பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 42
42-ஆம் அதிகாரம்
சுதேச பாஷாபிவிர்த்தி—தமிழின் அருமை
முந்தின அதிகாரத்தில் கூறியபடி ஞானாம்பாள் வக்கீல்களுக்கு நியாயபோதஞ் செய்தபிறகு மறுபடியும் அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறாள்:- இங்கிலீஷ் அரசாட்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற தமிழ்க் கோர்ட்டுகளில், சில தமிழ் நியாயவாதிகள் தமிழில் வாதிக்காமல் இங்கிலீஷில் வாதிக்கிறார்களென்று கேள்விப் படுகிறோம். தேச பாஷையும் தமிழ்! கோர்ட்டில் வழங்காநின்ற பாஷையும் தமிழ்! நியாயாதிபதியும் தமிழர்! வாதிக்கிற வக்கீலும் தமிழர்! மற்ற வக்கீல்கள் கக்ஷிக்காரர்கள் முதலானவருந் தமிழர்களே! இப்படியாக எல்லாந் தமிழ் மயமாயிருக்க அந்த வக்கீல்கள் யாவருக்குப் பிரீதியாப்தமாக இங்கிலீஷில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை! அப்படி வாதிக்கிறதினால் அவர்களுக்குத் தான் என்ன சிலாக்கியம்? மற்றவர்களுக்குத் தான் என்ன பாக்கியம்? நியாயாதிபதியாவது அல்லது வக்கீலாவது இங்கிலீஷ்காரராயிருக்கிற பக்ஷத்தில் இங்கிலீஷில் வாதிப்பது நியாயமா யிருக்கலாம். தமிழ் நியாயாதிபதி முன்பாக தமிழ் வக்கீல் இங்கிலீஷில் வாதிப்பது ஆச்சரியமல்லவா? ஜனங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதாகையால் ஐரோப்பியர்கள் கூட இத் தேச பாஷையில் பரீக்ஷை கொடுக்க வேண்டுமென்றும், அவர்கள் தேச பாஷையிலே சம்பாஷிக்க வேண்டுமென்றும் சட்டம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அந்தப்படி பரீக்ஷை கொடுத்து வருவதுமின்றி கக்ஷிக்காரர்களிடத்தில் தேச பாஷையிலேயே சம்பாஷிக்கப் பிரியப் படுகிறார்கள். அப்படி யிருக்க சுதேசிகளான வக்கீல்கள் சொந்தப் பாஷையைத் தள்ளிவிட்டு அந்நிய பாஷையில் வாதிப்பது அசந்தர்ப்ப மல்லவா? தங்களுக்குத் தமிழில் நன்றாகப் பேசத் தெரியாமையினால் இங்கிலீஷில் வாதிப்பதாகத் தங்களுக்குக் கௌரவம் போலச் சொல்லுகிறார்கள். சுய பாஷை பேசத் தெரியாமலிருப்பதைப் போல இழிவான காரியம் வேறொன்றிருக்கக் கூடுமா? ஒரு ஐரோப்பியர் தம்முடைய சுய பாஷையில் பேசத் தெரியாதென்று சொன்னால் இந்த வக்கீல்களே அவரைப் பழிக்க மாட்டர்களா? அப்படியே தங்களுடைய சுயபாஷையில் தங்களுக்கு வாதிக்கத் தெரியாதென்று சொல்வது அவர்களுக்கு அவமானமல்லவா?
நியாய சாஸ்திரங்களெல்லாம் இங்கிலீஷ் பாஷையிலிருப்பதாலும் இங்கிலீஷிலிருக்கிற நீதி வாக்கியங்களுக்குச் சரியான பிரத பதங்கள் தமிழில் இல்லாமையாலும் தாங்கள் இங்கிலீஷ் பாஷையை உபயோகிப்பதாக சில வக்கீல்கள் சொல்லுகிறார்கள். இங்கிலீஷ் வார்த்தைகளுக்குச் சரியான பிரதி பதங்கள் தமிழில் இல்லையென்று வக்கீல்கள் சொல்லுவது அவர்களுடைய தெரியாமை யல்லாமல் உண்மையல்ல. தமிழ் நூல்களைத் தக்கபடி அவர்கள் ஆராய்ந்தால் பிரதி பதங்கள் அகப்படுவது பிரயாசமா? அப்படித் தான் இரண்டொரு சங்கேத வார்த்தைகளுக்குத் தமிழிலாவது சம்ஸ்கிருதத்திலாவது பிரதிபதங்கள் அகப்படாத பக்ஷத்தில் அந்த வார்த்தைகளை மட்டும் இங்கிலீஷிலே பிரயோகித்தால் அவர்களை யார் கோபிக்கப் போகிறார்கள்? தமிழிலே வாதித்தால் இங்கிலீஷ் மறதியாய்ப் போகுமென்கிற பயத்தினால் சிலர் இங்கிலீஷிலேயே வாதிக்கிறார்கள். அவ்வளவு சொற்பத்தில் மறந்து போகிற இங்கிலீஷ் இந்த வக்கீல்களுடன் எத்தனை நாள் கூடி வாழப்போகிறது? வக்கீல்கள் இங்கிலீஷில் வாதிப்பது அக்கிரமமென்று சில தமிழ் நியாயாதிபதிகளுக்குத் தெரிந்திருந்தும் அதைக் கண்டித்தால் தங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதென்று வக்கீல்களும் மற்றவர்களும் நினைப்பார்களென்று எண்ணி இங்கிலீஷ் வாதத்திற்கு இடங் கொடுத்து வருகிறார்கள். பின்னும் அந்த நியாயாதிபதிகளும் கோர்ட்டுகளில் எப்போதும் இங்கிலீஷையே உபயோகப் படுத்தி, அநேக நடவடிக்கைகளை இங்கிலீஷிலேயே நடத்துகிறார்கள். சில சமயங்களில் வக்கீலும் நியாயாதிபதிகளும் இங்கிலீஷை நன்றாகப் படியாதவர்களானதால் ஒருவர் சொல்லுவது ஒருவருக்குத் தெரியாமல் கை சாடை செய்துகொண்டு சர்வ சங்கடப்படுகிறார்கள். அந்த கோர்ட்டுகள் நாடகசாலையாகத் தோன்றுகின்றனவே யல்லாமல் நியாயசபையாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி சொல்லவேண்டியது கோர்ட்டாருடைய கடமையா யிருக்கிறது. ஜனங்களுக்குத் தெரிந்த பாஷையிலே வக்கீலினுடைய வாதமும் மற்ற நடவடிக்கைகளும் நடந்தால் மட்டும் உண்மை வெளியாகுமே தவிர, அவர்களுக்குத் தெரியாத பாஷையில் நடந்தால் எப்படி உண்மை வெளியாகும்? இங்கிலீஷ் தெரிந்த சுதேச நியாயாதிபதிகள் சித்தாந்தம் மட்டும் இங்கிலீஷில் எழுதலாமென்று சிவில் ப்ரொசீஜர் கோட் (Civil procedure code) சொல்லுகிறதே யல்லாமல் மற்ற நடபடிகளையும் இங்கிலீஷில் நடத்தும்படி சொல்லவில்லை. வெளிப்பிரதேசக் கோர்ட்டுகளில் சுதேச பாஷைகளையே உபயோகிக்கவேண்டுமென்றும், அந்நிய பாஷைகளை உபயோகிக்கக் கூடாதென்றும், இங்கிலீஷ் துரைத்தனத்தாரே உத்தரவு செய்திருக்கிறார்கள். அப்படியிருக்கச் சில தமிழ் நியாயாதிபதிகளும் சில வக்கீல்களும் இங்கிலீஷ் பாஷையை மறந்து போகாமலிருக்க வேண்டியதற்காக இங்கிலீஷைக் கலந்து நியாயபரிபாலனத்தைக் குறளுபடி செய்வது கிரமமா?
கோர்ர்ட்டில் நடக்கிற விசாரணைகளும், தீர்மானங்களும் அபராதங்களும், ஆக்கினைகளுஞ் சகல ஜனங்களுக்கும், பிரசித்தமாய்த் தெரிந்திருந்தால் அவர்கள் தங்கள் தங்களுடைய காரியங்களில் ஜாக்கிரதையா யிருக்கவும் துன்மார்க்கங்களில் பிரவேசிக்காமலிருக்கவும் எல்லாருக்கும் அநுபோகம் உண்டாகுமல்லவா? கோர்ட்டில் நடக்கிற விவகாரங்களைக் கேட்டு விவேகமடைவதற்காகவே ஜனங்கள் கூட்டங் கூட்டமாய்க் கோர்ட்டுகளுக்குப் போய்க் காத்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்திலே கரியைத் தடவுவது போல அவர்களுக்குத் தெரியாத பாஷையில் விவகாரம் நடந்தால் அவர்களுக்கு என்ன ஞானம் உண்டாகக்கூடும்? குருடன் கூத்துப் பார்க்கப் போனது போலவும், செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போலவும் யாதொரு பிரயோஜனமு மில்லாமல் அவர்கள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். தமிழ்க் கோர்ட்டுகளில் இரண்டொரு வக்கீல்களெல்லாரும் இங்கிலீஷ் தெரியுமேயன்றி, மற்ற வக்கீல்களெல்லாரும் இங்கிலீஷ் தெரியாதவர்களா யிருக்கிறார்கள். ஒரு வக்கீல் இங்கிலீஷில் வாதிப்பது இங்கிலீஷ் தெரியாத மற்ற வக்கீல்களுக்கு அவமானம் அல்லவா? அவர்களுடைய வருமானத்துக்குக் குறைவல்லவா? தமிழ் நியாயாதிபதி முன்பாக இங்கிலீஷில் வாதிக்கிற தமிழ் வக்கீல்கள் இந்தத் தமிழ் நாட்டையும், தமிழ் பாஷையையும் மற்ற வக்கீல்களையும், கக்ஷிக்காரர்களையும், சகல ஜனங்களையும் மெய்யாகவே அவமானப் படுத்துகிறார். அவருடைய வாதம் யாவருக்குங் கர்ணக் கடூரமாயிருப்பதால் அவர் எப்போது நிறுத்துவாரோ வென்று எல்லாருங் கடுகடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் முகம் இருக்கிற கோரத்தை இந்த வக்கீலே திரும்பிப் பார்ப்பாரானால் அப்பால் ஒரு வார்த்தை கூடப் பேச அவருக்குத் தைரியமுண்டாகாது. இப்படியாக அந்த வக்கீல்களுடைய வாதம் அபவாதமாக முடிகிறபடியால் நீங்களும் அவர்களைப் போல அந்நிய பாஷைகளில் வாதிக்காமல் தமிழிலே வாதிப்பீர்களென்று நம்புகிறோம்.
புலியைப் பார்த்து நரி சூடிட்டுக்கொண்டது போல, இங்கிலீஷில் வாதிக்கிற வக்கீல்களைப் பார்த்து இங்கிலீஷ் நன்றாகத் தெரியாத சில வக்கீல்களும், அரைப் படிப்பைக் கொண்டு அம்பலமேறுவது போல, இங்கிலீஷில் வாதிக்கத் துணிகிறார்கள். அவர்கள் சொல்வது கோர்ட்டாருக்குத் தெரியாமலும், கோர்ட்டார் சொல்வது அவர்களுக்குத் தெரியாமலும், அவஸ்தைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வக்கீல் ஒரு பெரிய ஜமீன்தாருக்கு வக்கீலாயிருந்தார். அந்த வக்கீலினுடைய இங்கிலீஷ் வாதத்தினாலேயே அந்த வழக்கு அபஜெயமாய்ப் போய் ஜமீன்தாருக்கு விரோதமாய்க் கோர்ட்டார் இங்கிலீஷில் ஒரு பெரிய சித்தாந்தம் எழுதிப் படித்தார். அந்தச் சித்தாந்தம் ஜமீன்தாருக்கு அநுகூலமென்று வக்கீல் பிசகாக எண்ணிக்கொண்டு ஜமீன்தாருடைய ஊருக்குப் போய், அவர் பக்ஷம் தீர்ப்பானதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டவுடனே, ஜமீன்தாருக்கு ஆநந்தம் உண்டாகி, வக்கீலுக்கு அளவற்ற வெகுமானம் செய்ததுமன்றி, கோயிலுக்குக் கோயில் அபிஷேகங்களும் தான தர்மங்களும் ஏழைகளுக்குக் கலியாணங்களும் விருந்துகளும் வேடிக்கைகளும் செய்தார். கோர்ட்டார் தீர்மானம் சொன்ன அன்றைத் தினமே கோடைக் காலத்துக்காக இரண்டு மாசக் காலம் கோர்ட்டு நிறுத்தப்பட்டு, எல்லாரும் அவரவர்களுடைய ஊர்களுக்குப் போய்விட்டதால், ஜமீன்தாருக்கு உண்மை தெரிய இடமில்லாமற் போய் விட்டது. அவர் வரப்போகிற வியாஜ்ஜியச் சொத்தை நம்பி, கையிலிருந்த சொத்துக்களை யெல்லாம் மேற் கூறியபடி விருதா விரயஞ் செய்துவிட்டார். கோர்ட்டு திறந்து உண்மை தெரிந்த உடனே, ஜமீன்தாருக்கும் வக்கீலுக்கும் என்ன பிரமாதம் நடந்திருக்குமென்பதை நான் சொல்ல வேண்டுவ தில்லையே!
இங்கிலீஷ் அரசாட்சியில் வக்கீல்களைப் போலவே மற்ற உத்தியோகஸ்தர்களும் வித்தியார்த்திகளும் சுதேச பாஷைகளை நிகிர்ஷ்டம் செய்கிறார்கள். “ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தினது” போல இங்கிலீஷ் பிரென்சு முதலிய அந்நிய பாஷைகள் மேலிட்டு தேச பாஷைகளின் சீரைக் குலைத்துவிட்டன. அந்த ராஜ பாஷைகள் ஜீவனத்துக்கு மார்க்கமாயிருக்கிற படியால், அநேகர் வயிறே பெரிதென்று எண்ணி அந்தப் பாஷைகளை மட்டும் அதிக சிரத்தையாகப் படிக்கிறார்கள். ராஜாங்கத்தாருடைய சகாயம் இல்லாமலிருக்குமானால் சில வருஷங்களுக்கு முன்னமே சுதேச பாஷைகள் இருந்த இடந் தெரியாமல் அப்பிரசத்தமாய்ப் போயிருக்கும். ராஜாங்கத்தார் சுதேஷ பாஷைகளைச் சில பரீக்ஷைகளுடன் சேர்த்து அவைகள் இந்நாளளவும் ஜீவித்திருக்கும்படி ஆதரித்து வந்தார்கள். இப்போது அவர்களே உபேக்ஷையாயிருப்பதால் சுதேஷ பாஷைகளுக்கு நாளுக்கு நாள் ஜீவதாது குறைந்து வருகின்றது. வித்தியார்த்திகளுடைய இஷ்டப்படி சுதேஷ பாஷைகளையாவது அல்லது லத்தீன் (Latin), சமஸ்கிருதம் முதலிய பாஷைகளையாவது படிக்கலாமென்று துரைத்தனத்தாரே நியமனம் செய்திருப்பதால், சுதேஷ பாஷைகளுக்கு ஜீவாந்த காலஞ் சமீபித்திருக்கின்றது. சென்னைப் பட்டணம் செனட் (Senate) என்னும் ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்த அநேக பிரபுக்கள் சுதேச பாஷையை ஆதரிக்காமல் விட்டு விட்டார்கள். ஆனால் அந்தச் சங்கத்தில் இரண்டொரு சுதேசக் கனவான்கள் அத்தியாவஸ்தையிலிருக்கிற சுதேச பாஷைகளுக்குப் பிராணதாரங் கொடுத்துக் காப்பாற்றி வருகிறார்கள். இங்கிலீஷ்காரர்கள் தங்களுடைய சுதேசங்களில், இங்கிலீஷையாவது அல்லது வேறெந்தப் பாஷையையாவது இங்கிலீஷ் பிள்ளைகள் படிக்கலாமென்று உத்தரவு செய்தார்களா? அப்படி ராஜாங்கத்தார் உத்தரவு செய்தாலும் ஜனங்கள் இங்கிலீஷ் பாஷையை விட்டுவிட்டு அந்நிய பாஷையை அப்பியசிப்பார்களா? அப்படியிருக்க இந்தத் தேசத்தார் சொந்தப் பாஷைகளையாவது அல்லது எந்தப் பாஷைகளையாவது படிக்கலாமென்று இங்கிலீஷ் துரைத்தனத்தார் உத்தரவு செய்திருப்பதும், அந்த உத்தரவைச் சுதேச கனவான்கள் ஆக்ஷேபிக்காமல் சும்மா இருப்பதும் நியாயமா? நம்முடைய தேசாசாரங்களையுங் குல சம்பிரதாயங்களையும் அதிகாரிகள் விட்டுவிடச் சொன்னால் விட்டுவிடுவோமா? மத்தியில் உண்டான தேசாசாரங்களைப் பார்க்கிலும் ஆதிகாலமுதல் உண்டாயிருக்கிற தேச பாஷை அதி உத்கிருஷ்டமல்லவா?
எண் ணிறந்த தேவாலயங்களும், பிரமாலயங்களும், அன்ன சத்திரங்களும், நீர்வளமும், நிலவளமும், நாகரிகமும், ஆசார நியமங்களும் நிறைந்த இந்தத் தமிழ்நாடு, மற்றைய நாடுகளிலும் விசேஷமென்றும், அப்படியே தமிழ் பாஷையும் சர்வோத்கிருஷ்ட மான பாஷை யென்றும் சகலரும் அங்கீகரிக்கிறார்கள். அகஸ்தியர் நாவிலே பிறந்து, ஆரியத்தின் மடியிலே வளர்ந்து, ஆந்திரம் முதலிய பாஷைகளின் தோழமைபெற்று, சங்கப் புலவர்களுடைய நாவிலே சஞ்சரித்து, வித்வான் களுடைய வாக்கிலே விளையாடி, திராவிட தேசம் முழுதும் ஏக சக்ராதிபத்தியஞ் செலுத்தி வந்த தமிழ் அரசியை இப்போது இகழலாமா? நம்மைப் பெற்றதும் தமிழ் வளர்த்ததும் தமிழ் நாட்டைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ். நம்முடைய மழலைச் சொல்லால் நமது தாய் தந்தையரைச் சந்தோஷிப்பதுந் தமிழ். நாம் குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்தபோது முந்தி உச்சரித்ததுந் தமிழ். நம்முடைய அன்னையுந் தந்தையும் நமக்குப் பாலோடு புகட்டினதுந் தமிழ். தாய், தந்தை, குரு முதலானவர்கள் நமக்கு ஆதியில் உபதேசித்ததுந் தமிழ். ஆதிகாலம் முதல் நம்முடைய முன்னோர்களெல்லோரும் பேசின பாஷையும் எழுதிவைத்த பாஷையுந் தமிழ். இப்போதும் நம்முடைய மாதா பிதாக்களும் பந்து ஜனங்களும் இஷ்ட மித்திரர்களும் இதரர்களும் பேசுகிற பாஷையும் தமிழ். நம்முடைய வீட்டு பாஷையுந் தமிழ். நாட்டு பாஷையுந் தமிழ். இப்படிப்பட்ட அருமையான பாஷையை விட்டுவிட்டு சம்ஸ்கிருதம் லத்தீன் முதலிய அந்நிய பாஷைகளைப் படிக்கிறவர்கள், சுற்றத்தார்களை விட்டு விட்டு அந்நியர்களிடத்தில் நேசஞ் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். ஆபத்துக் காலத்தில் சுற்றத்தார் உதவுவார்களே யல்லாது அந்நியர்கள் எப்படி உதவ மாட்டார்களோ அப்படியே எந்தக் காலத்திலும் நமக்கு சுய பாஷை உதவுமே யல்லாமல், அந்நிய பாஷைகள் உதவுமா? லத்தீனுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் சொந்தக்காரர்கள் இல்லாமையால் அவைகள் இறந்துபோன பாஷைகளாயும் தமிழ் முதலிய தேச பாஷைகள் ஜீவிக்கிற பாஷைகளாயும் இருக்கின்றன. பல பாஷைக்காரர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசும்போது ஒருவருடைய கருத்தை வெளிப்படுத்துவதுமே பாஷாந்தரங்களைப் படிப்பதனால் உண்டாகிற முக்கியப் பிரயோஜனமா யிருக்கிறது. ஒரு பாஷைக்குச் சொந்தக்காரர்களே இல்லாமலிருப்பார்களானால், அந்தப் பாஷையை நாம் படித்து யாரிடத்திலே சம்பாஷிக்கப் போகிறோம்? சமஸ்கிருதம், லத்தீன் முதலிய பாஷைகள் அதிகக் கடினமும் வருத்தமுமான பாஷைகளாயும் சீக்கிரத்தில் மறந்துபோகத் தக்கவைகளாயும் இருக்கின்றன. அவைகளின் இலக்கணம், இலக்கியம், தர்க்கம் முதலிய பல பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவைப் படிப்பதற்கு ஒரு புருஷ ஆயுஷு போதாதென்று, அந்த பாஷைகளை உணர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். சம்பாஷணைக்கும் உலக வியாபாரங்களுக்கும் உபயோகமில்லாத அந்த பாஷைகளை அவ்வளவு பிரயாசைப்பட்டுப் படித்தும் பிரயோஜனமென்ன? ஆனால் சமஸ்கிருதமும், லத்தீனும் அதிக சிறப்பும் அழகும் அலங்காரமும் பொருந்திய பாஷைகளென்பதற்குச் சந்தேகமில்லை. அவகாசமுள்ளவர்கள் சொந்த பாஷையோடு அந்த பாஷைகளையும் படிப்பது அதிக விசேஷந்தான்; ஆனால் சொந்த பாஷைகளை நன்றாகப் படிக்காமல் அந்நிய பாஷைகளிலே காலமெல்லாம் போக்குவது அகாரியமென்று தான் நாம் ஆக்ஷேபிக்கிறோம்.
இங்கிலீஷ், பிரென்ச் முதலிய ராஜ பாஷைகளைப் படிப்பிக்க வேண்டாமென்று நாம் விலக்கவில்லை. ஏனென்றால் நாம் நடக்கவேண்டிய சட்டங்களும், ஒழுங்குகளும், நியாயப் பிரமாணங்களும் ராஜ பாஷைகளிலே இருக்கிற படியால் அந்தப் பாஷைகள் நமக்குத் தெரியாவிட்டால் அந்த ராஜாங்கத்தில் நாம் எப்படி நிர்வகிக்கக் கூடும்? அன்றியும் சன்மார்க்கங்களைப் பற்றியும் உலகத்துக்கு மிகவும் உபயோகமான பல விஷயங்களைப் பற்றியும் அந்த ராஜ பாஷைகளில் அநேக அருமையான கிரந்தங்கள் இருக்கிற படியால் அவைகளைப் படிக்கப் படிக்க அறிவு விசாலிக்குமென்பது திண்ணமே! ஆனால் மாதா வயிறெரிய மகேஸ்வர பூஜை செய்வதுபோல், சொந்த பாஷைகளைச் சுத்தமாக விட்டு விட்டு ராஜ பாஷைளை மட்டும் படிப்பது அநுசிதமல்லவா? அநேகர் தங்கள் சுய பாஷைகளில் தங்களுடைய கையெழுத்துக்களைக் கூட பிழையில்லாமல் எழுத அசக்தர்களாயிருக்கிறார்கள். சிலர் தமிழ் பாஷை தெரியாமலிருப்பது தங்களுக்குக் கௌரவமாகவும் அந்தப் பாஷையை அறிந்திருப்பது தங்களுக்கு அகௌரவமாகவும் எண்ணுகிறார்கள். சுய பாஷா ஞானம் தங்களுக்கு எவ்வளவு குறைவாயிருக்கிறதோ அவ்வளவுக்கு ராஜ பாஷைகளில் தங்களைச் சமர்த்தர்களென்று சகலரும் எண்ணுவார்களென்று நினைத்துச் சுய பாஷைகளை முழுவதும் அலக்ஷியம் செய்கிறார்கள். அவர்கள் தமிழ்ப் புத்தகங்களைக் கையிலே தொடுகிறதாயிருந்தால், பாம்பின் புற்றுக்குள்ளே கையை விடுவது போலிருக்கும், அவர்களுக்குத் தமிழ் பாஷை பேசுகிறது வேப்பிலைக் கஷாயம் குடிப்பது போலிருக்கும். தமிழ் வார்த்தைகளைக் கேட்பதும் அவர்களுக்குக் கர்ணக்கடூரமா யிருக்கும். அவர்கள் தமிழ் பாஷை பேசினாலும் முக்காற் பங்கு இங்கிலீஷும் காற் பங்கு தமிழுமாகக் கலந்து பேசுவார்கள். அவர்களுக்குத் தேசாபிமானமும் இல்லை பாஷாபிமானமுமில்லை. யானை முதல் எறும்பு கடையாக உள்ள சகல ஜீவ ஜந்துக்களுக்கும், தனித்தனியே ஒவ்வொரு பாஷை சொந்தமாயிருக்கின்றது. அந்தந்த ஜந்துக்களுக்குரிய பாஷைகளை அவைகள் ஒரு காலத்திலும் மறவாமல் எப்பொதும் உபயோகித்துக்கொண்டு வருகின்றன. இங்கிலீஷ்காரர் முதல் ஐரோப்பியர்கள், தாங்கள் தங்களுடைய சொந்த பாஷைகளை எவ்வளவோ கௌரவமாகப் போற்றி வருகிறார்கள் என்பதை இந்த வித்தியார்த்திகளே அறிவார்கள். இவர்கள் மட்டும் தங்கள் ஜன்ம பாஷையாகிய தமிழையும், தமிழ் வித்துவான்களையும் அவமதிக்கலாமா? தமிழ் நூல்களையே பாராத இவர்கள் அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக்கூடும்? திருவள்ளுவருடைய குறளை அவர்கள் ஜன்மாந்திரத்திலும் பார்த்திருப்பார்களா? கம்பருடைய கற்பனையைக் கனவிலுங் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களுடைய காலடியையாவது கண்டிருப்பார்களா? அவ்வையாருடைய நீதி நூலைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா? இன்னம் எண்ணிக்கையில்லாத தமிழ்ப் புலவர்களுடைய பிரபந்தங்களை இவர்கள் எக்காலத்திலும் பார்த்திரார்கள்.இங்கிலீஷ், பிரென்ச் முதலிய பாஷைகளைப் போலத் தமிழில் வசன காவியங்கள் இல்லாமலிருப்பது பெருங்குறை யென்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். அந்தக் குறையைப் பரிகரிப்பதற்காகத் தான் எல்லாரும் ராஜ பாஷைகளும் தமிழும் கலந்து படிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ராஜ பாஷகளும் சுதேச பாஷைகளும் நன்றாக உணர்ந்தவர்கள் மட்டும் உத்தமமான வசனக் காவியங்களை எழுதக் கூடுமேயல்லாது இதரர்கள் எழுதக் கூடுமா? வசனக் காவியங்களால் ஜனங்கள் திருந்தவேண்டுமே யல்லாது, செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியமல்லவா? ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால் அந்தத் தேசங்கள் நாகரிகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல் இருக்கிறவரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம். சுதேச பாஷைகளைப் படிக்காமல் ராஜ பாஷைகளை மட்டும் படிக்கிறவர்கள் மற்ற ஜனங்களைக் கலவாமல் தாங்கள் ஒரு அந்நிய தேசத்தார் போல் ஜீவிக்கிறார்கள். ராஜ பாஷைகள் தெரியாத தங்களுடைய மாதா பிதாக்கள் மனைவி மைந்தர் முதலியோர்களிடத்தில் பேசுவது கூட அவர்களுக்கு அருவறுப்பா யிருக்கிறது. தாங்களும் சுய பாஷைகளை நன்றாகப் படிக்காமலும் மற்றவர்களுக்குப் போதிக்காமலும் இருப்பது அவர்களுடைய பிசகே யல்லாமல் அவர்களுடைய பந்து ஜனங்களின் பிசகல்லவே! ராஜ பாஷையைப் படித்துக் கல்வியின் அருமை அறிந்தவர்களே சுய பாஷைகளைக் கவனிக்காமலிருப்பார்களானால் இதர ஜனங்கள் எப்படி கவனிக்கக் கூடும்? ஸ்திரீகளும் மற்ற ஜனங்களும் சுய பாஷைகளைப் படித்துத் திருத்தவேண்டுமே யல்லாது அவர்கள் எல்லாரும் ராஜ பாஷைகளைக் கற்றுணர்வது சாத்தியமான காரியமா? சுய பாஷையைக் கல்லாமல் ராஜ பாஷையை மட்டும் படிக்கிறவர்கள் தாங்கள் மட்டும் பிழைக்க அறிவார்களேயன்றி மற்றவர்களுக்கு அவர்களால் என்ன சாதகம்? சுய பாஷையைப் படிக்காதவர்கள் தாங்கள் கெடுவது மன்றி ஐரோப்பியர்களையும் கெடுக்கிறார்கள். முன் வந்த ஐரோபியர்கள் இத் தேச பாஷைகளை எவ்வளவோ கவனமாகப் படித்தார்கள். இப்பொது சுதேசிகளே சுய பாஷைகளைக் கைவிட்டபடியால் ஐரோபியர்களும் அந்த பாஷைகளை அபதார்த்தமாக எண்ணுகிறார்கள். இவ்வாறு நம்முடைய பாஷைகளை அந்நியர் அவமதிக்கும்படி செய்வது அயுக்தம் அல்லவா?
இந்த தேசத்துப் பெரிய பிரபுக்கள், தனவான்கள், மிராசுதாரர்கள், ஜமீன்தார்கள், பாரிவர்த்தகர்கள் முதலானவர்களுடைய அறியாமையை நினைக்கும்போது நமக்குப் பிரலாபமும், பெருமூச்சும் உண்டாகின்றன. அவர்களில் அநேகர் சுத்த நிரக்ஷரகுக்ஷிகளாயிருக்கிறார்கள். சிலர் தங்களுடைய கையெழுத்துக்களை மட்டும் எழுதக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். “சுப்பிரமணியன்” என்பதற்குச் “சுக்கிரமணியன்” என்றும் “சிதம்பரம்” என்பதற்குச் “செலம்பரம்” என்றும், “துரைசாமி” என்பதற்கு “தொரைசாமி” என்றும், “பொன்னம்பலம்” என்பதற்கு “பொண்ணம்பலம்” என்றும், “வைத்தியலிங்கம்” என்பதற்கு “வைத்திலிங்கம்” என்றும் கையெழுத்து வைக்கிறார்கள். இந்த வித்வ சிரோமணிகளே, ஜூரிகளாகவும் முனிசிபல் கமிஷனர்களாகவும் லோகல் பண்டு மெம்பர்களாகவும், பென்ச்மேஜிஸ்திரேட்டுகளாகவும் தேவாலய தர்மாலய விசாரணைக் கர்த்தாக்களாகவும் (Trustees of temples and charitable institutions) நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய அதிகார ஸ்தானங்களுக்குப் போகும்போது, பிரதிமைகளைப் போல் நாற்காலிகளில் வீற்றிருக்கிறார்களே யல்லாது, அவர்களுடைய வேலை இன்னதென்பதைப் பரிச்சேதம் அறியார்கள். பிரதிமைகளுக்கும் இவர்களுக்கும் பேதம் என்னவென்றால், பிரதிமைகள் அசையாமலிருக்கின்றன, இவர்கள் நாற்காலிகளில் தூங்கி விழுந்து அசைந்துகொண்டிருக்கிறார்கள். தேச காவியங்களில் தகுந்த வசன காவியங்கள் இருக்குமானால் இவ்வளவு நிர்ப்பாக்கியமான ஸ்திதியிலிருப்பார்களா? ஆதலால் இங்கிலீஷ், பிரென்ச் முதலிய ராஜபாஷைகளைப் படிக்கிறவர்கள், தேச பாஷைகளையுந் தீர்க்கமாக உணர்ந்து இந்த தேசத்தைச் சூழ்ந்திருக்கிற அறியாமை யென்னும் அந்தகாரம் நீங்கும்படி வசன காவியங்களென்னும் ஞான தீபங்களை ஏற்றுவார்களென்று நம்புகிறோம். தமிழ் படிக்காதவர்கள் தமிழ் நாட்டில் வசிக்க யோக்கியர்கள் அல்ல. அவர்கள் எந்த ஊர் பாஷையைப் படிக்கிறார்களோ, அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடமாகையால் சுய பாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை இங்கிலீஷ் தேசத்துக்கு அனுப்பி விடுவோம். பிரென்ச் மட்டும் படிக்கிறவர்களைப் பாரிஸ் பட்டணத்துக்கு அனுப்புவோம். லத்தீனுக்குஞ் சம்ஸ்கிருதத்துக்குஞ் சொந்த ஊர் இல்லாதபடியால் அந்த பாஷைகளைப் படிக்கிறவர்களை நாம் அநாமகரணத் தீவுக்கு அனுப்புவோம்” என்றாள்.