பாலைப்புறா/அத்தியாயம் 7



து வெறும் ஆரம்ப சுகாதார நிலையம் அல்ல. இந்த ‘ஆரம்பம்’ என்ற வார்த்தைக்கு முன்னால், ‘மேம்படுத்தப்பட்ட’ என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்ற சுகாதார நிலையங்களைப் போல் அல்லாமல், இதில் ஒரு பிரசவ வார்டும், பொதுப்படையான வார்டும் உண்டு. மொத்தம் இருபது படுக்கைகள் இருக்கலாம். கூடுதலான ஊழியர்களையும், இரண்டு டாக்டர்களுக்குப் பதிலாக, மூன்று டாக்டர்களையும் கொண்ட மையம்… வெளிநாட்டு உதவியோடு ‘மேம்படுத்தப்பட்ட’ ஒரு சில மையங்களில் இந்தக் கோணச் சத்திர மையமும் ஒன்று… ஆனால், இதன் பெயர்ப் பலகையைப் பார்த்தால், அந்த நிலையத்திலேயே சுகாதாரம் இனி மேல்தான் ஆரம்பமாக வேண்டும் என்ற சந்தேகம் வரலாம்… வெளியே உளுத்துப் போன பலகையில், புழுத்துப் போன எழுத்துக்கள்… வண்டிச் சக்கர மேல் பட்டை மாதிரி, வளைத்து வைக்கப்பட்ட இந்தப் பெயர் பலகைக்கு கீழே உள்ள வாசலில், நடந்தால் மைதானம் மாதிரியான வளாகம். பல கட்டிடச் சிதறல்கள்… நடுப்பகுதியில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்திற்கு முன்னால், ஏழெட்டுப் பெண்கள். இவர்களின் மத்தியில் ஒரு கதாநாயகி மாதிரி அழகான பெண்… சுற்றி நின்ற எக்ஸ்டிரா பெண்கள் ஒவ்வொருத்தியின் கையிலும் ஒரு ரிஜிஸ்டர்…

இவர்களைத் தாண்டி, அந்தக் கட்டிடத்தில் படியேறினால், அதன் முன் பக்கத்தில் ஒரு சுமாரான அறை… அதில் அதிகாரத் தோரணையில் உள்ள ஒரு வெட வெடத்தான். சுற்றி நின்ற நான்கைந்து பிள்ளைத் தாய்ச்சிகளையும், மூன்று கிழவர்களையும், இரண்டு மூதாட்டிகளையும், மற்ற நோயாளிக் கூட்டத்தில் இருந்து, ஆட்டு மந்தை போல் தனிப்படுத்தி, அவர்களுக்கு, எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட அரசு முத்திரையிட்ட செவ்வக 72 பாலைப்புறா

காகிதங்களைக் கொடுக்காமல், விரட்டிக் கொண்டிருக்கிறான்.

‘ஒங்க சென்டர். இங்கே கிடையாது. துட்டாம்பட்டியில் இருக்குதே அது, அங்கே போங்க”.

“எங்களுக்கு என்ன இழவு தெரியும். ஏதோ வந்துட்டோம்”.

‘வந்தால் பார்த்துடனுமா... போப்போ...’

"அதெப்படி... இங்கே இருந்து மூணு கிலோமீட்டர் தூரத்தில இருக்கிற எங்களுக்கு.... இது கிடையாதுன்னா... பதினைஞ்சி கிலோ மீட்டர்ல இருக்கிற தட்டாம்பட்டி ஆஸ்பத்திரி எப்படி பொருத்தம்...?”

‘இந்த சட்டமெல்லாம் வேண்டாம். செங்கோட்டை கேரளாவுக்கு பக்கத்தில இருக்குது. அதனால புளியரை சென்டருக்கு போக முடியுமா? கல்கத்தா, பங்களாதேசத்துக்கு பக்கத்தில் இருக்குது. அதுக்காக கல்கத்தாக்காரன், பங்களாதேச ஆஸ்பத்திரிக்கு போக முடியுமா...? அப்படித்தான் இதுவும். இடத்தை காலி பண்ணுங்க. இன்றைக்கு நோய் தடுப்புநாள்... ஒங்க கிட்ட பதில் சொல்ல நேரமில்லை’

தனிப்படுத்தப்பட்ட அந்த மனிதக் கூட்டம், என்ன செய்யலாம் என்பது போல் யோசித்தது. எதாவது சத்தம் போட்டால், பக்கத்திலேயே ஒரு போலீஸ் ஸ்டேஷன்....அங்கிருந்து வந்த சிவப்புத் தொப்பிகள், இங்குள்ள இவனிடம் ஏதோ பேசிவிட்டு உள்ளே போனதை, இவர்களே பார்த்தவர்கள்... துட்டாம்பட்டி மையத்துக்கும் போய்ப் பார்த்தவர்கள். அங்கேயும் இதே மாதிரி ஒரு லொள் லொள்... கோணச்சத்திரம் கோணச்சத்திரம் என்று குலைத்தது.

உடம்பு முழுவதையும் கும்பிடு போடுவது போல் குழைந்து நின்ற இந்தக் கூட்டத்தைத் தண்டிப்போனால், ஒரு இடது பக்கம் நீண்ட நெடிய கூடம்; இரு பக்கமும், ஒன்றுக்குப் பின் ஒன்றாக பெஞ்சுகள்; இதனால் நடுப்பக்கம்... தானாகவே வழியானது. பெஞ்சுகளில் சீக்காளிகள்... தாய்க்காரிகள்... பிள்ளைத்தாச்சிகள், இவர்கள் எட்டிப் பார்க்கும் உள்ளறை விசாலமானது... மூன்று மேசைகள்; அவற்றிற்கு பின்னாலும் மூன்று நாற்காலிகள்... முன்னாள் முக்காலிகள்... நாற்காலிகளில் நடுவில் உள்ளதில் டாக்டர் முஸ்தபா....இடது பக்கம் டாக்டர் சந்திரா... மூன்றாவது நாற்காலி காலி... கைனக்காலஜிஸ்ட் எனப்படும் பிரசவ டாக்டர், வேலையில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள், ‘மெட்டர்னிடி விடுமுறைக்கு' போய்விட்டதாகக் கேள்வி. ஆங்காங்கே சுவர்களில் அரசுப் போஸ்டர்கள்; தடுப்பு ஊசி போட்டீங்களா... தட்டம்மை வராமல் பார்த்தீங்களா... என்பது மாதிரியான வண்ணக் சு. சமுத்திரம் 73

கலவைகள்.

முஸ்தபாவும், சந்திராவும், ஒருவருக்கு ஒருவர், இன்று வணக்கம் கூட போட்டுக் கொள்ளவில்லை. நேற்று டாக்டர் சந்திரா வாக்களித்தது போல் பத்து மணிக்கு வராமல் பதினொரு மணிக்கு வந்ததால், முஸ்தபாவின் நெல்லை நிகழ்ச்சி தாமதப்பட்டது. இவ்வளவுக்கும் ஒரு ‘ஸாரி' கூட அவள் போடவில்லை. ஒரு இன்சார்ஜ் டாக்டரிடம் நடந்து கொள்ளும் முறையா இது? அதேசமயம் டாக்டர் சந்திராவுக்கு முஸ்தபாவின் கடுகடுப்பு பெரிதாகத் தெரியவில்லை. அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மனம் முழுதும் கலைவாணியும் மனோகருமே. மனோகர் பேசிய தோரணையைப் பார்த்தால், கலைவாணி கழுத்தில் தாலி கட்டி விடுவது நிச்சயம். ஆனாலும் இந்தக் கல்யாணத்தை தடுத்தாக வேண்டும். மூளை வைத்திருக்கும் இடத்தில், மூர்க்கத்தனத்தை வைத்திருக்கும் இந்த முஸ்தபாவிடம் பேசிப் பலன் இல்லை. வினையே இவர்தான். நேற்று மட்டும், இவர், தனக்குரிய ஒய்வு நாளான ‘ஆப் டேயில்' வந்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாவிட்டால், மனோகரிடம், விஷயத்தை ஆற அமரச் சொல்லி, அவரை சமாதானப்படுத்தி இருக்கலாம். ஆனால் இங்கே வர வேண்டிய அவசரத்தில், மனோகரிடம், கடுமையாய் பேச வேண்டியது ஏற்பட்டது. இந்த முஸ்தபா, தன்னுடைய வேலையை ஒழுங்காய்ப் பார்த்தால், நான் என் சமுகப் பணியை ஒழுங்காய் பார்த்திருக்க முடியும். பல சில்லறைத் தொல்லைகள் - சொன்னால் சிரிக்கக் கூடிய சின்னச் சின்ன ஒழுங்கீனங்கள், பிறத்தியார் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளாய் ஆகின்றன. அதுவும் விஷக் கிருமிகளாய் ஆகிவிடுகின்றன. இதனால்தான், ஒரு பூவைப் பறித்தாலும், அது நட்சத்திர மண்டலத்தில் எதிரொலிக்கும் என்கிறார்களோ - பல்வேறு பிரச்சினைகளின், தலைமறைவான வேர்கள் அறியப்படாது போவதால்தான், பிரச்சினைகளின் அறிகுறிகளை நீக்கப் பார்க்கிறோமே தவிர, அந்த நிசங்களை அல்ல.

டாக்டர். சந்திராவின் சிந்தனை சிறகடித்து பறந்து கொண்டிருந்தது...

டாக்டர் சந்திரா, முஸ்தபாவை உஷ்ணமாகப் பார்த்தாள். அவரோ எதிரே கைக்குழந்தைகளோடு நின்றவர்களை எரிச்சலாய்ப்பார்த்தார். முதலாவதாய் நின்ற பெண்ணிடம் காகிதத்தை வாங்கினார், அப்போதுதான் வந்த அட்டெண்டர் பையனிடம் ஆணையிட்டார்.

‘ஹெல்த் விசிட்டரை வரச்சொல்லப்பா!’ அந்த விசிட்டர் வருவது வரைக்கும், வேறு எந்த நோயாளியையும் பார்க்கப் போவதில்லை என்பதுபோல், டாக்டர் முஸ்தபா, காலி நாற்காலி பக்கம் திரும்பினார். சந்திரா, தன் பக்கத்து முக்காலியில் ஒரு பெரியவரை 74 பாலைப்புறா

உட்காரச் சொல்லி, ஸ்டெதாஸ்கோப்பை எடுத்தாள். இதற்குள், சுகாதாரப் பார்வையாளர், சர்வ சாதாரணமாய் வந்தாள். வெளியே கதாநாயகித் தோரணையில் நின்றாளே அவள்தான். முஸ்தபா, சந்திரா மீதிருந்த கோபத்தை விசிட்டரிடம் காட்டினார். ஆனால் அவள் முகத்தைப் பார்க்க பார்க்க கோபம், தாபமானது.

‘இப்படி மெள்ளமாய் வந்தால் எப்படி சுலேகா? இதோ இந்த ரெண்டு உமனும் வேட்டையன்பட்டிக்காரங்க... அந்த ஏரியா ஹெல்த்ஒர்க்கர் யாரு’.

‘அதுவா... அது...’

‘இப்படி யோசித்து சொல்ற அளவுக்கு வேலை பார்க்கிறே? உருப்படும்...’

"ஒவ்வொருத்தியும்... மாறி மாறி... போயிட்டு இருக்காங்க... சார். வந்து... வந்து... பேர் சட்டுன்னு வர மாட்டங்கு... குதிரை மாதிரி குதித்து குதித்து நடப்பாள்...!”

‘உஷாவா... வேலையில் கழுதையா!’

“கழுதை நல்லா... வேலை பார்க்கும் சார்!”

“தமாஷான விஷயமில்லம்மா இந்த உஷாவோட ஏரியா கேஸுல்லாம் இங்கே எதுக்கு வரணும்?”

ஒரு நோயாளியின் வாய்க்குள் விளக்கடித்துப் பார்த்த டாக்டர் சந்திரா, சாடினாள்.

‘ஒவ்வொரு கிராமத்திலேயும் சம்பந்தப்பட்ட ஹெல்த் ஒர்க்கர் வீடு வீடாய்ப் போய்... குழந்தை பிறப்பை கண்டுபிடித்து, மூன்று நாளைக்குள் ஒரு டோஸ் சொட்டு மருந்து கொடுத்து... அடுத்த மாதமும் அதையே கொடுத்து... ஒன்றரை மாதத்தில் டிபிடி போட்டால்... இந்த அப்பாவிங்க எதுக்காக இங்கே வருவாங்க? ஏம்மா ஒங்களத்தான். ஒங்க குழந்தைக்கு மூணு மாதத்தில மூணு தடவை சொட்டு மருந்து கொடுக்கணும் கொடுத்தாங்களா’.

"இல்லியே... யாரு கொடுக்கணும்?”

சுகாதாரப் பார்வையாளர், ‘நீ என்ன கேட்கிறது’ என்பது மாதிரி, சந்திராவைப் பார்த்துவிட்டு, முஸ்தபாவை பொருட்பட பார்த்தபோது, அவர் தனது கடமையை ஒரு உரிமைபோல் காட்டினார்.

"நான் இன்சார்ஜ் டாக்டர்... நான் பேசிக்கிறேன்... சுலேகா இது சீரியசான விஷயம்..." சு. சமுத்திரம் 75

"இப்போதான் சார் ஞாபகம் வருது... போனவாரம் உஷாக்கிட்டே கேட்டேன்... அந்த ஊரு என்னென்னு சொன்னீங்க...?”

‘வேட்டையன்பட்டி...’

‘வேட்டையன் பட்டிக்குப் போனாளாம்... எல்லா வீடும் டிஎல்லாம், மறுநாள் போனாளாம். அப்பவும் டிஎல்லாம்...’

‘டி.எல்’ என்ற மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர் போல் டாக்டர் முஸ்தபா, எதிரில் நின்ற பெண்களை விரட்டினார்.

"டி.எல். அதுதான் மருந்து கொடுக்கிறவள் வந்த போது... ஒங்க வீட்டு டோர் குளோசாம்... அதான் வீட்டுக்கதவு பூட்டிக்கிடந்ததாம். ஊருக்குப் போங்க. ஹெல்த் ஒர்க்கர் வருவாள்!”

அந்த முன்னாள் வாய் வயிற்றுக்காரிகளில் ஒருத்தி முறையிட்டாள்.

"நாங்கல்லாம் கூலிக்காரிங்க சாமி... எப்போ வருவாங்கன்னு தெரிஞ்சால் காத்திருப்போம்”.

"எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? போங்க வருவாங்க”.

அந்தப் பெண்கள், பிள்ளையும் கையுமாய் தடுமாறித் தவித்துக் கொண்டிருந்த போது, டாக்டர் சந்திராவால் தாளமுடியவில்லை....

“கொஞ்சம் நேரம் நேரம் உக்காருங்க... நான் செக்கப் செய்யறேன்”.

அந்தப் பெண்கள் குழந்தைகளோடு சேர்ந்து, அவளைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். டாக்டர் முஸ்தபாவும், சந்திராவை வாங்கு வாங்கு என்று வாங்குவதற்காக, ஸ்டெதாஸ்கோப்பை தூக்கி, வீசிப் போட்டபோது

யானை, குட்டியை உரசியபடி நடப்பது போல், மோகன்ராம், மனோகரின் கழுத்தில் தோள் உரசவந்து கொண்டிருந்தார். டாக்டர் முஸ்தபா எழுந்து விட்டார். சுலேகா, ஒரு கும்பிடு போட்டுச்சிரித்தாள்.

கரை போட்ட எட்டு முழவேட்டி, அடிவாரத்தில் இரண்டாய்ப் பிரியும்படி சொந்த வீட்டுக்குள் வருவது போல் வந்தவருக்கு, அட்டெண்டர் அவசர அவசரமாய் ஒரு நாற்காலியை இழுத்துக் கொண்டு வந்தார். மோகன்ராம், உட்காருவது வரைக்கும் முஸ்தபா உட்காரவில்லை. சந்திரா... மனோகரை அதிர்ந்து பார்த்தாள். முஸ்தபா அவசரத்தோடு கேட்டார்.

“யாருக்கும் எதுவா? சொல்லுங்க... ஜீப் ரெடியா இருக்குது..." 76 பாலைப்புறா

"இந்த டாக்டர் வேலையே இப்படித்தானோ... எப்போ பார்த்தாலும் ஆபத்து... இல்லன்னா... விபத்து... இது பற்றிதான் ஞாபகம் வரும் போலிருக்கு. சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிறது மாதிரி; நான் சுபகாரியமாய்த்தான் வந்தேன்... இவன் என் மச்சினன்... மெட்ராஸ் என்ஜினியர். இவனுக்கும் என் சித்தி மகளுக்கும் கல்யாணம்...!”

"இவரையும்... கலைவாணியையும் நல்லாவே தெரியும்...”

மோகன்ராம், நீட்டிய அழைப்பிதழை, டாக்டர் முஸ்தபா வாங்கிக் கொண்டார். டாக்டர் சந்திராவுக்கும் ஒன்று கொடுக்கும்படி சைகை செய்தார். உடனே மோகன்ராம் சத்தம் போட்டே பேசினார்.

"இவர்களுக்கு இல்லாத நோட்டிஸா? பேரு சந்திராதானே?... அம்மாகூட, வீட்டில் தனியா இருக்கிறவங்கதானே... அளவுக்கு மேலேயே கேள்விப்பட்டிருக்கேன்.... மனோகர் டாக்டரம்மாவுக்கு ஒன் கையாலயே கொடு... நீங்களும் கண்டிப்பா வந்துடுங்கம்மா... கல்யாணம் நல்லபடியா முடிந்தால், சுடலைமாடனுக்கு கிடா வெட்டுறதாய் நேர்த்திக் கடன். அதனால... நீங்க கல்யாணம் முடிஞ்சதும் வந்துடப்படாது. மறுநாள் பிரியாணி சாப்பிட்டுத்தான் வரணும், சுடலைமாடன் எங்க குலதெய்வம். சக்தி உள்ள மாடன். ஆனானப்பட்ட மலையாள மந்திரவாதி மகளை ராத்திரியோடு ராத்திரியாய் கற்பழிச்சவன்...நிறைமாத கர்ப்பிணியை 'ஊட்டு' வாங்குனவன்... ஏய் மனோகர் டாக்டரம்மா கிட்ட இன்னுமா கொடுக்கல?”

மனோகர், சந்திராவிடம், ஒரு முறைப்போடு, அந்த அழைப்பிதழை நீட்டினான். அப்போதும் அவள், அவன் முகத்தைப் பார்த்து, வேண்டாம் என்பதுபோல் தலையாட்டிக் காட்டிவிட்டு, வாங்கிக்கொண்டாள். மோகன்ராம், ‘டாக்டர்... கொஞ்சம் வெளிய வாரீங்களா!’ என்று முஸ்தபாவை கேட்க, அவர் ‘பார்த்தியா என் செல்வாக்கை’ என்பது மாதிரி டாக்டர் சந்திராவைப் பார்த்துக்கொண்டே வெளியேறினார்.

முன்னால் போனவர்களின் முதுகுகளையே பார்த்த சந்திரா, கையில் திணிக்கப்பட்ட அந்த கவரைப் பார்த்தாள். அதை அங்குமிங்குமாய் கோபத்தோடு கிழித்துவிட்டு, அழைப்பிதழைப் பார்த்தாள். பொன் முலாம் பூசப்பட்டது போன்ற இரட்டைக் கார்டுகள். முதல் பக்கம், இரண்டு கரங்கள் ஒன்றை ஒன்று கோர்த்திருந்தன. இடம், பொருள், தேதி வகையறாக்கள்... இரண்டாவது பக்கம் தமிழ் அழைப்பு... மூன்றாவது பக்கம், தவசிமுத்து மிஸ்டராகவும், அவர் மனைவி மிஸ்ஸஸ் சீதாலட்சுமி தவசிமுத்துவாகவும் மாறிய ஆங்கில அழைப்பிதழ்... நான்காவது பக்கம், நல்வரவை விரும்பும் நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள்; இந்த மோகன்ராம், அவர் மனைவி சு. சமுத்திரம் 77

சகுந்தலா பெயர்கள், இரண்டாவது பக்கத்தில், இரண்டு கோடுகளுக்கு இடையே பிரசுரிக்கப்பட்டு இருந்தன...

சந்திராவுக்கு, கண்ணிர் வந்தது. முக்காலியில் உட்காரப்போன ஒரு நோயாளிப் பெண் கூட, உட்காராமல் மருண்டு நின்றாள். அவள், அப்படி மருள்வது தெரியாமல், சந்திரா மருண்டு நின்றாள். கண் முன்னால், ஒரு அப்பாவிப் பெண் சிதையப் போகிறாள். சிதைத் தீயான அக்னியை வலம் வரப் போகிறாள். அவளை எந்தக்கரம் பற்றிக் கொள்ளப் போகிறதோ... அது ஒரு ஹெச்.ஐ.வி. கரம்... கரம்... கரத்தைப் பிடிக்கவில்லை. எய்ட்ஸ் கிருமிகள், ஒரு நல்ல கரத்தைக் கெளவுகின்றன. கெட்டிமேளத்தோடு...

டாக்டர் சந்திரா, தன் முன்னால் கோபமாய் வந்து நிற்கும் டாக்டர் முஸ்தபாவைப் பார்த்துப் பயந்து போனாள். சில்லரைச் சண்டைகள் வந்ததுண்டு. ஆனாலும் இப்படி பல்லைக் கடித்து, அவரைப் பார்த்ததில்லை.

‘ஒங்க கிட்டே தனியா பேசணும்... இப்பவே பேசணும்... அந்த பக்கம் வாங்க!’

இருவரும், பின் பக்கமாய் உள்ள அறைக்குள் போனார்கள். டாக்டர் முஸ்தபா, அறையை தாளிடாமலே கதவைச் சாத்தினார்... அந்த ஆவேசத்திலும், யாரும் தப்பாக நினைக்கப்படாது என்று நினைத்தவர்போல், ஜன்னல்களை திறந்து வைத்தார். சந்திராவின் முகத்துக்கு முன்னால் விரலாட விட்டு, எதிரி வக்கீல் போல் கேட்டார்.

"ஒங்க மனசுலே என்ன நெனைப்பு... மதர் தெரோஸான்னா... இல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டின்னா...?”

"என் நெனப்ப பற்றி யார் கவலைப்பட்டாங்க? உங்க நெனைப்பு என்ன டாக்டர்?”

"செய்யறதையும், செய்துட்டு குத்தல் பேச்சா? மனோகர் கிட்டயே அவருக்கு ஹெச்.ஐ.வி. இருக்குறதா... யாரைக் கேட்டு சொன்னிங்க?”

‘என் மனசாட்சிய!’

"மோகன்ராம்... ஒங்களை ராத்திரியோட ராத்திரியாய் தூக்கிட்டுப் போகப் போறாராம். அப்படித்தான் அவர் மனசாட்சி சொல்லுதாம்”

"போலீஸ் எதுக்கு இருக்குது...?”

அதுக்கும் மனசாட்சி இருக்குமுன்னு நீங்க நம்புறதே தப்பு. ஏன்னா அவங்க கைதிகளோட வந்து சர்டிபிகேட் கேட்கும்போது, நீங்க 78 பாலைப்புறா

உண்மையைத்தான் எழுதுவேன்னு வீம்பு பிடித்தீங்க, குடிக்காதவனை குடிபோதையில் இருந்ததாய் சர்டிபிகேட் கொடுக்கமாட்டேன்னு கத்துவீங்க. எத்தனை போலீஸ்காரங்களை மூஞ்சில அடிச்சது மாதிரி திருப்பி அனுப்பி இருக்கீங்க? இப்போது அதுதான் அவங்களுக்கு மனசாட்சி. மோகன்ராமிடம்... இன்ன இடத்துக்கு தூக்கிட்டுப் போங்கன்னு இடம் பார்த்துக் கூட கொடுப்பாங்க’

டாக்டர் சந்திரா, அரண்டு போனாள். அர்த்த ராத்திரி கற்பழிப்புக் காட்சியை நினைத்துப் பார்க்கவே பயமாய் இருந்தது. கண்களை மூடிக் கொண்டாள். உப்பு நீர்தான் கொட்டியது. முஸ்தபா இன்னும் எகிறினார்.

"மாவட்ட அலுவலகமே... இன்னும் முறைப்படி ரிப்போர்ட் அனுப்பல. நமக்கு அனுப்ப வேண்டியதும் இல்ல. ஒரு நோயாளி கேட்காமல் எய்ட்ஸ் கிருமி பற்றி நாம் மூச்சுவிடப்படாது... என்பது வாய்மொழி உத்தரவு. ஹெச்.ஐ.வி.க்கு ஒருத்தரை டெஸ்ட் செய்யுறதுக்கு முன்னாலயே, அவரைக் கலந்து ஆலோசிக்கனும் என்கிறது பொதுவிதி. எல்லாவற்றிற்கும் மேலே எய்ட்ஸ் கிருமி ஊடுருவி இருக்கிறது... உறுதிப்படுத்தப்படும் முன்னால், அதுபற்றி பேசப்படாது என்பது மெடிக்கல் தர்மம். இப்படி இருக்கையில் நீங்க எதுக்காக அதிகப் பிரசங்கித்தனமாய்...”

டாக்டர் சந்திரா, அழப் போனாள். வார்த்தைகளை மென்று மென்று விழுங்கி விழுங்கிப் பேசினாள்.

‘சொல்லி இருக்க மாட்டேன்தான். சொல்லி இருக்கக் கூடாதுதான். ஆனால் மனோகருக்கு கல்யாணம் நடக்கப் போறதால...’

"அவனுக்கு கல்யாணம் நடக்குதா... இல்ல கருமாந்திரம் நடக்குதா என்கிறது நமக்கு அப்பால்பட்ட விஷயம். நாம்தான் புத்திசாலி, மேல் அதிகாரிங்க முட்டாளுங்கன்னு முட்டாள்தனமா... நினைக்காதீங்க டாக்டர். இப்படித்தான், ஒங்களை மாதிரி ஒரு அவசரக் குடுக்கை டாக்டர், ஆர்வக் கோளாறினால் ஒரு இளைஞன்கிட்டே, ஹெச்.ஐ.வி. இருக்குறதாய் சொல்லி, இரண்டாவது டெஸ்டுக்கும் ரத்தம் எடுத்திருக்கு... அந்த டெஸ்டுலே, அந்த இளைஞனுக்கு ஹெச்.ஐ.வி. இல்லன்னு தெரியவந்தது. ஆனால், அதுக்குள்ளே அந்த இளைஞன் தற்கொலை செய்துவிட்டான். அவசர குடுக்கை டாக்டர் சஸ்பென்டாயிட்டார். ஏற்கெனவே நம்ம ‘பாஸ்' டாக்டர் சுகுமாருக்கு, ஒங்க மேல நல்ல அபிப்ராயம் இல்ல. நீங்க வெள்ளையன் பட்டி மருத்துவ முகாமுல டாக்டர் அசோகனை தூண்டிவிட்டதாய் நினைக்கிறார். இந்தப் பின்னணியில், நான் மட்டும் ஒரு வரி எழுதிப் போட்டால், சஸ்பென்ட் ஆக மாட்டிங்க... கைதாவீங்க." சு. சமுத்திரம் 79

டாக்டர் முஸ்தபா, மேலும் அவளை அழ வைத்தார்.

"அந்த இளைஞனாவது தற்கொலை பண்ணிக்கிட்டான். ஆனால் இந்த மனோகரோட மச்சான்....ஒங்களை ஒரே சீவாய் சீவப்போறதாய் குதிக்கிறார். எதிரிக்கு, நேரம், இடத்தைச் சொல்லிட்டு, அரிவாளை தூக்குகிற மனிதர். ஒ.கே. ஓ.கே. அழாதிங்க... நீங்க என்னோட சக டாக்டர். ஒரு டாக்டர், இன்னொரு டாக்டரை, அவர் நோயாளியை கொலை செய்தாலும், விட்டுக் கொடுக்கப்படாது என்பது நமது எழுதப்படாத மெடிக்கல் தர்மம். இப்பக் கூட குடி முழுகிடல... விஷயத்தை இதோட விட்டால்... ஒங்களை விட்டு வைக்கிறதாய் மோகன்ராம்... எனக்கு வாக்கு கொடுத்திருக்கார்.ஒங்ககிட்டே, ரெண்டுல ஒன்று கேட்டுட்டு வரச் சொன்னார். நீங்க இனிமேல் மனோகர் கல்யாண விஷயத்தில் தலையிட மாட்டிங்கன்னு சொன்னதாய் சொல்லட்டுமா? நான் வற்புறுத்தல... ஒங்க இஷ்டம்... நீங்க கல்யாணத்திலயும் நாலு பேரைப் போல கலந்துக்குவீங்கன்னும் சொல்லட்டுமா...!”

டாக்டர் சந்திரா, யந்திரமாய் தலையாட்டினாள்... பக்கவாட்டில்; அல்ல முன்னாலும். பின்னாலுமாய்!

டாக்டர் முஸ்தபா, அவளை இளக்காரமாகப் பார்த்துவிட்டு, கதவைத் திறந்தார்.. டாக்டர் சந்திராவுக்காக, குழந்தைகளோடு காத்திருந்த வேட்டையன்பட்டி பெண்களை விரட்டியடித்தபடியே பீடு நடைபோட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_7&oldid=1641693" இலிருந்து மீள்விக்கப்பட்டது