பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 43


43-ஆம் அதிகாரம்
உத்தியோக மமதை—கர்விகளுக்கு நற்புத்தி

விக்கிரமபுரியில் முந்தின ராஜாவால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி, கர்விஷ்டனாயும் பரம துஷ்டனாயும் இருந்தான். “அற்பனுக்கு ஐசுவரியம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்கிற பழமொழிப்படி அவனுக்கு அதிகாரம் கிடைத்தவுடனே தன்னுடைய பூர்வ ஸ்திதியைச் சுத்தமாய் மறந்து தன்னை ஒரு அவதாரப் புருஷன் போல் எண்ணிக் கொண்டான். வித்தையிலும், புத்தியிலும், தனத்திலும், குலத்திலும் தனக்குச் சமான மானவர்கள் ஒருவரும் இல்லை யென்கிற அகம்பாவமும், மமதையும், உடையவன் ஆனான். அவன் இருக்கிற இடத்தில் ஈ பறக்கக் கூடாது. எறும்பு ஊரக் கூடாது, குருவி கத்தக் கூடாது, ஒருவரும் பேசக் கூடாது; எப்போதும் நிசப்தமாயிருக்க வேண்டும். அவனுடைய வீட்டுக்கு எதிரே ஒருவரும் ஜோடு போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது. அங்க வஸ்திரம் போடக் கூடாது. கைவீசிக்கொண்டு நடக்கக் கூடாது. தாம்பூலம் தரிக்கக் கூடாது. சிங்கத்தின் குகை ஓரத்திற் போகிறவர்கள் பயந்து பதுங்கிக் கொண்டு போகிறது போல, இவன் வீட்டுக்கு எதிரே போகிறவர்களும் நடுங்கிக் கொண்டு, நிசப்தமாகப் போக வேண்டும். அவன் வெளியே புறப்பட்டால், உட்கார்ந்திருக்கிறவர்கள் எல்லாரும் எழுந்து விட வேண்டும்; நடக்கிறவர்கள் எல்லோரும் நின்றுவிட வேண்டும்; சகலரும் பூமியிலே விழுந்து சாஷ்டாங்கமாகத் தண்டம் செய்யவேண்டும். அப்படிச் செய்யாதவர்களுக்கு அபராதங்களும், ஆக்கினைகளும் கிடைப்பது சித்தமே. அவனைக் கண்ட வுடனே, ஜோடு போட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாரும், அவைகளைக் கழற்றுகிற வேகத்தைப் பார்த்தால் அவனை அடிப்பதற்காகவே கழற்றுகிறது போலத் தோன்றும். ஆனால் வாஸ்தவத்தில் மரியாதைக்காக ஜோடுகளைக் கழற்றுகிறார்களே யன்றி, அவனை அடிப்பதற்காக அல்ல. அவன் தெருவில் நடக்கும்போது தெரு முழுதும் தனக்கே சொந்தம் போல அடைத்துக் கொண்டு காலொரு பக்கம், கையொரு பக்கம், வேஷ்டியொரு பக்கம், தான் ஒரு பக்கமாக விறைத்துக் கொண்டு நடப்பான். நடக்கும் போது அவனுடைய ஜோடு, அவனைப் படீர் படீரென்று அடித்துக் கொண்டே போகும். அவனை மட்டும் எல்லோரும் வணங்க வேண்டுமே தவிர, அவன் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு நடக்கிறதே யல்லாது எவரையும் வணங்குகிற தில்லை. அவன் இறுமாப்புடன் பூமியைப் பார்த்து நடக்கிற தில்லை. அவன் காலிலே விஷம் தீண்டினாலும் குனிந்து பார்க்கிறதில்லை. தலையிலே வாசற்படி இடித்தாலும் குனிகிறதில்லை.


அவன் அதிகாரி ஸ்தானத்தில் இருக்கும்போது, ஜனங்கள் எல்லோருங் கை கட்டிக் கொண்டும், வேஷ்டிகளைத் தூக்கிக் கட்டிக்கொண்டும், தூரத்தில் நிற்க வேண்டுமேயல்லாது, அவன் சமீபத்தில் ஒருவரும் நெருங்கக் கூடாது. அவன் கண்ணாலே ஒருவரையும் ஏறெடுத்துப் பார்க்கிற தில்லை. அவனுடைய வாயிலே, திட்டுக்களும் உதாசீனங்களும் புறப்படுமே யல்லாது, நல்ல வார்த்தைகள் புறப்படுகிற தில்லை. பேய்க்குக் கள் வார்த்தது போல அவனுடைய முகத்தில் எப்போதும் கோபம் கூத்தாடிக் கொண்டிருக்கிறதே யல்லாது, பொறுமையாக ஒரு காரியத்தையும் விசாரிக்கிற தில்லை. அவனை யார் அதிகமாக வணங்கித் தப்பு ஸ்தோத்திரம் செய்கிறார்களோ, அவர்கள் பக்ஷம் தீர்மானிக்கிறதே யன்றி உண்மையைக் கண்டுபிடித்துத் தீர்மானிக்கிற தில்லை. நான் ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கொண்டு அவனுடைய அதிகார ஸ்தானத்துப் போய், மற்ற ஜனங்களுடன் தூரத்தில் நின்று கொண்டிருந்தேன். அவனை ஏமாற்றித் தீர்ப்புப் பெற்றுக் கொள்வதற்காக, அவனை ஒரு வழக்காளி ஸ்தோத்திரஞ் செய்யத் தொடங்கினான். எப்படியென்றால் ““மஹாப் பிரபுவே! மண்டலாதிபதியே! இந்த பஞ்ச சாஷ்டக் கோடி பூமண்டலத்தில், உங்களுக்குச் சமமாக யாரிருக்கிறார்கள்? தனத்திலே நீங்கள் குபேரன், வித்தையிலே நீங்கள் ஆதிசேஷன், புத்தியிலே பிரஹஸ்பதி, அழகிலே மன்மதன்; சாக்ஷாத் கடவுள் நீங்களே. அது பேசாத் தெய்வம்; நீங்கள் பேசும் தெய்வம். அது அப்பிரத்தியக்ஷம்; நீங்கள் பிரத்தியக்ஷமான தெய்வம். இப்போது, நீங்கள் நினைத்தால் அநேகங் குடிகளை வாழ்விக்கலாம்; அநேகக் குடிகளைக் கெடுத்து விடலாம். அந்தத் தெய்வத்தினாலே அப்படிச் செய்யமுடியுமா?”” என்று பலவாராக முகஸ்துதி பேசிக்கொண்டிருந்தான். அந்த அதிகாரியும் தன்னைத் தெய்வமென்றே மனஸ்கரித்துக் கொண்டு, புன்னகையுடன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அப்போது, ஒரு கொள்ளித் தேள் எப்படியோ வந்து அதிகாரியை நறுக்கென்று கடித்து விட்டது. உடனே அந்த பிரத்தியக்ஷமான தெய்வம் கீழே விழுந்து, கட கடவென்று உருள ஆரம்பித்து. வைத்தியர்களும் மாந்திரீகர்களும் வந்து கூடிவிட்டார்கள். நான் “தெய்வத்தைத் தேள் கொட்டுமா?” என்று சொல்லிக் கொண்டு அரண்மனைக்குப் போய் நடந்த சங்கதிகளை யெல்லாம் ஞானாம்பாளுக்கு விளம்பினதுமன்றி, அந்த அதிகாரியை ஒரு நாள் அழைப்பித்துத் தனிமையாக வைத்துக் கொண்டு பின் வருமாறு அவனுக்குப் புத்தி சொன்னேன்.

“மனுஷன் தன்னைத் தானே அறிவானானால், அவன் ஒரு நாளுங் கர்வப்பட மாட்டான். நம்முடைய தேகத்தின் அசுத்தங்களையும் நம்முடைய ஆசாபாசங்களையும் துர்க்குணங்களையும் துஷ்கிருத்தியங்களையும் சித்த விகாரங்களையும் நமக்கு உண்டாகிற வியாதிகளையும் துர்ப்பலங்களையும் தேக அநித்தியத்தையும் மரணத்தையும் நாம் யோசிப்போமானால், நாம் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டியதேயல்லாமல், கர்வப்படுகிறதற்கு என்ன இடமிருக்கிறது? நாம் அசுத்தமான கர்ப்பத்தில் உற்பத்தியாகி அசுத்தத்திலே பிறந்து அசுத்தத்திலே வளர்ந்து அகசியமான பதார்த்தங்களையே புசித்து அசுசியாகவே ஜீவித்து அசுசியாகவே இறந்து போகிறோம். இரத்தமும் மாமிசமும் எலும்பும் நரம்பும் மலஜலாதியங்களுங்கூடிய நம்முடைய தேகம் அசுத்தமேயன்றி வேறல்லவே. கண்ணிலே பீளை காதிலே குறும்பி மூக்கிலே சளி வாயிலே எச்சில் தலையிலே பேன் தேகமுழுதுந் துர்நாற்றம் இப்படியாக முழுதும் அசுத்தமாக இருக்கிறது. நாம் அடிக்கடி தேகத்தைக் கழுவாவிட்டால் நம்முடைய துர்க்கந்தம் நமக்கே சகிக்குமா?

நம்முடைய வாழ்வுந் தாழ்வும் சுவாமியினுடைய கையில் இருக்கின்றனவே யல்லாது, நம்முடைய ஸ்வாதீனத்தில் என்ன இருக்கிறது? அடுத்த நிமிஷத்தில் இன்னது வருமென்பது நமக்குத் தெரியுமா? நம்முடைய ஆஸ்திகளை நினைத்துக் கர்வப்படுவோமானால், அந்த ஆஸ்திகளும் அநித்தியம்; அவைகளை அநுபவிக்கிற நாமும் அநித்தியர்களா யிருக்கும்போது நாம் எப்படி கர்வப்படக் கூடும்? நாம் பிறக்கும்போது ஒரு கோவணத்துக்குக் கூட வழியில்லாமல் சுத்த நிர்வாணிகளாய்ப் பிறந்து நிர்வாணிகளாயிறந்து போகிறோம். நாம் பிறக்கும்போது ஒரு ஆஸ்தியையும் நாம் கூடக் கொண்டு வந்ததுமில்லை; கூடக் கொண்டுபோவதுமில்லை. நாம் அநுபவிக்கிற பொருள்கள் எத்தனை நாள் நம்மோடு கூடியிருக்கு மென்பதும் நிச்சயமில்லையே! நம்முடைய கல்வியைப் பற்றி நாம் இறுமாப்பு அடைவோமானால், அது நமக்குப் பிறர் போதித்ததேயன்றி நாம் பிறக்கும்போது நம்மோடுகூடப் பிறந்ததல்லவே! அல்லாமலும் நம்முடைய தலையை மிதிக்கும்படியான கல்விமான்கள் உலகத்தில் அநேகர் இருக்கவில்லையா? “எவன் தன்னைத் தானே உயர்த்திக்கொள்கிறானோ அவன் தாழ்த்தப் படுவான். எவன் தன்னைத்தானே தாழ்த்துகிறானோ அவன் உயர்த்தப் படுவான்”” என்பது வேத வாக்கியமல்லவா?

ஜனங்களுடைய நன்மைக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஜனங்களுடைய சம்பளங்களையே அதிகாரிகள் வாங்கிச் சாப்பிடுகிறபடியால் அதிகாரிகள் ஜனங்களுக்கு ஊழியக்காரர்களே யல்லாது எஜமான்கள் அல்லவென்பதை அவர்கள் எப்போதும் ஞாபகத்தில் வைக்கவேண்டும். அப்படி எண்ணாமல் ஜனங்களைத் தங்களுக்கு அடிமைகளைப் போல எண்ணுகிற அதிகாரிகள் அக்கிரமிகள் அல்லவா? நீர் மேற்குலமென்று பெருமை பாராட்டிக்கொண்டு மற்றவர்களை யெல்லாம் ஈன ஜாதிகளென்றும் ஏழைகளென்றும் அடிக்கடி தூஷிப்பதாகக் கேள்விப்படுகிறோம். குணமும் புத்தியும், சிரேஷ்டமே தவிர, ஜாதிபேதங்களும் அந்தஸ்துக்களும் மனுஷர்களுடைய கட்டுப்பாடு என்பதை நீர் அறியாமற்போனது பெரிய ஆச்சரியம் அல்லவா?

நல்ல மரத்திலே புல்லுருவி பாய்ந்தது போல், ஒரு நற்குணமுடைய அரசனுக்குத் துர்க்குணமுள்ள புத்திரன் ஒருவன் இருந்தான். அவன் தன்னை மிகவும் உயர்வாக எண்ணி மற்றவர்களைத் தாழ்வாக நடத்தி வந்தான். அவனைத் திருத்துவதற்காக ராஜா எவ்வளவு பிரயாசைப் பட்டும் அவன் திருந்தவில்லை. அந்த ராஜகுமாரனுக்கு விவாகமாகி ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளைக்கும் அப்போது பிறந்த வேறொரு ஏழைப் பிள்ளைக்கும் ஒரே மாதிரியாக உடை உடுத்தி இரண்டு பிள்ளைகளையும் ஒரே இடத்தில் வைத்திருக்கும்படி, ராஜா திட்டஞ் செய்திருந்தார். அந்த ராஜகுமாரன் தன் பிள்ளையைப் பார்க்கிறதற்காக ஓடின போது இரண்டு பிள்ளைகளைக் கண்டு தன் பிள்ளை இன்னதென்று தெரியாமல் வேலைக்காரர்களைக் கோபித்துக் கொண்டான். அந்த சமயத்தில் ராஜா வந்து தன் புத்திரனைப் பார்த்து “மகனே! மேன்மையான அந்தஸ்தும் உயர்ந்த ரத்தமும் உள்ள உன் பிள்ளையை நீ கண்டு கொள்ளக் கூடாதா? ஏன் மயங்குகிறாய்?” என்றார். ராஜகுமாரனுக்கு நாணமுண்டாகி தலை கவிழ்ந்து கொண்டு அதோ முகமாக நின்றான். உடனே அந்தப் பிள்ளைகளில் ஒரு பிள்ளையைத் தொட்டுக்காட்டி ““இது தான் உன் பிள்ளை. இந்தப் பிள்ளையின் காலில் ஒரு நாடாவைக் கட்டி வைத்திருந்தேன். அப்படிச் செய்யாவிட்டால் உன் பிள்ளை இன்னதென்று தெரியாது. பிறக்கும்போது எல்லோரும் சமானமென்றும் உயர்குலமும் மேம்பாடும் சுத்தக் கற்பிதமென்றும் அறிந்துகொள்”” என்றார்.

அந்த ராஜகுமாரனும் ஒரு வேலைக்காரனும் வியாதியா யிருந்த போது, வைத்தியர் வந்து பார்வையிட்டு இருவருக்கும் ரத்தங் குத்தி வாங்கும்படி சொன்னார். அந்தப்படி இருவருடைய ரத்தமும் எடுத்து வெவ்வேறு பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ராஜா தன்னுடைய குமாரன் கூட இருக்கும்போது வைத்தியரை அழைத்து அந்த இரண்டு பாத்திரங்களும் இருக்கிற ரத்தங்களில் எது நல்ல ரத்தமென்று பரிசோதித்துத் தெரிவிக்கும்படி சொன்னார். உடனே ராஜா தன் குமாரனைப் பார்த்து “நம்முடைய வம்சமும் ரத்தமும் மேலானது என்று எண்ணிக்கொண்டிருந்தோம். உன்னுடைய ரத்தத்தைப் பார்க்கிலும் வேலைக்காரனுடைய ரத்தம் மேலாயிருப்பதாக வைத்தியர் சொல்லுகிறார். அவன் நம்மைப் போல் கண்ட பதார்த்தங்களையெல்லாம் புசிக்காமல் மித போஜனம் செய்கிறபடியாலும், அவன் தேகப்பிரயாசைப் பட்டு ஜீவிக்கிற படியாலும், அவனுடைய ரத்தம் அதிக சுத்தமாய் இருக்கிறது. அப்படியிருக்க நம்முடைய ரத்தம் மேலானதென்று நாம் அகம்பாவம் அடைவது தகுமா?”” என்றார்.

ஒரு ஊரில் ஒரு பெரிய பிரபுவினுடைய சிகரத்துக்குச் சமீபத்தில் ஒரு நாணற்காடு இருந்தது. அது கூடை பின்னிவிற்கிற ஒரு ஏழைக்குச் சொந்தமாக இருந்தது. அந்தக் காட்டை விலைக்கு வாங்கவேண்டுமென்று அந்தப் பிரபு முயற்சி செய்தான். அந்த ஏழைக்கு அந்தக் காட்டைத் தவிர வேறு ஜீவனத்துக்கு மார்க்கமில்லாதபடியால் காட்டை விலைக்குக் கொடுக்க நிராகரித்தான். அந்தப் பிரபுவுக்குக் கோபமுண்டாகி, அந்த நாணல்களில் நெருப்பு வைத்து நிர்மூலமாக்கி அந்த ஏழையையும் அடித்து உபத்திரவஞ் செய்தான். எளியவன் ராஜாவினிடத்தில் முறையிட்டுக் கொண்டதனால் ராஜா பிரபுவை வரவழைத்து விசாரணை செய்தார். பிரபு அரசனைப் பார்த்து, “அந்த அற்பப் பயல் என்னுடைய கௌரவத்தை எவ்வளவும் மதிக்காமற் போய்விட்டதால் அவனை நான் அடித்தது கிரமந்தான்” என்றான். அரசன் பிரபுவைப் பார்த்து “உன்னுடைய முப்பாட்டன் விறகு வெட்டிக் காலக்ஷேபஞ் செய்துவந்தான். பின்பு அவன் படைவீரனாகி சௌரிய பராக்கிரமங் காட்டியபடியால் என்னுடைய பாட்டனாருக்குச் சந்தோஷமுண்டாகி, அவனை மேம்படுத்தித் திரவியவந்தன் ஆக்கினான். உன்னுடைய முப்பாட்டன் ஆதியில் விறகுத் தலையனாயிருந்த போதிலும், பிறகு தன்னுடைய சுய சாமர்த்தியத்தினால் மேன்மையடைந்தான். நீ அவன் தேடின ஆஸ்தியை வைத்துக் கொண்டு சுய யோக்கியதையில்லாமல் காலங் கழிக்கிறாய்” என்றார். பிறகு அரசன் ஒரு மாலுமியைப் பார்த்து “இவர்கள் இருவரையும் ஒரு கப்பலில் ஏற்றிக்கொண்டு போய் ஒரு தீவில் நிர்வாணமாய் விட்டுவிடு. இவர்களில் எவன் சமர்த்தன் என்பதை அறிவோம்” என்றார். உடனே அந்தப் படி நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீவில் அந்தப் பிரபு வஸ்திரமில்லாமல் பனியிலுங் குளிரிலும் பட்ட அவஸ்தை மரணாவஸ்தைக்குச் சமானமாயிருந்தது. அந்த ஏழைக்கு ஒரு கஷ்டமும் தோன்றவில்லை. அவன் சில செடிகளைப் பிடுங்கி நார் உரித்துத் தனக்கும் அந்தப் பிரபுவுக்கும் வஸ்திரஞ் செய்துகொண்டான். அந்தத் தீவில் வசிக்கிற அநாகரிகமான காட்டு ஜனங்களுக்கு, அந்த எளியவன் கூடை முதலானது பின்னிக் கொடுத்தபடியால் அவர்களுக்குச் சந்தோஷமுண்டாகி அவனுக்கு உணவு முதலிய பதார்த்தங்கள் கொடுத்தார்கள். அவன் தானும் புசித்து அந்த வெறும் பிரபுவுக்குஞ் சாப்பாடுங் கொடுத்து ரக்ஷித்தான். அந்தப் பிரபு ஒரு வேலையுஞ் செய்யாமல் சும்மாயிருப்பதை அந்த மிலேச்சர்கள் அறிந்து அவனைக் கொல்ல ஆரம்பித்தார்கள். அப்போது அந்த எளியவன் சிபாரிசு செய்து பிரபுவை விடுவித்துப் பிராணப் பிரதிஷ்டை செய்வித்தான். உடனே பிரபுவுக்கு ஞானோதயம் உண்டாகி, அந்த எளியவன் இல்லாவிட்டால் அந்தத், தீவே தனக்கு மயானப் பூமியாக இருக்குமென்று தெரிந்து கொண்டான். சில நாளைக்குப் பிறகு ராஜா அந்த இருவரையுங் கொண்டுவரும்படி உத்தரவு செய்தார். ராஜா முன்பாக அந்தப் பிரபு தன்னுடைய அறியாமையையும் எளியவன் தனக்குச் செய்த உபகாரங்களையும் ஒப்புக்கொண்டு தன்னுடைய ஆஸ்திகளிற் பாதியை அந்த ஏழைக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். ராஜா அந்தப் பிரபுவைப் பார்த்டுச் சொல்லுகிறார்:- “அந்த ஏழை இல்லாவிட்டடால் அந்தக் கானகத்தை விட்டு நீ வானகத்துக்குப் போயிருப்பாயென்பது நிச்சயம். அப்படியே சகல தேசங்களில் இருக்கிற பிரபுக்களும் ஏழைகளால் ஜீவிக்கிறார்களே யல்லாமல் மற்றப்படியல்ல. எண்ணிக்கையில்லாத ஏழைகளுடைய தேகப் பிரயாசத்தினால் நமக்குச் சகல பாக்கியங்களுங் கிடைக்கிற படியால் அவர்களை நாம் பெரிய உபகாரிகளாக மதிக்க வேண்டும் என்றார்.

ஒரு பிரபு தனக்குப் பிள்ளை பிறந்த உடனே பால் கொடுப்பதற்காக அந்தப் பிள்ளையைப் பாற்காரி கையில் ஒப்புவித்தார். அந்தப்பிள்ளையும் பாற்காரி பிள்ளையும் சமான வயதாகவும் அபேதமாகவும் இருந்தபடியால் அந்தப் பாற்காரி தன் பிள்ளையைப் பிரபு பிள்ளையாகவும் பிரபுவின் பிள்ளையைத் தன் பிள்ளையாகவும் மாற்றி விட்டாள். இந்தப் பிரகாரம் பாற்காரிப் பிள்ளை பிரபுவாகவும், பிரபு வீட்டுப் பிள்ளை ஏழையாகவும் மாறிப்போய் விட்டார்கள். சில பிரபுக்கள் அகம்பாவத்தினால் அந்நியரிடத்தில் வாயைக் கொடுத்து அவமானப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில திருஷ்டாந்தங்களைத் தெரிவிக்கிறேன்.

ஒரு அரசன் சில அந்நிய தேசத்து வர்த்தகர்களிடத்தில் சில குதிரைகளை விலைக்கு வாங்கிக்கொண்டு, பின்னும் இரண்டு லக்ஷ ரூபாய் அவர்கள் கையில் அதிகமாகக் கொடுத்து அந்தப் பணத்துக்குள்ள குதிரைகளைக் கொண்டு வரும்படி சொன்னான். அந்த வியபாரிகள் பணத்தை வாங்கிக் கொண்டுபோய்விட்டார்கள். பிறகு ஒரு நாள் அந்த ராஜா தன் மந்திரியை அழைத்து தன் தேசத்தில் உள்ள மூடர்களுடைய பெயுர்களையெல்லாம் எழுதிக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தான். மந்திரி ராஜாவைப் பார்த்து “நான் முன்னமே அந்தப்படி ஒரு அட்டவணை எழுதி வைத்திருக்கிறேன். அதில் எல்லாருக்கும் முந்தி உங்களுடைய பெயரை எழுதியிருக்கிறேன். ஏனென்றால் அந்த வர்த்தகர்கள் இன்ன ஊரென்று தெரிந்துகொள்ளாமலும் அவர்களிடத்தில் ஜாமீன் வாங்காமலும் இரண்டு லக்ஷ ரூபாய் அவர்கள் கையில் நீங்கள் கொடுத்துவிட்டதால் மூடருடைய ஜாப்தாவில் முதன்மையாக உங்களுடைய பெயரை எழுதியிருக்கிறேன்” என்றான். அரசன் மந்திரியைப் பார்த்து “ அவர்கள் குதிரைகளைக் கொண்டு வந்தால் அப்போது என்ன செய்வாய்?” என்றான். “அவர்கள் குதிரைகளைக் கொண்டு வந்தால் உங்கள் பெயரைக் கிறுக்கிவிட்டு அவர்கள் பெயரைப் பதித்துக்கொள்ளுவேன்” என்று மந்திரி பிரதி உத்திரஞ் சொன்னான்.

ஒருவனுக்குப் பெரிய உத்தியோகங் கிடைத்தபடியால் அவனுடைய சிநேகிதன் அவனுக்கு மங்கள வார்த்தை சொல்வதற்காக வந்தான். அவன் தன்னுடைய உத்தியோக மமதையால் சினேகிதனைப் பார்த்து “நீ யார்?” என்று வினாவினான். சினேகிதனுக்கு கோபம் ஜனித்து “நான் உன்னுடைய பழைய நேசன். உனக்கு இரண்டு கண்ணும் அவிந்து போனதாக கேள்விப்பட்டு துக்கங் கொண்டாட உன்னிடத்துக்கு வந்தேன்” என்றான்.

ஒரு நியாயாதிபதி ஒரு சாக்ஷிக்காரனைப் பார்த்து “ “நீ திருடனென்று கண்ணாடிபோல உன் முகங் காட்டுகிறது”” என்றான். உடனே சாக்ஷிக்காரன் அந்தக் கெட்ட நியாதிபதியைப் பார்த்து “ “என்னுடைய, முகம் கண்ணாடி யானதால், இதில் உங்கள் முகத்தைக் காணுகிறீர்கள்”” என்றான். ஆகையால் நியாயாதிபதி திருடனென்பதாயிற்று.

ஒரு வழக்காளி நியாயசபையிற் பேசிகொண்டிருக்கும் போது அவனை, அவனுடைய எதிரியின் வக்கீல் பார்த்து ”“நீ ஏன் நாய் போற் குரைக்கின்றாய்?”” என்றான். ”“திருட்டுப் பயலைப் பார்த்தால், நாய் குரைக்காதா?”” என்று அந்த வழக்காளி மறுமொழி சொன்னான். இதனால் வக்கீலைத் திருடன் ஆக்கிவிட்டான்.

ஒரு அரசனும் அவனுடைய மகனும் ஒரு விகடகவியை அழைத்துக்கொண்டு வேட்டைக்குப் போனார்கள். வேட்டை ஆடிக் கொண்டிருக்கும்போது மழை பிடித்துக்கொண்டு, ராஜாவும் அவர் மகனும் நனைந்து போய்விட்டார்கள்; நனைந்து போன அவர்களுடைய உடுப்புக்களைக் கழற்றி, ஒரு மூட்டையாகக் கட்டி விகடகவி தலைமேலே வைத்தார்கள். அவன் தூக்கிக்கொண்டு போகும் போது, ”இராஜாவும் அவர் மகனும், ”“விகடகவி ஒரு கழுதைப் பாரம் சுமந்து கொண்டு போகிறான்”” என்று பரிகாசமாகப் பேசிக்கொண்டு போனார்கள். விகடகவி அவர்களைத் திரும்பி பார்த்து ”“ஒரு கழுதை பாரந்தானா? இரண்டு கழுதைப் பாரஞ் சுமக்கிறேன்”,” என்று சொல்லி இராஜாவையும் அவர் மகனையும் கழுதைகள் ஆக்கிவிட்டான்.

தரித்திர னான ஒரு வித்துவான், ஒரு தனவான் வீட்டுக்குப் போய், அவனுக்கும் தனக்கும் ஒரு சாண் தூரம் இருக்கும் படியான சமீபத்தில் உட்கார்ந்தான். அந்தத் தனவான் கோபங்கொண்டு வித்துவானைப் பார்த்து, ““கழுதைக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?”” என்றான். வித்துவான் ”“ஒரு சாண்தான் வித்தியாசம்”” என்று அளந்து காட்டினான்.

ஒரு அரசன் பொழுது விடியுமுன் எழுந்து வேட்டையாடுவதற்காக காட்டுக்குப் போனான். காட்டில் மத்தியானம் வரைக்குஞ் சுற்றித்திரிந்தும் வேட்டை அகப்படவில்லை. அன்றையதினம் விடியற்காலத்தில் அரசன் ஒரு குடியானவன் முகத்தில் விழித்தபடியால் அது நிமித்தந் தனக்கு வேட்டை அகப்படவில்லையென்று நினைத்து, அந்தக் குடியானவனைக் கொன்றுவிடும்படி உத்திரவு செய்தான். அந்தக் குடியானவன் அரசனைப் பார்த்து, “””மகாராஜாவே! பிராதக்காலத்தில் நீங்கள் என் முகத்தில் விழித்தேன். என் முகத்தில் நீங்கள் விழித்ததற்கு உங்களுக்கு வேட்டை அகப்படவில்லை. உங்கள் முகத்தில் நான் விழித்ததற்கு என்னுடைய பிராணனை இழந்து போகும் படி சம்பவித் திருக்கிறது””” என்றான். இதைக் கேட்டவுடனே அரசனுக்கு விவேகம் உண்டாகி “””குடியானவனைக் கொல்லவேண்டம்””” என்று உத்திரவு செய்தான்.

ஒரு வக்கீல் ஒரு நியாய சபையில், ஒரு நியாய வாதம் செய்து கொண்டிருக்கும் போது, நியாயாதிபதி, ““கழுதை கத்துகிறது கழுதை கத்துகிறது”” என்று வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அதை வக்கீல் கேட்டுங் கேளாதவர் போலத் தன் கக்ஷியைப் பேசினார். பிறகு நியாயாதிபாதி தீர்மானம் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு யதார்த்தமான கழுதை தெருவிலே கத்தத் துவங்கிற்று. உடனே நியாதிபதி தீர்மானம் சொல்வதை நிறுத்தி, ””“அது என்ன சப்தம்?”” என்றார். அந்த வக்கீல் எழுந்து, ””அது கோர்ட்டா ருடைய எதிரொலி தான், வேறொன்றும் அல்ல””” என்றார். நியாதிபதி அதோமுகம் ஆனார்.

ஒருவனை ஒருவன் அடித்த சங்கதியைப் பற்றி நியாய சபையில் விசாரணை நடந்தபோது பிரியாதுக்காரனைக் குற்றவாளி அடித்ததைத் தான் பார்த்ததாக ஒரு சாக்க் காரன் சொன்னான். குற்றவாளியின் வக்கீல் அந்தச் சாக்ஷிக்காரனைப் பார்த்து ““அந்த அடி எப்படிப்பட்ட அடி?”” என்று கேட்டார். கையை ஓங்கிப் பலமாக அடித்தாகச் சாக்ஷிக்காரன் சொன்னான். வக்கீல் அவனைப் பார்த்து “”அது இப்படிப்பட்ட அடியென்று எனக்கு நீ மெய்ப்பிக்க வேண்டும்”” என்றான். சாக்ஷிக்காரன் கோர்ட்டாரைப் பார்த்து “”அது இப்படிப்பட்ட அடியென்று நான் எப்படி மெய்ப்பிப்பேன்? அது பலமான அடிதான்”” என்றான். நியாயாதிபதி சாக்ஷிக்காரனைப் பார்த்து “”வக்கீல் சொல்லுகிறபடி அவருக்கு நீ மெய்ப்பிக்கத்தான் வேண்டும்”” என்றான். உடனே சாக்ஷிக்காரன் இரண்டு கைகைளையும் ஓங்கி தன் பலமெல்லாம் கூட்டி வக்கீலை அடித்து “”இவ் வகையாகத்தான் குற்றவாளி அடித்தான்,”” என்றான். வக்கீல் அந்த அடி பொறுக்கமாட்டாமல் கீழே விழுந்துவிட்டார். இது வக்கீலினுடைய ஸ்வயங்கிருத அபராதமானதால் சாக்ஷிக்காரனை ஒன்றுஞ் செய்யக்கூடாமற் போய்விட்டது” என்றேன்.