பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 18


18-ஆம் அதிகாரம்
ஆண்டிச்சி யம்மாளுக்கு அதிர்ஷ்டத்தின் மேல்
அதிர்ஷ்டம் சம்பவித்தல்

ஆண்டிச்சி யம்மாளுடைய புருஷனும் நாங்களும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு பெரியவரும் ஒரு யௌவனமான குமாரனும் உள்ளே வந்து நுழைந்தார்கள். அவர்கள் யாரென்றால் ஆண்டிச்சி அம்மாளுடைய தகப்பனாரும் பிள்ளையுந்தான். அந்த நால்வரும் சந்தித்த உடனே அவர்கள் பட்ட கிலேசமும் ஆநந்தமும் இப்படிப் பட்டது என்று விவரிக்க ஒருவராலும் கூடாது. இதுவரையில் பிரிந்திருந்த துக்கமும் பிறகு எப்படியாவது சந்தித்தோமே என்கிற ஆனந்தமும் கூடி ஒரு வீட்டில் ஒரு காலத்தில் துக்கமும் கலியாணமும் நடப்பது போல் ஆயிற்று. நாங்கள் அவர்கள் அழும்போது அழுகிறதும், அவர்கள் சந்தோஷிக்கும்போது சந்தோஷிக்கிறதுமாய் இருந்தோமே தவிர வேறு செயல் அற்றவர்களாயிருந்தோம். அந்த ஆதாளி அடங்கின பிற்பாடு நாங்கள் அந்தப் பெரியவரைப் பார்த்து “ஐயா! நீங்கள் பிள்ளையைத் தேடிக் கொண்டு போன பிற்பாடு நடந்த காரியம் என்ன?ரு என்று வினவ, அவர் சொல்லுகிறார்:—

““நான் என்னுடைய ஊரிலே பிள்ளையைத் தேடிக் கொண்டுபோனபோது ஒருவன் என்னைக் கண்டு “கடலோரத்தில் ஒரு பிள்ளையை ஒருவன் கப்பலுக்கு வரும்படி இழுத்துக் கொண்டிருந்தான். அந்தப் பிள்ளை போக மாட்டேனென்று அழுதுகொண்டிருந்தது” என்று எனக்குத் தெரிவித்தான். நான் உடனே சமுத்திரக் கரைக்கு ஓடினேன்; அவ்விடத்திலே பிள்ளையைக் காணாமையினால் ஒரு தோணியில் ஏறிப் போய்க் கப்பல் மேலே ஏறினேன். அங்கே இவன் என்னைப் பார்த்த உடனே ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு அழுதான்; அந்தக் கப்பல் திருட்டுக் கப்பலென்று பல அனுமானங்களால் நிதானித்துக் கொண்டேன். கப்பலில் இருந்தவர்களைப் பார்த்து “இந்தப் பிள்ளையை ஏன் கொண்டுவந்தீர்கள்” என்று நான் கேட்க, அவர்கள் நேரான மறுமொழி சொல்லாமல் என்னை நிராகரித்துப் பேசினார்கள். நான் அவர்களைப் பார்த்து “இந்தப் பிள்ளை தரித்திருக்கிற ஆபரணங்களையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்; பிள்ளையை மட்டும் என் வசத்தில் விட்டுவிடுங்கள்” என்று தொழுதேன்; என் பேச்சு முடிவதற்கு முன்னமே கப்பல் ஓட ஆரம்பித்தது. உடனே அந்தக் கப்பல் கேப்டனிடத்தில் ஓடி அழுதேன். அந்தப் பாவிக்கும் இரக்கம் வரவில்லை; அந்தக் கப்பலில் இன்னும் அநேகர் பலவந்தமாக ஏற்றப்பட்டிருந்தார்கள்; நாங்கள் அழுத கண்ணீர்ச் சமுத்திரம் அந்தத் தண்ணீர்ச் சமுத்திரத்தை ஒத்தது. அவர்கள் பிள்ளைமேல் இருந்த ஆபரணங்களைக் கழற்றிக் கொண்டு, பல தீவாந்தரங்களுக்குப் போய்க் கடைசியாய் அமெரிக்காவில் எங்களை அடிமைகளாக விற்றுப்போட்டார்கள். அவ்விடத்தில் நாங்கள் பல பேர்களுக்கு அடிமைகளாகி, நாங்கள் பட்ட கஷ்டங்களை நீங்கள் கேள்விப்பட்டால் அழாமல் இருக்கமாட்டீர்கள். கடைசியாய் ஒரு ஐரோப்பியத் துரையை அநுசரித்து, அவருடைய உத்தியோக சாலையில் நான் ஒரு தகுந்த உத்தியோகத்தில் அமர்ந்து இந்தப் பிள்ளையையும் சம்ரக்ஷித்து அவனுக்கு வித்தியாப்பியாசமுஞ் செய்வித்தேன். அந்தத் துரையினுடைய தயவினாலே நாங்கள் மறுபடியும் கப்பலேறி புதுச்சேரித் துறைமுகத்தில் இறங்கி வீட்டுக்குப் போனோம்; அங்கே என் மகளைக் காணாமையினால் நாங்கள் உடனே புறப்பட்டுப் பல ஊர்களிலே தேடிக்கொண்டு அவளுடைய சிறிய தாயாருடைய வீட்டுக்கு வந்தோம்; என்னுடைய மகள், உங்களுடைய பெண்ணை அழைத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு நாங்களும் இவ்விடம் வந்தோம்; யுத்தத்துக்குப் போன என் மருமகன் திரும்பி வந்துவிட்டதாக நாங்கள் கேள்விப்பட்டிருந்தாலும் இங்கே அவரைக் காண்போம் என்று நாங்கள் நினைத்து வரவேயில்லை; கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல், என்னுடைய மகளையும், மருமகனையும் உங்களுடைய வீட்டிலே பார்க்கும்படி லபித்ததால் என்னைப் போல பாக்கியசாலிகள் ஒருவரும் இருக்கமாட்டார்கள்”“ என்றார். உடனே அவர்களுடைய மருமகன் குதூகலத்துடனே எங்களைப் பார்த்து ““ஐயா! என் மாமனார் மீது எனக்கு ஒரு வழக்கு இருக்கின்றது; அது என்னவெனில் அதிக ரூபமும் யௌவனமும் உடைய ஒரு ஸ்திரீயையும் பால் குடிக்கிற பருவமுள்ள அருமையான ஒரு சிசுவையும் என் மாமனார் வசத்தில் நான் ஒப்புவித்துப் போயிருக்க, அவர் ஒரு ஆண்டிச்சியையும் ஒரு பெரிய பிள்ளையையும் எனக்குக் கொடுக்க வைத்திருக்கிறார்; இது தர்மமா?”“ என்று சிரித்தார். இவ்வகையாக அவர் மாமனாரைப் பரிகாசம் பண்ணிக்கொண்டிருக்கும்போது ஆண்டிச்சி அம்மாளை என் தாயார் கூப்பிடுவதாக ஒரு தாதி வந்து அழைத்துக்கொண்டு போனாள். உடனே என் தாயாரும் ஞானாம்பாள் முதலான ஸ்திரீகளும் ஆண்டிச்சி அம்மாளைப் பலவந்தமாய் ஸ்நான கட்டத்துக்குக் கொண்டுபோய்க் குளிப்பாட்டிப் பரிமள திரவியங்களைப் பூசித் திவ்யமான ஆடை ஆபரணங்களைத் தரிப்பித்து புருஷன் முன்பாகப் போகும்படி அவளை உள்ளே இருந்து தள்ளிவிட்டார்கள். அவளுக்கு முன் போல அழகு உண்டாகிவிட்டபடியால் அவள் இன்னாளென்று ஒருவருக்கும் அடையாளம் தெரியவில்லை. அந்த விருத்தர் மட்டிலும் தம்முடைய மகள்தான் என்று கண்டுபிடித்துக் கொண்டார். அவருடைய மருமகன் எங்களைப் பார்த்து ““இந்த அம்மா யார்?”” என்று வினவினார். உடனே இந்தக் கிழவனார், “என் மாப்பிள்ளை வெட்கமில்லாமல் என் பெண்சாதியை அம்மா என்கிறார்!” என்று கை கொட்டிச் சிரித்துப் பரிகாசஞ் செய்தார். பிற்பாடு அவர் எழுந்து தம்முடைய மகள் கையைப் பிடித்து மருமகன் கையில் வைத்து ‘“இப்போது இந்தப் பெண் உமக்குச் சம்மதமா? இல்லையா?’ என்றார். அவருடைய மருமகன் “பூரண சம்மதம்! பூரண சம்மதம்!” என்று பெண்சாதி கையைப் பற்றிக் கொண்டார். இவ்வகையாக கலியாண மகோற்சவம் போற் கொண்டாடிச் சந்தோஷித்தார்கள். அவர்களுக்கு நாங்கள் அன்றைய தினம் அறுசுவை பதார்த்தங்களுடனே விருந்து முதலிய உபசரணைகள் செய்து அவர்களுடைய சினேகிதத்தையும் சம்பாதித்துக் கொண்டோம். அந்த விருத்தரும் அவருடைய மருமகனும் எங்களை நோக்கி “நீங்கள் மகா புண்ணீயசீலர்களாகையால் உங்களுடைய வீட்டில் நாங்கள் நுழைந்த உடனே எங்களுடைய துக்கங்களெல்லாம் நீங்கி நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்படியான அதிர்ஷ்டசாலிகள் ஆனோம். நாங்கள் கப்பலை விட்டு இறங்கின உடனே எங்கள் எங்கள் வீட்டுக் காரியங்களைப் பற்றி யாதொரு ஒழுங்குஞ் செய்யாமல் ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டு சடுதியிற் புறப்பட்டு வந்துவிட்டதால் எங்களுடைய காரியங்களெல்லாம் அலங்கோலமா யிருக்கின்றன. நாங்கள் ஊருக்குப் போய்ச் சகல காரியங்களையும் சீர்ப்படுத்திக் கொண்டு, கூடுமானால் மறுபடி ஒரு பயணம் வந்து உங்களைத் தரிசிக்க அபேக்ஷிக்கிறோம்” என்று சொல்லி எங்களிடத்தில் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.