பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 13
13-ஆம் அதிகாரம்
நினையாக் கலியாணம்
ஞானாம்பாள் என்னைத் தவிர வேறொருவருக்கு மாலை சூட்டச் சம்மதியாளென்று நான் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போது சம்பந்தி முதலியார் ஒரே பிடிவாதமாய்ப் பல இடங்களில் விசாரித்து முடிவில் தன் மகளைத் திருநெல்வேலியிலிருக்கும் வீரப்ப முதலியார் குமாரன் சந்திரசேகர முதலிக்கு விவாகஞ் செய்யத் தீர்மானித்தார். அதனைக் கேள்விப்பட்ட உடனே என் தகப்பனாருக்கு ஆக்கிரகம் உண்டாகி, எனக்குக் கோயமுத்தூரிலிருக்கும் சொக்கலிங்க முதலியார் மகள் பூங்காவனத்தை மணஞ் செய்கிறதென்று நிச்சயித்தார். சித்திரை மாசம் இருபத் தெட்டாம் தேதி காலை ஆறு மணிக்குச் சுபமுகூர்த்தம் செய்கிறதென்று, சம்பந்தி முதலியார் நிர்ணயித்தார். அதைக் கேள்விப்பட்ட என் தகப்பனாரும், அந்தத் தினத்தில் அந்த முகூர்த்தத்தில் என்னுடைய விவாகத்தை நிறைவேற்றுகிறதென்று நிர்ணயித்தார். அந்த கலியாணத்தைத் தடுக்க, என் தாயார் கூடியவரையில் பிரயாசப் பட்டார்கள். சம்பந்தி முதலியாருடைய வைராக்கியத்தினாலே என் தகப்பனாருடைய வைராக்கியமும் முற்றி என் தாயார் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போகவேண்டாமென்று என் தகப்பனார் கட்டுப்பாடு செய்துவிட்டபடியால் என் தாயார் தம்முடைய தமையனாராகிய சம்பந்தி முதலியாரைச் சமாதானப் படுத்தவும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது.
எங்கள் ஊருக்கு நாலுகாத வழிதூரத்தில் சம்பந்தி முதலியாருக்கும் எங்களுக்கும் பொதுவாக, பூங்காவூரென்கிற பெயருள்ள ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் இருக்கிற பெரிய மெத்தை வீட்டில் தென்பாதி அவருக்கும் வடபாதி எங்களுக்கும் சொந்தம். சம்பந்தி முதலியார் ஆரம்பித்த கலியாணத்திற்குப் பெண்கள் விவாதம் செய்வதால் உள்ளூரிலே கலியாணஞ் செய்யக்கூடாதென்றும், மேற்படி பூங்காவூர் கிராமத்தில் தம்முடைய பெண்ஜாதி வீட்டில் கலியாணம் செய்கிறதென்றும் நிச்சயித்து, அந்தக் கிராமத்துக்கே நேராய் வந்து சேரும்படி திருநெல்வேலி வீரப்ப முதலியாருக்குச் சம்பந்தி முதலியார் கடிதம் அனுப்பினார். அந்தச் சமாசாரம் என் தகப்பனார் கேள்விப்பட்டு, அவரும் அந்தக் கிராமத்தில் எங்களுடைய வடபாதி வீட்டில் என்னுடைய கலியாணத்தை நிறைவேற்றுகிறதென்று சங்கற்பித்துக் கொண்டு அந்தக் கிராமத்துக்கே பெண் வீட்டுக்காரர்கள் நேராய் வரும்படி கோயமுத்தூருக்குக் கடிதம் அனுப்பினார். சம்பந்தி முதலியார் கலியாணத்துக்கு வேண்டிய சில சாமான்கள் சேகரஞ் செய்து அந்தக் கிராமத்துக்கு அனுப்பினார். என் தகப்பனாரும் முக்கியமான தளவாட சாமான்களையும், அரிசி, பருப்பு, நெய் முதலிய புசிகரணங்களையும் அனுப்பினார். இருவரும் அந்தக் கிராமத்து வீட்டில், அவரவர்கள் பாதியில் பந்தல் போடும்படி திட்டஞ் செய்து அதுவும் முடிந்தது. இந்தக் கலியாண ஆடம்பரங்களையெல்லாம் பார்த்த உடனே ஞானாம்பாளை இழந்துவிட்டோமென்கிற துக்கம் அதிகரித்து, ஒரு தரித்திரன் நெடுங்காலந் தவஞ்செய்து பெற்றுக்கொண்ட திரவியத்தை மறுபடியும் இழந்து விட்டாற்போல அளவற்ற துக்கம் உடையவன் ஆனேன். இவ்வகையாக நான் மனங்கலங்கிக் கொண்டிருக்கும்போது, அந்தக் கலியாணத்துக்கு ஒரு இடையூறு சம்பவித்தது. அஃதென்னவெனில், கலியாணத்துக்கு எட்டுத் தினங்களுக்கு முந்தி சம்பந்தி முதலியார் வீட்டில் அவர் தாயாதிகளில் ஒருவர் இறந்துபோய்த் துக்கம் நேரிட்டு, அதனால் அந்தக் கலியாணத்தைத் தாமதப்படுத்தும்படி சம்பவித்ததால், மாப்பிள்ளை வீட்டார் இப்போது வரவேண்டாமென்று சம்பந்தி முதலியார் திருநெல்வேலிக்கு உடனே கடிதம் அனுப்பிக் கலியாணத்தை நிறுத்திவிட்டார். எங்களுக்கும் அந்தத் துக்கம் உண்டானதால் அந்த விவகாரத்தைக் கண்டு என் தகப்பனாரும் கோயமுத்தூருக்குக் கடிதம் அனுப்பி, தற்காலம் கலியாணத்தை நிறுத்திவிட்டு நிச்சிந்தையாயிருந்தார். கலியாணத்துக்கு முஸ்திப்புச் செய்யப் பூங்காவூருக்குப் போயிருந்த எங்கள் காரியஸ்தர்களும், துக்கம் விசாரிப்பதற்காகச் சத்தியபுரிக்குத் திரும்பிவந்து விட்டார்கள்.
கலியாணம் நிறுத்தலாய்ப் போன விஷயத்தைப்பற்றிக் கோயமுத்தூருக்கு எழுதிய கடிதம் போய்ச் சேர்ந்திருக்குமென்றும், பெண் வீட்டுக்காரர்கள் பயணத்தை நிறுத்தியிருப்பார்களென்றும் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். அப்படியிருக்க எங்களுடைய முந்தின கடிதப்படி பெண்வீட்டுக்காரர்களும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் பூங்காவூருக்கு வந்து அந்த முகூர்த்தத்தில் ஏதோ ஒரு கலியாணம் நடப்பிப்பதாக, எங்கே பார்த்தாலும் ஏகப் பிரஸ்தாபமாகப் பேசிக்கொண்டார்கள். நானாவது ஞானாம்பாளாவது அந்த ஊருக்குப் போகாமலிருக்கக் கலியாணம் எப்படி நடக்கக் கூடுமென்று நாங்கள் ஐயுறவுப் பட்டுக்கொண்டிருக்கும் போது, எனக்குக் குறிப்பிட்ட பெண்ணின் தகப்பனாராகிய சொக்கலிங்க முதலியார், முந்திக் குறிக்கப்பட்ட முகூர்த்த தினத்திற்கு மூன்று நாளைக்குப் பின்பு எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் ஒருவருக்கும் அறிமுகமில்லாதபடியால், அவரை யார் என்று என் தகப்பனார் வினவ, அவர் நான் தான் கோயமுத்தூர் சொக்கலிங்க முதலி; பெரிய வீடென்று பிக்ஷைக்குப் போனால் கரியை அரைத்து மூஞ்சியில் தடவுவதுபோல் என்னை மோசஞ்செய்யலாமா? என்று மிகவும் பரிதாபமாகச் சொன்னார். அதற்கு என் தகப்பனார் துக்க நிமித்தம் கலியாணம் நின்று போன விஷயத்தைப் பற்றி உமக்குக் கடிதம் எழுதியிருந்தேன்; அது வந்து சேரவில்லையா? என்றார். அதற்கு அவர், அந்தக் கடிதம் வந்து சேரவில்லை. உங்களுடைய முந்தின கடிதப்பிரகாரம் நானும் பெண் முதலானவர்களும் புறப்பட்டு, முகூர்த்தத்திற்குச் சற்று நேரத்திற்கு முன் பூங்காவூருக்கு வந்து சேர்ந்தோம். அப்போது தான் திருநெல்வேலி வீரப்ப முதலியாரும், மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்களை எங்களுக்குத் தெரியாது; எங்களை அவர்களும் அறியமாட்டார்கள். அந்தக் கிராமத்திலிருக்கிற வீடு உங்களுக்கும் சம்பந்தி முதலியாருக்கும் பொதுவென்பதும், நீங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அந்த வீட்டில் ஒரே முகூர்த்தத்தில் இரண்டு கலியாணஞ் செய்ய யோசித்திருப்பதும் எங்களுக்குத் தெரியாது. மாப்பிள்ளையும் பெண்ணும் வந்து சேர்ந்தவுடனே அந்த மாப்பிள்ளை தான் என் பெண்ணுக்குக் குறிப்பிட்ட உங்கள் மகனென்று நான் எண்ணிக்கொண்டேன். என் பெண்ணைச் சம்பந்தி முதலியாருடைய பெண்ணென்று மேற்படி வீரப்ப முதலியாரும் எண்ணிக் கொண்டார். எங்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்த அவ்விடத்தில் வேறே மனுஷர்களில்லை. அந்த வீட்டில் கலியாணப் பந்தல் முதலிய சிறப்புகள் செய்யப்பட்டிருந்ததுமன்றி, போஜன பதார்த்தங்களும் சித்தமாயிருந்தபடியால் அந்தத் தினத்தில் முகூர்த்தம் நிச்சயந்தானென்று நினைக்கும்படியாயிருந்தது. உங்களுடைய அந்தஸ்துக்குத் தக்க அலங்காரம் இல்லாதிருந்தபோதிலும் பெண்களுக்குள்ளே கலகமென்று நீங்கள் எழுதியிருந்தமையால், அந்தக் கலகமே அலங்காரக் குறைவுக்குக் காரணமென்று நினைத்துக் கொண்டோம். முகூர்த்த நேரம் வந்துவிட்டதால் இனித் தாமதிக்கக் கூடாதென்று எங்களுடன் கூட வந்த புரோகிதப் பிராமணர்கள் ஒரு பக்கத்தில் அலப்பினார்கள். உங்களுடைய சம்பந்தங் கிடைப்பது அரிதாகையால் அவசரக் காரனுக்குப் புத்திமட்டு என்பதுபோல் நாங்கள் உடனே கலியாணத்தை ஆரம்பித்து அந்த மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் அந்த முகூர்த்தத்திலே விவாகம் நிறைவேற்றி, மாங்கல்ய தாரணமும் ஆய்விட்டது. பிற்பாடு, நானும் அந்த மாப்பிள்ளை வீட்டுக் காரர்களும், கலந்து யோக க்ஷேமங்களைப் பற்றிச் சம்பாஷிக்கத் தொடங்கினபோது, அந்த மாப்பிள்ளை இந்த ஊர்ச் சம்பந்தி முதலியார் பெண்ணுக்கு உத்தேசிக்கப்பட்ட மாப்பிள்ளையென்று எனக்கும், என் பெண் உங்களுடைய மகனுக்காகக் குறிக்கப்பட்ட பெண்ணென்று திருநெல்வேலி வீரப்ப முதலியாருக்கும் தெரிந்து நாங்கள் பட்ட கிலேசம் கடவுளுக்குத்தான் தெரியும். கலியாண வீடு துக்கவீடாகி நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழும்படியான ஸ்திதியில் வந்துவிட்டோம். ஏனென்றால் யுஅஷ்ட தரித்திரம் ஆத்தாள் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடுரு என்பது போல நானும் அந்த வீரப்ப முதலியாரும் பரம ஏழைகள். உங்களுடைய சம்பந்தத்தைப் பெரிதாக எண்ணி நான் வந்தது போலவே, இந்த ஊர்ச் சம்பந்தி முதலியாருடைய சம்பந்தத்தை விரும்பியே, வீரப்ப முதலியாரும் ஆவலுடன் வந்தார். நாங்கள் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது. இனி என்ன செய்வோம்? என்று சொக்கலிங்க முதலியார் துக்கலிங்க முதலியாராய்ப் புலம்பி அழுதார்.
இந்த வர்த்தமானங்களைக் கேட்டவுடனே, மரண தண்டனை அடையும்படி தீர்மானிக்கப்பட்ட ஒருவனுக்கு அந்தத் தண்டனை நிவர்த்தியானால் எவ்வளவு சந்தோஷம் உண்டாகுமோ, அவ்வளவு சந்தோஷத்தை அடைந்தேன். என் தந்தையாருக்குப் பெரிய ஆச்சரியமும் விசனமும் உண்டாயிற்று. என் தாயாருக்கு ஒரு பக்கத்தில் இரக்கமும், ஒரு பக்கத்தில் சந்தோஷமும் ஜனித்தன. உடனே என் தாயார் சொக்கலிங்க முதலியாரைப் பார்த்து காரியம் முடிந்த பிற்பாடு இனி என்ன செய்யலாம்? நீங்கள் விசனப்பட வேண்டாம். நீங்கள் எங்களை நம்பிக் கோயமுத்தூரிலிருந்து இவ்வளவு தூரம் வந்துவிட்டபடியால், உங்களுக்கு நேரிட்ட வழிச் செலவு முதலியவைகளை ஒத்துக் கொள்ளுகிறோம் என்று சொல்லி என் தகப்பனாருடன் ஆலோசித்து, ஆயிரம் வராகன் சொக்கலிங்க முதலியாருக்குக் கொடுத்தார்கள்; உடனே அவர் திருப்தியாகிவிட்டார். அப்படியே வீரப்ப முதலியார் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய்க் காரியங்களைச் சொல்லி முறையிட்டுக் கொண்டதினால் அவருக்கும் ஆயிரம் வராகன் கிடைத்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம். இவ்வகையாக எனக்குக் குறித்த பெண்ணாகிய பூங்காவனத்துக்கும் ஞானாம்பாளுக்குக் குறித்த மாப்பிள்ளையாகிய சந்திரசேகர முதலியாருக்கும் முகூர்த்தம் நிறைவேறி, நானும் ஞானாம்பாளும் எங்கள் பூர்வ ஸ்திதிக்குக் குறைவில்லாமலிருந்தோம். என்னுடைய பிரமசாரித்துவமும் நீங்கவில்லை. ஞானாம்பாளுடைய கன்னிமையுங் கழியவில்லை. எங்களுக்கு நெடுங்காலம் அநுபந்தம் உள்ள சம்பந்தி முதலியாருடைய சம்பந்தத்தை நீக்கி, அந்நிய சம்பந்தஞ் செய்ய ஆரம்பித்தது, தெய்வத்துக்குச் சம்மதம் இல்லாதபடியால் அது தவறிப் போய்விட்டதாக என் தாயார் தகப்பனாருக்கு அடிக்கடி சொல்லி வந்தபடியால், என் தகப்பனார் மறுபடியும் பக்கத்திலே பெண் விசாரிக்காமல் ஆலசியமாயிருந்து விட்டார். ஞானாம்பாளைக் கன்னிகாதானஞ் செய்யும்படி சம்பந்தி முதலியாருக்குப் பல ஊர்களிலிருந்து கடிதங்கள் வந்தும் அவர் வீட்டுப் பெண்டுகளுடைய இடைவிடாத முயற்சியினால் அவர் அந்தக் கடிதங்களுக்கு யாதொரு மறுமொழியும் அனுப்பாமல் அசிரத்தையாய் இருந்துவிட்டதாகக் கேள்விப்பட்டோம்.