பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்

12
காலிழந்தான்


"நானோர் குருடன்! இடறி விழுந்தேன்"—என்று அவன் சொன்ன போது, என்னால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. பிறர் படும் துன்பம் கண்டு மனம் இளகாத போக்கினன் அல்ல நான். எவர்க்கேனும் இடர் ஏதேனும் ஏற்படும் போது, ஏளனம் செய்யும் வழக்கமும் கொண்டவன் அல்ல. என்றாலும் என்னால், அவன் பேச்சைக் கேட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அவனை நான் அதற்கு முன்பு கண்டதில்லை. ஊருக்குப் புதியவன் போலிருக்கிறது; உருக்குலைந்த நிலை; அழுக்கான ஆடை; மிரட்சி காட்டும் பார்வை!

ரயிலடியில் அன்று நிரம்பக் கூட்டம். என் நண்பனை வரவேற்கக் கூடிற்று; நானும் அதற்காகவே சென்றேன். என் நண்பன் என்னை எதிர்பார்த்திருப்பானா என்பது எனக்குத் தெரியாது. வரவேற்பு வைபவமும், நகர மண்டபத்தில் அவன் சொற்பொழிவும் ஏற்பாடாகி இருந்தது. விளம்பரத்தைக் கண்டுதான் நான் சென்றேன்—அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டானா என்பது கூட எனக்குத் தெரியாது—பார்த்ததும் எனக்கு அவனை நன்றாக அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. போர்க்களத்திலே உழன்றவன்—ஆனால் முகத்திலே இருந்த அந்தப் பழைய பொலிவு குறையவில்லை.

பார்த்து மகிழ்ந்தேன்—பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்தவர்கள் என் நண்பனை அவன் மனைவியுடன் மோட்டாரில் அழைத்துச் சென்றனர். பெண் அடக்கமும் அழகும் ஒருசேரக் காணப்பட்டாள்.

படம் எடுக்க வந்திருந்தோரும், பத்திரிகை நிருபர்களும் பேசிச் சிரித்தபடி நடந்தனர்.

"போர்க்களத்திலே மெத்தத் துணிச்சலோடு போரிட்டவன்."

"சுரங்க வெடி இருப்பது தெரிந்தது. அதனை அகற்றிட முனைந்தான்"

"அவன் வீரத்தினால் தான் பலர் உயிர் பிழைத்தனர்" என் நண்பனைப் பற்றி இவ்விதம் அவர்கள் பாராட்டிப் பேசியது கேட்கக் கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

அவன் பள்ளிகூடத்தில் படிக்கும் போதே துணிச்சலுள்ளவன், நன்றாக நினைவிலிருக்கிறது; ஒருநாள் முரட்டுக் காளையொன்று எங்கள் ஆசிரியரைத் துரத்திற்று—அலறி ஓடினார்—நாங்களும் ஓடினோம்—துணிந்து சென்று, அதன் வாலைப் பிடித்து இழுத்து, அதனைத் தன் பக்கம் பாயும் படிச் செய்தவன் என் நண்பன் கண்ணப்பன் தான்—அவனைக் காளை பலமாகத் தாக்கி விட்டது.

"நான் பரவாயில்லை; வாலிபன் வலி எடுத்தால் கூடத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அவர் பாபம் ஐம்பது வயதுக்கு மேல் ஆனவர்; வலிவற்றவர்; அவரை அந்த முரட்டுக் காளை முட்டித் தள்ளிக் கீழே உருட்டி விட்டால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விடும்—அவரால் தாள முடியாது." என்று சொன்னவன் கண்ணப்பன்.

பள்ளிக்கூடத்தில் "போக்கிரி" என்று பெயரெடுத்த மாணவர்கள் சிலர் உண்டு; அவர்கள் யாருக்கும் இந்தத் துணிச்சல் வந்ததில்லை; குனிந்த தலை நிமிராதவன் என்று பெயரெடுத்திருந்த கண்ணப்பனுக்குத் தான் வந்தது அந்த வீரம்.

அதே வீர உணர்ச்சியைத் தான், போர்க்களத்திலே காட்டி இருக்கிறான், பாராட்டுக்கு உரியவன்; இதிலென்ன சந்தேகம்?

இதை எண்ணிக் கொண்டு வழி நடந்தேன்—பாதை ஓரமாகச் சென்று கொண்டிருந்தவன், கீழே விழப்போனான், ஏதோ இடறி—ஏதோ நினைவாக நடந்து சென்று கொண்டிருந்தான் போலிருக்கிறது. அவன் கீழே விழவிடாமல் நான் தான் காப்பாற்றினேன்—இல்லையென்றால் பாதையை ஒட்டி இருந்த பத்தடி பள்ளத்திலே விழுந்து விட்டிருப்பான். அப்போது தான் அவன், "நானோர் குருடன்; இடறி விழுந்தேன்," என்று முணுமுணுத்தான்; எனக்குச் சிரிப்பு வந்தது, அடக்க முடியாதபடி; ஏனெனில் நானோர் குருடன் என்று சொன்னானே, அவன் நொண்டி—ஒரு காலிலே ஒரு பகுதி முழங்கால் அளவுக்குத் துண்டிக்கப்பட்டுப் போய் விட்டிருந்தது—தடி ஊன்றிக் கொண்டு தத்தித் தத்தித்தான் நடக்க முடிந்தது.

கண்களிலே ஒரு பழுதும் இல்லை. கால்தான் நொண்டி. ஆனால் அவன் நானோர் குருடன் என்றல்லவா சொன்னான்—அதனால் எனக்குச் சிரிப்பு வந்தது, சிரித்துவிட்டேன்—ஆனால் அடுத்த கணமே மனம் என்னமோ போலாகி விட்டது. பாபம், என்ன எண்ணிக் கொள்கிறானோ அவன் என்று. எனவே அவனிடம், மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

"ஓஹோ! நொண்டி நான், அதனால் இடறி விழுந்தேன் என்று சொல்லியிருக்க வேண்டும்; குருடன் என்று சொல்லிக் கொண்டது வேடிக்கையாக இருந்தது என்பதற்காகச் சிரித்தீர்களா! பரவாயில்லை. காலிழந்தவன் நான்; அது ஊருக்கும் உலகுக்கும் தெரிகிறது. ஆனால் நான் கண்ணிழந்தவன் என்பது உங்களுக்குக் கூடத் தெரியாது. எனக்கே இப்போது ஒரு அரை மணி நேரத்துக்கு முன்பு தான் தெரிந்தது, நான் ஒரு குருடன் என்பது."

நொண்டி இது போலப் பேசினான்; கண்களை உன்னிப்பாகக் கவனித்தேன்—பழுதுபட்டில்லை. ஒளி விட்டுக் கொண்டிருக்கிறது. குருடன் அல்ல. ஆனால் தன்னைக் குருடன் என்று திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்கிறானே, இது என்ன விந்தை? புரியவில்லை. தத்தித்தத்தி அவன் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

"கோபிக்கக் கூடாது; கண்கள் சரியாக இருப்பதாகத் தான் தெரிகிறது. ஏன் குருடு என்று உங்களை நீங்களே குறை கூறிக் கொள்கிறீர்கள்." என்று நான் கேட்டேன், மரியாதை கலந்த குரலில்.

"ஒரு சமயம், எனக்குப் புத்திக் கோளாறு என்று எண்ணுகிறீர்களோ, என்னவோ! என் பேச்சும் போக்கும் அப்படித் தான் நினைக்கச் சொல்லும்," என்று அவன் கூறினான். ஏதோ பெரும்பாரம் நெஞ்சிலே சுமந்து கொண்டிருக்கிறான்; அதனாலே தான் தன்னை வெறுத்துப் பேசுகிறான் என்று புரிந்தது; அவனிடம் எனக்கு மேலும் இரக்கம் ஏற்பட்டது.

அரை மணிக்கு முன்புதான்....

நானோர் குருடன் என்பது எனக்கே புரிந்தது என்றேன், விளங்கி இருக்காது. என் கதையைக் கேட்டாலொழிய அது விளங்காது! ஆனால், ஏதோ வேலையாகச் சொல்லக் கூடும். உனக்குத் தொல்லை தரலாமா? என் நெஞ்சோடு இருந்து போகட்டும் அந்தக் கதை..."

"எனக்கொன்றும் வேலை இல்லை. இன்று விடுமுறை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நேரே நகர மண்டபம்தான் போகிறேன். இப்போது வரவேற்பு கொடுத்தார்களல்லவா, லெப்டினன்ட் கண்ணப்பாவுக்கு—அவருடைய சொற்பொழிவு, அங்கே..."

"அப்படியா, கண்ணப்பா! வரவேற்புக்காகத்தான் வந்தீர்களா..என்னைப் போலவே! உங்களுக்கு கண்ணப்பாவை..

"தெரியுமா என்கிறீர்களா! நாங்கள் இருவரும் ஒரே பள்ளிக்கூடத்திலே ஒன்றாகப் படித்தவர்கள், நண்பர்கள், பழைய நண்பர்கள்...."

"அப்படியா... அப்படியானால், என் கதையை உங்களிடம் கூறுவது அவ்வளவு சரியாக இருக்காது..ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்! ஆசாமிக்கு நிச்சயமாக புத்தி கோளாறு தான் என்னுதானே! பயப்படாதீர்கள்—எனக்கொன்றும் பைத்தியமில்லை; புத்திக் கோளாறு இல்லை; புத்தி இல்லை; அவ்வளவு தான். அதிலும் பொதுவாக, பெண்களைப் புரிந்து கொள்கிற புத்தி இல்லை—நம் நாட்டுப் பெண்குலத்தின் குணத்தைத் தெரிந்துகொள்ளும் புத்தி இல்லை. அது இருக்கட்டும், லெப்டினன்ட் கண்ணப்பாவிடம் இப்போது பேசினீர்களா...?"

"இல்லை, இல்லை. நான் தொலைவிலே இருந்து தான் பார்த்தேன். அவனுக்கு என்னை அடையாளம் தெரிகிறதோ இல்லையோ!"

"அவ்வளவுதானா ஒருவருக் கொருவர் நெருக்கம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்."

"நானும் லெப்டினன்ட் கண்ணப்பா போலத்தான்; போர்க்களம் சென்று திரும்பியவன் தான். அங்குதான் கால் போனது கண்ணப்பாவுக்குப் போனது போலவே. ஆனால் அவன் வேறு ஒரு முனையிலே, நான் மற்றோர் முனையிலே. இருவரும் சந்தித்ததே இல்லை."

தங்கம்—அவன் மனைவி—இனி என் தங்கை. ஆனால் போர்க்களம் போகுமுன்பு நான் அவளை மணம் செய்து கொள்ள விரும்பினேன். அவள் மறுக்கவில்லை, பெற்றோர்கள் ஒப்புக் கொண்ட போது...

போர்க்களம் போகு முன்பே திருமணம் செய்து கொள்ள திட்டமிருந்தது.

ஒருநாள் மாலை! அந்த ஊர் குளத்துப் பக்கம் சென்றிருந்தேன்—பொழுது சாய்ந்து விட்ட நேரம்... இரண்டு பெண்கள் தண்ணீர்க் குடத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். நான் வருவதை அவர்கள் கவனித்ததாகத்தெரியவில்லை. பேச்சிலே அவ்வளவு ஈடுபட்டுப் போயிருந்தனர். சிறிதளவு உரத்த குரலிலேயே பேசிக் கொண்டனர், என் காதில் விழும் அளவுக்கு. அவர்கள் சென்ற பக்கமே நானும் செல்ல வேண்டி இருந்ததால் அந்தப் பேச்சைக் கேட்டுத் தொலைக்க வேண்டி நேரிட்டது. செவிடாக இருந்திருந்தால், நான் குருடனாகி இருந்திருக்கமாட்டேன்."

"தங்கத்துக்குக் கலியாணமாமே, அடுத்த வாரம்..."

"ஆமாம். பட்டாளத்தானுக்குக் கொடுக்கப் போகிறார்களாம்"

"பாரேண்டி வேடிக்கையை தங்கம் பெரிய பயந்தாங் கொள்ளி! அவளுக்கு வரப் போகிறவன் பட்டாளத்துக்காரன்! எப்படி பொருந்தப் போகுது?"

"தங்கத்தோட, சித்தாத்தா கொடுமைக்காரியாச்சே. இவ மூத்தவ பொண்ணுதானே! அதனாலே எந்தப் பாழுங்கிணற்றிலேயாவது பிடித்துத் தள்ளி விட்டாத்தான் நிம்மதின்னு தீர்மானிச்சு பட்டாளக்காரனை ஏற்பாடு செய்து விட்டா."

"பட்டாளத்துக்காரனா! கேவலம் ஒண்ணுமில்லே; சொல்லப் போனால் பெருமைதான்."

"அதுக்குச் சொல்லலேடி. ஏன் இப்ப அவசர அவசரமா கலியாணம்? அவன் பட்டாள வேலையை முடிச்சிகிட்டு வரட்டுமே! ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ ஆகப் போகுது. அதக்குள்ளே என்ன குடிமுழுகிப் போகும்? ஏன் அவசரம்."

"நல்ல காரியத்தை ஏன் தள்ளிப் போடணும்."

"அதுக்காக சொல்லலே. இவன் தங்கத்துக்குத் தாலி கட்டி விட்டு கிளம்பப் போறான், சண்டை நடக்கற இடத்துக்கு. அட அவனுடைய தலையெழுத்து எப்படி இருக்குதோ! காலே போகுதோ, கையே போகுதோ, உயிரே தான் போகுதோ அப்படி ஏதாச்சும் ஒண்ணு அவனுக்கு நேரிட்டு விட்டால், தங்கம் தானே தலையிலே கையை வைத்துக் கொண்டு காலமெல்லாம் கதறிக் கொண்டிருக்க வேண்டி இருக்கும்."

"அதுக்காகச் சொல்றியா! அது நிஜம்தான்..கொஞ்சம் பொறுத்துச் செய்யலாம்."

"அட அது அந்த ஆம்பிளைக்குத் தெரிய வேண்டாமா? நாம் போறதோ சண்டை நடக்கிற இடத்துக்கு, அங்கே என்ன ஆகுதோ, ஏது ஆகுதோ-நாம எதுக்கு அவசரப்பட்டு ஒருத்தி கழுத்திலே இப்ப தாலி கட்றது. சண்டை முடிந்ததும் கை, கால், கண்ணுக்கு ஊனம் இல்லாம வந்து சேர்ந்தா, அப்ப பார்த்துக் கொள்ளலாம், கலியாணத்தைப் பத்தின்னு தோண வேணாமா?"

"புத்திக் கெட்ட ஆளு போல இருக்கு."

"அவசரம்! தங்கத்தை வேறே எவனாவது கட்டிக் கொள்ள வந்துவிட்டா என்ன செய்கிறது என்ற பயம்."

"இருக்கும், இருக்கும்! தங்கத்துக்கு என்னடி குறை! கண்டேன் கண்டேன்னு ஓடி வருவான் நூறு பேர் கட்டிக் கொள்ள..."

"அழகா இருக்காளேன்னு சொல்றியா! அழகைப் பார்த்தா எவனுக்கும் ஆசை வரும் கட்டிக் கொள்ளலாம்னு. ஆனா தரித்திரம் பிடிச்சவ என்கிற சங்கதி தெரிஞ்சா கிட்டே வரப் பயப்படுவாங்க, விவரம் தெரிந்தவங்க."

"எது எப்படி இருந்தாலும் சண்டைக்குக் கிளம்பற சிப்பாயி இப்படி ஒரு பெண்ணு கழுத்திலே தாலிக் கயிற்றை கட்டி விட்டுக் கிளம்பறது சரியில்லை. இதை விட ஒரு தூக்குக் கயிற்றையே போட்டுவிடலாம்."

அதற்குமேல் என்னால் அவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்க மனம் இடம் தரவில்லை. அதிலும் பேசி விட்டு அந்த இரண்டு பெண்களும் சிரித்த சிரிப்பு இருக்கே, அப்பப்பா என் நெஞ்சைப் போட்டு அறுத்து விட்டது. உண்மைதானே அவர்கள் சொல்வது என்று என் நெஞ்சம் உறுத்திற்று. என்னையும் அறியாமல் நான் பெரிய கேடு செய்து விடுகிறேன் என்ற பயம் ஏற்பட்டது. அந்தக் பெண்கள் பேசிக் கொண்ட படி எனக்குப் போர்க்களத்திலே ஏதேனும் ஏற்பட்டு விட்டால் தங்கத்தின் கதி என்ன ஆகும். மனம் என்ன பாடுபடும்? சித்தி என்ன சொல்லுவாள். 'எவன் தலையிலாவது கட்டித் தொலைத்து விட்டு நிம்மதி அடையலாம்' என்று நினைத்தால் நடக்கிறதா! இவளுடைய ஜாதகம் அப்படி! மறுபடியும் என் காலை வந்து சுற்றிக் கொண்டு விட்டது இந்தச் சனியன்'—என்றெல்லாம் பேசுவாளே! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுபவள் என்பது எனக்கே தெரியும்."

தங்கம் என் மனதுக்கும் பிடித்த மானவள்-அவளை இழக்க நான் விரும்பவில்லை. ஆனால் என்னால் அவளுக்கு இழிவும், பழியும் தொல்லையும், துயரமும் ஏற்படக் கூடாது என்றும் விரும்பினேன். எதற்கும் போர்க்களம் சென்று திரும்பிய பிறகு திருமணம் செய்து கொள்வது தான் நியாயம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். விவரமாக காரணங்களை விளக்கிக் கொண்டு இருக்க முடியுமா? அப்போது யார் யார், என்ன என்ன புதுப்பேச்சு பேசி என் மனதை மாற்றி விடுவார்களோ என்று வேறு பயம்.

நிச்சய தாம்பூலம் நடத்தி விட்டு, கலியாணம் பிறகு என்று கூறிவிடலாம். எடுத்த எடுப்பிலே இது எனக்கு நல்லதாகத் தான் தெரிந்தது. தங்கம் எனக்கே தான் என்ற உறுதியும் கிடைக்கிறது: அதே போது சண்டைக்குக் கிளம்பும் போது ஒரு பெண்ணின் கழுத்திலே சுருக்கு மாட்டி விட்டுப் போனான் என்ற பழியும் ஏற்பட வழியில்லை.

ஆனால் யோசித்த பிறகு இந்த ஏற்பாடு அவ்வளவு சரியில்லை என்று தெரிந்தது. எவ்வளவு காலமாகுமோ நான் திரும்பி வர! அதுவரையிலே தங்கம், சித்தியிடம் கொடுமைப்பட்டுக் கொண்டு வருவதா! எப்போது வருவனோ தெரியவில்லை, அந்த யோக்யன்! நிச்சய தாம்பூலம் வேறு நடத்தி விட்டுப் போய் விட்டான். வேறு எவன் கையிலும் பிடித்துக் கொடுப்பதற்கும் இல்லை. இவள் இங்கு குத்துக்கல் மாதிரி இருந்து கொண்டு தொல்லை கொடுக்கிறாள் என்றெல்லாம் ஏசுவாள் தங்கத்தின் சித்தி. அதனாலே அந்த யோசனையையும் விட்டு விட்டேன் சரியில்லை என்று.

நிச்சயதாம்பூலத்துக்கு நாள் வைக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். 'நான்' ஏதேதோ சாக்கு போக்குகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். இதற்குள் நான் போர் முனைக்குப் புறப்பட வேண்டிய நாளும் வந்துவிட்டது.

தங்கத்திடம் எப்படியாவது தனியாகச் சந்தித்து, விவரம் சொல்லி, அவளுடைய மனதைச் சமாதானப்படுத்தி விட்டால் போதும்; என் மனம் நிம்மதியாகும் என்று எண்ணினேன். அதற்கு வழி? சித்தி கோபக்காரி. ஒழுக்கம் கூட கெடக்கூடாது என்பதிலே மிகுந்த கண்டிப்பானவள். நான் என் யோசனையைச் சொன்னாலே சீறுவாள். " நான் ஒருத்தி இருக்கிறேனே செத்துப்போகல்லியே! என் கிட்டச் சொல்லு; அவ கிட்ட என்ன தனியாப் பேச்சு. அது இந்த இடம் இல்லை; நடையைக்கட்டு" என்று பேசுவது மட்டும் அல்ல; ஊரையே ஒரு கலக்கு, கலக்குவாள். ஒருவருக்கும் தெரியாமல் தங்கத்தைப் பார்க்கலாம் என்றாலோ, பெண் குனிந்த தலை நிமிராதவள். குளத்துப் பக்கம் கூட வருவதில்லை. என்ன செய்வது?

ஜோதிடக்கார ஐயரைப் பிடித்தேன்.

"தெரியும்டா நோக்கு ஒரு ஆபத்து வாரபோது, என்னைத்தான் தேடுவேன்னு நன்னா எனக்கு தெரியும்" என்று பேச்சை ஆரம்பித்து, உலக விவகாரம் அத்தனையையும் பேசி முடித்து விட்டு ஒருவாறு எனக்கு உதவி செய்ய ஒப்புக் கொண்டார். இன்னும் ஒரு மூன்று மாதத்துக்கு நிச்சய தாம்பூலம் நடத்திடக் கூடாது. கிரகபலம் சரியாக இல்லை, இந்த ஜாதகக்காரனுக்கு என்று சித்தியிடம் கூறி விட ஒப்புக் கொண்டார். எனக்கு உதவி செய்யத்தான் ஒப்புக் கொண்டாரே தவிர நான் சொன்ன காரணங்களை, காரணங்கள் என்று கூட அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கிளறிக் கிளறிக் கேட்டார்.

"ஏண்டா சோமு! வேறு எவளாவது..."

"சேசே! அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க."

"இருந்தா சொல்லுடா; இது சகஜம் தானே. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்ன்னு பெரியவா சொல்லியிருக்காடா. இந்தக் காலத்திலே இல்லாத சகல சாஸ்திர விற்பன்னாளாவும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவளாவும், இருந்த பெரியவா காலத்திலேயே ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தான்! இப்ப மணிக்கணக்கிலே கூட இல்லை; நிமிஷக் கணக்கிலே மாறிவிடுது."

"அப்படி எல்லாம் என்னைப் பற்றி எண்ண வேண்டாம்."

"அடே, அப்பா! சரி என்ன, அவ்வளவு உறுதி படைச்சவனா? கண்களை இறுக்கி மூடிண்டா பத்து வருஷம் பதினாறு வருஷம் கூடத் திறந்து பார்க்க மாட்டார் விசுவாமித்திர மகரிஷி! என்ன ஆனார் பார்த்தயோ, மேனகை வந்து தா, தைன்னு ஆடின உடனே."

என்ன செய்வது? எனக்கு அவரை விட்டால் வேறே வழி இல்லை. அவருடைய உதவி வேண்டும். அதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்தேன், அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு.

அவர் எடுத்துச் சொன்னதை நம்பித்தான் நிச்சயதாம்பூல ஏற்பாட்டை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் தங்கம் எனக்குத் தான்-நான் திரும்பி வருகிற வரையில் வேறு இடம் பார்ப்பதில்லை என்று வாக்களித்தார்கள். மகிழ்ச்சி எனக்கு. அந்த மகிழ்ச்சியோடு தான் போர்முனை சென்றேன்.

ஜோதிடர் சொன்னதைக் கேட்டுக் கொண்டார்களே தவிர தங்கம் வீட்டுக்கு மனம் முழு சமாதனமாகி விடவில்லை. இந்த இலட்சணத்தில் தன்னுடைய சாமர்த்தியத்தை ஊர் மெச்ச வேண்டும் என்ற அற்ப ஆசை, இந்த ஜோதிடருக்கு. அதன் காரணமாக அவர் சிலரிடம், நிச்சய தாம்பூலம் நடைபெற இருந்ததை நான் கேட்டுக் கொண்டதற்காக சமர்த்தியமாகப் பேசி நிறுத்தி விட்டதாக வேறு பேசினார்.

இது தங்கம் வீட்டாரின் காதிலே விழுந்தது.

"நான் என்ன, அந்த ஐயன் சொன்னதை அப்படியே நம்பி விட்டேனா என்ன! எனக்குத் தெரியாதா அந்த நாக்கு எப்படியும் வளையும் என்கிற விஷயம். இவ தலை எழுத்து அப்படி" என்று சித்தி பேசியதாகக் கூடக் கேள்விப் பட்டேன்.

"போர் முனையிலே எதிரித் தாக்குதலால், நான் ஒரு டாங்கியில் சிக்கிக் கொண்டேன்—உயிரே போயிருக்க வேண்டியது. எப்படியோ காலோடு போயிற்று.

கால் துண்டிக்கப்பட்டது கூட எனக்குத் தெரியாது; மயக்க மருந்து கொடுத்து விட்டிருந்தார்கள். நினைவு வந்து கண்களைத் திறந்து பார்த்தேன். வலியும் எரிச்சலும் கால் உள்ள பக்கமாக இருந்தது; பார்த்தேன், வயிறு பகீர் என்றது; பாதி கால் இல்லை ஐயோ!" என்று அலறினேன். அந்தக் கூச்சலிட்டதால் மறுபடியும் களைப்பு, மயக்கம்.

தெளிவு பெற்ற பிறகு, என்னால் துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனி நான் ஓர் நொண்டி! ஆமாம்! தத்தித் தத்தி நடக்க வேண்டியவன்; ஊர்பேர் அறியாதவனாகத்தான் இருக்கிறேன். இனி ஊரே பேசும், 'சோமு நொண்டி!' என்று. சிறிது கோபம் ஏற்பட்டால் போதும்; 'சோமு எங்கே?' என்று கேட்க மாட்டார்கள். 'எங்கே அந்த நொண்டிப்பயல்?' என்று தான் பேசுவார்கள். "குழந்தைகள் பெரியவர்களுக்குக்காட்டக் கூறும், 'பாவம் தாத்தா! நொண்டி பாரு!' என்று. பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லுவார்கள், "ஜாக்ரதையா ரோடிலே, வண்டி ஏதாவது வருதான்னு பார்த்து நடக்கணும்; இல்லையானா, அதோ பார்த்தாயா நொண்டி, அது போல ஆகிவிடும்," என்பார்கள்.

பரிதாபம்! பரிகாசம்! எச்சரிக்கை! இவை கிளம்பும் நான் நடமாடும் இடத்தில்.

என் இளமை, கட்டுடல், அழகு எதுவும் உலகத்தின் கண்களுக்குத் தெரியாது. நான் ஒரு நொண்டி—அது மட்டும் தான் தெரியும்.

சோமு நல்லவன், —பட்டாளத்திலே பணி புரிந்தவன் கெட்ட நடவடிக்கை எதுவும் இல்லாதவன்—பழகுவதற்கு ஏற்றவன்—என்ற எதைப் பற்றியும் இனி இந்த உலகம் பேசாது.

சோமு ஒரு நொண்டி என்பது பற்றி மட்டுந்தான் பேசும். அப்படிக் கூடப் பேசாது—சோமு ஒரு நொண்டி என்று பேசாது! 'அதோ பார் ஒரு நொண்டி! அவன் பெயர் சோமு!' என்று பேசுவார்கள்! "சோமு அல்ல; இனி நான் நொண்டி!

என் மனம் படாத பாடுபட்டது. துக்கம் பிய்த்தது, என் நெஞ்சை!

ஆனால் தங்கம்! அவளைப் பற்றிய நினைப்பு வந்ததும் என் துக்கம் ஆயிரம் மடங்கு அதிகமாகி விட்டது மட்டுமல்ல, என்னைப் பயம் பிடித்து உலுக்கி விட்டது.

குளத்தருகே அந்தப் பெண்கள்—குறும்பாகப் பேசினது உண்மையாகப் போய் விட்டதே. "தங்கத்தின் கணவன், ஒரு நொண்டி! ஐய்யய்யோ! தங்கம் ஒரு நொண்டியையா, நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். உலகம் ஏளனம் செய்யுமே. எப்படித் தாங்கிக் கொள்வாய்."

"அவ தலையெழுத்து ஒரு நொண்டிக்கு வாழ்க்கைப்பட நேரிட்டு விட்டது."

"நொண்டியைக் கட்டிக் கொண்டு, அவ பாவம், என்ன கஷ்டப்படுகிறாளோ!"

"ஏழையாய் இருக்கட்டும், மூட்டைச் சுமப்பவனா இருக்கட்டும், கைகாலுக்கு ஊனமில்லாமல் இருந்தாப் போதும்; ஓடி ஆடி பாடுபட்டு பிழைப்புக்கு வழிதேடிக் கொள்ள முடியும். குடும்பத்தைக் காப்பாத்த முடியும்."

"தங்கம், இவனைக் கட்டிக் கொண்டு எப்படி நிம்மதியாய் இருக்க முடியும்? நொண்டியாலே, என்ன ஆகும்? எவன் வேலை கொடுப்பான். இனி குடும்பத்தைக் காப்பாத்தறதும் தங்கம் தலையிலே தான்."

"இந்த நொண்டியை அங்கே இங்கே அழைத்துக் கொண்டு போற வேலையும், இடறி விழாமப் பார்த்துக் கொள்ளும் வேலையும் எல்லாம் இந்தத் தங்கத்தோட தலையிலே தான் வந்து விடியும்"...இப்படி எல்லாம் பேசிக் கொள்வார்களே! எப்படித் தாங்கிக் கொள்வாள் தங்கம்.

"ஏன் அவளுக்கு இந்த இழிவு! போடா, உங்க அப்பன் காலை ஒடிச்சுப் போட்டது போல உன் காலை ஒடிச்சிக் கழுத்திலே மாட்டிடுவேன், தெரியுமா...." என்று போக்கிரிச் சிறுவர்கள் பேசுவார்கள்—என் மகனிடம்...!

இவ்வளவு ஏன், நானே வேலை தேடும் போது உலகுக்குச் சொல்ல வேண்டும், "நொண்டி என்று நினைக்காதீர்கள் ஐயா! ஓட நடமாட முடியாதே தவிர, உட்கார்ந்த இடத்திலிருந்து, சலிக்காமல் வேலை செய்ய முடியும். திறமையாகச் செய்வேன். நாணயமாக நடந்து கொள்வேன்" . குறும்புக்காரனாகவும், பிறர் மனம் புண்படப் பேசக் கூடாது, என்பதிலே நாட்டமில்லாதவனாகவும் இருந்தால், என்ன சொல்லுவான்.

"நாணயமாக நடந்து கொள்ளுவேன் என்று சொல்றயே, அப்பா! நாணயம் இருக்கட்டும், உன்னாலே, சரியாக நடக்கவே முடியாதே!!"

என்று சொல்லுவான். உடன் இருப்பவர்கள் அந்த நகைச்சுவை கேட்டு சிரிக்க வேண்டும். அதை நான் கேட்டுச் சகித்துக் கொள்ள வேண்டும்.....ஐயையோ! எப்படி முடியும் எப்படி....

"என் புருஷன் நொண்டிங்க....ஏதோ, இருந்த இடத்திலே இருந்து கடை வைத்து பிழைப்புக்கு வழி தேடப் பார்த்தார்....முடியல்லே, அதனாலே தான் உங்க கடனைத் திருப்பித் தர முடியல்லே...கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்க" என்று தங்கம் கெஞ்ச வேண்டும்; நான் தத்தித்தத்தி நடந்தபடி அதைக் கேட்டுக் கொண்டு உயிர் வாழ வேண்டும்!! இதையெல்லாம் எண்ணும் போது, வந்த ஆபத்து ஏன் காலோடு நின்று விட்டது என்று கூடத் தோன்றிற்று. புழுவாய்த் துடித்தேன், படுக்கையில் டாக்டர்கள், வலி தாளாமல் துடிக்கிறேன் என்று எண்ணிக் கொண்டு ஏதேதோ மருந்து போட்டார்கள்; வலி இருக்கும் இடம் தெரியாமல்.

இவ்வளவு தொல்லைகளையும் இழிவுகளையும் ஏளனங்களையும் என் பொருட்டுத் தங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆமாம்...அவள் என் தங்கம்! ஆனால் தானே இதெல்லாம். கன்னிதானே அவள். எனக்காகக் காத்திருக்கிறாள். ஆனால், இப்போது? காலிழந்தவன் என்று தெரிந்தால்? அப்போதும் 'சரி' என்றா சொல்லுவாள்...திருமணத்துக்குச் சம்மதிப்பாளா...?

எப்படி மனம் வரும் ஒரு இளமங்கைக்கு, ஒரு நொண்டியைக் கலியாணம் செய்து கொள்ள... குளத்திலே குட்டையிலேயாவது விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ளலாமே தவிர, ஒரு நொண்டியைக் கொண்டு காலமெல்லாம் கஷ்டப் படுவதா...

என்னென்ன எண்ணுவாளோ! தங்கம், எப்படியெப்படிக் கதறுவாளோ!

கண்ணில்லையா, உங்களுக்கு—கருணை கடுகளவும் இல்லையா....என்னை ஒரு நொண்டிக்குப் பலி கொடுக்கிறீர்களே! இது தர்மமா? உன் மகளாக இருந்தால் இப்படிச் செய்வாயா...என்று புலம்புவாளே...

அழ அழ, பிடித்திழுத்து வந்து மண அறையில் அவளை உட்காரச் செய்து, என்னிடம் தாலிக்கயிறு கொடுத்துக் கட்டச் சொன்னால், என் கரம் நடுங்குமே! அவள் உயிர் துடிக்குமே! பலருக்குக் கண்ணீர் துளிர்க்குமே! நமக்குத் தாலி கட்டப் போகிறவன், ஒரு நொண்டி! என்று நினைக்கும் போதே, எதிரே மூட்டப்படும் ஓமத்தீ, அங்கா இருக்கும்: அவளுடைய இதயத்தில் அல்லவா புகுந்து, அவளைத் தீய்த்துக் கொண்டு இருக்கும். கெட்டி மேளம்! கெட்டி மேளம்! என்று கூறுவார்கள்—மேளம் காது செவிடுபட கொட்டப்படும்—அவள் செவியிலே என்ன விழும்? இசையா? இழவு ஒலி போல அல்லவா இருக்கும் ஐயையோ....ஆஹாஹாஹா....! இப்படியல்லவா செவியில் விழும்.

"மாப்பிள்ளை, மெதுவா மெதுவா எழுந்திருங்கோ."

"ஆசாமிக்கு என்னய்யா, சோல்ஜர் இல்லாவா..வாட்ட சாட்டமாத்தான் இருக்கிறான்...கால் நொண்டி...இருந்தா என்ன..ஆசாமி கெட்டிக்காரன்...சமாளித்துக் கொள்வான்.

கலியாண ஜோர்லே மாப்பிள்ளைக்கு, காலு இல்லை என்கிற கவனம் கூடப் போய் விட்டது போலிருக்குதே...ஒரே தாவாத் தாவுவார் போல இருக்குதே...இப்படி எல்லாம் கேலிப் பேச்சு நடக்கும்; அதைக் கேட்டுப் பலர் சிரிப்பார்கள். அவர்கள் மனதிலே ஒரு கெட்ட எண்ணமும் இல்லாமல் பேசுவதால், நான் கூடக் கோபித்துக் கொள்வதற்கில்லை. சந்தோஷம் ஏற்படாவிட்டாலும், பல்லைக் காட்ட வேண்டி வரும். ஆனால், தங்கம்? அவள் என்ன எண்ணு வாள்? அவள் மனம் என்ன பாடுபடும்?

ஆனால், தங்கம், ஒப்புக் கொண்டால்தானே இதெல்லாம். அவள் எப்படி ஒப்புக் கொள்வாள்? எவ்வளவு சாதுப் பெண்ணாக இருந்தாலும், எதிர்த்துப் பேசாமல் இருக்க முடியாதே. ஒப்புக் கொள்ள மாட்டாள். அவளுடைய சித்தி கூடத்தான், எவ்வளவு கொடுமைக்காரியாக இருந்தாலும், இந்த விஷயத்தில் வற்புறுத்த மாட்டாள்....வேறு எதற்காக இல்லாவிட்டாலும், ஒரு நொண்டியை வீட்டு மருமகனாகக் கொள்வது இலாபம் இல்லாதது...வீணான கஷ்டமும் நஷ்ட மும் ஏற்படும் என்ற காரணத்துக்காகவாவது, என்னைக் கலியாணம் செய்து கொள்ளச் சொல்லித் தங்கத்தை வற்புறுத்த மாட்டாள்.

எல்லாம் இருக்கட்டும்...எனக்குத்தான் எப்படி மனம் துணியும், திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்க! முன்பு நான் இருந்ததற்கும் இப்போதைக்கும் ஒரு காலிலே அரை பாகம் குறைவு வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லுவதா? நான் என்ன மனித மிருகமா!

போர்க்கள வேலையெல்லாம் முடித்துக் கொண்டு, மாலை சூட வந்திருக்கிறேன், என்று தத்தித் தத்தி நடந்து போய், அவள் எதிரே நிற்கவா! இதயமே வா போய் விட்டது எனக்கு? கால் மட்டுந்தானே!!

நொண்டியாகி நான் போய் அவள் எதிரே நின்றால் அந்தக் கண்கள் நெருப்பல்லவா கக்கும்.

நொண்டிப் பயலுடைய குறும்பைப் பார்த்தீர்களா! கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம். தங்கத்தை...

பாரேன், துணிச்சலை...இவன் சம்மதிப்பானா, ஒரு குருட்டுப் பெண்ணைக் கட்டிக் கொள்ள....

'முன்பே ஏற்பாடு நடந்தது தானே' என்கிறானாம்.

'என்ன ஏற்பாடு நடந்ததாம்? நான் பட்டாளத்துக்குப் போய், ஒத்தைக் காலனாகி வருவேன். அதுவரையிலே பொறுத்துச் கொண்டிரு; வந்த உடனே கலியாணம்' என்றா ஏற்பாடு...

புத்தி இருக்க வேண்டாமா? நமக்குத் தான் இந்தக் கதி ஏற்பட்டதென்றாலும் நம்மாலே மற்றவர்களுக்கு ஒரு பொல்லாங்கும் இழிவும் ஏற்பட நாம் தாராளமாக இருக்கக் கூடாது என்ற புத்தி இருக்க வேணாமா"

அப்படிப்பட்டவன் குணசாலி மனுஷன்.

இவன் மிருகம், வெறிப்பய, நொண்டிப்பய...இன்னும் என்னென்ன நடக்குமோ அர்ச்சனை!

இவ்விதமாக வெல்லாம் பலப்பல எண்ணிக் கொள்வேன்.

ஒரு நாள் மனதைத் திடப்படுத்திக் கொள்வேன், நாம் இருக்கும் நிலையில், தங்கத்தைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று.

மறுநாள், ஆசை பிய்த்து விடும்; இருந்தால் என்ன? கேட்டால் ஒப்புக் கொள்வார்கள் என்று நினைப்பேன்.

உடல் உறுப்பா, வெட்டி எடுத்து எறிந்து விட! உள்ளத்திலே ஊறும் எண்ணம்! எடுத்து எறிந்து விடத்தான் முடிகிறதா அல்லது எழாதபடி தடுக்கத்தான் முடிகிறதா?

பெரிய டாக்டர், காலிழந்த எனக்கு, ஊன்று கோல் கொடுத்து நடக்கப் பயிற்சி அளித்தார்— "இனிக் கவலையில்லை, பயமில்லை; கால் இருப்பது போலவே எண்ணிக் கொள்ளலாம். ஊன்றுகோல்கொண்டு நன்றாக நடக்கலாம்; ஓட்டப் பந்தயத்துக்குக் கூட போகலாம்," என்றார் என்னை உற்சாகப்படுத்த.

பெரிய டாக்டரை அனைவரும் பாராட்டினார்கள்; அவர் சரியான நேரத்தில், சரியான முறையில் என் காலைத் துண்டாக்கி என்னைப் பிழைக்க வைத்தாராம். சிறிது திறமை குறைவாக இருந்திருந்தால் கூட அழுகிக் கிடந்த காலிலிருந்து விஷம் உடல் பூராவும் பரவி நான் செத்துப்போய் இருப்பேனாம். இப்போது நான் வாழ்கிறேன் என்று எண்ணிக் கொண்டார்கள்!

நானும் தான் பாராட்டினேன்—நன்றி தெரிவித்தேன் டாக்டருக்கு.

"உனக்குக் கால் போச்சு மிஸ்டர் சோமு! எனக்கு பேர் வந்தாச்சி!! என்று அந்த டாக்டர் வேடிக்கை பேசினார். போட்டோக் கூட எடுத்தார்கள்—டாக்டரை—டாக்டருடன் நான், நான் மட்டும் ஊன்றுகோல் இல்லாமல்—ஊன்று கோலுடன் இப்படிப் பல போட்டோக்கள்! தங்கத்துக்கு அனுப்ப வேண்டாமா, அதற்காக!

குழம்பிக் கொண்டிருந்த எனக்குத் தெளிவு ஏற்படச் செய்தார் பெரிய டாக்டர். என் விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, புத்தி கூறி அல்ல, தற்செயலாக. "மிஸ்டர் சோமு! உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?" என்று கேட்டார் பெரிய டாக்டர்.

"இல்லை, டாக்டர்! கலியாணம் ஆகவில்லை" என்று கூறினேன். பெரிய ஆறுதல் அடைந்தவர் போலானார் பெரிய டாக்டர் "நல்ல வேளை!" என்றார்.

எனக்குத் தெளிவும் திடமும் ஏற்பட்டு விட்டது. எங்கே எனக்குத் திருமணம் ஆகிவிட்டிருக்கிறதோ, நான் நொண்டியாகிவிட்டதால் என் மனைவி என்னென்ன அல்லல் படுகிறாளோ என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் டாக்டர். திருமணம் ஆகவில்லை என்றதும், அவர் மனதுக்கு ஆறுதல் ஏற்பட்டது.

பொருள் என்ன? நான் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது என்று, பெரிய டாக்டர் கருதுகிறார்! டாக்டர் மட்டுமா, பெரிய மனம் உள்ளவர்கள் எல்லோருமே அப்படித்தான் எண்ணுவார்கள். நான் என்ன சிறுமதி கொண்டவனா! என் மனமும் பெரியதுதான், என் இன்பம் அல்ல முக்கியம். என்னால் ஒரு பெண்ணுக்கு இழிவும், இன்னலும் ஏற்படக் கூடாது. அதற்கு நான் இடந்தரக் கூடாது. அந்தப் பழியைத் தேடிக் கொள்ள மாட்டேன். அவள் இருக்கும் பக்கமே என் கால்கள் செல்லாது...கால்களா.....ஒன்றும் மற்றொரு பாதியும். ஐயா! இந்த முடிவுக்கு நான் வந்த பிறகுதான், ஓரளவுக்குத் தூக்கம் பிடித்தது. பசி எடுத்தது.

ஆசாமி பிழைத்துக் கொண்டான்; தேறிவிட்டான் என்று என்னுடன் இருந்தவர்கள் கூறினர், களிப்புடன்.

நான், பட்டாளப் பணியிலிருந்து விலகினேன்—விலக அனுமதி எளிதிலே கிடைத்தது. எங்கெங்கோ அலைந்தேன். பல ஊர்-பல இடம்—துக்கம் என்னை அண்டாதபடி, கேளிக்கையாக இருக்க முயற்சித்தேன். குடித்துப் பழகியவனல்ல. புதிய தோழனாக்கிக் கொண்டேன், போதைப் பொருளை! சூதாடுவது, சுற்றித் திரிவது, சுருண்டு கீழே விழுவது, மயக்கம் ஏறிய நிலையில். இதுதான் என் வாழ்க்கை முறையாக அமைந்தது. கைப்பொருளை வேகமாகக் கரைத்தபடி இருந்தேன். எல்லாம் தங்கத்தை இழந்துவிட வேண்டி நேரிட்டதே கால் போனதனால் என்ற துக்கத்தைப் போக்கிக் கொள்ள, ஊர் விஷயம் உலக விஷயம் எதைப் பற்றியும் நான் அக்கரை கொள்ளவில்லை; எழவில்லை. ஒண்டிக்கட்டை நான். திருமணமாகிவிட்டால் வீட்டோடு வந்து இருந்து விடுவேன் என்று கூட சித்தி நினைத்ததுண்டு.

அவர்களைப் பற்றிய நினைப்பு எல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டேன். உதிர்ந்து போன மலரை எடுத்துச் செடியிலே ஒட்டி விட முடியுமா? நான் கொண்டிருந்த எண்ணங்கள் பலவும் உதிர்ந்த மலர்களாகிவிட்டன; இதயத்தில் மீண்டும் அவைகளுக்கு இடமில்லை.

எப்போதாவது, தங்கம் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் எழும். ஆனால் அதற்காக அந்த இடம் சென்று மறுபடியும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாதே. அதனால் சில காலமாவது அந்தப் பக்கமே போகக் கூடாது—தங்கத்துக்கு ஒரு கலியாணமாகி, அவள் குடியும் குடித்தனமுமான, பிறகு வேண்டுமானால் அந்தப் பக்கம் போகலாம்; அதற்கு முன்பு போகக் கூடாது என்று தீர்மானமாக இருந்து வந்தேன்.

போன செவ்வாய்க்கிழமை மறைந்து போயிருந்த பழைய எண்ணங்கள் எல்லாம் குதித்துக் கிளம்பிக் கொண்டு என் மனதைக் குடையும் நிலை ஏற்பட்டது. தற்செயலாக ஒரு பத்திரிகையைப் பார்த்தேன்—பழைய பத்திரிகை—அதிலே தங்கம் தன் கணவனுடன்—லெப்டினன்ட் கண்ணப்பாவுடன் நின்று கொண்டிருக்கும் படம் வெளியிடப்பட்டிருந்தது. மகிழ்ச்சி மருட்சி இரண்டும்! திருமணமாகிவிட்டது தங்கத்துக்கு! ஒரு லெப்டினன்டு அவள் மணவாளன்! நிம்மதி தான்! மகிழ்ச்சி தான்! விவரம் ஆறாம் பக்கம் பார்க்க என்று பத்திரிகையில் இருந்தது; ஆனால் ஆறாம் பக்கம் இல்லை; அது பழைய பத்திரிகை, மெத்தக் கிழிந்து போன நிலையில் இருந்தது. அதை எடுத்துப் பத்திரமாக மடித்து, என் சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். எந்தப் பொருளையும், அவ்வளவு அக்கரையுடன் நான் பாதுகாத்ததில்லை.

விவரம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு—குடி, சூதாட்டம், எதுவும் என்னைத் தடுக்க முடியவில்லை. பத்திரிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து, நாலு நாள் பசியோடு இருப்பவனுக்கு உணவு கிடைத்தால் எவ்வளவு ஆவலுடன் அவசரத்துடன் தின்பானோ, அந்த நிலையில் விவரங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். இன்று இந்த ஊருக்கு வருகிறார்கள் என்று தெரிந்தது—காண ஓடோடி வந்தேன்—கண் குளிரக் கண்டேன்.

சோமுவின் கதையின் உருக்கத்தில் நான் என்னை மறந்து போயிருந்தேன். எவ்வளவு நல்ல மனம் இந்தச் சோமுவுக்கு ஒரு பெண்ணின் வாழ்வை வதைக்கக் கூடாது என்பதிலே அவ்வளவு பெருந்தன்மையைக் காட்டியிருக்கிறான்.

"சோமு! நான் உம்மை வணங்க விரும்புகிறேன். உத்தமரய்யா நீர்! ஒரு பெண்ணின் வாழ்வு பாழாகக் கூடாது என்பதற்காக எத்தனை பெரிய தியாகம் செய்திருக்கிறீர். யாருக்கு வரும் இந்தப் பெருந்தன்மை" என்று நான் உள்ளபடி உருக்கமாகத்தான் உரைத்தேன்.

சோமு என்னை வெறிக்க வெறிக்கப் பார்த்தான்.

"சோமு! இவ்வளவு தூய்மை நிறைந்த தாங்கள், ஏன் தங்களைக் குருடர் என்று கூறிக் கடிந்து கொண்டீர்கள் என்பதல்லவா எனக்கு விளங்கவில்லை." என்று நான் கேட்டேன். சோமு, என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு...

"ஐயா! நான் உம்மிடம் சொன்னது நினைவிருக்கிறதா? நான் கண்ணிருந்தும் குருடன்! பெண்களின் குணத்தின் பெருமையினை உணராததால் தவறான பாதை சென்று இடறி விழுந்தேன் என்றேனே, நினைவிலிருக்கிறதா?"

"நன்றாக நினைவிலிருக்கிறது; மறந்து போகவில்லை. ஆனால் சோமு! தாங்கள் அப்படிக் கூறுவது தான் தவறு. தவறான பாதை செல்லவில்லை; தியாகப் பாதை சென்றீர்கள். இடறி விழவில்லை; ஒரு மங்கையின் வாழ்வுக்கு இடராகக் கூடாது என்று தியாகம் செய்தீர்கள்."

"நொண்டியாகிவிட்ட நான் தங்கத்தை மணந்து கொள்வது கொடுமை; அவளே அதற்குச் சம்மதம் தரமாட்டாள்—அப்படிச் சம்மதித்தாலும் நான் அவளை அடைய எண்ணுவது கொடுமை என்பதால் தானே, நான் அவளைத் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்காமல், தெருச்சுற்றலானேன்; உருமாறிப் போனேன்..."

"உத்தமராகி இருக்கிறீர்—உருக்குலைந்தது உடல் அளவு; உள்ளம் மிகப்பெரிது..."

"அவள் உள்ளத்தை அறிந்து கொள்ள முயற்சித்தேனா?"

"அதுதான், உம்முடைய தியாகச் சிறப்பிலேயே உச்சக் கட்டம். மகுடத்தில் பதிந்துள்ள ஒளிவிடு வைரம்."

"என் நிலை இது; இந்த நிலையில் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதமா என்று நான் தங்கத்தைக் கேட்காதது என் தியாக குணத்திலேயே சிறப்பான பகுதி! ஒளிவிடு வைரம்! என்னை விடக் குருடு ஐயா, நீர்! நான் நொண்டியாகி விட்டேன்—என்னை மணம் செய்து கொண்டால் தங்கம் இழிவும் பழியும் பெறுவாள் என்று எண்ணியும், தொண்டியாகிவிட்ட என்னைத் திருமணம் செய்து கொள்ள அவள் சம்மதிக்க மாட்டாள். கேட்கவும் கூடாது என்று எண்ணியும் தானே, நான் வேறு பாதை சென்றேன். இந்தக் கோலம் பெற்றேன் ஐயா! கண்ணிருந்தும் நான் குருடனாகி விடவே நமது நாட்டுப் பெண்குலத்தின் பெருமையை அறியாது போய் விட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன்—அரை மணி நேரத்துக்கு முன்பு...நொண்டி, தங்கத்தின் கணவனாகக் கூடாது என்பதற்காக நான் தியாகம் செய்தேன். ஆனால் அவள் திருமணம் செய்து கொண்டிருக்கிறாளே! "லெப்டினன்ட் கண்ணப்பா, அவனும் என் போலத்தான், போர்க்களத்திலே காலிழந்தவன்—நொண்டி!"

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நொண்டியாகிப் போனவனை மணம் செய்து கொண்டாள்! எவளுடைய வாழ்க்கை நொந்து போகும் என்பதற்காக தியாகம் செய்தானோ சோமு, அந்தத் தியாகத்துக்கே துளியும் பொருள் இல்லாமல் போய் விட்டதே! தங்கம், கடைசியில் மற்றொரு நொண்டியைத்தானே கணவனாகப் பெற்றாள். சோமு மனக் குழப்பத்தில் பேசுகிறானா அல்லது உண்மை அதுதானா? நான் பதறிப்போனேன்.

"என்ன, என்ன? கண்ணப்பாவுக்குக் கால் இல்லையா?" என்று கேட்டேன். நொண்டி என்று சொல்லக் கூட எனக்குக் கூச்சமாக இருந்தது.

"ஓ! உங்களுக்கு அது தெரிந்திருக்க முடியாது. கண்ணப்பாவுக்கு ஒரு காலில் எனக்கு இருப்பது போலத்தான் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டுப் போய்விட்டது."

"இல்லையே! இரண்டு காலாலும் தானே நடந்துவந்தான்."

"அதிலே ஒன்று பொய்க்கால்! அவ்வளவு நேர்த்தியாக விஞ்ஞான முறைப்படி அமைத்து இயங்க வைத்திருக்கிறார்கள்."

"துளிகூடத் தெரிந்து கொள்ள முடியவில்லையே"

"எனக்கு மட்டும் தெரிந்ததா முதலில்? அவனும் நிரம்ப பயிற்சி செய்திருக்கிறான் போல இருக்கிறது. நடக்கும் போது கால் ஊனமாகி விட்டது என்பது துளி கூடத் தெரியவில்லை. நிருபர்கள் விவரமாகச் சொன்னார்கள்."

எனக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. சோமுவேதான் பேசினான்; நான் திகைத்துப் போய்விட்டேன்.

"நான் தங்கத்தைப் பற்றி நினைத்தது தவறு. நம்முடைய பெண்குலமே தனியான குணம் கொண்டு விளங்குவது எனக்கு அப்போது புரியாமல் போய் விட்டது. நான் கால் மட்டுமல்ல கண்ணை இழந்து விட்டிருந்தேன்; கருத்தை இழந்து விட்டிருந்தேன். 'நொண்டி' என்று தெரிந்ததும், என்னை வெறுத்து ஒதுக்கி விடுவாள் தங்கம் என்று எண்ணிக் கொண்டேன். கண்ணப்பா, அப்படி அல்ல; கால் போயிற்றே தவிர கருத்து இருந்தது தெளிவாக. உண்மையை மறைக்கவுமில்லை; எடுத்துச் சொல்லப் பயப்படவில்லை. கூச்சப்படவில்லை. தங்கத்தை ஏமாற்றவில்லை, அவன். ஏமாற்றி அவளை மணம் செய்து கொண்டிருந்தால் நான் கொலைகாரனாகக் கூட ஆகிவிட்டிருப்பேன்...ஆத்திரம் பொல்லாததல்லவா! கண்ணப்பன், புத்தியுள்ளவன். நிலைமையை மறைக்காமல் எடுத்துச் சொல்லியிருக்கிறான். விஞ்ஞான உதவியால், செயற்கைகால் பெற்றிருப்பதைக் காட்டினான். தங்கம் இசைவு அளித்தாள்; திருமணம் நடைபெற்றது. எனக்கு ஏற்படவில்லையே அந்தத் தைரியம்-களங்கமற்ற போக்கு-கோழைத்தனமல்லவா மேலிட்டு விட்டது. உண்மையைச் சந்திக்கப் பயந்து கொண்டு ஓடி ஒளியலானேன், உருமாறிப் போனேன். அவன் வீரன். பிரச்சினையை நேரிடையாகவே சந்தித்தான்—நல்ல முடிவு கிடைத்தது. கால் போய்விட்ட உடனே நான் என் காதல் போய்விடுகிறதே என்று கவலை மேலிட்டு கலங்கிப் போனேன்; தங்கத்தைப் பெறமுடியாது என்று எண்ணம் ஏற்பட்டதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. பொறுப்புகள் எதனையும் மேற்கொள்ளாமல் இருந்து விட்டேன். எனக்குக் கூடத்தான் தெரியும், செயற்கை முறையில் கால் அமைத்துக் கொள்ள முடியும் என்பது. செய்து கொள்ள முயற்சி எடுக்கவே இல்லை. ஏன்? எதற்காக எடுக்க வேண்டும்; தங்கமோ நமக்குக் கிட்டமாட்டாள், நொண்டி! நொண்டி நடந்தாலென்ன? ஊர்ந்து கொண்டு போனால் என்ன? என்று எண்ணும் அளவுக்கு மனம் வெறுத்து விட்டது. கண்ணப்பா அப்படி இல்லை. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. அதற்காக என்ன செய்யலாம். அதையே எண்ணி மனம் உடைந்து போவதா? அது தான் கூடாது. உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்; இருப்பதையே மேலும் செம்மைப் படுத்திக் கொள்வது என்று கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் கோழையாகி விடவில்லை. துன்பத்தின் பிடரியைப் பிடித்து இழுத்து அடித்து விரட்டி வெற்றி பெற்றான்."

"நிருபர்கள் விவரமாகச் சொன்னார்களா?"

"ஆமாம்! அப்போது தான் தெரிந்தது எனக்கு, நான் ஒரு குருடன் என்று விவரமான கட்டுரையே வெளியிடுகிறார்கள். இன்று ஒரு விஷயம் தெரியுமா..அதை நினைக்கும் போதே என் மனச் சங்கடம் யாவும் பறந்தே போகிறது. புது மகிழ்ச்சி கூடப் பிறக்கிறது. ஒரு நிருபர் சற்று துணிச்சலுள்ள ஆசாமி போல இருக்கிறது. எக்கச்சக்கமான கேள்வியைக் கேட்டிருக்கிறார், தங்கத்திடம். என்ன கேள்வி தெரியுமா? "லெப்டினன்ட் கண்ணப்பா நொண்டி என்று தெரிந்ததும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்த காரணம் என்ன? என்று..."

"போக்கிரித்தனமான கேள்வியாக இருக்கிறதே..."

"அப்படித்தான் நானும் கருதுவேன்...சச்சரவே ஏற்பட்டிருக்கும். ஆனால், தங்கம் என்ன பதில் கூறினாள் தெரியுமா?"

"இதற்குப் பதில் வேறு கூறிற்றா அந்தப் பெண்."

"நான்தான் கோழை ஐயா! என் தங்கை தங்கம், மிகுந்த தைரியமுள்ளவள் லெப்டினன்டின் மனைவி அல்லவா! என்ன பதில் தந்தாள் தெரியுமா தங்கம்! நாட்டுப் பாதுகாப்புக்காக காலிழந்தவரைக் கணவராகக் கொள்வதிலே நான் பெருமை அடைகிறேன்" என்றாள்.

அதற்கு மேல் அவனாலும் பேச முடியவில்லை. என்னாலும் முடியவில்லை. இருவரும் நகர் மன்றம் சென்றோம். சோமு, ஊன்றுகோல் இல்லாமல் கூட நடப்பான் போலிருந்தது; அப்படி ஒரு புதிய வலிவு, எழுச்சி, உற்சாகம், பெருமிதம்!!

முற்றும்.