பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 19
19-ஆம் அதிகாரம்
பிரதாப முதலியாரின் விவாக மகோத்சவம்
குணரத்தினம் என்னும் பெண்ணின் சரித்திரம்
அவர்கள் போன பிற்பாடு எனக்கும் ஞானாம்பாளுக்கும் அதி சீக்கிரத்தில் விவாகம் முடிக்க வேண்டு மென்று சம்பந்தி முதலியார் அவசரப்பட்டார். அவருடைய துரிதத்தைப் பார்த்தால் அன்றையத் தினமே கலியாணம் முடிந்தாலும் அவருக்குச் சந்தோஷமாயிருக்குமென்று தோன்றிற்று. என்னுடைய மனோபீஷ்டமும் அப்படியே இருந்தது. ஆனால் என் தாய் தந்தைமார்கள் தூரத்திலிருக்கிற பந்து ஜனங்களும் தேவராஜப் பிள்ளை கனகசபை முதலானவர்களும் கலியாணத்துக்கு வரும்படியான சாவகாசத்தை யோசித்து முகூர்த்தம் நியமித்ததனால் கலியாணம் இருபது நாள் பிந்திப்போய் விட்டது. அந்த இருபது நாளும் இருபது யுகங்களைப் போல் இருந்தன. அந்தக் காலத்தைத் தொலைக்க என்னால் கூடியவரையில் பிரயாசப்பட்டும் தொலையவில்லை. தன்னுடைய இஷ்டப்படி கண்ட இடமெல்லாம் ஓடித் திரிகிற துஷ்டக்காளை வண்டியிற் கட்டின உடனே படுத்துக் கொள்வது போல, அதற்கு முன் அதி துரிதமாக ஓடிக்கொண்டிருந்த காலமானது இப்போது சுத்தமாய் அசையாமல் நின்றுவிட்டது. கடைசியாய் அந்தக் காலமும் முடிந்தது; ஞானாம்பாளுக்கும் எனக்கும் கலியாணமும் முடிந்தது. அந்தக் கலியாண மகோற்சவ வைபவத்தைப் பிறர் சொல்லவேண்டுமே அல்லாது நான் சொல்லிக்கொள்வது தற்புகழ்ச்சியாய் முடியும். அன்றியும் ஞானாம்பாளை நான் மாலை சூட்டப்பெற்ற பாக்கியத்தைப் பார்க்கிலும் மற்றக் கலியாண சம்பிரமங்கள் விசேஷமல்ல. ஆகையால் அவைகளை விவரிக்காமல் விட்டுவிடுகிறேன். தேவராஜப் பிள்ளையும் கனக சபை முதலானவர்களும் என் கலியாணத்திற்குக் கூட வந்திருந்து எண்ணிக்கை இல்லாத ஆடை ஆபரணங்களும் பாத்திர சாமான்களும் சம்மானம் செய்தார்கள். நாங்கள் அவர்களுக்குப் பதில் மரியாதையும் செய்தோம். நாங்கள் செய்தது அணுவாகவும் அவர்கள் எங்களுக்குச் செய்தது மலையாகவும் போய்விட்டது; அதனால் எங்களுக்கு வெட்கமுண்டாகி; அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பாகக் கனகசபை கலியாணத்தில் மரியாதை செய்கிற தென்று சங்கற்பித்துக் கொண்டோம். கனக சபைக்கு எப்போது விவாகமென்றும் எங்கே பெண் பார்த்திருக்கிறீர்களென்றும் தேவராஜப் பிள்ளையை என் தகப்பனார் கேட்க, அவர் சொல்லுகிறார்:—
”என் தங்கை பெண்ணைக் கனகசபைக்கு மணஞ்செய்கிறதென்று நிச்சயித்திருக்கிறோம். அந்தப் பெண் பெயர் குணரத்தினம். அந்தப் பெண்ணுடைய சரித்திரம் கனகசபை சரித்திரம் போல் ஆசாரியப்படத்தக்கதா யிருக்கின்றது. என் தங்கை புருஷன் மாணிக்கம்பிள்ளை பெரிய தனவான். எங்கள் ஊருக்கு நாற்பதுகாத வழி தூரத்திலிருக்கிற சிங்கனூர் அவருடைய வாசஸ்தலம். குணரத்தினத்தைத் தவிர வேறே பிள்ளை இல்லாதபடியால் அந்தப் பெண்ணைக் கண்ணுக்குக் கண்ணாகவும் உயிருக்கு உயிராகவும் வளர்த்தார்கள். அந்தப் பெண் சிறு குழந்தையா யிருக்கும்போது ஒரு அமாவாசை இராத்திரியில் அனேக ரத்னாபரணங்களுடன் தொட்டியிலே படுத்துத் தூங்கிற்று. ஒரு திருடன் நடுச்சாமத்தில் எவ்வகையாகவோ உள்ளே நுழைந்து, அந்தப் பெண் தரித்திருந்த நகைகளைக் கழற்றப் பிரயாசைப் பட்டுங் கூடாமலிருந்ததால், வெளியில் கொண்டுபோய் நகைகளைப் பறித்துக் கொள்ளலாமென்று நினைத்து அந்தப் பிள்ளையை மிருதுவாய்த் தூக்கிக்கொண்டு தெருக் கதவைத் திறந்து வெளியே ஓட ஆரம்பித்தான். அந்த அரவங் கேட்டு என் மைத்துனரும் மற்றவர்களும் விழித்துக் கொண்டு தொட்டிலில் பிள்ளயைக் காணாமையால் உடனே திருடனைத் தொடர்ந்து கொண்டு ஓடினார்கள். அந்தத் திருடன் வெகு தூரம் முன்னும், இவர்கள் பின்னுமாக ஓடும்போது அந்தத் திருடன் பயந்துகொண்டு சமீபத்திலிருந்த ஐயனார் கோவிலுக்குள்ளே நுழைந்து அந்தப் பிள்ளையை விக்கிரகத்தின் பாதத்தில் வைத்துவிட்டு அந்த விக்கிரகத்தின் பின்னாலே மறைந்து கொண்டான். என் மைத்துனர் முதலானவர்கள் நக்ஷத்திர வெளிச்சத்தில் ஒருவன் கோயிலுக்குள் நுழைந்ததைப் பார்த்த படியால் அவர்களும் கோயிலுக்குள்ளே புகுந்தார்கள். அந்தத் திருடன் இனி மேல் எப்படியும் அகப்பட்டுக் கொள்வோம்; ஆயினும் ஒரு உபாயஞ் செய்து பார்ப்போம் என்று நினைத்து அந்த ஐயனார் பேசுவது போல் தன் குரலை வேறுபடுத்திக் கொண்டு சொல்லுகிறான்: ஓகோ! துஷ்டர்களே! இந்தப் பிள்ளைமேல் நமக்குக் கிருபை உண்டாகி அதை ஆசீர்வதித்துச் சகல வரப்பிரசாதங்களையும் கொடுத்து அனுப்பலாமென்று யோசித்து, நான் அந்தப் பிள்ளையைக் கொண்டுவந்திருக்க, அந்த உபகாரத்தை நீங்கள் எவ்வளவும் யோசிக்காமலும் தேக சுத்தி, இருதய சுத்தி இல்லாமலும் என்னுடைய ஆலயத்திலும் வந்து பிரவேசித்தீர்கள்! ஒரு நிமிஷத்தில் உங்கள் குடலைப் பிடுங்கி மாலையாய்ப் போட்டுக் கொள்ளுவேன்! ஆனால் அந்தப் பிள்ளைமேல் இருக்கிற கருணையால் உங்கள் குற்றத்தை க்ஷமிக்கிறேன்! அந்தப் பிள்ளையை இந்த இராத்திரி மட்டும் நீங்கள் விட்டுவிட்டுப் போனீர்களானால் அதற்குச் சகல அனுக்கிரகமும் செய்து வைத்திருக்கிறேன்; நீங்கள் பிராதக் காலத்தில் வந்து, பிள்ளையை எடுத்துக்கொண்டுபோகலாம்; இதற்கு நீங்கள் சம்மதிக்காவிட்டால் அந்தப் பிள்ளையையுங் கொன்று, உங்களயும் குலநாசஞ் செய்வேன் என்றான். என் மைத்துனர் மூடபக்தி யுள்ளவரானதால் அந்தத் திருடன் சொன்னதைத் தெய்வ வாக்காக எண்ணி அந்த விக்கிரகத்தைச் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி சுவாமி, தங்கள் சித்தப் பிரகாரம் அந்தக் குழந்தைக்கு அனுக்கிரகம் செய்தருளவேண்டும் என்று மொழிந்து, தன்னுடைய ஆட்களையும் அழைத்துக்கொண்டு போய்விட்டார்.
“அவர்கள் போனபிற்பாடு அந்தத் திருடன் நகைகளையெல்லாம் ஒவ்வொன்றாகக் கழட்டிக்கொண்டு குழந்தையைக் கோயிலில் வைத்துவிட்டு வெளியே ஓடினான். அந்தக் கோயிற் பூசாரி வழக்கப்படி விடியற்காலத்திலே கோயிலுக்கு வந்து யாரோ திருடன் ஓடுகிறானென்று துரத்தினான். அந்தத் திருடன் பெரிய கற்களை எடுத்து வீசினபடியால், அந்தக் கல்லடி பட்டுப் பூசாரி நின்று போனான். பிற்பாடு கோயிலுக்குள் அழுகிற குழந்தையைப் பார்த்து இது யாருடைய குழந்தையோவென்று பூசாரி ஆலோசித்துக் கொண்டிருக்கையில், என் மைத்துனர் முதலானவர்கள் குழந்தைக்கு இதுவரையில் அனுக்கிரகமாயிருக்குமென்று நினைத்துக் கோயிலுக்கு வந்து, பூசாரியைக் கண்டு இராத்திரி ஐயனார் திருவாய் மலர்ந்தருளியதைச் சொன்னார்கள். இதைக் கேட்டவுடனே, கோயிற்பூனை தேவருக்கு அஞ்சாது என்பது போல் அந்தப் பூசாரிக்கு அடக்கக் கூடாத பெருஞ்சிரிப்பு வந்துவிட்டது. அவன் சிரிப்பு முடிந்தபிற்பாடு என் மைத்துனரைப் பார்த்துத் தான் வரும்போது கோயிலுக்குள்ளிருந்து திருடன் வெளியே ஓடினதும் தான் துரத்திக் கொண்டு போனதும் அவன் கல்லால் வீசித் தன்னைக் காயப்படுத்தினதும் பரிஷ்காரமாய்த் தெரியப் படுத்திப் பின்னும் பூசாரி சொல்லுகிறான்:—
உங்களைப் போலவே நானும் சில காலத்துக்குமுன் மோசம் போனேன். ஒரு நாள் சுவாமிக்குப் படைத்த அன்னம், பழம், தேங்காய் முதலான பிரசாதங்களை வழக்கப்படி எடுத்துக் கட்டிக்கொண்டு நான் வீட்டுக்குப் போக யத்தனப்பட்டபோது ஐயனார் விக்கிரகத்தினின்று ஒரு அசரீரி வாக்குப் புறப்பட்டது. அதென்னவெனில் அடா! பாதகா! தினந்தோறும் எனக்குக் கொஞ்சமாவது வைக்காமல் பிரசாதங்கள் முழுதும் நீ கொண்டுபோய் விடுகின்றாயே! நான் எத்தனை நாளுக்குப் பசி பொறுப்பேன்? இனி நீ பிரசாதங்களைக் கொண்டுபோயானால் உன்னையே எடுத்துப் புசித்துவிடுவேன்— என்றது. நான் இதைத் தெய்வ வாக்காக நினைத்து அன்றுமுதல் பிரசாதங்களைக் கொண்டு போகாமல் சுவாமி முன்பாக வைத்துவிட்டுப் போகிறது வழக்கம். மறு நாட் காலையில் அந்தப் பிரசாதம் இல்லாமலிருந்த தால் ஐயனார் புசித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு பிச்சைக்காரன் விக்கிரகத்துக்குப் பின்னே இருந்துகொண்டு ஐயனார் பேசுவதுபோற் பேசிப் பிரசாதங்களையும், தினந்தோறும் சாப்பிட்டு வந்ததாகச் சில நாளைக்குப் பிறகு தெரிந்து அவனையும் பிடித்துத் தகுந்த சிட்சையும் செய்தோம். அப்படியே ஒரு திருடன் உங்களையும் மோசஞ் செய்திருக்கிறான் என்று பூசாரி சொன்ன பிற்பாடு என் மைத்துனருக்குப் புத்தி வந்தது. இந்தச் சமாசாரங்களெல்லாம் பிற்பாடு நான் கேள்விப்பட்டேன். அந்தக் குழந்தை வெகு நேரமாய்ப் பால் குடியாமலிருந்ததால் மிகுந்த பசி உண்டாகிக் களைத்துப்போய் விட்டது. அந்தக் குழந்தைக்குப் பால் கொடுத்து அது பிழைப்பதே அரிதாய்விட்டது. இதற்குச் சில வருஷங்களுக்குப் பின்பு என் மைத்துனர் இறந்துபோனார். என் தங்கைக்குப் புருஷ காபந்து இல்லாததனாலே அவள் கையிலிருந்த சொத்துக்களுடன் அவளும் அவளுடைய பெண்ணும் என் கிரஹத்துக்கு வந்து விட்டார்கள். அவளுடைய பூஸ்திதிகளையெல்லாம் நானே பராமரித்து வருகிறேன். கனகசபை ஜீவிப்பதிருப்பது எனக்குத் தெரியாமலிருந்த காலத்தில் அந்தப் பெண்ணுக்குத் தகுந்த வரன் தேடி விவாகம் செய்ய நிச்சயித்திருந்தேன் செங்கற்பட்டு ஜில்லா கலெக்டர் கச்சேரி சிரஸ்ததார் அந்தப் பெண்ணைக் கொள்ள விரும்பி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். நான் யோசித்து முடிவு சொல்கிறேனென்று பறுமொழி எழுதினேன். காணாமற்போன திரவியம் அகப்பட்டதுபோல் கனகசபை என்னிடம் வந்து சேர்ந்த பிற்பாடு அவனுக்கே அந்தப் பெண்ணைச் சுயம்வரம் செய்கிறதென்று நினைத்திருக்கிறேன். கனக சபையினுடைய கருத்தும் அந்தப் பெண்ணுடைய கருத்தும் அப்படியே இருப்பதாகப் பல குறிப்புகளாலே தெரிந்து கொண்டேன். இந்த விவரங்களெல்லாம் கண்டு மேற்படி சிரெஸ்ததாருக்குக் கடிதம் அனுப்பினேன். அவனுக்குப் பெண் கொடுக்க வில்லை என்கிற கோபத்தினால் அவன் எனக்கு எவ்வகையிலாவது தீங்கு செய்யவேண்டுமென்று நினைத்திருப்பதாகக் கேள்விப்படுகின்றேன். எனக்கு ஒரு புத்திரன் பிறந்து இறந்துபோனதாகவும் வேறே பிள்ளை இல்லையென்றும் நான் சந்ததி இல்லாமல் இறந்துபோனால் என் பாளையப்பட்டைக் கவர்ன்மெண்டார் கட்டிக் கொள்வார்களென்று பயந்து ஒரு பிள்ளை காணாமற் போயிருந்து அகப்பட்டது போல நான் மாறுபாடு பண்ணுவதாகவும் அந்தச் சிரெஸ்ததார் கலெக்டருக்குப் போதித்து என்னுடைய பாளையப்பட்டை ஜப்தியில் வைக்கப் பிரயாசைப் படுகிறானாம். இதற்கெல்லாம் நான் எவ்வளவும் பயப்படவில்லை. நியாயமும் சத்தியமும் நம்முடைய பக்ஷத்திலிருக்கும் போது நமக்கு யார் என்ன செய்யக் கூடும்? நான் சீக்கிரத்தில் கனகசபைக்கு முகூர்த்தம் பார்த்துத் தெரிவிக்கிறேன். நீங்கள் விஜயஞ் செய்து தம்பதிகளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று சொல்லிக் கனகசபை தகப்பனாரும் மற்றவர்களும் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.