக்கு தேடிக் கொண்டிருப்பவர்கள்… வார்ட் பையன், முன்பு கழிவறை கழுவியவன். ஆயா, அவன் அம்மா… இதனால்தான் இங்கே இருக்கிறார்கள்…
டாக்டர் சுமதி, அந்த நோயாளிகளைப் பட்டு படாமலும் பார்த்தாள். அவளையும் மீறி, அசோகன் மீது மதிப்பும் ,மரியாதையும் ஏற்பட்டன. ஆனாலும் ஒரு ஆசை… இந்த எய்ட்ஸ் நோயாளிகளை தான் கவனிப்பது போல் ஒரு வீடியோ படம் எடுத்தால், வெளிநாட்டில் போட்டுக் காட்டலாம். மேலும் ஏழெட்டு ஒர்க் ஷாப்புக்கள் கிடைக்கும். ஒரு வேளை, உலக சுகாதார நிறுவனம் அவளையே ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்தச் சொல்லலாம்… இதனால், இந்தியாவிற்கு வெளிச்செலாவணி கிடைக்கும்… நமது பேலன்ஸ் ஆப் பேமென்டில் ஒரு ஆக்கப் பூர்வமான தாக்கம் ஏற்படும்… இந்த விஷயத்தைச் சொன்னால், இந்த கிராக்கு ஏடாகூடமாய்க் கேட்டு… எய்ட்ஸ் நோயாளிகளை… வியாபாரப் பொருளாக்கலாமா என்று கூட முகத்தில் அடித்தாற் போல் கேட்கக் கூடியவன்… ஆனாலும், இந்த நோயாளிகளும், இந்த வார்டும் நல்ல சந்தர்ப்பம். காத்திருக்க முடியாது… அதற்குள் இவர்கள் இறந்து போவார்கள்… எப்படி பேச்சைத் துவக்குவது… ஆமாம்… இப்படித்தான்!
“என்ன அசோகன்… நீங்களும்… இந்த அப்பாவிகளை… இப்படி தனிப்படுத்தி வச்சால் எப்படி… மெயின் பில்டிங்ல வைக்காமல், இப்படி ஒதுக்குப்புறமாப் போட்டால் எப்படி…? ஐ ஃபீல் பேட்…”
“நான் இவங்களை ஒதுக்கல டாக்டர்… இவங்க கிட்டே இருந்து சராசரி மனிதர்களை ஒதுக்கி வைக்கேன். அவங்களோட தீ நாக்குகள் சுடாமல் இருக்கிற இடமாய் பார்த்து வைத்திருக்கேன். இவங்களை மெயின் பில்டிங்ல வைத்தால்… அங்கே இருக்கிற சராசரி நோயாளிகள்… இவங்களாலதான்… தங்களுக்கு நோய் குணமாகலன்னு நினைப்பாங்க… பார்வையாளர்களும், எங்கேயோ வாங்குகிற எய்ட்சுக்கு இவங்களே காரணமுன்னு நினைக்கலாம்… அதோட இந்த நோயாளிகள் எல்லோரையும் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் குளிப்பாட்டுறோம்… இங்கேதான் அதுக்கு வசதி இருக்குது”
“நீங்க… ரொம்ப கிரேட் அசோக்…”
“இப்போ இல்ல… என்றைக்கு அந்த நோயாளிகளோட ஆயுளை அவஸ்தப்படாமல் நீட்டிக்க முடியுமோ… அப்போ நான் கிரேட்தான்… வெளிநாடுகளில் பணக்கார எய்ட்ஸ் நோயாளிகளோட ஆயுளை மூன்று வருடம் நீட்டிக்க வைப்பதற்கு ‘அசிடோதைமிடின்’ என்ற மருந்து இருக்குது. இங்கே இதை ஒரு நோயாளிக்குக் கொடுக்க வருடத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் செலவாகும்… எப்படி முடியும்…”
“ஏன் அசோகன்… இப்படி செய்தால் என்ன…”
“எப்படி?”
“இவங்களை பற்றி, குளிப்பாட்டுறதில இருந்து சிகிச்சை அளிப்பது வரைக்கும், ஒரு வீடியோ டாகுமெண்டரி எடுத்து… கூடவே, ஒங்க பேட்டியையும் சேர்த்து படமாக்கி, நான் போகிற வெளிநாட்டுக் கான்பரன்ஸ்ல காட்டினால், தமிழ்நாட்டின் பெருமையும் உயரும். கூடவே இந்த மருந்து கூட கிடைக்கலாம்… இரண்டு பேருக்கு கிடைத்தால் கூட நல்லதுதானே… டாலரா வாங்கப்படாது… நீங்க சொன்னீங்களே… மருந்து என்ன பேரு அது…? எனக்கும் தெரியும்… ஆனால், சட்டுன்னு ஞாபகத்துக்கு வர்லே…”
“அஸிடோ… தைமிடின்…”
“கரெக்ட்… அதுதான்… அப்போ நாளைக்கே வீடியோ காமிராவை அனுப்பி வைக்கட்டுமா…? இந்த நோயாளிகளில் ஒருத்தரோ… ரெண்டு பேரோ பேசட்டும்”
“எனக்கு இந்த வீடியோ… ஆடியோ எல்லாம் பிடிக்காது டாக்டர்… நான் மண்ணுக்குள்ளே மறைந்த வேராவே இருக்க விரும்புகிறேன். நம்மோட பிரச்சாரமும், விழிப்புணர்வும் இது வரைக்கும் எய்ட்ஸோட வெற்றியாய் இருக்குதே… தவிர, எய்ட்ஸ் நோயாளியோட வெற்றியாய் ஆகல… விழிப்புணர்வு இயக்கம்… அதை நடத்துகிறவர்களோட வெற்றியாய் ஆகிறதே தவிர… அதன் நோக்கத்தோட வெற்றியாய் ஆகல… இன்னும் சொல்லப் போனால் தோல்வியாவே முடியுது…”
“இது இந்தியாவுல மட்டுந்தான் அசோக்… மேற்கு நாடுகளில் இது மாதிரி இல்லை அப்போ… வீடியோ காமிராவை… நீங்க பேட்டி கொடுக்காமல் எப்படி அசோக்? வாட் நான்சென்ஸ் ஆர் யு டாக்கிங்”
“நான் பேட்டி கொடுத்தால்… அது கோட்டியாய் முடிஞ்சுடும்… நீங்களே பேட்டி கொடுங்க… பேட்டி எடுங்க… மானேஜர் கிட்டே சொல்லிடுறேன்”
“இவங்க கிட்டே நீங்களே”
“எனக்கு… கூச்சமா இருக்குது… வீடு பற்றி எரியும் போது, இவங்ககிட்ட கேட்கிறது… பீடிக்கு நெருப்பு கேட்கிறது மாதிரி… மானேஜர் பார்த்துக்குவார்… அந்த அஸிடோதைமிடின் மருந்துக்காகத்தான் டாக்டர்… நான் சம்மதிக்கேன், ஆனாலும், இதுவே பஸ்ட் அன்ட் லாஸ்ட்…”
“ஓகே… ஓகே… ஒன்லி ஒன்ஸ்… ஆனால் எஃபக்ட் பிரமாதமாய் இருக்கும். சரி போவோமா? மாவட்டகலெக்டரோடஒரு அப்பாயின்மென்ட் இருக்குது”
“அவருக்கும் எய்ட்ஸா…”
“நாட்டி பாய்… குறும்புக்கார டாக்டரப்பா”
அசோகனும், சுமதியும், அந்த வார்டில் இருந்து வெளிப்பட்டார்கள். அங்கிருந்த நோயாளிகள், அவனை ரட்சகன் போல் பார்த்து, கண்களால் விடை கொடுத்தார்கள். டாக்டர் சுமதி, அப்படியே தனது மாருதி காரில் ஏறி இருப்பாள். ஆனால், டம்பப் பையை அசோகன் மேஜையில் வைத்திருந்தாள். அதை எடுப்பதற்காக அசோகனது அறைக்குள் வந்தால், உள்ளே இந்த உதவாக்கரை டாக்டர் சந்திரா. இவள் யார்… ‘சிடுமூஞ்சி…’
அசோகன், அவர்களைப் பார்த்து திகைத்தான். பிறகு சந்திராவைப் பார்த்து, ‘என்ன இப்படி திடுதிப்புன்னு’ என்றான். சந்திரா படபடப்பாகப் பதிலளித்தாள். டாக்டர் சுமதியை அங்கீகரிக்காமலே கேட்டாள்.
“ஒங்க கிட்ட நாங்க தனியா பேசணும் அசோக்”
டாக்டர் அசோகனுக்கு, எதுவும் புரியவில்லை… பெயர் சுருக்கம் பற்றி சந்தோஷப்பட்டதாகவோ, அல்லது கவலைப்பட்டதாகவோ தோன்றவில்லை. ஆனால், டாக்டர் சுமதிக்கு சுருக்கென்றது. அதெப்படி ‘அசோக்’ என்று, தான் உச்சரிப்பதை இந்த ஆரோகன்ட் சந்திரா உச்சரிக்கலாம்… நான் இல்லாமல் இவளுக்கு அசோக் கிட்டே என்ன ரகசியம்… கூட இருக்கிற இந்த உம்மணாம் மூஞ்சி யாரு..?
டாக்டர் சுமதி பதிலடியாய்ப் பேசினாள்.
“சரி… அசோக்… நான் வாரேன்… எனக்கு ஒரு மணி நேரத்துக்கு அதிகமாய் கம்பெனி கொடுத்ததுக்கு நன்றி…”
“இப்போக் கூட நீங்களாத்தான் போறீங்க”
“இருப்பேன்… ஆனால் இந்தம்மா… துடிக்காங்களே”
“ஆமா… டாக்டர்… நான் இவர் கிட்டே தனியா பேசணும்… ஒருத்தர் கொடுக்கிற ரூபாயை எண்ணிப் பார்க்கிறோமுன்னா, அவரை நம்பாம இல்ல… இது மாதிரி, இவர் கிட்டே தனியா பேசணும் என்கிறது ஒங்களை இன்சல்ட் செய்யறதாய் இல்லை!”
“யாரும்… என்னை இன்சல்ட் செய்ய முடியாது… சரி…சரி… வெட்டிப் பேச்சு எதுக்கு? நான் வாறேன்… அசோக்”
“சுமதி… பை தி பை… இவங்கதான்… நான் முன்னால சொன்னேன் பாருங்க. கலைவாணி அந்தப் பொண்ணு…”
“ஓ… மைகாட்! நீதான்.அந்தக் கலைவாணியா? அசோக், ஒன்னைப் பற்றி சொன்ன ஒரு நாள் முழுக்க நான் சாப்பிடல்லம்மா… கடவுள் ஒன்னைக் காப்பாற்றுவார். கவலைப்படாதம்மா… நானும் ஒனக்கு என்னாலான வகையில் உதவுவேன்… அப்போஅசோக் போய் வரட்டுமா? கலைவாணி வாறேம்மா… எந்தப் பிரச்சினைன்னாலும் என் கிட்ட வா… வேணுமுன்னா, ஒரு வேலை போட்டுக் கொடுக்கேன்.”
டாக்டர் சுமதி ஒய்யாரமாய் நடந்து, சந்திராவை அலட்சியப்படுத்திய சந்தோஷத்தோடு போய் விட்டாள். சந்திரா, அசோகனை கடித்துத் தின்னப் போவது போல் பார்த்தாள். அவனோ, சுமதி பேச்சைக் கூட காதில் வாங்காமலும், அவளைக் கண்ணால் பார்க்காமலும், குன்றிக் கிடந்த கலைவாணியையே பார்த்தான். சந்திரா.ஆத்திரமாய்க் கேட்டாள்.
“ஏன் வந்தீங்கன்னு கேட்க… மாட்டிங்களா?”
“அப்படிக் கேட்பது… அவசரக் குடுக்கைத்தனம். ஒங்க இரண்டு பேரையும் எப்போதுமே ஏன் வரலன்னுதான் கேட்பேன்… ஏதோ விபரீதம் நடந்திருக்குது…”
“ஆமா… அசோக்!”
சந்திரா, கலைவாணியின் தோளில் கை போட்டபடியே, நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்தாள். அம்மாவையும், மாமா மகனையும் எக்கேடும் கெடும்படி வீட்டுலேயே விட்டுவிட்டு, கலைவாணியைத் தேடி காடு மேடாய் அலைந்ததை விவரித்தாள். கலைவாணியை மீட்டியச் சூழலை அவள் சொன்ன போது, அசோகன் அதிர்ச்சியோடு எழுந்து விட்டான். கலைவாணியின் தலையில் கை போட்டபடியே, கேட்டான்.
“என்ன கலையம்மா… ஒன்னை மாதிரி புத்திசாலிப் பெண்கள் செய்கிற காரியமா இது? பேசாமல், இங்கே வர வேண்டியதுதானே ஒ… மை காட்! அந்த லாரில மட்டும் நீ ஏறி இருந்தால், அப்புறம் ராத்திரி தோறும், ரோட்டுலே புளிய மரப் பக்கத்திலயும், புதருக்கு உள்ளயும், இரவு மோகினியாய் நிற்க வேண்டியது வந்திருக்குமே… லாரி லாரியா ஏறி… புதர் புதராய்… இறங்க வேண்டியது இருக்குமே! என்ன கலையம்மா…! இப்படி முட்டாத் தனமாய்…”
கலைவாணிக்கு, அப்போதுதான் அந்த லாரியின் தாத்பரியமே புரிந்தது… புரியப் புரிய, அசோகனை மேல் நோக்கிப் பார்த்து விட்டு, கீழ் நோக்கித் தலை போட்டாள். சந்திரா அவசரப்பட்டாள்.
“அந்தம்மா ரயிலேறிடப்படாது”
“எந்தம்மா…?”
“எங்கம்மாதான்… நான் வீட்டை விட்டுப் புறப்பட்டு மூன்று மணிக்கும் மேலாகுது… ரயிலுக்கு இன்னும் நேரம் இருக்குது. நல்ல வேளையா”
“அந்த மென்டல் சங்கர், அத்தைக்காரியை பஸ்ல கூட்டிட்டுப் போயிருந்தால்…”
“பயமுறுத்தாதீங்க… அசோக்… சங்கரன் எக்கேடும் கெடட்டும்… ஆனால் அம்மா போயிடப்படாது. கலைவாணியை இந்தப் பாடு படுத்தின பிறகு, அவர்களை அம்மான்னு நான் நினைக்கறதே அசிங்கம். ஆனாலும், மனசு கேட்க மாட்டேங்குது. அவங்களுக்கும், போக்கிடம் கிடையாது. திருச்சியில் பெரியண்ணன் வீட்ல இருந்தாங்க. பேரப் பிள்ளைகளே துரத்திட்டு… கோவையிலே சின்னண்ணன் வீட்டுக்குப் போனாங்க. அப்பாவியான அக்கா புருஷன் இங்கே வந்து… ‘ஒங்க அம்மாவை நீயே வச்சிக்கோ’ன்னு கொண்டு வந்து விட்டுட்டுப் போயிட்டார். அந்த அளவுக்கு எங்கம்மா பிரசித்தம்… முன்னால இப்படிக் கோவித்து… என் கிட்டே இருந்து போன போது, ஏற்பட்ட அனுபவத்தை எங்கம்மா மறந்துட்டாங்க… ஆனால் என்னால மறக்க முடியல”
“ஒங்களோட நிலைமை எனக்குப் புரியுது… முன் கூட்டியே சொல்லியிருந்தால், கலையை கூட்டிட்டுப் போக வேண்டாமுன்னு நானே சொல்லி இருப்பேன். பரவாயில்ல… கலை இனி மேல் இங்கேயே இருக்கட்டும்”
கலைவாணி குனிந்த தலை நிமிராமல், கனத்த குரலில் உரத்துச் சொன்னாள்.
“ஒங்களுக்கும்… நான் பாரமாய் இருக்க விரும்பல, டாக்டரய்யா… அப்போ போனாங்களே… அவங்க ஏதோ வேலை போட்டு கொடுக்கிறதாய் சொன்னாங்களே”
“அதுவும் சரிதான்… இந்த இடத்தை விட, அந்த இடம் பெட்டர்… அந்தம்மா… எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கம் நடத்துறாங்க… அடிக்கடி வெளிநாடு போறாங்க… செய்தியாளர் கூட்டத்தை நடத்துறவங்க… ஒன்னால அவங்களுக்கும் உதவியாய் இருக்க முடியும். இனி மேல், நீதான் அந்தம்மாவுக்கு பி.ஆர்.ஓ… பொது மக்கள் தொடர்பு அதிகாரி…”
டெலிபோன் எண்ணகளை சுற்றப் போன அசோகனை, சந்திரா கண்களால் மறிக்கப் பார்த்தாள்… அந்த பட்டுச் சேலை டாக்டர் சுமதியா… அவள் அந்த லாரிக்காரனை விட மோசமானவள்… என்று சுடசுடச் சொல்லப் போனாள். பிறகு, சுழலப் போன நாக்கை சுருட்டி வைத்துக் கொண்டாள்.
‘இவளை வைத்துக் காப்பாற்ற முடியாத எனக்கு, அப்படி சொல்ல என்ன யோக்கியதை இருக்குது…’?