பாலைப்புறா/அத்தியாயம் 6

வெட்டாம்பட்டி முனையிலேயே, அத்தான் வயலுக்குப் போயிருப்பதை தெரிந்து கொண்டு, மனோகர், குளத்துக்கரை மேல் வண்டியை விட்டான். லாரி, டிராக்டர் போகிற கம்மாக்கரை… ஆனால், குளத்தின் கிழக்குப் பக்கத்து அடிவாரத்தை, அண்டை வயல் பேர்வழிகள் ‘மண்கொன்று நிலமாக்கி’ வருகிறார்கள். இதனால் குளமே ஒரு நாள், குடை சாயப் போகிற நிலைமை. மனோகர் நினைத்துக் கொண்டான். ‘என்னைப் போல், என்னைப் போல்’…

மனோகர், பைக்கை, ஒரு களத்து மேட்டுக்குக் குடை பிடித்த ஆலமரத்தடிப் பக்கம் நிறுத்தி விட்டு, புல் மெத்தை சரிவு வழியாய் கீழே இறங்கினான். ஈரக் கசிவான வரப்புகளில் தாவினான். அந்த வயக்காடு முழுவதும், பச்சைத் தளிர்களாகவும், மஞ்சள் பயிர்களாகவும், வியாபித்து இருந்தது. வயல் மடந்தை, பச்சைப் படவை கட்டி, மஞ்சள் மேலாடையுடன் மல்லாந்து கிடப்பது போன்ற தோற்றம். தென்னை மரக் கரங்களை, கோணல் மாணலாய் ஆக்கி, பனை மரக் கால்களை தூக்கி வைத்து, பிரசவத்திற்கு, தன்னை தயார் படுத்திக் கொள்வது போன்ற தோரணை.

மோகன்ராம், வேட்டியை மடித்துக் கட்டி, டவுசர் பட்டை தெரியும்படி நின்றார். ஒரு கையில் குடையைத் தூக்கிப் பிடித்த வண்ணம், கீழே கதிர் அரிவாள்களோடு இயங்கிக் கொண்டிருந்த வேலையாட்கள் நிமிரும் போதெல்லாம் அதட்டினார். மேகம் கறுக்கிறது. அந்தக் கருப்பு முகம் வெள்ளைப் பல் காட்டி, எச்சில் துப்பினால் விதை நெல் கூட தேறாது. நிலத்தில் முகம் போட்ட நெல்மணிகள், அங்கேயே முளைத்து, குறைப் பிரசவமாகி விடும். எல்லோரும் புதிதாய் விதைக்கும் போது, இவர் அறுக்கிறார். ஊர் 66 பாலைப்புறா

ஊராய், கட்டைப் பஞ்சாயத்துக்களுக்குப் போனதால், காலுக்கும் வலி, நிலத்துக்கும் சுகப்பிரசவம் இல்லாத வலி.

கம்மாக்கரையில், கட்டை வண்டி வருகிறதா என்று எட்டிப் பார்த்த மோகன்ராம், மனோகர், கிணற்றடி பக்கம் வருவதைப் பார்த்துவிட்டு குரலிட்டார். அவனை அங்கேயே நிற்கும்படி சைகை செய்து விட்டு, இவர் நடந்தார். படித்த மைத்துனன் மேல், நெல்மணிகள்பட்டு, அவனை அரிக்கக் கூடாதே என்ற முன் யோசனை. சேறும் சகதியும் அவன் பேண்டை அப்பிவிடக் கூடாதே என்கிற அக்கறை. அதோடு அறுவடைபூமிக்குள் அவன் செருப்புக் காலோடு வரக்கூடாது என்கிற வயல் பக்தி.

மச்சானும், மாப்பிள்ளையும், கிணற்று சரல்மேட்டில் சந்தித்துக் கொண்டனர்.

‘என்ன மாப்பிள்ளை... அப்புறமாய் ஆளைக்காணோம்? கல்யாண நோட்டீஸ் இன்னும் ரெடியாகல்லியா? இதுக்குத்தான் தென்காசியிலே கொடுக்கச் சொன்னேன். கோணச்சத்திரம் பயல், நீத்தார் நினைவுக்குத்தான் லாயக்கு...’

மோகன்ராம், அப்படி அபசகுனமாய் சொல்லிட்டோமே என்று வாயைக் கடித்தபோது, மனோகர் அவர் மார்பில் சாய்ந்தான். அவர் தோளில் ஒரு பக்கமாய் தலை போட்டு விம்மினான். வார்த்தைகள் வர்மமாய் தொண்டைக்குள் விக்கிக் கொள்ள, கண்ணிர், மேட்டுக்கு வந்ததுபோல் அவன் மூக்குக்குள் ஊடுருவ, அவன் மாங்கு மாங்கென்று அழுதான். அர்த்தப்படுத்த முடியாத ஒலிகள். அப்போதுதான் ஒடியது போன்ற, மேல் மூச்சு... கீழ் மூச்சு...

அத்தான், ஆடிப் போனார். அவருக்கும் கண் கலங்கியது. ஆனாலும் சுதாரித்தார். மைத்துனனை நேராய் நிமிர்த்தினார். அவன்முகத்தை துண்டால் துடைத்து விட்டார். பிறகு, தனது தோளை தட்டிக் கொண்டே ஆறுதல் சொன்னார்.

"நாம அழ வைக்கணுமே தவிர... அழப்படாது... உயிருக்கு மேல என்னடா வந்துடும்? ஒன் உயிரைச் சொல்லலே. ஒன்னை பெருமை பிடிபடாமல் பார்க்கிற என் உயிர சொன்னேன். என்ன நடந்தது?”

மனோகர், அத்தானையே பார்த்தான். நீள, அகல, உயரம் என்ற முப்பரிமாணமும் உருண்டு திரண்ட உருவம்... உடம்பின் அழுத்தத்தில், ஒரு காண்டாமிருகத்தின் அலட்சியம். எல்லாருடைய தலைகளுக்கும் மேலே போன கழுத்து. நாற்பது வயதிலும், வாலிபம் போகாத முறுக்கு... பாளை அரிவாள் மீசை, சு. சமுத்திரம் 67

மனோகர், டாக்டர் சந்திரா தெரிவித்த நோயைச் சொன்னான்... அவர் புரியாமல் விழித்த போது, டாக்டர், அசோகன் எய்ட்ஸ் கிருமிகள் ஒருத்தரை என்ன பாடுபடுத்தும் என்பதை, அப்படி எதிர்காலத்தில் படப் போகிறவன் போலச் சொன்னான். தொடர்பற்ற வார்த்தைகள்,... முன்னாலும், பின்னாலும், தாவும் சம்பவக் கோர்வையற்ற சித்திரிப்புக்கள். இடையிடையே விம்மல்கள். அப்போதே உயிர்வாதை... அத்தான் மடியில் உயிர்விட வந்திருப்பது போன்ற தொய்வு... எப்படியோ சொல்லி முடித்தான். பேசிவிட்டு, அத்தானையே பார்த்தான். அத்தான்... தொங்கப் போன அவன் முகத்தை நிமிர்த்தினார். அவன் எதிர் பார்த்ததுபோல் கண் கலங்கி, வாயடைத்துப் போகாமல் பூ இவ்வளவுதானா? என்று சொல்லிச் சிரித்தார். அது, அவருக்கே மிகை என்று தெரியும். ஆனாலும் அது இருக்காது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை... மைத்துனனை, கமலைக் கல்லில் உட்கார வைத்து, இவரும் உட்கார்ந்து கொண்டு, டாக்டர்களைப் பற்றிய தனது பட்டறிவை எடுத்துரைத்தார்.

"எமன் கிட்டே போனாலும்... இந்த டாக்டர் கிட்ட மட்டும் போகப்படாது... மாப்பிள்ளை. இப்படித்தான்... ஒக்கா தலைப் பிரசவத்துக்கு, ஒங்க வீட்டுக்கு வந்திருந்த சமயத்தில், எனக்கு ஒரே இருமல்,... துப்பினால் கட்டி கட்டியாய் ரத்தம். பயந்து போய் டவுன்லே டாக்டர் கிட்டே காட்டினேன்... எக்ஸ்ரே எடுத்தான், சளியை பார்த்தான், அப்புறம் சயரோகமுன்னான். முப்பது ஊசி போட்டான். ஆனாலும் துளித் துளியாய் விழுந்த ரத்தம் கட்டி கட்டியாய் விழுந்துது. உடனே ‘கடவுள நெனைச்சிக்கிட்டே' டி.பி. ஆஸ்பத்திரிக்கு போனான்; அங்கேயும் சயரோகம் முற்றிட்டுன்னான்... ஆனால் உடம்புல எந்த சேதாரமும் இல்ல... கடைசி முயற்சியாய், எங்க நாட்டு வைத்தியர் பேச்சிமுத்து மாமாக்கிட்டே கையக் காட்டினேன்... ‘ஒனக்கு நிச்சயமாய் சயரோகம் கிடையாது. சத்தியமாய் கிடையாது. ஆனால் சூடு ஜாஸ்தி... சூட்டுலயும் ரத்தம் வரும்... என்ன சாப்பிடறேன்னு' கேட்டார். தினமும் பப்பாளிப் பழத்தை கிலோ கிலோவாய் சாப்பிட்டதைச் சொன்னேன். சமைச்சு சாப்பிட சோம்பல் பட்டு, தோட்டத்து பப்பாளியை இரண்டு வேளை சாப்பிடுறதை சொன்னேன்...அவர், என்கைய ஒரு உதறு உதறிட்டு ‘கள்ள பிள்ள கழிக்கிறதுக்கு கொடுக்கிற... பப்பாளியையா சாப்பிட்டே... பயங்கரமான சூடுடா'ன்னார். பப்பாளியை நிறுத்தச் சொன்னார். ரத்தமும் நின்னுட்டு... மெத்தப் படிச்சவன் சுத்தப் பைத்தியம். அதுலயும் பொம்புள படிச்சு பூலோகமே கெட்டு வருது. இப்படியா சொல்லிட்டாள்னு சிரிக்கணும்... அழப்படாது.... இப்ப கூட எவனும் கத்தியோட குத்த வந்தாலும், என்னால வெறுங்கையோட எதிர்க்க முடியும். ஆனால் பப்பாளி பழத்தோட வந்தால் பயந்திடுவேன்". 68 பாலைப்புறா

மனோகர், அத்தானை வியந்து பார்த்தான், அவனிடம், எப்போதும் உண்மை பேசும் அத்தான், இப்போதும் உண்மை பேசுகிறார் என்பதில் ஆனந்தம்... அப்படிப்பட்ட நோய் தனக்கு இல்லை என்பதை அத்தான் சொல்லிக் கேட்டதில் ஒரு தெம்பு. கலைவாணியோடு கல்யாணம் நடக்கும் என்பதை நினைப்பதிலேயே ஒரு இனிமை. ஆனாலும் மனதை கல்லாக்கிக் கொண்டே கேட்டான். சந்தேகத்தின் பலனை, கலைவாணிக்குக் கொடுக்கப் போனான்...

“ஆனாலும் கல்யாணத்தை நிறுத்தனும் அத்தான்".

“குளத்துக்கு கோவிச்சுட்டு... குண்டி கழுவாமல் போனானாம் ஒருத்தன். ஒனக்கு என்னமோ சொன்னியே. அந்த இழவு பூச்சி... அது இருக்குமுன்னால், நீ சொல்லாமலே... நானே கல்யாணத்தை நிறுத்துவேன்... கலைவாணி... எனக்கு கூடப் பிறந்த சித்திமகள் என்கிறதை மறந்துட்டே... நீ எனக்கு ஒரு கண்ணுன்னா... அவள் மறுகண்ணு... எதுக்கும் ஒனக்கு சந்தேகம் வந்தால்... அதோ அந்த வயலுல நிற்கார் பாரு... கூன் போட்ட கிழவன்.... அவர்தான் நாட்டு வைத்தியர்... பேச்சிமுத்து... புறப்படு... நாடி பார்ப்போம்”.

மனோகருக்கு, மனம் லேசானது, ஒடிப் போன மகிழ்ச்சி, அலையலையாய் புதுவேகத்துடன், வட்டியும் முதலுமாய் திரும்பி வந்தது. இந்த அத்தான், ஒருவேளை, வேறு எந்தப் பெண்ணாய் இருந்தாலும் கவலைப்பட மாட்டார்னு சொல்லலாம்... சொந்த சித்தி மகளை, கிணற்றில் தள்ளுவாரா... எனக்கு அது கிடையாது... இந்த சந்திரா....நல்லவள் ஆனால் கிராக்கு...

மோகன்ராம், மனோகரின் கையைப் பிடித்துக் கொண்டு, அவனோடு வயல்விட்டு வயல் தாண்டி, நாட்டு வைத்தியர் பக்கமாய் போனார்... அவர் வரப்போரம் உள்ள, யானை நெருஞ்சி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே உள்ள கூனோடு அவர் குனிந்ததால், செம்மறியாடு, புல்மேய்வதுபோல் இருந்தது...

‘என்ன மாமா இந்தப் பக்கம்...’

‘இந்த யானை நெருஞ்சி இலய... தண்ணீர்ல போட்டுட்டு... ஒரு மணி நேரம் ஊறவச்சி குடித்தால் தாது விருத்தியாகும்... சூடு தணியும்... கண் எரிச்சல் போகும்... எந்தப் பயலுக்கு இது தெரியுது...’

"மாமா, இவனுக்கும் இது தேவைப்படும்... கல்யாண மாப்பிள்ளை பாரும். ஏதாவது லேகியமாய்...”

"நாடி பார்க்காமல்... நான்மருந்து... லேகியம் கொடுக்கிறது இல்ல". சு. சமுத்திரம் 69

"சரி நாடி பாருங்க...”

"என்னடா இது... சுக்கு கண்ட இடத்தில பிள்ளை பெறுறது. சுப்பிரமணிசுவாமி கோவிலை பார்த்தாமட்டும் சாமி கும்புடுறவன் மாதிரி, நேரம் காலம் இல்லையா?”

‘இப்படிச்சொல்லிச்சொல்லியே எம்.பி.பி.எஸ். காரங்களை செழிக்க வச்சிட்டிங்க மாமா... நாடி பாருங்க மாமா’.

"இவனுக்கா... கூடாதுடா... இவன் அப்பன் அந்த இரப்பாளி தவசிமுத்து இங்கே வந்து... இவனுக்கும், சுப்பையா மகளுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்க வந்தான். பார்த்து முடிச்சதும் ரெண்டு ரூபாய் தந்தான் இரப்பாளிப்பயல். அங்கேயே கிழிச்சுப்போட்டேன்.”

‘என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே’.

"நீ அப்பவே... வெள்ளையன்பட்டிக்கு அரிவாள தூக்கிட்டுப் போவியே”.

‘ஏய் மாப்பிள்ளை மாமா கிட்ட கைய நீட்டு... அப்படியே வேற எதுவும் இருக்குதான்னும் பாரும் மாமா’.

பேச்சிமுத்து... மனோகரின் கை கால்களை உதறச் சொன்னார். இடுப்பிலோ, தரையிலோ கை ஊன்றாமல் இருக்கச் சொன்னார். பிறகு நாடி பார்த்தார். ஒரு நிமிடத்தில் பிடித்த கையை உதறிப் போட்டார். மனோகரும், மோகன்ராமும் பயந்து விட்டார்கள். பேச்சிமுத்து தாத்தா சிரித்தார்.

‘நல்லா இருக்கிறவனுக்கு நாடிப் பார்க்கப்படாதடா... வாத, பித்த சிலேத்தம் மூணு நாடியுமே நல்லா பேசுது... ஒரு நோய் நொடி இல்ல... பித்தம் ஜாஸ்தி’.

‘பீர் குடிச்சால் சரியாயிடும். அப்புறம், தாது புஷ்டிக்கு லேகியம்’.

"இப்பவே... இவனைதாக்குப்பிடிக்கிறது அவளுக்கு கஷ்டம்...” ‘அப்புறம் கல்யாண பொருத்தம்... எப்படி மாமா இருக்குது’. "ரெண்டு பேருக்குமே... களஸ்திர ஸ்தானம் நல்லாயிருக்குதுடா. எண்பது வயசுவரைக்கும் தீர்க்காயுசு. லூப்போ, கீப்போ போட்டாலும் ஐந்து பிள்ளைங்க பிறக்கும். நான் சொன்னது மாதிரியே... ராமக்கா பிழைச்சிட்டாள் பார்த்தியா... டாக்டர் பயலுவ, அவள சவக்கிடங்குக்கு தூக்கிட்டுப் போனாங்க.”

‘ஏன் மாப்பிள்ளை வாயைப் பிளக்கிற? எங்க மாமா சொன்னால் 70 பாலைப்புறா

சொன்னதுதான். ஒரு அங்குலம், அந்த பக்கமோ, இந்தப் பக்கமோ நகராது... வாறோம் மாமா...’

மனோகர், பேச்சிமுத்து தாத்தாவை பிரமிப்பாய் பார்த்தான். பார்க்கப் பார்க்கப் பரவசம்... அசாத்தியமான பேரமைதி... அவர் சொன்னதையே திருப்பிச் சொல்ல வேண்டும் என்ற ஆசை... சட்டைப்பையில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து, அவரிடம், குருதட்சணையாய் நீட்டினான். அவருக்கு வந்ததே கோபம்.

‘ஏன்டா... மருமகனே.. ஒன் மச்சினன் என்னை பிச்சைக்காரன்னு நினைச்சானா? எனக்கும் வயல் வரப்பு இருக்குதுன்னு சொல்லுடா. இந்தாடா ஒன் நோட்டு’.

‘சின்னப்பயல்... தெரியாம செய்துட்டான்’.

மச்சானும், மைத்துனனும் மீண்டும் வயல் பக்கம் வந்தார்கள். மனோகர் அத்தானிடம் ஒரு சந்தேகம் கேட்டான்.

“எங்கப்பா... ரெண்டு ரூபாய் கொடுத்தார்னு இளக்காரமாய் சொன்னாரு. இப்போ 100 ரூபாயை தூக்கி வீசுறாரு.”

"இதுக்குப் பேர்தான் சித்தன் போக்கு... சிவன் போக்கு என்கிறது. ஆனால் கிழவன் எது சொன்னாலும், அது பலிக்கும். இனிமேல் நீ அது இருக்கு இது இருக்குன்னு புலம்பப்படாது.”

"எத்தான்... கல்யாணத்தை நான் நிறுத்தாட்டால், அந்த சந்திரா நிறுத்துவாளாம். என்னை மிரட்டுறாள்".

நீண்ட நாளாய் எதிரி கிடைக்காமல் போரடித்துப் போன மோகன்ராம், வெட்டரிவாள் மீசைகுலுங்க நின்றார். தோள்துடிக்க சூளுரைத்தார்.

“யார் வீட்டு கல்யாணத்தை யார் நிறுத்தறது? அவளுக்கு கெட்டகாலம்... இல்லாட்டால் இப்படிப் பேசமாட்டாள். சரி நீ பாட்டுக்கு ஒன் வேலைய பாரு. நான் அவளை பார்த்துக்கறேன். கவலைப்படாதே... நான் பிளான் போட்டுதான் சொல்றேன். கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டியது என் பொறுப்பு. கல்யாணத்துக்கு முன்னாடி எலுமிச்சபழத்தை அறுத்து தலையைச் சுத்துவோமே அந்தப்பழம் மாதிரி அந்த பொம்புள டாக்டர் ஆக விரும்புனால்... ஆகிட்டுப் போறாள் ஒனக்கென்ன".

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_6&oldid=1641692" இலிருந்து மீள்விக்கப்பட்டது