பிரதாப முதலியார் சரித்திரம்/வேதநாயகர் ஒரு வித்தகர்


வேதநாயகர் ஒரு வித்தகர்

-அருள் தந்தை சி.கே.சுவாமி-
திருச்சி, புனித சூசையப்பர் கல்லூரி முதல்வர்

வேதநாயகரின் வாழ்க்கை ஏட்டை விரிக்கும் பொழுது நம்மை வியப்பில் ஆழ்த்துவது அவரது தமிழ்த் தொண்டேயாகும். துறவிகள் சார்பிலே தமிழ் இலக்கியத்தின் தூணென விளங்கியவர் வீரமாமுனிவர் என்றால், இல்லறத்தார் சார்பிலே இலக்கிய வானிலே மின்னிய ஒளி விளக்கு வேதநாயகர் எனலாம். தமிழ்த் துறையிலே ஈடுபட்டவர் தமிழில் நூல் பல செய்வது பற்றி நாம் வியப்படைவதில்லை. ஆனால் அரசாங்க அலுவல்களில் ஈடுபட்டிருந்த ஒருவர். முதலில் பத்திரங்களைப் பத்திரப்படுத்தும் பணியிலும், பிறகு மொழி பெயர்ப்பு வேலையிலும், இறுதியில் நியாயம் வழங்கும் நீதிபதி வேலையிலும் ஈடுபட்டிருந்த ஒருவர் - தன் ஓய்வு நேரத்தையெல்லாம் தமிழுக்கென ஒதுக்கிவைத்து, ஒப்பரும் இலக்கியங்களைப் படைத்துள்ளது பாராட்டுக்குரிய செய்தியாகும்.

மேல் நாட்டிலும் சரி, கீழ் நாட்டிலும் சரி, ஒரு துறையில் தேர்ந்த வல்லுநரைக் காணலாம். கவிதை செய்யும் கவிஞன் ஒருவன் உரைநடையில் ஒப்பற்றவனாய் விளங்குதல் அரிது; கதையாசிரியனுக்குக் கவிதை ஊற்று வறண்டே தோன்றும்; கட்டுரையாளன், கற்பனை வானிலே பறப்பது கடினம், ஆனால், வேதநாயகரோ தொட்ட துறையெல்லாம் துலக்கும்படிச் செய்து கதை, கட்டுரை, கவிதை என்ற

எல்லாத் துறைகளிலும் வல்லுநராய் விளங்குகிறார்.

. எல்லாத் துறையிலும் வல்லுநராய் விளங்கினும் ஒரு துறையில் இவர் தம் முன்னோரை வென்ற முதல்வராய் விளங்குகிறார். ஏனெனில், உரைநடையில் நெடுங்கதை என்ற புதுத் துறையைத் தமிழ் இலக்கியத்திலே புகுத்திய பெருமை இவரையே சாரும். பிரதாப முதலியார் என்ற நெடுங்கதையை எழுதி, தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலையான ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார் வேதநாயகர். இவரைத் “தமிழ்ப் புதினத்தின் தந்தை” என அழைக்கலாம்; அழைக்கவேண்டும்.

வேதநாயகர் எழுதிய நூல்களின் உயிர்நாடி ஒழுக்கமாகும். இவர் ஓர் உத்தம.கத்தோலிக்கர், எனவே, இயேசு பெருமானைப்பற்றியும், அவரது அன்னையைப் பற்றியும் பாடல்கள் பல செய்துள்ளார். மெய்மறைபற்றிய இத்தகைய நேரடியான கவிதைகளைத் தவிர. கிறிஸ்துவ மறையின் நன்னெறி பொதிந்துள்ள கவிதைகளும் இவரிடமிருந்து பிறந்தன. . கிறிஸ்துவசமயத்தின் வருகையால் தமிழ் இலக்கியத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டதென்பது மறுக்கமுடியாத உண்மை. தமிழர் மட்டுமே அறிந்து நுகர்ந்து இலக்கிய ஏடுகளை வேற்று நாட்டவரும் விரும்பிக் கற்க அவற்றை முதன் முதலாக வேற்றுமொழியில் மொழி பெயர்த்துவர் வீரமாமுனிவர் என்ற சேசுசபைக் குரு. போப், கால்டுவெல் போன்ற பெரியார்கள் தமிழுக்குச் செய்த தொண்டு மறக்க முடியாத ஒன்று. இப்பெரியார்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய வேதநாயகர் தான் உத்தம கத்தோலிக்கர் என்பதையும். அதே சமயத்தில் தமிழ் பக்தர் என்பதையும் காட்டி விடுகிறார். உள்ளத்தை அள்ளும் தெள்ளு தமிழில் தமிழின் சிறப்பைக் கூறுகிறார்.

தமிழை நன்கறியாது, அதன் பெருமையை உணராது அதைக் குறைமொழியெனக் கூறும் குறுமதி படைத்தோரைச்சிறுமதியுடைய சிற்றினம் என்கிறார் வேதநாயகர். வள்ளுவரின் குறளை வாசியாதவரும், கம்பரின் கற்பனையைக் . காணாதவரும், ஔவையார் நீதிநூலை செவ்வையாக அறியாதவரும், தமிழின் தரம்பற்றிப் பேசத் தகுதியற்றவர் என்று சாடுகிறார். வீட்டு மொழியே நாட்டு மொழியாக வேண்டும்; நாட்டு மொழிக்குப் பிறகே வேற்றுமொழி வேண்டும் என்று. ஆங்கிலேய ஆட்சியில் அரசாங்க அலுவலில் ஈடுபட்டிருந்த இம்மேதை அஞ்சாநெஞ்சுடன் வாதாடுகிறார். வேதநாயகர் உண்மையிலேயே உயர்த்த மனிதர்; உயிர்க் கவிஞர்; புதினத்தின் தந்தை; பெண் கல்வி பேசிய பெருமகன்; நீதி நூல் தந்த நீதிபதி.

வாழ்க வேதநாயகரிவ் இலக்கியம்! .

நன்றி: நீதிபதி வேதநாயகர்.