பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 14
14-ஆம் அதிகாரம்
ஞானாம்பாள் சிறையில் அகப்பட்டுத் தப்புதல்
சிறை யெடுத்தவன் சீவனை இழந்தது
கோடை நாட்களில் குடும்ப சகிதமாய்க் கிராமாந்தரம் போய்ச் சில நாள் வசிப்பது எங்கள் வழக்கமாயிருந்தது. அந்த வழக்கப்படி அந்த வருஷம் நாங்கள் எங்கும் போகவில்லை. சம்பந்தி முதலியார் எங்கள் ஊருக்கு வடபுறத்தில் இரு காதவழி தூரத்திலிருக்கிற அவருக்குச் சொந்தமான பனம்பள்ளிக் கிராமத்துக்குக் குடும்ப சகிதமாய்ப் புறப்பட்டு அநேகம் வண்டிகள் குதிரைகள் பல்லக்குகளுடன் போனார். அங்கே சில நாளளவு தங்கியிருந்து ஒரு நாள் விடியற்காலத்தில் அந்தக் கிராமத்தை விட்டுப் புறப்பட்டு அவர்கள் எல்லோரும் சத்தியபுரியில் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்து சேர்ந்த சற்று நேரத்திற்குப் பின்பு, அவர்கள் வீட்டிலிருந்து ஜனங்கள் அங்குமிங்கும் ஓடுவதும் கூக்குரலுமாக இருந்தது. நான் என் வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டு என்ன சப்தமென்று விசாரித்தேன். பனம்பள்ளிக் கிராமத்துக்குப் போன எல்லோரும் திரும்பி வந்து வந்துவிட்டதாகவும், ஊருக்கு வந்தபிற்பாடு ஒரு பல்லக்கிலாவது ஞானாம்பாள் இல்லையென்றும் அவள் காணாமல் போயிருக்கிற காரணந் தெரியாமையினால் அவளைத் தேடுவதற்காகப் பல இடங்களுக்கும் ஆட்கள் ஓடுவதாகவும், நான் கேள்வியுற்று அப்படியே திகைத்துத் திடுக்கிட்டுச் சற்று நேரம் மதிமயங்கியிருந்தேன். பிற்பாடு என் தேகம் நிலைகொள்ளாமல் எழுந்து, நானும் என் இஷ்டர் ஒருவரும் இரண்டு பெரிய குதிரைகளின் மேலே ஏறிக்கொண்டு ஆயுதபாணிகளாய் வடக்கே நோக்கிப் புறப்பட்டோம். ஞானாம்பாளைத் தொடர்ந்து கொண்டு ஓடுவதுபோல் அதிவேகமாகச் சென்று பல இடங்களிலும் தேடி ஆராய்ந்துகொண்டு பனம்பள்ளி கிராமத்துக்குப் போய் விசாரித்தோம். அங்கும் ஞானாம்பாள் இல்லையென்று தெரிந்து உடனே புறப்பட்டு வடக்கு ரஸ்தா வழியே போனோம். அந்தக் கிராமத்துக்குக் காதவழி தூரத்தில், அஸ்தமிக்கிற சமயத்தில் ஒரு சிறிய சகடம் ரஸ்தாவில் கொஞ்ச தூரத்தில் எங்களுக்கு நேரே வந்தது. அந்த வண்டியை நாலு பேர் வளைத்துக் கொண்டு, தெற்கே வருகிற வண்டியைப் பலவந்தமாய் வடக்கே திருப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் இரண்டு பேர் குதிரையின் மேலும், இரண்டு பேர் பாதசாரிகளாயும் இருந்தார்கள். அவர்கள் வண்டியைத் திருப்பும்போது அந்த வண்டியிலிருந்து பெண்களுடைய கூக்குரல் ஒலி கிளம்பிற்று. அந்த துஷ்டர்கள் நாங்கள் வருவதைப் பார்த்தவுடனே, குதிரையின் மேலிருந்த இருவர்களும் கத்திகளை உருவிக் கொண்டு எங்களை வெட்டுவதற்காக ஓடி வந்தார்கள். அவர்கள் எங்கள் சமீபத்தில் வருவதற்குமுன், குண்டுகள் போட்டுக் கெட்டிக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை அவர்கள் மேலே பிரயோகித்தோம். குதிரையின் மேலிருந்த இருவர் தேகங்களிலும் குண்டுகள் பட்டுக் கீழே விழுந்துவிட்டார்கள். அவர்களைப் போய் வளைக்கும்படி என்னுடைய நேசருக்குச் சொல்லிய பின்பு வண்டியிலிருக்கிற ஸ்திரீகள் இன்னாரென்று அறியும் பொருட்டு, நான் குதிரையை விட்டுக் கீழே குதித்து வண்டிக்குப் பின்புறத்திலே போனேன். அந்த வண்டியிலிருந்த இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி என்னைக் கண்டவுடனே பெருஞ்சப்தமாய்க் கூவிக்கொண்டு வண்டியை விட்டுக் கீழே விழுந்தாள். அந்தச் சத்தம் ஞானாம்பாளுடைய குரலாயிருந்ததால் அவளை என் கையாலே தூக்கி நிறுத்தி முகத்தை உற்றுப் பார்த்தேன். அவள் தேகத்தில் ஒரு ஆபரணமுமில்லாமல் ஆண்டிச்சிகள் போலக் காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு, முகத்திலே எதையோ பூசிக்கொண்டு, அழுக்குப் படிந்த தங்கப் பிரதிமை போல் உருமாறியிருந்தாள். அவளைப் பார்த்து ஞானாம்பாள்! ஏனிப்படி யிருக்கிறாய்? என்று கேட்டேன். அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டு என்னைச் சீக்கிரத்தில் பனம்பள்ளிக் கிராமத்துக்குக் கொண்டுபோய்ச் சேருங்கள். சகல காரியங்களையும் பிற்பாடு தெரிவிக்கிறேன் என்று நடு நடுங்கிக் கொண்டு சொன்னாள். அவளை உடனே தூக்கி வண்டியில் உட்காரவைத்து வண்டியைச் சீக்கிரமாக விடும்படி வண்டிக்காரனுக்கு உத்தரவு கொடுத்து, நான் குதிரையின் மேலேறிக் கொண்டு நானும் என்னுடைய சிநேகிதரும் வண்டிக்கு முன்னும் பின்னுமாகப் போனோம். குண்டு போட்டு மாண்டுபோனவர்களுடன் பாதசாரியாய் வந்த இருவர்களையும் பின்கட்டு முறையாகக் கட்டி அவர்களையும் கூடக் கொண்டுபோனோம். அன்று இராத்திரி எட்டு மணிக்குச் சம்பந்தி முதலியாருடைய பனம்பள்ளி கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அவ்விடத்திலே சம்பந்தி முதலியாரும் பின்னும் அநேகரும் ஏகமாய்க் கூட்டங்கூடி மூலைக்கு மூலை ஆள் அனுப்பியும் ஒரு செய்தியுந் தெரியாமல், அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். ஞானாம்பாளைக் கண்ட மாத்திரத்தில் அவளைக் கட்டிக்கொண்டு சம்பந்தி முதலியாரும் அவர் பத்தினி முதலானவர்களும் பட்ட துயரமும் அழுத அழுகையும் இவ்வளவென்று சொல்லி முடியாது. அவள் உருமாற்றமாய் அப்போதிருந்த கோலத்தைப் பார்த்தவர்கள் யார்தான் மனம் இளகாமலிருப்பார்கள்? அவள் அன்றைய தின முழுதும் அன்ன பானாதிகள் இல்லாமல் பசிக்களையாயிருப்பதாகத் தெரிந்து, உடனே அவளையும் அவளுடன் கூடவந்த ஆண்டிச்சியம்மாளையும் ஸ்னானம் செய்யும்படி சொல்லி அவர்கள் போஜனஞ் செய்த பிற்பாடு அன்றைய தினம் நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லும்படி நாங்கள் கேட்க ஞானாம்பாள் சொல்லத் தொடங்கினாள்:
இன்றைய தினம் விடியற்காலம் நாலு மணிக்கு இந்தக் கிராமத்திலிருந்து, எல்லாரும் நம்முடைய ஊருக்குப் பிரயாணமாகும்போது நானும் எழுந்து வெளியே வந்து எந்தப் பல்லக்கில் ஏறிக்கொள்ளலாமென்று பார்த்து வருகையில் சில சிவிகையார் ஒரு பல்லக்கை எனக்குக் காட்டி “இதில் ஏறிக் கொள்ளுங்கள் அம்மா” என்றார்கள். நான் உடனே அந்தப் பல்லக்கில் ஏறிக்கொண்டு, அப்போது அதிக இருட்டாயிருந்ததனால் கதவை மூடிக்கொண்டு பல்லக்கிலே படுத்துக்கொண்டேன். பல்லக்குத் தூக்குகிறவர்கள் வழக்கப்படி சப்தமிட்டுக் கொண்டு, ஓடினார்கள். நான் உடனே கண்ணை மூடிக்கொண்டு நித்திரை போய்விட்டேன். பிற்பாடு சூரியோதய நேரத்தில் நான் விழித்துப் பல்லக்கின் கதவைத் திறந்து பார்த்தபோது, தெற்கு முகமாய்ப் போக வேண்டிய பல்லக்கு வடக்குமுகமாய் ஓடிக்கொண்டிருப்பதாகத் தெரிந்தது. மற்றப் பல்லக்குகளும் வண்டி குதிரை முதலிய வாகனங்களும் கூட வருகின்றனவாவென்று அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் எட்டி எட்டிப் பார்த்தேன். என் பல்லக்கைத் தவிர வேறே ஒரு வாகனத்தையாவது சொந்த மனுஷர்களையாவது நான் பாராதபடியால் எனக்குச் சந்தேகமுண்டாகி சிவிகையாரைக் கூப்பிட்டு பல்லக்கு வடக்கே போவதற்குக் காரணம் என்ன வென்றும், மற்ற வாகனங்களெல்லாம் எங்கே யென்றும் கேட்டேன். அவர்கள் மாறுத்தரம் சொல்லாமல் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். வழியில் யாராவது வந்தால் அவர்களை விசாரிக்கலாமென்று இரு பக்கமும் பார்த்துக் கொண்டு போனேன். வெகு தூரம் வரையில் ஒருவரும் வரவில்லை. இன்னது செய்கிறதென்று தெரியாமல் நான் திகைத்துப் போயிருக்கும்போது சிவிகையார் ரஸ்தாவுக்கு மேற்கே கொஞ்ச தூரத்தில் ஒரு கள்ளுக் கடையைக் கண்டு, கள்ளுக் குடிப்பதற்காகப் பல்லக்கை ரஸ்தாவில் நிறுத்திவிட்டுக் கள்ளுக் கடைக்குப் போய்விட்டார்கள். தப்புவதற்குச் சமயம் இது தானென்றும் இது தப்பினால் வேறு சமயம் வாய்க்காதென்றும் எண்ணி, உடனே நான் கீழ்ப்புறத்துக் கதவைத் திறந்துகொண்டு கீழே குதித்து அந்தக் கதவை மூடிவிட்டுப் பல்லக்கின் மறைவிலேபோய் ரஸ்தாவுக்குக் கீழ்ப்புறமிருக்கிற காட்டுக்குள் நுழைந்துவிட்டேன். அது அடர்ந்த காடானதால் அதற்குள்ளே இருக்கிறவர்களை ஒருவரும் கண்டுபிடிக்க முடியாது. என்னுடைய காலில் இருந்த பாதரஸம், தண்டை முதலியவைகள் சப்திக்காதபடி அவைகளைக் கழற்றி மடியில் வைத்துக் கொண்டு முள்ளிலும் கல்லிலும் விழுந்து ஓட ஆரம்பித்தேன். அந்தக் காட்டில் மனுஷருடைய கால் அடியே இல்லாதபடியால் நான் குறுக்கே விழுந்து எனக்குச் சக்தி உள்ளமட்டும் ஓடினேன். மரக் கொம்புகள் என் மயிரைப் பிடித் திழுக்க, செடிகளெல்லாம் சேலையைக் கிழிக்க, முன்னேயிருக்கிற மரம் முட்டித் தள்ள, பின்னே யிருக்கிற மரம் பிடித்துத் தள்ள, பக்கத்து மரங்கள் பாய்ந்து தாக்க, இவ்வகையாக நான் வெகுதூரம் ஓடின பிற்பாடு கொஞ்ச தூரத்தில் ஒரு சிறிய மண்டபத்தைக் கண்டு, அதற்கு நேரே ஓடினேன். அந்த மண்டபத்தில் இந்த ஆண்டிச்சி அம்மாளைத் தவிர வேறொருவரும் இல்லை. இந்த அம்மாள் என்னைக் கண்ட உடனே “நீ ஆர் அம்மா! உன்னைப் பார்த்தால் பரதேவதை போல் இருக்கிறதே! நான் பூசை செய்து வந்த தெய்வம் பெண் வடிவங்கொண்டு பிரத்தியக்ஷமாய் வந்ததுபோல் இருக்கிறதே!” என்று என்னை ஸ்தோத்திரம் செய்தார்கள். நான் அந்த அம்மாளுக்கு நமஸ்காரஞ்செய்து நான் தெய்வம் அல்ல. மனுஷி தான் என்று நடந்த காரியங்களெல்லாம் தெரிவித்து என்னை ரக்ஷிக்கவேண்டுமென்று பிரார்த்தித்தேன். அவர்கள் மனம் இரங்கி என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார்கள். எப்படியாவது என்னைப் பனம்பள்ளி கிராமத்துக்குக் கொண்டுபோய் விடவேண்டும் என்று விண்ணப்பஞ் செய்தேன். அந்தத் துஷ்டர்கள் துரத்திக் கொண்டு வந்தால் என்னைக் கண்டுபிடிக்காதபடி, ஆபரணங்களையெல்லாம் கழற்றி ஒரு துணியில் முடிந்து கொண்டு, ஒரு காவி வஸ்திரத்தை எனக்குத் தரிப்பித்து என்னை உருமாற்றி, அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். நாங்கள் தெற்குமுகமாய்ப் போகிற ஓரடிப் பாதைவழியாய் வெகுநேரம் நடந்தபிற்பாடு ரஸ்தாவில் வந்துசேர்ந்தோம். அந்த ரஸ்தாவில் நடக்க எனக்கு மனமே இல்லை. ஆயினும் வேறே மார்க்கம் இல்லாதபடியாலும் எனக்குக் கால் நடக்கக் கூடாமல் வீக்கமா யிருந்தபடியால் வழியே ஒரு பாய் வண்டியை வாடகைக்கு அமர்த்தி, அதன்மேலே நாங்கள் இருவரும் ஏறிக்கொண்டு அதிக நடுக்கத்துடன் செல்லும்பொழுது அஸ்தமிக்கிற சமயத்தில் வடக்கே இருந்து இரண்டு குதிரைக்காரர்களும் இரண்டு காலாட்களும் ஓடி வந்தார்கள். அவர்களைப் பார்த்த உடனே புலியைக் கண்ட பசு போல் நாங்கள் பயந்து பாதிப் பிராணனாய்ப் போய் விட்டோம். அவர்கள் வண்டிக்குப் பின்னே வந்து, என்னை உற்றுப் பார்த்து, எப்படியோ நான் தானென்று கண்டுபிடித்துக் கொண்டு, வண்டியை வடக்கே திருப்பச் சொல்லி வண்டிக்காரனை அடித்தார்கள். அந்தச் சமயத்தில் அத்தானும் அவருடைய சிநேகிதரும் குதிரைமேல் ஏறிக்கொண்டு தெற்கே இருந்து ஓடிவந்தார்கள். அவர்களை வெட்டுவதற்காக வடக்கே இருந்து வந்த இரண்டு குதிரைக்காரர்களும் கத்தியை உருவிக்கொண்டு நெருங்கினார்கள். உடனே அவர்கள் மேலே அத்தான் பிரயோகித்த குண்டுகள் பட்டு அவர்கள் கீழே விழுந்துவிட்டார்கள். பிற்பாடு நடந்த சங்கதிகளெல்லாம் அத்தானைக் கேட்டால் தெரியும் அந்தச் சமயத்தில் அத்தான் வந்து உதவாவிட்டால் என்னை மறுபடியும் நீங்கள் காணமாட்டீர்கள் என்று ஞானாம்பாள் சொல்லி முடித்தாள்.