பாலைப்புறா/அத்தியாயம் 5
அந்த மாதிரி வேகத்தில், அவனும் போனதில்லை. அந்த மோட்டார் பைக்கும் கண்டதில்லை. இந்த வேகத்தை விட, பாதி வேகத்தில் போகும் பேருந்துகளில், சிலவற்றிற்கு குழி பறித்த, அந்த கோணச்சத்திர-வெள்ளையன்பட்டி வழியான அம்பாசமுத்திர குறுஞ்சாலைக்கும், இது புது அனுபவம். நீண்டு, படுத்து முதுகில் சுமக்கும் அந்த வாகனத்தை, அப்பப்போ மல்லாந்து பார்த்து, அவனையும், அந்த வாகனத்தையும் விழுங்கப் பார்த்தாலும், அந்தச் சாலையால் முடியவில்லை. பனை மரங்களும், இடையிடையே எட்டிப் பார்க்கும் ஈச்சம் பனைகளும், சுமை தாங்கிக் கற்களும், வேறு திசையில் நகர்வது போன்ற மாயை…
அந்த வேகத்திலும், மனோகர், அந்தப் பெண் கும்பலை தொலைவிலேயே பார்த்து விட்டான். அதே அந்த அடிக்கல் இடத்திற்கு அருகே, ஒரு சின்னக் கொட்டகையாய் மாறிய முன்னாள் பந்தலில், குத்து மதிப்பாக முப்பது பெண்கள், ஒலைப் பாய்களிலோ அல்லது பனைத் தட்டிகளிலோ உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்கள் முன்னால், நாற்காலிகளில் மூன்று ஆண்கள்; கலைவாணி, நின்றபடியே கைகளை ஆட்டி, ஆட்டிப் பேசிக் கொண்டிருப்பதையே பார்க்கிறார்கள். அந்த இடத்தை வேலியாக்கும் சாலைப் பக்கம் பாய்ந்த போது, ‘எத்தான்… ஏய் அத்தான்!’ என்ற கலைவாணியின் குரல்… கூட்டத்துக்கு முதுகு காட்டி, இவனுக்கு முகம் காட்டி, கையாட்டுவதையும் பார்த்து விட்டான்… ஆனாலும், அவளைப் பாராதது போல் ஒரு பாசாங்கு காட்டி, வெள்ளையன் பட்டியை நடமாட வைக்கும் ஒரே ஒரு வசதியான இந்தச் சாலை, மண் சாலையாய் மாறும் இடது பக்கம் திரும்பி, பின்னர், கல் முள், அதிகமாய் உள்ள வண்டித் தடத்தில், ஓடி, ‘பரும்புக் காட்டிற்கு’ வந்த பிறகே, வண்டியை நிறுத்தினான். வந்த வேகமோ, 61
சு. சமுத்திரம்
நொந்த வேகமோ, உடலெல்லாம் ஒரே வலி... தலைக்கு வெளியே மட்டும் அல்லாது உள்ளுக்குள்ளும் ஒரே சுற்றல்,
அந்த மோட்டார் பைக் இருக்கையில், முகம் போட்டபடி மனோகர் குப்புறக் கிடந்தான். அவன் முகத்தில் வியர்வைப் பெருக்கத்தை, அந்த இருக்கை உறிஞ்சியது. அப்படியே சாய்ந்து கிடந்தவன், கற்குவியல்களுக்குள் நடந்து ஒரு பாறையில் மல்லாக்க சாய்ந்தான். உச்சி சூரியன் அவனைச் சுடவில்லை. பாறை வெப்பம், அவனைப் பாதிக்கவில்லை. அங்குமிங்குமாய் அலைக்கழிந்து பார்த்தான். மொட்டைத் தலையான பாறைகள். கற்கள் கூட கருகிப் போய் கிடந்தன. உருளைக் கிழங்கு போன்ற சரளைக் கற்கள். செடிகளாக மட்டுமே வளரும் கற்றாழை, அங்கே மரமாக நின்றன. அதன் கிளைகள் எங்கும் முட்செருப்புகள் போன்ற காய்கள். அவற்றின் பார்வை பயங்கரமாய் பயமுறுத்துவது போல் இருந்தது. தரை, அவன் காலின் ஈரத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது.
சிந்தித்து, சிந்தித்து மனம், மரத்தது. கண்கள் எரிந்தன. தொண்டைக்குள் அடைப்பு. நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று தன்னந்தனியாய் தானாய்ப் புலம்புகிறது. நெஞ்செலும்பை, அடித்துக் கொள்கிறது. இதயத்தில் முட்டி மோதுகிறது.
‘இனிமேல் கலைவாணியோடு வாழ்வது என்பது முடிந்து போன சமாச்சாரம்... ஆனாலும், இந்த திருமணத்தை அவளே நிறுத்திக் காட்டட்டும். இரண்டு முயற்சிகளில் தோல்வி அடைந்தவள், கடைசி முயற்சியாய் என்ன செய்கிறாள் என்பதைப் பார்த்துவிடலாம். அவனைப் பொறுத்த அளவில் கல்யாணத்தை நிறுத்துவதற்கு, எந்த முயற்சியும் செய்யப் போவது இல்லை. மூன்றாவது முயற்சியிலும் அவள் குப்புற விழுந்து, கல்யாண மேடை வழியாய் படுக்கை அறையில் மல்லாந்து விழுந்தாலும், ஒரு வகையில் நன்மைக்கே... பிடிக்காத ஒன்றை முறைப்படி தடுப்பதற்குப் பதிலாக, ஒரு இளைஞனை, எதிர்கால எய்ட்ஸ் நோயாளியாய் சித்தரித்து, அவன் மனோபாவத்தையே மாற்றிவிட்டவள், கொலையை விட கொடுரமான காரியத்தைச் செய்தவள்; மனைவியாய் வந்தாலும் தொடுவதாக இல்லை... வேறு வழி இல்லாமல் தொடுவதாக இருந்தாலும், அது தாக்குவதாகவே இருக்கும்... சண்டாளி. ராட்சசி. ஊர்சுற்றி... என்னைசாக வைக்கவே வாழ்கிறவள்’.
“எத்தான். ஒங்களுக்கு காது செவிடா?”
மனோகர், தலையைத் தூக்காமலேயே பார்த்தபோது, கலைவாணி சைக்கிளை அவன் மோட்டார் பைக் மேல், சாய்த்துப் போட்டுவிட்டு, அவனைப் பார்த்து ஓடிவந்தாள். அவன் கைகளை எடுத்து தன் தோள்களில் 62 பாலைப்புறா
போட்டுக் கொண்டாள். பிறகு அவனை லேசாய் உருட்டிவிட்டு, கிடைத்த இடத்தில், அவனைப் பார்த்து ஒருக்களித்து சாய்ந்தபடியே ஒப்புவித்தாள்.
"நம்ம ஊர்ல... பெண்கள் சுயவேலைக்குழு இருக்குதா... ஆரம்பத்தில் பாங்கில் பணம் சேமித்து, ஒவ்வொருத்திக்கும் 500 ரூபாய் சேமிப்பும் இருக்குதா..., இப்போ பேங்க் காரங்களும், பிளாக் அதிகாரி ஒருவரும் வந்திருக்காங்க. ‘என்ன தொழில் செய்யப் போறீங்க...? எவ்வளவு கடன் வேணுமுன்னு' கேட்க வந்திருக்காங்க. இந்த பாய் பின்னுதல், கூடை முடைதல், சூளை போடுதல் இது மாதிரி இல்லாமல், எல்லோரும் செய்றது மாதிரி ஒரு நவீன தொழிலை செய்யணுமுன்னு நினைக்கேன். எனக்கென்னமோ செயற்கை வைரம் செய்யுறது சரியாப்பட்டது. எதுக்கும் ஒங்க கிட்டே யோசனை கேட்கலாமுன்னு கூப்பிட்டேன். நீங்க எஞ்சினியராச்சே... வந்தவங்க, ஒரு ‘இண்டரஸ்டிங்' செய்தியை சொன்னாங்க. தர்மபுரி மாவட்டத்தில் டெங்கனிக் கோட்டை என்கிற இடத்துல வண்ணாரப் பெண்களை ஒன்று திரட்டி, டோக்ரா குரூப்பாக்கி, அதுதான். டி.டபிள்யூ.சி.ஆர்.ஏ. கிராமப்புற மகளிர் மற்றும் குழந்தைகள்நல வளர்ச்சித் திட்டம்... இதன்படி அறுபது பெண்களை, நான்கு குழுவாக்கி ஒவ்வொரு குழுவிற்கும் தொழிற் பயிற்சி கொடுத்து, அவங்க கூட்டாய் தொழில் துவங்க - சுழல் நிதியாய் பதினையாயிரம் ரூபாய் வழங்குற திட்டம்... இதன்படி கழுதைகளில் அழுக்கு துணி எடுத்த பெண்களுக்கு வங்கிக் கடனுல ஒரு வேன் வாங்கி கொடுத்திருக்காங்களாம். இந்தப் பெண்கள், இப்போ பக்கத்து பேக்டரிக்கு போய், அங்கே யூனிபாரங்களையும் எடுத்துட்டு வந்து, துவைத்து, தேய்த்து திருப்பி வேனுலயே கொண்டு போய் கொடுக்காங்களாம். கழுதைகள், வேனாய் மாறிட்டு; இந்த மாதிரி திட்டங்கள், சில இடங்கள்லதான்... உருப்படியாய் நடக்குதாம்... ஆனாலும், இந்த கூட்டம்தான் என் கடைசி கூட்டம். அப்புறம் உங்க கூடத்தான். கூடத்தான் என்கிறதில ரெண்டு அர்த்தம் இருக்கிறது என் ஹீரோவுக்கு தெரியுமா?”
கலைவாணி, தனது உணர்வுகளை, அனுபவங்களோடு கலந்து, அவன் காதுகளில் கொட்டிக் கொண்டிருந்தாள். அவனை, அவள் முழுமையாய் பார்க்கவில்லை. ஆனால், அவன் பார்த்தான். பார்த்தபடியே நோட்டமிட்டான். தனக்குள் சொன்னான். ‘என்னுடைய ரியாக்ஷனை பார்க்க வந் திருக்கே... நல்லா பாரு... இனிமேல் நீ என்ன செய்யப்போறே என்கிறது கூட எனக்கு அநாவசியம்... இதுக்கு மேலே நீ என்னதான் செய்துடுவே... நானும் இன்டலிஜெட்தான்.'
கலைவாணி, அவனைச் சேர்த்துப்பிடித்து, தன்னைப் போல், தன் பக்கமாக ஒருக்களித்து சாய்த்தாள். அவன் நெற்றியில் முத்தமிட்டாள். பிறகு தன் கண்களை ஒரு கையால் மூடிக் கொண்டே பேசினாள். சு. சமுத்திரம் 63
"போனவாரம், அந்த டாக்டரம்மாவும், நானும் உங்களை கண்ணால சீண்டிக்கிட்டே ரகசியமாய் பேசுனோம், பாருங்க... நீங்க கூட கண்ணடித்து கேட்டீங்களே. அது என்னன்னு தெரியுமா?”
மனோகர், பாறையிலிருந்து எழுந்து நின்ற, அவளைப் பார்த்தான். அவளும் இப்போது, கை கால்களை பாறையில் பரப்பியபடியே அவனை ஆசையோடு பார்த்தாள். பிறகு கண்களை மூடிக்கொண்டே விளக்கினாள்.
"நம் கல்யாணச்சமயத்திலே பார்த்து எனக்கு ‘பீரியடு’... அதுதான் அந்த மூணு நாள்... நினைக்கவே சங்கடமா இருந்தது. டாக்டர் சந்திரா கிட்டே சொன்னேன். ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கறதுக்கு மாத்திரை எழுதி கொடுத்தாங்க, வேற மாத்திரையாய் இருந்தால், அப்பா கிட்டயோ... அண்ணன் கிட்டயோ கொடுத்திடலாம். கோணச் சத்திரத்தில வாங்கிட்டு வருவாங்க. ஆனால் இதைக் கொடுக்க முடியுமா? நீங்கதான் வாங்கிட்டு வரணும்... மருந்து கடையிலே ஆள் இல்லாத சமயமாபார்த்து பக்குவமாய்... வாங்குங்க... இந்தாங்க!” -
கலைவாணி, ஜாக்கெட்டுக்குள் கையிட்டு, இரண்டாய் மடிக்கப்பட்ட ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டாள். மூடிய கண்களைத் திறக்காமலே, முகம், முக்கோணமாய் நாணிக்கோண, காகிதம் பிடித்த கையை, இந்த இடத்தில்தான் அவன் நிற்பான் என அனுமானத்தோடு, பார்வை இழந்த பெண்போல், ஆடி ஆடி ஆகாயத்தில் துழாவினாள்.
இன்னும் கண்விழித்துப்பார்க்காத கலைவாணியை, மனோகர் கையைப் பிடித்துத் தூக்கினான். அப்படியே அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு ஆரத்தழுவினான். அவளை ‘சிக்கென' பிடித்தபடி, அவள் தோள்வழியாய், தலையைத் தொங்கப்போட்டான். ஆறாய்ப் பெருகிய கண்ணிர், அவள் முதுகை, அவளுக்கு தெரியாமலே நனைத்தது. 'அய்யோ... என்ன இப்படி’ என்று அவள் சிணுங்கி, தோளில் கிடந்த அவன் தலையைத் தூக்கி நிமிர்த்தினாள். தெப்பமாக நனைந்த அவன் முகத்தை, வேர்வை துளிகளாய் அனுமானித்து, முந்தானையால் துடைத்து விட்டாள். கையில் உள்ள காகிதத்தை, அவன் பைக்குள் திணித்தபடியே, அவன் மார்பில் சாய்ந்தாள். பிறகு அவனை நிமிர்ந்து பார்த்து, அவன் உதட்டில் முத்தமிட்டாள். முதல் தடவையான வாய் முத்தம்.
மனோகருக்கு அழுகை வந்தது. அந்தக் கிருமிகள் தன்னைப் பிடித்திருக்கலாம் என்ற பயமும் வந்தது. இந்தக் கள்ளம் கபடம் இல்லாத இவளை, ஒரு சூழ்ச்சிக்காரியாய் நினைத்தோமே என்ற சுய வெறுப்பு; இவளைவிட ஒரு நட்பு எதுவும் இல்லை... இவளிடமே அதை சொல்லிவிடலாமா... நான், நானாய் இல்லை என்று சொல்லிவிடலாமா... 64 பாலைப்புறா
விலகிக் கொள் என்று விலகலாமா... வேண்டாம்.... இது ஒருவேளை விஷப்பரீட்சை. அப்படியா என்று அவள், வெறுப்பாய்க் கேட்டிடக் கூடாது. இதுவும் ஒருதப்புக்கணக்காய் ஆகலாம். கணக்கு போட்டால்தானே, அந்தத் தப்பு வரும்? இவள் இப்படி மெய் சிலிர்த்து இருக்கட்டும். இந்தக் காட்சியே கடைசி காட்சியாக இருக்கட்டும். ..
மனோகர், ஒரு முடிவுக்கு வந்தான். கல்யாணத்தை நிறுத்தியாக வேண்டும்... கெளரவமாக நிறுத்தியாக வேண்டும்... அப்பாவிடம் சொன்னால், வைத்திய செலவுக்கு நிறைய பணம் ஆகுமோ என்று கேட்கக் கூடியவர்.... அம்மாவிடம் சொன்னால் ஊருக்கே சொன்னது மாதிரி... இந்தக் கல்யாணத்தை ‘பாம்பும் சாகாமல் பாம்படித்த கம்பும் நோகாமல்' நிறுத்தக் கூடியவர், தாய் மாமா மகனும், அக்காவின் கணவருமான மோகன் ராம்தான்... அக்காள் ஒரு மாதிரி... ‘வாங்குவதில்' மட்டுமே குறியானவள்... ஆனால் இந்த அத்தான், இவனுக்கு தந்தை மாதிரி... ‘பிளஸ்டூ' முடித்ததும், திருட்டு அரிசி ஓசியில் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக, அப்பா தவசிமுத்து, இவனை ஒரு நியாயவிலைக் கடையில் சேரச் சொன்னபோது, இந்த அத்தான்தான், மாமனாரை ஒரு அதட்டு போட்டு, இவன் பொறியியல் கல்லூரியில் சேரக் காரணமானவர். சேர்த்தது மட்டுமல்லாமல், அவ்வப்போது வந்து கைநிறைய பணம் தந்தார். சொந்த அப்பன் பணத்தில், கொத்தனாராய்க்கூட ஆக முடியாது. அப்படிப்பட்ட அத்தான். ஆசாமி அடாவடிதான்.... சாமி பலமும், அரசியல் பலமும், சுயபலமும் உள்ளவர். ‘வெட்டிட்டேன்னுவா: வெட்டிட்டான்னு வராதே' என்று வேண்டப்பட்டவர்கள் கிட்டே சொல்வார். தப்புத்தான்,... ஆனால் அதுவும் இந்தக் காலத்தில் தேவைப்படுதே...
மனோகர், கலைவாணியை அணைத்தபடியே, மோட்டார் பைக்கிற்கு முத்தமிட்ட சைக்கிள் பக்கமாய்க் கொண்டு போனான். ‘கூட்டத்திற்கு வாங்கத்தான்' என்று கெஞ்சுனது போல் கொஞ்சியவளிடம், தலைக்கு மேல் இருக்கிற கல்யாண வேலைகளை எடுத்துரைத்தான். அதே சமயம் செயற்கை வைரம் செய்வது சிறப்பானது என்று சொன்னான். வைரப்பட்டதாய் நினைத்த தன் உடலும், ஒரு செயற்கை வைரம் தானே என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
நீண்ட நேர இடைவெளிக்குப்பிறகு, கலைவாணி சைக்கிளிலும், இவன் மோட்டார் சைக்கிளிலும், எதிரெதிர் திசைகளில் புறப்பட்டார்கள். இந்த சைக்கிளில் முன்னால் உட்காருறேன். ஒரு ரவுண்ட் அடிங்களே என்று வெட்கத்தோடும், வெட்கத்தை விட்டும் கேட்டவளின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டே பிரிந்தான். இவளைப் பிரிந்து விட்டு இருக்க முடியுமா என்ற கேள்வி; பிரிவே அவளுக்குத் துணை என்ற பதில்.