பிரதாப முதலியார் சரித்திரம்/அறிஞர்களின் பாராட்டுரைகள்


அறிஞர்களின் பாராட்டுரைகள்

90 ஆண்டுகளுக்கு முன் வேதநாயகம் பிள்ளைவாள் இயற்றித் தமிழுலகத்திற்குத் தந்த பிரதாப முதலியார் சரித்திரம் நீதியோடு கலந்து தமிழ்ப் புதுயுகத்துக் கற்பனை எழுத்துக்கு நல்வித்தாயிற்று. இப்போதும் புது நூல்களோடு அது போட்டியிட்டு வெல்லும்.

—முதறிஞர் ராஜாஜி, 1969

முனிசீப் வேதநாயகம் பிள்ளை அவர்கள் புத்தகங்களைப் படிப்பதால் உலக நடையையும், நல்ல குணங்களையும், நல்ல பழக்கத்தையும் யாவரும் அடையலாமென்று நான் சொல்வது மிகையாகாது.

—டாக்டர் உ.வே. சாமிநாதைய்யர்

வேதநாயகர் தமிழ் உலகம் கண்ட மகான். தமிழுலகில் உற்ற குறை திருத்த முற்பட்ட உத்தமன். கண்ணியமும் யோக்கியமுமான குடும்பத்திலே பிறந்தார். நல்ல சூழ்நிலையில், கிறிஸ்தவ ஒழுக்கத்தில் வளர்க்கப்பட்டார். நல்ல மாணாக்கராக, கீழ்ப்படிதலுள்ளவராக இருந்தார். காலத்தை உபயோகமான முறையில் போக்கினார். தாம் நல்லவராக நடந்து பிறரையும் நல்லவராக்க வேண்டுமென எண்ணினார்.

படிப்பும் கவிதைத் திறனும் இருந்தது. கவிஞரானார்; பாடகரானார். பண்டைக்காலத் தமிழ்ப் பண்டிதருக்கும், ஆங்கிலப் பயிற்சிபெற்ற இந்தியனுக்கும் உத்தம ஊழியனுக்கும் உயர்ந்த உத்தியோகஸ்தனுக்கும் — உயிருள்ள சாட்சியாக, நற்சான்றாக வாழ்ந்தார்.

நல்ல குடும்பத் தலைவரானார். நல்லார் பலருக்கும் நல்ல நண்பரானார்.

மாத்யூ ஆர்னால்டைப்போல, வேதநாயகமும், “வாழ்க்கையை நிலையாகக் கண்டார். வாழ்க்கை முழுவதையுமே கண்டார்.”

கேட்கக் களிப்பூட்டும் தேன் போன்ற அவரது நாமம் என்றைக்கும் எங்கேயும் எல்லா இடத்திலும் ஒலிக்க வேண்டும்.

அவரது வாழ்வு நம்மில் ஒவ்வொருவருக்கும் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழல் வேண்டும். அவருடைய பாடல்கள், நூல்கள், பாடப்படவும், படிக்கப்படவும் வேண்டும்.

வாழ்க, வேதநாயகர் நற்பெயர்!

—K. S. ராமசாமி சாஸ்திரி, B,A., B.L, சென்னை.

மாயூரம் திரு. ச. வேதநாயகம் பிள்ளையவர்கள், ஒரு சிறந்த அறிஞர். தமிழ்நாட்டின் சீர்திருத்தவாதிகளில் மிகப் பழைய தொண்டர், ஒரு சிறந்த நூவாசிரியர். உயர்ந்த கவிஞர், நல்ல நீதிபதி. ஒழுக்கமுடையவர்.

அவர்தம் உயரிய குணங்களை அவர் செய்த நூல்கள் இன்றும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. சில நூலாசிரியர்களின் நூல்கள் அவ்வக் காலத்தில் மட்டுமே பயன்படுபவை. அறிஞர் வேதநாயகம் பிள்ளையின் நூல்கள். என்றும் உயிர் உள்ளவையாக நின்று பயன்படுபவை.

தமிழகம் அறிஞர் திரு. வேதநாயகம் பிள்ளையவர்களை மறக்காது; மறக்கவும் கூடாது; மறந்தாலும் வாழாது. இலக்கிய உலகத்திலேயே ஒரு புதிய வழியைக் காட்டி, நாட்டின் நலன் ஒன்றையே கருதி, உயர்ந்த குறிக்கோள்களுடன் சிறந்த தொண்டாற்றிய திரு. பிள்ளையவர்களின் மறைவு நாளை நிளைவு நாளாகக் கொண்டாடி, அவர் காட்டிய நெறியில் நின்று நல்வாழ்வு வாழ வேண்டியது. நம் ஒவ்வொருவரினுடையவும் கடமையாகும்.

—கி. ஆ. பெ. விசுவநாதம், திருச்சி.