பிணங்கள்/மூன்று பிணங்கள்

மூன்று பிணங்கள்
பத்மா

நான் பெண்; பெயர் பத்மா; பத்தாவது வரை படித்தவள்; பாடுபடாமல் வாழும் பங்களாவாசி; நான் பருவமடைந்து, மூன்று வருடங்கள் முழுசாகப் பறந்து விட்டன.

என் கழுத்திலே தாலி கட்டத் தகுந்த வாலிபனைத் தேடிக் கொண்டிருந்தார் என் தந்தை. “நீ, நான்” என்று போட்டி போட்டு எனக்குப் பதியாக வர பலர் குதித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் யாரையுமே பிடிக்கவில்லை. எனக்கல்ல, என் அப்பாவுக்கு, நல்ல வரனுக்காக நாலா பக்கமும் சொல்லியிருந்தார் என் தந்தை.

என் தந்தை ஒரு விசித்திர மனிதர்; அவரை தேசியவாதி என்று சொல்லுவார்கள். ஆனால், நானறிய தேசத்திற்காக அவர் எதையுமே செய்ததில்லை. பட்டம், பதவி எல்லாம் “அடிமைச் சின்னம்” என்று இப்போது ஆர்ப்பரிக்கிறார். ஆனால், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, “ராவ் சாஹிப்” பட்டம் பெற, டில்லிக்கு அடிக்கடி போய் வந்திருக்கிறார். இப்போது கூட எம்.எல். ஏ. ஆக வேண்டுமென்று அவருக்கு உள்ளூர ஆசை. வைதீகபுரிக்கு அதிபராக ஒருவர் உண்டு என்றால், அது என் தந்தையாகத்தான் இருக்கும்.

வாசலோரத்திற்கு நான் வந்து விட்டால், சாஸ்திரம் போச்சு, சம்பிரதாயம் போச்சு என்று சண்டப்பிரசண்டம் செய்வார். இப்படிப்பட்ட அப்பா பார்க்கிற பர்த்தா எப்படி இருப்பார்? உட்கார் என்றால், உடனே உட்காருகிற “அம்மா பிள்ளை”யாகத்தான் என் அகமுடையான் இருப்பான்! இதில் சந்தேகமில்லை, எப்படியிருந்தால் என்ன? கல்லானாலும் கணவன்! கட்டி மாரடிக்க வேண்டியதுதான்.

ஆனால், அந்தக் காலம் எப்போது? அது வரைக்கும் நான் அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதானா? நாலு சுவர்களுக்குள் அடங்கிய பங்களாதான் நான் பவனி வரும் உலகமா? எனக்கு நேரம் போவதே சிரமமாய் இருந்தது. தினசரி பல ஊர்களைப் பார்ப்பேன்; நேரில் அல்ல, பத்திரிகை வாயிலாக. என்னைப் போல் ஏங்கிக் கிடக்கும் மோகனாங்கிகளையும், கல்யாணமான கனகுஷி காதலர்களையும் என் வீட்டில் இருந்து கொண்டே சந்தித்துப் பேசுவேன்; பலர் எழுதிய ஏட்டின் மூலம், இப்படித்தான் நாட்களைக் கடத்தி வருவேன்.

ஆனால், சோளம் விளையும் சீசனிலே எனக்குப் பொழுது போவதே தெரியாது. எங்கள் பங்களாவின் வேலியையொட்டி, சோளம் ஒரு ஆள் உயரத்திற்கு ஓங்கி வளர்ந்து விடும். சோளக்காடு என்ற பெயரையும் பெற்று விடும். சோளக் கதிர் தின்பதிலே, எனக்கு ஒரே ஆசை. என் வீட்டை அடுத்திருந்த சோளக்காட்டிற்குள் புகுந்து, சோளக் கதிர்களை நான் வேட்டையாட யாருமே தடை சொன்னதில்லை. நான் தின்று தீர்த்த கதிர்களுக்குக் கணக்கு போட்டுப் பார்த்தால், காட்டுக்காரனுக்கு நஷ்டமாகத்தான் இருக்கும். அப்பா காரின் “ஆரன்” சப்தம் கேட்டால், அடுத்த வினாடி வீட்டுக்குள்ளே இருப்பேன்.

அந்த வருஷத்திலே, சோளக்காடு மிகவும் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. என் வீட்டுப் பக்கத்தில் இருந்த கதிர்களை யெல்லாம் காலி செய்து விட்டேன். இரு ஓரங்களிலும் உள்ள கதி்ர்களை எடுக்கச் சென்றால்… ரோட்டில் போவோர், வருவோருக்கு காட்டில் நிற்பவரை நிச்சயம் தெரிந்து விடும். நடுக்காட்டிற்குப் போய் விட்டால், யாரும் பார்த்து விட முடியாது. ஆனால், பாம்புகள் நடமாட்டம் இருக்குமோ என்ற பயம் எனக்கிருந்தது.

கதிர் மேல் காதல் கொண்ட நான், எதற்கும் அஞ்சாமல் நடுக்காட்டை நோக்கி நடந்தேன். நான் உள்ளே செல்லச் செல்ல, “சலசல” என்ற சப்தம் கேட்டது. பாம்பு வரும் போது, அப்படித்தான் சப்தம் வருமென்று கேள்விப்பட்டிருந்தேன். எனக்கு ஒரே திகிலாய் இருந்தது; திரும்பி விடலாம் என்று நினைத்தேன். ஆனால், “நில்” என்ற சப்தம் கேட்டது; திடுக்கிட்டேன். காட்டுக்காரனாக இருக்குமோ என்று கலங்கினேன். ஆனால்…

என் எதிரே ஒரு ஆணழகன் நின்றான். அவன் மிகவும் சோர்ந்து போய் காட்சியளித்தான். ஆனால், அவன் உறுதியான உள்ளங்கொண்டவன் என்பதை அவன் தோற்றம் விளக்கியது. அவன் வாட்டத்தோடு காணப்பட்டான்; நான் பதட்டத்தோடு நின்றேன். “யார் நீ?” என்று தடுமாற்றத்தோடு கேட்டான். “பக்கத்து பங்களா” என்று பதறிக் கொண்டே சொன்னேன். “குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுப்பாயா?” என்று தயவாகக் கேட்டான். அதை என்னால் தட்டிப் பேச முடியவில்லை.

“தண்ணீர் கொண்டு போகவா? அப்பா, அம்மா பார்த்தால்…? வேண்டாம்… வேண்டாமா? பாவம் அவன் தாகத்தால் தவிக்கிறான். ஆம்! கொண்டுதான் போக வேண்டும்.”

இந்த மனப்போராட்டத்திற்குப் பின், துணிந்து தண்ணீர் கொண்டு சென்றேன். தாகம் தீர குடித்தான். “அம்மா! இந்த உதவியை உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன்”—இப்படி எனக்கு நன்றி செலுத்தினான்.

அவன் தண்ணீர் குடித்த பின், அவன் முகத்திலே ஏற்பட்ட தேஜஸ் சொல்லி முடியாது. அவ்வளவு அழகாக இருந்தான். அவனைப் பார்த்தால், குடியானவனைப் போல் தெரியவில்லை.காட்டுக்குச் சொந்தக்கார மிட்டாதாராகவும் தெரியவில்லை; நான் அறிந்த வரை, வேற்றூர்க்காரனாகவே காணப்பட்டான். அவன் கையிலே லெனின், கார்ல் மார்க்ஸ் ஆகிய புத்தகங்கள் இருந்தன. அவன் யார்? சோளக் காட்டு நடுவே ஏன் வந்தான்?

தியாகமூர்த்தி

உன் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன். நான் வெளியூர்க்காரன். நல்ல குடும்பத்திலே பிறந்தவன்தான். என் பெயர் தியாகமூர்த்தி.

என்னைப் பார்த்தால், பயங்கரமாகத் தெரிகிறதா? அதெல்லாம் இல்லையென்று சொல்லுவாய். ஆனால், எனக்குப் பெயர் பயங்கரவாதி; புரட்சிக்காரன்; அரசாங்கத்தைக் கவிழ்ப்பவன். நான் அப்படியா தோற்றமளிக்கிறேன்?

நான் ஒரு பிரசங்கி; இரு முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறேன்; ஜாதி பேதம், மத வாதம், முதலாளி, தொழிலாளி வேற்றுமை ஒழிய வேண்டும் என்பது என் கொள்கை. இதற்காகத்தான் பாடுட்டேன்.

இந்த ஜனநாயக நாட்டிலே என்னைச் சேர்ந்தவர்களெல்லாம் சட்ட விரோத கூட்டமாம்; தண்டனைக்குரியவர்களாம். என்னைப் போல இன்னும் பலர் இப்படித்தான் தலை மறைவாய் இருக்கிறார்கள். எங்களைத் தேடி அலைகிறார்கள் போலீஸ் புலிகள். சிக்கினால், துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக வேண்டும். அல்லது ஆயுள் பூராவும் சிறையிலே இருக்க வேண்டும்.

என் மீது இருக்கிற குற்றம் கொஞ்சமல்ல. யார், யாரையோ கொல்ல முயன்றதாக சதி வழக்கு; ஓடும் ரயிலைக் கவிழ்க்க முயற்சித்தேன் என்ற குற்றச்சாட்டு. இப்படி எத்தனையோ என் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. நல்ல காலம் வரும் வரை, நாட்டுக்குள்ளே நான் போக முடியாது. அதனால்தான், இந்த சோளக் காட்டுக்குள்ளே பதுங்கி இருக்கிறேன்.

பகல் பூராவும் பட்டினிதான்; இரவு நேரத்தில் போலீஸ் பாரா அதிகமில்லாதிருந்தால், வெளியே சென்று ஏதாவது சாப்பிட்டுத் திரும்புவேன். மற்றபடி இந்த சோளக் கதிர்கள்தான் எனது ஆகாரம்.

இன்று எனக்குத் தாகம் அதிகமாக இருந்தது; நல்ல நேரத்தில் நீ வந்தாய்; நீ மாத்திரம் தண்ணீர் தந்திராவிட்டால், இங்கேயே பிணமாகியிருப்பேன். நீ செய்தது சிறு உதவி என்றாலும், என் உயிரைக் காப்பாற்றிய உயர்ந்த உதவி, உன்னை என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன்.

பத்மா

எப்படி மறக்க முடியும்? தியாகமூர்த்தியின் சோகக் கதை என் உள்ளத்தை உருக்கி விட்டது. ஆட்சி பீடத்திலே அமர்ந்திருப்பவர்களுக்கு எதிர் கட்சி என்றால், இவ்வளவு பயம் எதற்காக? நிரபராதிகள் மீது வாரண்டுகள் பிறப்பிப்பது ஏன்? தியாகமூர்த்தியின் மீது எனக்குக் கருணை பிறந்தது போல், அவர் கட்சியின் மீது மக்களுக்குக் கருணை இருப்பதிலே ஆச்சரியம் என்ன?

பச்சைத் தண்ணீர் கொடுக்கத் தயங்கிய நான், தினசரி மூன்று வேளை அவருக்குப் பலகாரம், காப்பியிலிருந்து சாப்பாடு வரை கொடுத்து வந்தேன். என் வீட்டில் யாருக்குமே தெரியாது. திருட்டுத்தனமாகத்தான் அந்த தியாகத்தைச் செய்து வந்தேன். அவர் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னார். ஆனால், பாழும் மனம் ஏனோ கேட்கவில்லை. இப்பொழுதெல்லாம் எனக்குப் பொழுது போவதே தெரியவில்லை. அவர் பேச்சு எனக்கு ருசியாக இருந்தது.

ஒரு நாள், ஒரு பானை தண்ணீர் கொண்டு சென்று, அவரைக் குளிக்க வைத்தேன்; அழுக்கேறிய அவர் உடுப்புகளை எடுத்து விட்டு, என் தந்தையின் நல்ல உடுப்புகளைப் போடச் செய்தேன்.

ஞாயிற்றுக்கிழமைகளில், அவரைச் சந்திக்க முடியாதபடி என் தந்தை வீட்டிலேயே இருப்பார்; என் தந்தை மீது எனக்குக் கோபம், கோபமாய் வரும். அவர் பட்டினி கிடப்பாரே என்று என் மனம் பதறும். அவரைப் பார்க்க முடியவில்லையே என்று பரிதவிப்பேன்,

எனக்கு ஏன் இந்த உணர்ச்சி எல்லாம்? அவர் யார்? அவருக்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

இவைகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், என் மனதில் ஏதோ ஒரு உணர்ச்சி அவருக்காக உயிரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருந்தது.

ஒரு நாள் அவரிடம் துணிந்து என் காதலை வெளியிட்டேன்; ஆனால், அவர் மிகவும் பயந்து விட்டார். வேண்டாம் என்றார். நடக்காத காரியத்தில், நாட்டம் வைக்காதே என்று என்னென்னவோ சொன்னார். ஆனால், நான் விடவில்லை.

சோளக்காட்டு காதலர்களாக நாங்கள் மாறினோம். அவர் ஸ்பரிசத்திலே என் உடம்பே பூரித்தது. உலகத்தில் உள்ள இன்பத்தை எல்லாம் சோளக் காட்டிலே கண்டேன். ஆனால், ஒரு நாள் அவரைக் காணவில்லை; படாத பாடுபட்டேன்; ஒரு நாள் காடு பூராவும் தேடினேன்; அவரைக் காணவேயில்லை! திரும்பி வரவேயில்லை. இரவெல்லாம் கண்ணீர் விட்டு அழுவேன்.

அன்று வந்த தினசரி பேப்பரைப் பார்த்து ‘ஓ’வென அழுது விட்டேன். ஏதோ ரகசியக் கூட்டம் போட்டுப் பேசும் போது, தியாகமூர்த்தியும் மற்றும் சில பயங்கரவாதிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக செய்தி இருந்தது.

இனி அவர் முடிவு என்ன? என் கதி என்ன? இதை நினைக்க, நினைக்க வேதனையாக இருந்தது. அவர் தூக்குமரத்திலே தொங்கப் போகிறார்; நான் இன்னொருவனின் மனைவியாகி, ஏங்கப் போகிறேன். விதி என்பது இந்த ரூபத்தில்தான் வேலை செய்கிறது. இதற்கு விதி விலக்கே இருப்பது இல்லை.

என் தாய் மாமன் படிப்போ, பணமோ இல்லாதவன்தான்; ஆனால், தேசபக்தன் என்று பெயரெடுத்தவன்; மந்திரிகளிலே பலரை நன்கு தெரிந்தவன்; என் தந்தையின் பதவி ஆசைக்குப் பக்கபலமாக இருந்தவன். என் தந்தையின் கனவு நிறைவேற, அவனைக் கருவியாகப் பயன்படுத்தினார்; அவனோ, என்னை அணைக்கத் திட்டம் போட்டான்; அதற்கு என் தந்தையும் உ.டன்பட்டார்.

பேதை நான் என்ன செய்ய முடியும்? தியாகமூர்த்தி வருவார், வருவார் என்று ஒரு வருடத்தைப் போக்கினேன். அவர் வரவேயில்லை. என் கல்யாணத்திற்கு நாளும் நிச்சயிக்கப்பட்டது. என் எண்ணத்தை யாருமே வட்சியம் செய்யவில்லை. மேள தாளத்தோடு தாலி கட்ட என் தாய் மாமன் வந்தான்; புரோகிதர் மந்திரம் சொல்லக் கல்யாணம் முடிந்தது; காதலுக்கு வழக்கமான முடிவும் ஏற்பட்டு விட்டது.

இனி நான் என்ன செய்ய முடியும்? புதுக் கணவனுக்கு விளையாடும் பதுமையாக நான் மாற வேண்டும். அதற்கு அஸ்திவாரமாக சாந்தி முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டது. என் வீட்டில்தான் அந்த வைபவம் ஆரம்பிக்க முடிவு செய்திருந்தார்கள்.

அன்று எனக்கு ஒரே தலைவலி. மனக் கவலையால் மயங்கியே கிடந்தேன்; அப்படியிருந்தும், நாளும் நட்சத்திரமும் நன்றாக இருந்ததால், பெயரளவுக்கு சாந்தி முகூர்த்தம் நடத்துவதென தீர்மானித்தார்கள். நான் ஒரு கட்டிலில் கிடந்தேன்; என் புது பர்த்தா இன்னொரு கட்டிலிலே கிடந்தார். அந்த இரவு எனக்கு ஏனோ பயங்கரமாக இருந்தது. பழைய நினைவுகளெல்லாம் என் கண் முன்னே தோன்றி, என்னை சித்திரவதை செய்தது.

என் காதலன் தியாகமூர்த்தியை நாலைந்து அதிகாரிகள் கையிலே விலங்கு போட்டு நடத்திச் சென்றார்கள். தூக்கு மேடையிலே நிறுத்தினார்கள். உனக்கு என்ன வேண்டும் என்று என் காதலரைக் கேட்டார்கள். “என் காதலி பத்மாவிடம் நான் செத்து விட்டதாக அறிவித்து விடுங்கள்” என்று அவர் சொன்னார். ‘ஐயோ’ என்று அலறினேனோ, இல்லையோ எனக்குத் தெரியாது. விழித்துக் கொண்டேன். என்னால் அங்கு இருக்க முடியவில்லை. என் காதலரைப் பார்க்கா விட்டாலும், நாங்கள் கொஞ்சிக் குலாவிய அந்த இடத்தையாவது பார்க்க வேண்டும் என்று என் மனம் துடித்தது. அறையை விட்டு அந்த இரவில் வெளியேறினேன்.

சோளக்காட்டை நோக்கி ஓடினேன். பாம்பு இருந்தால், கடிக்கட்டும் என்ற துணிச்சலோடு நடுக்காட்டை நோக்கி ஓடினேன். நான் கண்டது கனவா? என்னையே என்னால் நம்ப முடியவில்லை. என் காதலர் தியாகமூர்த்தி கண்ணீர் விட்டபடி உட்கார்ந்திருந்தார்.

“ஆ நீங்களா? இன்று வந்தவர் நேற்று வந்திருக்கக் கூடாதா?” என்று கதறி அழுது விட்டேன். “நேற்றுத்தான் ஜெயிலை விட்டுத் தப்பினேன். இன்று வந்து சேர்ந்தேன். பரவாயில்லை. நடந்ததை மறந்து விடு; உன் கணவனோடு வாழ்க்கை நடத்து” என்று அவர் எனக்கு ஆறுதல் சொன்னார். ஆனால், அப்போது யாரோ ஒருவன் பின்புறம் வந்து, காலால் தலையில் ஓங்கி மிதித்தான். நான் கீழே விழுந்தேன்.

சோளக்காடு

அந்த முரடன் மிதிக்கும் போது, பூங்கொடியாள் கீழே விழாமல் என்ன செய்ய முடியும்! அதே முரடன் தியாகமூர்த்தியையும் எட்டி மிதிக்கச் சென்றான். ஆனால், மூர்த்தி என்ன கோழையா? முரடனும், மூர்த்தியும் கட்டிப் புரண்டார்கள்; இரத்த நீரை என் காட்டிலே பாய்ச்சினார்கள். அப்புறம் அமைதி நிலவியது.

ஆதவன் உதித்தான்; என்னை அறுவடை செய்ய, என் சொந்தக்காரன் ஆட்களோடு வந்து விட்டான். சோளக்காடு என்று பெயர் பெற்ற என்னைக் கட்டாந்தரையாக ஆக்கும் முன், அவன் கண்டெடுத்தது மூன்று பிணங்கள்.