பிணங்கள்/நான்கு பிணங்கள்

நான்கு பிணங்கள்

அவன்

இது என் கதை மட்டுமல்ல, எங்கள் குடும்பக் கதை. எங்கள் என்றால், வேறு யாருமில்லை. என் சித்தப்பா வீட்டுக் கதையும் இதிலே சேர்ந்திருக்கிறது.

என் தந்தையும், சித்தப்பாவும் ஒற்றுமையின் அவதாரச் சின்னங்களாகவே இருந்தனர். என் தாத்தா பரலோகப் பயணம் போகும் வரை. அப்புறம் பாகப் பிரிவினையிலே பலத்த சண்டை. அந்தச் சண்டையின் விளைவு… நல்லதிற்கும், பொல்லதிற்கும் வந்து போகும் சாதாரண உறவு கூட அற்று விட்டது.

முன்னோருக்கு இருந்த வியாதி, பின்னோருக்கும் வருமல்லவா? என் தந்தை காலப் பகை, என் காலத்திலும் தொடர்ந்ததால், நான் என் தந்தை இறந்த போது, என் சித்தப்பாவோ, அல்லது அவருடைய ஒரே மகன், ஆம் என் அண்ணன் இராமனோ, துக்கம் விசாரிக்க என் வீட்டுக்கு வரவே இல்லை.

ஒரு வேளை, பணம் ஒரு கூட்டத்தாருக்கு மட்டும் சொந்தமானதாய் இருக்கலாம். ஆனால், மானமும் ரோசமும்? எப்போதும், எல்லோருக்கும் பொதுவானது. என் சிற்றன்னை இறந்த போது, நானும் என் தாயும் போகவே இல்லை. இப்படியே காலம் வளர, வளர எங்கள் பகையும் வளர்ந்து கொண்டே வந்தது.

இந்த லட்சணத்திலே நான் பொது ஜன சேவையிலே ஈடுபட்டிருந்தேன்; சமூகத்தைச் சீர்திருத்தவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக உள்ள பிற்போக்குச் சக்திகளை முறியடிக்கவும் தீவிரமாக வேலை செய்தேன். வீட்டைச் சீர்திருத்த முடியாதவன், நாட்டைச் சீர்திருத்த முடியுமா? இப்படி என்னைக் கேட்டவர்கள், வீட்டுக்கும் நாட்டுக்குமல்ல, தனக்குத்தானே எதுவும் செய்ய இயலாத ஜம்பக்காரர்கள் என்று எனக்குத் தெரியும். கொசுவை அடிக்க முடிந்தவன்தான், கொடும் புலியைக் கொல்ல முடியும் என்று யாராவது சொல்ல வந்தால்… அவர்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? அப்படித்தான் நான் நினைத்தேன்.

என்னிடத்திலும் ஒரு ஜம்பம் இருக்கத்தான் செய்தது. கல்யாணம் செய்த பின் காதலிப்பதா? அல்லது காதலித்த பின், கல்யாணம் செய்வதா? இந்தக் கேள்விகள் என் உள்ளத்திலே எழுந்த போது, நான் ஒரு சீர்திருத்த வாதியாகையால், காதலித்துத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டினேன். ஆனால், அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் வாழும் இந்த நாட்டிலே, காதல் மணம் சாத்தியமற்றது என்று எனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும், இப்படி ஜம்பச் சபதம் செய்யலாமா? இந்தக் கேள்விக்கு ஒரே பதில்தான், எல்லோரும் ஆற்றோடு நீந்துவதில்லை, சிலர் எதிர் நீச்சலும் அடிக்கிறார்கள்! அந்த ரகத்தைச் சேர்ந்தவன்தான் நான்.

ஒரு நாள், நான் ஒரு ஊருக்குப் பிரசங்கம் செய்வதற்காக ரயிலில் சென்று கொண்டிருந்தேன்; என் எதிரே ஒரு யுவதியும், ஒரு அம்மாளும் உட்கார்ந்திருந்தார்கள். டிக்கெட் பரிசோதகர் வந்த போது, அந்த அம்மாள், பணப்பையையே எங்கோ பறி கொடுத்து விட்டார்கள் என்பது தெரிய வந்தது. எடுத்த டிக்கெட்டும் இல்லை; மீண்டும் எடுக்க கையில் பணமும் இல்லை. என்ன செய்வது? அவர்கள் விழிப்பின் மொழியறிந்து, நானே பணத்தைக் கட்டினேன். வரண்ட நிலத்தில் வாடி வதங்கியிருக்கும் பயிருக்குத் தண்ணீர் பாய்ந்ததும், பயிர் தலை நிமிர்கிறதல்லவா? அதைப் போலவே, அந்த யுவதி என்னை நிமிர்ந்து பார்த்தாள். காதல் என்பது இப்படித்தான் உதயமாகுமோ?

ஆம்! இன்பக் கதிர்களை பரப்பும் ஆதவன், அதிகாலையிலே அடிவானத்திலே, தன்னை உலகுக்கு அறிமுகப் படுத்த, அந்த யுவதியைப் போலத்தான் எட்டிப் பார்க்கிறான். அப்போது, ஆதவன் அழகின் பிம்பமாய் காட்சியளிப்பது போலத்தான், அந்த யுவதி பேரழகியாசுத் தோற்றமளித்தாள். இடையிடையே மேகத்துட் புகுந்து ஜெகத்தோரை ஏமாற்றும் ஜெகச்சோதியனைப் போலத்தான், அந்தச் சுந்தரவதி என்னைப் பார்ப்பதும், குனிந்து கொள்வதுமாக, என்னை ஏங்க வைத்தாள்.

கடவுளே இல்லையென்று நிரூபிக்கும் நாஸ்திகன், திடீரென்று ஒரு நாள் கடவுளை நேரிலே கண்டு விட்டால்… அந்தக் காட்சியை அவன் உயிருள்ள வரையி,லும் மறக்க முடியுமா? அந்த யுவதி என்னை விட்டுப் பிரிந்தாளே தவிர, என் நெஞ்சத்தை விட்டு அகலவே இல்லை.

அப்புறம், அந்தச் சிங்காரியைச் சினிமாவிலே சந்தித்தேன். சினிமா படத்திலே காட்சிக்குக் காட்சி கதை வளருவதைப் போல் எங்கள் காதல் வளர்ந்து வந்தது.

முதன் முதலில் டிக்கெட்டுக்கு பணம் கொடுத்து, மகத்தான உதவி செய்தேனல்லவா? அதற்கு நன்றி செலுத்தவோ, என்னவோ, என்னை ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு அழைத்திருந்தார்கள். “அம்மா! கொஞ்சம் பழசு இருந்தா போடுங்கம்மா!” என்று கேட்கும் பிச்சைக்காரனைப் பார்த்து, “பழையது ஏனப்பா? பாயாசத்தோடு பச்சரிசிச் சாப்பாடே போடுகிறோம். உள்ளே வாப்பா!” என்று உள்ளன்போடு கூப்பிட்டால்… கும்பிடு போட்டுக் கூடவே செல்வானல்லவா? நானும் சென்றேன்.

சில வீடுகளிலே உள்ளே சென்றதும், “வருக! வருக” (Welcome) என்று எழுதப்பட்ட திரை தொங்கும். அந்த வீட்டிலே, திரைக்குப் பதிலாக அந்தத் திருமேனியாளே புன்சிரிப்போடு நின்றாள். என் உள்ளம் பூரித்தது.

உள்ளே போய் உட்கார்ந்தேன். என் எதிரே இருந்த மேஜையில் ஐந்து புத்தகங்கள் இருந்தன. அவைகளைக் கையில் எடுத்தேன். அதிலே நான்கு

பி-3

நான் எழுதியவை. என்னோடு—என் காதலியோடு—என் புத்தகங்கள்—அதிலுள்ள என் போட்டோக்கள்—ஆம்; நான் இருக்கிறேன். புத்தகத்தைப் புரட்டினேன்.

“இந்தக் கதை மிக நன்றாக இருக்குமே?”

“நீங்கள் எழுதியதை நீங்களே படிக்கலாமா? நல்லா இருக்கும்னு சொல்லலாமா?”

இப்படி அந்த யுவதி குத்தலாக என்னைக் கேட்டாள் சிரித்தபடி.

“ஏன்? தாம் பெற்ற பிள்ளையைத் தாமே பார்த்துப் பார்த்து, ரசிப்பதில்லையா? நல்லவர்கள் என்று சொல்லி, மகிழ்வதில்லையா!”

இந்தப் பதிலை நான் சொன்னதும், அவள் வெட்கத்தோடு தலை குனிந்து, மீண்டும் பேச ஆரம்பித்தாள்.“உங்க கதைகளில் மிகவும் பிடித்தமானது எது தெரியுமா?…”

அதற்கு மேல், அவள் பேசவில்லை; வெட்கப்பட்டாள்; திடீரென்று கீழே குனிந்து, மேஜையிலிருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து “இதுதான்” என்று சொல்லி விட்டு, உள்ளே ஓடி விட்டாள்.

அந்தப் புத்தகத்தின் பெயர்: “நான் உன்னைக் காதலிக்கிறேன்.”

பெண்களே புத்திசாலிகள்தான். எனக்கு முன்பெல்லாம் ஜாடை பேசும் பெண்களைக் கண்டால் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால்,, இப்போது? ஒரே மகிழ்ச்சி.

அந்தப் புத்தகத்தைப் புரட்டினேன். “சீதா” என்று எழுதப்பட்டிருந்தது. அவள் பெயர் சீதாவா? ஆம்; முதன்முதலில் உப்பரிகையில், சீதையைக் கண்டு இராமன் காதலித்தது போல், நான் சீதையை ரயிலில் கண்டு காதவித்தேன்.

இனி சுயம்வரம் எப்போது? கல்யாணம் எப்போது? ஆம்; என் கொள்கைப்படி ஒரு பெண்ணைக் காதலித்து விட்டேன். இனி…? பெண் கேட்க என் தாயார் சென்றார்கள். “பையன் கெட்டிக்காரன்; செல்வாக்கான குடும்பம்; பணத்திற்குக் குறைவில்லை; நாங்கள் பெண் தருகிறோம். பெண்ணோட அப்பா வெளியூர் போயிருக்கார். வந்ததும், பேசி முடிக்கலாம்” இந்த பதிலைக் கேட்டு நான் மட்டுமா, சீதாவும் சித்தம் மகிழ்ந்திருப்பாள்.

சீதாவின் தந்தை வர ஒரு மாதம் ஆகும் என்று சொன்னார்கள். எனக்கும், சில வேலைகள் கொழும்பிலே இருந்தது. அதை முடிக்க நான். புறப்பட்டு விட்டேன். அவசர அவசரமாக வேலைகளை முடித்து விட்டு, 28 நாட்களில் திரும்பி வந்தேன்; வண்டியிலே என் வீட்டுக்கு வந்தேன். என் வீட்டுக்கு முன்னால், தெரு பூராவும்—கல்யாணப் பந்தல் போடப்பட்டிருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். என்னைக் கேட்டுக் கொள்ளாமலே, கல்யாண நாள் வைத்து விட்டார்கள் என்று எண்ணியபடி வீட்டுக்குள் சென்றேன்.

“என்னம்மா வீட்டெதிரே பந்தல்?”

“ஒங்க சித்தப்பா மகன் இராமனுக்குக் கல்யாணமாம்!”

“அண்ணனுக்கா? பெண் யாரம்மா?”

“அதான்டா அந்த சீதா!”

என் நிலையை விளக்க நான் என்ன எழுதுவது? துரோகம் செய்து விட்டார்கள்! இடையே நடந்த சூழ்ச்சிக்கு இரையாகி விட்டார்கள். என் சித்தப்பாவுக்கு—என் அண்ணன் இராமனுக்கு, என் குடும்பத்தின் மீது என்னதான் கோபம் இருந்தாலும், இந்தக் கெடுமதி கூடாது. தன் அண்ணண் மகனுக்கு—தன் தம்பிக்கு நல்ல இடத்து சம்பந்தம் கிடைக்கிறது என்று சந்தோஷப்படுவதை விட்டு, சதி செய்து விட்டார்கள் சண்டாளர்கள்.

நான் திட்டுவதால் அவர்கள் திருமணம் நின்றா போகும்? மறுநாளே என் அண்ணன் இராமனுக்கும், சீதாவுக்கும் கல்யாணம் நடந்தேறியது. இனி என் கதி?

நடைப் பிணம்! பேசும் பிணம்! சாகா சடலம்! எனக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. என் மனதை வேறு எதிலாவது செலுத்த வேண்டும். அப்படித்தான் செய்தேன்; இருந்தாலும், வேதனை என்னைக் கொன்றது.

ஒரு நாள் இரவு இரண்டு மணி இருக்கும்; அப்போதும் நான் தூங்கவில்லை; ‘மகிழ்ச்சி’ மாத இதழுக்கு, ஒரு சோகக் கதை எழுதிக் கொண்டிருந்தேன்.

திடீரென்று எதிர் வீட்டிலே மின்சார விளக்கு பிரகாசித்தது. என் சித்தப்பா வீட்டு மாடி பால்கனியிலே, சீதா நின்று கொண்டிருந்தாள்; விளக்கு ஒளியைக் கண்டதும், உள்ளே செல்ல முயற்சித்தாள்; ஆனால் பின்னால்? கணவன் இராமனே வந்தான். வந்தவன் முதலில் பேசவே இல்லை; ‘பட் பட்’ என்று சீதா கன்னத்தில் அறைந்தான்.

“ஏண்டி இங்கே நின்று கொண்டா, உன் காதலனைப் பார்க்கிறாய்?”

இந்த வார்த்தைகள் என் காதில் நன்றாக விழுந்தன. அதற்கப்புறம் பால்கனியில் யாருமே இல்லை. “ஐயோ அடிக்காதே! பாவி…”—இப்படிச் சப்தம்தான் உள்ளே இருந்து வந்தன.

என்ன அநியாயம்? சீதாவுக்கு இந்தக் கதியா நேர வேண்டும்? நிம்மதியற்ற நான், மன அமைதி பெற மறுநாளே கொழும்பு சென்றேன். அங்கும் எனக்கு அமைதி கிடைக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு அப்புறம், சீதாவின் நினைவு தாங்க மாட்டாமல், திரும்பி வந்தேன்.

சீதா ஊரில் இல்லை. அடிபட்ட நாளிலிருந்து, படுத்த படுக்கையாகி விட்டாளாம் சீதா. குற்றாலத்துக்குச் சென்றால், குணமாகுமென்று டாக்டர் சொல்ல குற்றாலத்திலே இருக்கிறாளாம் சீதா. அன்று மாலையே குற்றாலத்திற்குப் புறப்பட்டேன்.

நான்

இரவு 11 மணி இருக்கும். அவன் தென்காசி வந்து சேர்ந்தான். அந்த இரவிலேயே குற்றாலம் செல்ல துடிதுடித்தது அவன் மனம். பஸ்ஸைப் பார்த்தான். பஸ் இல்லை. குதிரை வண்டியோ, மாட்டு வண்டியோ கிடைக்குமா என்று பார்த்தான்; எவனும் வர மறுத்து விட்டான். டாக்ஸியில் செல்லலாம் என்றாலோ, அது இருக்கும் இடமே அவனுக்குத் தெரியவில்லை.

கடைசியில், அவன் எதையுமே லட்சியம் செய்யவில்லை; கால் நடையாகவே சென்றான். அவன் எதற்கும் பயப்படவில்லை. அவனுக்கு ஒரே எண்ணம் சீதாவைக் காண வேண்டுமென்று. அவன் மனமெல்லாம் சீதாவின் உருவத்தின் மேல் இருந்தது. அவன் கால்கள் சென்ற பக்கமே, கடும் வேகமாக நடந்தான். எதிரே ஒரு பிளசர் வேகமாக வந்தது; அவன் அதைக் கண்டும் அஞ்சி விடவில்லை. அவன்தான் புத்தி சுவாதீனம் இல்லாதவனைப் போல் செல்கிறான் என்றால், பிளசர்காரனுக்கு புத்தி வேண்டாமா? வந்த வேகத்தை விட அதிக வேகத்தில் வர ஆரம்பித்தது அந்த பிளசர். மனிதர்களுக்கே இல்லாத கருணை அந்தக் காருக்கா இருக்கப் போகிறது? அடுத்த வினாடி, அவன் மேலே கார் ஏறியது. அப்போதாவது, அந்தக் கார் நின்றதா? இல்லவே இல்லை. முன்னை விட வேகமாக, அந்தக் கார் பறந்து சென்றது. ஒருவனை அநியாயமாக ஏற்றிக் கொன்று விட்டோமே என்று அந்த டிரைவர் நினைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தக் கார் மிக வேகமாகச் சென்றும், ரோட்டின் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லுமா? நகரத்திற்குள்ளேயும் அந்தக் கார் அப்படித்தான் சென்றது. இரவு போலீஸ்காரர்கள் சும்மா இருப்பார்களா? காரை நிறுத்தக் கையைக் காட்டினார்கள்; விசிலடித்தார்கள்! அந்த டிரைவர் அசகாய சூரனாயிற்றே, நிற்பானா? முன்னிலும் வேகமாகச் சென்றான்; போலீஸ் வண்டி அந்த பிளசரை துரத்த ஆரம்பித்தது. நளமகாராஜா தேர், கண்ணை மூடி விழிப்பதற்குள் எத்தனையோ காத தூரம் செல்லுமாமே, அதை விட வேகமாக இரு வண்டிகளும் சென்றன. முன்னால் சென்ற பிளசர் ஒரு திருப்பத்தில் குடை சாய்ந்தது.

டிரைவர் கோர்ட்டிலே நிறுத்தப்பட்டான். அவன் மீது மூன்று கொலைக் குற்றங்கள் சாட்டப்பட்டன. அதை மறுத்து, அவன் பேச ஆரம்பித்தான்.

“நான் சீதாவின் அடுத்த வீட்டுக்காரன்; அவளை உண்மையில் காதலித்தேன்; அவள் என்னைக் காதலிக்கவில்லை என்று தெரிந்தும், அவளை அடைய முயற்சித்தேன். இது குற்றம் என்பீர்கள். கிடையவே கிடையாது. தன் கட்சிக்காரன் குற்றவாளி என்று தெரிந்து கொண்ட வக்கீல் கூட, அவன் நிரபராதி என்று வாதாடி, வெற்றி பெற நினைப்பதில்லையா? அதைப் போலதான் நான். என் எண்ணத்திற்குக் குறுக்கே முதலில் ரோட்டிலே செத்தானே, அவன் தோன்றினான். அப்புறம் சீதா, இராமனுக்கு மனைவியாகி விட்டாள். காதல் வேகத்தில் இராமன் வீட்டு கார் டிரைவராகச் சேர்ந்தேன்; நோய் வாய்ப்பட்ட சீதாவை, குற்றாலத்திற்குக் கொண்டு வந்தோம்; ஆனால், அவள் அங்கேயே மாண்டு விட்டாள்.

சீதாவின் செத்த பிணத்தைக் காரில் வைத்துக் கொண்டு, நானும், இராமனும் வந்து கொண்டிருந்தோம். எதிரே அவன் வந்தான்; இராமனுக்கு ஒரே ஆத்திரம். இவனால்தான் என் மனைவி செத்தாள்; இவன் மீது காரை ஓட்டு என்று கூறினான். எனக்கும் பழைய கோபம் இருக்கிறதல்லவா? காரை ஏற்றி, அவனைக் கொன்றேன்; கடும் வேகத்தில் சென்றேன்; கார் கவிழ்ந்தது; காரில் இருந்த இராமனும் மாண்டான். நியாயமாக நான் செய்தது ஒரே ஒரு கொலைதான்.”

கொலை ஒன்றானால் என்ன, இரண்டானால் என்ன, அந்த டிரைவர் கொலைகாரன்! காதல் பற்ற வைத்த தீ, உள்ளத்திலே மூண்ட புகை இரண்டும் சேர்ந்து எரிய, எரிய… குற்றாலத்திலே சீதாவின் பிணம்! நடு ரோட்டிலே அவன் பிணம்! கார் கவிழ்ந்த காட்டிலே இராமன் பிணம்! தூக்கு மரத்திலே டிரைவர் பிணம்! ஆக நான்கு பிணங்கள்!