பாலைப்புறா/அத்தியாயம் 33

வித விதமான, வித்தியாசமான, மானுட விதி விலக்குகளின் புகலிடம். மனித மூலப் பொருளை திரிபுகளாக்கும் உலைக்களம்; மலராகவும், வண்டாகவும், ஒரே சமயத்தில் ஒன்றிப் போன சோக வனம். மானுடத்தில் இருந்து, பிய்ந்தோ அல்லது பிய்க்கப்பட்டோ விழுந்த பச்சோலைகள்… காயாகாமலே, பழுத்துப் போன பிஞ்சுகள், பழுத்துப் போனதாய் நினைத்துப் புழுத்துப் போனவர்கள்; அத்தனை பேரும் இருபத்தைந்துக்கு உட்பட்டவர்கள். ஒவ்வொரு முகத்திலும் ஒரு பெண் சாயல்; இயற்கையிலேயே அலிகளாய் பிறக்காமல் அப்படி ஆகிப் போனவர்கள் அல்லது ஆக்கப்பட்டவர்கள்; பீடா, பிரியாணி போன்றவற்றைத் தின்று, தின்று, ‘பெரிசுகளால்’ தின்னப் பட்டவர்கள். துவக்கத்தில் தன்னை நினைத்து, நினைத்து, இப்போது அந்த தன்னையே தொலைத்து விட்டவர்கள்.

ஆனாலும், அவர்கள் ஆனந்தமாகவே பாடினார்கள், அடி பெருத்து நுனி சிறுத்த ஒரு பொம்மைச் சொக்காக்காரன், ஏழு கோணலாய் உடல் மடித்துக் கிடந்த ஒருத்தனின் இடுப்பில் தலை போட்டு, ஒரு இந்திப் பாட்டைப் பாடினான். இன்னொரு கள்ளிப் பால் வடியும் முகக்காரன், உட்கார்ந்தபடியே, இடுப்பு மேல் பகுதியை அங்குமிங்குமாய் அபிநயமாய் ஆட்டிக் காட்டினான். இன்னொருத்தன், இன்னுமொரு இன்னொருத்தனின் வாயில் முத்தமிட்டு, அந்த வாயைச் சொல்லத் தகாத வார்த்தைகளால் விமர்சித்தான். ஒவ்வொருவர் வாயிலும் ஒவ்வொரு பாட்டு… சிலர் வாய்களில் இந்தியும், தமிழும் கலந்த கலவைப் பாட்டு; பாட்டுக்களுக்கு, முகங்கள் அபிநயமாயின. தொடைகள் மிருதங்கமாயின, கரங்கள் கம்புகளாயின. இரைச்சலே இசையானது. வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு, அவர்கள் வேடிக்கையான கல்லூரி மாணவர்களாய்த் தெரியும். உள்ளே போய் உற்றுப் பார்த்தால், அவர்கள் புற்றாய்ப் போனவர்கள் என்று தெரியலாம்.

நான்கு பக்கமும் சாலைகள் சூழ்ந்த நடுப்பகுதியில் உள்ள இந்த சென்னைப் பெருநகரின் பூங்காவில், வட்ட வட்டமாய் வெட்டி விடப்பட்ட செடிகளுக்கு மத்தியில், தேய்த்து, தேய்த்து, தேய்ந்து போன புல் தரையில், அசோக மரக் குவியல்களின் வேர்களில், அவர்கள் வேரற்றுக் கிடந்தார்கள். அந்தக் கூட்டத்தில், மனோகரும் பாடினான். தனியாகவும் பாடினான். கூட்டாகவும் பாடினான்.

பட்ட பாட்டை மறப்பதற்காகவோ என்னவோ, பல்வேறு விதமாய்ப் பாடியவர்கள், இப்போது மனோகர் பாட்டுக்கு காது கொடுத்தார்கள். உடனே, அவன் பாட்டையே மாற்றினான்.

“நான் பாடும் பாடு நாய் படும்பாடு… ஏன்
பட வைத்தாயோ இறைவா…! என்னை ஏன் பட வைத்தாயோ…”

மனோகரின் ஆனந்தப் பாட்டு, அளப்பரிய துயரப் பாட்டாய் மாறிய போது, திடீர் என்று மூன்று பேர் முன்னால் வந்து முளைத்தார்கள். ஒருத்தன், அவர்களின் முன்னாள் கூட்டாளி. அப்போது வாடிப் போன உடம்பில், இப்போது ஒரு சில இடங்கள் துளிர்த்திருந்தன. வெளிப்பூச்சு மாதிரியான மினுக்கம். இன்னொருத்தர் நடுத்தர வயதுக்காரர். அருமையான முகவெட்டு. அதற்கேற்ற கோணாத உடல்வாகு… இன்னொருத்திக்கு முப்பது வயதிருக்கலாம். வெள்ளை மாவில் அள்ளிப் பிடித்தது போன்ற உருவம். பப்பாளி விதை மாதிரி சிறிய கண்காரி. அவள் மட்டும் வராது இருந்தால், ‘யார் வரணும்… எங்கே வரணும்…?’ என்று கோரசாக கேட்டிருப்பார்கள். அப்படியும் மனோகர் கேட்டான்…

“யாரு சார்… வேணும்…? டபுள் டக்கரா… தங்காவா… பந்தியா…?”

அந்த ஆணும் பெண்ணும் புரியாது விழித்த போது, கூட வந்தவன் இந்த டெக்னிக்கல் சொற்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“டபுள் டக்கர்… என்றால், மலராகவும் இருப்பான், வண்டாகவும் இருப்பான். தங்கா என்றால் வெறும் மலர்… பந்தி என்கிறவன் வண்டு… எங்களோட தொழில், புரியுதா…? விளக்கணுமா…”

அந்த மனிதர், ‘புரியுது’ என்று சொன்ன போது, அந்த பெண் ‘போதும்’ என்று முகம் சுழித்து, காதுகளை கையோடு சேர்த்துப் பொத்திக் கொண்டாள்.

தொழில் ரகசியத்தை உடைத்துப் போட்ட அந்த அப்ரூவர் கண்ணனை, கீழே கிடந்த விட்டம் பெருத்த ஒருவன் விரட்டினான்…

“ஏண்டா…துரோகி… எட்டப்பா… எச்சிக்கல… எதுக்குடா… இவங்கள கூட்டி வந்தே… ஸ்டார் ஹோட்டலுக்கு போகிற திமிராடி…உனக்கும், எங்கள மாதிரி இந்தப் பார்க்குல பொத்துன்னு விழுறதுக்கு எத்தன நாளாகும்…. போடா… கூட்டிட்டுப் போடா”

கண்ணன், ஏதோ பேசப் போன போது, எல்லோரும் கோரஸாக, ‘ஏய், ஏய்’ என்றார்கள். அவனைப் பேச விடாமல், கை தட்டினார்கள். மனோகர்தான், ஒவ்வொருவரையும் இழுத்து, அவர்களது வாய்களை கைகளால் மூடினான். பிரிந்த உதடுகளை, ஒட்ட வைத்தான். இதற்குள் நடுத்தர வயதுக்காரர், அவர்கள் பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.

“நான்… ‘அந்த’ மாதிரி இல்ல தம்பிகளா…”

“அப்போ… எதுக்கு வந்தீங்க…”

“இங்கே ஒங்களுக்கு என்ன வேலை”

அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

“வேலை இருக்கிறதாலதான் வந்தோம். நீங்க ஹோமா செக்ஸுவல் அதாவது ஓரினச் சேர்க்கைகாரங்கதானே?”

“நாங்க ஹோமா செக்ஸ்… ஓரினமோ… ஈரினமோ தெரியாது; அதுக்கு என்ன இப்போ?”

“பெரிசா… ஒண்ணுமில்ல… நீங்க செய்யுறதை தப்புன்னோ, சரின்னோ நான் சொல்ல வர்ல… ஆனால், முன்னெச்சரிக்கை இல்லாத ஒங்க செய்கையால… எத்தன பேரு எய்ட்ஸால் பாதிக்கப்படுறாங்க என்கிறதை நெனைச்சுப் பார்த்தீங்களா தம்பிகளா…”

“நீ சும்மா இருடா… நான் பேசுறேன்… நாங்க எதுக்கு நெனைத்துப் பார்க்கணும்? நானு. பள்ளிக்கூடத்தில் படிக்கப்போ… அதுவும் பத்தாப்பு படிக்கப்போ… இதே இந்த பார்க்குலதான் பரீட்சைக்குப் படிக்க வந்தேன். ஒரு தடிப் பயல்… என்ன புத்தகம் தம்பின்னு கேட்டான். வாங்கிப் பார்த்தான்… ஐஸா பேசி நைஸா… ஹோட்டலுக்கு கூட்டிப் போனான். காய்ஞ்ச மாடு கம்பம் புல்லுல விழுந்தது மாதிரி, நானும் பிரியாணி புரோட்டாவுல விழுந்தேன். அப்பால, சினிமாவுக்கு கூட்டிப் போனான்… அப்புறம்… போகட்டும்… என்னை… அந்தப் பாவி இந்த நிலைமைக்கு கொண்டு வந்தப்போ… நீ எங்கே போனே மச்சி…”

“இவன விடுங்க… நான் சொல்றேன்… இப்பவும் ஒரு ஆபீஸ்ல வேலை பார்க்கேன்… டெய்லி தாம்பரத்துல இருந்து வாறேன்… கை நிறையச் சம்பளந்தான்… வீட்ல… கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நச்சரிக்காங்க… நான் தட்டிக் கழிக்கேன். ஏன்னா, நான் காலேஜூல படிக்கும் போது… எங்க பக்கத்து வீட்டுப் பொண்ண சைட் அடிக்கப் போனால்… அவள் அண்ணன் கிட்டே மாட்டிக்கிட்டேன். தங்கைக்காக, அண்ணனுக்கு தியாகியானேன். கடைசியில… அந்தப் பொண்ணு பேய் மாதிரி தெரிந்தாள்… அந்த அண்ணன் எனக்கு கதாநாயகனாப் போயிட்டான்… இது எப்படி இருக்கு…?”

அந்தப் பெண்ணால், பேசாது இருக்க முடியவில்லை.

“ஸார். இவங்களுக்கு சிகிச்சை கொடுக்க முடியாதா?”

“அது அடுத்த கட்டம். இப்போ நம்ம பர்ப்பஸே வேற. தம்பிகளா… நான்தான் சொன்னேனே…. ஒங்களைத் தப்பு கண்டு பிடிக்க வர்லன்னு…”

“ஒஹோ… அது வேற செய்வியா…”

“டேய்… சும்மா இருடா… ஒனக்கு என்ன சார் வேணும்”

“நாங்க… வடபழனில… ஒரு அமைப்பு நடத்துறோம். ஒங்கள மாதிரி தம்பிகளுக்கு காண்டோம் கொடுக்கோம். இதனால் ஒங்களுக்கோ… ஒங்க கஸ்டமருக்கோ எய்ட்ஸோ… இல்ல எந்த நோயோ வராது பாருங்க”

“போய்யா… எங்க பிழப்புல மண்ணள்ளிப் போடாதே… எங்க கஸ்டமர்லாம் ஹைகிளாஸ்… வக்கீலுங்க… என்ஜினியருங்க… டாக்டருங்க… கான்டோமக் கொடுத்தால், கன்னத்துல அறைவான்க”

கூட்டி வந்த ‘டபுள் டக்கர்’ கண்ணன், பக்குவமாய் பேசினான்.

“ஒங்கள… மாதிரிதாண்டா… நானும் இவங்கள விரட்டுனேன். ஆனாலும், இவங்க நல்லவங்கடா… வர்றீங்களா… இவங்க ஆபீசுக்குப் போகலாம்… இவங்க டைரக்டர் நல்ல மனுஷன்”

“டேய் மரியாதியாய் போய்கினே இரு… ஒன்னை மாதிரி பகல் முழுசும் கக்கூஸ் கழுவிட்டு… நைட்ல… இந்த வேலய நாங்க திமிர்ல செய்யல. திரும்பிப் பாராமல் போய்க்கினே இரு”

அந்த நடுத்தர வயதுக்காரர், பைக்குள் இருந்த ஒரு பிளாஸ்டிக் உறையை எடுத்தார். அதன் உள்ளே, கண்ணைப் பறிக்கும் நிறத்தில்… ஒரு வட்ட உருவம் பாம்பு மாதிரி சுருண்டு கிடந்தது… எல்லோரும் ஆச்சரியமாய் அதைப் பார்த்த போது, அவர், அதுதான் சமயம் என்று விளக்கினார்…

“நம்ம நாட்ல. சின்னப் பசங்க… பலுன் மாதிரி… ஊதுற காண்டோம் இல்லப்பா இது. பாரீன் நிரோத்… எதுக்கும் வச்சுக்கங்களேன்.”

மனோகர், அதை கை நீட்டி வாங்கினான். உடனே அந்தப் பெண், தொங்கு பைக்குள் வைத்திருந்த ஒரு பார்ஸலை வெளியே எடுத்து, அதைப் பிரிக்கப் போனாள். அதற்குள், மனோகர், அந்த பிளாஸ்டிக் உறையை மூன்று தடவை தலையைச் சுற்றி விட்டு, பிறகு ‘தூ’ என்று துப்பியபடியே தூக்கி எறிந்தான்… கருணை ததும்ப தோன்றிய, அந்தப் பெண், அந்தப் பார்ஸலை மீண்டும் பைக்குள் போட்டுக் கொண்டாள். இதற்குள், அர்த்தநாரி போல் ஆண் பாதி பெண் பாதியாய் ஆகிப் போன ஒருத்தன், தன்னம்பிக்கையோடு சொன்னான்.

“எங்களுக்கு இப்போ… பம்பாய்ல ஒரு சங்கம் இருக்குது. அங்கே இருந்து ஒரு பத்திரிகையும் வருது… அமெரிக்காவுல அங்கீகாரமும் கிடச்சிருக்குது… அவங்க, எங்களைப் பார்த்துக்குவாங்க… நீங்க போயிக்கினே இருங்க”

சமூக இயலில் பட்ட மேற்படிப்பும், சமூகத் தொண்டில் டிப்ளமாவும் படித்து விட்டு, இன்னும் சரியான வேலை கிடைக்காமல் திண்டாடும் அந்தப் பெண், தன்னை மறந்து, தன் படிப்பை மறந்து கத்தினாள்.

“உடல் ஊனம் மாதிரி… இது… ஒங்களுக்கு ஒரு மன ஊனம். இது தெரியாமல், ஏதோ பத்மஸ்ரீ பட்டம் வாங்குன மாதிரி நினைக்காதீங்க… நீங்களும் கெட்டு… மற்றவங்களையும் கெடுக்கிறதை நினைத்துப் பாருங்க”

எல்லோரும், அவள் மீது ஆத்திரப்பட்டது போல், ‘ஏய், ஏய்’ என்று கத்தியபடியே துள்ளிய போது, இது வரை பேசாத ஒருத்தன், எல்லோரையும் கையாட்டி அடக்கினான். பிறகு, முகம் நட்டுவாங்கமாக, மரத்துப் போன குரலோடு உரத்துப் பேசினான்.

“இவங்க பேச்சுக்கும், மனசுக்கும் சம்பந்தம் கிடையாது சிஸ்டர். ஆனாலும், உங்களை பார்த்தால், படித்தவங்க மாதிரி தெரியுது. இதனால, ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கணும். நினைத்துப் பார்க்க முடியாத ஸ்டேஜூக்கு போயிட்டவங்க நாங்க. எங்களில் சிலர் தங்களை மறைச்சுட்டு… சமுதாயத்துல கெளரவமாய் நடமாடத்தான் செய்யுறாங்க… ஆனாலும், நாங்க… பத்துப் பதினைந்து வயசுலேயே… பந்திகளுக்கு வளைந்து கொடுத்து, நிமிராமல் போன தங்காங்க… நீங்க எங்களைப் பற்றி கவலைப்படாமல்… நான் சொல்ல போறதைப் பற்றி கவலைப்படுங்க. பார்க்கிலேயோ, பீச்சிலயோ, இல்ல சினிமாத் தியேட்டர்லயோ… எங்கெல்லாம் ஒரு சின்னப் பையனோ, இல்லாட்டி விடலை பயலோ, ஏதாவது ஒரு பெரிசு கிட்டே ஒட்டிக்கிட்டுக் கிடந்தால், அவனைக் கவனியுங்க… நிச்சயமாய் அந்தப் பெரிசு… அந்தப் பையனோட அப்பாவா இருக்க மாட்டான்; அந்த அப்பாவிப் பையனை, பெண்டாள வந்த சண்டாளனாய் இருப்பான்… மொதல்ல… நான் சொன்னதைப் போய் பாருங்க. நமஸ்காரம்… போயிட்டு வாங்க”

வந்தவர்கள், யோசித்தார்கள்; ஓரினச் சேர்க்கையை தடுப்பதல்ல அவர்கள் நோக்கம். அப்படி சேர்கிறவர்களின் கையில், பட்டு போன்ற கான்டோமை திணிப்பதே அவர்கள் பணி. ஆகையால், என்ன செய்யலாம் என்று அந்த சராசரி ஆணும், சராசரிப் பெண்ணும் காதைக் கடித்தார்கள். அந்தப் பெண், அவர்கள் சொல்வதில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்தது போல், மேலும் கீழுமாக தலையாட்டிய போது, அவர், இன்னொரு யதார்த்தத்தை எடுத்துக் காட்டி பக்கவாட்டில் தலையாட்டினார். ஆக மொத்தத்தில், காண்டோம் விநியோக எண்ணிக்கையைக் கூட்ட முடியவில்லையே என்ற ஆதங்கம்… அதோடு போய் விட்டார்கள்.

அவர்கள் போனதும், மனோகர் உதடுகளால் சப்புக் கொட்டினான். ஆயிரம் இருந்தாலும், அவளை அப்படி இன்ஸல்ட் செய்திருக்கக் கூடாதுதான். அவனிடம் அந்த நிரோத்தை நீட்டிய போது, அதை வெந்த புண்ணில் பாய்ந்த வேலாக எடுத்துக் கொண்டதில் தப்பில்லைதான்; அதற்காக அவள் மீதே காறி உமிழ்வது போல், அந்த நிரோத்தை, தலையைச் சுற்றி, தூக்கிப் போட்டிருக்கக் கூடாதுதான்.

மனோகர், தன் குற்ற உணர்வை மறப்பதற்காக, ஒரு பாட்டைப் பாடினான். பக்கத்தில் கிடந்தவனின் முதுகை மேளமாக்கினான். திடீரென்று, அவன் வாய் அடைபட்டது. கண்கள், சடன் பிரேக் போட்ட சக்கரங்கள் மாதிரி உருண்டு நின்றன. அவனுக்கு எதிரே, அன்புமணி நிற்கிறான். இரு பக்கமும் விகாரமான பார்வை கொண்டவன் ஒருத்தன்… கருட மூக்குள்ள காக்கிச் சட்டைக்காரன் இன்னொருத்தன்.

அன்புமணி, விறைப்பாய் பேசினான்.

“இவன்தான் ஸார் மனோகர். இவன் கிட்டேதான் ஸார் கடையில திருடுன செயினைக் கொடுத்தேன்… நான் சொன்னது மாதிரி… ரெண்டு பேருமா சேர்ந்துதான் ஸார் திருடுனோம். என்னை மட்டும். உதச்சால் என்ன சார் நியாயம்… ?”

அன்புமணியின் வலது பக்கத்தில் நின்ற கருட மூக்குக்காரனைப் பார்த்து, மனோகர் ஒரு வணக்கம் போட்டான். சந்தேகமில்லை. அப்போ… போலீஸ் நிலையத்தில், தனக்கு செமத்தையா கொடுத்தானே, அதே போலீஸ்தான்… இந்த அன்புமணி என்னத்தைக் கொடுத்தான்… நான் என்னத்தை வாங்கினேன்…

எவனுக்கு வணக்கம் போட்டானோ, அதே கருட மூக்கன். மனோகரை காலால் இடறினான். தொப்பென்று விழுந்தவனின் சட்டைக் காலரைப் பிடித்து, தூக்கி நிறுத்தியபடியே கத்தினான்.

“நாங்க… போலீஸ் நிற்கோம். நீ கிரிமினல்… மகராசா மாதிரி… கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கியா…? சொல்லுடா… அந்தச் செயினை, எங்கடா வச்சிருக்கே…? சொல்லுடா…”

மனோகரின் தலைக்கு குறி வைத்து, லத்திக் கம்பை நீட்டிய காவலரை, அன்புமணி பிடித்துக் கொண்டான்.

“சொல்லிடுவான்… சார்… சொல்லிடுவான்… ஆயிரம் இருந்தாலும், அவன் என் தோஸ்து… சார்… டேய் மனோ…. அந்தச் செயினை எங்கே வச்சிருக்கேன்னு சொல்லித் தொலையேண்டா… சோமாறி ஒன்னால நான் உதை தின்னுறேன்.”

மனோகர், அன்புமணியை மருண்டு பார்த்த போது, அவன் பக்கத்தில் நின்ற விகாரப் பார்வைக்காரன் கருத்துரைத்தான்.

“இவனை மாதிரி… கேடிகளை ஸ்டேஷன்லே விசாரிக்கிற விதமாய் விசாரிக்கணும். ஏண்டா… அன்புமணி…நீயும் அவன் கூடச் சேர்ந்து நடிக்கிறியா…முட்டிக்கு முட்டி பிஞ்சிடும்.”

மனோகருக்கு, ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அது புரியப் புரிய, சகாக்களிடம் முறையிடப் போனான். ஆனால் அவர்களோ, அவனை முகம் சுழித்துப் பார்த்தார்கள். இது வரை, அவர்களில் எவனுமே திருடாதவன்… தில்லு முல்லு செய்யாதவன்; நட்சத்திர அறைக்குள் இருக்கும் போது, மேசையில் சிதறிக் கிடக்கும் நூறு ரூபாய் நோட்டுக்களை ஒப்புக்கு கூட பார்க்க மறுப்பவர்கள். இப்படிப்பட்ட சர்க்கிளில், இவனா? எப்படிக் கண்டுபிடிக்காமல் போனோம்…

ஒருத்தன் யோசனை சொன்னான்…

“இழுத்துப் போய்… நல்லா உதைங்க சார்… குலத்தைக கெடுக்க வந்த கோடாரிப் பயல்… டேய்… இனிமேல் காட்டி, எங்கப் பக்கம் வந்தே… அப்பால நடக்கிறதே வேற…”

தாம்பரத்துக்காரன் மட்டும், மனம் கேட்காமல் பேசினான்.

“உதைங்க சார்… திருடனை உதைக்கிறதில தப்பில்ல சார். ஆனால், எங்க முன்னால வேண்டாம் சார். ஆறு மாச சகவாச தோஷம் மனசு கேட்க மாட்டங்கிது…”

மனோகர் முண்டியடித்து, அவர்களிடம் ஏதேதோ சொல்லப் போனான். இதற்குள், காக்கிச் சட்டைக்காரர், அன்புமணியையும், மனோகரையும் இணைத்து வைப்பது போல் ஒருவனின் வலது கையையும், இன்னொருத்தனின் இடது கையையும் இணைத்து விலங்கிட்டார். விலங்கைப் பூட்டி விட்டு, சாவியை பக்கத்தில் நின்றவனிடம் கொடுத்து விட்டு, அந்த விலங்கின் மூக்கணாங்கயிறான இரும்புச் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு ‘நடங்கடா’ என்றார்.

மனோகர், ஒதுங்கி நின்ற சகாக்களிடம் மீண்டும் பேசப் போனான். ஆனால், அவர்களோ அந்த இடத்தில் இருந்து எழுந்து, சிறிது விலகிப் போய் உட்கார்ந்தார்கள். விலங்கோடு சேர்த்து, அன்புமணி கையோடு, தன் கையையும் ஆட்டி, அவர்களை கிட்டே வரச் சொன்னான். இதற்குள் கூட்டம் கூடி விட்டது. விலங்கிடப்பட்டவர்களை, கூட்டம் வேடிக்கை பார்க்காமல், காரசாரமாய், கடுமையாய் நோக்கியது. ஒரு சிலர் காக்கிச் சட்டைக்காரரைப் பார்த்து ‘இப்படித்தான் செய்யணும்’ என்று அங்கீகாரம் செய்தார்கள்.

மனோகர், நின்றபடியே செத்துப் போனான். தானும் செத்து, தன் நினைவும் செத்துப் பிணமாகிப் போனான். உயிர் இருக்க, ஆன்மா செத்து, அன்புமணி மீதே சாய்ந்தான். ஒரு காலில் பட்ட ஒரு லத்திக் கம்பு வீச்சுத்தான் அவனை மீண்டும் உயிர்ப்பித்து நடக்க வைத்தது. எவருக்கும் முகம் காட்டவும் மனமில்லை. அந்த முகத்தை, இடது கையால் மறைத்துக் கொண்டான். ஆடு,மாடு போல நடந்தான். பார்வையற்றோர் நடப்பது போல், ஒரு அனுமானத்துடன் நடந்தான். நடத்தப்பட்டான்.

மனோகர், இழுத்துச் செல்லப்பட்ட ஐந்து நிமிடத்தில், விலகி நின்றவர்கள் மீண்டும் கூடினார்கள். ஒரு சிலர், மனோகரைப் பார்த்தால் அப்படிப்பட்டவனாகத் தெரியவில்லை என்று வாதிட்டார்கள். ஆனால், பெரும்பாலோர், தங்கள் பைகளுக்குள் இருந்த பர்ஸ்களைத் தட்டிப் பார்த்துக் கொண்டார்கள். இனிமேல், முன்பின் தெரியாதவர்களை, தக்க ஆதாரங்கள் இல்லாமல் தங்களது கிளப்பில் சேர்ப்பதில்லை என்றும் தீர்மானித்தார்கள். மனோகரைக் கூட்டி வந்து சேர்த்த தாம்பரத்துக்காரன் மேல் எரிந்து விழுந்தார்கள்.

சிறிது நேரத்தில், எஸ்தர் வந்தாள். பழைய பேண்ட் சட்டையாகத்தான் இருக்க வேண்டும். இல்லையானால், இப்படி நைந்திருக்காது. பேன்டின் முட்டிக்கால் பகுதி நூல் பிரிந்து குட்டி ஜன்னலாய்த் தோன்றியது. சட்டைக்காலர் சொந்த நிறத்திற்குப் பதில் வெள்ளை நிறத்தைக் காட்டியது. நைந்து, நைந்து நரைத்துப் போனது… இவர்களுக்கு தெரிந்தவள்தான் இவள்.

இந்த மனோகருடன், ஒரு குடிசையில் குடும்பம் நடத்துவதையும் தெரிந்து வைத்தவர்கள்தான்… இவளைப் பார்த்தபடியே ‘வாடா வா’ என்று கோரஸா கேட்பவர்கள், இப்போது வாய் மூடிக் கிடந்தார்கள்.

இரண்டு நாட்களாக வீட்டுக்கு வராத மனோகரைப் பார்ப்பதற்காக அங்கே வந்த எஸ்தர், அந்தக் கூட்டத்தில் அவனை அங்கேயும், இங்கேயுமாய் தேடினாள். அவனுக்கு பத்து பதினைந்து நாளாக பலமான இருமல், கூடவே வயித்துப் பிழைப்பிற்காக வேலைப் பளு, எப்படி இருக்கானோ என்று பதைபதைத்து வந்தவள், அந்த கூட்டத்திடம் கேட்டாள்.

“எங்கே மனோகர் வர்லியா…? ஏன் பேச மாட்டக்கிங்கே… மனோ இங்கே வர்லியா?”

அவர்கள், எஸ்தரை கோபமாகவும், குமுறலாகவும் பார்த்தார்கள். அவன் திருட்டில், இவளுக்கும் பங்கு இல்லாமலா இருக்கும்?

“மனோ என்ன ஆனான்? ஒருத்தராவது சொல்லுங்களேன்”

“அவனோ, நீயோ, இனிமே இங்கே வரப்படாது”

“சரி வர்ல… மனோ எங்கே? கோடிப் புண்ணியம்… சொல்லுங்க”

“பல நாள் திருடன்… ஒரு நாள் பிடிபடுவான். எவனோ அன்புமணியாம். அவனோட சேர்ந்து, இவன் ஒரு கடையிலே தங்கச் செயினை திருடி இருக்கான். அதனால் போலீஸ்காரங்க… ரெண்டு பேருக்கும் இரும்பு காப்பு போட்டு இழுத்திட்டு போறாங்க… அன்புமணி, அப்ருவராகி அந்த போலீஸ்காரங்களை இங்கே கூட்டிட்டு வந்திட்டானா, கடைசியிலே எங்களுக்குத்தான்.அவமானமாப் போச்சு.”

எஸ்தருக்கு, முக்கால் வாசி புரிந்து விட்டது. அன்புமணி ஆறு மாதம் அவகாசம் கொடுத்ததே பெரிசு… அவனுக்குத் தெரியாமல் தலை மறைவு வாழ்க்கை நடத்தியும், அவன் கண்டு பிடித்து விட்டான். அந்த லாக்கர் நகை கை மாறுவது வரைக்கும், மனோகர் லாக்கப்பிலேயே இருப்பான்… இவன் கொடுக்க மறுத்து… அவர்கள் இவனை விடுவிக்க மறுத்து… ஏதாவது ஏடாகூடமாய் மனோகர் தற்கொலை செய்து கொண்டதாய் ஒரு ஜோடனை செய்து… கடவுளே… கடவுளே… ஒனக்கு கண் இருக்குதா… கடவுளே!

எஸ்தர், பக்கத்தில் நின்ற அசோக மரத்தில், முட்டி மோதினாள்… அந்த மரத்தோடு மரமாய்ச் சாய்ந்தாள். அதிலிருந்து அப்படியே வழுக்கி, மல்லாக்க விழுந்து, அப்புறம் குப்புறப் புரண்டு, பூமியின் வயிற்றுக்குள் போகப் போகிறவள் போல, உடல் முழுவதையும் அங்குமிங்குமாய்ப் புரள விட்டாள். தனக்குத் தானே குழி பறிப்பது போல் அல்லாடினாள்…

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_33&oldid=1641719" இலிருந்து மீள்விக்கப்பட்டது